சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 31, 2019

இல்லுமினாட்டி 21


டேனியலின் புகைப்படத்தோடு டிவியில் வந்த அறிவிப்பை அகிடோ அரிமாவும், வாங் வேயும் பார்த்தார்கள். அந்த அறிவிப்பைப் பார்த்து விட்டு அகிடோ அரிமா தன் நண்பரின் முகத்தைப் பார்த்தார். அவர் பல மனக்கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது போலிருந்தது.

அகிடோ அரிமா சொன்னார். “பெர்லினில் இருக்கும் டேனியலின் மனைவிக்கு அவன் வேண்டாம். ஃப்ராங்க்பர்ட்டில் இருக்கும் அவன் நண்பர்களுக்கும் அவன் திரும்ப வேண்டும் என்ற அக்கறையில்லை. ஆனால் உலகத்தை ஆட்சி செய்து வரும் இல்லுமினாட்டிக்கு அவன் இப்போது முக்கியமானவனாய்ப் போய் விட்டான். என்னவொரு விசித்திரம்! கிழவர் இந்த அளவு இதற்கு முக்கியத்துவம் தருவதற்குக் காரணம் என்ன? வழக்கம் போல இல்லுமினாட்டியுடன் அவன் சம்பந்தப்பட்டிருந்ததால் அவனைப் பற்றிய முழுவிவரம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணமா? இல்லை கிழவர் கூடுதல் காரணம் எதையாவதும் வைத்திருக்கிறாரா?”

வாங் வே நண்பரிடம் சொன்னார். ”கிழவர் தலைமைக்குழுவிடம் சொன்னது வழக்கமான காரணம் தான். ஆனால் வெளியே தெரிவிக்காத கூடுதல் காரணங்களை அவர் மனதில் வைத்திருக்கிற மாதிரி தான் தெரிகிறது.”

அகிடோ அரிமா கேட்டார். “இப்போது திடீர் என்று விஸ்வம் இந்தப் புதிய சாதனையோடு இல்லுமினாட்டிக்குத் திரும்பி வந்தால்  என்ன ஆகும்? “அதாவது இல்லுமினாட்டி கூட்டத்தில் வில்லனாக இறந்தவன் கூடுவிட்டு கூடு பாய்ந்து புதுப்பிறவி எடுத்து வந்ததால் கதாநாயகனாகி விடுவானா அல்லது பழைய வில்லனாகவே தெரிவானா? அவனை உறுப்பினராக ஏற்றுக் கொள்வோமா, மாட்டோமா? உங்கள் தலைமைக்குழுவின் முடிவு என்னவாக இருக்கும்?”

“தலைவரின் முடிவு தான் தலைமைக்குழுவின் முடிவாக இருக்கும்…” சொல்லும் போதே வாங் வேயின் வார்த்தைகளில் கசப்பு தெரிந்தது.

அந்த நிலைமை தான் இல்லுமினாட்டியில் இருந்தது. தீர்மானமாக எர்னெஸ்டோ ஒன்றை அறிவித்து விட்டால் அதை வெளிப்படையாக எதிர்க்கும் துணிவு இல்லுமினாட்டியில் ஒருவருக்கும் இல்லை.  வாங் வேக்கு எர்னெஸ்டோவை நினைக்கையில் பொறாமையாக இருந்தது. உலக முக்கிய நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் அதி உச்சப் பதவியில் சர்வ பலத்துடனும், அதிகாரத்துடனும் இருக்கும் எர்னெஸ்டோவைப் பார்த்துப் பொறாமையடையாதவர்கள் குறைவு. அந்த அதி உச்சப் பதவியையும் அவர் போனால் போகிறது என்று பெருந்தன்மையுடன் வைத்திருக்கும் தோற்றத்தையே பார்க்கிறவர்களிடம் உருவாக்கி இருந்தார். அந்தப் பதவி சமீப காலங்களில் அவருக்குச் சலித்து விட்டது போலவே நடந்து கொண்டும் வந்தார். அது உண்மையே என்பதை உணர்த்தும் வகையில் ராஜினாமா செய்யப் போவதை அறிவித்தும் இருந்தார். அதன் பின் அவருடைய பதவிக்குப் பெரும் போட்டியும் உருவாக ஆரம்பித்தது. போட்டியாளர்களாகத் தயாராகிக் கொண்டிருந்தவர்களில் வாங் வேயும் ஒருவர். வாங் வேயின் கனவே அந்தப் பதவியாக இருந்தது. ஆனால் தலைவர் பதவிக்குத் தேர்வு நடக்கும் முன் விஸ்வம் இல்லுமினாட்டியில் நுழைந்து எல்லாவற்றையும் மாற்றி விட்டான்…   ராஜினாமா செய்ய இருந்த எர்னெஸ்டோ தன் முடிவைத் தள்ளிப் போட்டு விட்டார். இனி அவராக விலகும் வரை யாருக்கும் வாய்ப்பில்லை…. வாங் வே பெருமூச்சு விட்டார்.

