சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 30, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 56


லீ க்யாங் ராணுவ மிடுக்குடன் வேகமாகப் படியேறி வந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஒற்றைக்கண் பிக்குவுக்கு மனம் திக் திக் என்றது. என்ன கேட்பானோ? என்ன சொல்வானோ? பின்னால் திரும்பி டோர்ஜேயைப் பார்த்தார். டோர்ஜே தன் இருக்கையில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தான். லீ க்யாங் அவனை மைத்ரேயனாகவே, அதாவது - கம்பீரமாக, புன்முறுவல் பூத்த முகம் கொண்டவனாக, யாருக்கும் தலை வணங்காதவனாக, தியானம், ஆன்மிகம், புத்தரின் போதனைகள் ஆகியவற்றில் பாண்டித்தியம் உள்ளவனாக- வாழச் சொல்லிக் கட்டாயப்படுத்தி இருந்தான். தன்னிடமே கூட அப்படியே நடந்து காட்டி அசத்த வேண்டும் என்று சென்ற முறை சொல்லி இருந்தான். அதனால் ஒற்றைக் கண் பிக்கு நேற்று பல முறை ஒத்திகை செய்து டோர்ஜேயை தயார்ப்படுத்தி இருந்தார். பின்னால் திரும்பியவர் டோர்ஜேயை தயார் தானேஎன்று பார்வையால் கேட்டார். டோர்ஜே தலையசைத்தான்.

லீ க்யாங் ஒற்றைக்கண் பிக்குவிடம் வாசலிலேயே கேட்டான். “எல்லாம் எப்படிப் போகிறது?

“நன்றாகப் போகிறதுஎன்று ஒற்றைக்கண் பிக்கு பதில் அளித்தார்.

லீ க்யாங் உள்ளே நுழைந்தான். இருக்கையில் அமர்ந்திருந்த டோர்ஜேயைப் பார்த்து தலை வணங்கினான். “வணங்குகிறேன் மைத்ரேயரே!

லீ க்யாங்கைப் பார்த்தவுடனே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனாலும் பின் டோர்ஜே சமாளித்துக் கொண்டு புன்முறுவலுடன் வலது கையை ஆசி வழங்கும் பாவனையில் உயர்த்தி “நலம் உண்டாகட்டும்என்று சொன்னான். கண்களில் தெரிந்த பயத்தைத் தவிர வேறெந்த குறையையும் லீ க்யாங்கால் காண முடியவில்லை. அவனுக்கு அந்தப் பயம் பிடித்திருந்தது. உலக அரங்கில் இவனை மைத்ரேயனாக அறிமுகப்படுத்தி பிரபலமாக்கினாலும் என்றும் அடங்கி இருப்பான் என்று தோன்றியது. தோற்றத்திலும் டோர்ஜே மெருகு ஏறி இருந்தான். நேரா நேரத்திற்குக் கிடைக்கும் சத்தான உயர் வகை உணவு நன்றாகவே வேலை செய்திருக்கிறது....

டோர்ஜேவுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்த லீ க்யாங் அவனிடம் பணிவான குரலில் சொன்னான். “மைத்ரேயரே, மனதுக்கு இதம் அளிக்கும் ஆன்மீக ஞானத்தை எனக்கு சில நிமிடங்கள் சொல்லி அருள்வீர்களா?

டோர்ஜே ஒற்றைக்கண் பிக்குவைப் பார்த்தான். கற்றுத் தந்தவைகளில் எதைச் சொல்வது என்கிற கேள்வி அவன் பார்வையில் தெரிந்தது. எதாவது சொல் என்பது போல் ஒற்றைக்கண் பிக்கு பார்த்தார். டோர்ஜே லீ க்யாங் பக்கம்  திரும்பி தம்மபதத்தில் இருந்தும், புத்த மத பிரதான சூத்திரங்களில் இருந்தும் மேற்கோள்கள் சொல்லி விளக்கம் சொல்ல ஆரம்பித்தான். சுமார் பத்து நிமிடங்கள் கூர்மையாகக் கவனித்துக் கொண்டு வந்த லீ க்யாங்குக்கு நிறுத்தி நிதானமாக நல்ல குரல் வளத்துடனும் உச்சரிப்புடனும் டோர்ஜே சொன்ன விதம் திருப்தியாக இருந்தது. மனப்பாடம் செய்து தான் சொல்கின்றான் என்ற போதும் கேட்பவர்கள் அதைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாது. எல்லாம் புரிந்து சொல்வது போல் இருந்தது அவனது முகபாவனை. ஆனால் அவனுக்கு உண்மையில் எத்தனை புரிந்திருக்கும் என்று லீ க்யாங்குக்கு சந்தேகமாக இருந்தது.

