அதை
ஆராய்ச்சியாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஜான் ஸ்மித்திடம் சொன்னார். அதன் பின் ஜான்
ஸ்மித் கேட்டதைத் திபெத்திய மொழியிலும், யோகி சொன்னதை ஆங்கிலத்திலும் ஆராய்ச்சியாளர்
மொழிபெயர்த்துச் சொல்லி உதவினார்.
ஜான்
ஸ்மித் கேட்டார். “கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை தெரிந்தவர்கள் இந்தக் காலத்திலும்
இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள்”
“எங்கே
இருக்கிறார்கள்?”
“பல
இடங்களில் இருக்கிறார்கள். அதிகமாய் இந்த இமயமலையில். எத்தனையோ சக்தி வாய்ந்த யோகிகளின்
இருப்பிடம் இந்த இமயம்”
“கூடு
விட்டு கூடு பாயும் சக்தி படைத்தவன் எத்தனை காலம் இன்னொரு உடலில் இருக்க முடியும்?”
“அவன்
விரும்புகின்ற வரை இருக்க முடியும்”
கேள்விகளுக்குப்
பதில் சொல்ல யோகி அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. கேட்டவுடனேயே பதில் தெளிவாக வந்த
விதம் ஜான் ஸ்மித்தைக் கவர்ந்தது. இந்த யோகி உண்மையாகச் சக்தி படைத்தவர். இவரிடம் குழப்பமே
இல்லை…
ஜான்
ஸ்மித் கேட்டார். “விரும்புகிற வரை என்றால் நிரந்தரமாகவே கூடத் தங்கி விட முடியுமா?”
இந்தக்
கேள்விக்காவது பதில் சற்றுத் தாமதித்து வரும் என்று ஜான் ஸ்மித் எதிர்பார்த்தார். ஆனால்
அதற்கும் உடனடியாகப் பதில் வந்தது. “முடியும் என்றாலும் அதிகமாக அப்படி நடப்பதில்லை…”
“ஏன்?”
“இன்னொரு
உடம்பில் தங்குவது அவ்வளவு இதமான அனுபவம் அல்ல. அதைத் தனதென்று உணர்வதும் சுலபமாக உணர
முடிந்ததல்ல…. அதனால் தான் யோகி தன் உடலில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் அதைப் பாதுகாத்து
விட்டே அடுத்த உடலுக்குள் பிரவேசிப்பான். சென்ற நோக்கம் முடிந்தவுடன் திரும்பித் தன்
உடலுக்குள் வந்து விடுவான்.”
ஜான்
ஸ்மித் கேட்டார். “ஒரு வேளை அந்த யோகியின் பழைய உடல் பாதுகாக்கப்படவில்லை என்று வைத்துக்
கொள்வோம். அல்லது அந்த உடல் அழிந்து தான் அந்த யோகி வேறு உடலுக்குப் போயிருந்தால் அந்த
இன்னொரு உடலில் நீண்ட காலம் இருந்து விட முடியும்?”
“முடியும்”
“அவனுடைய
பழைய சக்திகள் அனைத்தும் அந்தப் புதிய உடலுக்குப் போன பிறகும் அப்படியே குறையாமல் இருக்குமா?”
“யோகியின் சக்திகளுக்கு அந்தப்
புதிய உடலும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி அந்த உடல் ஒத்துழைக்கா விட்டால் யோகி எந்த சக்தியையும் அந்த உடல் அனுமதிக்கும் அளவுக்கு உட்பட்டே உபயோகிக்க முடியும்”
ஜான்
ஸ்மித் அந்தப் பதிலை உள்வாங்கிச் சிறிது யோசித்தார். பின் கேட்டார். “யோகி தன் சக்தியால்
அந்தப் புதிய உடலைத் தனக்கு வேண்டியது போல் மாற்றிக் கொள்ள முடியாதா?”
“ஓரளவு
முடியும். ஆனால் முழுவதுமாக முடியாது. ஏனென்றால் அந்த உடலுக்கு என்று சில எல்லைகள்
இருக்கும். அந்த எல்லைகளைக் காலப்போக்கில் அவன் நீட்டிக் கொள்ள முடியும், ஓரளவு மாற்றிக்
கொள்ள முடியும். ஆனால் உள்ளே புகுந்தவுடனேயே அவன் எல்லாவற்றையும் தனக்கு வேண்டியபடி
மாற்றிக் கொள்ள முடியாது”
ஜான்
ஸ்மித் கேட்டார். “ஏன்?”
யோகியின்
முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை அரும்பியது. அவர் சொன்னார். “எத்தனை சக்திகள் பெற்றிருந்தாலும்
யோகி கடவுளாகி விட முடியாது. அவன் சக்திகளை
உடல் தாங்க வேண்டும். அந்தச் சக்திகளுக்கு அந்த உடல் ஈடு கொடுக்க வேண்டும்.”
