சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 30, 2018

சத்ரபதி – 18


தாதாஜி கொண்டதேவ் பீஜாப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் அவர் நினைவுகள் பூனாவில் இருக்கும் சிவாஜியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ” நம் பூமியை நாமே ஆள்கின்ற நிலை - இதையே கௌரவமான நிலை என்று நினைக்கிறேன் ஆசிரியரே” என்று அவன் சொன்ன கணத்திலிருந்து இப்போது வரை ஏதோ ஒருவித மனக்கலக்கம் அவரை அலைக்கழித்து வருகிறது. இன்னும் அவன் இளைஞனாகி விடவில்லை. இன்னும் அவன் பிள்ளைப் பிராயத்தை முழுவதுமாகக் கடந்து விடவில்லை என்றாலும் அவனிடம் வயதுக்கு மீறிய பக்குவத்தையும், ஆழத்தையும் பார்க்க முடிந்ததால் இதை ஒரு சிறுவனின் நிலைமை புரியாத பேச்சு, சில வருடங்களில் யதார்த்தத்தை அவன் புரிந்து கொள்வான் என்று அவரால் விட்டு விட முடியவில்லை….

சிவாஜி மிகத் தெளிவாக இருந்தான். அந்த நாளுக்குப் பின்னும் சில நாட்களில் அவரிடம் அவன் அது குறித்து விவாதித்திருக்கிறான். அவர்களுடைய இப்போதைய நிலையை அவர் அவனுக்குப் புரிய வைக்க முயன்ற போது, அவன் அவர்களுடைய தற்போதைய நிலையை அவருக்குப் புரிய வைக்க முயன்றான்….

தாதாஜி கொண்டதேவ் அவனிடம் சொன்னார். “சிவாஜி. நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். மலைவாழ் மக்களை நம்முடன் வரவழைத்தோம். வீண் வாழ்க்கை வாழ்ந்தவர்களை உழைப்பிற்குத் திருப்பி நம் பலத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம். இதெல்லாம் நமக்குப் பெருமை தான். ஆனால் இதெல்லாம் பீஜாப்பூர் ராஜ்யத்தை எதிர்க்கப் போதாது. இந்தப் பூமி பீஜாப்பூர் சுல்தான் உன் தந்தைக்குத் தந்தது. இதை முறையாகப் பயன்படுத்தி உயர ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் இந்தப் பூமியை நமக்குத் தந்தவரையே எதிர்ப்பது தர்மம் அல்ல. அப்படி எதிர்த்து வெற்றி பெறும் அளவு நம்மிடம் பலமும் இல்லை. இதை நீ மறந்து விடக்கூடாது”

சிவாஜி அமைதி மாறாமல் கேட்டான். “இந்தப் பூமி பீஜாப்பூர் சுல்தான் நமக்குத் தந்தது என்றீர்கள். சரி தான். அவருக்கு இதை யார் கொடுத்தது…? இது ஆரம்பத்தில் யாருடையதாக இருந்தது? பீஜாப்பூர் சுல்தானும், முகலாயப் பேரரசரும் வந்து நம்முடையதைப் பிடுங்கிப் பங்கு போட்டுக் கொள்ளும் வரை இது எம்முடையதாகவே அல்லவா இருந்தது. எங்கள் பரந்த பூமியை எடுத்துக் கொண்டு அதிலிரண்டு மூன்று துண்டுகள் எங்களுக்குப் பிச்சை போடுவது போல் போட்டால் அதைப் பெற்றுக் கொண்டு நாய் போல் நன்றியுடன் வாலாட்ட நினைப்பது அடிமைத்தனத்தின் அடிமட்ட நிலை அல்லவா ஆசிரியரே?”

தாதாஜி கொண்டதேவ் பேச்சிழந்து போய் அவனைப் பார்த்தார். அவன் சொன்ன கோணத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் அவன் சொன்னதில் எந்தப் பிழையும் இல்லை. அவர் வரலாறும் தர்மமும் சொல்லித் தந்த மாணவன் எது வரலாறு எது தர்மம் என்று வேறு ஒரு விளக்கம் தருகிறான். குறுகிய வட்டத்திலிருந்து பார்க்காமல் சற்றுப் பின்னுக்குப் போய் முழுவதுமாகப் பாருங்கள் என்கிறான். அப்படிப் பார்த்தால் அவன் சொல்வது சரியாகவும் தான் தோன்றுகிறது.

தாதாஜி கொண்டதேவ் சொன்னார். “நீ சொல்வதை என்னால் மறுக்க முடியவில்லை சிவாஜி. ஆனால் இந்த எண்ணத்தை நீ செயல்படுத்த முயன்றால் சக்தி வாய்ந்த பீஜாப்பூர் சுல்தானை வெல்ல முடியுமா?....அவர் படைப்பலத்திற்கு முன் நாம் எந்த மூலை…..”

“இன்று முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் ஆசிரியரே. ஆனால் என்றும் முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்ள மறுக்கிறேன்…” அவன் ஆணித்தரமாகச் சொன்னான்.

தாதாஜி கொண்டதேவுக்கு ஒரு விதத்தில் பெருமையாக இருந்தது. ”என்னமாய் சிந்திக்கிறான். இவன் என் மாணவன்...”. இன்னொரு விதத்தில் அச்சமாய் இருந்தது. “இளங்கன்று பயமறியாது. இவன் ஒரு சிறு கூட்டத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து விட முடியும். இவன் தந்தை பெரிய படைகளை வைத்து முயன்றும் முடியாமல் போனதே. இந்த எண்ணம் இவனைப் பேராபத்தில் அல்லவா கொண்டு போய் விடும். அப்போது காப்பாற்றக் கூட யாரும் வர மாட்டார்களே…… ஐயோ இவன் என் மாணவன் அல்லவா, எனக்கு மகன் போன்றவனல்லவா?” என்று மனம் கதறியது.

இந்த எண்ணங்களுடன் பீஜாப்பூர் போன தாதாஜி கொண்டதேவ் ஷாஹாஜியைச் சந்தித்த போது அவர் தனக்கு மகன் பிறந்திருப்பதையும், அவன் பெயர் வெங்கோஜி என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு தாதாஜி கொண்டதேவ் கணக்குகளைக் கொடுத்த போது அவர் அந்தச் சுவடிகளை வாங்கி ஓரமாய் வைத்தார். ஷாஹாஜியிடம் தங்கள் பிரதேசத்தின் முன்னேற்றத்தையும், கட்டிக் கொண்டிருக்கும் மாளிகை தற்போது எந்த நிலை வரை எட்டியிருக்கிறது என்பதையும் தாதாஜி கொண்டதேவ் விவரிக்க ஷாஹாஜி மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டார். பின் ஆர்வத்துடன் கேட்டார். “சிவாஜி எப்படியிருக்கிறான்? அவன் முன்னேற்றம் எப்படியிருக்கிறது”

தாதாஜி கொண்டதேவ் முதலில் தன் மாணவனின் சிறப்புகளை எல்லாம் பெருமிதத்துடன் சொன்னார். எல்லாப் பயிற்சிகளிலும் எல்லாரையும் விட பல படிகள் முன்னேறியே அவனிருப்பதைச் சொன்னார். மக்கள் எல்லோரும் அவனை நேசிப்பதைச் சொன்னார். அவன் வயதுக்கு மீறி ஆழமாய் சிந்திப்பதையும், அவன் அறிவு கூர்மையையும், வீரத்தையும் சொன்னார். கடைசியில் “ஆனால்…” என்று அவர் சொன்ன போது ஷாஹாஜி சிறு பதற்றத்துடன் என்னவென்று கேட்டார்.

தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை முழுவதுமாக தாதாஜி கொண்டதேவ் சொன்னார். அவர் எல்லாம் சொல்லி முடித்த பின்னர் ஷாஹாஜி நீண்ட நேரம் பேசவில்லை. அவர் மனதினுள் ஏராளமான எண்ணங்களும், பழைய நிகழ்வுகளும் அலைமோதின…..

ஷாஹாஜியும் நீண்ட நிலப்பரப்பை அரசாளக் கனவு கண்டவர் தான். தற்போதைய எத்தனையோ அரசர்களை விடத் திறமையும், வீரமும் கொண்டவர் அவர் என்பதை கர்வமில்லாமலேயே அவரால் சொல்ல முடியும். வீரம், திறமை கூட்டணி மட்டும் போதாது. இந்தக்கூட்டணியில் விதியும் சேர்ந்தால் தான் வெல்ல முடியும் என்பதைப் பல அனுபவங்களுக்குப் பின்னால் உணர்ந்தவர் அவர். இன்று அவர் மகனும் ஆசைப்படுகிறான். அவனும் அடிபட்டுத்தான் உணர வேண்டியிருக்குமா என்று இரக்கத்துடன் நினைத்தார்.

மேலும் ஆழமாக யோசிக்கையில் அவர் மகன் அவரை விட நிறைய வித்தியாசப்படுவதை அவர் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. ”இது என் பூமி, இதை ஆளும் உரிமை எனக்கிருக்கிறது ஆதில்ஷாவும், ஷாஜஹானும் அன்னியர்கள். என் பூமியை அபகரித்துக் கொண்டவர்கள்” என்ற ரீதியில் இதுவரை அவர் சிந்தித்ததில்லை. ஆனால் அவர் மகன் சிந்திக்கிறான். அவன் பேசியதையெல்லாம் யோசிக்கும் போது அவன் வயதில் இந்த ஆழம், இந்த அறிவு, இந்தத் தெளிவு அவரிடம் இருந்ததில்லை என்பதும் நினைவில் வந்தது. அவரிடம் மட்டுமல்ல, சிவாஜியை விடச் சில வருடங்கள் மூத்தவனான சாம்பாஜிக்கு இப்போதும் இல்லை என்பதே உண்மை. வீரத்தில் அவனும் சிறந்தவன் தான். ஆனால் தம்பியின் இந்தச் சிந்தனை, இந்த ஆழம் அவனிடமும் இல்லை.

“ஜீஜாபாய் என்ன சொல்கிறாள்…?” ஷாஹாஜி யோசனையுடன் கேட்டார்.

“அவர் ஒன்றும் சொல்லவில்லை பிரபு. அவனைத் தடுக்கவும் இல்லை.”

