சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 31, 2018

இருவேறு உலகம் 85


வன் யாரையாவது கொன்னுட்டானா என்ன?சாதுவின் கேள்வி செந்தில்நாதனின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது.

தெரியலை சந்தேகம் இருக்கிறது

“அப்படி அவன் கொன்னிருந்தால் கூட நீங்க யாரும் அவனைப் பிடிக்க முடியாது. தடயம் கூட இருக்காது. அவன் நினைத்தால் உங்களையே கூடத் தடயம் இல்லாமல் கொன்னுடுவான்......

சாது சொன்னது உண்மையானால் எதிரி சட்டம் தொட முடியாத பயங்கரவாதி என்றாகிறது. அது போன்ற சட்டம் தொட முடியாத ஆட்களை செந்தில்நாதனால் சகிக்க முடிந்ததில்லை. சாது கையை நீட்ட இன்னொரு பொட்டலத்தை செந்தில்நாதன் சாது கையில் கொடுத்தார். இன்னும் ஒரு சிறு பொட்டலம் செந்தில்நாதன் கையில் மிஞ்சி இருப்பதைக் கவனித்த சாது “உங்களுக்கு அவன் படித்த புத்தகம் வேணுமா?என்று கேட்டார்.

‘என்ன புத்தகம்?

“அவன் டெல்லி போய் வந்த போது ஒரு புத்தகம் கொண்டு வந்து இடையிடையே படித்தான் என்று சொன்னேனே அந்தப் புத்தகம்..... அவன் போகும் போது விட்டு விட்டுப் போய் விட்டான்..... அது என்னிடம் தான் இருக்கிறது. வேண்டுமானால் தருகிறேன்...என்று சொன்ன சாது செந்தில் நாதன் கையில் இருந்த அந்த இன்னொரு பொட்டலத்தை அர்த்தத்துடன் பார்த்தார்.  செந்தில்நாதன் சரியெனத் தலையசைத்தார்.

“இருங்கள். வந்து விடுகிறேன்என்ற சாது உடனடியாக வேகமாக எழுந்து போனார். அது வரை மிகவும் சோம்பலாக அமர்ந்து கொண்டிருந்த இந்த மனிதனால் இவ்வளவு வேகமாகவும் நடக்க முடிகிறது ஆச்சரியம் தான் என்று செந்தில்நாதன் நினைத்துக் கொண்டார்.

ஐந்து நிமிடங்களில் அந்த சாது திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு வெளிறிப்போன ஒரு தடிமனான புத்தகம் இருந்தது. Mind Programming by Stephen Thomson என்று எழுதியிருந்தது. புத்தகம் தண்ணீரில் பல முறை நனைந்து காய்ந்தது போலத் தோன்றியது. அந்தப் புத்தகத்தைத் தருவதற்கு முன் சாது அந்த மூன்றாவது பொட்டலத்தையும் வாங்கிக் கொண்டார்.

செந்தில்நாதன் விடை தெரிந்தும் கடமையாக ஒரு கேள்வியைக் கேட்டார். “அந்த ஆளை மறுபடி எப்போதாவது பார்த்தீர்களா?

சாது சொன்னார். “இல்லை....


மாஸ்டர் க்ரிஷிடம் அடுத்து சில பயிற்சிகளைச் சொல்லித்தந்திருந்தார். அடுத்து அவன்  கற்றுத் தேற வேண்டிய பாடத்தையும் சொல்லித் தந்திருந்தார். எல்லா நேரங்களிலேயும் இறைசக்தியின் அங்கம் என்கிற அந்தத் தெளிவான உணர்வுநிலையைத் தக்க வைத்துக் கொள்வது தான் முதல்நிலை, முதல் பாடம்இனி அந்த மேலான உணர்வுநிலையோடு உன் மனதில் எழும் ஒவ்வொரு எண்ணத்தையும் பரிசீலித்து சரியாக இருந்தால் அனுமதிக்கவும், தவறாக இருந்தால் அந்தப் புரிதலோடு பொய்யென விலக்கவும் வேண்டும். இதில் ஆராயாமல் எதையும் அடக்கவோ, உள்ளே அமுக்கிக் கொள்ளவோ கூடாது,   அப்படி எதையும் அடக்கி உள்ளே அழுத்தி வைப்பது வீண். மேற்பார்வைக்குத் தெரியா விட்டாலும் அடக்கி வைக்கப்பட்டது தன் சமயத்திற்காக, தகுந்த சந்தர்ப்பத்திற்காக எப்போதுமே காத்துக் கொண்டிருக்கும். எதுவும் புரிந்து தெளியாமல் உன்னிடமிருந்து விலகி விடுவதில்லை…. மனம் உனக்கு உதவும் நண்பனாக இருக்க வேண்டும். அது உன்னை வலிமையாக்குபவற்றையும், சரியாக வழிநடத்துவதையும்  மட்டுமே எடுத்துக் கொண்டு மாறானவற்றை எல்லாம் தவிர்த்து விலக்கி வாழும் போது மட்டுமே சாத்தியம். மனம் பகைமையானால் வீழ்ச்சி நிச்சயம்….”  

ஆரம்பத்திலிருந்தே சுதந்திரமாக இருந்து பழகிய மனதுக்கு இப்போது கண்காணிப்பின் கீழ் வருவது சிறிதும் பிடிக்கவில்லை. அது பலவிதங்களில் முரண்டு பிடித்து தன் அதிருப்தியை க்ரிஷுக்குத் தெரிவித்தது. இப்படி மனதோடு மல்லுக்கட்டி நிற்கும் போது தான் செந்தில்நாதன் போன் செய்து சாது மூலம் கிடைத்த தகவல்களைத் தெரிவித்தார். எதிரியின் பல பரிமாணங்கள் க்ரிஷை வியக்க வைத்தது. ‘இவன் விட்டு வைக்காதது எதாவது இருக்கிறதா? என்று திகைத்தான்.

ஸ்டீபன் தாம்சன் எழுதிய Mind Programming  நூலை அவனும் படித்திருக்கிறான். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனோதத்துவ அறிஞர் அவர். அமானுஷ்ய சக்திகளில் இருந்து ஆழ்மன ப்ரோகிராமிங் பற்றிப் படிக்க எதிரி முற்பட்டதன் ரகசியம் அவனுக்கு விளங்கவில்லை. இது வரை அவன் எதிரியைப் பற்றிக் கேள்விப்பட்டதில் ஒரு விஷயத்தை அவன் தெளிவாகவே கவனித்திருக்கிறான். எதிரி எதையும் சும்மா செய்வது கிடையாது. சும்மா என்ற சொல்லே அவன் வாழ்க்கையில் இருந்திருக்க முடியாது என்றே தோன்றியது. அப்படி இருக்கையில் நோக்கு வர்மம் படிக்கையில் இடையில் அந்த அறிஞரை எதிரி ஏன் பார்த்து விட்டு வரவேண்டும்.

ஸ்டீபன் தாம்சன் இந்தியா வந்தது பற்றி கூகுளில் தேடினான். ஐந்து வருடங்களுக்கு முன்பு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை அவர் இந்தியாவில் கொண்டாடி இருக்கிறார். டில்லி, ஆக்ரா, மதுரா, ஹரித்வார், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், உதய்ப்பூர் நகரங்களில் சுற்றுலா சென்றிருக்கிறார். சரியாகப் பதிமூன்று நாட்கள் இந்தியாவில் அவர் இருந்திருக்கிறார். இப்போதும் அவர் புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்று பிரபலமாக உள்ளன. அவரிடம் எதிரி ஏதோ கற்றிருக்கிறான்…… அது என்ன?

க்ரிஷ் இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கையில் செந்தில்நாதன் உதயிடம் எதிரியின் நோக்குவர்மம் குறித்தும், ராஜதுரை மரணத்தில் தனக்கெழுந்த சந்தேகத்தைக் குறித்தும் தெரிவித்து யோசிக்கச் சொன்னார். அவர் எதிரி பற்றி மவுண்ட் அபு, தார்ப்பாலைவனம் ஆகியவற்றில் கிடைத்த செய்திகளை உதயிடம் தெரிவித்திருக்கவில்லை. க்ரிஷிடம் மட்டும் தான் சொல்லி இருந்தார். இந்த நோக்குவர்ம சமாச்சாரம் மட்டும் தமிழக அரசியல் சம்பந்தமானதாக இருந்ததால் உதய் காதில் போட்டு வைப்பது நல்லது என்று நினைத்து தான் சொன்னார்.

