சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 5, 2019

இல்லுமினாட்டி 12



ராய்ச்சியாளர் கடைசியில் மெல்லச் சொன்னார். “அப்படி நடப்பதற்கு வாய்ப்பு குறைவு”

“ஏன்?” ஜான் ஸ்மித் கேட்டார்.

“யோகிகள் இயற்கை சக்திகளுடன் விபரீத விளையாட்டுகளை விளையாடுவதில்லை. அதனால் உடலை முழுப்பாதுகாப்பு செய்து வைத்து விட்டுத் தான் உடலை விட்டு வெளியேறுவார்கள்” என்று ஆராய்ச்சியாளர் மறுபடியும் தன் பழைய கருத்தையே சொன்னார்.

“என்னுடைய கேள்வி என்னவென்றால், அப்படி ஒருவன் உடலை விட்டு வெளியேறிய பிறகு திரும்பவும் தன் உடலுக்கு வர முடியாத நிலைமை உருவானால் என்ன நடக்கும்?” ஜான் ஸ்மித் கேட்டார்.

ஆராய்ச்சியாளரால் அப்படி ஒரு நிலைமையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை போல இருந்தது. அவர் மூளையைக் கசக்கி யோசிப்பது போல் தெரிந்தது. ஜான் ஸ்மித் கேட்டார். “அவன் இன்னொரு உடம்புக்குள் புகுந்து கொள்ள முடியுமா?”

ஆராய்ச்சியாளர் யோசனையுடன் சொன்னார். “முடியாது என்றில்லை. ஆனால் அந்த உடலில் நீண்ட காலம் தங்கியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஏனென்றால் இது போல கூடு விட்டு கூடு பாயக்கூடிய சக்தியை அந்தச் சக்தி படைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதாகத் தான் தெரிகிறது. நீங்கள் சொல்கிறபடி திரும்பவும் தன் உடலுக்கு வர முடியாத நிலைமை என்றால் நிரந்தரமாக அந்த இன்னொரு உடலில் தங்க வேண்டியதாகி விடும் அல்லவா? அது நடப்பது சந்தேகம் தான்…”

“அப்படி நடந்திருக்கிறதே” என்று உடைத்துச் சொல்லி விவரிக்க வழி இல்லாமல் தவித்த ஜான் ஸ்மித் சிறிது யோசித்து விட்டுக் கேட்டார். “இந்த விஷயத்தில் எதையும் உறுதியாகச் சொல்லும் அளவு நல்ல ஞானமுள்ள ஆட்கள் யாரையாவது தெரியுமா?”

ஆராய்ச்சியாளர் சொன்னார். “சில மைல்கள் தூரத்திலேயே ஒரு திபெத்திய யோகி இருக்கிறார். அவரைப் பற்றி நான் என் புத்தகத்திலேயே கூட எழுதி இருக்கிறேன். ஆனால் அவர் மனமிருந்தால் தான் பேசுவார். மனமில்லா விட்டால் வாய் திறக்க மாட்டார்…”

ஜான் ஸ்மித் கெஞ்சுகின்ற தொனியில் சொன்னார். “அவரைப் போய்ப் பார்க்க முடியுமா? எனக்கு இது பற்றி முழுவதுமாய் தெளிவாய்த் தெரிந்தால் பெரிய உபகாரமாய் இருக்கும்…”

அவரையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஆராய்ச்சியாளர் சம்மதித்தார். “சரி…. ஆனால் அவர் கண்டிப்பாகப் பேசி எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவார் என்பது நிச்சயமில்லை. நானே எத்தனையோ தடவை போய் அவர் ஒன்றும் பேசாமலிருந்ததைப் பார்த்து விட்டுத் திரும்ப வந்திருக்கிறேன்…”

ஜான் ஸ்மித் சொன்னார். “அது பரவாயில்லை. ஆனால் அவர் இந்த விஷயத்தில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர் என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லையே”

ஆராய்ச்சியாளர் சொன்னார். “அதில் சந்தேகமில்லை.”

