அறிவார்ந்த ஆன்மிகம்- 22
ஆதிசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த
சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆதிசங்கரர் மற்றும் மத்வர்
இருவர் வாழ்ந்த காலத்திற்கு மத்தியில் வாழ்ந்த ராமானுஜாச்சாரியாரால் இந்த
விசிஷ்டாத்வைதம் உபதேசிக்கப்பட்டது.
தமிழகத்தில் அவதரித்த ராமனுஜர் அவருக்கு முன்பிருந்த வியாசர், பாருசி, பாராங்குசர், நாத முனிகள், ஆளவந்தார் முதலிய மகான்களின்
கொள்கைகளையே சேகரித்து, ஒவ்வொரு செய்தியிலும்
அவர்களது மொழிகளையே மேற்கோள்களாக்கி விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டியுள்ளார். அந்தக்
கொள்கைகளை விளக்கும் முகமாகத்தான் ராமானுஜர் பகவத்கீதை, பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கமும் பொருளும்
எழுதினார்.
அத்வைதத்தில் இருந்த சில விளக்கங்களில்
ராமானுஜர் திருப்தி அடையவில்லை. அந்த விளக்கங்களில் எழும் கேள்விகளுக்குப் பதில்
தரும் விதமாகவே ராமானுஜர் தன் விசிஷ்டாத்வைதத்தை பெருமளவு உருவாக்கினார் என்று
சொல்லலாம். விசிஷ்டாத்வைதம் என்பதற்கு விசேஷத்தோடு
கூடிய அத்வைதம் என்பது பொருள்.
உதாரணமாக அத்வைதத்தில் கயிறு பாம்பாகத்
தோன்றுவதாகச் சொல்லப்படும் உதாரணம். கயிறு மாத்திரம் தான் உள்ளது. அது பாம்பாகத்
தெரிகிறது. இதேபோல பிரும்மம் மட்டுமே உள்ளது, அது உலகாகத் தோன்றுகிறது என்பது
அத்வைத விளக்கம்.
அப்படி பாம்பாக கயிறு தோன்றுவது யாருக்கு?
பிரும்மத்தைத் தவிர இரண்டாவதாக யாராவது இருந்தால் தானே அது
சாத்தியமாகும். அப்படி இரண்டாவதாக இருப்பவன் தான் ஜீவன் என்பது விசிஷ்டாத்வைதக்
கொள்கை.
பாம்பிடம் உள்ள நஞ்சு பாம்பின் உள்ளேயே
இருந்தாலும் பாம்பைப் பாதிப்பதில்லை. அதே போல மாயை பிரம்மத்துடனேயே இருந்தாலும் அந்த
பிரம்மத்தைப் பாதிக்காமல் உள்ளது என்று சொல்கிறது அத்வைத விளக்கம். அப்படியானால்
மாயை பாதிப்பது யாரை? அது ஜீவனைத் தானே. அப்படியானால் அவன் பிரம்மம்
அல்லாத வேறொருவனாகத் தானே இருந்தாக வேண்டும். அந்த மாயை பிரம்மத்தையே பாதிக்கிறது
எனில் மோட்சம் எவ்வாறு உண்டாக முடியும்? ஆகவே
பிரம்மத்தைத் தவிர்த்து ஜீவன் உண்டு என்கிறது விசிஷ்டாத்வைதம்.
அடுத்ததாக மாயை பற்றி அத்வைதக் கருத்துக்கும்
ராமானுஜர் மாறுபடுகிறார். மாயா என்றால்
கடவுளின் ஆச்சரியமான சக்தி என்றே பொருள். உண்மையான கடவுளின் சக்தி மட்டும்
பொய்யாகி விடுமா என்ற ராமானுஜர் கேட்கிறார். மாயை என்றால்
ஒருவிதமான பொருளை இன்னொரு விதமாக மாற்றி விடும் சக்தி அல்லது மாற்றிக் காட்டும்
சக்தி. இந்த மாயையின் மூலமாகவே உலகங்களை இறைவன் உண்டாக்குகிறான். இறைவனுக்கு இந்த
மாயை அடங்கி அவனால் ஆளப்படும் பொருளாக இருப்பதால் மாயையே சொத்தாக உடையவன் என்ற
பொருளில் இறைவன் மாயாவி எனப்படுகிறான். இறைவன் பொய்யானவன் என்ற அர்த்தத்தில் அல்ல.
