என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, October 15, 2018

சத்ரபதி 42டுத்தவர்களால் முட்டாளாக்கப்படுவது சாமானியர்களுக்கே கூட அதிக அவமானத்தைத் தரக்கூடியது. அப்படியிருக்கையில் முட்டாளாக்கப்படுபவர் அரசராக இருந்தால் அது சாதாரண அவமானமல்ல, சகிக்க முடியாத அவமானமாகவே இருக்கும். கல்யாண் நிதியைச் சிவாஜி கைப்பற்றிய தகவல் ஒற்றன் மூலம் முதலில் கேள்விப்பட்ட போது பீஜாப்பூர் சுல்தான் முகமது ஆதில்ஷா அதை அப்படிச் சகிக்க முடியாத அவமானமாகவே உணர்ந்தார். அவர் பார்த்து வளர்ந்த சிறுவன், அவர் பதவி கொடுத்து கௌரவித்து அவருடைய சேவகத்திலேயே இருக்கும் ஒருவரின் மகன் எந்த விதமான அச்சமும் தயக்கமும் இல்லாமல் அவர் கஜானாவுக்கு வந்து சேர வேண்டிய செல்வத்தை அபகரித்திருக்கிறான்….. அந்தக் கோபத்திலிருந்து அவர் மீள்வதற்கு முன் அடுத்தடுத்து செய்திகள் வர ஆரம்பித்தன. சிவாஜி அந்தக் கோட்டையைக் கைப்பற்றி விட்டான்….. இந்தக் கோட்டையை சிவாஜி கைப்பற்றி விட்டான்…….

கோபம் அதிகரித்து ஆத்திரமாகி அவர் கொந்தளித்துக் கொண்டிருந்த போது முல்லானா அகமது வந்து சேர்ந்தான். முல்லானா அகமது வாயிலாக நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் ஆதில்ஷா கேட்டுத் தெரிந்து கொண்டார். முல்லானா அகமதுக்குத் தன் பதவியும் அனுப்பி வைத்த நிதியும் பறிபோன துக்கத்தை விடத் தன்னை உயிரோடு விட்டதற்கும் மருமகள் கௌரவமாக அனுப்பப்பட்டதற்குமான நிம்மதி மேலோங்கி இருந்தது. அதனால் தகவல்களைச் சொன்ன போது கூட ஆதில்ஷா எதிர்பார்த்த கோபம் முல்லானா அகமதுக்கு சிவாஜி மேல் வெளிப்படவில்லை. ஆதில்ஷா அதைக் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்து தொடர்ந்து வந்த தகவல்களும் சிவாஜிக்கு அவன் கைப்பற்றிய இடங்களில் கிடைத்த மதிப்பு, மரியாதையும், குடிமக்கள் அவனை மிக உயர்வாக நினைப்பதைப் பற்றியதாகவே இருந்தன. எல்லாருக்கும் நல்லவனாக மாறிவிட்ட சிவாஜி இப்போது அவருக்கு மட்டுமே குற்றவாளியாகத் தெரிந்தான். ஆதில்ஷா உடனே முக்கியஸ்தர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அவனிடம் ஆரம்பத்திலேயே கண்டிப்பைக் காட்டி இருந்தால் அவன் இந்த அளவு அட்டகாசம் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை நாசுக்காகச் சிலர் தெரிவித்தார்கள். ஷாஹாஜிக்கு ஆகாத ஆட்கள் ஷாஹாஜியே இதற்குப் பின்னால் இருக்கிறார், இந்த அளவு சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்பட சிவாஜிக்கு வயதோ அனுபவமோ கிடையாது என்று சுட்டிக் காட்டினார்கள். ஆதில்ஷாவுக்கும் அது சரியென்றே தோன்ற ஆரம்பித்தது.

அவர் மனநிலையை உணர்ந்த ஒருவன் ஷாஹாஜிக்கும், சிவாஜிக்கும் அவர் முன்பு தந்திருந்த உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் எண்ணிப் பலகாலம் மனம் புழுங்கியவன். அவன் இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொன்னான். “அரசே. உடனே கைப்பற்றிய அனைத்தையும் திருப்பித் தந்து மன்னிப்புக் கேட்கும்படி சிவாஜிக்குக் கட்டளையிடுங்கள். அதற்கு சிவாஜியை சம்மதிக்க வைக்கும்படி ஷாஹாஜிக்கும் கட்டளையிடுங்கள். அப்படி ஒப்படைக்கா விட்டால் இரண்டு பேரையும் சிறைப்படுத்துவது தான் ஒரே வழி! இதை இப்படியே விட்டால் சிவாஜி போல எத்தனை பேர் தைரியம் பெற்றுக் கிளம்புவார்கள் என்று சொல்ல முடியாது. அவனுக்கு நீங்கள் சொல்லும் செய்தி அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.”

ஆதில்ஷாவுக்கு அவன் சொன்னது மிகச்சரியென்றே தோன்றியது. உடனே சிவாஜிக்கும், ஷாஹாஜிக்கும் அவன் சொன்னபடியே கடிதங்கள் அனுப்பினார்.


கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தன் வசமானது இறைவனின் அருளாலேயே என்று சிவாஜி நம்பினான். கைப்பற்றிய பகுதிகளில் அனைத்தும் சரியான நிர்வாகத்திற்கு தகுந்த ஆட்களை நியமித்து விட்டுத் திரும்பும் வழியில் இருந்த ஹரிஹரேஸ்வரர் கோயிலில் நீண்ட நேரம் அமர்ந்து பிரார்த்தித்தான். அவனுடைய பிரார்த்தனைகள் சில சமயங்களில் இறைவனோடு செய்த சம்பாஷணைகளாகவே இருந்தன. சில சமயங்களில் இறைவனோடு மௌனமாக மானசீக அளவில் கலந்த நேரங்களாக இருந்தன. அந்த நேரங்களில் அவன் இந்த உலகையே மறந்திருப்பான். இன்றைய பிரார்த்தனை இரண்டாவது வகையில் அமைந்திருந்தது. சுமார் ஒன்றைரை மணி நேரம் கழித்து மனம் லேசாகி இறையருளால் நிறைந்து அவனாக எழுந்து கிளம்பிய போது அவன் நண்பன் யேசாஜி கங்க் சொன்னான்.

“சிவாஜி அன்னை பவானியின் வீரவாள் ஒன்று பக்கத்திலிருக்கும் கோட்டையில் இருக்கிறது தெரியுமா?”

அன்னை பவானியின் வீரவாள் என்றதும் சிவாஜி ஒருவித சிலிர்ப்பை உணர்ந்தான். இறையருளால் மனம் லேசாகி பரவசத்தில் இருக்கையில் இந்த வீரவாளைப் பற்றிக் கேள்விப்பட்டது தேவியின் நிமித்தமாகவே அவனுக்குத் தோன்றியது.

அவன் முகத்தில் தெரிந்த ஒளியைக் கண்ட யேசாஜி கங்க் உற்சாகத்துடன் விவரித்தான். “அருகில் இருக்கும் சின்னக் கோட்டையின் தலைவன் கோவல்கர் சாவந்திடம் இருக்கும் அந்த வீரவாள் மிகவும் நீளமானது. அது அவன் மூதாதையர் மூலம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. நீ போய்க் கேட்டால் அவன் தந்து விடுவான். அவனாகத் தராவிட்டால் இத்தனை கோட்டைகளைக் கைப்பற்றிய நமக்கு அந்த வீரவாளைக் கைப்பற்றுவது பெரிய விஷயமல்ல….”

சிவாஜி முகத்தில் சின்ன ஏமாற்றம் தெரிந்தது. நண்பனிடம் சொன்னான். “யேசாஜி, பரம்பரை பரம்பரையாக ஒருவரிடம் இருக்கும் அது போன்ற ஒரு புனிதப்பொருளை நாம் கட்டாயப்படுத்தி வாங்குவதோ, அபகரிப்பதோ தர்மமல்ல…. ”

யேசாஜி கங்க் சொன்னான். ”கோவல்கர் சாவந்திற்கு அது வெறும் குடும்ப சொத்து மட்டுமே சிவாஜி. அவன் உன் அளவுக்கு பவானியின் பக்தனும் அல்ல. அந்த வீரவாள் நீ பூஜிக்கும் அளவுக்கு அவனுக்கு வணங்கி வரும் பொருள் அல்ல….”

ஆனாலும் சிவாஜி சம்மதிக்கவில்லை. ”நம் உரிமைகளை அடுத்தவர் பறிக்கும் போது நமக்கு எத்தனை ஆத்திரம் வருகிறது. அப்படி இருக்கையில் அடுத்தவர்களின் உரிமைகளை நாம் அபகரிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?....”

யேசாஜி கங்க் பெருமூச்சு விட்டான். சற்று முன் அந்த வீரவாள் பற்றிச் சொன்ன போது நண்பனின் முகம் பிரகாசித்தது இப்போதும் அவன் மனக்கண்ணில் தங்கியிருக்கிறது…..

சிவாஜி அந்தப் பகுதியில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது தான் ஆதில்ஷாவின் கடிதமும், ஷாஹாஜியின் கடிதமும் வந்து சேர்ந்தன. ஆதில்ஷா கடுமையான வார்த்தைகளில் சிவாஜியின் செயல்களைக் கண்டித்திருந்தார். ராஜத்துரோகம், திருட்டு, கொள்ளை என்ற சொற்களைத் தாராளமாகப் பயன்படுத்தியிருந்த அவர் அனுமதியில்லாமல் அவன் கைப்பற்றியிருந்த அனைத்தையும் திரும்பவும் ஒப்படைத்து விடும்படியும் உடனடியாக பீஜாப்பூருக்கு வந்து சேரும்படியும் சொல்லியிருந்தார்.  ஷாஹாஜியும் மகன் செயல்களைக் கண்டித்து எழுதியதுடன் கைப்பற்றிய அனைத்தையும் திரும்ப சுல்தானிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோரும்படியும், திருந்தும்படியும் எழுதியிருந்தார்.

சிவாஜி அந்தக் கடிதங்களைக் கொண்டு வந்தவர்களிடமே பதில் கடிதங்களை அனுப்பினான். ஆதில்ஷாவைப் புகழ்ந்து வாழ்த்தி எழுதி விட்டு ”நான் கைப்பற்றியிருக்கும் கோட்டைகள் அனைத்தும் உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொந்தமானதல்ல. ஒரு காலத்தில் என் தந்தைக்கும், அகமதுநகர ராஜ்ஜியத்திற்கும் சொந்தமான அவை எல்லாம் பின்னர் நீங்களும் கைப்பற்றியதும், முகலாயர்கள் மூலம் உடன்படிக்கை மூலம் பெற்றுக் கொண்டதும் தான்.  இப்போது நான் கைப்பற்றிய பின் மட்டும் நீங்கள் அதை ராஜத்துரோகமாகச் சொல்வது வேடிக்கையே அல்லவா? கல்யாண் பகுதி நிதியும் அப்பகுதிக்கும், சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கும் நன்மை விளையும் வண்ணம் பயன்படுத்தப்படும். இப்பகுதி மக்களின் பணம், இங்குள்ளவர்களின் நன்மைக்கே பயன்படுத்தப்படுவது நியாயமும், தர்மமுமே ஒழிய தாங்கள் குறிப்பிட்டது போல திருட்டோ, கொள்ளையோ ஆகாது. இதற்கு முன் என் தந்தை இங்கு வரிவசூலித்தத் தொகையைப் பெறுவதற்கு ஆள் அனுப்பிய போது கூட இதே நிலையை நான் எடுத்து அவருக்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறேன். தாங்கள் அழைத்தது போல எனக்கும் பீஜாப்பூர் வரவும், தங்களுடன் முன்பு போல பல விஷயங்கள் குறித்து அளவளாவவும் மிகவும் ஆர்வமாகவே இருக்கிறது. அதனால் நான் கைப்பற்றிய பகுதிகளை நானே தலைவனாக நிர்வாகம் செய்ய அனுமதித்து நீங்கள் அறிவிப்பு வெளியிட்டால் விரைவிலேயே வந்து தங்களைத் தரிசிக்கக் காத்திருக்கிறேன்.” என்று ஆதில்ஷாவுக்கு எழுதி அனுப்பினான்.