இருவரும் அந்த யோகியைச் சந்திக்கக் கிளம்பினார்கள். ஆராய்ச்சியாளர் தன் ஜீப்பிலேயே ஜான் ஸ்மித்தை அழைத்துச் சென்றார். போகும் போது ஜான் ஸ்மித் வேறு எதைப் பற்றியும் பேச மனமில்லாமல் கூடு விட்டு கூடு பாயும் சக்தியைப் பற்றியே பேசினார். “இதை நம்ப என்னுடைய விஞ்ஞான அறிவு விடுவதில்லை. ஆனால் சிலருடைய அபூர்வ அமானுஷ்ய அனுபவங்களைக் கேள்விப்படும் போது நம்பாமல் இருக்கவும் முடியவில்லை…”

ஆராய்ச்சியாளர் சொன்னார். “இந்தியாவின் யோகாவில் அஷ்டமகா சித்திகள் என்ற எட்டுவகை சக்திகள் சொல்லப்படுகின்றன. அந்த அஷ்டமகா சித்திகளில் ஒன்று தான் இந்தக் கூடு விட்டு கூடு பாயும் சக்தி. இதை பிரகாமியம் என்ற சக்தியாகச் சொல்கிறார்கள். இந்தியாவின் ஆதிசங்கரர் என்ற மகான் இந்த அஷ்டமகா சக்திகளையும் தன்வசப்படுத்தி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் இந்தக் கூடு விட்டுக் கூடு பாயும் பிரகாமிய சக்தியையும் பெற்றிருந்தார்…”

ஆராய்ச்சியாளர், ஆதிசங்கரர் அந்தச் சக்தியைப் பயன்படுத்திய சம்பவத்தையும் விவரித்தார். மந்தன மிஸ்ரா என்ற பேரறிஞரோடு ஆதிசங்கரர் தர்க்கவாதம் என்ற ஞான மார்க்கப் போட்டியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் கர்ணபரம்பரைக் கதையைச் சொன்னார். ”போட்டியில் மந்தன மிஸ்ரா தோற்றால் குடும்பஸ்தரான அவர் சன்னியாசம் பெற வேண்டும் என்றும், ஆதிசங்கரர் தோற்றால் துறவியான அவர் குடும்பஸ்தர் ஆக வேண்டும் என்ற நிபந்தனையில் ஆரம்பித்த போட்டியில் ஆதிசங்கரர் ஜெயித்து விட்டார். மந்தன மிஸ்ரா பதினேழு நாட்கள் தொடர்ந்த விவாதங்களின் முடிவில் ஆதிசங்கரரிடம் தோற்றுப் போனார். அவருடைய மனைவி உபயபாரதி கணவரை விட அறிவாளி. கணவர் துறவி ஆவதைச் சகிக்க முடியாமல் உபயபாரதி ’ஒரு குடும்பஸ்தனில் அவனுடைய மனைவியும் ஒரு பாதி. அதனால் என்னையும் நீங்கள் ஜெயித்தால் தான் உண்மையில் ஜெயித்த மாதிரியாகும்’ என்று வாதம் செய்தாள். ஆதிசங்கரர் அதற்கும் சம்மதித்தார். உபயபாரதியாலும் ஆதிசங்கரரை வெல்ல முடியவில்லை. கடைசியில் தோல்வியை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் அவள், ஒரு உண்மையான சன்னியாசியான அவரால் பதில் சொல்ல முடியாதபடி உடலுறவு சம்பந்தமான ஒரு கேள்வியைக் கேட்டு விட்டாள். அவளிடம் பதில் சொல்ல அவகாசம் வாங்கிய ஆதிசங்கரர் அந்தச் சமயத்தில் இறந்திருந்த அரசனின் உடலில் புகுந்து அதையும் கற்றுப் பிறகு தன் உடலுக்குத் திரும்பி அந்த விவாதத்தைத் தொடர்ந்து செய்து வென்றார் என்று சொல்கிறார்கள்… ஆனால் அப்படி அவர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த போது கூட ஆதிசங்கரரின் உடலை அவருடைய சீடர்கள் பாதுகாத்து வந்தார்கள் என்றே தான் நான் படித்திருக்கிறேன்….”

