என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Saturday, August 8, 2015

என் நாவல் “நீ நான் தாமிரபரணி” வெளியீடு! இரு அத்தியாயங்கள் இலவச இணைப்பு!


அன்பு வாசகர்களே!,

வணக்கம்.

பரம(ன்) இரகசியம், அமானுஷ்யன் நாவல்களின் வெற்றியைத் தொடர்ந்து என் நாவல் “நீ நான் தாமிரபரணி” இன்று வெளியாகி உள்ளது.

காதல், பாசம், குடும்பம், நட்பு ஆகிய உன்னதங்களுடன் மர்மங்களும் பிரதானமாகப் பின்னி இழையோடும் இந்தக் கதைக்களம் தமிழ் நாவல் உலகுக்கு மிகவும் புதுமையானது.

ஒரு நாவல் புகழின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் காலத்தில் திடீரென்று அந்த நாவலாசிரியர் மர்மமான முறையில் காணாமல் போய் விடுகிறார். அவர் பற்றி துப்பறிய முனைபவர்கள் அச்சுறுத்தப்பட்டு தடுக்கப்படுகிறார்கள். மீறிய ஒருவர் பொய் வழக்கில் சிறை சென்ற பிறகு பின் வாங்குகிறார். அவர் 25 வருடங்கள் கழிந்த பின், பெரிய பத்திரிக்கையாளராகி, அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பைத் தன்னிடம் பணி புரியும் திறமையான இளைஞனிடம் ஒப்படைக்கிறார். ரகசியம் அந்த நாவலிலேயே மறைந்து இருக்கிறதென்று கண்டுபிடிக்கும் அவனுக்கும் பலத்த எதிர்ப்பு மறைமுகமாகப் பல வழிகளில் வருகிறது. அதையும் மீறி, ரகசியத்தில் அவனும் ஒரு அங்கம் என்பதை அறியாமல், பல திருப்பங்களுடன் அவன் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் பாணியும் நிகழ்வுகளும் மிக விறுவிறுப்பும் சுவாரசியமுமானவை.
இந்த நூலின் விலை ரூ.280/-

வாசகர்களுக்காக “நீ நான் தாமிரபரணி”யின் இரண்டு அத்தியாயங்கள் இங்கே இலவசமாகத் தரப்பட்டுள்ளது.

அன்புடன்

என்.கணேசன்


நீ நான் தாமிரபரணி
                             
என்.கணேசன்

1


-----------------------------------------------------------------

  The danger does not lie in failing to reach absolute perfection.  It lies in giving up the chase.
                                                                        -Charles Moore        
---------------------------------------------------------------------------------------------------

      அருண் உள்ளே நுழைந்த போது அம்பலவாணன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.  அறையின் சுவரில் தங்கத் தகட்டின் மீது எழுதப் பட்டிருந்த "சத்யமேவ ஜயதே" என்ற வடமொழி வாக்கியத்தில் அவர் கவனம் லயித்திருந்தது.  சத்தியம் எல்லா சமயங்களிலும் ஜெயிக்குமோ?...  இந்த உலகம் சத்தியத்தை ஜெயிக்க விடுமா?

      "சார்" அருண் அழைக்க அவர் கவனம் கலைந்தது.

      "உட்கார்" என்ற அம்பலவாணன் தன் பத்திரிக்கையின் பெரும் பலமாகத் திகழும் அருணைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்.

     அந்தப் புன்முறுவலுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உண்டு.  மிக மிகக் கஷ்டமான வேலையை அவனிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று அர்த்தம்.  அருண் உடனே உற்சாகமானான்.  "சொல்லுங்கள் சார்".

