சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, August 11, 2015

மரணத்தையும் வெல்லும், பின் நடப்பதையும் சொல்லும்!


மகாசக்தி மனிதர்கள்-33


ன்று இரவு வரை கூட நண்பன் உயிரோடு இருக்க முடியாது என்று மருத்துவர் திட்டவட்டமாகச் சொன்னதைக் கேட்டு விட்டு யோகானந்தர் கல்கத்தாவில் இருந்து குருவைப் பார்க்க செராம்பூர் ஆசிரமத்திற்கு விரைந்து வந்தார். மருத்துவர் இப்படிச் சொல்லி இருக்கிறார், அதற்கேற்றாற் போல் தான் சசியின் உடல்நிலையும் உள்ளது என்ற தகவலைக் கவலையுடன் குருவிடம் சொன்னார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அலட்டிக் கொள்ளாமல் சொன்னார். “அவன் இந்த நோயால் சாக மாட்டான் என்று நான் தான் சொல்லி விட்டேனே. பின் ஏன் கவலைப்படுகிறாய்

இந்த நிலையிலும் இவ்வளவு உறுதியாக குரு சொல்கிறாரே என்று வியந்த யோகானந்தர் மறுபடி கல்கத்தாவில் உள்ள சசி வீட்டுக்கு விரைந்தார். அங்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் சசி ஆரோக்கியமாய் படுக்கையில் சாய்ந்து அமர்ந்து பாலைக் குடித்துக் கொண்டிருந்தான்.  நான்கு மணி நேரத்திற்கு முன் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் அறைக்குள் இருப்பதாக தான் உணர்ந்ததாகவும், அதன் பின் நோயின் அறிகுறிகள் அனைத்தும் தன்னை விட்டு விலகியதாகவும் சசி தெரிவித்தான். குருதேவரின் அருள் தன்னை மரணத்தின் பிடியிலிருந்து விலக்கி விட்டது என்று மிகுந்த பக்தியுடன் அவன் தெரிவித்தான்.

சில நாட்களில் சசி பூரணகுணம் அடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஆரம்பித்தான். ஆனால் பின் அவன் செராம்பூர் ஆசிரமம் வருவது மிகவும் குறைந்து விட்டது. யோகானந்தர் அது பற்றி சசியிடம் கேட்ட போது தன் பழைய வாழ்க்கைக்கு வருத்தப்படுவதாகவும் அதனால் குருதேவரை சந்திப்பதற்கு வெட்கப்படுவதாகவும் நொண்டிச்சாக்கு சொன்னான். யோகானந்தருக்கு அது சுத்த நன்றி கெட்டத்தனமாகத் தோன்றினாலும் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. சாதாரண மனிதர்களின் மனப்போக்கைக் கடந்து விட்ட யோகிகள் தங்கள் செயல்களுக்காக மற்றவர்களிடம் நன்றியைக் கூட எதிர்பார்ப்பதில்லை என்பதற்கு இது மிக நல்ல உதாரணம்.

இன்னொரு சுவாரசியமான சம்பவத்தையும் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி குறிப்பிடுகிறார். யோகானந்தரின் இன்னொரு நண்பன் சந்தோஷின் தந்தை டாக்டர் நாராயண் சந்தர் ராய் ஒரு மிருக டாக்டர். அவர் யோகானந்தரும் சந்தோஷும் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அவர்களைப் பற்றி அடிக்கடி மிகவும் பெருமையாகச் சொல்வதைக் கேட்டு தானும் சந்திக்க எண்ணினார்.