தந்தைக்கு எழுதிய கடிதத்தில் சிவாஜி சுருக்கமாகச் சொல்லியிருந்தான். “தந்தையே நான் வளர்ந்து பெரியவனாகி விட்டேன். எது சரி எது தவறு என்பதைச் சிந்திக்கவும், அதன்படி நடக்கவும் நான் அறிவேன். மதிப்பிற்குரிய பீஜாப்பூர் சுல்தான் அவர்களுக்கு முறையான விளக்கங்கள் நான் அனுப்பியுள்ளேன். எனவே இந்த விஷயத்தில் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை”

பீஜாப்பூர் மன்னர் தன் பதிலில் மேலும் ஆத்திரமடைந்து ஏதாவது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார் என்பதை சிவாஜி அறிந்தே இருந்தான். ஏனென்றால் இந்த முறை அவன் நடவடிக்கைகளிலும் சரி அவன் கடிதத்திலும் சரி சுற்றி வளைக்கும் குழப்பங்கள் எதுவுமில்லை. ஆமாம் அப்படித்தான் நீ முடிந்ததைச் செய்து கொள் என்ற தொனியே வார்த்தைகளுக்கு இடையே இழைந்தோடியிருக்கிறது. இதைப்படித்து விட்டு அவர் இனி என்ன செய்யப் போகிறார் பார்ப்போம் என்று சிவாஜி காத்திருந்தான்…

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, October 11, 2018

இருவேறு உலகம் – 104ர்ம மனிதன் கேட்டான். “சட்டர்ஜி?”

“சட்டர்ஜி சில காலமாய் எங்கள் தொடர்பில் இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாது… அவருடைய மெய்ல் ஐடி மட்டும் தான் எங்களிடம் இருக்கிறது……”

அந்த மெயில் ஐடியை வாங்கிக் கொண்டு மர்ம மனிதன் மெல்லச் சொன்னான். “எனக்கு அவர்கள் மூன்று வருடங்களுக்கு முன் ஏறிய மலைப்பகுதி எது என்று தெரிய வேண்டியிருந்தது. அவர்கள் உங்கள் க்ரூப்பில் பகிர்ந்து கொண்டதில் அந்தத் தகவல் இருக்கவில்லை. அது தான் கேட்டேன்…..”

“அவர்கள் எல்லாம் மலையேற்ற வீரர்கள். எழுத்தாளர்களோ, எல்லா விவரங்களையும் முறைப்படி தந்து பதிவு செய்து பழகியவர்களோ கிடையாது.. எங்கள் குழுவில் அனைவரிடமும் நாங்கள் தொடர்ந்து எல்லாத் தகவல்களும் கொடுத்து அனுபவங்களைப் பகிரச் சொல்லி வருகிறோம். பாதி பேர் இப்படித்தான் தலை கால் இல்லாமல் எழுதுகிறார்கள்…….”

மர்ம மனிதன் சட்டர்ஜிக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். அவர் மூன்று வருடங்களுக்கு முன் ரிச்சர்ட் டவுன்செண்ட் மற்றும் டேவிட்சனுடன் போன மலையேற்றப் பகுதி எது என்றும் ரிச்சர்ட் டவுன்செண்ட் பார்த்ததாகச் சொன்ன பகுதி எது என்றும் தெரிவிக்க முடியுமா என்றும் கேட்டிருந்தான். அந்தத் தகவல் மிக அவசரமாகத் தேவைப்படுவதாகவும், உடனடியாகத் தெரிவித்தால் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றும் எழுதினான்.

கிருஷ்ணவேணி சொன்னதையே கூட்டத்தினரில் பலரும் ஆதரித்ததால் மாஸ்டர் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள, மூத்த துறவி அவர் ராஜினாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டார். கிழிந்தது ராஜினாமா கடிதம் மட்டுமல்ல தன் கௌரவமும் தான் என்று மாஸ்டரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.  இது வரை அவருக்கிருந்த கௌரவம் அடுத்தவர் தந்து வந்ததல்ல. அவராக ஏற்படுத்தி வைத்திருந்தது. இப்போதும் அவர்கள் யாரும் அவரை கௌரவக்குறைவாகப் பார்க்கவில்லை….. ஆனால் அவராக அதை இழந்து விட்டார். இழந்தது பணமும், கௌரவமும் மட்டுமல்ல, அவருடைய அருமைக் குருவின் உயிரும் தான். முதலிரண்டைத் திருடியவன் அதையுமல்லவா சேர்த்து எடுத்து விட்டிருக்கிறான். மனம் கொதித்தது. மனம் அந்தக் கணத்தில் இந்தக் கணக்கைத் தீர்க்காமல் சாகக்கூடாது என்று உறுதி பூண்டது.

இந்தக் கூட்டத்திலும் ஓரிருவர் அவனுடைய ஆட்களாக இருக்கலாம். அவர்கள் யார் என்று யோகசக்தியால் கண்டுபிடிப்பது அவரைப் பொறுத்த வரை கஷ்டமான செயல் அல்ல. ஆனால் கண்டுபிடித்து ஒன்றும் ஆகப் போவதில்லை. இது வரை அவனைப் பற்றி அறிந்தது எல்லாம் வைத்துப் பார்க்கையில், கண்டுபிடித்தாலும் அவர்கள் மூலம் அவனை அடைய முடியாது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.

கூட்டம் முடிந்த பின் மூத்த துறவி, கிருஷ்ணவேணி, மேலும் இரண்டு தலைமைக்குழு உறுப்பினர்களுடன் தனியாக மாஸ்டர் பேசினார். பேசும் போது அவர்கள் இயக்கத்தில் இருந்த அனிருத் என்ற கம்ப்யூட்டர், நெட்வர்க் விஷயங்கள், சர்வதேச ஆன்லைன் மோசடிகள் துப்பு துலக்குவது ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சி பெற்ற அனிருத் என்ற இளைஞன் உதவியை விஸ்வம் செய்த மோசடிகள் கண்டுபிடிக்க  நாடுவது என்று தீர்மானித்தார்கள்.  பின் மாஸ்டர் அவர்களிடம் மனம் விட்டுப் பேசினார். திருவனந்தபுரத்தில் சதாசிவ நம்பூதிரியைச் சந்தித்ததையும் அவர் சொன்னதையும் தெரிவித்தார். கடைசியில் சொன்னார்.  “எதிரி எங்க ரெண்டு பேர் ஜாதகத்தை சேர்த்தே கொண்டு போய் விசாரிச்சிருக்கறதுல இருந்து, நடந்த மத்ததயும் யோசிச்சா .விதி என்னையும் க்ரிஷையும் ஏதோ ஒரு வகைல சேர்த்து முடிச்சுப் போட்ட மாதிரி தெரியுது. ஒவ்வொரு சமயத்துலயும் நான் தப்பா எதையாவது செய்யப் போறப்ப அவன் தான் என்னை சரிப்படுத்தறான். எதிரியோட ஆளாகவே அவனைப் பார்த்து அப்படியே அவனை நடத்த இருந்த என்னை குரு ஸ்தானத்துக்கு உயர்த்தி நட்பு வளையத்துல கொண்டு வந்தான். அப்புறமா ’எதிரியோட கைப்பாவையா நீங்களும் கூட இருக்கலாம்’னு சொல்லி விஸ்வத்தை அடையாளம் கண்டுபிடிக்கவும் அவன் தான் காரணமாய் இருந்தான். கடைசியா நான் சாகத் தீர்மானிச்சப்ப கூட ஏதோ ஒரு உள்ளுணர்வுல என் கிட்ட பேச போன் செஞ்சு நான் சாகாம தடுத்ததும் அவன் தான்…..”

கிருஷ்ணவேணி சொன்னார். “அடுத்த நடவடிக்கை என்னன்னு தீர்மானிக்கறதுல இனிமே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே யோசிக்கிறது தான் சரின்னு தோணுது மாஸ்டர்…. “

மற்றவர்களும் ஒத்துக் கொள்ளவே மாஸ்டர் தலையசைத்தார். முடிவில்  க்ரிஷுக்குப் போன் செய்து ரிஷிகேசத்திற்கு வர முடியுமா என்று கேட்டார். அவன் உடனே சம்மதித்தான். அவருக்கு அவருடைய குரு வாழ்ந்த குடிலில் இரண்டு நாள் இருக்க வேண்டும் என்று தோன்றியது. மனபாரத்தை அவன் வருவதற்குள் அந்தக் குடிலில் அழுது இறக்கிவிட வேண்டும்… அவனுக்கும் அவருடைய குரு வாழ்ந்த குடிலைக் காண்பிக்க வேண்டும். அந்தக் குடிலில் உட்கார்ந்து அவர்கள் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்துத் தீர்மானிக்க வேண்டும்…..


ரிணிக்கு மயக்கம் தெளிந்த போது ஒரு அரையிருட்டு அறையில் இருந்தாள். தலை மிகவும் பாரமாக இருந்தது. தற்போதைய நிலையைத் தெளிவாக உணர சில நிமிடங்கள் தேவைப்பட்டன…..  நீல்கிரீஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் அருகே போக்குவரத்து நெரிசல் இருந்ததால் அதை அடுத்திருந்த சிறிய தெருவில் ஸ்கூட்டியைத் திருப்பியதும், அந்தத் தெருவில் இருந்து குறுக்குத் தெருவுக்குத் திரும்பிய போது ஒரு மாருதி வேன் தெரு நடுவில் நிறுத்தப்பட்டு இருந்ததும், அதைத் தாண்டிப் போக முயற்சித்த போது ஒருவன் ‘ஒன் மினிட் ப்ளீஸ்’ என்று சொல்லி அதில் இருந்து இறங்கி அவளை நெருங்கியதும் நினைவுக்கு வந்தது. அதன் பின் ஒன்றும் நினைவில்லை. இப்போது இருக்கும் அறை அவளுக்குப் பரிச்சயம் இல்லாதது. கடத்தப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது. மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

அடுத்த நிமிடம் மனோகர் அந்த அறைக்குள் நுழைந்தான். ஒன்றுமே பேசாமல் அவளையே பார்த்தபடி அவன் நின்றான். அவளும் ஒன்றுமே பேசாமல் அவனையே பார்த்தாள். வழக்கமாக கடத்தப்பட்ட ஆட்கள், “நான் எங்கே இருக்கேன், யார் நீங்க, என்னை எதுக்காக கடத்துனீங்க என்றெல்லாம் பயந்து போய் கேட்பார்கள்’. ஒன்றுமே பேசாமல் அவனையே எடைபோடுகிற பார்வை பார்க்கும் இவள் அழுத்தமானவள், வித்தியாசமானவள் என்று அவன் எண்ணிக் கொண்டான்.

கடைசியில் அவன் தான் அவளிடம் பேசினான். ”இந்த இடத்துல இருந்து தப்பிக்கற எண்ணம் எதாவது இருந்துச்சுன்னா அதை இந்த நிமிஷமே விட்டுடு. உன்னால முடியாது. வீட்டை சுத்தி காவல் இருக்கு. நீயா பிரச்சனை பண்ணாத வரைக்கும். எங்களால  உனக்கு எந்த ஆபத்தும் வராது. பிரச்சனை பண்ண நினைச்சா உன்னை கடவுள் கூட காப்பாத்த முடியாது…”

“நீ யாரு? முதல்ல அதச் சொல்லு” என்றாள் ஹரிணி. அவள் குரலில் பயமோ, நடுக்கமோ இல்லை.