லீ க்யாங் முகத்தையே ஒற்றைக்கண் பிக்கு கவனித்துக் கொண்டிருந்தார். லீ க்யாங் ஓரளவு புத்த மத நூல்களையும் கற்றுத் தேர்ந்தவன் என்று அவர் முன்பே கேள்விப்பட்டிருந்தார். அதை அவர் டோர்ஜேயிடமும் சொல்லி இருந்தார். தவறாகவோ, முரண்பாடாகவோ அவன் ஏதாவது சொல்லி விட்டால் லீ க்யாங் கண்டுபிடித்து விடுவான் என்று எச்சரித்து இருந்தார். நல்ல வேளையாக டோர்ஜே தவறிழைக்கவில்லை. லீ க்யாங் முகத்தில் திருப்தி தெரிந்ததைப் பார்த்த பிறகு தான் அவருக்கு நிம்மதி வந்தது. 

லீ க்யாங்கால் உண்மையான மைத்ரேயனை இந்தக் கணத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவன் ஒரு சூத்திரமாவது சொல்லி அதற்கு விளக்கம் சொல்வானா? இப்படி கம்பீரமாய் அமர்ந்திருப்பானா? அழகாய் புன்னகை செய்வானா? என்றெல்லாம் கேள்விகள் மனதில் எழுந்தன. இதெல்லாம் அவனால் முடியாது என்ற பதிலும் திருப்திகரமாக மனதில் கிடைத்தது. ஆனால் அந்தத் திருப்தியைக் குலைக்கும்படியாக வாங் சாவொ அனுப்பி இருந்த ஒரு தகவலும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. உண்மையான மைத்ரேயன் மணிக்கணக்கில் ஓரிடத்தில் தியானத்தில் உட்கார்ந்திருப்பானாம். அந்த நேரத்தில் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே அவனுக்குத் தெரியாதாம். ஆனால் இந்தச் சிறுவன் தியானம் என்ன என்பதைப் பல சூத்திரங்களில் விளக்க முடிந்தாலும் இன்னமும் அதை அனுபவத்தில் அறியாதவன்....
   
லீ க்யாங் முகத்தில் ஒரு சுருக்கம் வந்து போனது. ஒற்றைக்கண் பிக்கு  ஒரு கணம் பயந்தார். ஆனால் லீ க்யாங் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான். உண்மையில் தியானம் செய்வதாய்ச் சொல்பவர்களில் 99 சதவீதம் தியானத்தை அறியாதவர்களே. சொல்லிக் கொடுத்த ஏதோ ஒரு மனப்பயிற்சியைச் செய்தபடி ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருப்பதையே அவர்கள் தியானம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தியானம் என்பதைத் தாங்களே அனுபவித்திராதவர்கள் இவனை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

தன் சிந்தனைகளில் இருந்து மீண்டு டோர்ஜேயின் சூத்திரங்களைச் சிறிது கேட்டுக் கொண்டிருந்து விட்டு லீ க்யாங் திடீரென்று சைகையால்  டோர்ஜேயை நிறுத்தினான். டோர்ஜே மனதில் கலவரம் படர லீ க்யாங்கைப் பார்த்தான். லீ க்யாங் சொன்னான். “தங்கள் நேரத்தை நான் அதிகம் எடுத்துக் கொண்டு விட்டேன். தாங்கள் செல்லலாம். நான் தங்கள் ஆசிரியரிடம் சிறிது பேச வேண்டி இருக்கிறது...

டோர்ஜே தலையசைத்து விட்டு எழுந்து உள்ளே சென்று விட்டான். லீ க்யாங்  ஒற்றைக்கண் பிக்குவை அமரச் சொன்னான். அவர் அடக்க ஒடுக்கமாக அவன் அதிரில் அமர்ந்தார்.

“சாதாரண ஆள்களின் பார்வைக்கு இந்த அளவு முன்னேற்றம் போதும் என்றாலும் புத்தரின் மறு அவதாரம் என்ற நோக்கில் பார்க்கிறவர்களுக்கு இது போதாது பிக்குவேலீ க்யாங் சொன்ன போது ஒற்றைக்கண் பிக்கு தயக்கத்துடன் சொன்னார். இவன் வயதிற்கு இவன் அடைந்திருக்கும் முன்னேற்றம் மிக அதிகம் தான் சார்

லீ க்யாங் ஒற்றைக்கண் பிக்குவைக் கூர்மையாகப் பார்த்தபடி சொன்னான். “ஆசிரியர் திருப்தி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு மாணவன் முன்னேறுவதில்லை பிக்குவே

ஒற்றைக்கண் பிக்கு தாழ்ந்த குரலில் சொன்னார். “என் திருப்தியை நான் அவனுக்குத் தெரியப்படுத்துவதில்லை சார். நான் என் அனுபவத்தில் ஏராளமான மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவு சூட்டிப்பான, புத்திசாலி மாணவனை இது வரை நான் பார்த்ததில்லை. அதைத் தான் சொன்னேன்

“நீங்கள் அவதார புருஷர்களைப் பார்த்திருக்கிறீர்களா பிக்குவே?