     அந்த உற்சாகம் தான் அவனது தனித் தன்மை.  எதுவும் என்னால் முடியாததல்ல, எதையும் சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கையோடு ஏற்படும் உற்சாகமது.  அவன் அவரது "உண்மை" பத்திரிக்கையில் சேர்ந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த உற்சாகம் குறைந்து அவர் பார்த்ததில்லை.  அவன் வேலைக்காக வந்த போது அவன் விளையாடுகிறான் என்று தான் அவர் நினைத்தார்.  

பிரபல தொழில் மேதையும், கோடீசுவரருமான ராஜராஜனின் ஒரே மகன் அவரது பத்திரிக்கைக்காக ரிப்போர்ட்டர் வேலைக்கு வருவது நம்ப முடியாத ஒன்றாகப் பட்டது.  அதை வாய் விட்டு அவனிடம் சொல்லவும் செய்தார்.  அவன் முகம் இறுகி ஒரே வார்த்தையில் சொன்னான். "அப்பா பிசினசுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை சார்".  அன்றிலிருந்து இன்று வரை அவன் தன் தந்தையைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை.

    ஒரு முறை ராஜராஜனை ஒரு பொது நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்த போது அம்பலவாணன் அவரிடம் சொன்னார்.  "சார்! உங்க மகன் உங்களை மாதிரியே நல்ல சூட்டிகை.  ஒரு காரியத்தை அவனிடம் கொடுத்தால் அதை வெற்றிகரமாக முடிக்காமல் திரும்பி வருகிற பழக்கம் இல்லை."

    லேசாகத் தலையசைத்து விட்டு தன் மறு பக்கத்தில் அமர்ந்திருந்த மந்திரி ஒருவரிடம் பேச ஆரம்பித்த ராஜராஜன் நிகழ்ச்சி முடிகிற வரை அம்பலவாணன் பக்கம் திரும்பவேயில்லை.

    தந்தைக்கும் மகனுக்கும் இடையே சுமுகமான உறவில்லை என்பது மட்டும் அம்பலவாணனுக்குப் புரிந்தது.  எது எப்படியாக இருந்தாலும் அருணைப் போன்ற ஒரு திறமைசாலி கிடைத்தது தன் பாக்கியம் என்றே அம்பலவாணன் நினைத்தார்.

    "சார்! என்ன கனவா?" என்று கேட்ட அருண் சிரித்தான்.  அவன் சிரித்த போது மிக அழகாக இருந்தான். அசப்பில் அவன் தன் தந்தையைப் போலவே இருந்தாலும் அவர் சிரிப்பது அபூர்வமென்றால், அவன் சதா புன்னகையோடே இருப்பான். அந்த அலுவலகத்திற்கு வரும் இளம் பெண்கள் அவன் கண்ணில் பட வேண்டும் என்று படாத பாடு படுவதை அம்பலவாணன் பல முறை பார்த்திருக்கிறார். 

    "கனவல்ல, அருண்" என்று சமாளித்த அம்பலவாணன் தான் அவனை அழைத்த விஷயத்தை எங்கிருந்து ஆரம்பித்து அவனிடம் எப்படி சொல்வது என்று யோசித்து விட்டு பின் ஆரம்பித்தார்.

    "சுமார் 25 வருஷங்களுக்கு முன் மூன்று நாள் நான் ஜெயிலில் இருந்தேன் தெரியுமா அருண்"

    அருண் முகத்தில் திகைப்பு தெரிந்தது.

    "காரணம் என்ன தெரியுமா? இந்தப் புத்தகம் தான்" என்று சொன்ன அம்பலவாணன் ஒரு தடிமனான நாவலை எடுத்து மேசை மீது வைத்தார்.  "நீ நான் தாமிரபரணி" என்று கொட்டை எழுத்தில் பெரியதாக நாவலின் பெயரும், கீழே சிறிதாக "சேதுபதி" என்று ஆசிரியர் பெயரும் தெரிந்தது.

