லாரியில்
இருந்து இறக்கிய பெட்டிகளை சம்யே மடாலய பிக்குகளும், வேலையாட்களும் உள்ளே கொண்டு
போக ஆரம்பித்ததை ஒடிசல் இளைஞன் பைனாகுலரில் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாம்
உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட பிறகு லாரியின் டிரைவரும் அவன் உடனே இருந்தவனும்
உள்ளே சென்றார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் வண்டிக் கூலி
வாங்கப் போகிறார்கள் என்று தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு உள்ளே வேறு கட்டளைகள்
காத்திருக்கலாம் என்று அவன் சந்தேகப்பட்டான்.
ஒடிசல் இளைஞன்
இன்னொரு எண்ணிற்கு போன் செய்தான். “இப்போது வந்திருக்கும் லாரி மூலமாகத் தான்
அவர்கள் தப்பிக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் நீ வண்டியோடு இங்கே வந்து விடலாம்.
விளக்கைப் போடாமல், சத்தம் செய்யாமல் வா”
இரண்டு கிலோ
மீட்டர் தூரத்தில் மறைவான இடத்தில் நிறுத்தி வைத்து இருந்த ஜீப்பை ஓட்டிக் கொண்டு
இன்னொருவன் சத்தமில்லாமல் இருட்டிலேயே வந்தான். வாங் சாவொ அடிக்கடி சம்யே மடாலயம்
வந்து கொண்டிருந்ததால் அவனுக்கு சந்தேகம் ஏற்படுத்த வேண்டாம் என்று தொலைவிலேயே
அந்த ஜீப்பை மறைவாக நிறுத்த ஒடிசல் இளைஞன் ஏற்பாடு செய்திருந்தான். ஜீப் வந்து
பாறைக்குப் பின்புறம் மறைந்து நின்றது. தயாராக இரு என்று ஜீப்பை ஓட்டி வந்தவனுக்கு
சைகை செய்து விட்டு பாறையில் இருந்தபடியே மறுபடி சம்யே மடாலயத்தை பைனாகுலர் மூலம்
ஒடிசல் இளைஞன் கவனிக்க ஆரம்பித்தான். சம்யே மடாலயத்தின் முன் எந்த இயக்கமும்
இல்லை.
பொறுமையாக
காத்திருந்தார்கள்.
சம்யே
மடாலயத்தின் உள்ளே அக்ஷயும், தலைமை பிக்குவும் தாங்கள் கண்ட காட்சியின்
தாக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் சிறிது நேரம் அப்படி நின்றிருந்தார்கள். லாரி
வந்து நின்ற சத்தம் கேட்டு முதலில் மீண்டவன் அக்ஷய் தான். தலைமை பிக்குவை அவன் கேள்விக்குறியுடன்
பார்த்தான். அவர் அக்ஷயிடம்
கரகரத்த குரலில் மெல்லச் சொன்னார். “நம் வண்டி தான் அன்பரே”
அக்ஷய் மைத்ரேயனை மெல்லத் தட்டி எழுப்பினான்.
“நாம் கிளம்பும் நேரமாகி விட்டது. எழுந்திரு”
மைத்ரேயன் உடனே விழித்துக் கொண்டான். எழுந்து
அமர்ந்த அவனைப் பார்க்கையில் தலைமை பிக்குவுக்கு ஒரு புறம் பக்தி மேலிட்டது.
மைத்ரேயன் தான் அது என்று தர்மசக்கரம் வேறு உறுதிமொழி அளித்து விட்ட நிலையில்,
இவரை நேரில் பார்த்துப் பழகிய பாக்கியம் கிடைத்துள்ளதே என்று சந்தோஷமாகவும் இருந்தது.
இன்னொரு புறம் அவருக்கு பெருங்கவலையும் ஆட்கொண்டது. எல்லா பக்கங்களிலும் ஆபத்து
சூழ்ந்துள்ளதால் அக்ஷயும் மைத்ரேயனும் எத்தனை தூரம் தாக்குப் பிடிப்பார்கள் என்று
சந்தேகமாக இருந்தது.