“இப்போதைக்கு என்னை எக்ஸ்ன்னு வெச்சுக்கோயேன்” என்றான் மனோகர்.

“சரி எக்ஸ். உனக்கு என்ன ப்ரச்சன. என்னை ஏன் கடத்தினே?”

இது கடத்தப்பட்ட பெண் பேசுவது போல் இல்லை. என்ன நடந்தது என்று அறிய ஆசைப்படும் மூன்றாம் நபர் பேசுவது போல் இருக்கிறது…. நடப்பது ரகசியமாய் நேர் ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருப்பதால் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்  ‘தலைவன்’ எதிர்வினை எப்படி இருக்கும் என்று புரியாமல் மனோகர் நெளிந்தான்.

“எங்களுக்கு உன் கிட்ட ப்ரச்சன இல்லை. உன் காதலன் கிட்ட தான் ப்ரச்சன?”

“என்ன ப்ரச்சன?”

மனோகருக்கு இந்தக் கேள்வி-பதில் ஆரம்பமான விதமே பிடிக்கவில்லை. இதை நிறுத்த நினைத்தான். “நாங்க அதை அவன் கிட்ட பேசிக்கிறோம்…..”

“பேசியாச்சா, இல்லை இனிமே தான் பேசணுமா?”

“சமயம் பாத்து பேசறோம். அது ஒரு முடிவுக்கு வர்ற வரை நீ கலாட்டா பண்ணாம ஒத்துழைச்சா உனக்கு நல்லது.”

”அவன் எப்பவுமே சரியானதை மட்டும் தான் செய்வான். அதை நான் உட்பட அவன் யாருக்காகவும் மாத்திக்க மாட்டான்…..” அவள் சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் என்ற உலக உண்மையைச் சொல்வது போல் இதைச் சொன்னது மனோகருக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“ஆனால் உன்னைக் கடத்தினது தெரிஞ்சவுடனேயே துடிச்சுட்டான்னு கேள்விப்பட்டேன்.”

“அதெல்லாம் துடிப்பான். ஆனா அவன் தன்னை மாத்திக்க மாட்டான்” அவள் நிச்சயமாகச் சொன்னாள்.

”இப்படிப்பட்டவன காதலிக்கிறோமேன்னு வருத்தமாய் இல்லயா?” மனோகரால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“நான் அவனைக் காதலிக்கிறதே அந்த கேரக்டருக்காகத் தான்”


“நல்லது. நாங்க சொல்றத அவன் கேட்கலைன்னா நீ இங்கே சித்திரவதை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதைப் படமாவோ, வீடியோவாகவோ நாங்க அவனுக்கு அனுப்பி வைக்க வேண்டி வரும். பார்க்கலாம்” சொல்லி விட்டு குரூரமாய் புன்னகைத்து விட்டு மனோகர் போனான்.

(தொடரும்)
என்.கணேசன் 

Wednesday, October 10, 2018

முந்தைய சிந்தனைகள் 37

என் நூல்களில் இருந்து சில சிந்தனைகள் -


என்.கணேசன்

Monday, October 8, 2018

சத்ரபதி 41


வெற்றி பலருக்கும் ஒரு போதையாகவே இருக்கிறது. அதைக் கொண்டாடும் மனநிலையில் வெற்றி பெற்றுத் தந்தவர்களை நினைத்துப் பார்க்கவும் பெரும்பாலும் பலருக்கு நேரமிருப்பதில்லை. சிவாஜி அதற்கு விதிவிலக்காக இருந்தான். கல்யாண் நிதியைத் தன் கஜானாவில் சேர்த்தவன் அடுத்ததாகக் கவனித்த காரியம் இந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களையும், காயப்பட்ட வீரர்களையும் தான். உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்குத் தாராளமாக நிதி வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தியவன். காயப்பட்டவர்களின் சிகிச்சைக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் கூட அதே பெருந்தன்மையைக் காட்டினான். இது அந்தக்கால அரசாட்சியில் சற்று அபூர்வமாகவே இருந்தது. பெயருக்கு ஏதாவது தந்த அரசர்கள் அது அந்தக் குடும்பத்துக்குப் போதுமானதா என்றெல்லாம் கவனித்ததில்லை. தங்களுக்குத் தோன்றியதைத் தருவார்கள். கிடைப்பதைப் பெற்றுக் கொண்ட பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தாங்களாகவே தங்களுக்குத் தகுந்த வேலைகளைத் தேடிக் கொண்டு சமாளித்து வாழ வேண்டியிருந்தது. அதனால் சிவாஜி உடனடியாகக் காட்டிய பெருந்தன்மை வீரர்கள் மத்தியில் பெருத்த விசுவாசத்தைக் கூட்டியது. இவனுக்காக நாம் உயிரையும் தரலாம். நம் குடும்பத்தை இவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையான மனநிலை பெரும் சக்தியாக வீரர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து சிவாஜி நியமித்திருந்த ஒன்பது தலைவர்களும் தங்கள் திட்டப்படி கோட்டைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். அந்த ஒன்பது ஆக்கிரமிப்புகளிலும் கூட உயிர்ச்சேதம் அதிகம் இருக்கவில்லை. தந்திரங்களும் யுக்திகளும் உடனடிப் பிரயோகங்களும் சேர்ந்து எளிதிலேயே வெற்றி வாகையைச் சூடித்தந்தன. அக்காலக் கோட்டைக் காவலர்கள் குறைந்த ஊதியத்தில் பணி புரிபவர்களாக இருந்தார்கள். அவர்கள் வேலைச்சூழலும் எளிதாக இருக்கவில்லை. பெருமழைகளில் நனைந்தும், கடும் வெயிலில் உலர்ந்தும், பாடுபடும் அவர்களுக்கு உகந்த ஊதியமும், அங்கீகாரமும் ஆள்பவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. அதனால் நல்ல தொகைகளுடன் சிவாஜியின் ஆட்கள் அவர்களை அணுகிய போது அவர்கள் கோட்டைகளின் பலவீனங்களையும், உள் ரகசியங்களையும் சொல்லப் பெரிய தயக்கம் காட்டவில்லை. அத்துடன் வணிகர்களாகவும், வேலையாட்களாகவும் சிவாஜியின் வீரர்களை கோட்டைக்குள் அனுமதிக்கவும் அவர்கள் தயங்கவில்லை. ரகசியங்களைப் பெற்று, உள்ளே புக அனுமதியும் பெற்ற பிறகு தாக்குதல்களில் வெற்றி பெறுவது சிவாஜியின் ஆட்களுக்குக் கடினமாக இருக்கவில்லை. காவலர்களுக்குத் தலைவர்களான அதிகாரிகளும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் பணிபுரிந்ததால் அவர்களும் விலைபோகிறவர்களாகவே இருந்தார்கள். அதனால் திட்டப்படியே கோட்டைகள் மளமளவென்று சிவாஜியின் ஆதிக்கத்திற்குள் வந்தன.

அபாஜி சோன் தேவ் கல்யாண் பகுதியில் வெற்றிகரமாக நுழைந்து முல்லானா அகமதைச் சிறைப்படுத்தினான். கல்யாண் அப்பிராந்தியத்தின் சக்தி மிகுந்த பகுதியாகக் கருதப்பட்டதால் தகவலைக் கேள்விப்பட்டு சிவாஜி தன் வீரர்களுடன் உற்சாகமாகக் கிளம்பி கல்யாண் நகருக்குள் நுழைந்தான். சிவாஜியின் வீரமும், பெருந்தன்மையும், உயர்குணங்களும் முன்கூட்டியே அப்பகுதிகளில் பரவியிருந்ததால் சிவாஜி தங்கள் பகுதிகளை வென்றதை அப்பகுதிக் குடிமக்களும், அதிகாரிகளும் தங்களுக்கு விடிவுகாலம் பிறந்ததாகவே கருதினார்கள். கல்யாண் நகரும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. ஒரு அரசனுக்குரிய உற்சாகமான வரவேற்பு சிவாஜிக்குக் கிடைத்தது.

மக்களது உற்சாகத்திலும், வரவேற்பிலும் மனம் நெகிழ்ந்த சிவாஜி தாதாஜி கொண்டதேவை நினைத்துக் கொண்டான். அவர் சொன்னது போல் இவர்களின் நலத்தைப் பேணுவதாலேயே இறைவனின் ஆசியைப் பெற முடியும் என்பதை என்றைக்கும் மறக்கக்கூடாது என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டான்.

கல்யாண் தலைவன் முல்லானா அகமதை உரிய மரியாதையுடன் பீஜாப்பூருக்கு சிவாஜி அனுப்பி வைத்த போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். தோற்றவர்களிடம் பெருந்தன்மை காட்டுவது அவர்களுக்குப் புதிது. சிறைப்படுத்துதல். அவமானப்படுத்துதல், அடிமையாக்கி விற்கப்படுதல், துரத்தப்படுதல் இவை எல்லாம் தான் அவர்கள் இது வரை பார்த்திருந்தவை. ஆனால் சிவாஜி, எதிரணியில் இருப்பவர்கள் எல்லாம் எதிரிகள் என்று எண்ணவில்லை. பலமிழந்தவர்களைத் துன்புறுத்தி இன்பம் காணவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அங்கிருந்து செல்லும் போது முல்லானா அகமதுவும் மானசீகமாகவே சிவாஜிக்குத் தலை தாழ்த்தி வணங்கி விட்டுச் சென்றான்.

கல்யாண் பகுதியின் நிர்வாகப் பொறுப்பை அபாஜி சோன் தேவுக்கே தந்த சிவாஜி அங்கு நிர்வாகத்திலும் தங்கள் பகுதிகளின் முறைகளையே பின்பற்ற உத்தரவு பிறப்பித்தான். தாதாஜி கொண்டதேவின் வழிமுறைகளாக இருந்த நியாயமான ஊதியம், நியாயமான வரிகள், தகுதிக்கும் திறமைக்கும் உரிய மரியாதை, ஏற்ற பதவிகள் அங்கும் ஏற்படுத்தப்பட்டன. அங்குள்ள அதிகாரிகள், பிரபுக்களுடன் இது குறித்து அவன் பேசி முடித்த போது அபாஜி சோன் தேவ் சிவாஜியிடம் சொன்னான். “சிவாஜி. வெற்றி மீது வெற்றி கண்ட உங்களுக்கு ஒரு பிரமிக்க வைக்கும் பரிசு ஒன்றைத் தர நினைக்கிறேன்”

சிவாஜி சிரித்துக் கொண்டே சொன்னான். “பரிசு என்பதை மட்டும் சொல். அது பிரமிக்க வைப்பது தானா என்று நான் தான் தீர்மானிக்க வேண்டும்”

அபாஜி சோன் தேவ் கண்களால் சமிக்ஞை செய்ய வீரர்கள் பேரெழில் கொண்ட பெண் ஒருத்தியை சிவாஜி முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அந்த அழகு சிவாஜியை உண்மையாகவே பிரமிக்க வைத்தது. அவன் அப்படி ஒரு அழகை இது வரை பார்த்ததில்லை. 

சிவாஜி கேட்டான். “யாரிந்தப் பெண்?”

”முல்லானா அகமதின் மருமகள்….” என்று அபாஜி சோன் தேவ் சொன்னான்.

