ஷாஹாஜி மெல்லச் சொன்னார். “நான் நாளையே கிளம்புவதாக இருக்கிறேன்
ஜீஜா”
ஜீஜாபாயும்
சிவாஜியைப் போலவே சொன்னாள். “போய்த் தான் ஆக வேண்டுமா. இங்கேயே இருந்து விடலாமல்லவா.
தாய் மண்ணில் வயோதிகத்தைக் கழிப்பது எல்லோருக்குமே இதமானதல்லவா?”
ஷாஹாஜி
சிவாஜியிடம் சொன்ன காரணத்தையே மீண்டும் ஜீஜாபாயிடமும் சொன்னார். இருவருக்கிடையே சிறிய
கனத்த மௌனம் நுழைந்தது. எத்தனையோ சொல்லவும், கேட்கவும் இருந்தும் எதையும் சொல்ல முடியாமல்,
கேட்கத் துணியாமல் ஏற்படும் கனமான மௌனம் அது.
ஜீஜாபாய்
அந்த மௌனத்தை உடைத்தாள். “நீங்கள் மிகவும் களைத்துக் காணப்படுகிறீர்கள். உங்கள் உடல்
ஆரோக்கியத்தைச் சரியாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.”
ஷாஹாஜி
தலையசைத்தார். பின் விரக்தியுடன் சொன்னார். “இந்தக் களைப்பு வாழ்வதில் வந்தக் களைப்பு
ஜீஜா. சாம்பாஜியின் மரணத்திற்குப் பின் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. சில நேரங்களில்
வாழ்வதில் அலுப்பை உணர்கிறேன். வெங்கோஜி சிறியவனாக இல்லாமல் வளர்ந்து ஒரு நிலையை எட்டியிருந்தால்
நான் என்றோ இந்த வாழ்க்கையை முடித்திருப்பேனோ என்னவோ?”
மூத்த
மகனின் நினைவு ஜீஜாபாயையும் கண்கலங்க வைத்தது. ஆனால் அவள் பக்குவத்துடன் சொன்னாள்.
“நேசிக்கும் ஒவ்வொரு மனிதருடனும் நாம் இறந்து விடுவோமானால் அனைவருக்குமே அற்பாயுளாகத்
தான் இருக்க முடியும். அவரவர் காலம் வராமல் இந்த உலகில் இருந்து யாருமே போக முடிவதில்லை.
இறைவன் நிர்ணயித்திருக்கும் ஆயுளை நீட்டிக்கவோ, குறைக்கவோ நமக்கு வழியில்லாத போது இருக்கும்
வரை ஆரோக்கியமாக இருப்பதல்லவா சரி”
ஷாஹாஜி
அவள் வார்த்தைகளில் இருந்த ஞானத்தை யோசித்துப் பார்த்தார். சிவாஜி அடைந்திருக்கும்
பக்குவம் இவளிடமே அவனுக்கு வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. சாம்பாஜியின் மரணம்
அவரைப் போலவே தாயான அவளுக்கும் சகிக்க முடியாததாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அவர் அளவுக்கு அவள் உடைந்து விடவில்லை…..
ஷாஹாஜி
குரல் உடையச் சொன்னார். “சாம்பாஜியின் மரணத்தை இறைவன் நிர்ணயித்தானோ, அப்சல்கான் நிர்ணயித்தானோ,
அவனை அங்கு படையுடன் அனுப்பிய போது நானே நிர்ணயித்து விட்டேனோ எனக்குப் புரியவில்லை
ஜீஜா. ஆனால் அவனை அனுப்புவதற்குப் பதிலாக நானே அங்கே போயிருக்கலாமோ என்ற அந்தக் குற்றவுணர்ச்சி
மட்டும் என்னை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. உன்னிடமிருந்து பிரித்த குழந்தையைத்
திருப்பி எந்தக் காலத்திலும் உன்னிடம் சேர்க்க முடியாமல் போயிற்றே என்று நான் வருந்தாத
நாளில்லை”
ஜீஜாபாய்
கண்களில் நீர் திரையிட கணவரை வேதனையுடன் பார்த்தாள். “யார் யாருடன் எத்தனை நாட்கள்
நம்மால் இருக்க முடியும் என்பது என்றுமே நம் கையில் இருந்ததில்லை. இறைவனின் தீர்மானத்தின்படியே
எல்லாம் நடக்கிறது. அதனால் அதற்கெல்லாம் வருத்தப்படுவதற்குப் பதிலாக அவர்களுடன் இருந்த
நல்ல நினைவுகளை மனதில் பத்திரப்படுத்திக் கொண்டு அந்த நினைவுகளில் ஆசுவாசப்படுத்திக்
கொள்ள நான் பழகிக் கொண்டிருக்கிறேன். அதை மட்டும் பழகிக் கொண்டிருக்கா விட்டால் என்றோ
நான் உடைந்து உருக்குலைந்து போயிருப்பேன். நீங்களும் அதைப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை
சுலபமாகும்…..”