உதய் தம்பியளவு பலதுறைகளில் சிறந்தவன் அல்ல என்றாலும் அரசியலில் அவன் கூர்மையான அறிவு படைத்தவனாகவே இருந்தான். தந்தையைப் போல அவன் ’செண்டிமெண்ட்’ ஆள் அல்ல. அவனுடைய எல்லா ‘செண்டிமெண்டும்’ குடும்பத்தை விட்டு வெளியே சென்றதில்லை. ராஜதுரையின் மரணத்திற்குப் பிறகு மிக வேகமாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகள் அவனை திகைக்க வைத்திருந்தன. அத்தனை குறுகிய காலத்தில் மாணிக்கம் அத்தனை கோடிகளை வாரியிரைத்து எம்.எல்.ஏக்களை வாங்கிய விதம் அவசரமாக ஒருவன் தீர்மானித்துச் செய்ய முடிந்ததல்ல. முதல்வர் எதிர்பாராமல் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட பின் சுதாரித்துக் கொண்டு செயல்பட்ட மாதிரித் தெரியவில்லை. முதல்வர் சாவார் என்பதை முன்கூட்டியே அறிந்து தயாராக இருந்தவர் செயல்பட்டது போலத் தான் இருந்தது. ஆஸ்பத்திரியில் மாணிக்கம் இருக்கையில் அவரது மாமன் தீவிரமாக வெளியில் செயல்பட்டது பற்றிப் பின் அவனுக்குத் தெரிய வந்திருந்தது. இப்போது செந்தில்நாதன் சொன்னதை யோசிக்கையில் ஒரு மிகப்பெரிய சதியே என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.

உடனே தம்பியின் அறைக்குப் போய்ச் சொன்னான். “டேய் உண்மையைச் சொல்லு. என்ன நடக்குது. எதிரி எமகாதகனாய் இருப்பான் போல் இருக்கு. உன் ஆராய்ச்சி சம்பந்தமானதாய் மட்டும் இருந்திருந்தா நான் எதுவும் கேட்டிருக்க மாட்டேன். இப்ப பிரச்னை உனக்கு, நம்ம குடும்பத்துக்கு, நம்ம அரசியலுக்குன்னு எல்லா இடத்துலயும் நுழைய ஆரம்பிச்சிருக்கேடா…”

அண்ணனிடம் என்ன சொல்வது என்று க்ரிஷ் யோசித்தான். உதய் தம்பியிடம் கறாராய் சொன்னான். “பொய் சொன்னா கொன்னுடுவேன் ஜாக்கிரதை…”

க்ரிஷ் சொன்னான். “உன் கிட்ட உண்மை சொல்ல எனக்கொன்னும் பிரச்னை இல்லை. ஆனா கேட்டா உனக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும். பரவாயில்லையா?”

தம்பி தெளிவாகப் பேசும் போதே பல சமயங்களில் அவர்களுக்குப் பைத்தியம் பிடிப்பது போலத் தான் இருக்கும். அதனாலேயே உதய் அவனிடம் சில கேள்விகள் கேட்பதைத் தவிர்த்து வந்தான். இப்போது அவனே பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும் என்றால் நிஜமாகவே தலை சுத்த வைக்கிற ஆராய்ச்சியாகத் தான் இருக்கும் என்பதை உதய்க்குப் புரிந்தது. “எனக்கு எதிரி பற்றி மட்டும் உனக்குத் தெரிஞ்சது எல்லாத்தையும் சொல்லு போதும்” என்றான்.

க்ரிஷ் வேற்றுக்கிரகவாசி சம்பந்தமாக எதையும் சொல்லி விடாமல் எதிரி சம்பந்தமாகத் தெரிய வந்த அனைத்தையும் விவரமாகச் சொன்னான். “அவன் அமானுஷ்ய சக்திகளில் அற்புதமான தேர்ச்சி பெற்றவன் என்று முதலிலேயே எனக்குத் தகவல் கிடைத்தது. வேறு எதுவும் தெரியவில்லை. அதனால் தான் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள செந்தில்நாதன் சாரை அனுப்பினோம்…….” என்று ஆரம்பித்து அவர் மூலம் அவனைப் பற்றித் தெரிய வந்த எல்லாத் தகவல்களையும் சொன்னான்.

சதானந்தகிரி, பக்கிரி, சாது மூவரும் சொன்ன தகவல்களைக் கேட்டு உதய்க்குத் தலைசுற்றியது. சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்…..?”

“அமெரிக்காவில் இருக்கும் ஸ்டீபன் தாம்சனிடம் பேசணும். போனில் பேசறதை விட நேரில் போகறது தான் நல்லதுன்னு தோணுது…..”

உதய் சிறிது யோசித்து விட்டுத் தீர்மானமாகச் சொன்னான். “செந்தில்நாதன் அரசாங்க அனுமதி இல்லாமல் அமெரிக்கா போக முடியாது. அனுமதி கேட்டா மாணிக்கம் கோஷ்டி காரணத்தைக் கண்டுபிடிச்சுட வாய்ப்பு இருக்கு. அதனால நீயே போறது நல்லதுன்னு தோணுது…..”

(தொடரும்)
என்.கணேசன்





Wednesday, May 30, 2018

உண்டு இல்லை என்னும் புதிரில் இறைவன்!



றைவன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வி வேதகாலங்களிலேயே  கேட்கப்பட்டிருக்கிறது. அக்காலங்களிலேயே நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. நாத்திக ரிஷிகளும் அக்காலத்தில் இருந்து தங்கள் தரப்பு வாதங்களை விவரித்திருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு வியாசரும் பகவத்கீதையில் பதிமூன்றாம் அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மூலம் மிக நுட்பமான பதிலைச் சொல்லியிருக்கிறார்:

எது அறியப்பட வேண்டியதோ, எதை அறிவதால் அமிர்தம் பருகியது போல் இறவாநிலை அடைய முடியுமோ, அதை விளக்குகிறேன். அந்த ஆதியற்ற பரம்பொருளை உண்டு என்றோ இல்லை என்றோ கூற முடியாது.

ஆதியற்ற பரம்பொருளைச் சான்றுகள் மூலம் நிரூபிக்க முடியாது. அது ஆத்மார்த்தமாய் உள்ளுணர்வில் உணரும் விஷயம். நம்பிக்கை அற்றவர்கள் முன் எத்தனை வாதங்கள் வைத்தாலும் அவர்கள் அவற்றில் நிச்சயமாய் சில குறைபாடுகளையும் பலவீனங்களையும் கூறுவார்கள். சான்றுகளால் எட்ட முடியாத இறைவனை இல்லை என்பதையும் சான்றுகளால் நிரூபிக்க முடியாது. எந்தப் பரம்பொருளால், எந்த மகாசக்தியால் இந்தப் பிரபஞ்சம் இயங்கி வருகிறதோ அதை இல்லவே இல்லை என்று சொல்லவும் சான்றுகளும் வாதங்களும் போதாது. அனைத்தையும் இயக்கும் ஒரு சக்தியை மறுக்கவோ, மறுத்த பின் எப்படி பிரபஞ்சம் இயங்குகிறது என்பதை விளக்கவோ அவர்களாலும் முடியாது. அதனால் அவரவர் புரிதலின்படியும், விருப்பத்தின்படியும் முடிவில் அவரவர் உண்டு அல்லது என்ற நிலைப்பாட்டில் நிற்கலாமே ஒழிய சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதியாய் விளக்கி மற்றவர்களுக்குத் தெளிய வைப்பது அறிவுக்கு முடிந்த வேலை இல்லை.

விரலால் நிலவைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் நிலவு விரல் நுனியில் இல்லை. கையால் எட்டும் தூரத்திலும் இல்லை. விரல் நுனியிலிருந்து வானில் மின்னிக் கொண்டிருக்கும் நிலவிற்குப் பார்வையைத் திருப்ப வேண்டுமல்லவா? அப்படி இறைவன் இருப்பதை ஒருவன் குறிப்பால் உணர்த்தலாம். குறிப்பால் உணர்த்தியதை வார்த்தைகளிலேயே நின்று கொண்டிருப்பவனால் உணர முடியாது. ஏனென்றால் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். விரல்நுனியிலிருந்து நிலவிற்கு உள்ள தூரமும், வார்த்தைகளிலிருந்து இறைவனுக்கு இருக்கும் தூரமும் மிக மிக அதிகம் அல்லவா?

