சம்யே மடாலயத்தை ரகசியமாய் கண்காணித்துக்
கொண்டிருந்த ஒடிசல் இளைஞனுக்கு உள்ளே சென்ற லாரி டிரைவரும், உடன் சென்றவனும் நீண்ட
நேரம் வெளியே வராததால் மடாலயத்துக்குள்ளேயே உறங்கத் தீர்மானித்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் பைனாகுலரை அவன் கீழே வைக்கவில்லை. ஒரு
கணமும் கண்காணிப்பைத் தளர்த்த விரும்பவில்லை. ஜீப்பை ஓட்டி வந்து பாறைக்குப் பின்
நிறுத்தியவனுக்கு அவனளவு பொறுமை இல்லாததால் அவன் ஜீப்பில் இருந்து இறங்கி சோம்பல்
முறித்து விட்டு ஜீப்பில் சாய்ந்து நின்று கொண்டான். ”நான் வேண்டுமானால் சிறிது
நேரம் பார்க்கட்டுமா?” என்று ஒடிசல் இளைஞனிடம் கேட்டான்.
‘ஒரு இடத்தில் தொடர்ந்தாற்போல சில
நிமிடங்கள் உட்கார முடியாதவனுக்கு பாறை உடலை உறுத்த சாய்ந்து கொண்டு, வைத்த கண்
எடுக்காமல் பைனாகுலரில் கண்காணிப்பது முடிகிற காரியமா என்று நினைத்த ஒடிசல் இளைஞன்
“வேண்டாம்” என்று ஒற்றை
வார்த்தையில் பதில் சொல்லி தன் கண்காணிப்பைத் தொடர்ந்தான். ஜீப்பில் வந்தவன்
அவர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல. திபெத்திய மலைப்பகுதிகளில் அனாயாசமாகவும், அதிக
வேகத்துடனும் ஜீப்பை ஓட்ட வல்லவன் என்ற காரணத்திற்காக தற்காலிக வேலைகளுக்கு அவனை
ஒடிசல் இளைஞன் பயன்படுத்தி வருகிறான். அவனிடம் உள்ள மிக நல்ல பழக்கம் அவன் கேட்கிற
பணத்தைக் கொடுத்து விட்டால் அனாவசியக் கேள்விகள் கேட்க மாட்டான், என்ன வேலையைக்
கொடுத்தாலும் செய்வான். இந்த வேலைக்கே சம்யே மடாலயத்தில் இருந்து ரகசியமாய் வெளியே
வரும் ஒரு இளைஞனையும் ஒரு சிறுவனையும் பின் தொடர்ந்து அவர்கள் போகும் இடத்தை
அறிந்திருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தானே ஒழிய மற்ற விஷயங்களை அவனிடம்
தெரிவித்திருக்கவில்லை....
திடீரென்று சம்யே மடாலய வாயிலில் லாரி
டிரைவரும் அவனுடன் சென்றவனும் தெரிந்தார்கள். ஒடிசல் இளைஞன் முழுக் கவனமானான்.
லாரி டிரைவரும் மற்றவனும் உள்ளே இருந்து திரும்ப எடுத்துக் கொண்டு வந்தக் காலி
பெட்டிகளை லாரியில் கொண்டு வந்து ஏற்ற ஆரம்பித்தார்கள். ஒடிசல் இளைஞன் அவர்களுடன்
திடீர் என்று மைத்ரேயனும், அவனுடைய பாதுகாவலனும் ஏறுவார்கள் என்று
எதிர்பார்த்தான். மாரா கணிப்பு பொய்க்காது.....
தலைமை பிக்குவும், அவரது பிரதான
சீடனும் திடீரென்று வாசலில் தெரிந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தலைமை
பிக்கு தலையசைக்க மின்னல் வேகத்தில் ஒரு உருவம் சம்யே மடாலயத்தில் இருந்து
லாரிக்குள் போய்ச் சேர்ந்தது. ஒடிசல் இளைஞன் அசந்து போனான். என்ன வேகம் இது. போனது
ஒருவன் மட்டுமா? அவனால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.
