சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, September 11, 2019

மலர்கள் வந்ததும், மலருக்குள் மோதிரம் வந்ததும்…!

ற்புத சக்திகளை அடைந்திருப்பது ஆன்மிகச் சிகரத்தை எட்டியதாக அர்த்தமல்ல என்பதைப் பார்த்தோம். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இக்காலத்தைப் போலவே அந்தச் சக்திகளை ஆன்மிக உச்சத்தின் அடையாளமாகவே எடுத்துக் கொள்ளும் போக்கு இருந்தது. அதனாலேயே அந்தச் சக்திகளையே தேடி அடைபவர்களும், அதை வெளிப்படுத்துபவர்களும் கணிசமாக அக்காலத்தில் இருந்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் திருமதி மேரி பேக்கர் தேயர் என்ற பெண்மணி. அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்தவர். அவர் தன் சக்தியால் கொத்து கொத்தாக மலர்களை வரவழைக்கும் சக்தி படைத்தவராக இருந்தார். தூர தேசத்து மலர்களையும், புதர்களையும், புற்களையும், மலர்க்கொடிகளையும், மரக்கிளைகளையும் தான் இருக்கும் இடத்தில் வந்து விழச் செய்ய முடிபவராக அவர் இருந்தார். அதனால் அவர் மலர் ஊடகம் என்ற பட்டப்பெயரில் பலராலும் அழைக்கப்பட்டார்.

அவர் பல விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதில் ஆட்சேபணை இல்லாதவராக இருந்தார். அதனால் அவர் அற்புதங்களைச் செய்து காட்டுவதற்கு முன் அந்த அறையை யார் வேண்டுமானாலும் நன்றாக சோதனையிட்டுக் கொள்ள முடியும். அவர் எங்காவது மலர்களை ஒளித்து வைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை அறையிலும் அவர் உடைகளிலும் சோதனை இட்டு ஆராய்ச்சியாளர்கள் திருப்தி தெரிவித்த பிறகே அவர் அந்த நிகழ்வை ஆரம்பிப்பார். அவரும் பார்வையாளர்களும் ஒரு நீண்ட மேசை முன் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். அந்த விதத்தில் திருமதி மேரி பேக்கர் தேயர் உட்பட யாரும் தங்கள் கைகளைப் பயன்படுத்தி எதையும் எடுத்துப் போட வாய்ப்பில்லை.  அதன் பின் விளக்குகள் அணைக்கப்படும். சிறிது நேரத்தில் மேசை மீது மலர்க்கொத்துக்கள், செடிகள் எல்லாம் வந்து விழும். அந்த நேரங்களில் அந்த அறை மண் வாசம், மலர் வாசத்தால் நிறையும். சில நேரங்களில் சிறுபறவைகள், பட்டாம்பூச்சிகள் ஆகியவையும் அங்கு பறப்பதுண்டு. பின் விளக்கைப் போட்டுப் பார்த்தால் பல தூர தேசங்களில் மட்டுமே மலரக்கூடிய மலர்கள், விளையும் செடிகள் உட்பட அப்போது தான் பிடுங்கப்பட்டது போல பசுமையாக மேசையில் மேல் விழுந்து கிடக்கும். அப்படி விழுந்த மலர்களும் செடிகளும் கூட அங்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் மனதில் விரும்பிய மலர்களாகவும், செடிகளாகவும் இருந்தது தான் இதில் பேரதிசயம்.

ஒரு முறை கர்னல் ஓல்காட் திருமதி மேரி பேக்கர் தேயர் நடத்தும் ஒரு நிகழ்வுக்கு பாஸ்டன் நகருக்குச் சென்றிருந்தார். நிகழ்வுக்கு முந்தைய தினம் பாஸ்டன் நகரப் பூங்கா ஒன்றிற்குச் சென்ற அவர் கவனத்தை ஒரு வித்தியாசமான செடி கவர்ந்தது. நீளமான, அகலக்குறைவான அந்த இலைகளில் வெள்ளையும், பச்சையுமாய் கோடுகள் இருந்தன. ’அந்த அம்மையார் நிகழ்வில் நினைத்த மலரும், செடியும் வரும் என்கிறார்கள் இந்தச் செடி இலைகளை வரவழைக்க அவரால் முடியுமா?’ என்ற சிந்தனை கர்னல் ஓல்காட்டின் மனதில் எழுந்தது. உடனே அவர் ஒரு இலையின் பின்னால் நீலநிறப் பென்சிலால் ஒரு நட்சத்திரம் வரைந்து விட்டுச் சென்றார்.