அகிடோ அரிமா கேட்டார். “தலைவரின் முடிவு என்னவாக இருக்கும்?”

வாங் வே சொன்னார். “அவர் ஆரகிள் சொன்னதை முழுமையாக நம்புகிறார். இது இல்லுமினாட்டியின் அழிவுக்காலமாக இருக்குமானால் விஸ்வம் இல்லுமினாட்டிக்குக் கதாநாயகனாக மாறினாலும் சரி, வில்லனாக மாறினாலும் சரி இல்லுமினாட்டியை அழிக்கிற வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறார். அவரை க்ரிஷின் பேச்சு நிறையவே பாதித்து இருக்கிறது. அவன் சொன்னதை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார் என்றே தோன்றுகிறது.”

அகிடோ அரிமா சொன்னார். “இல்லுமினாட்டியில் க்ரிஷ் பேசியது சித்தாந்தமாக நன்றாகவே இருந்தது. நம் சின்னம் ஜொலித்ததும் அவனையே தேஜஸோடு காப்பாற்ற வந்தவனாகப் பலரையும் அந்தச் சமயத்தில் நினைக்க வைத்தது. அதெல்லாம் சரி தான். ஆனால் இப்போது ப்ராடிக்கலாக யோசித்துப் பார்த்தால் அவன் சொல்கிறபடி இல்லுமினாட்டி மாறினால் நாம் பழைய அதிகாரத்துடன் இருக்க முடியுமா? நம்மைப் பார்த்து உலகநாடுகளின் ஆட்சியாளர்கள் பயப்படுவார்களா? நாம் பலவீனமாகத் தெரிய மாட்டோமா? இதெல்லாம் நடக்கிற காரியமா? இந்த எண்ணங்கள் எனக்கு மட்டும் தான் வருகிறதா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை

வாங் வே முகத்தில் அபூர்வ முறுவல் வந்து போனது. அவரும் அப்படி நினைக்க ஆரம்பித்திருந்தார். அவர் மெல்லச் சொன்னார். ”நானும் அப்படித் தான் நினைக்கிறேன். எனக்கென்னவோ இப்போது யோசித்தால் க்ரிஷ் சொல்லி இருக்கும் மென்மையான அணுகுமுறை தான் இல்லுமினாட்டியை அழிக்கும் என்று தோன்றுகிறது. இல்லுமினாட்டியின் பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் விஸ்வத்தின் அணுகுமுறையே சரியென்று தோன்றுகிறது…”

ஒருவேளை விஸ்வம் டேனியல் உடலோடு இல்லுமினாட்டிக்கு மீண்டும் வந்தால், நம் தலைவர் எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்யாமல் நடுநிலைமை வகித்தால், நீங்கள் அவனை ஆதரிப்பீர்களா?” அகிடோ அரிமா தன் நண்பரை நேரடியாகவே கேட்டார்.

வாங் வே நண்பருக்குப் பிடிகொடுக்காமல் சொன்னார். “யோசிக்க வேண்டும்

எங்கே வெற்றி நிச்சயம் என்று அறியும் வரை நண்பர் யோசிப்பதை நிறுத்த மாட்டார் என்றறிந்திருந்த அகிடோ அரிமா புன்னகைத்தார். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் தயாராகக் காத்திருக்கும் நண்பரின் குணாதிசயங்கள் அவருக்கு அத்துப்படி. நண்பரையே கூர்மையாகப் பார்த்தபடி. திடீரென்று ஒரு தகவல் நினைவுக்கு ந்தவர் போல் அவர் சொன்னார். “விஸ்வம் தன் முழு சக்திகளையும் திரும்பப் பெற்று விட்டால் அவனை எதிர்ப்பது தலைவருக்கு ஆபத்து தான்.  கடும் பாதுகாப்போடு இருந்த இந்தியாவின் ஒரு மாநில முதலமைச்சரை அவன் கொன்று விட்டான், மாரடைப்பு என்றே எல்லாரையும் நம்ப வைத்தும் விட்டான் என்று கேள்விப்பட்டோம். ஞாபகம் இருக்கிறதா?”