லாரிக்குள் சென்றது மைத்ரேயனின்
பாதுகாவலனாகத் தான் இருக்க வேண்டும். கழுத்து திருகி இறந்த அவர்கள் இயக்க ஆள் நினைவுக்கு
வந்தான். அவனை இவன் இப்படித் தான் நெருங்கி இருக்க வேண்டும். என்ன நடக்கின்றது
என்று உணர்வதற்குள் கழுத்து திருகி விழுந்திருக்கிறான் அவன்.
ஒடிசல் இளைஞன் மெல்ல சொன்னான்.
“தயாராகிக் கொள்”
ஜீப்பில் சாய்ந்திருந்தவன் உடனடியாக ஜீப்பில்
ஏறினான். ஒடிசல் இளைஞன் தலைமை பிக்கு கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்தான். பிரதான
சீடனும் சோகமாகவே பார்த்தபடி நின்றிருந்தான். சந்தேகமில்லாமல் பாதுகாவலன்
மைத்ரேயனையும் தூக்கிக் கொண்டே லாரிக்குள் ஏறி இருக்க வேண்டும் என்பதை ஒடிசல்
இளைஞன் ஊகித்தான்.
லாரி டிரைவர் கடைசியில் தலைமை பிக்குவிடம் ஏதோ
பேசி தலையசைத்து விடை பெற்றான். தலைமை பிக்குவும் தலையசைத்தார். லாரியில் ஏறி டிரைவர்
அமர்ந்தவுடன் ஒடிசல் இளைஞன் சொன்னான். “அவர்கள் கிளம்பப் போகிறார்கள்.” அப்போதும் அவன் பைனாகுலரில்
இருந்து கண்களை எடுக்கவில்லை. கடைசி நிமிடத்தில் ஏதாவது நடந்து அதைக் காணாமல்
இருந்து விட அவன் விரும்பவில்லை.
லாரி கிளம்பியது. ஒடிசல் இளைஞன்
பாறையில் இருந்து குதித்து ஜீப்பில் வேகமாக ஏறிக் கொண்டான். லாரி அந்தப்
பகுதியினைக் கடக்க அவர்கள் காத்திருந்தார்கள்.
லாரி
கிளம்பியவுடன் கனத்த மனத்துடன் தலைமை பிக்குவும் பிரதான சீடனும் உள்ளே
திரும்பினார்கள். தனதறைக்கு வந்த பின் தலைமை பிக்கு மைத்ரேயன் கழற்றிப்
போட்டிருந்த காவி ஆடையை கையில் எடுத்தார். இதுவும் ஒரு புனிதப் பொருளே அல்லவா என்று
அவருக்குத் தோன்றியது. பத்மசாம்பவாவின் தலைமுடியும், கைத்தடியும் இருக்கும்
இடத்தில் ஒரு நாள் இதுவும் இருக்கப்போகிறது. மைத்ரேயர் பிழைத்திருந்து உலகம் அவரை
அறியும் பாக்கியம் செய்திருந்தால்....
அன்று அவர் நீண்ட நேரம் உறங்கவில்லை.
அவரைப் போலவே
ஒற்றைக்கண் பிக்குவும் அன்றிரவு உறக்கம் வராமல் தவித்தார். அவருடைய
உறக்கம் லீ க்யாங்கோடு விடை பெற்றுப் போயிருந்தது. அவன் செல்வதற்கு முன் எந்தெந்த வகையில் எல்லாம்
டோர்ஜே இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டி இருக்கிறது என்று பாடம் நடத்தி விட்டுப்
போய் இருந்தான். நிஜ மைத்ரேயனோடு போட்டி இட வேண்டி இருக்கும் என்பதால்
இப்போதிருக்கும் திறமைகள் போதவே போதாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி
இருந்தான். இத்தனைக்கும் தோற்றத்தில் டோர்ஜேயைத் தான் மைத்ரேயனாக உலகம் நம்பும் என்று
ஆரம்பத்திலேயே சொன்னவன் அவன் தான். ஆனால் கிளம்புவதற்கு முன்னால் உண்மையான
மைத்ரேயனிடம் இருக்கும் சரக்கு என்ன என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பதால்
அலட்சியமாய் இருந்து விடக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டுப்
போயிருந்தான்.