வென்ற நாட்டின் செல்வங்கள் மட்டுமல்ல அழகான பெண்களும் கூட வென்றவனுக்கே சொந்தம் என்பது அக்காலத்தின் நியதியாக இருந்தது. அது வெற்றியின் உரிமையாகக் கருதப்பட்டது. அழகான பெண்கள் வென்ற அரசனின் அந்தப்புரத்திற்கு அனுப்பப்படுவார்கள். அதனால் அபாஜி சோன் தேவ் அப்படிப்பட்ட ஒரு பேரழகியைப் பார்த்த பின் தன் இளம் தலைவனுக்குச் சொந்தமாக வேண்டியவள் என்று முடிவெடுத்திருந்தான்.

சிவாஜி ஒன்றும் பேசாமல் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள். சிவாஜி புன்னகையுடன் அந்தப் பெண்ணிடம் சொன்னான். “உன் அழகில் ஒரு பகுதி என் தாயிடம் இருந்திருந்தால் நானும் அழகனாய் பிறந்திருப்பேனோ என்னவோ?”

அந்தப் பெண் திகைப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இந்த வார்த்தைகளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை…..

சிவாஜி அபாஜி சோன் தேவிடம் சொன்னான். “உன் அன்புக்கு நன்றி அபாஜி. ஆனால் பெண்கள் பரிசுப் பொருள்கள் அல்ல. வெற்றியில் பெண்களை ஒருவனுக்கு எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பதையும் என் மனோதர்மம் மறுக்கிறது. அடுத்தவன் மனைவியை அபகரித்துச் சென்ற இராவணன் அந்த ஒரு பாவச்செயலாலேயே தன் அனைத்து பலங்களையும் இழந்து அழிந்து போன கதையைக் கேட்டு வளர்ந்தவன் நான். இத்தனைக்கும் அவன் வேதங்களைக் கரைத்துக் குடித்தவன், பத்து தலை அவனுக்கு. அத்தனையும் அறிவு. உடல் பலம். பணபலம் எதிலுமே அவனிடம் குறைவிருக்கவில்லை. அத்தனையும் இழக்க வைத்தது சீதா பிராட்டியின் கண்ணீர். நான் என் கணக்கில் இந்தப் பெண்ணின் கண்ணீர் சேர்வதை விரும்பவில்லை…”

அபாஜி சோன் தேவ் மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை பேரும் சிவாஜியை வியப்புடன் பார்த்தார்கள். சிவாஜி அபாஜி சோன் தேவை அருகில் அழைத்து அவன் காதுகளில் ஏதோ சொன்னான். உடனடியாக விரைந்து சென்ற அபாஜி சோன் தேவ் ஒரு பெரிய வெள்ளித் தட்டில் பட்டாடைகளும், தங்க நகைகளும் வைத்துக் கொண்டு வந்து தந்தான்.

சிவாஜி எழுந்து சென்று அவற்றை அந்தப் பெண்ணிடம் தந்தான். “இதை உன் சகோதரன் கொடுப்பதாக எண்ணிப் பெற்றுக் கொள் பெண்ணே. உன்னை உன் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்க இப்போதே ஏற்பாடு செய்கிறேன். போய் வா”

அதைப் பெற்று கொண்ட போது அந்தப் பெண் கண்கள் கலங்கியிருந்தன. அவனை பிரமிப்பு தீராமல் அவள் பார்த்தாள். சிவாஜி கைகூப்பி அவளை வணங்கி தகுந்த துணையுடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான். அவளும் கூப்பிய கைகளைப் பிரிக்காமலேயே அவனைத் திரும்பிப் பார்த்தபடி போனாள்.

அந்தச் செய்தி நாடெங்கும் தீயாகப் பரவ ஆரம்பித்தது. சிவாஜி வீரன் மட்டுமல்ல, பெருந்தன்மையானவன் மட்டுமல்ல, பெண்களையும் மதிக்கும் உத்தமன், மிக நல்லவன் என்ற அபிப்பிராயம் அனைவர் மனதிலும் வேரூன்ற ஆரம்பித்தது.. அப்படி ஒருவனை யாரும் இது வரை பார்த்ததில்லை. அப்படி ஒருவன் உண்மையில் இருக்கக்கூடும் என்று கூட நம்பியிருக்கவில்லை. கதைகளில் மட்டுமே கேள்விப்பட்ட உன்னதங்களை நேரில் பார்க்க முடியும் போது ஏற்படும் பிரமிப்பே பலருக்கும் ஏற்பட்டடது.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, October 4, 2018

இருவேறு உலகம் – 103


புதுடெல்லி உயரதிகாரி உடனே இஸ்ரோ டைரக்டரிடம் போனில்  பேசினான். அந்த ரகசிய மனிதன் கேட்கச் சொன்ன கேள்வியைக் கேட்டான்.  டைரக்டருக்கு அந்த உயரதிகாரி புரியாத புதிராக விளங்கினான். தங்கள் ஆராய்ச்சி சம்பந்தமாக என்ன தெரிவித்தாலும் கிட்டத்தட்ட வேண்டாவெறுப்பாகக் கேட்டுக் கொள்வது போலவே இருக்கும் அந்த ஆளுக்கு உண்மையில் இதில் எந்த ஈடுபாடும் இல்லை என்றே அந்த டைரக்டர் நினைத்திருந்தார். ஆனால் போன் செய்து கூப்பிட்டுக் கேட்கும் அளவுக்கு அந்த ஆள் இதில் அக்கறை காட்டுவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நேற்று தான் அந்த நாஸா விஞ்ஞானி பேசினார் சார். கிட்டத்தட்ட அதே போன்ற அலைவரிசைகள் இமயமலையில் சில  இடங்களில் அபூர்வமாக சில சமயங்களில் அகப்படுகின்றன என்கிறார் அவர். அதை நாஸா முன்பே கவனித்திருக்கிறது. அது உச்ச தவநிலையில் இருக்கும் யோகிகள் வெளிப்படுத்தும் அலைவரிசைகள் போல் இருக்கின்றது என்று   அவர்கள் சொல்கிறார்கள்…. சில சமயங்களில் அந்த அலைவரிசைகள் அசாதாரண வெப்பத்தையும் உருவாக்குமாம். அந்த நேரங்களில் கடுங்குளிர் காலத்திலும், சூரிய ஒளியே விழாத போதும் கூட இமயமலையின் பனி உருகுவது உண்டாம். அதை இமயமலையில் பனியில் ட்ரெக்கிங் போகிறவர்கள் கூடக் கண்டிருக்கிறார்கள், அதை அதிசயமாக நினைத்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்று அந்த விஞ்ஞானி சொன்னார். அவர்களுக்கு அந்த யோகிகள் செயல் என்று தெரிவதில்லை என்றார் அவர். விஞ்ஞான பூர்வமாக முழுமையாக நிரூபிக்க அவர்களுக்கு இன்னும் அதிக ’டேட்டாஸ்’ தேவைப்படுகின்றது என்றாலும் இதைப் பூரணமாக நம்புவதாகச் சொன்னார்…. அது மட்டுமல்லாமல் அந்தக் கருப்புப் பறவையின் புகைப்படங்களை நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் நுணுக்கமாக ஆராய்ந்ததில் அது ஒரு சக்தி வாய்ந்த விண்கலம் என்று தெரிய வந்திருக்கிறது. வெளித்தோற்றம் மட்டுமே பறவையினுடையதாக இருந்திருக்கிறது……”  


டைரக்டர் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்குள்ளே யாரோ புகுந்து கொண்டு கேட்பது போல் புதுடெல்லி உயரதிகாரி உணர்ந்தான். இந்த ரகசிய மனிதருக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாவற்றிலும் இது போன்ற உணர்வு வருவது வாடிக்கையாகி விட்டது….. மற்ற சமயங்களில் இந்தத் தொந்திரவு இல்லை….

அந்த ரகசிய மனிதருக்குப் போன் செய்து டைரக்டர் சொன்னதை உடனே சொன்னான். “சரி” என்ற ஒற்றைச் சொல்லோடு மறுபக்கம் முடித்துக் கொண்டது. ஐந்தே நிமிடத்தில் அவன் கணக்கில் பணம் வந்து சேர்ந்த செய்தி வந்து சேர்ந்தது.


ர்ம மனிதனுக்கு டைரக்டர் சொன்ன தகவலின் மூலமாகத் தனக்குத் தேவையான மிக முக்கிய வேறொரு தகவல் தெரிய வரலாம் என்று உள்ளுணர்வு சொன்னது. அதனால் அவன் தீவிரமாக யோசித்தான். அலெக்சாண்டிரியா நகர் மூதாட்டி காளி கோயிலில் கிடைத்த வரைபடத்தை வைத்துச் சொன்ன விவரங்கள் நினைவில் மறுபடி ஓடின.

”குளிர்கிறது…….. பனிமலைப்பகுதி………. பிரம்மாணடமான மலை போல் தெரிகிறது…… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்திருக்கிறது….. பனிக்கு சொருகப்பட்டிருக்கிறது…… அந்தப் பாறைக்கு அடியில் ஒரு குகை……..” அடியில் ஒரு மிகப்பெரிய பாறை……  பாறையின் மேல் ஒரு ஆயுதம்….. அந்தக் கோயிலில் பெண் தெய்வம் கையில் இருந்தது போல் ஆயுதம்… ”குளிர்கிறது…….. பனிமலைப்பகுதி………. பிரம்மாணடமான மலை போல் தெரிகிறது…… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்திருக்கிறது….. பனிக்கு சொருகப்பட்டிருக்கிறது…… அந்தப் பாறைக்கு அடியில் ஒரு குகை…….. அடியில் ஒரு மிகப்பெரிய பாறை……  பாறையின் மேல் ஒரு ஆயுதம்….. அந்தக் கோயிலில் பெண் தெய்வம் கையில் இருந்தது போல் ஆயுதம் ….என்ன ஆச்சரியம்…… குகைக்குள்ளே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்…… மிக வயதானவன்……. இடுப்பில் ஆரஞ்சு நிறத்துணியை உடுத்தியிருக்கிறான்….. கண்களை மூடித்தியானத்தில் இருக்கிறான்…… வேறு உடை எதுவும் உடலில் இல்லை…. ஆனால் இந்தக் குளிரிலும் அவன் உடம்பு நடுங்கவில்லை….. என்ன ஆச்சரியம் அவன் மூச்சு விடமாட்டேன்கிறான்….. உடலில் உயிர் இருக்கிறது……….ம்ம்ம்ம்ம்…… இப்போது ஒரு முறை மூச்சு விட்டான்……. பல நிமிடங்களுக்கு ஒரு முறை தான் மூச்சு விடுகிறான் போலிருக்கிறது…… அதுவும் ஒரு மூச்சு தான் விடுகிறான்……..”

அவள் சொன்ன இடம் இமயமலை என்பதிலும், அந்த மனிதன் ஒரு யோகி என்பதிலும் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அந்தக் கடும்பனிக் குளிரிலும் உடல் நடுங்கவில்லை என்றால் அவன் யோகசக்தியே அந்தக் குளிர் பாதிக்காத அளவு வெப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்…. நாஸா விஞ்ஞானி சூரிய வெப்பம் படாமலேயே பனி உருகுவதாகவும், அதை ட்ரெக்கிங் போகிற சிலர் பார்த்திருக்கிறார்கள் என்று சொன்னதும் அது யோகிகளால் தான் என்று நம்புவதாகச் சொன்னதும் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அந்த வரைபட இடத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்றே தோன்றியது.