கீதையில் மாயையை என்னுடைய வசப்படுத்திக் கொண்டு உலகில் நான் அவதரிக்கிறேன் கிருஷ்ண
பரமாத்மா கூறுகிறார். இதை பொய்யை வசப்படுத்திக் கொண்டு பொய்யாக, பொய்யில் அவதாரம் செய்தார் என்றால் பொருந்துமா?
அதன் தேவை தான் என்ன? ஆகவே உலகம்
பொய்யில்லை. கடவுளைப் போல இதுவும் உண்மையானதே. அதனாலேயே மக்களைத் திருத்த, காக்க தரும வழியை உபதேசித்து நிலைக்கச் செய்ய உலகில் அவதாரம் செய்ய
வேண்டிய தேவை கடவுளுக்கு உள்ளது.
பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர்க்
காட்சியில் போல உலகத்தோற்றம் பொய் என்பது தவறு. அந்த கானல் நீரிலும் நீர் இருப்பது
உண்மையே. உலகம் முழுவதும் பஞ்சபூதங்களின் கலப்பால் உருவாகிறது. எனவே உலகில் எங்கும்
எல்லா பூதங்களும் கலந்தே உள்ளன. அதனால் பாலைவனத்திலும் நீர் உள்ள அம்சத்தை
தொலைவிலிருந்து நமது கண்கள் பார்த்தறிவதே கானல் நீரின் காட்சி உண்டாதல். அதன்
அருகில் சென்றால் அள்ளிக் குடிக்கும்படித் தண்ணீர் இல்லையே தவிர கண்ணால் காண
முடியாவிடினும் நீரின் அம்சம் இல்லாமல் போய் விடுவதில்லை.
இப்படி
இரண்டிலும் ஒரே அம்சப் பொருள் உள்ளவை தான் ஒன்று இன்னொன்றாகக் காணப்படுகின்றது.
கயிற்றுக்கும், பாம்பிற்கும் ஒற்றுமையாக உள்ள நீண்ட,
மெல்லிய, வளைவுகள் என்ற பொதுவான அடையாளங்களே கயிறைப்
பாம்பாகக் கருதச் செய்கின்றன. ஒரு கல்லோ, செடியோ பாம்பாகத்
தெரியாது.
இவ்வாறு அத்வைதத்தில் மாற்றுக்
கருத்துக்களை வாதமாக வைக்கும் ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தில் பரமாத்மா, ஜீவாத்மா,
உலகம் ஆகியவற்றை பின்வருமாறு விளக்குகிறார்.
பரமாத்மாவான இறைவன் ஒருவர் தான்
இருக்கிறார். ஸ்ரீமந் நாராயணனனே அந்த முழுமுதற்கடவுள். அவருக்கு உடலாயிருப்பது
ஜகத் என்கிற உலகம். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த் தத்துவங்களாயிருப்பது ஜீவன்கள்.
சூரியனிடமிருந்து எண்ணிலடங்கா கிரணங்கள் தோன்றி வருவதுபோன்று ஜீவன்கள் பரமாத்மாவில்
இருந்து உருவாகின்றனர்.
புற உலகையும் தனி மனித உயிர்களையும்
(ஜீவான்மாக்கள்) ஒட்டுமொத்தமாக உடல் எனக் கொண்டால் இறைவனை (பரமாத்மா) அதில்
உறையும் உயிர் என்று சொல்லலாம். எவ்வாறு உடலுக்கு உயிர் ஆதாரமோ அது போல புறஉலகு,
ஜீவான்மாக்கள் ஆகியவற்றால் ஆன
உடலுக்குப் பரமாத்மாவே உயிராவான்.
இறைவனே உயிர்கள் அனைத்துக்கும் உலகுக்கும்
அந்தர்யாமியாய் உள்நின்று அவையனைத்தையும் இயக்குகிறான். எனவே ஆன்மாக்கள்
பலவாயினும் ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாக நிற்பது பரமாத்மா ஒன்றுதான். பரமாத்மாவைப்
பூரணனென்றும் அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் தன் சொந்த அனுபவத்தில்
அறிந்துகொள்ளுதல் முக்தி. அதற்கு ஜீவன் பக்தியுடன் இறைவனை சரணாகதி அடைய வேண்டும்.
ராமானுஜர் தனது விசிஷ்டாத்வைத தத்துவத்தை
ஆழ்வார்களின் பாசுரங்களின் அடிப்படையிலேயே உருவாக்கினார்
என்பதற்கு சான்றுகள் உண்டு. அதிலும் குறிப்பாக, நம்மாழ்வாரின்
திருவாய்மொழியே விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.