அந்தக் காலத்தில் படித்தவர்கள் மிகவும் குறைவு. அதனால் கல்லூரி வரை சென்று படித்து நகரில் அனுபவம் மிக்க மிருக டாக்டராக இருந்த டாக்டர் நாராயண் சந்தர் ராயிற்கு படித்தவர் என்ற கர்வம் உண்டு. ஆன்மிக நாட்டம் கொண்டு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அவர்களைச் சந்திக்க எண்ணாமல் அவரை எடை போடும் எண்ணத்தோடு தான் சந்திக்க எண்ணினார். யோகானந்தர் அவரை செராம்பூர் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

மூடிய பாத்திரத்தோடு சமுத்திரத்திற்கே சென்றாலும் வெறும் பாத்திரத்தோடு தானே ஒருவர் திரும்ப வேண்டி இருக்கும். அது போல அந்த மிருக டாக்டர் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியை சந்தித்த போதும் எந்த அருளையும் பெற முடியவில்லை. இருவரிடையேயும் கனத்த மவுனம் நிலவியது. டாக்டர் நாராயண் சந்தர் ராய் பெரிதாக ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியால் கவரப்படவில்லை. சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.

“இறந்த மனிதனை ஏன் இந்த ஆசிரமத்திற்கு அழைத்து வந்தாய்? என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி யோகானந்தரிடம் கேட்டார்.

“குருவே அவர் உயிரோடு தானே இருக்கிறார்?என்று யோகானந்தர் வியப்புடன் கேட்டார்.

“விரைவில் இறந்து விடுவார்என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தெரிவித்தார்.

நண்பனின் தந்தை கர்வம் பிடித்தவர் என்ற போதும் அவரது இறப்பால் நண்பனுக்கு ஏற்படக் கூடிய துக்கத்தை யோசித்த யோகானந்தர் கவலையுடன் தன் குருவிடம் விவரமாகச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.

என்ன நடக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்திருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அந்த மிருக டாக்டர் நீரிழிவு நோயின் உச்சத்தில் இருக்கிறார். அவர் அதை இன்னமும் அறியவில்லை. பதினைந்து நாட்களில் அவர் படுத்த படுக்கையாக மாற நேரிடும். டாக்டர்கள் கைவிரித்து விடுவார்கள். அவருக்கு இன்னும் ஆறு வார காலம் தான் ஆயுள் உள்ளது என்று கூறினார்.

“குருவே என் நண்பனுக்காக அவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும்என்று யோகானந்தர் கெஞ்சினார்.

“சரி ஆனால் ஒரு நிபந்தனை. அவர் ஒரு தாயத்து கட்டிக் கொள்ள வேண்டும். அவ்வளவு சுலபமாக அவர் அதைக் கட்டிக் கொள்ள ஒப்புக் கொள்ள மாட்டார். குதிரைக்கு அறுவை சிகிச்சை செய்யப் போனால் அது எப்படி முரண்டு பிடிக்குமோ அவரும் அப்படியே முரண்டு பிடிப்பார். அதையும் மீறி அவரை தாயத்து கட்டிக் கொள்ள சம்மதிக்க வைத்தால் அவர் ஒரு மாதத்தில் குணமடைவார். அவருக்கு ஆறு மாத கால ஆயுளை நீட்டிக்க வைக்கலாம். அவர் குணமான பிறகு அவர் மாமிச உணவைத் தவிர்க்க வேண்டும். ஆனால் நீங்கள் சொன்னாலும் கேட்க மாட்டார். அவர் அதைச் சாப்பிட ஆரம்பிப்பார். ஒரு நாள் திடீரென்று இறந்து விடுவார்என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி விரிவாக அந்த மிருக டாக்டர் வாழ்க்கையில் இனி என்ன எல்லாம் ஆகலாம் என்பதைச் சொன்னார்.

ஆறு வார காலம் ஆயுள் உள்ளவரை ஆறு மாத காலமாகவாவது வாழ வைக்க வேண்டும் என்று தன் நண்பனுக்காக உறுதி கொண்ட யோகானந்தர் தன் நண்பன் சந்தோஷிடம் தன் குரு சொன்னதைச் சொன்னார்.