ஒரு மாபெரும் புத்துணர்ச்சி பெற்றவனாய் மர்ம மனிதன் இணையத்தில் பனிக்காலத்தில் ட்ரெக்கிங் போகிறவர்கள் பற்றித் தேடினான். ஹிமாச்சல பிரதேச அரசாங்கமும், சில ட்ரெக்கிங் பயிற்சியாளர்களும் எழுதியிருக்கும் பக்கங்களை மேலோட்டமாகப் பார்த்து விட்டு மேலும் தேடினான். ‘இமயத்தின் பனிமலையேற்ற வீரர்கள் குழுமம்’ என்ற அமைப்பு ஒன்று தெரிந்தது. அதில் பல வீரர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இமயத்தின் பனிமலைகளில் ட்ரெக்கிங் போன போது தங்களுக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விவரித்திருந்தார்கள். 127 இணையப் பக்கங்களில் அந்த அனுபவங்கள் இருந்தன. மர்ம மனிதன் பொறுமையாக  படிக்க ஆரம்பித்தான்.   அவனுக்குத் தேவையான தகவல் 116வது பக்கத்தில் இருந்தது. ரிச்சர்ட் டவுன்செண்ட் என்ற ஐரோப்பியர் மூன்று வருடங்களுக்கு முன் எழுதியிருந்தார்.

“டிசம்பர் 25. என்னுடைய கிறிஸ்துமஸ் இமயமலையில் கடும்பனியில் கொண்டாடினேன். எத்தனை தான் தயாராக வந்திருந்த போதும் இமயத்தின் பனி என்னை வதைக்கவே செய்தது. என்னுடன் ட்ரெக்கிங் வந்திருந்த டேவிட்சனும், சட்டர்ஜியும் பின் தங்கி விட்டார்கள். கிட்டத்தட்ட அரை கிலோமீட்டராவது கீழேயே இருப்பார்கள் போலிருந்தது. அவர்கள் வருவதற்காகக் காத்திருந்தேன். அப்போது தான் பக்கத்து மலையில் அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தேன். அங்கு திடீரென்று பனி உருக ஆரம்பித்தது. பனிப்புயலோ என்று ஆரம்பத்தில் பயந்தேன். அந்த மலையில் ஒரு இடத்தில் மட்டும் ஏற்படுகிற மாற்றம் எப்படி பனிப்புயல் ஆகும்..? பயம் தணிந்து ஆச்சர்யத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன். என் பார்வை மட்டத்திற்குச் சற்று கீழே அந்த அதிசயம் நடந்து கொண்டிருந்ததால் எனக்கு அது மிகத் தெளிவாகத் தெரிந்தது. பனி உருகி உருகி ஏதோ ஒரு இரும்பு ஆயுதம் தெரிய ஆரம்பித்தது. அந்த இரும்பு ஆயுதத்தை இந்தியாவில் சில கோயில்களில் பார்த்திருக்கிறேன். மூன்று சிறிய கூர்மையான அம்புகளைக் கொண்ட ஒரு ஈட்டி அது. அங்கும் ஏதாவது சிறிய பனிக்கோயில் இருக்கிறதோ என்னவோ? இமயத்தில் கோடைகாலத்தில் மட்டும் வழிபாடு நடக்கும் எத்தனையோ சிறிய கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். திடீர் என்று ஒரு கழுகு எங்கிருந்தோ வந்து அந்த இடத்தை வட்டமிட ஆரம்பித்தது. இதுவரை இமயத்தில் இந்தப் பனிக்காலத்தில் அப்படிப்பட்ட கழுகை நான் பார்த்ததில்லை. திடீரென்று நான் நின்றிருந்த இடம் லேசாகி நானும் வழுக்க ஆரம்பித்தேன். நான் சுதாரித்து ஒரு உறுதியான இடத்தில் நிற்பதற்குள் நிறையவே கீழே வந்து விட்டேன். டேவிட்சனும் சட்டர்ஜியும் பார்வைக்குத் தெரிந்தார்கள். அவர்கள் கையசைத்தார்கள். நானும் கையசைத்து விட்டுப் பக்கத்து மலையைப் பார்த்தேன். உருகிய பனி வழிவது லேசாகத் தெரிந்தாலும் அந்த ஈட்டி என் பார்வைக்குத் தெரியவில்லை. சற்று முன் வட்டம் போட்ட கழுகும் கூடத் தெரியவில்லை. நான் டேவிட்சனிடமும், சட்டர்ஜியிடமும் நான் பார்த்த காட்சியைச் சொன்னேன். அவர்களும் ஆர்வத்துடன் அந்தக் காட்சியைக் காண ஆசைப்பட்டார்கள். வேகமாக மறுபடி மேலே ஏறினோம். நான் முன்பு இருந்த இடத்தை அடைந்தும் விட்டோம். ஆனால் இப்போது பார்த்த போது பக்கத்து மலையில் சற்று முன் பார்த்த காட்சிக்கான அறிகுறியே இல்லை. கழுகையும் காணோம். டேவிட்சனும், சட்டர்ஜியும் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தார்கள்……”

மர்ம மனிதன் பரபரப்படைவது மிக அபூர்வம். இப்போது அவன் பரபரப்படைந்தான். அந்தக் குழுமத்தை இணையத்தில் நிர்வகிக்கிற நபரின் போன் நம்பர், விலாசம் கண்டுபிடித்தான். அட்லாண்டாவில் வசிக்கும் அவரைப் போனில் தொடர்பு கொண்டான். ரிச்சர்ட் டவுன்செண்டின் போன் நம்பர், விலாசம் கேட்டான்.

“அவர் இரண்டு வருடங்களுக்கு முன் இமயமலை மலையேற்றத்தின் போது  சறுக்கி விழுந்து இறந்து விட்டார்….”

மர்ம மனிதன் யோசித்து விட்டு  டேவிட்சன், சட்டர்ஜி இருவரின் தொடர்பு எண், விலாசம் கேட்டான்.

“டேவிட்சனும் டவுன்செண்டோடு சேர்ந்து தான் அந்த மலையேற்றத்தின் போது இறந்தார்…”

இரண்டு பேர் அடுத்த வருட மலையேற்றத்திலேயே இறந்து போனது மர்ம மனிதனை நிறைய யோசிக்க வைத்தது.

(தொடரும்)
என்.கணேசன்Tuesday, October 2, 2018

வாழ்க்கை வாழ்வதற்கே- என் உரையின் மூன்று காணொளிகள்

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த ஞாயிறன்று கோவையில் “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற தலைப்பில் நான் ஆற்றிய சொற்பொழிவின் மூன்று காணொளிகளை நான் இங்கே இணைத்துள்ளேன்.

வாழ்க்கையை சிந்தித்து வாழ்கிறோமா? எப்படி வாழ்கிறோம்? நாம் எப்படி வாழ வேண்டும், செய்யக்கூடிய தவறுகள் என்ன? சரிப்படுத்திக் கொள்வது எப்படி? எது வெற்றி? எது நிறைவு? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அமைந்துள்ளவை முதலிரண்டு காணொளிகள்.

முதல் பகுதி-
இரண்டாம் பகுதி -

மூன்றாவது காணொளி என் சொற்பொழிவில் முரண்பட்டு ஒரு நண்பர் கேட்ட கேள்வியும் எனது பதிலும்.
அன்புடன்
என்.கணேசன்


Monday, October 1, 2018

சத்ரபதி 40


சிவாஜி தேர்ந்தெடுத்திருந்த இடத்திற்கு சில மணி நேரங்கள் முன்பே தன் படைவீரர்களுடன் போய்ச் சேர்ந்து விட்டான். அங்கு சென்றவுடன் தன் வீரர்களிடம் தன் திட்டத்தை விரிவாக விளக்கினான். யார் யார் எங்கு இருக்க வேண்டும், கல்யாண் படை நெருங்கியவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்தான்.

“திட்டத்தைச் செயல்படுத்தும் போது குழப்பமே இருக்கக்கூடாது. முழுத் தெளிவுடன் வேகமாகச் செயல்பட்டால் தான் நாம் வெற்றி அடைய முடியும். சந்தேகம் இருந்தால் இப்போதே கேட்டுக் கொள்ளுங்கள்.”

ஓரிருவர் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டார்கள். பின் இரண்டு குழுக்கள் இருமருங்கு மலைகளிலும் ஏறி பாறைகளின் பின் பதுங்கிக் கொண்டார்கள். மற்ற படைவீரர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொண்டார்கள். ஒரு பிரிவு குறுகலாகப் பாதை துவங்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி மலைச்சரிவான பகுதியில் மறைந்து கொண்டார்கள். வரும் படைவீரர்கள் பாதையின் விளிம்பு வரை வந்து எட்டிப் பார்த்தால் ஒழிய படைவீரர்கள் பதுங்கி இருப்பதை அறிய முடியாது. மற்றொரு பிரிவுப் படைவீரர்கள் குறுகலான பாதையின் முடிவில் பக்கவாட்டில், அகன்ற பகுதியில், மறைவாகக் காத்திருந்தார்கள்.

சிவாஜி ஒரு மலையில் உயரமான பாறை ஒன்றின் பின் மறைவாய்க் காத்திருந்தான். ஒரு மணி நேரம் கழித்து ஒரு குதிரை வீரன் தெரிந்தான். அவன் கையில் பீஜாப்பூர் கொடியை வைத்திருந்தான். பொதுவாக இது போன்ற செல்வப் பேழைகள் கொண்டு செல்லப்படும் போதோ, அரசகுலத்து இளம்பெண்கள் பயணிக்கும் போதோ அவர்களுக்குச் சில நிமிடங்கள் முன்னதாகவே ஒரு வீரன் பயணிப்பது வழக்கம். வழியில் எங்காவது ஆபத்தை அவன் கண்டால் அவன் விசேஷமாக ஏதாவது வகையில் கூக்குரலிட்டு ஆபத்தைப் பின்னால் வருபவர்களுக்கு எச்சரிக்கை செய்வான். பின்னால் வரும் வீரர்கள் முழு எச்சரிக்கையடைந்து விடுவார்கள். செல்வப்பேழைகளுக்கோ, அரச குலத்துப் பெண்மணிகளுக்கோ பாதுகாப்பாக ஒரு வலிமையான படை சூழ்ந்து கொண்டு அரணாகக் காக்க, மற்ற படை வேகமாக ஆபத்தை ஏற்படுத்தக் காத்திருப்பவர்களைத் தாக்கப் பாய்ந்து வரும். அதனால் முன்னால் வரும் வீரன் பெரும்பாலும்  பின்னால் இருப்பவர்களின் பார்வையிலேயே இருக்கும் படியே பயணிப்பான். அவனைத் தாக்கிக் கூக்குரலிடாதபடி கொள்ளையர்கள் அவன் வாயடைக்க வாய்ப்பு இருக்கும் என்பதால் அவன் தொலைதூரத்திலும் தங்கள் பார்வைக்குத் தெரியா விட்டால் பயணத்தை நிறுத்தி படைவீரர்களில் ஒருவன் அவனுக்கு என்ன ஆயிற்றென்று பார்க்க முன்னால் விரைந்து செல்வான். இந்த எளிய ஏற்பாடு பெரும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி இருப்பதால் இதை அனைவரும் பின்பற்றினார்கள்.

சிவாஜி முன்னால் வரும் குதிரை வீரனைக் கூர்மையான பார்வையினால் அளந்து விட்டு வேகமாக மலையிலிருந்து இறங்கினான். வரும் குதிரை வீரனின் உடல்வாகு, உயரம் உள்ள தன் வீரன் ஒருவனைச் சுட்டிக் காட்டித் தலையசைத்தான். அந்த வீரன் உடனே குறுகலான பாதையின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு பாறையின் பின் ஓடிச்சென்று ஒளிந்து கொண்டான். 

அந்தக் குறுகலான பாதை ஆரம்பிக்கும் இடம் ஒரு வளைந்து திரும்பும் பாதை. அந்த வளைந்த பாதையில் அந்த முன்னால் குதிரை வீரன் வருகையில் சிறிது தூரம் வரை சற்றுப் பின்னால் வரும் படைவீரர்கள் கண்ணில் அவன் பட முடியாது. மலைப்பாதைகளில் இது போன்ற வளைவுகளில் இது தவிர்க்க முடியாதது.