அக்ஷய் மைத்ரேயன் அருகில் வந்தமர்ந்தான்.
“போகத் தயார் தானே?”
மைத்ரேயன் முகமலர்ச்சியுடன் தயாரென்று தலையசைத்த
போது அவன் மனம் நெகிழ்ந்தது. புத்தரின் மறு அவதாரம் என்பதாலேயே எத்தனையோ
கஷ்டங்களைச் சந்திக்கப் போகிறானே இந்தச் சிறுவன் என்று மனம் சங்கடப்பட்டது. சற்று
முன் ஜொலிப்புடன் அவன் காலில் சுழன்ற தர்மசக்கரத்தை நினைத்துக் கொண்டான். தர்மம் நிறைய
சோதனைகளைச் சந்திப்பது யுக யுகங்களாக பூமியில் நடக்கின்ற சமாச்சாரம் அல்லவா?
ஆட்டிடையன் அணியும் உடையை மைத்ரேயனிடம் எடுத்துக்
கொடுத்த அக்ஷய் சற்று சங்கடத்துடனேயே சொன்னான். ”இதை அணிந்து கொள்ள வேண்டும். நான் போட்டிருக்கும் திட்டத்திற்கு
இது தேவையாக இருக்கிறது.”
மைத்ரேயன் முக மலர்ச்சியில் சிறிதும்
மாற்றமில்லை. அதை வாங்கிப் பார்த்து சின்ன குதூகலத்துடன் “நன்றாய் இருக்கிறது” என்றவன் புத்தபிக்கு உடையைக் கழற்றி விட்டு அந்த உடையை அணிந்து கொண்டான்.
தலைமை பிக்குவுக்கு
அதைப் பார்க்கையில் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கதறி அழுதார். புனித
ஆடையில் இருந்து ஆட்டிடையன் அணியும் ஆடையா?
மைத்ரேயன் தலைமை
பிக்குவிடம் கேட்டான். ”ஏன் எனக்கு நன்றாக இல்லையா?” அந்தக் கேள்வி
அவரை மட்டுமல்லாமல் அப்போது தான் அந்த அறைக்குள் நுழைந்திருந்த அவரது பிரதான
சீடனையும் துக்கப்படுத்தி விசும்பலை அவனிடம் ஏற்படுத்தியது. தலைமை பிக்கு குமுறிக்
குமுறி அழுதார். அவர்களது துக்கத்தைப் பார்க்கையில் அக்ஷய்க்குக் கஷ்டமாய் இருந்தது.
அவனும்
மௌனமாக இடையர்கள் அணியும் ஆடைக்கு மாறினான்.
பிரதான சீடன் மெல்லச் சொன்னான். “லாரி
டிரைவர் அறைக்கு வெளியே காத்திருக்கிறான் குருவே”
தலைமை பிக்கு பெரும் சிரமத்துடன் துக்கத்தை
அடக்கிக் கொண்டார். “வரச்சொல்”
லாரி டிரைவர் உள்ளே நுழைந்தான். அவனுக்கு சுமார்
28 வயதிருக்கும். நல்ல ஆஜானுபாகுவாக இருந்தான். “நாங்கள் சொன்னபடியே
செய்துவிட்டுத் தானே வந்திருக்கிறாய்” என்று அவனிடம் தலைமை பிக்கு கேட்டார். அவன்
ஆமாம் என்றான்.
அக்ஷய் முன்னால்
வந்தான். “நீ என்ன செய்தாய் என்பதை விவரித்துச் சொல்ல முடியுமா?”