ஜீஜாபாய் குணம் அறிந்த ஷாஹாஜி அவளுக்கு இந்தச் சிந்தனையில் பரிபூரண உடன்பாடு இருக்கிறது, அதனால் தான் மௌனம் சாதிக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டார். ஜீஜாபாய் இதுநாள் வரை அவரை எதிர்த்து எதுவும் சொல்லாதவள். ஆனால் கணவருக்கு எதிராகப் பேசக்கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு தான் அதற்குக் காரணமாய் இருந்தது. வாய் திறந்து பேசா விட்டாலும் அவள் முகத்தில் அவருடைய எத்தனையோ செயல்களுக்கு அதிருப்தி பரவுவதை அவர் கண்டிருக்கிறார். ஆனால் அந்தக் கட்டுப்பாடு அவளுக்கு மகன் விஷயத்தில் இருக்க வழியில்லை. தவறென்றால்  மகனிடம் வாய் விட்டே கண்டித்துச் சொல்லக்கூடியவள் அவள்…. மகனிடம் கனவுகளை விதைத்தவளே அவளாகக்கூட இருக்கலாம்….. ஒரு அரசனுக்கு மனைவியாக வேண்டியவள் என் மகள் என்று அவருடைய மாமியார் அடிக்கடிச் சொன்னது நினைவுக்கு வந்தது. அரசனுக்கு மனைவியாகத் தான் முடியவில்லை. ஒரு அரசனின் தாயாகவாவது ஆவோம் என்று ஜீஜாபாய் ஆசைப்படுகிறாளோ?..

ஆனால் திடீரென்று சிவாஜி கிளர்ச்சிகளில் ஈடுபட்டால் அவரால் கூட அவனுக்கு உதவ முடியாது என்ற யதார்த்தம் ஷாஹாஜியைப் பயமுறுத்தியது. ஷாஹாஜி மெல்லக் கேட்டார். “சிவாஜி உடனடியாக ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடுவான் என்று தோன்றுகிறதா உங்களுக்கு?”

“உடனடியாக எதுவும் செய்வான் என்று தோன்றவில்லை பிரபு. ஆனால் எதிர்காலத்தில் அவன் செய்யாமல் இருக்க மாட்டான் என்பது மட்டும் உறுதி”

எப்போது அவன் அப்படிச் செயல்பட்டாலும் ஆபத்து தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமில்லாமல் உணர்ந்திருந்த ஷாஹாஜி ”சிவாஜியையும், ஜீஜாபாயையும் பீஜாப்பூருக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள்” என்று உத்தரவிட்டார்.

(தொடரும்)

என்.கணேசன் 

Thursday, April 26, 2018

இருவேறு உலகம் – 80


“எல்லா சக்திகளுக்கும் மூலமான அறிவு ஒன்று தான். அது ஒவ்வொருவனிடமும் ஆழமாகப் புதைந்திருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டால் மற்ற எல்லாமே சுலபமாகக் கற்றுக் கொண்டு விடலாம். ஒவ்வொன்றுக்கும் தேவைப்பட்ட சில கூட்டல்கள், சில கழித்தல்கள் மட்டுமே செய்து கொண்டால் போதும். அந்த மூல அறிவு மனதிற்குப் புரிய வேண்டும்…. மனதில் பதிய வேண்டும். பின் மற்றதெல்லாம் சுலபமே. என்னிடம் அவன் அந்த மூலத்தைக் கற்றுக் கொண்டான். நான் அறிந்த மற்ற சில வித்தைகளைக் கூடக் கற்றுக் கொண்டான். இனி என்னிடம் கற்றுக் கொள்ள ஒன்றுமேயில்லை என்ற நிலைமை வந்த போது போய் விட்டான்……” பக்கிரியின் வார்த்தைகளை அந்தப் பாலைவனமே லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தது போல் சிறிது நேரம் காற்றே இல்லை…..

செந்தில்நாதனுக்கு அந்தப் பக்கிரி சொன்னதெல்லாம் புரிகிற மாதிரியும் இருந்தது. புரியாத புதிர் மாதிரியும் இருந்தது. க்ரிஷே நேரில் வந்திருந்தால் கச்சிதமாகப் புரிந்து கொண்டிருப்பான் போலத் தோன்றியது.

“அவனை மறுபடி எத்தனை தடவை சந்தித்திருக்கிறீர்கள்?” செந்தில்நாதன் கேட்டார்.

”அவனைப் பிறகு ஒரு தடவை கூடப் பார்க்கவில்லை…. ஆனால் அவன் வேறு சில கூடுதல் சக்திகள் தேடி வேறு குருக்களையும் சென்று பார்த்தான் என்று கேள்வி. சரியாகத் தெரியவில்லை…..”

“நடந்து முடிந்ததை எல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்று சொன்னீர்களே. பின் ஏன் இங்கிருந்து போன பின் அவனைப் பற்றித் தெரியவில்லை என்கிறீர்கள்”

“சக்தி வாய்ந்தவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடாது என்றால் மறைத்துக் கொள்ள முடியும். அவன் அந்தக் கலையில் கைதேர்ந்த நிபுணனாகி விட்டான். அதனால் நான் பலமுறை ஆர்வத்தில் அவனை அறிய முற்பட்ட போது என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை…… இப்போது அவனிடம் நான் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவு உயர்ந்து விட்டான்…..”

“அவனிடம் அப்படிக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?” செந்தில்நாதனுக்குக் கேட்கத் தோன்றியது.

“இல்லை. ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அவ்வளவு தான். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எல்லாமே போதும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அமைதி தவிர வேறெதுவும் வேண்டாம், வேறெதிலும் அர்த்தமில்லை என்று புரிய ஆரம்பித்து விடுகிறது. அந்த ஒரு கட்டத்துக்கு வந்து விட்டேன்… அல்லா என்னை அழைத்தால் சந்தோஷமாகப் போய் விடுவேன்…..”

பக்கிரி மனமாரச் சொன்னது போல் இருந்தது. செந்தில்நாதன் கேட்டார். “உங்களிடமிருந்து போன பின் யாரிடம் என்ன கற்றுக் கொண்டான் என்ற யூகமாவது உங்களுக்கு இருக்கிறதா”

“இல்லை போலீஸ்காரனே… எனக்குத் தெரிந்து உன்னிடம் சொல்ல இனி ஒன்றும் இல்லை. போய் விடு…..”

கடுமையாகக் காற்று மணலுடன் சேர்ந்து வீச ஆரம்பித்தது. செந்தில்நாதன் கண்களை மூடிக் கொண்டார். காற்று நின்று அவர் கண்களைத் திறந்த போது அந்தப் பக்கிரியைக் காணவில்லை. அவர் போய்விட்டிருந்தார்.


னிமையில், எந்த வெளித்தொடர்பும் இல்லாத போதே மனதை நிறுத்த வேண்டிய உண்மையில் நிலையாக நிறுத்த முடிவதில்லை. இப்படி இருக்கையில் அறையை விட்டு வெளி வந்து முதலில் வீட்டாருடன் இருக்கும் போது அதை சாதித்துக் காட்டு, பின் கல்லூரிக்குப் போய் எல்லோருடனும் இருக்கும் போது அதைச் சாதித்துக் காட்டு என்று மாஸ்டர் சொன்னது க்ரிஷுக்கு குன்றேறி நின்று சந்தோஷப்பட்டவனை மலையேறிக் காட்டு என்று சவால் விட்டது போல் இருந்தது.

வீட்டுக்கு வந்தவன் அறைக்குப் போகாமல் ஹாலில் அமர்ந்தான். அம்மா உதயிடம் அவன் அறையில் பேசியது காதில் கேட்டது.

“ஏண்டா உனக்கு எதாவது பொண்ணைப் பிடிச்சிருக்கா?” அப்படி இருந்தா வெளிப்படையா சொல்லு”

“உட்காரு சொல்றேன்” என்றான் உதய். அவன் அம்மா வாயைக் கிளறப் போகிறான் என்று அர்த்தம். க்ரிஷ் புன்னகைத்தான்.

“புடிச்ச பொண்ண சொல்றதுக்கு நானேண்டா உட்காரணும்” என்றபடியே பத்மாவதி உட்கார்ந்தாள்.

“எனக்கு சில நேரத்துல சில பொண்ணுகளப் புடிக்குது. என்ன பண்ணலாம்?”

“அதுக்கு வெளக்குமாத்தால நாலு சாத்து சாத்துனா சரியாயிடும்…” என்றாள் பத்மாவதி. சத்தமில்லாமல் சிரித்தான் க்ரிஷ்.

“சும்மா கோவிச்சுக்காதம்மா. உண்மையச் சொன்னா தப்பா?”  உதய் கேட்டான்.

“நீ யாரையாவது காதலிக்கிறாயான்னு கேட்டேண்டா தடியா?”

“அதுக்கு உன் சின்னப் பையன் கிட்ட போய் ட்யூஷன் எடுத்துக்கலாம்னு பாக்கறேன்”

“அவன் என்னடா ஜெமினி கணேசனா. அவன் கிட்ட போய் அதுல ட்யூஷன் எடுத்துக்கறதுக்கு……”

அதற்கு மேல் அங்கே உட்கார முடியவில்லை. க்ரிஷ் தன்னறைக்கு ஓடிப் போய் விட்டான். வாய் விட்டுச் சிரித்தான். கூடவே கொஞ்சம் உதய் மேல் கோபமும் வந்தது. அவன் காதலிப்பதை உதய் அறிக்கை விட்டுச் சொல்லாதது தான் பாக்கி. விவஸ்தை கெட்டவன்…

திடீரென்று மாஸ்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. “ரெண்டு நிமிஷம் பேசின பிறகு மனசைத் திரும்ப அமைதிப்படுத்த ரெண்டு மணி நேரம் தேவைப்படுதுன்னா முதல் பாடத்துல நீ ஜெயிச்சதா சொல்ல முடியாது க்ரிஷ்.” இப்போதும் விட்டால் மனம் ஹரிணி, உதய், அம்மான்னு யோசித்துக் கொண்டே போகும். அதுவாக அலுத்துப் போகும் போது மனதைத் திருப்பிக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை….. உடனடியாக மாஸ்டர் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் நினைவுபடுத்தி மறுபடி மனதைத் திரும்பக் கொண்டு வந்து நிலை நிறுத்தினான். மனம் மறுபடி அமைதியான சக்தியைத் திரும்பப் பெற ஆரம்பித்தது. மறுபடி அறையை விட்டு வெளியே வந்தான். மாஸ்டரிடம் சொல்லும் போது மனதை இந்த முறை பத்து நிமிடத்தில் திரும்பக் கொண்டு வந்து விட்டதாய்ச் சொல்ல வேண்டும். நூற்றி இருபது நிமிடங்களில் இருந்து பத்து நிமிடங்களுக்கு வந்தது பெரிய விஷயமல்லவா? சொன்னால் அறைக்குப் போய் அப்படிக் கொண்டு வந்தது தவறென்று சொல்வாரோ?