முன்னால் வரும் குதிரை வீரன் வளைவில் திரும்பியவுடன் மூன்று வீரர்கள் மேல்பகுதி பாறைகளில் இருந்து அவன் மீது லாவகமாகக் குதித்து கீழே தள்ளினார்கள். மூவரில் ஒருவன் குதிரைகளை மிக நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தவன். அவன் குதிரை பீதியடைந்து அலறி ஓடி விடாதபடி அதனை நட்புடன் தடவி சமாதானப்படுத்த குதிரை சத்தமில்லாமல் இயல்பாகவே செல்ல ஆரம்பித்தது. வேக வேகமாக அந்தக் குதிரை வீரனின் வாயைப் பொத்தி ஆடைகளைக் களைந்து பாறைக்கருகே முன்பே ஒளிந்து இருக்கும் வீரன் மீது வீச அவன் மின்னல் வேகத்தில் அந்த உடைகளுக்கு மாறிக் கொடியைக் கையில் ஏந்திக் கொண்டு அந்தக் குதிரை மேல் ஏறிக் கொண்டான். இரண்டு நிமிடங்களில் பின்னால் வரும் படைவீரர்கள் வளைவில் திரும்ப ஆரம்பித்த போது தொலைவில் முன்னால் சென்று கொண்டிருப்பது தங்கள் ஆளல்ல என்பது அவர்களுக்குத் தோன்றவே இல்லை. அதே உடையோடு, அதே உடல்வாகோடு, அவர்களது அதே கொடியைப் பிடித்துக் கொண்டு அதே வேகத்தில் சீராக அவன் போய்க் கொண்டிருந்ததால் அவர்களுக்கு சிறிய சந்தேகம் கூட ஏற்பட்டு விடவில்லை.  

அவர்கள் படை காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் அந்த குறுகலான பாதையில் பயணித்தது. முன்னால் செல்லும் வீரர்கள் குறுகலான பாதையில் எல்லையை அடையும் வரை எதுவும் நிகழவில்லை. ஆனால் அது அந்த எல்லையை நெருங்கிய கணம் கடைசி வீரர்கள் கிட்டத்தட்ட அந்த ஆரம்பப் பகுதியைக் கடந்து முழுவதுமாகக் குறுகலான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்ட கணமாகவும் இருந்தது. இந்தக் கணத்தைக் கவனித்து சமிக்ஞை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தவன் மலைப்பகுதிப் பறவை போல் ஓசையெழுப்பினான். அந்த ஓசையும் அப்பகுதிப் பறவை எழுப்பும் ஒலியாகவே தோன்றியதால் கல்யாண் வீரர்கள் அப்போதும் சந்தேகம் கொள்ளவில்லை. அதனால் நடுப்பகுதியில் பாறைகளுக்கு மேல் இருந்து சிவாஜியின் வீரர்கள் அந்தப் பேழைகள் இருக்கும் ரதங்களின் மேல் குதித்த போது அவர்கள் குழப்பத்துடன் அதிர்ந்து போனார்கள்.

நடுப்பகுதியில் வீரர்கள் குதிக்கும் சத்தம் கேட்டு திகைப்புடன் முன்னால் சென்று கொண்டிருந்த வீரர்கள் கவனமும், கடைசியில் வந்து கொண்டிருந்த வீரர்கள் கவனமும் நடுப்பகுதிக்குச் சென்ற அந்தக் கணத்தில் முன்னால் மறைவாக வீரர்களுடன் காத்திருந்த சிவாஜி முன்னால் இருந்து அந்தப் படையைத் தாக்க ஆரம்பித்தான். அதே நேரத்தில் பின்னால் மலைச்சரிவில் காத்திருந்த சிவாஜியின் இன்னொரு பிரிவுப் படைவீரர்கள் பின்னால் வேகமாக வந்து பின் பகுதிப் படையைத் தாக்க ஆரம்பித்தார்கள். இப்படி முன்னாலும், மையத்திலும், பின்னாலும் சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தவுடன் கல்யாண் வீரர்களுக்குச் சுதாரிக்கவே சிறிது நேரம் தேவைப்பட்டது.

முன்பே நிறைய தூரம் பயணித்திருந்த அவர்கள் பயணக்களைப்பில் இருந்ததாலும், சிறிது தூரத்தில் இளைப்பாறும் இடம் என்று தெரிந்து வைத்திருந்ததாலும் அவர்கள் மனம் சிவாஜி எதிர்பார்த்தபடியே சண்டைக்குப் பதிலாக இளைப்பாறவே தயார்நிலையில் இருந்தது. அவர்கள் சுதாரித்து யுத்த மனநிலைக்கு வரும் முன் சிவாஜியின் கை ஓங்கி வீட்டிருந்தது. கல்யாண் வீரர்கள் நிறைய பேர் உயிரிழந்தும் காயப்பட்டும் இருந்தார்கள். ஆனாலும் சுதாரித்த பின் அவர்கள் வீரத்துடனேயே போராடினார்கள். அந்த மலைப்பகுதியின் குறுகலான பகுதியும், சிவாஜி வீரர்களின் கொரில்லா முறைகளும், எல்லாவற்றுக்கும் மேலாக சிவாஜியின் வீரமும் அவர்கள் தாக்குப்பிடிக்க முடியாததாக இருந்தது. சிவாஜி மின்னல் வேகத்தில் அங்கும் இங்கும் பாய்ந்து கொண்டிருந்தான். அவன் பாய்ந்த இடங்களில் எல்லாம் மரணமே உறுதி என்றாக இருந்தது. அவன் தனி மனிதனாகத் தோன்றவில்லை. ஏதோ பெரும் சக்தி இயக்கும் எமனாகவே தெரிந்தான். அவன் வீரர்களும் அவன் அந்தச் சக்தியைத் தாராளமாக வினியோகித்தது போல் அவர்களும் உத்வேகமாகப் போராடினார்கள்.

சிவாஜியின் பக்கம் சில வீரர்கள் உயிரிழந்தார்கள். சில வீரர்கள் பெரும் காயமடைந்தார்கள். ஆனால் கல்யாண் படையில் இந்த இழப்பு மும்மடங்காக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் கல்யாண் படைத்தலைவன் தோல்வியை ஒப்புக் கொண்டு வாளைக் கீழே வைத்து சிவாஜி முன் மண்டியிட்டான். அதைக் கண்ட அவர்கள் வீரர்களும் அவனைப் பின்பற்றினார்கள். மண்டியிட்டாலும் அந்தப் படைத்தலைவன் சொல்லிப் பார்த்தான்.

“சிவாஜி. இது எங்கள் செல்வம் அல்ல. பீஜாப்பூர் சுல்தானின் செல்வம். அவர் கஜானாவிற்குப் போக வேண்டிய செல்வத்தை நீ கைப்பற்ற நினைக்கிறாய். அவருடைய சாம்ராஜ்ஜியத்தின் குடிமகனாகிய நீ இப்படிச் செய்வது ராஜத் துரோகம் அதை நினைவில் வைத்துக் கொள்”

சிவாஜி அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “நான் பீஜாப்பூர் சுல்தானின் குடிமகன் அல்ல. இப்பகுதியின் தலைவன் நான். நாளை உன் கல்யாண் பகுதிக்கும் தலைவனாகப் போகிறவன். என் செல்வம் இன்னொரு கஜானாவிற்குச் செல்வதை நான் விரும்பவில்லை வீரனே. இங்கு ஏழைகள் இரண்டு வேளை உணவுக்கே போராடிக் கொண்டிருக்கையில் உன் பீஜாப்பூர் சுல்தான் இங்கு திரட்டிய இந்தச் செல்வத்தில் கட்டிடங்கள் எழுப்பிக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை….”

சிவாஜி சொன்னதில் இருந்த உண்மையை அந்தப் படைத்தலைவனால் மறுக்க முடியவில்லை. பீஜாப்பூர் சுல்தான் முகமது ஆதில்ஷா கட்டிடப்பிரியர். அவர் காலத்தில் பீஜாப்பூரில் கட்டப்பட்ட அழகுக் கட்டிடங்கள் ஏராளம்.  அந்தக் கட்டிடங்களில் காட்டிய அக்கறையை அவர் ஏழைக் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளுக்குக் காட்டவில்லை. ஆனால் அரசனின் தீர்மானத்தைக் கேள்வி கேட்கவோ மறுக்கவோ நீ யார் என்று அந்தப் படைத்தலைவனுக்குக் கேட்கத் தோன்றியது.

ஆனால் சிவாஜி நின்றிருந்த தோரணை ‘இங்கு நானே அரசன்’ என்று சொல்வது போல் அவனுக்குத் தோன்றியது. வார்த்தைகளை விட வலிமையாய் அந்தத் தோரணை மனதில் பதிய படைத்தலைவன் களைப்புடன் பெருமூச்சு விட்டான்…..

(தொடரும்)
என்.கணேசன்

27.9.2018 முதல் 07.10.2018 வரை தேவக்கோட்டையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில்  அரங்கு எண் 61 (ராமகிருஷ்ணா மட அரங்கு)ல் என் நூல்கள் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அங்கு செல்ல முடிந்த வாசகர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும். 

Thursday, September 27, 2018

இருவேறு உலகம் – 102

                 
மாஸ்டர் தன் வாழ்க்கையில் அன்றைய நாள் வரை அடுத்தவர் முன் கூனிக்குறுகி நின்றதில்லை. இலக்கில்லாத வாழ்க்கை வாழ்ந்து திரிந்து கொண்டிருந்த இளமைப் பருவத்திலும் கூட  யாருக்கும் பணிந்தோ, தலைகுனிந்தோ  நின்றதில்லை. முதல் முறையாக தன் ஆன்மிக இயக்கத்தின் உறுப்பினர்கள் முன் கூனிக்குறுகி நின்றார். இயக்கத்தின் மிக மூத்த துறவி ஒருவரையும் பிரத்தியேக அழைப்பு விடுத்து வரவழைத்திருந்தார். அந்தத் துறவி தவ வாழ்க்கை வாழ்பவர். இயக்கத்தின் கூட்டங்களிலோ, மற்ற நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வதைத் தவிர்ப்பவர். அவரை வற்புறுத்தியே மாஸ்டரால் வரவழைக்க முடிந்தது. வந்தவர்களில் இந்தக் கூட்டம் ஏன் என்று அறிந்தவர்கள் இருவர் மட்டுமே. கிருஷ்ணவேணி மற்றும் சுரேஷ்…..

இப்படிப்பட்ட மனிதர் இரண்டு நாட்களில் நடைப்பிணமாகக் காட்சி அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்த்திராத கிருஷ்ணவேணி மாஸ்டருக்காக மனமுருகினார். ஏமாந்த கதையை போனில் தெரிவித்த போதே மாஸ்டரின் மனவேதனையை அவரால் உணர முடிந்தது. நேரில் பார்த்த போதோ மேலும் கொடுமையாக இருந்தது.

தளர்ந்த குரலில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய மாஸ்டர் க்ரிஷ் அவரிடம் “பரஞ்சோதி முனிவர் சொன்ன ஆள் நீங்களாகக்கூட இருக்கலாம் அல்லவா?” என்று எழுப்பிய கேள்வியில் ஆரம்பித்து ஹரித்வாரில் வங்கியில் சொத்துக்களும், பணமும் மொத்தமாக கபளீகரம் ஆனது அறிந்தது வரை சொன்னார். கூட்டத்தினரின் அதிர்ச்சி அவர்கள் முகங்களில் தெரிந்தது. அவர்களில் பலருக்கும் கூச்ச சுபாவம் உள்ள, அதிர்ந்து கூடப் பேசாத, மிகவும் பணிவாகவும் இத்தனை காலம் காட்சி அளித்த விஸ்வம் இப்படி  நடந்து கொண்டார் என்பதை ஜீரணிக்க முடியாமல் இருந்தது அவர்கள் முக பாவனையில் இருந்தே தெரிந்தது. அவரவர்களுக்கு வர வேண்டிய தொகைகளைத் தகுந்த ஆவணங்களுடன் தெரிவித்தால் சிறிதும் கால தாமதமில்லாமல் அவரவர் கணக்குக்கு அந்தப் பணம் வந்து சேர்வது பற்றி அவர்கள் பல முறை தங்களுக்குள் சிலாகித்துப் பேசிக் கொண்டதுண்டு. அந்த மனிதரா இப்படி?