கடைசி வரை அவன் உண்மையான மைத்ரேயனை
அப்புறப்படுத்தி விடுவேன் என்ற வகையில் ஒரு உத்திரவாதம் தராமல் இருந்தது அவருக்கு
உள்ளுக்குள் ஒரு பிரத்தியேக கிலியை ஏற்படுத்தி இருந்தது. மைத்ரேயனாக இருக்கலாம்
என்று நம்பி பத்து வருடங்களுக்கு முன்பே சில குழந்தைகளைக் கொன்று விட ஆணை இட்டவன்
இப்போது கண்டிப்பாக சும்மா இருக்க மாட்டான் என்பது அவருடைய அறிவுக்குப்
புரிந்தாலும் கடைசி வரை அவன் டோர்ஜேயுடன் போட்டியில் இருப்பான் என்கிற வகையிலேயே
லீ க்யாங் பேசி விட்டுப் போனது நெருடலாக இருந்தது.....
”உறக்கம் வரவில்லையா ஆசிரியரே?” டோர்ஜேயின் குரல்
கேட்டது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தார். டோர்ஜே எழுந்து அமர்ந்திருந்தான்.
“இல்லை டோர்ஜே. ஏதேதோ யோசனைகள்....”
“நீங்கள் கவலைப்படுவது போல்
தெரிகிறது. ஏன் ஆசிரியரே?”
“நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது டோர்ஜே.
இது வரை சாதித்திருப்பது எதுவும் போதாது என்று லீ க்யாங் சொல்லி விட்டுப்
போயிருக்கிறான்.... நீ ஜெயிக்க வேண்டுமானால் இன்னும் கடுமையாக பயிற்சிகள் செய்ய
வேண்டும். ஒப்பிட்டுப் பார்க்கும் போது நீ ஜொலிக்க
வேண்டும்”
“யாருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆசிரியரே”
ஒற்றைக்கண் பிக்கு ஒரு கணம் தயங்கினார். இன்றில்லா
விட்டாலும் பின் என்றாவது அவன் தெரிந்து கொள்ளப் போகும் உண்மை தான் என்பதால்
இப்போதே தெரிவித்து அவனைத் தயார்ப்படுத்தி விடுவது நல்லது என்று தோன்றியது. மெல்லச்
சொன்னார். “இன்னொரு மைத்ரேயன் இருக்கிறான் டோர்ஜே”
டோர்ஜேயின் முகம் போன போக்கைப் பார்க்கவே
ஒற்றைக்கண் பிக்குவுக்குக் கஷ்டமாக இருந்தது. தாங்க முடியாத அதிர்ச்சியில் அந்தச்
சிறுவன் உறைந்து போனான். பலவீனமான குரலில் மெல்லக் கேட்டான். “யாரவன் ஆசிரியரே?”
லீ க்யாங் காட்டிய மைத்ரேயன் புகைப்படத்தை
ஒற்றைக்கண் பிக்கு தன்னிடமேயே வைத்திருந்தார் என்ற போதும் அதை அவனிடம் காட்ட அவர்
விரும்பவில்லை. ”யாரென்று
தெரியவில்லை. இருக்கிறான் என்று மட்டும் லீ க்யாங் சொல்லித் தெரியும்”
”அந்த இன்னொரு மைத்ரேயனுக்கு என்னை விட அதிகம் தெரியுமா ஆசிரியரே?” வெகுளித்தனமாய்
கேட்ட டோர்ஜேயைப் பாசத்துடன் ஒற்றைக்கண் பிக்கு பார்த்தார். என்னவென்று அவர்
சொல்வார். மெல்ல சொன்னார். ”அவனுக்கு என்னவெல்லாம் தெரியும், எவ்வளவு
தெரியும் என்பதெல்லாம் இன்னும் லீ க்யாங்குக்கே தெரியவில்லை....”