ஸ்ரோ பெண் விஞ்ஞானி உமா நாயக்கை டைரக்டர் அவசரமாக புனேவுக்கு வரச் சொல்லி இருந்தார். அவள் பரபரப்புடன் மாஸ்டருக்குப் போனில் தெரிவித்து விட்டுப் போனாள். “பெரும்பாலும் அந்த ஏலியன் சமாச்சாரமாகத் தான் இருக்கும் மாஸ்டர்.  கிடைக்கிறது புதுத் தகவலாய் இருந்தா நான் அங்கிருந்தே போன் செஞ்சு சொல்றேன்”

புனே அலுவலகத்திற்குப் போன போது டைரக்டர் முன் புதுடெல்லி உயரதிகாரியும் அமர்ந்திருந்தான். டைரக்டர் அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். “சார் இவங்க தான் இந்தப் ப்ராஜெக்டோட முக்கியமான விஞ்ஞானி உமா நாயக். உமா, சார் தான் இந்தப் ப்ராஜெக்ட்டுக்கு அரசாங்க தரப்பு பிரதிநிதி. சார் கிட்ட தான் நாம எல்லாத்தையும் ரிப்போர்ட் பண்றோம்…..”

உமா நாயக் வணக்கம் தெரிவித்தாள். புதுடெல்லி உயரதிகாரி வேண்டா வெறுப்பாக தலையசைத்தான். அவனுக்கு அந்த டைரக்டர் அவளுக்காக இத்தனை நேரம் காக்க வைத்ததில் எரிச்சல். முக்கியமான தகவல் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்து வரவழைத்த டைரக்டர் “அஞ்சே நிமிஷத்தில் எங்க முக்கிய விஞ்ஞானியும் வந்துடுவாங்க. அவங்க வந்தவுடனேயே சொல்றேனே. இல்லாட்டி ரெண்டு தடவை சொல்ல வேண்டு வரும்” என்று சொல்லி விட்டிருந்தார். அவள் வருவதற்கோ பதினைந்து நிமிடம் ஆகியது. அவனுக்குக் காத்திருப்பது கஷ்டமாக இருந்தது. மறுபடியும் அவனை யாரோ ஆக்கிரமித்து அவனுக்குள் புகுந்து விட்டது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டு விட்டது. ஏன் அடிக்கடி இப்படி ஆகிறது என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. எல்லாம் டெல்லி சர்ச்சில் ஆரம்பித்த உணர்வு. ஒரு வேளை மனோவியாதியோ என்று சந்தேகித்தான்…..

தன் சக்தி மூலம் அவனை ஆக்கிரமித்திருந்த மர்ம மனிதனுக்கு அவன் எண்ண ஓட்டம் வேடிக்கையாக இருந்தது. அவன் மூலம் அந்த டைரக்டர் முக்கியமாக என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய அவனும் ஆவலாய் இருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, April 25, 2018

அனைத்திலும் அந்தர்மியாய் ஆண்டவன்!

கவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயமான க்‌ஷேத்ர க்‌ஷேத்ரக்ஞ விபாக யோகத்தில் நம்மையும், நாம் காணும் உலகத்தையும் க்‌ஷேத்திரம், க்‌ஷேத்ரக்ஞன்  என்ற இரண்டின் கலவையாக ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார். நம் தேகம் க்‌ஷேத்ரம். தேகத்தை இயக்கும் ஆத்மா க்‌ஷேத்ரக்ஞன். உலகின் வஸ்துக்கள் எல்லாம் க்‌ஷேத்ரம். வஸ்துக்களை இயக்கும் அறிவு க்‌ஷேத்ரக்ஞன். இரண்டும் இணைவதாலேயே எல்லா இயக்கங்களும், எல்லா நிகழ்வுகளும், உயிரோட்டமுள்ள வாழ்க்கையும் சாத்தியமாகின்றன.

உடல் இருக்கின்றது. அதனுள் ஆத்மா நுழைந்து உயிர் பெறாவிட்டால் உடல் ஜடம் தான். அதனால் எந்த இயக்கமும் இல்லை. எந்தப் பயனும் இல்லை. கைகால்கள் இருக்கின்றன. ஆனால் அவை தானாக இயங்குவதில்லை. உயிரும் உணர்வுமாய் கலந்த நாம் இயக்கினால் தான் அந்த எண்ணங்களுக்கேற்ற இயக்கமாக அசைவுகள், செயல்கள் எல்லாம் நிகழ்கின்றன.  நாம் காணும் உலகமும் அப்படித்தான். அனைத்து வஸ்துக்களும் அவற்றுக்குள் இருக்கும் மகாசக்தியாலேயே இயக்கப்படுகின்றன. உள்ளிருக்கும் சக்தி தேகத்திலிருந்து விலகி விட்டால் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அப்படியே வஸ்துக்களிலிருந்து சக்தி விலகி விடுமானால் இயக்கமும் நின்று விடுகிறது.

இந்தச் சொற்களை விளக்கிய பின் ஸ்ரீகிருஷ்ணர் ”எல்லா உடல்களிலும் இருக்கும் க்‌ஷேத்ரக்ஞன் நானே” என்று அறிவிக்கிறார். நானும், நீயும், நாம் காணும் மனிதர்களும் தனித்தனியாக உணரப்பட்டு, நம்பப்பட்டு நம் மாயா உலகம் நடந்து கொண்டிருக்கையில் மாயையின் திரையின் பின் அனைத்தும் நானே என்று இறைவனே எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறார். இதை நாம் உணரும் போது தனிப்பட்ட “நானின்” பாரங்களும், துக்கங்களும் நமக்கு உடனடியாக மறைந்து விடுகின்றன. இந்த உணர்தலே ஞானம். உணர மறுத்தலும், உணர மறத்தலுமே அஞ்ஞானம்.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகின்றார்:

கர்வமின்மை, பகட்டின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, குருவுக்கு சேவை செய்தல், தூய்மை, அசையாநிலை, சுயகட்டுப்பாடு, இந்திரியங்களுக்குரிய விஷயங்களில் பற்றில்லாமை, அகங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி, இவைகளில் இருக்கும் துக்கத்தையும், குறைபாடுகளையும் சிந்தித்து அறிந்திருத்தல், மகன், மனைவி, வீடு முதலியவற்றில் பற்றில்லாமை, என்னுடையது என்ற எண்ணமில்லாமை, விருப்பமானவை, விருப்பமில்லாதவை இரண்டை அடையும் போதும் சம நிலையிலிருத்தல், மற்றொன்றில் செல்லாமல் என்னிடமே செலுத்திய மனத்தால் கொண்ட பிறழாத பக்தி, தனிமையில் இருத்தல், உலகியலில் ஈடுபாடு கொண்ட மனிதக்கூட்டத்தில் இருக்க விருப்பமில்லாமை, ஆத்மஞானத்தில் நிலைத்திருத்தல் இவையெல்லாம் ஞானம் என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு மாறுபட்டதெல்லாம் அஞ்ஞானம் ஆகும்.

கர்வம் என்பதே நம்மைத் தவிர இன்னொன்று இருக்கும் போது தான் சாத்தியமாகிறது. ஒப்பிட இன்னொன்று இல்லாத போது, கர்வத்தை ஏற்பத்தும்படியாக நம்மை விடக் குறைந்தது ஒன்று இல்லாத போது கர்வம் எப்படி எழும்? பகட்டின்மையும் அதே போல் தான். பகட்டை யாருக்குக் காட்டுவது? அஹிம்சையும் அப்படியே சாத்தியமில்லை. நாம் ஹிம்சை ஏற்படுத்தும் உயிர்களிலும் நம்மையே காண முடிந்தால், அடிப்படையில் அந்த உயிரும், நாமும் ஒன்றே என்ற புரிதல் இருந்தால் அஹிம்சை தானாக நம் இயல்பாகி விடும் அல்லவா? பொறுமை நேர்மையும் இதே வழிகளில் நமக்கு சாத்தியாகி விடும்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அழகும் வலிமையும் கொண்டவர்களாய் அகங்காரம் கொள்பவர்கள் கூட மூப்பு வியாதி என்று காலத்தின் ஓட்டத்தால் பாதிக்கப்பட வேண்டி வருகிறது. அகங்காரம் அர்த்தமில்லாதது என்று உணர்தல் நிகழத்தான் செய்கிறது. நான், எனது மனைவி அல்லது கணவன், என் பிள்ளை என்ற மாயா பாசங்களும் உறவுகளை அப்படி அப்படியே எடுத்துக் கொள்கையில் துக்கங்களின் ஊற்றாகவே அமைகிறது. ஆனால் அத்தனைக்கும் பின் எல்லாம் ஒன்றே என்று உணரும் போது அந்தத் துக்கங்களும் அர்த்தமில்லாதவை என்று உணர முடிகிறது.

இந்த சுலோகங்களில் மற்றொன்றில் செல்லாமல் என்னிடமே செலுத்திய மனம் என்ற வாசகம் மிக முக்கியமானது. மேலோட்டமாகப் பார்க்கையில் வேறெதையும் நினைக்காமல் ஸ்ரீகிருஷ்ணர் மீதே செலுத்தும் மனம் என்று தோன்றும். ஆனால் முதலில் ’எல்லா உடல்களிலும் இருக்கும் க்ஷேத்ரக்ஞன் நான்” என்று சொல்லி விட்டு இதைச் சொன்னதால் அப்படி ’எல்லா உயிர்களிலும் அந்தர்மியாக இருக்கின்றவன் ஆன ஆண்டவனிடமே செலுத்திய மனம்’ என்று சரியாக எடுத்துக் கொண்டால் அது மிக உயர்ந்த ஞான வாக்கியமாக நாம் உணர முடியும்.

நான், இன்னொருவன், இன்னொருத்தி, இன்னொரு உயிர் என்று மற்றொன்றாய் நினைக்காமல் எல்லாமே அவன் அல்லது எல்லாமே நாம் என்ற உணர்வுடன் பார்க்கையில் உலகம் அன்பு மயமாகவும், ஆனந்த மயமாகவும் மாறிவிடும். அப்படி நிகழ்வதே ஞானம். அப்படி உணர்வதே ஞானம். மாறானது எல்லாமே அஞ்ஞானம் தான்.

இந்தச் சுலோகங்களில் தனிமை குறித்தும் ஜனக்கூட்டத்தில் இருக்க விருப்பமில்லாமை குறித்தும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது சிலருக்கு துறவை வலியுறுத்துவது போலவோ, மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு எதிரானது போலவோ தோன்றலாம். ஆனால் சரியாகச் சிந்தித்தால் அது உண்மையல்ல என்பது புரியும்.

ஞானம் என்றுமே, கூட்டமாக இருக்கையில் ஒட்டு மொத்தமாய் அனைவருக்கும் வருவதில்லை. அதுவும் உலகியலில் ஈடுபாடு கொண்ட கூட்டத்தில் அது கண்டிப்பாக வந்து சேர்வதில்லை. கூட்டங்களில் இருக்கையில் தனிமனித சிந்தனைகள் மங்கிப் போய் விடுகின்றன. கூட்டத்தின் பிரதான உணர்ச்சிகளே தனிமனிதர்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடுகின்றன. உணர்ச்சிகள் பிரதானமாக இருக்கையில் ஞானம் மேலோங்க வாய்ப்பே இல்லை. இதை ஏதாவது கூட்டங்களுக்குச் சென்று தள்ளியிருந்து கூர்ந்து கவனித்தால் நன்றாக விளங்கும்.