சந்தோஷ் தன் தந்தையிடம் அதைத் தெரிவித்து அவரைத் தாயத்து கட்டிக் கொள்ளும்படி வற்புறுத்தினான். அவர் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தெரிவித்தது போலவே ஆக்ரோஷமாக மறுத்தார். “நான் முழு ஆரோக்கியத்தோடு இருக்கிறேன். இது போன்ற மூட நம்பிக்கை விஷயங்களை எல்லாம் சொல்லி என்னை வற்புறுத்த வேண்டாம். கண்டிப்பாக தாயத்து எல்லாம் அணிய மாட்டேன்

ஆனால் சில நாட்களில் அவர் திடீர் என்று நோய்வாய்ப்பட்டார். படுத்த படுக்கையானார். நோய் வந்தவுடன் அவர் பிடிவாதம் தளர்ந்தது. தாயத்து கட்டிக் கொள்ள அவர் சம்மதித்தார். ஆனால் நோயின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அவரைப் பரிசோதித்த டாக்டர் சர்க்கரை வியாதி அவரைக் கடுமையாக பாதித்திருக்கிறது. அவர் உயிர் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லி விட்டார்.

ஆனால் யோகானந்தர் அந்த மருத்துவரிடம் தெளிவாகச் சொன்னார். “இவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவார் என்பதை என் குருநாதர் முன்பே சொல்லி இருக்கிறார். ஆனால் அவரே இவர் ஒரு மாதத்தில் குணமடைவார் என்பதையும் சொல்லி இருக்கிறார்.

அந்த டாக்டர் யோகானந்தரை வினோதமாகப் பார்த்தார். எந்த உலகத்தில் இவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் மனதில் நினைத்திருக்கலாம்.

ஆனால் அவரே சில நாட்களில் யோகானந்தரை அழைத்துச் சொன்னார். “உண்மையாகவே டாக்டர் நாராயண் சந்தர் ராய் அந்த நோயின் பிடியில் இருந்து தப்பி விட்டார். இது மருத்துவ வரலாற்றில் அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் இது வரை நான் மரணம் வரை சென்ற ஒரு ஆள் இப்படி குணமாகிப் பிழைப்பதைப் பார்த்ததில்லை.  உங்கள் குரு பெரிய தீர்க்கதரிசி தான்

டாக்டர் நாராயண் சந்தர் ராய் குணமான பின் மகன் சந்தோஷ் சொன்னதையும் கேளாமல் மறுபடி மாமிச உணவு சாப்பிட ஆரம்பித்து விட்டார். சந்தோஷ் அதை வருத்தத்துடன் யோகானந்தரிடம் தெரிவிக்க, யோகானந்தர் உடனடியாக அவரிடம் சென்று தன் குரு சொல்லி இருந்ததைத் தெரிவித்து எச்சரித்தார்.

ஒருமுறை நோய்வாய்ப்பட்டு தாயத்து கட்டிப் பிழைத்துக் கொண்டதை மறந்து டாக்டர் நாராயண் சந்தர் ராய் யோகானந்தரிடம் சொன்னார். “உன் குருவிடம் சொல். இப்போது மாமிசம் சாப்பிட ஆரம்பித்து என் உடல் வலிமை அடைந்து தான் வருகிறது. அறிவிற்கு எதிர்மாறான அவரது கருத்துகளை இனியும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.அவர் கூறியது போலவே மிக ஆரோக்கியமாகத் தான் தெரிந்தார்.

வருத்தத்துடன் யோகானந்தர் திரும்பினார். மறு நாள் சந்தோஷிடம் இருந்து திடீர் என்று தந்தை இறந்து விட்டதாகத் தகவல் வந்தது.

(தொடரும்)
என்.கணேசன்  
நன்றி: தினத்தந்தி 3.4.2015


2 comments:

  1. மிருக டாக்டர் என்பதற்கு பிராணிகள் மருத்துவர் என்று குறிப்பிடலாமே

    ReplyDelete
  2. மிக்க நன்றி... மிக நல்ல பதிவுகள்.

    ReplyDelete