    அந்த நாவல் மிகப் பிரபலமானது. அது இலக்கிய வகையைச் சார்ந்தது என்றும் சேதுபதியின் மாஸ்டர்பீசென்றும் பலர் சொல்ல அருண் கேள்விப் பட்டிருக்கிறான்.  ஆனால் படித்ததில்லை.  முப்பதாவது பதிப்பு தற்போது வெளியாகி வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. அந்த நாவலாசிரியர் சேதுபதி திடீரென ஒரு நாள் தலைமறைவாகி விட்டார் என்றும் அந்த சூழ்நிலை பற்றி இன்னமும் பல கேள்விக்குறிகள் இருக்கின்றன என்றும் அவன் அறிவான். ஒரு பிரபல டைரக்டர் அதைத் திரைப்படமாக்க வேண்டும் என்பதே தன் நீண்ட நாள் லட்சியம் என்று சொல்லி இருந்ததைக் கூட அவன் படித்திருக்கிறான்.  ஆனால் அந்த நாவல் எப்படி அம்பலவாணனை சிறையில் அடைத்தது என்று புரியாமல் அருண் சொன்னான். "எப்படி சார்?"

    "இந்த நாவலைச் சுற்றி நிறைய மர்மம் இருந்தது அருண்.  இன்னமும் இருக்கு. அதைக் கண்டு பிடிக்க நான் முயற்சி செய்தேன். அது தான் என்னை ஜெயில் வரை கூட்டிட்டு போய் விட்டது"

    "சார், புதிர் போடாமல் முழுவதும் சொல்லுங்க" என்று மிக ஆர்வத்துடன் அவன் கேட்க அவர் ஆரம்பித்தார்.

    "இந்த நாவல் வெளியாகும் வரை சேதுபதியை யாருக்குமே தெரியாது.  வெளியான பிறகோ அவரைத் தெரியாதவர்களே கிடையாது என்று ஆகி விட்டது அருண்.  எங்கே பார்த்தாலும் அந்த நாவலைப் பற்றியே பேச்சு. அந்த சேதுபதி எழுதிய முதலும் கடைசியுமான ஒரே நாவல் இது தான்.  இதை நீ படிச்சிருக்கியா?"

    இல்லை என்று அருண் தலையசைத்தான்.

    "இதை நான் பல தடவை படிச்சிருக்கேன் அருண்.  ஒரு அழகான காதல் காவியம் இது.  இது சேதுபதியை புகழின் உச்சாணிக் கொம்பிற்கே கொண்டு போய் விட்டது.  நம் பத்திரிக்கை உட்பட பல பத்திரிக்கைகள் அவரைத் தங்கள் பத்திரிக்கைகளில் எழுதச் சொல்லி வற்புறுத்தினார்கள்.  அவர் ஏனோ பெரிய ஆர்வம் காட்டவில்லை.  பல பரிசுகள், விருதுகள் கிடைத்த பின்னால் ஒரு நாள் திடீர் என்று சேதுபதி காணாமல் போய் விட்டார்...."

    "முழு விவரங்கள் தெரியா விட்டாலும் அது பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன் சார்"

    "அந்த நாளை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது அருண். சேதுபதியைப் பாராட்டி பத்திரிக்கையாளர்கள் விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம் அருண்.  நான் தான் விழா பொறுப்பாளன்.  அது ஒரு பெரிய விழா. ஆயிரக் கணக்கில் ஆட்கள் வந்திருந்தார்கள்.  விழா ஆரம்பித்ததில் இருந்தே சேதுபதி ஒரு மாதிரியாக நிலை கொள்ளாமல் இருந்தார்.  எதோ ஒன்று அவரை நிறையவே பாதித்த மாதிரி இருந்தது அருண். அதை என்னால் உணர முடிந்தது.  அந்த நேரத்தில் தான் அவருக்கு ஒரு போன் கால் வந்தது.  நாங்கள் விழா ஏற்பாடு செய்திருந்த அரங்கத்தில் ஆபிஸ் ரூமில் போன் கால் வந்ததை ஒரு வேலையாள் வந்து சொன்னான்.  அவரைத் தொந்திரவு செய்ய விரும்பாமல் நான் தான் முதலில் போய் போனில் பேசினேன்.  போனில் பேசிய ஆள் அது ஒரு எமர்ஜென்சி கால் என்றும் சேதுபதியிடம் தான் பேச வேண்டும் என்றும் சொன்னான்.  அங்கிருந்து கேட்ட சத்தங்களை வைத்து அந்த கால் ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து தான் வருகிறது என்று யூகித்தேன்.  அவரிடம் போய் சொன்னேன்..."