உண்மையான ஞானம் கூட்டங்களுக்குள் இருக்கையிலும், கூச்சல்களுக்கு மத்தியில் இருக்கையிலும் சாத்தியமில்லை. இன்னும் சொல்லப் போனால் மனிதன் தனக்குள்ளேயே பலர் பற்றிய சிந்தனைகளிலும், பல சிந்தனைகளின் கூச்சல்களிலும் இருக்கும் போது கூட ஞானத்தை எட்ட முடிவதில்லை. தனிமையில், ஆத்ம விசாரத்தில் நிலைக்கையில் மட்டுமே ஞானத்திற்கான சூழலே உருவாகிறது. அதனால் தான் தனிமையின் உயர்வையும், உலகியல் எண்ணங்கள் மேலோங்கி இருக்கும் கூட்டங்களிலிருந்து தன்னிலை இழக்க விருப்பமில்லாததன் அவசியத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

பாதை நீளும்…..

என்.கணேசன்

Monday, April 23, 2018

சத்ரபதி – 17


றிவார்ந்த தளர்வில்லாத முயற்சிகள் இருக்கும் இடத்தில் சுபிட்சம் தானாக வந்தமைகிறது என்பதற்கு அந்தப் பிரதேசம் ஒரு எடுத்துக்காட்டாய் மாற ஆரம்பித்தது. இதை அறிந்த ஷாஹாஜி அதை அடுத்த இரண்டு நிலப்பகுதிகளையும் பீஜாப்பூர் சுல்தான் ஆதில்ஷாவிடமிருந்து பெற்று அதையும் தாதாஜி கொண்டதேவிடம் ஒப்படைத்தார்.

அக்காலத்தில் சுல்தான்களும், பேரரசர்களும் இப்படிச் சில நிலப்பகுதிகளைத் தருவது ஜாகிர் முறைகளில் இருந்தது. சில ஜாகிர்களில் முழுமையான நில உரிமையும் சேர்த்தே தரப்பட்டது. சில ஜாகிர்களில் நிர்வாகமும், வரி வசூல் உரிமையும் மட்டுமே தரப்படும். அப்படி வசூலிக்கப்படும் வரி செலவுகள் போக திரும்பவும் அரசர்களுக்கே திரும்பவும் செலுத்த வேண்டும். சில ஜாகிர்களில் வரி வசூலுடன், சிறு படையும் சேர்ந்தே தரப்படும். தரப்படும் நபருக்குத் தகுந்தாற்போல் இந்த ஜாகிர் முறை அமையும். ஷாஹாஜிக்கு ஆதில்ஷாவால் வழங்கப்பட்ட ஜாகிர் முழுமையான நில உரிமையும் சேர்ந்தே தரப்பட்டதாக இருந்ததால் அந்தப் பகுதிகளில் எதைச் செய்யவும் பூரண உரிமை இருந்தது. அதனால் புதிய பகுதிகளிலும் இந்த மக்கள் குடியேறி. இங்கு நடத்தப்படும் முயற்சிகள் அங்கும் நடைபெற ஆரம்பித்தன.

தாதாஜி கொண்டதேவ் சிவாஜி, ஜீஜாபாயிற்காக ஒரு மாளிகையையும் பூனாவில் கட்ட ஆரம்பித்தார். சகாயாத்ரி மலைத்தொடரில் ஒரு பகுதியில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். மாவல் என்றழைக்கப்பட்ட அந்தப் பிரதேசம் சிவாஜி அதிக காலத்தைக் கழிக்கும் ஒரு பகுதியாக இருந்தது. நண்பர்களுடன் சில சமயங்களில் அப்பகுதியில் உலாவும் சிவாஜி சில சமயங்களில் தனிமையை விரும்பி தனிமையிலேயே உலாவுவான். அந்தப் பகுதியின் குகைகள், குன்றுகள், பொந்துகள், அருவிகள், மறைவிடங்கள் ஒவ்வொன்றையும் அவன் அறிவான். அங்குள்ள விலங்குகளை அறிவான். அப்பகுதிகளில் வசித்த பழங்குடிகளை அவன் அறிவான். சில வருடங்களுக்கு முன் சத்யஜித்துடன் அவன் வாழ்ந்த  பகுதிகள் அவை. அவனைப் பொருத்த வரை அவை வெறும் கல்லும், மண்ணும், பாறைகளும், அருவிகளும் அல்ல. ஆட்களையும், விலங்குகளையும் போலவே ஆத்மார்த்தமாய் அவனுடன் தொடர்புடையவை…. சில சமயங்களில் சில மைல்கள் தள்ளியுள்ள ஞானதேவரின் ஜீவசமாதிக்குச் சென்று தனியே அங்கு அமர்ந்திருப்பான். 

அந்த நேரங்களில் அவன் என்ன நினைக்கிறான் என்பது ஜீஜாபாய்க்குத் தெரியாது. ஆனால் மகன் அடிக்கடி தனிமையை நாடியது ஒரு விதத்தில் அவளைப் பயமுறுத்தியது. அவன் வயதில் யாருமே அப்படித் தனிமையை நாடியதில்லை. போதையில் வேண்டுமானால் அப்படித் தனிமையில் விழுந்து கிடப்பார்களே ஒழிய முழு உணர்வோடு தனிமையில் உலா போவதில்லை. போதையில் விழுந்து கிடப்பவர்கள் கூட போதை தெளிந்தவுடன் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள வந்து விடுவார்கள். ஆனால் சிவாஜி ஏதோ ஒரு சிந்தனை உலகில் இருந்து விட்டு செயல்பட வேண்டும் என்று தோன்றும் போது தான் மலையை விட்டு இறங்கி வருவான். கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தாயுடன் பகிர்ந்து கொள்ளும் அவன் தன் சில சிந்தனைகளை அவளுடனும் பகிர்ந்து கொண்டதில்லை. அவன் பகிர்ந்து கொள்ளாத சிந்தனைகள் யாரோ ஒரு இளம் பெண்ணைப் பற்றியதாக இருந்திருந்தால் கூட அவளால் அவனைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கும், கவலைப்பட்டிருக்க மாட்டாள். அவன் தனிமை ஒரு துறவியின் தனிமையாய் சில சமயங்களில் தோன்றியது தான் அவளைப் பயமுறுத்தியது. ஒரு பேரரசனாக ஆக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்ட மகன் துறவியாய் மாறுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. இது போன்ற சந்தர்ப்பங்களில் தன் கணவன் அங்கு இல்லாததன் இழப்பை அவள் அதிகம் உணர்ந்தாள். மகனைப் பற்றி கணவனிடம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது போல் மற்றவர்களிடம் ஒருத்தி பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஆனால் அந்தத் தனிமைகளை சிவாஜி நாடியது சில சமயங்களில் மட்டுமே. மற்ற சமயங்களில், வீரமும், உயிர்ப்பும், துடிப்பும் இருக்கிற அனைவரும் நேசிக்கிற, அனைவருடனும் அன்பாய் நெருங்கிப் பழகுகிற ஒருவனாக இருப்பான். அதைப் பார்க்கும் போது பயந்தது வீண், அவன் சரியாகத் தான் இருக்கிறான் என்று அவளுக்குத் தோன்றும்.

அவன் அப்படித் தனிமையை நாடாத சமயங்களில் ஒரு வீர மகனாய் நடந்து கொள்வான். அவன் உடற்பயிற்சிகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் தாதாஜி கொண்ட தேவின் எதிர்பார்ப்பை விட ஒவ்வொரு கட்டத்திலும் ஒருபடி மேலாக இருந்தான். தன் வீரப்பேச்சால் அனைவரையும் வசீகரிக்கிற ஒரு தலைவனாக இருந்தான். வீரர்கள் அனைவரும் அவன் பேச்சை மிக உன்னிப்பாய் கேட்டார்கள். அவன் சொன்னதைக் கேட்கவும், பின்பற்றவும் தயாராக இருந்தார்கள். நம் மண், நம் கலாச்சாரம், நாம் உயர வேண்டிய உயர்வு என்றெல்லாம் அவன் பேசியது அவர்களிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை ஜீஜாபாயும், தாதாஜி கொண்ட தேவும் பெருமிதத்துடன் கவனித்தார்கள்.

காந்தமாக மக்கள் அவனால் கவரப்பட்டார்கள். அதனால் அவன் வாழ்வில் தந்தையை விடக் கண்டிப்பாக மேலே உயர்வான், தந்தை பெற்றிருக்கும் பகுதிகளை அதிகமாய் பெறுவான் என்று தாதாஜி கொண்டதேவ் கணித்தார். முயன்றால் பீஜாப்பூர் சமஸ்தானத்தில் அவன் முதலிடம் கூடப் பெறுவான் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது. அதை அவனிடம் சொன்ன போது அவர் சொன்னதை அவன் உயர்வான நிலையாக அவனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதை மரியாதையோடு அவன் வெளிப்படையாக அவரிடம் தெரிவித்தான். “அடுத்தவர் அரசவையில் முதலிடம் பெற்றால் கூட அது பெருமை என்று நான் நினைக்கவில்லை ஆசிரியரே”

தாதாஜி கொண்டதேவ் திகைத்தார் “பின் எதை உயர்ந்த நிலை என்று நினைக்கிறாய் சிவாஜி?”

“யாருக்கும் பணிந்து சேவகம் செய்யாத நிலை, நம் பூமியை நாமே ஆள்கின்ற நிலை - இதையே கௌரவமான நிலை என்று நினைக்கிறேன் ஆசிரியரே”

தாதாஜி கொண்டதேவ் அதிர்ந்தார். தன் மாணவன் தலைசிறந்த வீரனாய் இருப்பது அவருக்கு மகிழ்ச்சி. ஆனால் அரசருக்கு எதிராகப் பேசுவதும், அவருக்குக்கூடப் பணிய மறுப்பதும் ராஜத்துரோகம் என்கிற சிந்தனையை அவரால் தாண்ட முடிந்ததில்லை.

தாதாஜி கொண்டதேவ் பொறுமையாக விளக்க முயன்றார். “சிவாஜி நீ இரண்டு வீர வம்சங்களின் வழித்தோன்றல். உன் வீரம் எனக்குப் பெருமை தருகிறது. ஆனால் உன் தந்தையின் தந்தை அகமதுநகர் சுல்தானிடம் சேவகம் செய்தவர். உன் தாயின் தந்தை சிந்துகேத் அரசராக இருந்த போதிலும் கூட அகமதுநகர் சுல்தானிடம் ஒரு காலத்திலும், முகலாயச் சக்கரவர்த்தியிடம் ஒரு காலத்திலும் சேவகம் புரிந்தவர். இது கௌரவக் குறைவு அல்ல….”

