என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, August 3, 2015

மரணத்தையும் நிறுத்தி வைக்குமா மகாசக்தி?

மகாசக்தி மனிதர்கள்-32  

குருவருளால் யோகானந்தரின் உடல்நலம் எப்படி இரண்டே வாரங்களில் மேம்பட்டது என்று பார்த்தோம். அது யோகானந்தரைப் பிரமிக்க வைத்தது. நவீன மருந்துகளாலும், மருத்துவத்தாலும் முடியாததை நம் குருதேவர் தன் யோகசக்தியாலேயே சாதித்துக் காட்டி விட்டாரே என்று மகிழ்ந்தார்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் பொய்யான தோரணைகளோ, தன்னை மேம்படுத்திக் காட்டிக் கொள்ளும் பாசாங்குகளோ கிடையாது என்பதை முதலிலேயே பார்த்தோம். தன் சீடரின் பிரமிப்பை ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய குருவான லாஹிரி மஹாசாயா இதை விடப் பெரிய அற்புதங்களை இதை விடக் குறுகிய காலத்திலேயே செய்து காட்டி உள்ளார் என்று சொல்லித் தன் சொந்த உடல்நலத்தில் தன் குருவின் சக்தி எந்த விதத்தில் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்பதைத் தெரிவித்தார்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி லாஹிரி மஹாசாயாவிடம் சீடனாகச் சேர்ந்த காலத்தில் எப்போதும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.  அதன் விளைவாக அவர் உடல் எடையும் வெகுவாகக் குறைந்திருந்தது. குருவிடம் அவ்வப்போது தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உடல் உபாதைகளைப் பற்றி அவர் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கமாக இருந்தது.

தன் சீடன் ஆன்மிக விஷயங்களில் மிகவும் ஆழமாகவும் உண்மையாகவும் இருந்த போதும் உடல்நல விவகாரங்களில் கொண்டிருக்கும் கவனம் சிறிதும் போதாது என்பது லாஹிரி மஹாசாயாவின் அபிப்பிராயமாக இருந்தது.

“உன் எண்ணங்களில் உன் ஆரோக்கியம் குறித்த அபிப்பிராயம் உயர்வாக இல்லை. உன் உடல் பலவீனமானது என்று ஆழமாக நம்புகிறாய். அதனால் தான் உனக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. உன் எண்ணங்களில் உடல் பலவீனம் குறித்த சிந்தனையை மாற்று. உடல் உடனடியாக நலமடைய ஆரம்பிக்கும். ஆழ்மன எண்ணங்களையும் நம்பிக்கையையும் ஒட்டியே உடல் தன்னை வைத்துக் கொள்கிறது.”  என்று லாஹிரி மஹாசாயா தன் சீடனான ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் சொன்னார்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் குருவிடம் கேட்டார். “அப்படியானால் நான் என் உடல் வலிமையானது என்று நம்பினால் அப்படியே என் உடல் வலிமையாகி விடுமா. நான் என் முந்தைய உடல் எடையைப் பெற்று விடுவேனா?

“ஆம். நீ நம்பு. இப்போதே அது நிகழும்என்று சொன்ன லாஹிரி மஹாசாயா ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் கண்களையே கூர்மையாகப் பார்க்க ஆரம்பித்தார். குருவின் பார்வை தன் மீது நிலைத்திருக்கையிலேயே அவர் சொன்னபடியே தன் எண்ணங்களை பலவீனத்தில் இருந்து பலத்திற்கு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி மாற்றினார். சில மணி நேரங்களிலேயே உடல் சக்தி கூடியது மட்டுமல்லாமல் உடலின் எடையும் கூட ஆரம்பித்தது.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சில மணி நேரங்கள் கழித்து வீட்டுக்குப் போன போது அவருடைய தாயார் திகைத்துப் போனார். “மகனே உனக்கு என்ன ஆயிற்று. உடம்பு ஏன் இப்படி வீங்கி விட்டது?மிக ஒல்லியாக வீட்டிலிருந்து கிளம்பிய மகன் அதே நாள் நல்ல பருமனோடு திரும்பி வந்தால் வீக்கம் என்று தானே தாயார் நினைக்க முடியும்?

மறுநாள் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் எடையைப் பார்த்தார். ஒரே நாளில் ஐம்பது பவுண்டுகள் கூடி இருந்தது தெரிந்தது. ஒரே நாளில் நிகழ்ந்த இந்த அற்புதத்தைக் கண்ட ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் நண்பர்களும், அவரை அறிந்தவர்களும் பலர் உடனடியாக லாஹிரி மஹாசாயாவின் சீடர்களாக மாறினார்கள்.

இந்தத் தகவலைத் தன் சீடர் யோகானந்தரிடம் தெரிவித்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அன்று ஒரே நாளில் கூடிய எடை பின் எப்போதும் குறையாமல் அப்படியே தொடர்ந்து இருந்து வருகிறது என்பதையும் தெரிவித்தார். அவர் யோகானந்தரிடம் இந்த நிகழ்ச்சி பற்றி தெரிவித்ததன் மூலம் ‘என்னுடைய குருவின் சக்திக்கு முன் என் சக்தி ஒன்றுமில்லைஎன்று தெரிவிக்கும் பணிவு அல்லவா நமக்குத் தெரிகிறது. 

பரமஹம்ச யோகானந்தருக்குத் தன் குருவின் அருளைத் தன் நண்பர்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற பேராவல் இருந்தது. முடிந்த வரை அவ்வப்போது தன் நண்பர்களை வற்புறுத்தி செராம்பூர் ஆசிரமத்திற்கு அழைத்து வர ஆரம்பித்தார். அப்படி வந்த நண்பர்களில் ஒருவன் பெயர் சசி!