“எனக்குப்
புரியவில்லை. எனக்குப் புரிகிறபடி விளக்க முடியுமா?” ஜான் ஸ்மித் கேட்டார்.
அந்த
யோகி அப்போதும் யோசிக்க நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. “உடல் ஒரு எலக்ட்ரிக் வயர் என்று
வைத்துக் கொள்ளுங்கள். சக்திகள் மின்சாரம் மாதிரி. அதிக அளவிலான மின்சாரத்தை அந்த வயர்
தாங்குமா என்பது அந்த வயரின் இயல்பான தன்மையைப் பொருத்தது. அது தாங்க முடிந்ததை விட
அதிகமாய் மின்சாரம் அந்த வயரில் ஊடுருவினால் அந்த வயர் கருகி விடும்….”
அவர்
அந்த உதாரணத்தைச் சொன்னவுடனே ஜான் ஸ்மித்துக்கு விஸ்வத்தின் உடல் இல்லுமினாட்டியின்
கூட்டத்தில் கருகியது நினைவுக்கு வந்தது. அவனால் தாங்க முடியாத அளவு ஏதோ ஒரு சக்தி
அவனுக்குள்ளே ஊடுருவி இருக்கிறது. அதனால் தான் கருகி இருக்கிறது. அப்படிக் கருக வைத்த
சக்தி க்ரிஷ் அனுப்பிய சக்தியாக இருக்குமா அல்லது வேறெதாவது சக்தியாக இருக்குமா?...
மனதை
மறுபடியும் தான் வந்த நோக்கத்திற்கே திரும்பக் கொண்டு வந்த ஜான் ஸ்மித் கேட்டார்.
“உங்கள் உதாரணம் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு இன்னமும் புரியாதது என்னவென்றால்
யோகியின் உடலும் மனித உடல், அவர் புகுந்த இன்னொரு உடலும் மனித உடல் என்றால் இரண்டும்
ஒரே வித வயர்கள் அல்லவா?”
“தோற்றத்திலும்
சாதாரண செயல்பாடுகளிலும் இரண்டும் ஒரே விதமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இரண்டுக்கும்
இடையே இருக்கும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கிற அளவு வித்தியாசம்
இருக்கலாம். ஏனென்றால் யோகி தன் உடலைப் பயிற்சியாலும், கட்டுப்பாட்டாலும் சக்தி வாய்ந்ததாக
மாற்றி வைத்திருப்பான். ஆனால் அவன் உள்ளே நுழைந்தது இன்னொரு யோகியின் உடலாக இல்லா விட்டால்
அதன் பலவீனங்களை அவன் சகித்தே ஆக வேண்டும்…”
ஜான்
ஸ்மித் அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை யோசித்து மனதில் இருத்தி விட்டுப் பின் தன் மனதில்
எழுந்த கேள்வியைக் கேட்டார். “உடனடியாக இல்லா விட்டாலும் சிறிது சிறிதாக அந்த உடலைப்
பயிற்சியாலும், கட்டுப்பாட்டாலும் அவனால் தனக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்ள முடியும்
அல்லவா?”
“ஓரளவு முடியும்”
ஜான்
ஸ்மித் அடுத்த கேள்வியைக் கேட்டார். “இப்படிக் கூடுவிட்டுக் கூடு பாய ஒருவருக்கு இன்னொருவர்
உதவ முடியுமா? ஒரு குறிப்பிட்ட ஆவியை இன்னொருவர் உடம்பில் வரவழைக்க வூடூ மக்கள் சடங்குகள்
செய்கிறார்களே அந்த வகையில்”
“முடியும்”
“அந்த
வகையிலும் ஒரு ஆவி இன்னொருவர் உடம்பில் நீண்ட காலம் தங்க முடியுமா?”
“அந்தச்
சடங்குகள் மூலம் இறக்கப்படும் ஆவி ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் தான் இன்னொரு உடம்பில்
தங்க முடியும். அதன் பின் தங்க இந்த உடம்பு அனுமதிக்காது. அந்த ஆவியும் தங்க விரும்பாது”
”அந்த
வூடூ சடங்குகள் மூலம் ஆவி உடலுக்குள் வருவதும், யோக சக்தி “பிரகாமியம்” மூலம் ஒரு உடலை
விட்டு இன்னொரு உடலுக்கு ஆவி போவதும் ஒரே மாதிரியானது தானா?”
“இல்லை.