    மேசை மீதிருந்த டம்ளரில் தண்ணீரை நிரப்பி குடித்து விட்டு அம்பலவாணன் மறுபடி தொடர்ந்தார்.

    "அவர் பேசுவதற்கு முந்தைய ஆள் அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்தார். பேசி விட்டு உடனே வருவதாய் சொல்லி விட்டுப் போனார்.  போய் பேசினார்.  ஏதோ ஒன்று என்னையும் அவரைப் பின் தொடர வைத்தது அருண்.  அவர் போனை எடுத்து 'ஹலோ' என்று ஒரே வார்த்தை தான் சொன்னார்.  அந்தப் பக்கத்தில் இருந்து பேசியதை ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் கேட்டார்.  பிரமை பிடித்தவர் போல ரிசீவரை வைத்தவர் திரும்பவும் மேடையேறவில்லை. அவர் அங்கிருந்து போய் விட்டார்.  நான் எத்தனையோ சொல்லியும் அவர் காதில் என் வார்த்தைகள் விழுந்த மாதிரி தெரியவில்லை.  நடைப் பிணமாய் அந்த அரங்கத்தை விட்டுப் போனவர் ஒரு காரியம் செய்தார். பேனாவைத் தூக்கி வீசினார்.  அது தான் நான்  அவரைக் கடைசியாகப் பார்த்தது. அன்றைய நாளுக்குப் பின் யாருமே இன்று வரை அவரைப் பார்த்ததாகத் தகவல் இல்லை அருண்".2

------------------------------------------------------------------------------------------------------------------
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்;
மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்.                                             கண்ணதாசன்
------------------------------------------------------------------------------------------------------------------

     மிக ஆர்வத்துடன் தன் பேச்சைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருக்கும் அருணைக் கூர்ந்து பார்த்தார் அம்பலவாணன்.  அவனிடம் அவர் கண்ட இதே ஆர்வம், உள்ளே ஒரு அக்னி அவரிடமும் அந்தக் காலத்தில் நிறையவே இருந்தது.  ஆனால்....

     ஒரு பெருமூச்சு விட்டபடி அம்பலவாணன் தொடர்ந்தார். "சேதுபதி திடீரென்று காணாமல் போனது எல்லோரையும் ஒரு கலக்கு கலக்கியது. அவரை அன்றிரவு ரயில்வே ஸ்டேஷனில் பார்த்ததாக, பஸ் ஸ்டேண்டில் பார்த்ததாக பல விதமான வதந்திகள் தொடர்ந்து வந்தாலும் எந்த ஒரு தகவலும் உபயோகமாய் இருக்கவில்லை. சுமார் பத்து நாட்கள் எல்லா பத்திரிக்கைகளிலும் சேதுபதி செய்தி தான் தலைப்புச் செய்தியாக இருந்தது.  பிறகு ஒரு பிரபல நடிகை ஒரு அரசியல் பிரமுகரைக் கல்யாணம் செய்து கொண்டது தலைப்புச் செய்தியாக வந்தது.  மக்கள் கவனம் சுலபமாகத் திசை திரும்பியது.  சேதுபதி விஷயம் பின்னால் தள்ளப்பட்டது.  மெள்ள மெள்ள பலரும் அவரை மறந்து போனார்கள்.  என்னால் மட்டும் அவரை மறக்க முடியவில்லை அருண்"