பெரும்பாலான ஆபத்துகள் கிடைத்திருக்கும்
தகவல்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் அல்லது தவறாகப் புரிந்து கொள்வதால்
தான் ஏற்படுகின்றன என்பது அவனுடைய அசைக்க முடியாத அபிப்பிராயம். அவன் என்ன செய்ய
வேண்டும் என்பதை தலைமை பிக்கு மூலமாக முன்பே தெரிவித்திருந்தான். இப்போது அதைச்
செய்திருக்கிறேன் என்று லாரி டிரைவர் சொன்னாலும் நடந்ததை அனுமானத்தினால் அல்லாமல்
தெளிவாக அவன் வாய்வழியாகவே எதை எப்படிச் செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்து
கொள்வது முக்கியம் என்று நினைத்தான்.
லாரி டிரைவர் சொன்னான். “நீங்கள் சொல்லி
இருந்தபடி இருட்டிய பிறகு தாமதமாகவே லாரியோடு கிளம்பினோம். நீங்கள் சொன்னபடியே
போலீசார் வழிமடக்கி லாரியை நிறுத்தினார்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்டார்கள்.
சம்யே மடாலயத்திற்கு என்றேன். ஏன் இந்த இருட்டும் வேளையில் போகிறீர்கள் என்று
கேட்டார்கள். வண்டி வழியில் பழுதாகி விட்டதால் சரி செய்ய இவ்வளவு நேரமாகி விட்டது என்று
சொன்னேன். லாரியில் என்னவெல்லாம் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். மளிகை
சாமான்கள், துணிமணிகள், பூஜா சாமான்கள் என்றேன். நம்பிக்கை வராமல் முழுவதும் சோதனை
இட்டார்கள். பிறகு திருப்தி அடைந்து எங்களை அனுப்பினார்கள்.”
திருப்தியுடன் அக்ஷய் தலையசைத்தான். தலைமை
பிக்கு லாரி டிரைவரிடம் சொன்னார். “நல்லது. நீ வெளியே காத்திரு. இவர்கள் சிறிது
நேரத்தில் வந்து விடுவார்கள்.”
லாரி டிரைவர் போய் விட்டான். தலைமை பிக்கு
மைத்ரேயன் பக்கம் திரும்பினார். அவர் கண்கள் மறுபடியும் நிறைந்தன. அவர் அப்படியே
மண்டியிட்டு மைத்ரேயனைத் தொழுதார். “எத்தனையோ ஜென்மங்களின் நல்வினைப் பயனால்
உங்களைச் சந்தித்தேன் மைத்ரேயரே! இந்த
நாட்களை நான் என் இறுதி மூச்சு வரை நினைவு வைத்துக் கொள்வேன். கிளம்புவதற்கு முன் உங்கள்
வாயால் எனக்கு ஏதாவது உபதேசம் செய்வீர்களா?” சொல்லும் போதே ஆட்டிடையனின் உடையில் மைத்ரேயனைப் பார்க்க
நேர்ந்த துக்கம் மறுபடி அவரை ஆட்கொண்டது. பொங்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்த
முயன்றார். முடியவில்லை. பிரதான சீடனும் தான் இருந்த இடத்திலிருந்தே மண்டியிட்டு
வணங்கினான்.
மைத்ரேயன் அதிசயமாகத்
தொலைதூரப் பார்வையோ, மந்தமான பார்வையோ பார்த்து, பேசுவதைத் தவிர்க்காமல் தலைமை
பிக்குவைப் புன்னகையுடன் பார்த்துச் சொன்னான். “வெளியே எப்படித் தெரிகிறோம் என்பதை
விட உள்ளே எப்படி இருக்கிறோம் என்பது தானே முக்கியமானது புனிதரே. அதுவல்லவா
நம்மைக் காப்பாற்றுவதும் வீழ்த்துவதும்.”
தலைமை பிக்கு கைகள் இரண்டையும் கூப்பித்
தலை வணங்கினார். மைத்ரேயனின் வார்த்தைகள் அவர் அந்தராத்மாவைத் தொட்டு நின்றன.