அதனால் தான் மகாநிர்வாணம் அடைந்து அனைத்து ஞானத்தையும் பெற்ற கௌதமபுத்தரும் அந்தக் கேள்விக்கு விடை சொல்ல மறுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். வீண் விவாதங்களில் அவர் ஈடுபட விரும்பவில்லை போல் இருக்கிறது.

ஏனிந்த சிக்கல் என்பதை அடுத்து ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

அது எல்லா இடங்களிலும், கைகளும், கால்களும், கண்களும், தலைகளும், முகங்களும், காதுகளும் உடையது.. அது உலகம் அனைத்திலும் வியாபித்து இருக்கிறது. புலன்கள் இல்லாமலேயே புலன்நுகர்ப் பொருட்களை அறிவது. .எதையும் சார்ந்து நிற்காமல் எல்லாவற்றையும் தாங்கக் கூடியது. குணங்கள் இல்லாமலேயே குணங்களை அனுபவிப்பது.
         
பரம்பொருளுக்கு எங்கும் கண்கள் உண்டு. அவர் பார்க்க முடியாத இடம் இல்லை. எங்கும் காதுகள் உண்டு.  யார் எங்கிருந்து பிரார்த்தித்தாலும் அவருக்குக் கேட்கும். தோற்றமே இல்லாமல் இருந்தும் எங்கும் அது வியாபித்திருக்கிறது. புலன்கள் இல்லாமல் அனைத்தையும் புலன்கள் இருந்தால் எப்படி அறிய முடியுமோ அப்படி அது அறிகிறது. அதையும் சார்ந்து இல்லை ஆனால் எல்லாவற்றையும் தாங்கி நிற்கிறது. குணங்கள் இல்லாமல் குணங்களை அனுபவிக்கிறது.

யோசிக்கையில் இது என்ன முரண்பாடு என்று தோன்றுகிறதல்லவா? கண்களும், காதுகளும் எப்படி எல்லா இடங்களிலும் இருக்க முடியும்? புலன்கள் இல்லாமல் அதன்வழி விஷயங்களை எப்படி அறிய முடியும்? இதை எல்லாம் அறிவு ஒத்துக் கொள்ள மறுக்கிறதல்லவா?

ஆனால் விஞ்ஞானம் இதை உண்மை என்று ஒத்துக் கொண்டிருக்கிறது. மரணம் வரை சென்று இறந்து விட்டதாக மருத்துவர்கள் கருதி மறுபடியும் உயிர் பிழைத்த மனிதர்களின் மரண விளிம்பு அனுபவங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அந்த இறந்து பிழைத்த சில நிமிடங்களில் அவர்கள் எல்லாம் காணவும், கேட்கவும் முடிந்திருப்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்னவென்றால் அவர்களில் சிலர் பிறவிக் குருடர்கள். வாழ்ந்த நாட்களில் கூட எதையும் காண முடியாதவர்கள். அவர்களுக்கு உடலை விட்டுப் பிரியும் நேரத்தில் புலன்கள் இல்லாமலேயே அனைத்தையும் அறிய முடிந்திருக்கிறது. (இந்த ஆராய்ச்சிகளை விரிவாக ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலில் எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் அதைப் படிக்கலாம்)

சார்ந்திராமல் தாங்கக் கூடியது என்பது சாதாரண விஷயமல்ல. அது மனிதர்களுக்குச் சுலபமாய் முடியாதது. பெற்றோர் ஒரு காலத்தில் பிள்ளைகளைத் தாங்குகிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பிள்ளைகளைச் சார்ந்திருக்க வேண்டி வருகிறது. எல்லாவற்றையும் தாங்கி இருந்தும் எதையுமே சார்ந்திராமல் இருப்பது அந்தப் பரம்பொருள் ஒன்றுக்கே சாத்தியம். அந்த விசேஷ குணத்தையும் இங்கே கீதை சுட்டிக் காட்டுகிறது.

ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து கூறுகிறார்.
அது எல்லா உயிர்களின் உள்ளும், புறமும் நிறைந்திருக்கிறது. அசைவன, அசையாதவற்றின் வடிவிலும் அதுவே உள்ளது. மிக நுட்பமாக இருப்பதால் அறிய முடியாதது. மிக அருகிலும் மிக தூரத்திலும் இருப்பது அதுவே.

அறிய வேண்டியதான அந்தப் பரப்பிரம்மம் பிரிவுபடாமல் இருந்தாலும் உயிர்கள் அனைத்திலும் பிரிந்திருப்பது போலத் தோன்றுகிறது. அது உயிர்களைப் பாதுகாக்கிறது. அதுவே அழிக்கவும் செய்கிறது. அதுவே படைக்கவும் செய்கிறது.

உள்ளும் புறமும் நிறைந்திருப்பது என்பதற்கு கடலின் அலைகளையும்,  பனிக்கட்டியையும் உதாரணமாகச் சொல்லலாம். அலைக்கு உள்ளேயும், வெளியேயும் இருப்பது கடலே அல்லவா? அதே போல பனிக்கட்டிக்கு உள்ளேயும், வெளியேயும் இருப்பது கடல்நீரே அல்லவா?

அடுத்ததாக பரம்பொருள் மிகமிக நுட்பமானது. நுட்பமான பொருள்களை நாம் புறக்கண்களால் காண முடிவதில்லை. செல்கள், பாக்டீரியாக்கள் ஆகியவை எல்லாம் விஞ்ஞானக்கருவிகள் மூலமாகவே நம்மால் பார்க்க முடிகிறது. அப்படி இருக்கையில் நுட்பத்தில் நுட்பமான பரம் பொருளை புறக்கண்களால் நாம் காண முடியுமா? பாக்டீரியாக்களைக் காண சக்தி வாய்ந்த விசேஷக் கருவிகள் தேவைப்படுவது போல பரம்பொருளைக் காண ஞானம் மிக்க இதயம் தேவைப்படுகிறது. எல்லா இடங்களிலும் இருப்பதால் பரம்பொருள் மிக மிக அருகில் இருப்பதும், மிக மிகத் தொலைவில் இருப்பதும் சாத்தியமாகிறது. இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் நம்பிக்கை இருப்பவர்க்கு பரம்பொருள் மிகமிக அருகில் இருக்கிறது. அதனால் உணர முடிகிறது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வெகுதொலைவில் இருக்கிறது அதனால் அதை உணர முடியாமல் போவதால் அது இல்லவே இல்லை என்று சாதிக்கிறார்கள். அந்த வகையிலும் இரண்டும் உண்மையே.

பிரிந்திருப்பது போலத் தோன்றினாலும் பிரிந்திராத தன்மை பரம்பொருளின் இன்னொரு தனித்தன்மை. உதாரணத்திற்கு வெற்றிடத்தைச் சொல்லலாம். மண்பாத்திரங்கள் பல இருந்தாலும், தனித்தனியாக பாத்திரங்களின் உள்ளே வெற்றிடம் இருந்தாலும் மண்பாத்திரங்கள் உடையும் போது மீண்டும் வியாபித்திருப்பது வெற்றிடமே அல்லவா? மண்பாண்டத்தில் இருந்து பேரண்டம் வரை அதுவே நிறைந்திருக்கிறதல்லவா? அந்தப் பரம்பொருள் காக்கிறது, அழிக்கிறது, மீண்டும் படைக்கிறது, காக்கிறது….. இப்படியாக பிரபஞ்சம் இயங்குகிறது.

அந்தப் பரப்பிரம்மம் ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது. மாயைக்கு அப்பாற்பட்டது. அறியப்பட வேண்டியதும், தத்துவ ஞானத்தினால் அடையத் தக்கதும் அதுவே. எலோருடைய இதயத்திலும் அதுவே விசேஷமாக இருக்கிறது.