     அம்பலவாணன் தொடர்ந்த போது அவர் வேறு உலகில் இருப்பது போல் அருணிற்குத் தோன்றியது.  அவர் குரலில் புதிய உணர்ச்சிப் பிரவாகம் இருந்தது.  "ஒரு நல்ல கலைஞன் ஒரு அற்புதமான படைப்பு ஒன்று படைத்து விட்டு அதோடு திருப்திப் பட்டுக் கொண்டு இருந்து விட முடியாது, அருண்.  கலையின் தன்மை அவனை அப்படி இருக்க விடாது.  ஆனாலும் சேதுபதி விஷயத்தில் அது நடந்து இருக்கிறது.  அவர் அந்த நாவல் தவிர வேறு எதையும் எழுதாததும், திடீரென்று ஒரு நாள் பேனாவைத் தூக்கி எறிந்து விட்டுத் தலை மறைவானதும் எனக்கு ஜீரணிக்க முடியாததாகவே இருந்தது.  நான் சேதுபதி பற்றி விசாரித்து துப்பு துலக்க ஆரம்பித்தேன்"

    "அப்போது நான் ஒரு பிரபல பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருந்தேன்.  எனக்கு நிறைய பத்திரிக்கை நண்பர்களும் இருந்தார்கள்.  என் தேடலில் அவர்களும் ஆரம்பத்தில் இருந்தார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பின் வாங்கினார்கள்.  சேதுபதி விஷயத்தில் தலையிடாமல் இருப்பது தான் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்று பெரிய பெரிய இடங்களில் இருந்து மிரட்டல் வந்ததென்றார்கள்.  என்னையும் இதிலிருந்து பின் வாங்கச் சொன்னார்கள். எனக்கும் ஒரு மந்திரியிடமிருந்து மறைமுக மிரட்டல் வந்தது.  ஆனால் நான் பின் வாங்கவில்லை. அந்த சமயம் என் பத்திரிக்கை ஆசிரியரும் எனக்கு ஆதரவாக இருந்தார்"  

    "பத்திரிக்கையில் சேதுபதி பற்றி துப்பு தருபவர்களுக்கு ஒரு நல்ல தொகை தருவதாக விளம்பரம் செய்தோம்.  பல பேர் ஏதேதோ தகவலுடன் வந்தார்கள்.  ஆனால் எதுவுமே உருப்படியாக இருக்கவில்லை.  ஒரு நாள் எனக்கு ஒரு போன் கால் வந்தது. யாரோ ஒரு கிராமத்தான் போன் செய்தான்.  சேதுபதி பற்றியும், அந்த நாவல் எழுதப் பட்ட சூழ்நிலை பற்றியும் தனக்கு எல்லாமே தெரியும் என்றும், அந்த தகவல்கள் எல்லாம் அந்த நாவலை விட சுவாரசியமானவை என்றும் சொன்னான்.  அவன் சொன்னதில் உண்மை இருப்பதாக என் உள்ளுணர்வு சொல்லியது.  நேரில் வரச் சொன்னேன்.  மறுநாள் வருவதாகச் சொன்னான்"

    அருண் நாற்காலியின் நுனியில் உட்கார்ந்திருந்தான்.  எல்லாமே சுவாரசியமாக இருந்தது.