ஜான் ஸ்மித் அந்தக் கதையைச் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டார். யோசித்துப் பார்க்கையில் அந்த இல்லுமினாட்டிக் கூட்டத்தில் எதனால் எப்படி விஸ்வம் இறந்தான் என்பது அவர்கள் யாருக்குமே தெரியவில்லை. அந்தக் கூட்டத்தின் முடிவில் அவர்கள் கவனத்துக்கு அவன் வந்த போது அவன் உடல் கருகியிருந்தான். அதிகபட்ச வெப்பம் அவன் உடலில் பாய்ந்திருப்பதாகப் பிறகு பரிசோதித்து விட்டுச் சொன்னார்கள். அது எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை. எப்படியோ அவன் உயிரை விட வேண்டி வந்தது. அவன் எத்தனை தான் யோக சக்திகளில் நிபுணனாக இருந்த போதும் அந்தக் கருகிய உடலில் திரும்பி வர வழியில்லை. அப்படிப் பிறகும் நடக்க விடாமல் அவன் உடல் எரிக்கப்பட்டும் விட்டது…

ஜீப் நின்றது. மலைப்பகுதியில் சற்று உயரத்தில் இருந்த ஒரு சிறிய குடிசையை ஆராய்ச்சியாளர் ஜான் ஸ்மித்துக்குக் காட்டினார். “அங்கே தான் அந்த யோகி இருப்பார். ஆனால் அவரைப் பார்த்தால் யோகி மாதிரி தெரியாது…”

இருவரும் அந்தக் குடிசையை நோக்கி மேலேறி நடக்க ஆரம்பித்தார்கள். சில அடிகளே ஆனாலும் படிக்கட்டுகள் இல்லாத அந்த மலைப்பகுதியில் நடப்பது ஜான் ஸ்மித்துக்குச் சற்று சிரமமாகவே இருந்தது. ஆனால் ஆராய்ச்சியாளர் அந்தப் பகுதிகளில் நடந்து பழக்கப்பட்டவராக இருந்ததால் வேகமாக நடந்தார். ஜான் ஸ்மித் விழுந்து விடக்கூடாது என்ற கவனமும் இருந்ததால் மெல்லத் தான் போனார்.

அந்தக் குடிசைக்குள் ஒரு மரப்பலகையின் மீது அந்த யோகி தியானத்தில் அமர்ந்து இருந்தார். அந்த யோகி மிக மெலிந்து இருந்தார். அவர் முகத்தில் பேரமைதி தெரிந்தது. குடிசைக்குள் சில துணிமணிகளையும், அந்த மரப்பலகையையும் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை.

ஜான் ஸ்மித்தைப் பார்த்து “சத்தம் செய்யாதீர்கள்” என்று உதட்டில் விரலை வைத்து சமிக்ஞை செய்த ஆராய்ச்சியாளர் குடிசைக்கு வெளியே இருந்த ஒரு பாறையில் அமர்ந்து தன் அருகில் அமர ஜான் ஸ்மித்துக்குச் சைகை செய்தார். ஜான் ஸ்மித் அவர் அருகில் அமர்ந்தார். பாறை மிகவும் குளுமையாக இருந்தது. வெயில் மென்மையாகத் தெரிய ஜான் ஸ்மித் அந்த இயற்கை அழகை ரசித்துப் பார்த்தார். சுற்றும், முற்றும் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வேறு வீடுகள் இருக்கவில்லை. அந்த மலைப்பாதையில் அவர்கள் வந்த பிறகு வேறெந்த வாகனமும் செல்லவில்லை. தூரத்தில் தெருவில் ஒரு சிறுவனும் மூதாட்டியும் சென்று கொண்டிருந்தார்கள்…

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து அந்த யோகி வெளியே வந்தார். எழுந்து நின்று வணக்கம் தெரிவித்த ஆராய்ச்சியாளர் ஜான் ஸ்மித்தை திபெத்திய மொழியில் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி என்ற அறிமுகம் அந்த யோகியை எந்த விதத்திலும் பாதித்தது போல் தெரியவில்லை. அவர் ஜான் ஸ்மித்தை அமைதி மாறாமல் பார்த்தார். ஜான் ஸ்மித் ஆராய்ச்சியாளர் வணக்கம் தெரிவித்த விதத்திலேயே சற்று குனிந்து அந்த யோகிக்கு வணக்கம் செய்தார்.