ஒற்றைக்கண் பிக்கு விழித்தார். லீ க்யாங் கடுமையாகச் சொன்னான். சமுத்திரத்தைப் பற்றி நான் சொல்கிறேன். நீங்கள் ஏரியைப் பற்றிப் பேசுகிறீர்கள். மைத்ரேயனாக இவனை அறிவித்தவுடன் வேலை முடிந்து விடப் போவதில்லை. உலக நாடுகளும், புத்த மத மேதைகளும் இவனை மைத்ரேயன் என்று நம்ப வேண்டும். யாருடைய கருத்துக்கெல்லாம் உலகில் மதிப்பிருக்கிறதோ அவர்கள் பார்வையில் இவன் தேற வேண்டும். அதற்கு இது போதாது என்று சொன்னேன்....

அவன் சொல்வது அவருக்குப் புரிந்தது. புரியாதது ஒன்றே ஒன்று தான். சற்று முன் இவன் முகத்தில் திருப்தி தெரிந்தது போல் இருந்ததே அது என் பார்வைக் கோளாறோ? அவனைப் பார்த்து அவர் தலை அசைத்தார்.

லீ க்யாங் மெல்ல சொன்னான். “இன்னொருவனும் மைத்ரேயன் என்று கிளம்பி இருக்கிறான். அதனால் தான் இவன் எல்லாவற்றிலும் அவனை முந்தி இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்

ஒற்றைக்கண் பிக்குவின் பலத்த சந்தேகம் உறுதியாகி விட்டது. அவர் அதிர்ச்சியுடன் லீ க்யாங்கைப் பார்த்தார். அந்த இன்னொருவன் உண்மையான மைத்ரேயனாகவே இருக்க வேண்டும். போலி என்றால் லீ க்யாங் அதை முளையிலேயே கிள்ளி வீசி எறிந்திருப்பான்.

லீ க்யாங் மைத்ரேயனின் ஒரு புகைப்படத்தை ஒற்றைக்கண் பிக்குவிடம் நீட்டினான். “இவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கை நடுங்க ஒற்றைக்கண் பிக்கு அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தார். அந்தப் புகைப்படத்தில் ஒரு கிராமத்து மந்த புத்திச் சிறுவன் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒற்றைக்கண் பிக்கு ஆச்சரியத்துடன் லீ க்யாங்கைப் பார்த்தார். இவன் தன்னை மைத்ரேயன் என்று சொல்லிக் கொள்கிறானா என்ன?

“இவன் அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லைஉங்கள் குருவான ஆசான் தான் அப்படிச் சொல்கிறார்

ஆசான் அவனை மைத்ரேயன் என்கிறார் என்றால் அவன் மைத்ரேயனாகத் தான் இருக்க வேண்டும். ஒற்றைக்கண் பிக்குவுக்குச் சந்தேகமே இல்லை. ஆசான் கணிப்பு பொய்க்காது....

லீ க்யாங் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவரது எண்ண ஓட்டத்தை அவனால் படிக்க முடிந்தது. ஆரம்பத்தில் அவன் மைத்ரேயனாக இருக்கவே முடியாது என்று நினைத்த மனிதர் பிறகு ஆசான் சொன்னால் சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தது ஆசானின் மேல் அவர் சீடன் வைத்திருந்த அசாத்திய நம்பிக்கையை அவனுக்கு உணர்த்தியது.

ஒற்றைக்கண் பிக்கு அந்தப் புகைப்படத்தைக் கூர்மையாகப் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். லீ க்யாங் அவரிடம் மறுபடியும் கேட்டான். “இவனைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

ஆசான் கணிப்பில் தவறு இருக்க வாய்ப்பில்லைஎன்று பலவீனமான குரலில் ஒற்றைக்கண் பிக்கு சொன்னார். சில வினாடிகள் யோசனைக்குப் பின் அதே பலவீனமான குரலில் மெல்ல லீ க்யாங்கைக் கேட்டார். “இவன்... இவன்.... பத்மசாம்பவாவின் ஓலையில் குறிப்பிட்ட காலத்திலேயே ...தான் பிறந்திருக்கிறானா?