அப்படிப்பட்ட இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவன். விளக்கு, சந்திரன், சூரியன், மின்னல் என்று ஒளியைத் தருகிற அத்தனைக்கும் ஒளியைத் தருவது அந்தப் பரம்பொருளே. நாம் அறிய வேண்டியதும் அந்தப் பரம்பொருளையே. அதை அறிந்த பின் வேறெதையும் அறிய வேண்டியதில்லை. ஏனென்றால் பரம்பொருளை அறிந்தால் மற்றவை எல்லாம் தானாக விளங்கி விடும். அந்த அறிய வேண்டிய பரம்பொருளை எங்கே காண்பது என்கிறீர்களா? அதைக் காண அங்குமிங்கும் அலைய வேண்டாம். அது உங்கள் இதயத்தில், ஆழத்திலும் ஆழத்தில், விசேஷமாக வீற்றிருக்கிறது. இதயத்தின் உள்ளே போங்கள். அந்த விசேஷப் பரம்பொருளைக் கண்டிப்பாகக் காண்பீர்கள்.

பாதை நீளும்…..

என்.கணேசன்

Monday, May 28, 2018

சத்ரபதி – 22


பீஜாப்பூரில் பசு மாமிசம் விற்பதும், பசு வெட்டும் கிடங்குகளும் நகர எல்லைக்கு அப்பால் போனது ஷாஹாஜியின் இளைய மகனால் தான் என்று பலராலும் பேசப்பட்டது. பலர் அவனைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அரசவைக்கு சிவாஜி தந்தையுடன் அடிக்கடி வர ஆரம்பித்தான். அவன் வந்த நாட்களில் தினம் ஒரு விஷயம் அங்கு புதிதாக அலசப்பட்டது. சிவாஜியின் அறிவு கூர்மையிலும், வாக்கு சாதுரியத்திலும் ஆதில்ஷாவும் மற்ற பிரபுக்களும் கவரப்பட்டார்கள். இதைக் கண்ட  சிலர் பொறாமையால் வெந்தார்கள்.

புதிய சில நண்பர்கள் பீஜாப்பூரில் சிவாஜிக்குக் கிடைத்தார்கள். ஒருநாள் அவர்களுடன் சேர்ந்து அவன் சென்று வருகையில் நகர எல்லை வாசலில் ஒரு கசாப்புக்காரன் பசு மாமிசம் விற்றுக் கொண்டிருந்தான். நகர எல்லைக்கு வெளியே போய் பசு மாமிசம் வாங்கி வரச் சோம்பல் கொண்ட ஒருசில பீஜாப்பூர்வாசிகள் அவனிடம் அதை வாங்கிக் கொண்டிருந்தார்கள். குதிரையில் வந்து கொண்டிருந்த சிவாஜிக்கு இதைக் கண்டதும் ரத்தம் கொதித்தது.  மின்னல் வேகத்தில் அந்தக் கசாப்புக்காரன் மீது சிவாஜி பாய்ந்தான். ஒரு கணத்தில் கசாப்புக்காரனின் தலை உடலை விட்டுப் பறந்தது. எல்லோரும் சிலையாய் சமைந்து திகைப்புடன் பார்க்க கசாப்புக்காரன் மனைவி ஓவென்று கூக்குரலிட்டு அழ ஆரம்பித்தாள். கூட்டம் கூடியது. சிலர் அவளை சுல்தானிடம் சென்று நியாயம் கேட்டு முறையிடச் சொன்னார்கள். அவளும் ஆவேசத்துடன் சென்று அரசவையில் அழுது முறையிட்டாள்.

ஷாஹாஜி அதிர்ச்சியில் உறைந்து போனார். மற்ற நேரங்களில் பண்பின் சிகரமாகவும், சாமர்த்தியத்தின் அடையாளமாகவும் இருக்கும் அவருடைய இளைய மகன் இந்தப் பசு விஷயத்தில் மட்டும் இப்படி கட்டுப்பாடில்லாத எரிமலையாகி விடுகிறானே என்ற ஆதங்கம் அவர் இதயத்தை அரித்தது. இப்போது சுல்தானிற்கு அவர் என்ன பதில் சொல்ல முடியும்?

நல்ல வேளையாக மீர் ஜும்லா இந்த முறையும் சிவாஜியைக் காப்பாற்ற முன் வந்தார். அவர் கசாப்புக்காரனின் மனைவியைக் கேட்டார். “அம்மணி, அரசர் நகர எல்லைக்கு உள்ளே பசு மாமிசம் விற்பதைத் தடை செய்துள்ள செய்தியை நீயும், உன் கணவனும் அறிவீர்களா?”

கசாப்புக்காரன் மனைவி குற்றச்சாட்டு தங்கள் மேல் விழுவது கண்டு விழித்தபடி அறிவோம் என்ற பாவனையில் தலையசைத்தாள். மீர் ஜும்லா கேட்டார். “அப்படி இருக்கையில் மன்னரின் ஆணையை மீறி நகர எல்லை வாசலிலேயே நீங்கள் கடை விரிக்கக் காரணம் என்ன?”{

அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  ஷாஹாஜி அரசவைக்கு உள்ளே இருந்தாலும் அவர் மனம் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் தங்காமல் சிவாஜியின் அடக்க முடியாத சினம் குறித்த ஆதங்கத்திலேயே தங்கியிருந்தது. ஆதில் ஷா சிவாஜிக்குச் சாதகமாகவே தீர்ப்பு கூறி அந்தப் பெண்மணிக்கு கணவனின் அந்திமச் செலவுக்காக ஒரு தொகையைக் கருணை அடிப்படையில் தருவதாகவும், இனி இது போல் ஆணையை மீறுபவர்களுக்கும் கடும் தண்டனையே வழங்கப்படும் என்று எச்சரித்து அனுப்பியது தூரத்து நிகழ்வாக மனதில் பதிந்தது.

இல்லத்திற்கு வந்தவுடன் ஜீஜாபாய் முன்னிலையில் சிவாஜிக்கு நிறைய புத்திமதி சொன்னார். “… … மகனே மதங்கொண்ட யானையை அடக்குவதை விட மனதில் பொங்கி எழும் சினத்தை அடக்குவது மேலானது. வீரத்தினால் பெறும் மேன்மையைக் கோபத்தினால் ஒருவன் களைந்து விடக்கூடாது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவன் மற்றவர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதியை இழந்தவனாகிறான். நீ மற்ற நேரங்களில் காட்டும் பக்குவத்திலும், அறிவுக்கூர்மையிலும் ஒரு சிறு பங்கைக் கூட கடுங்கோபத்தில் இருக்கையில் காட்டுவதில்லை. மீர் ஜும்லா உன்னை இரண்டு முறை பெருந்தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். ஆனால் இனியொரு தடவை இப்படி நீ காப்பாற்றப்பட வாய்ப்பேயில்லை. இப்போதே உன் மேல் பலரும் பொறாமை கொண்டிருக்கிறார்கள். சுல்தான் தன்னை வணங்கவும் மறுத்த ஒரு சிறுவனுக்கு ஆதரவான முடிவுகளை எடுக்கிறார் என்று சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அது அவர் காதுகளைக் கண்டிப்பாக எட்டும். அவரை மாற்றவும் கூடும். அரசர்கள் நிலையான புத்தியுடையவர்கள் அல்ல. என்னேரமும் மாறக்கூடியவர்கள். இதை என் வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் உணர்ந்திருக்கிறேன். தந்தை என்ற ஸ்தானத்திற்கு நீ மதிப்பு கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை மகனே, வயதில் மூத்தவன், வாழ்க்கையை நிறையப் பார்த்தவன் என்பதற்காகவாவது என் பேச்சைக் கேள். உன் இந்தக் கடுங்கோபம் உன்னைப் புதைகுழியில் அழுத்தி முடித்து விட நீ அனுமதிக்கக் கூடாது…..”