வாங் வேக்கு அப்போது தான் அது நினைவு வந்தது. விஸ்வத்தின் பல வித சக்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் இது குறிப்பாக நினைவு இருக்கவில்லை. அவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறவர்கள் யார் மீதும் அவன் அந்தச் சக்தியைப் பிரயோகிக்க முடியும்எத்தனை சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் இருந்தாலும்ஏன் அகிடோ அரிமா சொல்வது போல்,  எர்னெஸ்டோவாகவே இருந்தாலும் சரி

இந்த சிந்தனை வாங் வேயின் இதயத்தை வேகமாகப் படபடக்க வைத்தது. அந்தப்படபடப்பை வெளியே காட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டு யோசனையுடன் வாங் வே சொன்னார். “அது அவனுக்குப் பழைய சக்திகள் பரிபூரணமாகத் திரும்பப் பெற முடிந்தால் தான் முடியும். டேனியல் உடம்பில் அவன் தன் முழுச்சக்திகளைத் திரும்பப் பெற முடிவது கஷ்டம் தான் என்று திபெத் போய் விசாரித்து வந்திருக்கிற ஜான் ஸ்மித் சொல்கிறார்….”

அகிடோ அரிமா சொன்னார். “ஆனால் சாஃப்ட்வேர் முழுவதுமாக இன்ஸ்டால் செய்து விட்ட மாதிரி தான் என்று ஜான் ஸ்மித் சொன்னதாகச் சொன்னீர்கள். அதை முழுவதுமாகப் பயன்படுத்த அவனுடைய உடம்பு அனுமதிக்க வேண்டும். என்ன தான் போதையால் மோசமாகி இருந்தாலும் டேனியல் சின்ன வயதுக்காரன். அந்த உடம்பை விஸ்வம் பலப்படுத்திக் கொள்வது முடியாத காரியம் அல்ல. சிறிது காலம் தேவைப்படலாம். அவ்வளவு தானே?”

வாங் வேக்கு மறுபடி இதயத்தின் படபடப்பு அதிகரித்தது. அந்தச் சிறிது காலம் என்பது எத்தனை மாதம் எத்தனை நாட்கள்இல்லை வருடமே கூடத் தேவைப்படுமா? அது தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. அவன் முழு சக்தி பெற்று விடுவதற்கு முன் அவனை ரகசியமாகச் சந்தித்தால் நல்லது என்றும் தோன்றியதுயோசிக்க யோசிக்க என்ன வேண்டுமானாலும் ஆகலாம், ஆக்கலாம் என்கிற சூழல் உருவாவது புரிந்தது. இந்தச் சூழ்நிலையைச் சரியாகவும், புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்திக் கொள்ள அவர் அறிவு தூண்டியது.

அவரையே கவனித்துக் கொண்டிருந்த அகிடோ அரிமாவுக்கு அவர் எண்ண ஓட்டத்தைப் படிக்க முடிந்தது. இதே போன்ற எண்ணம் இனி இல்லுமினாட்டியில் உள்ள பலருக்கும் வரலாம் என்றும் தோன்றியது. இல்லுமினாட்டியில் இனி ஆட்டம் களைகட்டப் போகிறது என்று எண்ணியவராகப் புன்னகைத்தார்…


தே நேரத்தில் வாஷிங்டன் நகரத்தில் இன்னொரு வயதான இல்லுமினாட்டி உறுப்பினர் தனக்கு வந்திருந்த சுற்றறிக்கையை இருபதாவது தடவையாகப் படித்துக் கொண்டிருந்தார். ம்யூனிக் நகர ஆஸ்பத்திரி நிகழ்வுகளைப் படித்ததில் இருந்தே தூக்கத்தைத் தொலைத்திருந்தார் அவர். காரணம், எந்த இல்லுமினாட்டி உறுப்பினருக்கும் தெரிந்திராத ஒரு இரகசியத் தகவல் அவருக்கு முன்பே தெரிந்திருந்தது தான். அவர் அறிந்திருந்த அந்தத் தகவலுக்கு இவ்வளவு காலம் பெரிய முக்கியத்துவம் எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது. அவர் மட்டுமே அறிந்திருக்கும் அந்த உண்மை அவரை அபாயத்திலும் ஆழ்த்தி விடலாம் என்பதை அவர் உணர்ந்தே இருந்ததால் தான் அவரால் உறங்க முடியவில்லை.

(தொடரும்)

என்.கணேசன்