மாஸ்டர் மிகுந்த வேதனையுடன் மனம் விட்டு எதையும் ஒளிக்காமல் தன் தற்கொலை முயற்சியையும், க்ரிஷின் போன்கால் அந்த சமயம் வந்து அதைத் தடுத்ததையும் கூடச் சொன்னார். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முகங்களில் அதிர்ச்சியும், சிலர் கண்களில் ஈரமும் தெரிந்தது.

மாஸ்டர் தொடர்ந்து சொன்னார். “நான் செய்தது தவறல்ல. மாபெரும் குற்றம். எத்தனையோ அபூர்வ சக்திகளைக் கூடப் பெற்ற நான், ஒரு சாதாரண அறிவும், நேர்மையும் இருக்கிறவன் பொறுப்பாக நடந்திருக்கக்கூடிய அளவு கூட பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. என் குருநாதர் எனக்குக் கொடுத்திருந்த அதிகாரம் முழுவதையும் விஸ்வத்துக்குத் தந்த நான், குருநாதர் என்னை அறிந்திருந்தது போல விஸ்வத்தை முழுமையாக அறிந்திருந்தேனா என்ற கேள்வியை கிருஷ்ணவேணி அம்மா என்னைக் கேட்டார். அறியவில்லை என்பதும், அறிந்து கொள்ள நான் சரியான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதுமே உண்மை. வீட்டு சாவியை நம்பி ஒருவனிடம் தரும் முன் ஒரு சராசரி மனிதன் யோசிக்கிற அளவு கூட நான் யோசிக்கவில்லை. இந்த அலட்சியத்தில் நான் தொலைத்தது என் செல்வமாய் இருந்திருந்தால்……” மாஸ்டரின் குரல் உடைந்து போனது. கண்களில் நீர் நிரம்பியது. கஷ்டப்பட்டு தொடர்ந்தார். “…….. என் செல்வமாக இருந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். நான் தொலைத்தது இந்த இயக்கத்தின் செல்வம்….. நீங்கள் எல்லாரும் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை…… என் குருநாதர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை……” குருநாதர் நம்பிக்கையைத் தகர்த்ததைச் சொன்ன போது மாஸ்டர் முழுவதுமாக உடைந்து போனார். கண்களில் இருந்து ஆறாக நீர் பெருகியது. அங்கிருந்தோர் கண்களும் நிறைந்தன.

அவர்கள் அவரை அறிவார்கள். கம்பீரமான மனிதர், எதற்கும் அஞ்சாத மனிதர், நேர்மையில் சிறு குறை கூட அவரிடம் அவர்கள் கண்டதில்லை. எத்தனையோ சக்திகள் பெற்றிருந்தாலும் எத்தனை சிறியவரையும் குறைவாகப் பார்க்கத் தெரியாத மனிதர்…. இது நாள் வரை தன் குருவைத் தவிர யாரையும் தலைவணங்கி அவர்கள் பார்த்திராத மனிதர் இன்று தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொண்டு தலைதாழ்ந்து நிற்பதை அவர்களுக்குப் பார்க்கச் சகிக்கவில்லை.

மாஸ்டர் கைகூப்பினார். “என்னை மன்னித்து விடுங்கள். மானசீகமாக ஒவ்வொருவர் காலையும் தொட்டு வணங்கி நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பாவியை மன்னித்து விடுங்கள்…..”

கூட்டத்தில் இரண்டு மூன்று ஆட்கள் கதறி விட்டார்கள். கதறியவர்களில் சுரேஷும் ஒருவன். கலங்காத கண்கள் அங்கே இருக்கவில்லை.

“இந்த இயக்கத்தின் மிக மோசமான தலைவனாக நான் இருந்து விட்டேன். இனியும் இந்தப் பொறுப்பில் சிறிதும் அருகதை இல்லாத நான் இருப்பது சரியல்ல. அதனால் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நம் இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்களில் மிக மூத்த துறவி இமயமலையில் இருந்து வந்திருக்கிறார்கள். அவரிடம் இந்த ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறேன். தகுதி இருக்கும் ஒரு நல்ல தலைவரை நியமிக்கும்படியும், எனக்கு என்ன தண்டனை என்பதைத் தீர்மானிக்கும்படியும் அவரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”

மாஸ்டர் ராஜினாமா கடிதத்தை கலங்கிய கண்களுடன் தந்து விட்டு அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்தார்.

மூத்த துறவி சிலை போல அமர்ந்திருந்தார். அவர் நடந்த நிகழ்வுகளையும், இப்போது நடப்பதையும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர் முகபாவனையில் இருந்தே தெரிந்தது. கூட்டத்திலும் மயான அமைதி நிலவியது. அவர் மெல்ல எழுந்து மிக அமைதியாகப் பேசினார்.

“நல்ல மனிதர்களின் மிகப் பெரிய பலவீனம், மற்றவர்களின் தீமைகள் எந்த அளவில் இருக்கக்கூடும் என்பதைச் சந்தேகிக்கக் கூட முடியாத அளவு நல்லவர்களாக இருப்பது தான். அதைப் பல சமயங்களில் தீய மனிதர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது இயற்கை. சாதாரண அறிவு படைத்தவன் கூட இப்படி ஏமாற மாட்டானே, இத்தனை அறிவும், அமானுஷ்ய சக்திகளும் படைத்த நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள் என்று பச்சாதாபப்படுகிறீர்கள். இது உங்கள் அறிவையும், அமானுஷ்ய சக்திகளையும் விட அதிகமாக நீங்கள் நல்லவராக இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது மாஸ்டர். உங்கள் குரு உங்களை சந்தேகிக்காதது போல, சந்தேகிக்க காரணம் எதுவும் காட்டாமல் கச்சிதமாக வேலை பார்த்த இன்னொருவரை உங்களால் சந்தேகப்பட முடியவில்லை. இதை நல்லவர்களின் இயல்பான தவறு என்று சொல்லலாமே ஒழிய குற்றம் என்று சொல்ல முடியாது. நல்லவர்களைத் தண்டிப்பதும் நியாயமல்ல. ஆனாலும் தண்டனையைக் கேட்கிறீர்கள், மாஸ்டர். ஏமாற்றப்பட்ட உண்மை தெரிந்த நிமிஷத்திலிருந்து இந்த நிமிஷம் வரையும் நீங்கள் அனுபவித்த வேதனையும், இனியும் இந்த உறுத்தலில் காலம் பூராவும் நீங்கள் அனுபவிக்க இருக்கும் வேதனையும் தேவைக்கும் அதிகமான பெருந்தண்டனையாக இருக்கப் போகிறது. கூடுதல் தண்டனையைக் கேட்காதீர்கள்…”

“இந்த ஆன்மிக இயக்கம் இழந்திருப்பது பணத்தை மட்டும் தான். அது அளவில் எத்தனை பெரிதாக இருந்தாலும் கூட பணம் மட்டுமே. இந்த இயக்கத்தின் ஆணி வேரான ஆன்மிக நாட்டத்தையோ, உலக நன்மை நாட்டத்தையோ நாம் இழந்து விடவில்லை. அதனால் உங்கள் தலைமையில் மிக முக்கியமான எதையும் இந்த இயக்கம் இழந்து விடவில்லை. நம் இயக்கத்து தவசிகள் எச்சரித்திருக்கும் மிகவும் பிரச்னைக்குரிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். உலக நடப்புகள் அப்படியே தெரிகின்றன. நம் இயக்கத்திலேயே ஒரு விஷமி ஊடுருவி இருக்கிறான். நம் குருவின் அசாதாரண மரணம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில் நம் இயக்கத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. நாம் செயல்பட வேண்டிய நேரமிது. இந்த நெருக்கடியான கட்டத்தில் நீங்கள் தகுதி வாய்ந்த நல்ல தலைவராக வேறு ஆளை நியமிக்கச் சொல்கிறீர்கள். எல்லா விதங்களிலும் உங்களை விடத் தகுதி வாய்ந்த நல்ல மனிதர் எங்களுக்கு எங்கே கிடைப்பார்கள்?”

குற்றம் பெரிதானாலும் அன்பின் காரணமாக அதைச் சிறிதாகப் பார்க்கிறார்கள் என்று நினைத்த  மாஸ்டர் மறுபடியும் கண்கலங்கினார். பேச வார்த்தைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் மறுத்து கைகளை மட்டும் அசைத்து வேண்டாம் என்று சைகையால் சொன்னார்.

அவர் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்த கிருஷ்ணவேணி எழுந்து பேசினார். “மாஸ்டர் உங்கள் தவறையோ, இயக்கத்தின் பண இழப்பையோ நாங்கள் சரி என்று சொல்லவில்லை. ஆனால் மனிதகுலமே அழியும் என்கிற நிலை உருவாகி வருகிறது என்று நம் தவசிகளும் எச்சரித்திருக்கிறார்கள். க்ரிஷிடம் வேற்றுக்கிரகவாசியும் எச்சரித்திருக்கிறான். மனிதகுலமே அழியும் நிலை வந்தால், இந்த பணத்தையும் சொத்துக்களையும் வைத்து எதைக் காப்பாற்றப் போகிறோம். மதிப்பிற்குரிய மூத்த துறவி அவர்கள் சொன்னது போல நாம் இழக்கக்கூடாத அதிமுக்கியமான எதையும் இழக்கவில்லை. இப்போது தலைமைப் பொறுப்பில் இருந்து நீங்கள் விலகுவது தான் இந்த இயக்கத்துக்கு மிகப் பெரிய நஷ்டமாக இருக்கும். நீங்கள் தலைவராகத் தொடர வேண்டும், முன்பை விடத் தீவிரமாக செயல்பட வேண்டும். எந்த விதத்திலும் எதிரியை வெல்ல அனுமதிக்கக்கூடாது. அந்தக் கடமை உங்களுக்கிருக்கிறது. உங்கள் குரு உங்களை இறக்க அனுமதிக்காத காரணமும் இந்தக் கடமைக்காகவே இருக்கும் என்று நம்புகிறேன்…..” 

(தொடரும்)


என்.கணேசன்

27.9.2018 முதல் 07.10.2018 வரை தேவக்கோட்டையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில்  அரங்கு எண் 61 (ராமகிருஷ்ணா மட அரங்கு)ல் என் நூல்கள் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அங்கு செல்ல முடிந்த வாசகர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும். 

Monday, September 24, 2018

சத்ரபதி 39


சிவாஜியின் ஒற்றர்கள் கல்யாண் வரிவசூல் தொகை போகும் பாதையின் முழுவிவரங்களோடு அவன் கொடுத்த காலத்திற்கு முன்பாகவே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் சொன்ன வழித்தடத்தை சிவாஜி மிகவும் கவனமாகக் கேட்டான். பின்பு அவர்களிடம் நிதியோடு வரும் படை பற்றிக் கேட்டான்.