ஜீஜாபாயும் கடுமையாகவே மகனைக் கண்டித்துப் பேசினாள். “ஒரு சபையில் உன் தந்தை உன்னால் முகம் கவிழ்வது உனக்குப் பெருமையல்ல சிவாஜி. எத்தனையோ நேரங்களில் எங்களை நீ பெருமிதப்படுத்தி இருக்கிறாய். ஆனால் இந்த விஷயத்தில் நீ நடந்து கொண்ட முறையில் உன் தந்தை மட்டுமல்ல, நானும் தலைக்குனிவையே உணர்கிறேன். இந்தப் பசுவதை விவகாரத்தில் உன் வயதிற்கும் மீறிய மதிப்பு கொடுத்து சுல்தான் ஒரு சாதகமான ஆணையைப் பிறப்பித்திருக்கிறார். அப்படியிருக்கையில் அந்தக் காட்சியைக் கண்ட நீ சுல்தானிடம் தெரிவித்திருந்தால் அரண்மனை வீரர்கள் அங்கிருந்து அந்தக் கசாப்புக்காரனை அப்புறப்படுத்தியிருப்பார்கள். அதை விடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டு நீ சாதித்தது தான் என்ன? யோசித்துப் பார் சிவாஜி…. எதற்குமே ஒரு எல்லையுண்டு. எல்லையைத் தாண்டியும் ஓடுபவர்கள் வீழ்ச்சியையே அடைகிறார்கள்…. இரண்டு வீரவம்சங்களின் வழித்தோன்றல் நீ. உன்னை வைத்து உன் தாய் நிறைய கனவுகள் கண்டிருக்கிறேன் மகனே. எத்தனையோ துர்ப்பாக்கியங்களைப் பார்த்த எனக்கு உன் வீழ்ச்சியைக் காணும் துர்ப்பாக்கியத்தையும் தயவு செய்து ஏற்படுத்தி விடாதே!”     

சிவாஜி பெற்றோர் முன் மண்டியிட்டுச் சொன்னான். “உங்களைப் புண்படுத்தியதற்கும், மனமுடைந்து இப்படி அறிவுரை சொல்லும் சூழலை ஏற்படுத்தியதற்கும் என்னை மன்னித்து விடுங்கள் பெற்றோரே. இந்த மண்ணின் பெருமையைக் கேட்டு வளர்ந்தவன் நான். கேட்டு வளர்ந்த புனிதங்களைப் போற்றி வாழ்பவன் நான். பசுவை நான் புனிதமாகவே எண்ணி வணங்குவது என் இரத்தத்தில் கலந்து விட்டது. எல்லாச் செயல்களையும் சிந்தித்துச் செய்ய நேரம் எடுத்துக் கொள்ளும் நான் புனிதங்களின் அவமதிப்பைக் காண்கையில் இரத்தம் கொதித்து அனிச்சையாகவே செயல்பட ஆரம்பித்து விடுகிறேன். அதைப் பொறுத்துக் கொண்டு போவதை விட தடுத்து மடிவது மேல் என்று என் அந்தராத்மா அலறுகிறது. இது அறிவீனமாகவே தங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இந்த அறிவீனத்தை நீக்க நானும் வகையறியாமலேயே நிற்கின்றேன். இதைப் பக்குவமாய் கையாள்வதற்கு நான் முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் எனக்கு அது சாத்தியமாகும் வரை இந்தச் சூழலிலிருந்து என்னைத் தயவுசெய்து விடுவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்”

இருவர் கால்களையும் தொட்டுத் தலை தாழ்த்தி வணங்கிவிட்டு சிவாஜி அங்கிருந்து சென்று விட்டான். ஷாஹாஜி ஜீஜாபாயைப் பார்த்தார். அவர் முகத்தில் தெரிந்த வேதனை ஜீஜாபாயை உருக்கியது. அவள் அவரிடம் மென்மையாகச் சொன்னாள். “இந்த ஒரு குறையைத் தவிர நம் பிள்ளையிடம் வேறு பெரிய குறைகள் இல்லை. அவன் வயதினரை விட எத்தனையோ விஷயங்களில் மிக உயர்ந்தே இருக்கிறான். இவனைப் பெற்றவளாக நான் பெருமை பேசவில்லை. கூர்ந்து உலகத்தைக் கவனித்து வருபவளாகச் சொல்கிறேன். அப்படிப்பட்டவன் இவ்வளவு ஆழமாக சிலவற்றை உணர்வதையும் என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அத்தனையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தவள் நான் தான்.  அதனால் அவனுக்கு முன் என்னையே நான் குற்றப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் சொல்வது போல காலம் அவனைப் பக்குவப்படுத்தும் வரை இந்தச் சூழலிலிருந்து அவன் தள்ளிப் போவதே நல்லது என்று எனக்கும் தோன்றுகிறது”

ஷாஹாஜி சொன்னார். “சூழல்களில் இருந்து ஒருவனைத் தள்ளி வைப்பது வாழ்க்கையின் நிஜத்திலிருந்தே தள்ளி வைப்பது போலத்தானே ஜீஜா. அவன் தன் வாழ்க்கையின் போக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. சாம்பாஜி பீஜாப்பூரின் படைப்பிரிவில் சேர்ந்து விட்டான். இவனும் ஏதாவது முடிவெடுத்தே ஆக வேண்டும். சாம்பாஜியைக் காட்டிலும் பல விதங்களில் இவன் ஒருபடி மேலாகவே இருக்கிறான். அதனால் இவன் வீரத்திற்கும், அறிவுக்கும் முகலாயப் படையில் கூட நல்ல வரவேற்பிருக்கும். அங்கு செல்வத்திற்கும், செல்வாக்குக்கும் கூட எந்தக் குறையுமிருக்காது…..”

ஜீஜாபாய் கவலையுடன் சொன்னாள். “ஆனால் அங்கும் சூழல் இது தானே!”

ஷாஹாஜி சொன்னார். “ஆமாம். சொல்லப் போனால் இதை விட மோசம். இங்காவது இவன் கருத்தை மதித்துக் கேட்கும் மனம் இருக்கிறது. ஆனால் அங்கு இது போன்ற கருத்துக்கள் புரட்சியாகப் பார்க்கப்படும். இங்கேயானதால் இவன் இன்று காப்பாற்றப்பட்டிருக்கிறான். அங்காக இருந்தால் இன்னேரம் சிரத்சேதம் உறுதியாகியிருக்கும்”

ஜீஜாபாய்க்கு எண்ணிப் பார்க்கவே மனம் பதறியது. ஷாஹாஜி தொடர்ந்து சொன்னார். “இப்போது அவன் கேட்டுக் கொண்டது போல மறுபடி பூனாவுக்கு அனுப்புவதில் பிரச்னை இல்லை ஜீஜா. ஆனால் நான் அவன் எதிர்காலத்தை யோசிக்கிறேன்.  அவன் ஏதோ ஒரு கனவுலகில் வசிப்பது போலத் தோன்றுகிறது. அது தான் என்னைப் பயமுறுத்துகிறது. அவன் கனவுகளிலிருந்து மீள வேண்டும்…. அது முக்கியம்….”

ஜீஜாபாய் சொல்ல முடியாத பல உணர்ச்சிகள் மனதில் எழ,  சாளரத்தின் வழியே தெரிந்த மூன்றாம் பிறை நிலவைப் பார்த்துக் கொண்டே குரல் கரகரக்கச் சொன்னாள். “நாம் தான் நம் கனவுகளைத் தொலைத்து விட்டோம். அவனிடமாவது அந்தக் கனவுகள் தங்கட்டும். அவனுக்காவது அவற்றை நிஜமாக்கும் பாக்கியம் வாய்க்கட்டும்”

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, May 24, 2018

இருவேறு உலகம் – 84



வர்கள் அந்த சாதுவை ஒரு அருவியின் அருகே கண்டுபிடித்தார்கள். தூரத்தே தெரிந்த பனிமூடிய மலை முகடுகளை அந்த சாது வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் வரும் சத்தம் கேட்டுத் திரும்பியவர் இருவரையும் கண்களைச் சுருக்கிப் பார்த்தார். குற்றவாளி அவரைத் தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரியாய் அறிமுகப்படுத்தினான். அந்த சாது உணர்ச்சியே இல்லாமல் செந்தில்நாதனைப் பார்த்தார். நீ எவனாக இருந்தால் எனக்கென்ன என்பது போல் இருந்தது அவரது தோரணை.

“இவர் உங்களிடம் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு சக்திகள் பற்றி கற்றுக் கொள்ள வந்த ஆளைப் பற்றி ஏதோ கேட்டுத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறார்” என்று அந்தக் குற்றவாளி சொன்னான். அப்போதும் அந்த சாது முகத்தில் எந்த மாற்றமுமில்லை. செந்தில்நாதன் அது போன்ற ஆட்களை நன்றாக அறிவார். அழுத்தமான ஆட்கள். அசராத ஆட்கள்……

அந்த சாதுக்கு எந்தப் போதை மருந்து மிகவும் பிடித்தமானது என்று கேட்டு அதை வாங்கி முன்பே சட்டைப் பையில் போட்டு வைத்திருந்த செந்தில்நாதன் அதைக் கையில் எடுத்து அந்த சாது பார்க்கும்படி வைத்துக் கொண்டார். அந்த சாது கண்களில் மின்னல் வெட்டிச் சென்றது. ஆனாலும் பெரிய ஆர்வத்தைக் காட்டி விடவில்லை.