மறுநாள் மாலை அந்த நிகழ்ச்சியில் திருமதி மேரி பேக்கர் தேயர் அருகிலேயே அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு கர்னல் ஓல்காட் அமர்ந்தார். விளக்குகள் அணைக்கப்பட்டதும் அவர் மனம் முந்தைய தினம் அந்தப் பூங்காவில் பார்த்த செடியையே எண்ணியது. மலர்களும், செடிகளும் கொத்தாக ஒவ்வொருவர் முன்னும் விழுந்தன. அந்த நேரத்தில் திருமதி மேரி பேக்கர் தேயரின் கைகள் நடுங்கியதையும், அவர் கை சில்லிட்டதையும் கர்னல் ஓல்காட்டால் உணர முடிந்தது.  பின் விளக்கைப் போட்டுப் பார்த்தால் அவர் முன் அவர் முன் தினம் பார்த்த செடிக்கிளையே விழுந்திருந்தது. ஒரு இலையின் பின் அவர் வரைந்த நட்சத்திரம் இருந்தது அவரைப் பேராச்சரியத்தில் ஆழ்த்தியது.  அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் முதல் வேலையாக அந்தப் பூங்காவிற்குச் சென்று முந்தைய நாள் பார்த்திருந்த அந்தச் செடி அருகே சென்று பார்த்தார். அந்தச் செடியில் ஒரு கிளை வெட்டப்பட்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது.

அதன் பின் அந்த மலர் ஊடகப் பெண்மணியை வேறு ஒரு நிகழ்ச்சியின் போது கர்னல் ஓல்காட் சந்தித்தார். அந்தப் பெண்மணி ஒரு மிக அழகான, பாதி மலர்ந்த ரோஜா ஒன்றை கர்னல் ஓல்காட்டிடம் தந்துஇந்த மலர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கென்று பிரத்தியேகமாக ஆவிகள் தந்திருக்கின்றன. அவரிடம் தந்து விடுங்கள்என்று சொன்னார்.

அந்த அழகான ரோஜாவை வாங்கிக் கொண்டு வந்த கர்னல் ஓல்காட் அதை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் திருமதி மேரி பேக்கர் தேயர் அவருக்கென்று பிரத்தியேகமாக ஆவிகள் தந்ததாக சொன்னதைச் சொல்லித் தந்தார். அந்த ரோஜா மலரை வாங்கிய ப்ளாவட்ஸ்கீ அம்மையார்  அதன் வாசத்தை நுகர்ந்து ரசித்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்கள் ஏதோ ஒரு தொலை தூரப் புள்ளியில் நிலைத்தது. அது போலக் குறிப்பேதும் இல்லாமல் அவர் பார்வை தொலை தூரத்தில் நிலைக்கும் போதெல்லாம்  அவர் ஏதாவது அற்புதச் செயலைச் செய்து காட்டுவது வழக்கம் என்பதை அறிந்திருந்த கர்னல் ஓல்காட்டுக்கு இப்போது அந்த மலரை வைத்து என்ன செய்து காட்டப் போகிறார் என்ற ஆவல் எழுந்தது.

அந்த நேரத்தில் அங்கே வந்த வேறொரு கனவான்ஆகா என்னவொரு அழகான ரோஜாஎன்று சொல்லி ரசிக்க ப்ளாவட்ஸ்கீ அம்மையார்  ஒன்றும் சொல்லாமல் அந்த ரோஜா மலரை அவரிடம் தந்தார்.

அவரிடம் ரோஜாவை வாங்கிய கனவான்மலர் அழகாகத் தான் இருக்கிறது. ஆனால் கனமாகவும் அல்லவா இருக்கிறது. இப்படிக் கனமான ரோஜாவை நான் இது வரை பார்த்ததில்லையேஎன்றார்.