ஷாஹாஜிக்கு
அவளுடைய வார்த்தைகள் மிக அழகான பாடமாகத் தோன்றிய அதே சமயம் எத்தனையோ பழைய நினைவுகளையும்
அடிமனதிலிருந்து மேலே எழுப்பி விட்டன. அவரும் அவளும் நேசித்த நாட்கள், இருவருமாகச்
சேர்ந்து சாம்பாஜியைக் கொஞ்சிய நாட்கள்……. எல்லாம் இப்போது நினைவுகளாக மட்டுமே….. ஷாஹாஜி
கண்கள் கலங்க அவள் கையைப் பிடித்துக் கொண்டார். “ஜீஜா……”
அவள்
கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. அவர் அவளைத் தொட்டு எத்தனையோ ஆண்டுகள்
ஆகியிருந்தன…. சிறிது நேரம் இருவரும் அப்படியே நின்றிருந்தார்கள். பின் அவர் அவள் கையை
விட்டார். “நான் கிளம்புகிறேன் ஜீஜா”
அவள்
கண்ணீருடன் தலையசைத்தாள். அவர் அவள் அறையிலிருந்து கனத்த இதயத்துடன் வெளியேறினார்.
மறுநாள்
காலையில் சிவாஜி அவரை ராஜ உபசாரத்துடன் அனுப்பி வைத்தான். ஏராளமான பரிசுப் பொருள்களை
அவருக்கும், துகாபாய்க்கும், வெங்கோஜிக்கும் தந்தான். தந்தை மகன் பிரிந்த காட்சி காண்போரை
மனம் உருக்குவதாக இருந்தது. ஷாஹாஜி மகனை எல்லையில்லாத பாசத்துடன் தழுவிக் கொண்டு விடைபெற்றார்.
இனியொரு முறை அவனைச் சந்திக்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அன்பானவர்களிடமிருந்து
விடைபெறுகையில், கடைசி சந்திப்பு என்று உணரும் போது ஏற்படும் உணர்ச்சிகளின் பிரவாகம்
யாருக்கும் விவரிக்க முடிந்ததல்ல.
ஷாஹாஜி
பிரிவதற்கு முன் காலில் விழுந்து வணங்கி எழுந்த மகனுக்கு ஆசிகள் வழங்கி விட்டுச் சொன்னார்.
“சிவாஜி. உன் கனவு பலிக்கட்டும். நம் குலம் உன்னால் பெருமை பெறட்டும். உலகம் உள்ள வரை
உன் புகழ் நிலைத்திருக்கட்டும். குழப்பமான சமயங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும்
உன் தாயிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து கொள். அவளைக் கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக்
கொள். என் காலத்திற்குப் பிறகு துகாபாயும், வெங்கோஜியும் உன்னிடம் உதவி கேட்டு வருவார்களேயானால்
மறுத்து விடாதே….”
சிவாஜி
கண்ணீரோடு தலையசைத்தான். அவனுக்கும் இது இருவருக்குமிடையேயான கடைசி சந்திப்பு என்று
உள்ளுணர்வு சொன்னது. தந்தை அவன் கண்களுக்கு மிகவும் சோர்வாகத் தெரிந்தார். தனியாக தம்பி
வெங்கோஜியிடம் சிவாஜி “தந்தையை நன்றாகப் பார்த்துக் கொள் தம்பி” என்று அவன் சொன்ன போது வெங்கோஜி “அது என் கடமை அண்ணா. நீங்கள் கவலைப்படாதீர்கள்”
என்று சொன்னான்.
அவர்கள்
கிளம்பினார்கள். பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை அவனும் ஜீஜாபாயும் பார்த்துக்
கொண்டே நின்றிருந்தார்கள்…..
பீஜாப்பூர் நகருக்குள் ஷாஹாஜி நுழையும் போதே அரசருக்குரிய மரியாதையுடன்
அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அரண்மனையை நெருங்கிய போதோ சுல்தான் அலி ஆதில்ஷாவே வெளியே
நின்று அவரை வரவேற்றான். இணையான அரசர்கள், அல்லது தங்களை விடப் பெரிய அரசர்கள் வரும்
போது மட்டுமே ஒரு அரசன் வாசல் வரை வந்து நின்று வரவேற்பு தருவது வழக்கம். அந்த வரவேற்பில்
ஷாஹாஜி நெகிழ்ந்து போனார்.
“தங்கள்
பயணம் எப்படி இருந்தது ஷாஹாஜி அவர்களே” அலி ஆதில்ஷா அவரை உள்ளே அழைத்துச் சென்றபடி
கேட்டான்.
”சிறப்பாக
இருந்தது அரசே. உங்கள் ஊழியனுக்கு என்ன குறை இருக்க முடியும்?” என்று ஷாஹாஜி சொன்னார்.
உபசார
வார்த்தைகளே ஆனாலும் அலி ஆதில்ஷாவுக்கு அவர் வார்த்தைகள் இதமாக இருந்தன. உங்கள் ஊழியன் என்று சொன்னது சிவாஜியின் தந்தை அல்லவா!