அந்த சாது எதாவது சொல்வாரா என்று சிலநிமிடங்கள் பொறுத்துப் பார்த்த செந்தில்நாதன் அமைதியாக குற்றவாளியிடம் சொன்னார். “சரி வா. போகலாம்……..” சொன்னதோடு நிற்காமல் அங்கிருந்து அவர் கிளம்பியும் விட குற்றவாளி திகைப்புடன் இருவரையும் பார்த்து விட்டு செந்தில்நாதன் பின்னால் ஓடிச் சென்றான்.

அந்த சாது அமானுஷ்யமாய் ஒருவித கூக்குரல் எழுப்பினார். செந்தில்நாதன் திரும்பிப் பார்த்தார். அந்த சாது வருமாறு சைகை செய்தார். செந்தில்நாதன் மெல்லத் திரும்பி வந்தார். அந்த சாது அவரையும் நன்றாகப் புரிந்து கொண்ட மாதிரி இருந்தது.

“அவனைப் பற்றி என்னத் தெரிந்து கொள்ள வேண்டும்?” குரல் மிகவும் கரகரப்பாக இருந்தது.

“தெரிந்த எல்லாவற்றையும் சொல்லுங்கள். முக்கியமாக எதற்கு உங்க கிட்ட வந்தார்? என்ன எல்லாம் கத்துகிட்டார்? … ஆனா எல்லாத்துக்கும் முன்னாடி அவனுக்குக் கத்துக்குடுக்க உங்க கிட்ட என்ன இருந்தது. அதை எப்படி நீங்கள் கத்துகிட்டீங்கன்னு சொன்னால்  நல்லது……” செந்தில்நாதன் தூய்மையான ஹிந்தியில் கேட்டார்.

ஒரு கசப்பான தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது போல சாதுவின் முகம் மாறியது. மறுபடி தூரத்தில் தெரிந்த பனிமூடிய மலை முகட்டைப் பார்த்தார். அதைப் பார்த்தபடியே மெல்லச் சொல்ல ஆரம்பித்தார்.
                    
“பன்னிரண்டு வயதில் எங்கள் கிராமத்தில் மதம் பிடித்து ஓடிவந்த ஒரு யானையைத் தன் பார்வையிலேயே ஒரு சன்னியாசி ஸ்தம்பிக்க வைத்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் பிரமிப்புடன் அந்த சன்னியாசியிடம் அது எப்படி சாத்தியமானது என்று கேட்டேன். அப்போது அந்த சன்னியாசி சுருக்கமாகச் சொன்னார். “நோக்குவர்மம்” அதிலிருந்தே நோக்குவர்மம் மேல் எனக்குத் தீராத ஆர்வம். அவர் பின்னாலேயே போய் விட்டேன்….. பத்து வருடம் அவரிடம் நான் அதைக் கற்றுக் கொண்டேன். அதில் நல்ல தேர்ச்சியும் பெற்றேன்.  இந்த இமயமலையில் எந்த விலங்கும் என்னை நெருங்கியதில்லை. என்னை வீழ்த்த முயன்றதில்லை. என்னைப் பார்த்து அவை எல்லாம் தப்பி ஓடின….. அவை மட்டுமல்ல மனிதர்களும் பயந்து ஓடினார்கள். அப்படி ஓடாதவர்களை என் பார்வையாலேயே ஓட வைத்தேன்….. ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் நான் கதாநாயகன்….”

சொல்லும் போதே சுய பச்சாதாபமும், விரக்தியும் வெளிப்பட்டதை செந்தில்நாதன் கவனித்தார். ”அந்த சன்னியாசியுடன் இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. அவர் இறந்து போனவுடன் ஏதோ ஒரு வெறுமை உணர்ந்தேன். அதற்குப் போதை மருந்தாக இருந்தது. ஆறுதலாக இருந்தது. பின் அவசியமாக மாறியது….. ஆனால் கற்ற வித்தை அப்படியே இருந்தது…..”

செந்தில்நாதன் இடைமறித்தார். “இது போன்ற சக்திகள் கெட்ட பழக்கங்களால் அழிந்து போய் விடும் என்று யாரோ சொன்னார்களே”

“சக்தியைப் பிரயோகிக்கும் காலத்தில் அந்தப் போதை எந்த இடைஞ்சலையும் செய்து விடாத வரையில், சக்திக்குத் தேவையான எதையும் குறைத்து விடாத வரையில் ஒரு மனிதன் சக்தியை இழந்து விடுவதில்லை….. முக்கியமாக சக்திப் பிரயோகத்தின் போது மனிதன் முழுக்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்…..”

“அந்த ஆள் உங்களிடம் நோக்கு வர்மம் படிக்கத்தான் வந்தானா?”

ஆமாம் என்று தலையசைத்த அந்த சாது கையை நீட்டினார். செந்தில்நாதன் கையில் வைத்திருந்த மூன்று சிறு பொட்டலங்களில் ஒரு பொட்டலத்தை அவரிடம் தர சாது அதைப் பெற்றுக் கொண்டு வாஞ்சையாகத் தடவினார். அதைத் திறந்து ஒரு சிட்டிகையை மிகவும் கவனமாக எடுத்து மூக்கருகே கொண்டு போய் நீண்ட மூச்சிழுத்து ஒரு நிமிடம் சொர்க்கத்தை அனுபவித்த அந்த சாதுவின் குரல் மீண்டும் பேசுகையில் மிக மென்மையாக இருந்தது.

“அவன் என்னிடம் வருவதற்கு முன்பே நிறைய சக்திகள் பெற்றவன். நான் பத்து வருடங்களில் கற்றுத் தேர்ந்ததை அவன் ஒரு மாதத்தில் கற்று விட்டான்…… அவன் மனிதனே அல்ல…… சைத்தான்…… அவன் கற்று முடிக்கும் வரை என்னை சரியாகத் தூங்கக் கூட விடவில்லை. அதிகத் தூக்கம் அனாவசியம் என்று நினைத்தான். அதிகப் பேச்சு சக்தி விரயம் என்று நினைத்தான்…… போதை தற்கொலை என்று நினைத்தான்…….” சொல்லும் போது குரல் மிகப் பலவீனமாகியது.

“அதை அவன் வாய்விட்டுச் சொல்லவில்லை. ஆனால் அவன் அப்படி நினைத்தது எனக்குத் தெரியும். அது நிஜம் என்றும் தெரியும். வாழ்க்கையைத் திரும்பி வாழ முடிந்திருந்தால் நான் இதில் எடுத்த முதல் முயற்சியையே தடுத்து நிறுத்தியிருப்பேன். ……. எல்லாம் முடிந்த பிறகு பேசுவதில் அர்த்தமில்லை……”

அவருடைய சுய பச்சாதாபத்திலிருந்து பேச்சை மறுபடி எதிரி பக்கம் செந்தில்நாதன் திருப்பினார்.    ”அவன் உங்க கிட்ட ஒருமாதம் இருந்து கற்றுகிட்டப்ப உங்க கூடவே இருந்தானா, இல்லை எங்கேயாவது தங்கி கற்றுக்க மட்டும் வந்தனா?”

“கூடவே இருந்தான். அவனுக்கு வசதிகள் எல்லாம் முக்கியம் அல்ல. கற்றுக்கறது தான் முக்கியம். முதல் பத்து நாள், பின்னாடி பத்து நாள் முழுவதுமே நான் இருக்கற இடத்துலயே இருந்தான்….”

செந்தில்நாதன் சந்தேகத்தோடு கேட்டார். “இடைப்பட்ட பத்து நாள் எங்கே இருந்தான்.?”

“டெல்லி போயிட்டான். அமெரிக்கால இருந்து யாரோ மனோதத்துவ மேதை வர்றார்னு சொன்னான். அவர் கிட்ட எதோ வேலை இருக்கறதா சொல்லிட்டுப் போனான்….. அந்த ஆள் நிறைய புத்தகம் எல்லாம் எழுதியிருக்காராம்….?”

“அவர் கிட்ட என்ன வேலையாம்?”