   "மறுநாள் அவன் வருவதற்கு முன் போலீஸ் வந்தது. என்னைக் கைது செய்தது.  பேட்டி எடுக்கப் போன இடத்தில் ஒரு பெரிய மனிதர் வீட்டில் ஏதோ திருடி விட்டேனாம்.  வைர மோதிரமோ எதுவோ சொன்னார்கள்.  மூன்று நாள் லாக்கப்பில் இருந்தேன்.  நான் கைதான செய்தி எங்கள் பத்திரிக்கை உட்பட எந்தப் பத்திரிக்கையிலும் வவில்லை அருண்.  என்னை பார்க்க எங்கள் பத்திரிக்கை ஆசிரியர் மூன்றாவது நாள் வந்தார்.  எல்லாவற்றையும் விட்டுவிடுவது தான் நல்லதென்றார்.  நினைத்ததை விடப் பெரிய தலைகள் எல்லாம் சம்பந்தப் பட்டிருப்பது போல இருக்கிறதென்றும் மேலும் தொடர்ந்தால் பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவது கூடக் கஷ்டமாக இருக்கும் என்றும் அபிப்பிராயப் பட்டார். நான் விட்டு விட்டேன், அருண்.  அவர்களும் கேஸ் எதுவும் இல்லாமல் என்னை ரிலீஸ் செய்து விட்டார்கள்"

   அவன் கண்கள் தன்னைக் குற்றம் சாட்டுவதைக் கண்ட அம்பலவாணன் தன் பார்வையைக் குற்ற உணர்வுடன் அவன் முகத்தில் இருந்து விலக்கினார்.  அவர் கண்கள் அறை சுவரில் இருந்த "சத்யமேவ ஜெயதே"வில் ஒரு கணம் தங்கியது.  கரகரத்த குரலில் அவர் தொடர்ந்தார்.  "எனக்கு மூன்று பெண்கள், நோயாளி அம்மா, சதா அழுது புலம்பும் மனைவி இருந்த சூழ்நிலை அது அருண்.  பணத்தோடும் அதிகாரத்தோடும் போராடித் தாக்குப் பிடிக்கும் நிலையில் நானிருக்கவில்லை.  எனக்கு ஆதரவாய் யாரும் அன்று இருக்கவில்லை.  அன்றிலிருந்து மனதில் ஒரு நெருஞ்சி முள்!"

   அருண் மனம் இளகியது.  வறுமை எத்தனை விஷயங்களை வாழ்க்கையில் தீர்மானிக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது.

   "அப்படியென்ன ரகசியத்தை நீங்கள் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று அவர்கள் உங்களைத் தடுத்து நிறுத்தினார்கள்" என்று யோசித்தபடி அருண் கேட்டான்.

   "தெரியலை அருண்! ஒரு வேளை அன்று போனில் பேசியவன் நேரில் வந்திருந்தால் எல்லாமே தெரிந்திருக்கலாம்.  ஆனால் அவன் வருவதற்கு முன்னாலேயே எல்லாம் நின்று போய் விட்டது.  ஒரு வேளை அவன் வந்தானா என்று கூட எனக்குத் தெரியாது.  வந்து என் கைது விஷயம் தெரிந்து பின் வாங்கி போயிருக்கலாம்.  எனக்குத் தெரியலை.  ஆனால் போனில் பேசிய போது அவன் சேதுபதிக்கு இணையாய் அந்த நாவலுக்கும் முக்கியத்துவம் கொடுத்த மாதிரி எனக்குப் பட்டது.  அந்த நாவலும் சேதுபதியும் அதன் பின் ஒரு புதிராகவே தங்கி விட்டனர், அருண். ஏழு வருஷத்துக்கு முன் நான் இந்த "உண்மை" பத்திரிக்கை ஆரம்பித்த நாளில் இருந்து என் மனதில் ஒரே ஒரு ஆசை.  அன்றைக்குத் தோற்ற விஷயத்தில் ஒரு நாள் ஜெயிக்கணும்.  அந்த சேதுபதி பைல் மறுபடி திறக்கணும். அந்த உண்மைகள் வெளி வரணும்"

   "சார் 25 வருஷங்கள் முடிந்து விட்ட இந்த சந்தர்ப்பத்தில் எத்தனையோ நடந்திருக்கலாம்.  அந்த சேதுபதி இறந்து போய் இருக்கலாம்.  உண்மைகள் தெரிஞ்சவங்க பலரும் இறந்து போயிருக்கலாம்....."