“இதுவரை எப்போதும் பணப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் சிறிய ரதங்கள் ஐந்தாகவே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு ரதத்திலும் ஐந்து வீரர்கள் வாள், ஈட்டிகள் வைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள். ஒவ்வொரு ரதத்தையும் இரண்டிரண்டு குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. ஐந்து ரதங்களுக்கு முன்னால் சுமார் இருநூற்றி இருபது குதிரை வீரர்களும், பின்னால் இருநூற்றி இருபது குதிரை வீரர்களும் செல்கிறார்கள். ரதங்களின் பக்கவாட்டில் இருபக்கங்களிலும் பத்து பத்து குதிரைவீரர்கள் வருகிறார்கள். அனைவரும் வாள் அல்லது ஈட்டி வைத்திருக்கிறார்கள். இது வரை இந்தச் செல்வத்தை வழிப்பறி செய்ய பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. முயற்சி செய்தவர்கள் தோல்வியடைந்து மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். கல்யாண் பகுதியின் தலைவன் முல்லானா அகமது தன் படையில் இருப்பவர்களில் வலிமையானவர்களையே தேர்ந்தெடுத்து இந்த வேலையில் ஈடுபடுத்துகிறார் என்பதால் வீரர்கள் அனைவரும் சிறந்தவர்கள் தான்…..”

“அவர்கள் இரவுகளில் தங்கி இளைப்பாறும் இடங்கள் எவை?” சிவாஜி கேட்டான். கல்யாணிலிருந்து பீஜாப்பூர் சென்று சேரப் பல நாட்கள் ஆகும் என்பதால் பிரயாண காலத்தில் அவர்கள் தங்கி இளைப்பாறும் இடங்கள் மிக முக்கியமானவை. ஒற்றர்கள் தெரிவித்த இடங்கள் அனைத்தும் இரவு நேரத் தாக்குதல்களுக்கு உகந்ததல்ல என்பது அவனுக்கு உடனே புரிந்தது. கொள்ளையர்கள் அடிக்கடித் தாக்குதல் நடத்துவது இரவு நேரங்களிலேயே என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு பாதிக்கப்படாத, பாதுகாப்பான  இடங்களிலேயே முல்லானா அகமது தன் ஆட்களைத் தங்க ஏற்பாடு செய்திருந்தான்.

சிவாஜி அடுத்ததாக அவர்கள் பயண வேகம் குறித்துக் கேட்டான். எத்தனை நாட்களில் பீஜாப்பூரை அடைகிறார்கள்? ஒரே வேகத்தில் செல்கிறார்களா அல்லது சில இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மந்தமாகவும் செல்கிறார்களா என்று கேட்டான். சீரான வேகத்திலேயே செல்கிறார்கள் என்ற பதில் வந்தது. மேலும் பல கேள்விகள் கேட்டுத் திருப்தி அடைந்த சிவாஜி அந்த ஒற்றர் தலைவனை அழைத்துக் கொண்டு தங்கள் பகுதிகளுக்கு மிக அடுத்து அவர்கள் பயணிக்கும் பாதையில் பயணம் செய்தான். தங்கள் எல்லை முடியும் வரை பயணம் செய்த சிவாஜி மீண்டும் அதே வழியில் திரும்ப வந்து பாதையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அவன் தேர்ந்தெடுத்த இடம் சற்றுக் குறுகலான பாதை, இருமருங்கிலும் மலைகள். எத்தனை பெரிய படை வந்தாலும் இந்தக் குறுகிய பாதையில் வரிசை வரிசையாகவே செல்ல முடியும்… இரு பக்க மலைகளிலும் பதுங்கிக் காத்திருக்க வசதியான பாறைகள் இருக்கின்றன. குறுகிய பாதை முடிவடைகையில் அகலமான பகுதி இருக்கிறது. அங்கு கணிசமான குதிரை வீரர்களை ரகசியமாய் காத்திருக்க வைக்கலாம்….

சிவாஜி ஒற்றர் தலைவனிடம் கேட்டான். “அவர்கள் இந்த இடத்திற்கு வந்து சேர்வது எந்த நேரத்திலாக இருக்கும்?”

“சுமார் மாலை நேரமாக இருக்கும் தலைவரே. அடுத்து அவர்கள் இளைப்பாறும் இடத்திற்கு சுமார் அரைமணி நேரத் தொலைவு தான் இருக்கிறது…”

சிவாஜி திருப்தியுடன் புன்னகைத்தான். இங்கு வரும் போது கண்டிப்பாகப் பயணக் களைப்பில் இருப்பார்கள். சிறிது நேரத்தில் இளைப்பாறும் இடம் என்பதால் இங்கு வரும் போதே மானசீகமாக இளைப்பாறுவதற்கு அவர்கள் மனம் தயாராகி விட்டிருக்கும். எல்லா விதங்களிலும் அந்த இடம் அவன் திட்டத்திற்கு ஏற்றதாக இருக்கிறது….

சிவாஜி ஒற்றர் தலைவனிடம் கேட்டான். “நாம் கல்யாண் நிதியைக் கைப்பற்றினால் அந்தத் தகவல் பீஜாப்பூருக்கும், கல்யாணுக்கும் குறைந்த பட்சம் எந்தக் கால அளவில் போய்ச் சேரும்”

ஒற்றர் தலைவன் கண்களை மூடிக் கணக்குப் போட்டு விட்டுச் சொன்னான். “பீஜாப்பூருக்கு குறைந்தபட்சம் ஒன்றரை நாளிலும், அதிகபட்சமாய் இரண்டு நாளிலும் தகவல் போய்ச் சேர வாய்ப்பிருக்கிறது. கல்யாணுக்குக் குறைந்த பட்சம் இருபது மணி நேரங்களிலும் அதிக பட்சம் ஒரு நாளிலும் தகவல் போய்ச் சேர வாய்ப்பிருக்கிறது….”

சிவாஜி திருப்தியுடன் தலையசைத்தான்.

மறுநாள் அவன் நண்பர்களும் படைத்தலைவர்களும் தங்கள் தங்கள் திட்டங்களுடன் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் இலக்கு இடங்களின் பலம், பலவீனங்களையும், தங்கள் திட்டங்களையும், அதை நிறைவேற்றத் தேவையானவற்றையும் சொன்னார்கள். சிவாஜி ஒவ்வொருவர் சொன்னதையும் கூர்ந்து கேட்டான். அவர்கள் கருத்தில் இருந்து வித்தியாசப்பட்டால் அதை வெளிப்படையாகவே காரணங்களுடன் தெரிவித்தான். ஒவ்வொருவரும் தாங்கள் இந்த இரண்டு நாட்களில் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்ததையும், சிந்தித்ததையும் விட அதிகமாக அவன் அறிந்திருந்தான் என்பதை உணர்ந்தார்கள். சிலர் கேட்டதை விட அதிகமாய் ஒதுக்கினான். சிலர் கேட்டதை விடக் குறைவாக ஒதுக்கினான். சிலர் கேட்டபடியே தந்தான். கிட்டத்தட்ட அனைவர் திட்டங்களிலும் சின்னச் சின்ன மாறுதல்கள் செய்தான். அந்தச் சின்ன மாறுதல்கள் திட்டங்களின் பலவீனங்களை அடைத்து பலமடங்கு பலப்படுத்துவதாக இருப்பதைக் கண்டு பிரமித்தார்கள்.

சிவாஜி சொன்னான். “நான் கல்யாண் நிதியைக் கைப்பற்றியவுடன் இந்த நிகழ்வுகள் வேகமாக கிட்டத்தட்ட ஏக காலத்தில் நடக்க வேண்டும். முடிந்த அளவு மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்டு தயாராவதற்குள் நாம் அவர்களை வென்றுவிட வேண்டும்…..”

அவர்கள் தலையசைத்தார்கள். அவர்களில் அபாஜி சோன் தேவ் என்பவனிடம் கல்யாணைக் கைப்பற்றும் பொறுப்பை சிவாஜி ஒப்படைத்து இருந்தான். அவனிடம் சொன்னான். “அபாஜி. கல்யாண் தலைவன் முல்லானா அகமது தன் வலிமையான வீரர்கள் அனைவரையுமே வரிவசூலை பீஜாப்பூருக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறான். எனவே நீங்கள் செல்லும் போது அங்கே பெரிய எதிர்ப்பிற்கு வாய்ப்பில்லை. உங்கள் பணி சுலபமாகப் போகிறது….”

அபாஜி சோன் தேவுக்கு அது தான் கிடைத்திருக்கும் முதல் பெரிய வாய்ப்பு. அவனை நிரூபிக்கக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் காட்ட நினைத்திருந்த அவனுக்கு இந்தச் செய்தி கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.

கடைசியில் அனைவரிடமும் சிவாஜி சொன்னான். “எந்த ஒரு திட்டமும் பரிபூரணமானதல்ல. நடைமுறையில் வரும் போது எதிர்பாராத எத்தனையோ விஷயங்கள் நம் திட்டத்திற்கு எதிர்மாறானதாக இருக்கலாம். அப்படி நடப்பது விதிவிலக்கல்ல. சொல்லப் போனால் அதுவே விதி. அப்படி நடக்கும் போது பதறாதீர்கள். மன தைரியம் இழக்காதீர்கள். இருக்கும் நிலைமையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று கூர்மையாகக் கவனியுங்கள். கண்டிப்பாக வழி ஏதாவது புலப்படவே செய்யும். அந்த வழியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தோல்வியே வரும் நிலைமை வந்தாலும் கூட உடைந்து போகாதீர்கள். நான் இருக்கிறேன். உங்கள் உதவிக்கு நான் விரைந்து வருவேன்…. இது என் சத்தியம்…..!”

சிவாஜி உணர்வு பூர்வமாக ஆத்மார்த்தமாகச் சொன்னது. அத்தனை மனங்களிலும் பெரும் தைரியத்தை ஏற்படுத்தியது. நம்பிக்கையை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு கற்பனை தைரியத்தை அவன் உருவாக்கவில்லை. இப்போது அவர்கள் பழுதேயில்லாத பிரமாதமான திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற உணர்வில் இருக்கும் போதும் அது அப்படியே செயல்படுத்த முடியாமல் போகலாம், சில மாற்றங்கள் தேவைப்படலாம் என்று அவன் எச்சரித்தது நிஜங்களின் யதார்த்தத்தை உணர்த்தியது போல் இருந்தது. வெற்றி வாகை சூட்டி வாருங்கள் என்று அனுப்பி வைப்பவன் தோல்வியே வந்தாலும் துவண்டு விடாதீர்கள், உங்கள் உதவிக்கு நான் வருவேன் என்று சொன்ன விதம் அவர்களுக்கு அசாதாரண மனவலிமையை ஏற்படுத்தியது. இந்தத் தலைவனின் கீழ் அவர்களுக்கு முடியாதது தான் என்ன? அனைவரும் புத்துணர்ச்சியோடு அங்கிருந்து சென்றார்கள்.

அவர்கள் சென்ற பின் சிவாஜி தன்னுடன் நாளை வர மொத்தம் முன்னூறு வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். முன்னூறு பேரில் நூறு பேர் கொரில்லா போர்முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். சகாயாத்ரி மலைத்தொடரில் முன்பு வாழ்ந்தவர்கள். மலைப்பகுதியில் நடத்தப் போகும் தாக்குதலுக்குப் பொருத்தமானவர்கள்…..

திட்டத்தைச் செயல்படுத்தும் நாளில் சிவாஜி அதிகாலையில் குளித்து அன்னை பவானியை நீண்ட நேரம் பிரார்த்தித்தான். பின் அவன் எழுந்து கிளம்பிய போது வீர அன்னை பவானியும் கூட வருவதாக அவன் உணர்ந்தான். மாபெரும் சக்தி ஒன்று உள்ளத்தை ஆக்கிரமிக்க முன்னூறு வீரர்களுடன் சிவாஜி புறப்பட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்