அரண்மனையின் வரவேற்பறையில் அவரை அமர வைத்த பின் அலி ஆதில்ஷா ஆவலோடு கேட்டான்.
“சிவாஜி
என்ன சொல்கிறான் ஷாஹாஜி அவர்களே?”
ஷாஹாஜி
அலி ஆதில்ஷாவிடம் சுருக்கமாகச் சொன்னார். “தங்கள் நட்பை என் மகன் ஏற்றுக் கொண்டான்
அரசே”
அலி
ஆதில்ஷா நிம்மதிப் பெருமூச்சு விட்டான். மனதில் இருந்த மலை கீழிறங்கியது போலிருந்தது.
ஷாஹாஜி
சொன்னார். “தாங்களாக அவனுக்கு எதிராக இயங்காத வரை, அவனுடைய எதிரிகளுக்கு உதவாத வரை
அவன் தங்களுடன் சமாதானமாகவே இருப்பான் அரசே”
அலி
ஆதில்ஷா சொன்னான். “நான் அமைதியையே விரும்புகிறேன் ஷாஹாஜி அவர்களே! அவனுக்கு எதிராக
நான் செயல்படுவதாக இல்லை.”
ஷாஹாஜி
சிவாஜி தனக்குத் தந்திருந்த பரிசுகளில் பாதிக்கும் மேல் அலி ஆதில்ஷாவுக்கு அளித்து
விட்டு, “இது நட்புக்கரம் நீட்டிய தங்களுக்கு சிவாஜி அனுப்பிய பரிசுப் பொருள்கள் அரசே!
தயவு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.”
அலி
ஆதில்ஷா வியப்புடன் அந்தப் பரிசுப் பொருள்களை வாங்கிக் கொண்டான். சிவாஜி அனுப்பியதாக
ஷாஹாஜி தந்த பரிசுப் பொருள்கள் முழுவதுமாகச் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற மன உறுத்தலை
அவன் மனதில் பெருமளவு தணித்தது. அலி ஆதில்ஷாவின் நட்பு முக்கியம் என்று கருதி மதித்து
சிவாஜி பரிசுப் பொருட்கள் அனுப்பி இருப்பதாகத் தோன்றியது. கௌரவம் முழுவதுமாகப் பறிபோய்
விடவில்லை என்று அடுத்தவர்களுக்குக் காட்டவாவது இந்தப் பரிசுப் பொருள்கள் பயன்படும்
என்று அவனுக்குத் தோன்றியது.
அவன்
முகத்தில் தெரிந்த சிறு மலர்ச்சியைக் கவனித்த ஷாஹாஜி மனம் லேசானது. இவனும் அவர் மகன்
போன்றவனே. சக்திக்கு மீறிய பிரச்னைகளைச் சந்தித்து ஓய்ந்து உடைந்து போயிருக்கும் இவன்
மனதில் இந்த மலர்ச்சி ஏற்படுத்த முடிந்தது
மனதிற்கு நிறைவாக இருந்தது. பரிசுப் பொருள்களில் மனம் திளைக்கும் காலத்தை என்றோ கடந்து
விட்டிருந்த ஷாஹாஜி இந்தச் சின்னப் பொய்த் தகவலால் இந்த நட்பு நீடித்தால் நல்லது என்று
நினைத்தார்.
அந்த
நாள் இரவில் நீண்ட காலத்திற்குப் பிறகு அலி ஆதில்ஷா நிம்மதியாக உறங்கினான்.
(தொடரும்)
என்.கணேசன்
Emotional, interesting and at last tension building because of shaistakhan.
ReplyDeleteஆறு சுவையும் கலந்த உணவை சாப்பிட்ட பிறகு வரும் திருப்தியாக இன்றைய பதிவு அமைந்துள்ளது மிகவும் சிறப்பு. அருமை. நன்றி வணக்கம்
ReplyDeleteஜீஜாபாயின் மனப்பக்குவமும், ஷாஹாஜி ஆதில்ஷாவிடம் காட்டும் இரக்கமும் அற்புதம். ஆனால் கடைசியில் சிவாஜி தூக்கத்தைக் கெடுத்து விட்டீர்களே சார்.
ReplyDeleteஅலி ஆதில்ஷாவுக்கு நிம்மதியான தூக்கம் கிடைத்துவிட்டது... ஆனால், சிவாஜிக்கு பறி போயி விட்டதே...
ReplyDeleteசிவாஜி மற்றும் ஷாஹாஜியின் இறுதி சந்திப்பு எங்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டது...
கடைசிக்கு முந்தைய பாராவை படிக்கும் வரை எனது இதயம் ஒரு சோகத்தை உணர்ந்தது கடைசி பாராவை படிக்கும்போது பயத்தை உணர்ந்தது
ReplyDeleteகணேசன் சார் சூப்பர் சார்
ஒருநாள் கோவை வந்தால் உங்களை சந்திக்க வேண்டும்
அருமை !
ReplyDelete