   "நீ சொல்வது உண்மை அருண். என்னை மறைமுகமாய் மிரட்டிய மந்திரி கூட ஐந்து வருஷம் முன்னால் இறந்துட்டார். சேதுபதி உட்பட பலரும் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் அந்த நாவல் சாகவில்லை அருண்.  அது பற்றி தெரிந்த சிலராவது இன்னும் எங்கோ ஒரு மூலையில் இருக்கலாம். நீ கண்டு பிடித்து நம் பத்திரிக்கையில் எல்லா உண்மைகளும் வெளிவர முயற்சி செய்வாயா அருண்"

   அருண் உறுதியாகச் சொன்னான். "இன்னும் சிறிது நாளில் எல்லா உண்மைகளும் அடங்கிய பைல் உங்கள் மேசையில் இருக்கும் சார்"

   அம்பலவாணன் முகம் பிரகாசித்தது.  இவன் போல் பத்து பேர் உடன் இருந்தால் இந்த உலகையே ஜெயிக்கலாம் என்று தோன்றியது.

   "நீ முதலில் இந்த நாவலைப் படி. இதில் உனக்கு நிறைய தகவல்கள் கிடைக்கலாம்" என்று சொல்லி அந்த நாவலை அவன் கையில் கொடுத்தவர் அவன் அறையை விட்டு வெளியேறிய பின்னும் அந்தக் கதவையே பார்த்தபடி இருந்தார்.

   லேசாக மனம் உறுத்தியது.  அவனிடம் அவர் தனக்கு பின்பு தெரிய வந்த ஒரு சில விஷயங்களை சொல்லாமல் விட்டு விட்டார். சொல்கின்ற துணிவு அவரிடம் இருக்கவில்லை.  ஒரு வேளை அவன் மறுத்து விடுவானோ என்ற பயம் மனதின் ஒரு மூலையில் இருந்து பயமுறுத்தியது தான் காரணம்.  ஒரு காலத்தில் இருந்த அந்த நேர்மை இன்று தன்னிடம் இல்லை என்று மனசாட்சி குற்றம் சாட்டியது.  அந்த அறையில் கடிகார சத்தம் மட்டும் கேட்க நிறைய நேரம் அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.


(நீ நான் தாமிரபரணி நூலை வாங்க பதிப்பாளரை 7667886991, 9600123146 எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.


- என்.கணேசன்

6 comments:

 1. சுஜாதாAugust 8, 2015 at 5:11 PM

  நிஜமாகவே வித்தியாசமான கதை தான். ஆரம்பமே நல்ல விறுவிறுப்பு. 2 அத்தியாயம் படித்து முடித்தவுடனேயே நாவலை வாங்கிப் படிக்க ஆவலாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. Great starting. Going to read immediately. Thanks.

  ReplyDelete
 3. பட்டுக்கோட்டை பிரபாகரின் “கடைசி அத்தியாயம்” என்ற நாவலைப் படித்துள்ளீர்களா? உங்களது நாவலுக்கும் அதற்கும் கொஞ்சம் similarity இருக்கிறது.

  சேதுபதியின் மகன் தான் அருண் என்று ஊகிக்கிறேன். சரியா?

  எதற்கும் நாவலை வாங்கி வாசித்து விட்டால் போகிறது.

  ஆன்லைனில் வாங்க வழி உள்ளதா? விளக்கம் தருக.

  ReplyDelete
 4. விஷ்ணுAugust 9, 2015 at 5:15 AM

  வாழ்த்துக்கள் சார். ஆரம்பமே செம.

  ReplyDelete
 5. நாவலை வாங்கிப் படிக்க ஆவலாக இருக்கிறது......

  ReplyDelete
 6. உங்களுடைய எந்த நாவலும் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்வுதான் கணேசன் சார்!

  ReplyDelete