லீ க்யாங்குக்குத் தெரியாத விஷயங்களும் உலகத்தில்
இருக்கும் என்பதை டோர்ஜேயால் நம்ப முடியவில்லை. ஆனால் லீ க்யாங் முக்கியத்துவம்
தரும் ஆள் ஒன்றுமில்லாதவனாய் இருப்பான் என்று மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை. தன்
மனதில் ஆழமாய் எழுந்த சந்தேகத்தை டோர்ஜே தன் ஆசிரியரிடம் கேட்டான்.
“அவன்.... அவன்.... நிஜமான மைத்ரேயனா ஆசிரியரே?
ஒற்றைக்கண் பிக்குவுக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை. “தெரியவில்லை” என்று மட்டும் சொன்னார்.
அந்தச் சிறுவனும் அன்று தூக்கத்தைத் தொலைத்தான்.
லாரி அவர்கள் இருந்த பாறைப்பகுதியைக் கடந்து சில
அடிகள் போனதும் ஒடிசல் இளைஞன் ஏற்பாடு செய்திருந்த ஜீப்பும் அவர்களைப் பின் தொடர
ஆரம்பித்தது. லாரிக்காரன் பின்னால் வரும் ஜீப் தாண்டிப் போக இடைவெளி விட்டபடி
மெல்லப் போனான். ஜீப் லாரியைத் தாண்டிப் போவதற்குப் பதிலாக வேகம் குறைந்து அதே
இடைவெளியில் பின் தொடர்ந்தது.
அது லாரிக்காரனை கோபப்படுத்தி இருக்க
வேண்டும். லாரியைப் படுவேகமாக ஓட்ட ஆரம்பித்தான். ஜீப்பை ஓட்டுபவனும் அதே
வேகத்தில் பின் தொடர்ந்தான். சில இடங்களில் ஜீப்பை அவன் ஓட்டிய லாவகம் ஒடிசல்
இளைஞனைப் பிரமிக்க வைத்தது.
பல மைல் தூரம் அப்படியே இரு
வாகனங்களும் சென்றன. கடுங்குளிர் நிறைந்த அந்த இரவு நேரத்தில் அந்த மலைப்பகுதியில்
வேறு எந்த வாகனங்களும் இருக்கவில்லை. லாரிக்காரன் வேண்டுமென்றே வேகத்தைக்
கூட்டியும், குறைத்தும் சென்றதோடு மலை வளைவுகளில் சாகசம் செய்தபடி ஓட்டினான். சற்று
ஏமாந்தாலும் பின் தொடரும் வாகனம் பாதாளத்தில் விழும் வாய்ப்பு இருந்தது. ஆனால் ஜீப்பை ஓட்டியவன் அதற்கெல்லாம் ஈடு
கொடுத்தே பாதுகாப்பாக ஓட்டிப் பின் தொடர்ந்தான்.
சிறிது தூரத்தில் வாங் சாவொவின்
ஆட்கள் அமைத்திருந்த பரிசோதனைச் சாவடி தெரிந்தது. லாரி தானாக வேகம் குறைத்துக்
கொண்டு பரிசோதனைச் சாவடியை நெருங்கியது. ஒடிசல் இளைஞன் ஜீப்பை ஓட்டுபவனிடம்
சொன்னான். ”இப்போது
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். நீ எதற்கும் ஜாக்கிரதையாக
பின்னாலேயே இரு”
பரிசோதனைச் சாவடி ஆட்கள் கையைக் காட்டி முன்னால்
வரும் லாரியை நிறுத்தினார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
கதை சூப்பராக போகுது அண்ணா. நாங்களும் திபெத்துல இருக்கற மாதிரி திக் திக்னு இருக்கு.
ReplyDeleteFantastic sir.
ReplyDeleteViru viruppaka sentru kondirukkirathu sir....
ReplyDeleteதிக் திக்....
ReplyDelete