“அவர்களை நான் குறைத்துச் சொல்லவில்லை ஆசிரியரே. அவர்கள் தங்கள்  சூழ்நிலையில் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். நாமும் இப்போது நம்மால் முடிந்ததையே செய்கிறோம். நாளையும் அப்படியே நானும் செய்யக்கூடும். ஆனாலும் சமமில்லாத எந்த நிலையும் பெருமைக்குரிய நிலையல்ல என்றே நான் நம்புகிறேன். நம் தனித்தன்மைகளையும், அடையாளங்களையும் தொலைத்துப் பெறக்கூடிய எந்த இலாபமும் பெருமை அல்ல. பிணைக்கப்பட்டிருப்பது தங்கச் சங்கிலியிலேயே ஆனாலும் அது சுதந்திரம் ஆக முடியுமா? நீங்கள் இராமனையும், பீமனையும், அர்ஜுனனையும் சொல்லி எங்களை உற்சாகப்படுத்தினீர்களே, அவர்கள் தன்மானத்தை விட்டு எங்காவது சேவகம் செய்தவர்களாக இருந்திருந்தால் அவர்களை வைத்து இதிகாசம் எழுதப்பட்டிருக்குமா? அவர்களை நாம் வீரர்களாக ஏற்றுக் கொண்டிருப்போமா?  நம் மண்ணில் நமதுரிமையை இழந்து விட்டு பிடுங்கிக் கொண்டவனை வணங்கிச் சேவகம் செய்து தங்கமும், வெள்ளியும், வைர வைடூரியங்களும் நிறைந்த மாளிகையில் வாழ்வதை விட ஒரு மலையிலும், காட்டிலும் காய்கனி உண்டு சுதந்திரமாய் வாழ்வது கூட நிச்சயமாய் பெருமையே அல்லவா?”

தாதாஜி கொண்டதேவ் பேச்சிழந்து போனார். அவன் சொன்னதை யாரோ ஒரு ஒற்றன் கேட்டு விட்டு பீஜாப்பூர் சுல்தானிடம் உளவு சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவருக்குள் மேலிட்டது. சுற்றிலும் முற்றிலும் பார்த்தார். நல்ல வேளையாக ஜீஜாபாயைத் தவிர அங்கே வேறு யாரும் இருக்கவில்லை. ஜீஜாபாய் மகனைக் கண்டித்து ஏதாவது சொல்வாள் என்று எண்ணி அவர் அவளைப் பார்த்தாள். ஆனால் அவள் பூஜை பீடத்தில் இருந்த ஷிவாய் தேவியைப் பார்த்துக் கொண்டிருந்தாளேயொழிய வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.

உண்மையில் ஜீஜாபாய் மகன் கருத்தில் முழு உடன்பாடுள்ளவளாக இருந்தாள். இந்த வார்த்தைகள், இந்த இளம் வயதில் அவன் வாயிலிருந்து வந்ததற்காக அவள் பெருமைப்பட்டாள். அவள் இப்படியொரு மகனைக் கொடு என்றல்லவா ஷிவாய் தேவியிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். உணர்வுகளிலும் வீரத்திலும் அப்படியே ஒரு மகனைக் கொடுத்த ஷிவாய் தேவி அவன் பெருமையென்று நினைக்கும் வாழ்க்கையையும் கூட அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்து அருள் புரிய வேண்டும் என்று அவள் மனமுருகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய மௌனமும் தாதாஜி கொண்டதேவுக்கு ஆபத்தாகத் தோன்றியது. சிவாஜி நாளை ஏதாவது புரட்சியில் ஈடுபட்டு அவனுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் ஷாஹாஜி அவரைக் குற்றப்படுத்துவாரோ என்ற அச்சம் அவருக்குள் எழுந்தது. ஷாஹாஜியிடம் நிர்வாகக் கணக்கை அவர் காட்டி ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. அதற்காகச் செல்லும் போது சிவாஜியின் இந்தப் புது சிந்தனைகளையும் தந்தையிடம் தெரிவித்து உஷார்ப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, April 19, 2018

இருவேறு உலகம் – 79


ந்த முதியவர் சொன்ன பாலைவனப் பகுதிக்கு செந்தில்நாதன் ஒரு டாக்சியில் ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தார். டாக்சிக்காரன் ”இரவு காற்று அதிகம் வீசும் கவனமாக இருங்கள், அது ஆபத்தான காற்று” என்று எச்சரித்து விட்டுப் போனான். அந்தப் பகுதியில் ஆட்களே இல்லை. தூரத்தில் சில குடிசைகள் தெரிந்தன. அக்குடிசைகளில் ஏதாவது ஒன்று அந்தப் பக்கிரியினுடையதோ என்னவோ? நிலவொளியில் பாலைவனம் மிக ரம்மியமாகத் தெரிந்தது. செந்தில்நாதன் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார். மிக லேசாக இதமாகக் காற்றடித்தது. ஆகாயத்தில் நட்சத்திரங்கள் அழகாகக் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. ரசித்தபடி அமர்ந்திருந்தவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. திடீரென்று காற்றின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. காற்றில் பாலைவன மணலும் சேர்ந்து வந்ததால் கண்களைத் திறந்து வைத்திருக்க முடியவில்லை. காற்று அதிகம் என்று முதியவர் முன்பே எச்சரித்திருந்ததால் அவர் முன்னெச்சரிக்கையாகக் கொண்டு வந்திருந்த கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். காற்று அமானுஷ்யமாய் வீச ஆரம்பித்தது. அவருடைய கண்ணாடி காற்றோடு பறந்து போய் விட்டது. காற்று மணலோடு அவர் மீது வீசியது மட்டுமல்லாமல் அவரைத் தள்ளவும் ஆரம்பித்தது. அவர் கண்களை மூடிக் கொண்டார். உறுதியாக உட்கார்ந்திருக்க முயற்சி செய்தார். காற்றின் வேகம் ஓரளவு குறைந்த போது மெல்லக் கண்களைத் திறந்து பார்த்த போது சுற்றுப்புறமே மாறி இருந்தது. முன்பு மேடான இடங்கள் இப்போது பள்ளமாகவும், பள்ளமாய் இருந்த இடங்கள் இப்போது மேடாகவும் இருந்தன. அவர் அமர்ந்திருந்த இடம் பள்ளமாகி இருந்தது. மறுபடியும் காற்று வேகமெடுத்த போது தூரத்தில் காற்று மண்டலத்தின் நடுவே  ஒரு ஆள் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அது தான் பக்கிரியோ?

மணல்காற்றின் வேகத்தில் கண்களைத் தொடர்ந்து திறந்து வைத்திருக்க முடியவில்லை. மறுபடியும் அவர் கண்களை மூடிக் கொண்டார். காற்று குறைந்த போது கண்களைத் திறந்தார். தூரத்தில் நின்றிருந்த ஆள் இப்போது அருகில் நின்று கொண்டிருந்தார். பழைய சாயம் போன உடைகளை அந்த ஆள் அணிந்திருந்தார். வயது இன்னதென்று தீர்மானிக்க முடியவில்லை. நடுத்தரத்திலிருந்து முதுமை வரை வயது எதுவுமாக இருக்கலாம்…..

உருது கலந்த ஹிந்தியில் அந்த ஆள் பேசினார். குரல் கரகரப்பாய் இருந்தது. “உன் அம்மா இறந்து போய் ஏழு வருடமாகிறது. இப்போதென்ன அவருக்கு வியாதி?”

செந்தில்நாதன் திகைத்துப் போனார். உண்மையில் அவர் தாயார் இறந்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த ஆள் அந்தப் பக்கிரியாகவே இருக்க வேண்டும்….

அவர் ஹிந்தியிலேயே பதில் சொன்னார். “உங்களைப் பார்க்க வேண்டி இருந்தது. யாரும் அதற்கு உதவுவது மாதிரி தெரியவில்லை. உங்களைத் தெரிந்தவர் போல ஒருத்தர் வந்தார். உண்மையைச் சொல்ல முடியாத நிலை… அதனால் தான் வாய்க்கு வந்த ஒரு பாசக்கதையைச் சொன்னேன்….”

அந்தப் பக்கிரி அவர் அருகில் உட்கார்ந்தார். சற்று முன் பெருங்காற்று வீசிய அறிகுறியே இல்லை. இப்போது இதமாய்க் காற்று வீசியது. ஆனால் அவர் உடல், ஆடையில் எல்லாம் மணல் படிந்திருந்தது. அது தான் சற்று முன் ஒரு பெருங்காற்று மணலோடு சேர்ந்து வீசியிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இருந்தது.

அந்தப் பக்கிரி சொன்னார். “பாலைவனத்தை நீ எப்போதும் நம்பி விட முடியாது. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அழகாகவும் இருக்கும், ஆபத்தாகவும் இருக்கும்….” செந்தில்நாதன் தலையசைத்தார்.

பக்கிரி கேட்டார். “எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?”

அவர் தாய் ஏழு வருடங்களுக்கு முன் இறந்து போனது தெரியும் போது அவர் காண வந்திருக்கும் காரணம் இந்தப் பக்கிரிக்குத் தெரியாமல் போகுமா என்று நினைத்தாலும் செந்தில்நாதன் சொன்னார். “உங்களிடம் படித்த சக்தி வாய்ந்த ஒரு பழைய மாணவனைப் பற்றிக் கேட்க வந்தேன்.”

சதானந்தகிரி சுவாமிஜி சொன்னதை வைத்து எதிரி இந்த ஆளிடம் தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் கேட்டுவிட்டு செந்தில்நாதன் பக்கிரியைக் கூர்ந்து பார்த்தார். அந்தப் பக்கிரி தெரியாதது போல் காட்டிக் கொள்ளக்கூடும், யார் என்ன என்று கேட்கக்கூடும் என்று நினைத்தார். பக்கிரி அவர் எதிர்பாராதவிதமாக “எதையும் நான் ஏன் உனக்குச் சொல்ல வேண்டும்?’ என்று கேட்டார்.

திடீரென்று இப்படிக் கேட்டதும் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் செந்தில்நாதன் விழித்தார். போலீஸ்காரனாகக் கேட்க வழியில்லை. பணம் ஏதாவது தருகிறேன் என்று ஆசை காட்டலாம் என்றால் அந்தப் பக்கிரி காசுக்குப் பெரிய மதிப்பு தருவது போல் தெரியவில்லை. அப்படித் தந்திருந்தால் அது இந்த ஆளின் உடையிலும், பாவனையிலும் தெரிந்திருக்கும்….. யோசித்த போது சதானந்தகிரி சுவாமிஜி எதிரிக்குச் சொல்லித்தர மறுத்த காரணம் நினைவுக்கு வந்தது…..