“அது தெரியலை….. அவன் எதையும் வாய் விட்டுச் சொல்ற ரகமல்ல…. டெல்லியிலிருந்து வர்றப்ப ஒரு புத்தகம் கொண்டு வந்தான். பகல் எல்லாம் இடையிடையே அந்தப் புத்தகத்தையும் படிச்சான். ஆழமா படிச்சான்……”

“அது என்ன புத்தகம்?”

“மனம் சம்பந்தப்பட்ட புத்தகம். அவன் பார்த்துட்டு வந்த அந்த மேதை தான் அதை எழுதியிருக்கணும்னு நினைக்கிறேன்….. நோக்குவர்மம் பயிற்சி செய்து களைச்சுப் போய் ஓய்வு எடுக்கறப்ப அந்தப் புத்தகத்தைப் படிப்பான். அவனுக்கு ஒரு வேலை செய்து களைச்சுப் போறப்ப இன்னொரு வேலை தான் ஓய்வு….. அற்புதமான மனிதன்….. கொஞ்சம் விசித்திரம் தான்….. ஆனால் அவனை மாதிரி ஒரு மனிதனை நான் பார்த்ததேயில்லை…….” சாதுவின் குரலில் பிரமிப்பு தங்கியிருந்தது.

“நோக்குவர்மத்தில் அவன் முழு தேர்ச்சி பெற்றுட்டானா?”

“அப்படிப் பெறாமல் இருந்தால் அவன் போயிருக்க மாட்டான்……” அந்த சாது இயற்கை விதி ஒன்றைச் சொல்வது போல் சொன்னார்.

“நோக்குவர்மத்தில் ஒருத்தர் என்ன எல்லாம் செய்ய முடியும்…”

“முழுமையாகத் தேர்ச்சி பெற்றவனுக்கு மதயானையை ஸ்தம்பிச்சு நிறுத்தி வைக்க முடியும்…… விலங்கு மட்டுமில்லாமல் மனுஷங்களையும் அப்படி நிறுத்தி வைக்க முடியும். சொல்லப் போனால் பார்வையிலேயே அவங்க இதயத்துடிப்பைக் கூட நிறுத்திட முடியும். வெளிப்பார்வைக்கு மாரடைப்புன்னு தோணும். ஆனா நோக்குவர்மத் தாக்குதல் அதுன்னு அந்தக் கலையைத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் புரியும்….. உங்க போலீஸ் எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. உங்க விஞ்ஞானக்கருவி எல்லாம் எதையும் கண்டுபிடிச்சுட முடியாது…..”

செந்தில்நாதன் திகைப்புடன் அந்த சாதுவைப் பார்த்தார். அவர் மனதில் ராஜதுரையின் மரணம் நிழலாடியது….. இதயக் கோளாறு உள்ளவர் தான் என்ற போதும் இறப்பதற்கு முந்தைய நாள் வரை ராஜதுரை மிகவும் துடிப்பாக இருந்தாரே. செந்தில்நாதனும் முந்தைய நாள் நிறைய நேரம் அவரிடம் பேசி இருக்கிறாரே. ஒரு சின்ன உடல் உபாதை இருந்தது போல் கூடத் தெரியவில்லையே. எதிரிக்கு அந்த மரணத்தில் பங்கு இருக்க வாய்ப்பில்லை, வெளிப்படையாகக் காரணம் எதுவும் தெரியவில்லை என்ற போதும் அது நோக்குவர்மத் தாக்குதல் மூலம் நடந்த மரணமாக இருக்க வாய்ப்பு இருக்குமோ என்ற சந்தேகம் பலமாக அவர் மனதில் எழுந்தது.

(தொடரும்)
என்.கணேசன்


Monday, May 21, 2018

சத்ரபதி 21


சாம்பாஜியுடன் சிவாஜி ராஜவீதியில் சென்று கொண்டிருக்கையில் தான் அக்காட்சியைப் பார்த்தான். ஒரு பசுவை வெட்ட கசாப்புக்காரன் ஆயத்தமாகி இருந்தான். சாம்பாஜி தன் பார்வை அங்கு செல்வதைத் தவிர்த்து விட்டான். இது அவன் சிறு வயதிலிருந்தே அடிக்கடிப் பார்க்கும் ஒரு சம்பவம். அவன் கண்கள் பக்கவாட்டில் தம்பியைப் பார்த்தன. தம்பி தந்தையுடன் பசு வதை குறித்து விவாதிப்பதை அவன் கேட்டிருக்கிறான் என்பதால் எச்சரிக்கையோடு தம்பியைப் பார்க்கையில் அருகில் தம்பி இல்லை. திகைத்துப் போன சாம்பாஜி சுற்றும் முற்றும் பார்க்கையில் சிவாஜி அந்தக் கசாப்புக்காரன் மீது பாய்ந்திருந்தான்…

தன் மீது திடீரென்று நடந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன கசாப்புக்காரன் கையிலிருந்த வெட்டுக்கத்தியைப் பிடுங்கிய சிவாஜி அதை வீசித் தூர எறிந்தான். கயிற்றில் கட்டப்பட்டிருந்த பசுவை விடுவித்து விட்டு காலாந்தகன் போல கடுஞ்சினத்துடன் நின்ற சிவாஜியை கசாப்புக்காரன் திகைப்புடன் பார்த்தான். யாரிவன்?

சாம்பாஜி சிவாஜியின் பின் வந்து நின்ற போது தான் கசாப்புக்காரனுக்கு அவன் ஷாஹாஜியின் இளைய மகன் என்பதை யூகிக்க முடிந்தது. இவனைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான்…. தூர ஓடிக் கொண்டிருந்த பசுவைத் திகைப்புடன் பார்த்து விட்டு கோபத்துடன் சிவாஜியிடம் சொன்னான். “அந்தப் பசுவை ஏன் விடுவித்தாய்.? நான் அதை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன்”

சிவாஜி சினம் குறையாமல் சொன்னான். ”புனிதத்திற்கு விலை இல்லை மூர்க்கனே….. இந்தக் காசுகளை வைத்துக் கொள்….. நல்ல வேளையாக என் கண்முன் அதை நீ வெட்டியிருக்கவில்லை. வெட்டியிருந்தால் உன் உயிரை இழந்திருப்பாய்..” என்று சொன்ன சிவாஜி சில தங்கக் காசுகளை அவன் மீது விட்டெறிந்தான்.

பலரும் அங்கே கூடி விட்டார்கள். சாம்பாஜியிடம் சிவாஜி சொன்னான். “வா போகலாம்……” திகைப்பு குறையாமல் சாம்பாஜி சிவாஜியைப் பின் தொடர்ந்தான்.

செய்தி ஷாஹாஜியை எட்டிய போது அவரும் அதிர்ந்து போனார். ராஜவீதியில் நடந்த இந்த சம்பவம் சுல்தானைக் கண்டிப்பாக எட்டாமலிருக்க வழியில்லை…. கடுங்கோபத்துடன் அவர் சிவாஜியை அழைத்துக் காரணம் கேட்ட போது அவன் அதைவிட அதிகக் கோபத்துடன் பதில் சொன்னான். “இந்த மண்ணில் பூஜிக்கப்படும் பசுவை பூஜிப்பவர்கள் முன்பே வெட்ட ஒருவன் ஆயத்தமாக இருந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கச் சொல்கிறீர்களா தந்தையே!.... இதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது தந்தையே”

ஷாஹாஜி பொறுமையை வரவழைத்துக் கொண்டு சொன்னார். “மகனே. ஆள்பவர்களின் சட்டம் அதைத் தடுக்கவில்லை. அதனால் அதைத் தடுக்க நாம் முயன்றால் குற்றவாளிகளாகவே இங்கே கருதப்படுவோம். இதை ஏன் நீ புரிந்து கொள்ள மறுக்கிறாய்.?...”

சிவாஜி கோபம் குறையாமல் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஷாஹாஜி சொன்னார். “சிவாஜி. உன் நம்பிக்கை உனக்கு. அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. நாம் ஒருவர் வழியில் இன்னொருவர் ஏன் குறுக்கிட வேண்டும், யோசித்துப் பார்”

”தந்தையே என் முன் பசுவை அவன் வெட்டும் போது என் வழியில் அவன் குறுக்கிடுகிறான் என்றே நான் நினைக்கிறேன்….”

ஷாஹாஜிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. பின் மெல்லச் சொன்னார். “மகனே, மதங்கள் வேறானாலும் இங்கே மனிதர்கள் ஒற்றுமையுடனேயே வாழ்கிறார்கள். இந்த மண்ணின் பெருமையும் அதுவாகவே இருக்கிறது. என் பெயர் கூட இந்துப் பெயர் அல்ல என்பதை நீ கவனித்திருப்பாய். பிள்ளைகள் இல்லாத என் தந்தை பிர் ஷாஹா ஷரிஃப் என்ற இஸ்லாமிய பக்கிரியின் சமாதியை வணங்கி நான் பிறந்ததால் தான் எனக்கு ஷாஹாஜி என்ற பெயர் வைத்தார். எனக்குப் பின் பிறந்த என் தம்பிக்கு ஷரிஃப்ஜி என்ற பெயர் வைக்கப்பட்டது…..”

சிவாஜி சொன்னான். “எந்த மதத்திற்கும் நான் எதிரியல்ல தந்தையே. இறைவனை வலியுறுத்துவதாலேயே அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன். அதே போல் மற்றவர்கள் நம்பிக்கைகளுக்கும் நான் எதிரானவன் அல்ல. அது மற்றவர்கள் சுதந்திரத்தை மறுப்பது போல் தவறு என்று நம்புபவன் நான். ஆனால் என் கண் முன் என் தாய் கஷ்டப்படுவதை என்னால் எப்படிச் சகிக்க முடியாதோ அதே போல் பசு வெட்டப்படுவதையும் என்னால் சகிக்க முடியாது…”

சிவாஜி முடிவாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டான். ஷாஹாஜி ஜீஜாபாயைப் பார்த்தார். அவள் என் மகன் சொல்வதில் என்ன தவறு என்பது போலவே அவரைப் பார்த்தாள். தாங்க முடியாத ஷாஹாஜி நீண்ட யோசனைக்குப் பின் தன் நண்பரும், சுல்தானின் மரியாதைக்குப் பாத்திரமானவருமான மீர் ஜும்லாவின் இல்லத்திற்கு விரைந்தார். நடந்ததை எல்லாம் மனம் விட்டு அவரிடம் சொன்னார்.

மீர் ஜும்லா ஆழமாய் யோசித்து விட்டுச் சொன்னார். “ஷாஹாஜி, உங்கள் மகன் பேசியதில் என்னால் குறை காண முடியவில்லை”

ஷாஹாஜி திகைப்புடன் நண்பரைப் பார்த்து விட்டுக் கேட்டார். “என்ன சொல்கிறீர்கள் நண்பரே. நான் பசு மாமிசம் சாப்பிடுவதில்லை. அது என் மத நம்பிக்கை. அதை நீங்களும் சாப்பிடக்கூடாது என்று உங்களை நான் வற்புறுத்த முடியுமா?”

மீர் ஜும்லா சொன்னார். “உங்கள் மகன் எங்களைப் பசு மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லையே ஷாஹாஜி. உங்கள் கண் முன் பசுவை வெட்ட வேண்டாம் என்றல்லவா சொல்கிறான். இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா?”

ஷாஹாஜி கவலையுடன் சொன்னார். “மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தங்களுக்கு இருக்கிறது மீர் ஜும்லா. அதனால் பெருந்தன்மையுடன் இதைச் சொல்கிறீர்கள். ஆனால் பிரச்னை சுல்தான் முன் வருகையில் நான் எப்படி இதைச் சொல்ல முடியும்?”

”நீங்கள் சொல்வதில் சங்கடம் உணர்வது இயல்பே ஷாஹாஜி. ஆனால் நான் சொல்லல்லாம் அல்லவா? நான் சுல்தானிடம் பேசுகிறேன். கவலை வேண்டாம்”

ஷாஹாஜி கண்கள் ஈரமாக நண்பரை இறுக்க அணைத்துக் கொண்டார். “நன்றி நண்பரே….”



றுநாள் அரசவையில் சிவாஜி விவகாரம் பேசப்பட்டது. ஷாஹாஜியின் வளர்ச்சியைச் சகிக்க முடியாமல் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த ஒருவர் தான் சிவாஜி முந்தைய தினம் செய்த காரியத்தை சுல்தான் முன் எடுத்துச் சொன்னார். ஆதில்ஷா நெற்றி சுருங்க முழுவதையும் கேட்டார். ஷாஹாஜிக்கு சுல்தானைத் தலைநிமிர்ந்து பார்க்க முடியவில்லை….

ஆதில்ஷா ஒரு கணம் ஷாஹாஜியைப் பார்த்து விட்டுப் பின் சபையில் பொதுவாகக் கேட்டார். “இந்தச் சம்பவம் குறித்து அரசவை அறிஞர்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

மற்றவர்கள் எதுவும் சொல்வதற்கு முன் மீர் ஜும்லா முந்திக் கொண்டார். “மன்னரே! நண்பர் ஷாஹாஜியின் இளைய மகன் சிவாஜி தங்களைக் காணும் போது தந்தையைக் காண்பது போல் உணர்ந்ததாகச் சொன்னான். அவன் தன் உணர்வைச் சொன்னாலும் அது பொதுவாகவே கூட மிகச்சரியான உணர்வே என்று நான் சொல்வேன். அரசர் தன் பிரஜைகளுக்குத் தந்தையைப் போன்றவர். அவர்களைப் பொறுத்த வரை தந்தையைப் போல சரிசமமானவர். அவரும் தன் பிரஜைகளைச் சரிசமமாகவே நடத்த வேண்டியவர். இந்துக்களுக்கு பசு தெய்வத்துக்கு இணையானது. அவர்களுடன் சேர்ந்து வாழும் நாம் பசு மாமிசத்தை உண்பதைத் தவிர்க்க முடியாது என்றாலும் அவர்கள் பார்வையில் படும்படி அதைக் கொல்வதையோ, அதை விற்பதையோ தவிர்க்க முடியும். இதில் நாம் இழக்க எதுவுமில்லை…..”

ஆதில்ஷா ஆழ்ந்த சிந்தனையுடன் அவையைப் பார்த்தார். மீர் ஜும்லா சொன்னதற்கு எதிராக எந்தக் குரலும் எழவில்லை.

மீர் ஜும்லா தொடர்ந்து சொன்னார். “தங்கள் அரசவையில் தங்கள் மீது பேரன்பு கொண்ட ஷாஹாஜி போன்ற இந்துக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் கண் முன் பசுவதை, பசு மாமிசம் விற்பனை நடப்பது அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தினாலும் கூட இதுவரை அவர்கள் அதுகுறித்து எதுவும் சொன்னதில்லை. மௌனமாகவே சகித்திருக்கிறார்கள். ஆனால் இந்தச் சூழலில் வளராத சிவாஜி அதை நேரடியாகக் காணும் போது கொதித்தெழுந்தது திட்டமிட்டு நிகழ்ந்ததல்ல. மனம் பதைத்த வேதனையின் உடனடி வெளிப்பாடே அது. இந்துக்களின் உணர்வுகளைத் தங்களுக்குத் தெரியப்படுத்த எல்லாம் வல்ல அல்லா ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பாகவே இதைக் காண்கிறேன்…..”

ஆதில்ஷா ஷாஹாஜியையும், மற்ற இந்துப் பிரபுக்களையும் ஒரு கணம் பார்த்தார். பின் சிறிது நேர யோசனைக்குப் பின் பேசினார். “இன்றிலிருந்து பசு வதை நகரத்தின் உள்ளே நடப்பதற்குத் தடை விதிக்கிறேன். அதே போல பசு மாமிசமும் நகர எல்லைக்குள் விற்பனை செய்யக்கூடாது என்று ஆணையிடுகிறேன். அதே சமயத்தில் நகர எல்லைக்கு வெளியே இந்த இரண்டும் நடக்க எந்தத் தடையும் இல்லை…..”

ஷாஹாஜி உட்பட அனைத்து இந்துக்களும் எழுந்து கரகோஷம் செய்து சுல்தானை வாழ்த்தினார்கள். மீர் ஜும்லா போன்ற சில இஸ்லாமிய பிரபுக்களும் நட்புணர்வுடன் அந்தக் கரகோஷத்தில் கலந்து கொள்ள ஷாஹாஜி பெருத்த நிம்மதியை உணர்ந்தார்.

ஆனால் அந்த நிம்மதி ஒரே வாரத்தில் காணாமல் போகும் என்று அவர் அறிந்திருக்கவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்