லீ க்யாங் ஆமென்று தலையசைத்தான். ஒற்றைக்கண் பிக்குவின் சந்தேகம் முற்றிலுமாகத் தீர்ந்தது. அவர் திகைப்புடன் லீ க்யாங்கைக் கேட்டார். நிஜ மைத்ரேயன் இருக்கிறான் என்றால் நாம் எப்படி டோர்ஜேயை மைத்ரேயனாக அரங்கேற்ற முடியும்?

“நிஜத்தை மக்கள் எந்தக் காலத்தில் தேடிக் கண்டுபிடிக்க சிரமப்பட்டிருக்கிறார்கள் பிக்குவே. தோற்றத்தில் எப்படி, பேசுவதில் எப்படி, தெரிந்தவர்களும், வேண்டியவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை எல்லாம் வைத்துத் தானே எதையும் நம்புகிறார்கள் அல்லது நம்ப மறுக்கிறார்கள். அவன் புகைப்படத்தைப் பார்த்தவுடனே உங்களுக்கே என்ன தோன்றியது. ஆசான் சொன்னதையும், பத்மசாம்பவா சொன்னதையும் வைத்துத் தானே நீங்களே அவன் மைத்ரேயன் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்?

ஒற்றைக்கண் பிக்குவுக்கு அவன் வாதத்தில் தவறு காணத் தோன்றவில்லை. ஆனால்.... ஆனால்.... கடைசியில் வாய் விட்டே அவர் சொல்லியே விட்டார். “அசல் இருக்கிற வரை நகல் நிம்மதியாக இருக்க முடியாது அல்லவா?

லீ க்யாங் மெலிதான புன்னகையுடன் கேட்டான். “அப்படியானால் அசலை அப்புறப்படுத்தி விட வேண்டும் என்று சொல்கிறீர்களா பிக்குவே?

ஒற்றைக்கண் பிக்கு அதற்கு நேரடியாகப் பதில் சொல்லத் தயங்கினார். பின் சாதுர்யமாகச் சொன்னார். “பத்மசாம்பவாவின் ஓலைக்குறிப்புகளில் மைத்ரேயனுக்கு பத்தாண்டுகளுக்குப் பின் ஒரு ஆண்டு காலம் கண்டம் என்றும் எழுதி இருந்ததாக ரகசியமாய் சிலர் பேசிக்கொண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. கண்டம் என்று பத்மசாம்பவாவே எழுதி வைத்திருக்கிறார் என்றால் மைத்ரேயன் மரணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். அப்படி ஆகி விட்டால் நமக்குப் பிரச்னை இல்லை.....

சில சமயங்களில் ஆன்மீகவாதிகள் அரசியல்வாதிகளை மிஞ்சி விடுகிறார்கள் என்று எண்ணிய லீ க்யாங் புன்னகைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

(1.8.2015 முதல் 11.8.2015 வரை ஈரோட்டில் வ.உ.சி மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 41 எண் அரங்கில் என்னுடைய நூல்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். புத்தகக் கண்காட்சிக்குச் செல்பவர்களும், அருகில் உள்ளவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

அன்புடன்
என்.கணேசன்)

6 comments:

  1. Powerful dialogues.

    ReplyDelete
  2. அர்ஜுன்July 30, 2015 at 9:02 PM

    சக்தி வாய்ந்த எழுத்துகள் அந்தந்த கேரக்டருக்கு தகுந்தபடி அற்புதமாய் விழுகிறது. அதனால் வெறும் விறுவிறுப்பையும் பரபரப்பையும் தாண்டி மனதில் நிற்கிறது. தொடருங்கள். ஆவலாக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. Iruvar uraiyadlilum... Neengal amaitha thathuvangal... Arumai....Engal thavarai sutti kattukirathu....

    ReplyDelete
  4. வரதராஜன்July 31, 2015 at 6:17 AM

    நீங்கள் தனியாக பொன்மொழிகள் எதையும் பதிவு செய்ய வேண்டியதே இல்லை. உங்கள் எழுத்து எல்லாமே பொன்மொழி தான். இன்றைய பதிவில் ஆசிரியர் திருப்தி அடைந்து விட்டால் அதற்கு பிறகு மாணவன் முன்னேறுவதில்லை என்கிற வரி என்னை மிகவும் கவர்ந்தது. கதை மட்டும் அல்ல உங்கள் கருத்துகளும் அருமை. வாழ்க வளமுடன்.

    ReplyDelete