“தகுதியில்லாத ஒருவனுக்கு ரகசியக்கலைகள் எல்லாம் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அவன் அதைக் கற்றுக் கொண்டு என்னென்னவோ வேண்டாத செயல்கள் எல்லாம் செய்வது போலத் தெரிகிறது. சட்டப்படி இல்லாவிட்டாலும் தர்மப்படி அதில் உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறதல்லவா? அப்படி இருக்கையில் விசாரிக்க வருபவனிடம் விவரங்களைக் கூடச் சொல்ல மாட்டேன் என்பது என்ன நியாயம்? அது அந்தத் தப்புக்குக் கூட்டு நிற்பது போல் ஆகிவிடாதா?” என்று செந்தில்நாதன் கேட்டார்.

பக்கிரி கலகலவென்று சிரித்தார். “சதானந்தகிரி சொன்னதை வைத்துச் சொல்கிறாய் நீ. கெட்டிக்காரன் தான்….. நீ இப்படி யோசித்துப் பார். நான் கத்தி வியாபாரம் செய்பவன். என்னிடமிருந்து ஒருவன் கத்தி வாங்கிக் கொண்டு போய் இன்னொருவனைக் குத்திக் கொலை செய்து விட்டான் என்று வைத்துக் கொள். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? கத்தி விற்கக் கூடாத பொருள் அல்லவே….. என் கத்திகளை வாங்கிக் கொண்டு போய் எத்தனையோ பேர் காய்கறிகளை நறுக்கி சமைத்துப் போட்டு மற்றவர் பசியைப் போக்குகிறார்கள். அப்படி என்றால் வயிறு நிரம்பிய புண்ணியத்தில் எனக்கும் பங்கு இருக்குமா என்ன?....”

செந்தில்நாதன் உடனடியாகச் சொன்னார். “கத்தி விற்பவனுக்கு வாங்குபவன் கொலை செய்யக் கேட்கிறானா, இல்லை காய்கறி நறுக்கக் கேட்கிறானா என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்ற சக்தி வாய்ந்த ஆளுக்கு படிக்க வருபவனுடைய நோக்கம் தெரியாமல் போக வாய்ப்பே இல்லையே”

பக்கிரி ஒன்றும் சொல்லாமல் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தார். பின் மெல்லச் சொன்னார். “மனிதனுடைய  இதய ஆழத்தில் என்ன வைத்திருக்கிறான், அதை வைத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அல்லா ஒருவரே அறிவார். கடந்த காலம் மட்டுமே எங்கள் பார்வைக்கு அகப்படுகிறது. எதிர்காலம் எங்கள் கருத்திற்குச் சிக்குவதில்லை…..”

செந்தில்நாதன் அந்த வார்த்தைகளை யோசித்தபடி மௌனமாக இருந்தார். பக்கிரி மெல்லச் சொல்ல ஆரம்பித்தார். “அவன் என்னிடம் படிக்க வந்த போது உடனடியாக நான் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. உன்னைப் போல் தான் அவனும் என்னைத் தேடி இங்கே வந்தான். அவன் வந்த நாளே நான் அவன் கண்ணில் தட்டுப்படவில்லை. இந்தப் பாலைவனத்தில் மூன்று நாட்கள் எனக்காகக் காத்திருந்தான்.  ஒன்று வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அவன் அது கிடைக்கும் வரை விட மாட்டான். பின்வாங்க மாட்டான். ஆசையை மாற்றிக் கொள்ள மாட்டான். அவனைப் போன்ற ஒருவனை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அத்தனை மன உறுதி. அத்தனை பொறுமை. அத்தனை விடாமுயற்சி….. மூன்று நாட்களில் இந்தப் பாலைவனத்தில் காத்திருந்தவனை மறுக்க ஏனோ மனம் வரவில்லை…. இந்த அளவு மன உறுதி இருக்கிற, ஆர்வம் இருக்கிற மாணவனும் ஒரு ஆசிரியனுக்குச் சுலபமாகக் கிடைத்து விடுவதில்லை. அதனால் நான் அவனை ஏற்றுக் கொண்டேன்……”

“அவன் அறிவு கூர்மையும் நான் இது வரையில் எங்கும் பார்த்திருக்காதது. அவன் கற்பூரம் போல. உடனே பற்றிக் கொள்வான். படிக்கக் கிடைப்பதை முடிக்கும் வரை விட மாட்டான்….. அவனுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். கூடவே நானும் சிலதை அவனிடமிருந்து கற்றுக் கொண்டேன்….. அவன் தினமும் அதிகமாக மூன்று மணி நேரம் தான் தூங்குவான். விழித்திருந்த சமயங்களில் எல்லாம் சொல்லிக் கொடுத்ததைப் பயிற்சி செய்து கொண்டிருப்பான்….. கவனம் சிதறுவது என்பதே அவனுக்குக் கிடையாது. கவனச்சிதறலுக்கு அவன் மனதில் அனுமதி இல்லை என்பது போல் தோன்றும்…. அந்த அளவு கட்டுப்பாட்டுடன், விடாமுயற்சியுடன், நான் இது வரை கண்டிராத அறிவுடன் அவன் கற்றுக் கொண்டான். நான் பதினைந்து வருடங்களில் கற்றுக் கொண்டதை அவன் மூன்றே வருடங்களில் கற்றுக் கொண்டான்…..”

சொல்லும் போதே இப்போதும் பக்கிரியின் குரலில் பிரமிப்பு தெரிந்தது. செந்தில்நாதனையும் அந்தப் பிரமிப்பு தொற்றிக் கொண்டது. இப்படியும் ஒருவனா என்று வியந்தார்.


”நீங்கள் அவனுக்கு என்னவெல்லாம் கற்றுக் கொடுத்தீர்கள்?” என்று செந்தில்நாதன் கேட்டார்.

(தொடரும்)

என்.கணேசன்  

Wednesday, April 18, 2018

முந்தைய சிந்தனைகள் - 31

என் நூல்களில் இருந்து சில சிந்தனைத் துளிகள்....










Monday, April 16, 2018

சத்ரபதி – 16


ங்களைச் சுற்றிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஜீஜாபாய் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சகாயாத்ரி மலைத்தொடரிலிருந்து இறங்கி சமவெளி வாழ்க்கைக்கு வந்திருக்கும் மக்களால் பூனாவைச் சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளாகி விட்டன. வறண்டு காணப்பட்ட பகுதிகள் பசுமையாக மாறின. தினமும் சிவாஜியுடன் பயிற்சிகள் எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட்டம் பல மடங்காய் பெருகியிருந்தன. வாட்போரும், விற்பயிற்சியும், குதிரையேற்றமும், யானையேற்றமும் சாதாரணப் பயிற்சிகளாய் இல்லாமல் விளையாட்டும், ஆனந்தமும், உயிரோட்டமும் நிறைந்த தினசரி நடவடிக்கைகளாய் மாறின. கலந்து கொள்ளும் அத்தனை முகங்களிலும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஜீஜாபாய் பார்த்தாள். ஷாஹாஜி ஏற்படுத்திக் கொடுத்திருந்த சிறுபடை பலமடங்கு பெரிதாய் ஆனது. எல்லாவற்றிற்கும் சிவாஜியும், தாதாஜி கொண்டதேவும் தான் காரணம்….

விவசாயம் மிகச்செழிப்பாக நடந்தது. அக்கம்பக்கத்து ஊடுருவலையும், கொள்ளையர்களின் ஊடுருவலையும் கூட்டமாக அவர்கள் அருமையாகச் சமாளித்தார்கள். அறுவடை அமோகமாயிருந்தது. திருடர்களுக்குப் பதிலாக வணிகர்கள் வர ஆரம்பித்தார்கள். அங்கு வணிகம் சிறப்பாக நடைபெற்றது. மக்களின் நிதி நிலைமையும், நிர்வாகத்தின் நிதிநிலைமையும் முன்னேற ஆரம்பித்தது.

விவசாயிகளையும், சகாயாத்ரியை அடுத்து சிறுகுடிசைகளில் வாழும் மக்களையும் கொடிய வனவிலங்குகள் வந்து தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்ததால் தாதாஜி கொண்டதேவ் வனவிலங்குகளை வேட்டையாடுவோருக்கு இத்தனை தங்கக் காசுகள் என்று அறிவிப்பு செய்தார். ஆர்வத்துடன் ஒரு கூட்டம் சுறுசுறுப்பாக வன விலங்குகளை வேட்டையாடக் கிளம்பியது. போட்டியில் வென்று பதக்கம் வாங்குவது போல் பலர் தங்கக்காசுகளைப் பெற்று வெற்றிக்களிப்பில் மிதந்தார்கள். குறுகிய காலத்தில் சமவெளிக்கு வந்து சாதாரண மக்களைத் தாக்கும் கொடிய விலங்குகளின் வரவு நின்றது.

சிவாஜி அனைத்து தரப்பு மக்களிடமும் நெருக்கமாக இருந்தான். வயதானவர்கள், நடுத்தர வயதினர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் எல்லோருக்கும் அவன் மிக வேண்டியவனாய் இருந்தான். ஒவ்வொருவரிடமும் அவன் அவர்களுக்கேற்றாற் போல் பழகியதை ஜீஜாபாய் கவனித்தாள். எல்லோருடனும் உணர்வுநிலையில் அவனால் சுலபமாகக் கலந்து கொள்ள முடிந்தது. பேரனாய், மகனாய், தோழனாய், சகோதரனாய் அவனை அவர்கள் கண்டார்கள். அன்பு காட்டினார்கள். அவனிடம் இயல்பாகவே நல்ல தலைமைப் பண்புகள் இருப்பதை ஜீஜாபாயும், தாதாஜி கொண்டதேவும் கவனித்தார்கள்.

சிவாஜியின் நண்பர்கள் கூட்டம் பெரிதாகியது. அவனும், நண்பர்களும், மூதா நதிக்கரையோரம் பயணித்து அது கலக்கும் பீமாநதி வரையும் சுற்றி வந்தார்கள். அதே போல சகாயாத்ரி மலைத்தொடரிலும் அவர்கள் நெடுந்தொலைவு செல்வதுண்டு. குறிப்பில்லாத பயணங்களாய் அவை இருக்கவில்லை. போய்வரும் வழிகளில் அவர்கள் எதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று யோசித்து மனக்குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். அங்குள்ள மக்களிடமும் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அவர்களது மாலைநேரக் கூட்டங்கள் பெரிதாக ஆரம்பித்தன. அந்தக் கூட்டங்களில் சமகாலத்து வரலாறுகள் அலசப்பட்டன. அக்கம் பக்கம் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி விவரமறிந்தவர்கள் பேசினார்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்களும் விவரமறிந்தவர்களானார்கள். முன்பு வீண்கதை பேசியும், குடியில் ஆழ்ந்தும் பொழுதைப் போக்கி வந்த மக்கள் வித்தியாசமாக மாறி உயர ஆரம்பித்தார்கள்.  பிறைநிலவு நாளுக்கு நாள் வளர்ந்து பௌர்ணமியாகப் பிரகாசிப்பது போல ஒரு ஜீவனும் அறிவுமுள்ள ஒரு சமுதாயம் அங்கே உருவாகியது.