அந்த வணக்கத்தைச் சிறிய தலையசைப்பில் ஏற்றுக் கொண்ட யோகி ஜான் ஸ்மித்தை ஊடுருவிப் பார்த்தார். அந்த மெலிந்த மனிதரின் பார்வை எளிமையாய் இல்லை. ஆராய்ச்சியாளர் ஜான் ஸ்மித் வந்த காரணத்தை விவரித்த போது அந்த வார்த்தைகளில் அந்த யோகி கவனம் செலுத்தியது போலத் தெரியவில்லை. மாறாக ஜான் ஸ்மித்தைப் பார்த்தே அனைத்தையும் அறிந்து கொள்ள முடிந்தவர் போல அந்த யோகி இருந்தார். முடிவில் சிறியதாக அவர் முகத்தில் ஒரு நொடி நேரம் வந்து போன திகைப்பு, பார்வையாலேயே ம்யூனிக்கில் நடந்து முடிந்த நிகழ்வுகளை அறிந்து கொண்டதால் ஏற்பட்டது என்றும், முன்பே விஸ்வத்தையும் அறிந்து வைத்திருந்தவர் அவர் என்றும் ஏனோ ஜான் ஸ்மித்துக்குத் தோன்றியது.

(தொடரும்)
என்.கணேசன்  

13 comments:

  1. Thrilling. Each information raises next question and our curiosity level is also increasing.

    ReplyDelete
  2. அந்த யோகி என்ன பதில் சொல்கிறார் என்று தெரிவித்து விட்டு தொடரும் என்று போட்டிருக்கலாம். ஒரு வாரம் எங்களை டென்ஷனில் காக்க வைப்பதில் ஏன் சார் இந்த மகிழ்ச்சி

    ReplyDelete
  3. இது அவரது மகிழ்ச்சி அல்ல. மாறாக வாசகர்களின் பொறுமையை அதிகரிக்க மற்றும் டென்ஷனை கட்டுப்படுத்த கொடுக்கும் பயிற்சி.

    நாம் பயிற்சியில் ஜெயித்தால் அவருக்கு சோகம். நாம் பயிற்சியில் தோற்றால் அவருக்கு மகிழ்ச்சி.
    ஆக உங்கள் தோல்வியால் விளைந்த கேள்வியால் அவருக்கு மகிழ்ச்சியே.
    ஆக உங்கள் கேள்வி சரியே..

    ReplyDelete
  4. அந்த யோகி சுருக்கமா இரண்டு வரியில் பதில் சொல்வார், இல்லையென்றால் சொல்லாமலும் போகலாம்... இருந்தாலும் அடுத்த பகுதி என்ன? என்ற ஆவல் எங்களுக்கு அதிகமாகவே உள்ளது...

    ReplyDelete
  5. Semma interesting.andha tibet yogi enna ninaikkiraaru nu sollittu thodarum pottu irukkalam.......

    ReplyDelete
  6. ஒவ்வொரு வாரமும் 'தொடரும்' என்ற வார்த்தையைத் தவிர மீதி அனைத்தையும் படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    விரைவாக புத்தகமாக வெளியிட்டால்
    ஒரே மூச்சாக படித்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பேன்

    ReplyDelete
    Replies
    1. நானும் தான்.

      Delete
  7. Yogiyai pondravarkal ennum erukkerarkala

    ReplyDelete
    Replies
    1. Read this article
      http://enganeshan.blogspot.com/2011/05/blog-post_11.html

      Delete
  8. சார் புத்தக வெளியீடு எப்போது?
    இந் நாவலில் அமானுஷ்யன் வருகின்றாரா?

    ReplyDelete
    Replies
    1. புத்தக வெளியீடு ஜனவரி 2020ல். அமானுஷ்யன் வருவார் சற்று தாமதமாக!

      Delete
  9. Sir உங்கள் எழுத்தின் ஆழத்தை பற்றி எல்லோரிடமும் வியந்து பேசிக்கொண்டே இருக்கின்றேன்.,. உங்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா??? பர்மன் ரகசியம், இருவேறு உலகம், அமானுஷ்யன், புத்தம் சரணம் கச்சாமி என்னை வேறு level கொண்டு போய்விட்டன.,

    ReplyDelete