முக்கியமாய் நம்மாழ்வாரின் கீழ்க்கண்ட திருவாய்மொழி வரிகளைச் சொல்லலாம்.
”திடவிசும் பெரிவளி
நீர்நில மிவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை யுயிரெனக் காந்தெங்கும் பரந்துனன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே”
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை யுயிரெனக் காந்தெங்கும் பரந்துனன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே”
பிற்காலத்தில் வந்த வடகலை, தென்கலைப் பிரிவினர் இருவரும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தையே தங்கள்
தத்துவமாகக் கொண்டுள்ளனர். தத்துவ நிலையில்
இரு சாராருக்கும் கருத்து வித்தியாசம் இல்லை. ஆனால் பரமாத்மாவுக்கும்
ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்வதில், அதிலும் முக்கியமாக, தனிமனித
ஜீவன் பரமாத்மாவான இறைவனை அடையும் வழிமுறை என்ன என்று சொல்வதில் இவர்களது வேறுபாடு
தொடங்குகிறது.
இந்த வேறுபாட்டை விளக்க வைணவ அறிஞர்கள்
கூறும் உவமை மிகவும் அர்த்தபூர்வமானது. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையே
உள்ள உறவு குரங்குக்கும் அதன் குட்டிக்கும் இடையேயுள்ள உறவைப் போன்றது
என்று வடகலையார் கூறுகின்றனர். தென்கலையாரோ அவ்வுறவு பூனைக்கும் அதன் குட்டிக்கும்
போன்றது என்று கூறுகின்றனர்.
இதன் விளக்கங்களைப் பார்ப்போம். குரங்கு
தன் குட்டியை வயிற்றில் கட்டிக் கொண்டு கிளைக்குக் கிளை தாவிச் செல்லும். அப்போது
குட்டி, தாயின் வயிற்றில் ஒட்டிக்கொண்டு அதை இறுகக்
கட்டிக்கொள்ளும். இவ்வுவமையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் பொறுப்பும் கவலையும்
குட்டிக்கு உண்டு. அது தான் தாயை உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் பூனை குட்டியைக் கவ்விக் கொண்டு
செல்லும்பொழுது பூனைக்குட்டி எவ்விதப் பொறுப்பும் கவலையும் இன்றி நிம்மதியாக
இருக்கும். குட்டியை பாதுகாப்பாய் கவ்விச் செல்லும் பொறுப்பு தாயிற்குத் தான்
உண்டு.
இறைவனை அடைய விரும்பும் ஜீவாத்மா
சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட தருமங்களை அல்லது கடமைகளைக் கடைப்பிடித்துப் பற்றி
ஒழுகுவதே பரமாத்மாவை அடைய வழி என்று வடகலையார் கருதுகின்றனர். மாறாகத் தென்கலையாரோ
ஜீவாத்மா முழுக்க முழுக்க தன்னை இறைவனிடம் ஒப்புக் கொடுத்து சரணாகதி அடைந்து விட்டால்
போதும், மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான் என
நம்புகின்றனர்.
மொத்தத்தில் ஞான மார்க்கத்தை விட
முக்கியமாய் பக்தியும், சரணாகதியுமே இறைவனை அடையும் வழிகள் என்று சொல்லி
விசிஷ்டாத்வைதம் பின் வரும் தலைமுறைகளுக்குப் பக்தி மார்க்கத்தை வழிகாட்டி
இருக்கிறது!
-
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி
- ஆன்மிகம் – 6-8-2013
Great
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஆன்மீகம் ருசிக்கச் செய்யும் பகிர்வுக்கு நன்றி.
தங்களின் பதிவுகளின் மூலம் ஆதிசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் மற்றும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் போன்ற வேதாந்த தத்துவ விளக்கங்களை என்னைபோன்ற வேதங்கள் பற்றி அறியாதவர்களும் புரிந்துகொள்ளும் விதமாக விளக்கியுள்ளீர்கள். மிகவும் நன்றி.
ReplyDeleteவிளக்கத்துடன் ஒவ்வொரு மார்கத்தின் சாராம்சத்தை உள்வாங்கி மிகவும் எளிமைப்படுத்தி, அத்வைதத்திற்கு திரைப்படம். த்வைததிற்கு உலகம். விசிஷ்டாத்வைதத்திற்கு பாம்பு ( பாம்பு உதாரணம் இரு மார்க்கங்களில் சொல்லப்பட்டாலும் அதை இரு கோணங்களில் விளக்கியது) போன்ற உதாரணங்களுடன் விளக்கியது தங்களின் தனித்தன்மை.