சிவாஜி தன் தேசத்தின் வேர்களைத் தெரிந்து கொள்வதில் மிக ஆர்வமாக இருந்தான். இந்த தேசத்தில் இப்போது ஆள்பவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அவர்கள் ஆதிக்கம் வலுவாகக் காரணம் என்ன என்பதையெல்லாம் அவன் கேட்ட போது தாதாஜி கொண்டதேவ் அவர் அறிந்த வரை வரலாற்றைச் சொன்னார். பின் வருத்தம் கலந்த குரலில் சொன்னார். “இந்த தேசத்தில் பிரிவினையை வளர்த்தே மற்றவர்கள் வென்றார்கள். ஆதிக்கத்தைப் பெருக்கினார்கள். நம்மவர்கள் அடுத்தவனைக் கூடப் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் தங்களுக்குள் இருக்கும் இன்னொரு பிரிவின் உயர்வைக் காணச் சகிக்க மாட்டார்கள். இதைப் பயன்படுத்தியே அன்னியர்கள் வென்றார்கள். ஆள்கிறார்கள்……”

நீண்டதொரு மௌனம் அந்தக்கூட்டத்தில் நிலவியது. மறுபடியும் தாதாஜி கொண்டதேவ் சொன்னார். “உண்மையில் நம்மைச் சுற்றி இருக்கும் மூன்று ராஜ்ஜியங்களில் இரண்டு நம் ஆட்களாலேயே ஆளப்படுகின்றன. அகமதுநகர் அரசின் முதல் அரசரின் தந்தையும், கோல்கொண்டா அரசின் முதல் அரசரும் நம்மவர்களே. கடத்தப்பட்டு பின் மதம் மாற்றப்பட்டவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் இன்று அன்னியர்களாகவே மாறிவிட்டார்கள். இன்றைய முகலாயப்பேரரசர் ஷாஜஹானின் தாயும் ராஜபுதனத்து இளவரசியே. அவரும் தாய்வழி இருக்கும் பந்தத்தை அங்கீகரிப்பதில்லை…”

இது போன்ற கூட்டங்களால் அங்குள்ளவர்கள் பல விஷயங்கள் அறிந்தவர்களாக இருந்தார்கள். சமகாலத்தின் சுவாரசிய நிகழ்வுகள் கூட அங்கு பகிரப்பட்டன. முகலாயப் பேரரசரின் ஒரு மகனான முஹி உத்தின் முகமது சில வருடங்களுக்கு முன் தங்கள் படைத்தளத்தினுள் புகுந்த மதங்கொண்ட யானையருகே வேகமாக குதிரை மேல் சென்று  அதன் தந்தத்தில் ஈட்டியால் தாக்கி அடக்கிய தகவலை ஒருவர் சொன்னார். 

எல்லோரையும் போல் வியந்து சிவாஜி கேட்டான். அவன் முதல் முறையாகக் கேள்விப்படும் முஹி உத்தின் முகமது வருங்கால முகலாயச் சக்கரவர்த்தியாகப் போகும் ஔரங்கசீப் என்றும் அவனது பரம வைரியாக ஆகப் போகிறவர் என்றும் அப்போது சிவாஜி அறியவில்லை.

இந்தக் கூட்டங்களில் தகவல்களைப் பெற்றது போலவே தனியாக இருக்கையில் தாயிடமிருந்தும் தங்கள் வரலாற்றைக் கேட்டு சிவாஜி ஆர்வமாக அறிந்து கொண்டான். அவன் தந்தை வழி ராணாக்களின் வீரக்கதைகளையும் தாய்வழி யாதவர்களின் வீரக்கதைகளையும் மிகுந்த ஆர்வத்துடன் சிவாஜி கேட்க ஜீஜாபாயும் பெருமையாக சொல்வாள். ஷாஹாஜியின் வீர முயற்சிகளைப் பற்றியும் ஜீஜாபாய் சொல்வாள். விதி அனுகூலமாக இல்லாததால் தான் அவர் சோபிக்கவில்லை என்று விளக்குவாள். இரவுகள் நீளும்….

பல சமயங்களில் ஜீஜாபாய் சிவாஜியை ஆச்சரியப்படுத்தினாள். ஷாஹாஜி அழைத்தும் அவள் பீஜாப்பூருக்கு சிவாஜியையும் அழைத்துச் செல்லாததற்குக் காரணம் ஷாஹாஜிக்கும் அவளுக்கும் ஏற்பட்டிருந்த இடைவெளியே என்பதை அவன் நன்றாக அறிவான். அதற்கு முன்பே கூட ஷாஹாஜி மனைவியை வேறு கோட்டைக்கு மாற்றினாரேயொழிய அவளைத் தன்னுடன் வரவழைத்து இருத்திக் கொள்ளவில்லை. அதுவும் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த இடைவெளியையே சொன்னது. அப்படி இருந்த போதும் ஜீஜாபாய் கணவரை மரியாதைக் குறைவாகவோ, குற்றம் சாட்டியோ ஒருபோதும் சிவாஜியிடம் பேசியதில்லை….

இப்போதும் ஷாஹாஜி சாம்பாஜியை அழைத்துக் கொண்டு அங்கு வந்த நாள் சிவாஜிக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. சாம்பாஜி சற்று விலகியே இருந்த விதத்தில் ஜீஜாபாய் வருத்தப்பட்டதைப் பிறகு வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் முதலில் வாடிய காட்சியை சிவாஜியால் மறக்க முடியவில்லை. மூத்த மகன் இருப்பிடத்தில் மட்டுமல்லாமல் மனதளவிலும் தொலைதூரத்திற்குப் போய் விட்டதில் அந்தத் தாய்மனம் படாதபாடு பட்டிருக்க வேண்டும்….. ஆனாலும் அதை ஒருபோதும் இளைய மகனிடம் கூட மனம் விட்டுச் சொன்னதில்லை. இப்படி எத்தனையோ துயரங்களிலும் தகர்ந்து விடாமல் இருக்கும் தாய் மீது பாசத்துடன் சேர்ந்து அவனுக்குப் பல மடங்கு பெருமையும் இருந்தது.

மகன் அவள் சொல்லாமலேயே அவளுடைய ஆழமான உணர்வுகளைப் புரிந்து கொண்டது போல ஜீஜாபாயும் மகன் சொல்லாத பல விஷயங்களைப் புரிந்து கொண்டு பெருமிதம் கொண்டாள். அவளை விட்டு அவன் சகாயாத்ரி மலையில் மூன்று வருடங்கள் வாழ்ந்த போது இருந்த கரடுமுரடான சௌகரியமற்ற நிலைமைகள் பற்றி அவன் அவளிடம் சொல்லாவிட்டாலும் சத்யஜித் ஜீஜாபாயிடம் தனியாக இருந்த சந்தர்ப்பங்களில் அவற்றை வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறான். ”ஒருபோதும் சிவாஜி முகம் கூடச் சுளித்ததில்லை தாயே” என்று குரல் கரகரக்க சத்யஜித் சொன்ன போது ஜீஜாபாயின் கண்கள் குளமாயின.

அவளுடைய மகன் வீரன், வித்தியாசமானவன், வயதுக்கு மீறிய மனப்பக்குவம் உள்ளவன், எல்லா சந்தர்ப்பங்களிலும் சூழல்களை விட மேலே இருந்து இயங்கக்கூடியவன் என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. அவன் வயதுப் பிள்ளைகள் போல அவன் குடியிலும் கேளிக்கைகளிலும் அதிகக் காலம் கழிப்பதில்லை. அவனிடம் சுயக்கட்டுப்பாடும், சாதிக்கத் துடிக்கும் அக்னியும் தெளிவாகவே தெரிகிறது. ”ஷிவாய் தேவி அருளைப் பெற்றவன் அவன். கண்டிப்பாக ஒரு நாள் சரித்திரம் படைப்பான்!” என்ற நம்பிக்கை ஜீஜாபாய் மனதில் இருந்தது. ஆனால் அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் அதற்கான சூழ்நிலைகள் தான் தென்படவில்லை….

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, April 12, 2018

இருவேறு உலகம் - 78


மாஸ்டர் க்ரிஷுக்கு சில மூச்சுப் பயிற்சிகள், ஒரு தியானப்பயிற்சி சொல்லிக் கொடுத்தார். மிகக் கவனமாகவும், ஆர்வமாகவும் படித்துக் கொண்ட அறிவாளியான அவன் அவற்றை வேகமாகவே கற்றுக் கொண்டான். மாஸ்டர் அந்தப் பயிற்சிகளுடன் அவன் மனதில் அவன் இறைசக்தியின் அங்கம் என்பதை ஆழத்திற்குக் கொண்டு போய் அந்த மனநிலையில் இருந்து பார்க்கச் சொன்னார். அவர் அந்த விஷயத்தைச் சொன்ன போதே அவன் தன் அந்தராத்மாவில் ஒரு சிலிர்ப்பை ஆரம்பத்திலேயே உணர முடிந்திருந்ததால் சிறிது நேரம் அவன் அந்த உண்மையை மனதில் நன்றாகவே நிலைநிறுத்த முடிந்தது. அவனுக்குள் ஒரு மிகப்பெரிய சக்தி மண்டலம் உருவாவது போல் இருந்தது. தனக்குள் அவன் ஒரு பெரும்பலத்தை உணர்ந்தான். அதை அவன் முகம் பார்த்த போதே மாஸ்டருக்கும் புரிந்தது. ஆரம்பத்திலேயே இந்த வேகம் இருப்பது வெகுசிலருக்கு மட்டுமே வாய்க்கும்…..

தான் உணர்ந்ததை அவன் அவரிடம் சொன்னான். அவர் தலையசைத்தார். அவன் உடனடியாக “மாஸ்டர் அடுத்தது சொல்லிக் கொடுங்க” என்றான்.

அவர் சொன்னார். “இந்த மனநிலையில் நீ வீட்டிற்குப் போன பிறகும் எத்தனை நேரம் இருக்க முடிகிறது என்று பார். நான் சொல்லிக் கொடுத்த எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது. அதை எப்பவும் ஞாபகம் வச்சுக்கோ. இதுபத்தி விளக்குவது, விவாதிக்கறது எல்லாம் உன் சக்தியை விரயமாக்கிடும். போய் பயிற்சி செய்துட்டு நாளைக்கு வா.”