பிரகாமியம் யோகியின் தனிப்பட்ட முயற்சி, அந்தச் சடங்குகள் பலரின் கூட்டு முயற்சி. பிரகாமியத்தில்
இன்னொரு உடலுக்குப் போவதிலும், திரும்பத் தன் உடலுக்கு வருவதிலும் யோகிக்குப் பூரண
கட்டுப்பாடு இருக்கிறது. வூடூ சடங்கில் அப்படி எதுவும் இல்லை…”
ஜான்
ஸ்மித் யோசித்தார். ம்யூனிக்கில் நடந்திருப்பது இரண்டு விதங்களிலும் சேர்த்து விட முடியாதபடி
இருப்பதாகவே உணர்ந்தார். அந்தக் கிதார் இசையைத் தவிர வூடூவில் சம்பந்தப்படுத்த அதில்
எதுவும் இல்லை. அதே போல் பிரகாமியம் என்று முழுவதுமாகச் சொல்லி விடவும் முடியாதபடி
நிகழ்வு இருந்தது. முதலில் ம்யூனிக்கில் நடந்திருப்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாதபடி
புரிந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்த ஜான் ஸ்மித் தன் சந்தேகத்தைக் கவனமாக வார்த்தைப்படுத்திக்
கேட்டார்.
“ஒருவேளை
ஒரு சக்திவாய்ந்த யோகியின் உடலுக்கு ஒரு ஆபத்து வந்து உயிர் இழக்க வேண்டிய நிலைமை உருவாகிறது
என்று வைத்துக் கொள்வோம். அப்படி உயிரை விடும் சந்தர்ப்பத்தில் இன்னொரு உடலில் உயிர்
போய்க் கொண்டிருக்கிறது. அந்த உடலில் இந்த யோகித் தன் சக்தியை உபயோகித்துப் போய் புகுந்து
கொள்ள முடிவது நடக்குமா?”
“உண்மையான
யோகியாக இருந்தால் அது நடக்காது. அந்த யோகி அதை விரும்பவும் மாட்டான். உலகில் இருக்க
வேண்டிய அவனுடைய காலம் முடிந்து விடாமல் அவன் உடல் அழிய ஆரம்பிக்காது. அப்படி இயற்கையாய்
பார்த்து முடித்து வைக்கும் வாழ்க்கையை நீட்டிப்பதை எந்த யோகியும் விரும்ப மாட்டான்…”
விஸ்வம்
யோகியின் ரகத்தில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடியவன் அல்ல என்றே ஜான் ஸ்மித்துக்குத்
தோன்றியது. அவர் சொன்னார். “யோக சக்திகளைக் கற்றுக் கொண்டாலும் யோகியின் பக்குவம் பெற்றிருக்காத
ஒருவனைப் பற்றிப் பேசுவதாக வைத்துக் கொள்வோம். அவன் அழியும் தன் உடலை விட்டு உயிர்
போய்க் கொண்டிருக்கும் இன்னொரு உடலில் புகுந்து கொள்ள முடியுமா?”
யோகி
தூரத்திலிருந்த ஒரு மலை முகட்டைப் பார்த்தபடியே சொன்னார். “அபூர்வம் என்றாலும் முடியும்.
அப்படி நடந்தால் அவனுடைய கர்மாவும், அதற்குக் காரணமானவர்களின் கர்மாவும் அது போன்ற
அனர்த்தத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதாகவே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்”
அப்படியானால்
நடந்திருப்பது விஸ்வத்தின் கர்மாவும், அந்த நிகழ்வுக்குக் காரணமானவர்களின் கர்மாவும்
சேர்ந்து உருவாகியிருக்கும் அனர்த்தமா? ஜான் ஸ்மித்தை அந்தச் சிந்தனை சுட்டது.
(தொடரும்)
என்.கணேசன்
செம விறுவிறுப்பு
ReplyDeleteVery interesting conversation. Informative also.
ReplyDeleteஇலுமினாட்டி நன்றாக வளர்கிறான்
ReplyDeleteVery interesting.
ReplyDeleteJohn smith questions ellaam rombave budhisaalidhanamanadhu.
Beautiful...
ReplyDeleteYogi explains very clearly. Viswam may affected by external force, so that he intruded into that drunken man's body. Story goes very interesting.
ReplyDeleteஅந்த யோகியின் உரையாடல் மூலமாக கூடுவிட்டு கூடு பாயும் சக்தியை பற்றி மேலும் தகவல்களை அறிய முடிகிறது...அருமை...
ReplyDeleteவிஸ்வம் வூடு சடங்கின்படி வந்திருப்பான்... 'சில காலம் தங்கி விட்டு செல்வான்' என நினைந்திருந்த போது...
பிரகாமியம் மூலம் வந்து... நீண்ட காலம் அந்த உடலில் தங்கி.. கலக்குவான்.... என்று அதிர்ச்சியையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தி விட்டீர்கள்....