கர்னல் ஓல்காட்டுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்நானல்லவா அந்த ரோஜாவை அங்கிருந்து கொண்டு வந்தவன். அது அப்படி ஒன்றும் கனமாக இருக்கவில்லையேஎன்று சொல்லி விட்டு அந்த ரோஜாவை அந்தக் கனவானிடமிருந்து வாங்கிப் பார்த்தார். நிஜமாகவே அந்த ரோஜா கனமாகத் தான் இருந்தது. திகைப்புடன் கர்னல் ஓல்காட் அந்த ரோஜாவைக் கூர்மையாக ஆராய்ந்தார். ரோஜாவின் மத்தியில் மூடிய இதழ்களுக்குள் மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒரு புள்ளி மின்னியது. கர்னல் ஓல்காட் அதை ஆச்சரியத்துடன் பார்க்கையில் ரோஜா மலரின் உள்ளிருந்து ஒரு தங்க மோதிரம் பிதுங்கி வெளியே விழுந்தது. திகைப்புடன் அதை எடுத்து கர்னல் ஓல்காட் தன் விரலில் அணிந்து கொண்டார்.

அந்தக் கனவானும் கர்னல் ஓல்காட்டும் அந்த ரோஜா மலரை மிக உன்னிப்பாக ஆராய்ந்தார்கள். ரோஜா இதழ்கள் மத்தியில் இன்னும் பாதி மலர்ந்து பாதி மொட்டு நிலையில் தான் இருந்தன. அந்த ரோஜா இதழ்களை சேதப்படுத்தாமல் யாரும் தங்க மோதிரத்தை உள்ளே திணித்திருக்க வழியே இல்லை. அப்படியானால் உள்ளே எப்படி தங்க மோதிரம் வைக்கப்பட்டது, அது எப்படித் தெறித்து விழுந்தது என்ற கேள்விகளுக்கு அவர்களுக்குப் பதில் கிடைக்கவில்லை.

அந்தத் தங்க மோதிரம் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் உருவாக்கிய கற்பனை மோதிரமாக சிறிது நேரம் இருந்து விட்டு மறையவில்லை. அதை கர்னல் ஓல்காட் தொடர்ந்து தன் கையில் அணிந்தபடியே இருந்தார். ஒரு முறை அவருடைய திருமணமான சகோதரி தன் கணவருடன் அவரைச் சந்திக்க வந்த போது அதை அவளிடமும் காண்பித்தார்.

அந்த மோதிரத்தின் பின் உள்ள கதையைக் கேட்டறிந்து ஆச்சரியப்பட்ட அந்தச் சகோதரி அதை அவரிடமிருந்து வாங்கித் தன் கையில் அணிந்து கொண்டார். அதைப் பார்த்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தச் சகோதரியின் கை விரலில் இருந்த மோதிரத்தோடு அவர் கையை மடக்கிச் சிறிது நேரம் வைத்து விட்டுக் கையை விரித்துப் பார்க்கச் சொன்னார். இப்போது அந்த மோதிரத்தில் மூன்று சிறிய வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அது பொற்கொல்லரால் மட்டுமே பதிக்க முடிந்த வேலைப்பாடாக இருந்தது. அவர்கள் அனைவரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.

இப்படி அற்புதத்திற்கு மேல் அற்புதங்களை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் நிகழ்த்தினாலும் கர்னல் ஓல்காட்டின் மனதில் சிறிய மனத்தாங்கல் இருக்கவே செய்தது. இந்த அற்புதங்களால் உலகத்திற்கு என்ன பயன்? ஆன்மிகத்திற்கு என்ன உயர்வு? என்ற கேள்விகள் அவர் மனதில் எழுந்தன. தியோசபிகல் சொசைட்டி என்ற அமைப்பை அவர்கள் ஆரம்பித்து சில காலமாகி விட்டது. இப்போதும் ஆன்மிக விஷயங்களை அவ்வப்போது அவர்கள் அலசுகிறார்கள், ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மாஸ்டர்ஸ் அல்லது மகாத்மாக்கள் என்றழைக்கப்படும் உயர்சக்தி மனிதர்களை அவ்வப்போது தொடர்பு கொள்வதாகச் சொல்கிறார் என்றாலும் அவர்கள் அந்த அமைப்பை ஆரம்பித்த நோக்கத்திற்கு ஏற்ற மாதிரி பெரிதாய் எதுவும் செய்யவில்லை. அவர் மனக்குறையை நிறைவு செய்கிற மாதிரி ஒரு அற்புத நிகழ்வு சில நாட்களிலேயே நடைபெற்றது.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 07.05.2019


2 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. அருமை...இந்த தொடர்களை படித்து வரும் போது எனக்கும் அதே தோன்றியது... "இந்த மேஜிக் விசயங்களால் என்ன நன்மை உள்ளது?"

    ReplyDelete