அவன் சரியென்று தலையசைத்தான். அவரை நமஸ்கரித்து விட்டுக் கிளம்பினான். வீட்டில் தன் அறையில் அமர்ந்து கொண்டு பயிற்சிகள் செய்து அந்த மனநிலையில் தொடர்ந்து இருந்தான். மனம் ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. வேறு ஏதேதோ யோசிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ஹரிணி போன் செய்தாள். “எப்படி இருந்தது உன் பாடம்”

”நல்லா இருந்துது. அது பத்தி யார் கிட்டயும் எதுவும் பேச வேண்டாம்னு மாஸ்டர் சொல்லிருக்கார்.”

“சரி சொல்லாதே. ஒன்னே ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ. சாமியாரா மட்டும் போயிடாதே. போனா நான் கொன்னுடுவேன்….”

“சரி சரி அதையே பேசி இப்ப என்னை சாகடிக்காதே. நான் இப்ப ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்….”

“நானும் உன் கூடவே வந்து இதைக் கத்துகிட்டா என்னன்னு யோசிக்கிறேன். சேர்ந்தே ப்ராக்டிஸ் பண்ணலாமே….”

“அம்மா தாயே உன்னை இங்க இருந்தே கும்பிடறேன். ஆளை விடு”

“அந்தப் பயம் எப்பவுமே இருக்கட்டும்” என்று சிரித்துக் கொண்டே அவள் பேச்சை முடித்துக் கொண்டாள்.

அவனுக்கு மனம் மறுபடி பயிற்சியில் லயிக்க மறுத்தது. அதற்கு ஏதேதோ காரணம் சொன்னது. ஒருவழியாக திரும்பத் திரும்ப மனதை இழுத்து வந்து பயிற்சியிலும் அந்த மனநிலையிலும் நிறுத்தினான். அன்று முழுவதும் அவன் அறையை விட்டு வெளியில் வரவில்லை. இரவு சாப்பிட மட்டும் வெளியே வந்தான். சாப்பிடும் போதும் முடிந்த வரை பேச்சைக் குறைத்தான். எப்போதுமே அவன் வாயைக் கிளறும் உதய்க்கு அவனுடைய எம். பி நண்பன் ஒருவன் அந்த நேரத்தில் போன் செய்ததால் அவனும் நண்பனுடனே பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தான். தம்பியைத் தொந்திரவு செய்யவில்லை. அம்மா மட்டும் நன்றாகச் சாப்பிடு, இன்னும் சாப்பிடு என்று கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தாள். அதற்கு மேல் அவளும் அதிகம் பேசவில்லை. அவள் கவனம் மூத்த மகன் போன் பேசியதில் இருந்தது. திரும்பவும் அறைக்கு வந்தவன் மறுபடி பயிற்சி செய்ய ஆரம்பித்தான். இரவு மனம் மறுபடி அமைதியடைந்து எண்ணங்களும் ஒரு புள்ளியில் லயிக்க ஆரம்பித்தன. மிக அமைதியான ஆழமான உறக்கம் வந்தது.

மறுநாள் எழும் போது புத்துணர்ச்சியோடும், புதிய சக்திப்பெருக்கோடும் இருப்பதாக க்ரிஷ் உணர்ந்தான். மாஸ்டரிடம் போய் தன் அனுபவத்தைச் சொன்னான். அவர் மென்மையாகப் புன்னகைத்தார்.

“சரி மாஸ்டர் அடுத்த பாடம் சொல்லிக் கொடுங்க” என்று அவன் ஆர்வத்துடன் கேட்டான்.

“முதல் பாடத்தில் பாஸ் ஆனா தான் இரண்டாம் பாடம்…. இன்னும் முதல் பாடத்திலேயே நீ பாஸாகல”

“என்ன மாஸ்டர் சொல்றீங்க?” க்ரிஷ் ஆதங்கத்துடன் கேட்டான்.

 ”நீ நேற்று யார் கிட்டயெல்லாம் பேசினாய்?….”

”ஹரிணி கிட்டயும் அம்மா கிட்டயும். ஹரிணி கிட்ட ரெண்டு நிமிஷம் தான் பேசியிருப்பேன். அம்மா சாப்பிடறது பத்தி பேசினாங்க. சரி சரின்னு சொன்னேன். அவ்வளவு தான். மத்தபடி பேச்சைக் கூடக் குறைச்சுட்டு ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். ஆனாலும் பாஸாகலைன்னு சொல்றீங்களே மாஸ்டர்”

”ஆரம்பத்துக்கு நீ செய்திருக்கறது சாதனைன்னு சொல்லலாம். ஆனா போதாது. ரூமுக்குள்ளயே உட்கார்ந்துட்டு அமைதியையும் சக்தியையும் உணர்றது பெரிய விஷயமில்ல. நீ ஹரிணி கிட்ட ரெண்டு நிமிஷம் பேசினதா சொன்னாயே. பேசி முடிச்சு மனசு திரும்ப வழிக்கு வர எவ்வளவு நேரமாச்சு….”

”ரெண்டு மணி நேரம் இருக்கும்.”

“ரெண்டு நிமிஷம் பேசின பிறகு மனசைத் திரும்ப அமைதிப்படுத்த ரெண்டு மணி நேரம் தேவைப்படுதுன்னா முதல் பாடத்துல நீ ஜெயிச்சதா சொல்ல முடியாது க்ரிஷ். நீ திரும்ப போ. வழக்கமா வீட்டாளுக கிட்ட எப்பவும் இருக்கற மாதிரி இரு. மனம் இந்த அமைதியோடவே, சக்தியோடவே இருக்குதான்னு பாரு. அது முடிஞ்சுதுன்னா காலேஜுக்குப் போ. அங்கயும் வழக்கம் போல உன் வேலை எல்லாம் செய். அதை எல்லாம் செஞ்சுகிட்டே நான் சொல்லிக் கொடுத்த மனநிலையிலே தங்க முடியுதான்னு பாரு. உன் வழக்கமான வாழ்க்கைல செய்ய வேண்டியது எல்லாத்தையுமே செஞ்சுகிட்டே உன் மனநிலை இதே அமைதியோட இதே சக்தியோட தங்க ஆரம்பிக்கறப்ப தான் நீ முதல் வகுப்பு பாஸாயிட்டேன்னு அர்த்தம். அப்புறமா தான் அடுத்த பாடம், அடுத்த வகுப்பு….”

க்ரிஷ் திகைப்புடன் அவரைப் பார்த்தான். அவர் புன்னகை சிரிப்பாக நீண்டது.


ஜெய்சால்மரிலும் பலரிடமும் அந்தப் பக்கிரி பற்றிக் கேட்டு செந்தில்நாதன் சலித்துப் போனார். அங்கும் பேசிய நூற்றியெட்டு ஆட்களில் இரண்டு பேருக்கு மட்டும் அவர் சொன்ன ஆள் பற்றித் தெரிந்திருந்தது. அவர்கள் சதானந்தகிரி சுவாமிஜி போல அந்தப் பக்கிரி எங்கும் நிரந்தரமாகத் தங்காத ஆள் என்று சொன்னார்கள். மற்றவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு அந்தப் பக்கிரியைத் தெரிந்திருக்கவில்லை. மீதமுள்ளவர்கள் பிகானீர் நகரில் இருந்தவர்கள் செய்தது போலவே யார் யாரையோ சக்தி படைத்த ஆட்களாக அடையாளம் காட்டினார்கள். போனதில் ஏமாற்றம் தான் அவருக்கு மிஞ்சியது.

அவர் பலரிடமும் விசாரிப்பதை தூர இருந்தே பார்த்துக் கொண்டிருந்த பெரிய தலைப்பாகை அணிந்த ஒரு முதியவர் அவர் சலித்துப் போய் ஒரு தெருவோரக் கடையில் டீ குடிக்க அமர்ந்த போது அருகில் வந்தார். “நீங்கள் ஏன் அந்த பக்கிரியை விசாரிக்கிறீர்கள்?”

அந்த ஆளைப் பார்க்கையிலேயே அவருக்கு அந்தப் பக்கிரி பற்றி கூடுதலாகத் தெரிந்திருக்கலாம் என்று செந்தில்நாதனின் உள்ளுணர்வு சொல்லியது. அந்த முதியவரின் நெஞ்சைத் தொடும்படியான ஒரு கதையை செந்தில்நாதன் சொன்னார். “என் அம்மாவுக்கு நவீன மருந்தால் குணப்படுத்தாத முடியாத ஒரு வித்தியாசமான நோய். பார்க்காத மருத்துவம் இல்லை. செய்யாத செலவில்லை. ஆனால் பிரயோஜனமில்லை. அப்போது தான் என் ராஜஸ்தான் நண்பர் ஒருவர் இந்தப் பக்கிரி பற்றிச் சொன்னார். அவர் கையால் மந்திரித்து ஏதோ தாயத்து வாங்கினால் கண்டிப்பாகக் குணமாகும் என்றார். அவருக்குத் தெரிந்தவங்க யாரோ அப்படி குணமாயிருக்காங்களாம். அதனால் தான் இங்கே வந்தேன்…… ஆனால் அவர் எங்கேயிருக்கிறார் என்று இங்கே யாருக்குமே தெரியவில்லை….”

அந்த முதியவர் முகத்தில் கனிவு தெரிந்தது. “இந்தக் காலத்தில் வயதானவர்களுக்கு முடியலைன்னா எங்கயாவது கொண்டு போய் சேர்த்திட்டு போயிடறாங்க. உங்க மாதிரி அக்கறையோட குணப்படுத்த அலையறவங்க ரொம்பக்குறைவு….. நீங்க சொல்ற அந்தப் பக்கிரி இருக்கற இடம் எனக்குத் தெரியும்…. ஆனால் அந்தப் பக்கிரி பகல்ல யார் கண்ணுக்கும் அகப்பட மாட்டார். ராத்திரியானா தான் வெளியே வருவார்….”

செந்தில்நாதன் ஆர்வமாகச் சொன்னார். “பரவாயில்லை ராத்திரியே போய் பார்க்கிறேன். இடத்தைச் சொல்லுங்கள்”

முதியவர் அறுபது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு பாலைவனப்பகுதியைச் சொன்னார். “அங்கே கடைசி பஸ் சாயங்காலம் ஆறு மணிக்குப் போய்ச் சேரும். டாக்சிலயும் போகலாம். ஆனா டாக்சிக்காரங்களும் ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் போக மாட்டாங்க. கொஞ்சம் அமானுஷ்யமான காற்று அடிக்கும் பகுதி அது…. அங்கே பத்துப் பதினோரு மணிக்கு மேல தான் பக்கிரி வெளியே வருவார்….. நீங்க ராத்திரி ஒன்பது மணிக்குப் போனா காலைல வரைக்கும் திரும்பி வர முடியாத இடம் அது.”

செந்தில்நாதன் கைகூப்பிச் சொன்னார். “பரவாயில்லை. நான் போய்ப் பார்க்கிறேன். எப்படி எங்கேயிருந்து போவதுன்னு மட்டும் சொல்லுங்க”

(தொடரும்)
என்.கணேசன்