உங்களின் பதிவுகள் மூலம் ஏற்பட்ட புரிதலில் அனைத்து மார்க்கமும் சரியென்றே தோன்றுகிறது. மூன்று மார்கத்திலும் உயர்வாக போற்றக்கூடிய மகான்கள் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு மார்கத்தை கடைபிடித்தாலும் எல்லோராலும் மகான்களாக போற்றப்படுகிறார்கள். அதற்குரிய ஒற்றுமையான பண்பு என்ன என்பதை பற்றி சிந்தித்த பொழுது தோன்றியவை,
1. எந்த கருத்துக்களில் நம்பிக்கையை வளர்த்தார்களோ அதை உணர்ந்தார்கள் .
2. எதை உணர்ந்தார்களோ அதை வாழ்ந்தார்கள்
3. வாழ்க்கையில் ஞானத்தை அடைந்தார்கள்.
4. அவர்கள் அடைந்த வழியை ஒரு மார்க்கமாக பெயரிட்டு அனைவருக்கும் உபதேசம் செய்தார்கள்.
ஆகவே நாமும் வேதங்களில் உள்ள மார்க்கங்களில் நம்மால் ஏற்றுக்கொள்ள கூடிய , பொருத்தமான ஒன்றில் நம்பிக்கையை வலுப்படுத்தி, உணர்ந்து, வாழ்ந்தால் ஞானத்தை அடையலாமோ ?
விவேகானந்தரின் எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது இதுதானோ ?
இன்றைய அறிவில்
அன்பு வாசகன்,
பா.சரவணக்குமார்
www.facebook.com/groups/nganeshanfans
உண்மை உண்மை சார் ,,,
ReplyDeleteபக்தி மார்கமே சிறந்தது .., அருமையாக சொன்னீர்கள் .., பொக்கிஷமான கருத்துக்கள் எளிய நடையில் புரியும் படியாக கூறியுள்ளிர்கள் ..., வணங்குகிறோம் .,
இராமானுஜர் மத்வருக்கு காலத்தால் முற்பட்டவர்.அவரின் வசிஷ்டாத்வைதம் துவைத அத்வைதக் கலப்பு என்பது எவ்வாறு பொருந்தும் ஐயா?
ReplyDeleteநமக்குப் புரிந்து கொள்ள அது துவைத அத்வைதக் கலப்பு என்று கூறினேன் அவ்வளவு தான். கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஆதிசங்கரர் மத்வர் வாழ்ந்த காலத்திற்கு மத்திய காலத்தில் வாழ்ந்தவர் என்று நானும் சொல்லியிருக்கிறேனே.
Deleteஅ-த்வைதம் என்ற தத்துவம் கிளர்ந்தெழ வேண்டுமானால், த்வைதம் என்ற தத்துவம் ஏற்கெனவே இருந்திருக்க வேண்டுமே! அதற்கான காரண காரியங்களை முறையாகக் கற்பித்து அதை institutionalise செய்தவர் மத்வர்.
ReplyDeleteநன்றி
ReplyDeleteபக்தி மார்க்கம் இறைவன் இருக்குமிடம், செல்லும் வழியை மட்டுமே காட்டும்.
ReplyDeleteஆனால் ஞான மார்க்கமோ, நம்முள் இருக்கும் இறைவனை அரிய செய்யும் அற்புத கலை.
"அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம், அறிவு முழுமை அது முக்தி"
அவ்வாறு அறிவதற்கு பயிற்சி முறைகள் வகுத்துள்ளார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை என்னும் அற்புத தத்துவத்தின் மூலம்.
வாழ்க வளமுடன் !
Valga valamudan
Deleteதன்னையறிய தனக்கொரு கேடில்லை
ReplyDeleteதன்னையறிதலே முக்கியம் மார்க்கம் இல்லை
sudha adhvaitham, dwaitham ivai anaiththum erkanave vedhaththaal vivarikkapaata ondru. bhedha sruthi, abhedha sruthi kataka shruththi ivaigalai kondu ariyaadhanvattrai ariviththavar ramanujar. dwiththam adhwaitham iradikkumaai palam amaithavar avare. enave thaan avaradhu kolgai visheshamaana dwitham, visheshamaana adhvaitham enak karudhapadum vishistaathwaidham endru pottrap padugindradhu.
ReplyDeleteVery nice explanation. Thank you🙏
ReplyDelete