சில முறை சசி வந்த பின் அவனிடம் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். “நீ உன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் இனி ஒரு வருடம் கழித்து நீ கடும் நோயால் அவஸ்தைப்படப் போகிறாய்

சசியிடம் உடல் நலத்திற்கு எதிரான பல பழக்க வழக்கங்கள் இருந்தன. அதை மாற்றிக் கொள்ளச் சொல்லி தான் அவர் அவனுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் விளையாட்டுப் பேர்வழியான சசி நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் எனக்கு என்னை மாற்றிக் கொள்ளும் மனபலம் இல்லை.என்று சொல்லி அப்படியே இருந்தான். அவன் ஜாதகப்படி பவள மோதிரம் அணிந்து கொள்வது நல்லது என்று அவர் சொன்னதையும் அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு வருட காலம் கழித்து ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் யோகானந்தரும் மாடியில் இருக்கையில் கீழே கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. “உன் நண்பன் சசியாகத் தான் இருக்க வேண்டும். அவன் நுரையீரல் இரண்டும் போய் விட்டது. என் எச்சரிக்கையை அவன் பொருட்படுத்தவில்லை. இப்போது வந்து என்ன பயன்? நான் அவனைச் சந்திக்க விரும்பவில்லை என்று சொல்என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி கூறினார்.

யோகானந்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் நண்பன் சசி அங்கே வந்து பல மாதங்களாகிறது. அப்படி இருக்கையில் வந்தது அவன் தான் என்றும் அவன் நுரையீரல் இரண்டும் பழுதாகி விட்டது என்றும் இப்போது குரு கூறுகிறாரே என்று எண்ணியவராக கீழே விரைந்து சென்றார்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி கூறியது போல வந்திருந்தது சசி தான். அவன் அவசரமாகப் மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தான். “குரு இருக்கிறாரா?என்று அவன் கேட்ட போது யோகானந்தர் “இருக்கிறார், ஆனால் உன்னைக் காண அவர் விரும்பவில்லைஎன்று சொன்னார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அவரைத் தாண்டி ஓடி வந்து ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி கால்களில் வந்து சசி விழுந்தான். குருவே எனக்கு காச நோய் இருப்பதாகவும் நான் இன்னும் மூன்று மாதங்கள் தான் உயிர் வாழ முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உங்களால் தான் என்னைக் குணப்படுத்த முடியும். எனக்கு கருணை காட்டுங்கள்என்று கண்ணீர் விட்டு அழுதான். அவன் அவர் காலடியில் மூன்று அழகான பெரிய பவளங்களையும் வைத்தான்.

“எச்சரித்த போது நீ உன்னை சரிப்படுத்திக் கொள்ளாமல் இப்போது வந்து என்ன பயன்? இந்தப் பவளங்களால் இனி உனக்கு எந்தப் பயனும் இல்லை.என்று கடுமையாகச் சொன்னார் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி.

சசி தொடர்ந்து அவர் காலடியிலேயே கதறிக் கொண்டிருந்தான். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார்.  கடைசியில் மனம் கனிந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி “சரி எழுந்து வீட்டுக்குப் போ. நீ இந்தக் காச நோயால் இறக்க மாட்டாய்என்று உத்திரவாதம் அளித்தார். அந்தப் பவளங்களைத் திருப்பித் தந்து விடும்படியும் அதற்குப் பதிலாக வேறு ஒரு வளையத்தைக் கையில் போட்டுக் கொள்ளும்படியும் சொன்னார்.

சசி கேட்டான். “மருத்துவர்கள் சொன்ன மருந்தைச் சாப்பிட வேண்டுமா வேண்டாமா

“அது உன் இஷ்டம். ஆனால் அந்த மருந்தால் உனக்கு இப்போது எந்தப் பலனும் கிடைத்து விடப் போவதில்லை”  என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார்.

சசி மனநிம்மதி அடைந்து அவரைத் தொழுது விட்டு வீடு திரும்பினான். ஆனால் தொடர்ந்த நாட்களில் அவன் உடல்நலம் மோசமாகிக் கொண்டே போனது. ஒரு நாள் யோகானந்தர் கல்கத்தாவில் இருந்த சசியைப் பார்க்கப் போன போது சசி எலும்பும் தோலுமாக இருந்தான். மருத்துவர் அவன் அன்றைய இரவு வரை கூடத் தாங்க மாட்டான் என்று யோகானந்தர் முன்னிலையிலேயே தெரிவித்தார்.

மருத்துவர் சொன்னதும், சொன்னதற்கு ஏற்ற்படி நண்பனின் உடல்நிலை இருந்ததும் யோகானந்தரைக் குழப்பியது. மருத்துவம் மெய்யாகுமா, குருவின் வாக்கு மெய்யாகுமா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி : தினத்தந்தி 25.03.2015

(1.8.2015 முதல் 11.8.2015 வரை ஈரோட்டில் வ.உ.சி மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 41 எண் அரங்கில் என்னுடைய நூல்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். புத்தகக் கண்காட்சிக்குச் செல்பவர்களும், அருகில் உள்ளவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

அன்புடன்
என்.கணேசன்)

1 comment:

  1. Maha sakthi manitharkal thodar pala. Padipinaiyum,acharyathaiyum ..tharukirathu.

    ReplyDelete