புறத்தில் இருந்து அகத்துக்கு கவனத்தைத் திருப்புவதன் முக்கியத்துவத்தை எவ்வளவு
அழகாய் மைத்ரேயர் சொல்கிறார் என்று வியந்தார்.
அக்ஷய் மைத்ரேயனை பிரமிப்புடன்
பார்த்தான். ஆட்டிடையன் தோற்றத்தில் இருப்பதால் வருத்தப்பட்ட பிக்குவுக்கு
சொல்கின்ற ஆறுதலாயும், உள்ளே மனிதன் என்னவாக இருக்கிறான் என்பது தான் அவனைக்
காப்பாற்றவோ, வீழ்த்தவோ செய்யும் என்ற உபதேசமாயும் சொன்ன விதம் மாறுபட்ட மைத்ரேயனை
அவனுக்கு அறிமுகப்படுத்தியது.
ஆச்சரியப்படவும் நேரமில்லை என்று
உணர்ந்தவனாக அக்ஷய் தலைமை பிக்குவிடம் சொன்னான். “நாங்கள் கிளம்புகிறோம் புனிதரே.
உங்கள் உதவிக்கு நன்றி”
தலைமை பிக்கு உடைந்த குரலில் சொன்னார்.
“உங்களுக்கு நாங்கள் தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் அன்பரே. இந்தப் பிறவியில்
அந்தக் கடனைத் தீர்க்கமுடியும் என்று தோன்றவில்லை. ஒரே ஒரு வேண்டுதல் மட்டும்
உள்ளது. மைத்ரேயரை இனியும் நீங்கள் தான் காக்க வேண்டும்.”
“அதை நீங்கள் நினைவுபடுத்த வேண்டியதில்லை
புனிதரே. நான் முன்பே ஏற்றுக் கொண்ட வேலை அது. மைத்ரேயனை என் உயிரைக் கொடுத்தாவது
காப்பாற்றுவேன். பயப்பட வேண்டாம்”
தலைமை பிக்கு பேச வார்த்தைகள் இல்லாமல்
அவன் முன்னும் மண்டி இட்டு வணங்கினார். உடனே பின் வாங்கிய அக்ஷய் “என்ன இது
புனிதரே” என்று பதறினான். தலைமை பிக்கு மனதாரச் சொன்னார்.
“இப்பிறவியில் மட்டுமல்ல எத்தனை பிறவியிலும் நீங்கள் என் வணக்கத்திற்கு உரியவரே
அன்பரே”
அக்ஷய் மனம் லேசானது. மைத்ரேயனைப்
பார்த்தான். மைத்ரேயன் ஒரு மௌன சாட்சியின் பாவனையோடு நின்றிருந்தான். அவன்
முகத்தில் அமைதியைத் தவிர வேறு எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. முன்பே
தயார்ப்படுத்தி வைத்திருந்த தோலான ஒரு பையை எடுத்துக் கொண்டு அவன் மைத்ரேயனைப்
பார்த்துத் தலையசைத்தான். மைத்ரேயன் அவனருகில் வந்து நின்றான். இருவரும்
கிளம்பினார்கள்.
திபெத்தின் வரைபடம் அங்கேயே விழுந்திருந்ததைக்
கண்ட தலைமை பிக்கு அதை எடுத்துக் கொண்டு அக்ஷய் அருகில் வந்தார். “அன்பரே இதை
மறந்து இங்கேயே விட்டு விட்டுப் போகிறீர்களே”
அக்ஷய் சொன்னான். “இது எங்களிடம்
இருந்தால் ஆபத்து என்று தான் விட்டு விட்டுப் போகிறேன். ஆட்டிடையர்களிடம் இது
இருந்தால் அது சந்தேகத்துக்கு வழி வகுக்கும். இதை என் மனதில் பதித்திருக்கிறேன்.
அதனால் இது தேவையும் இல்லை”
தலைமை பிக்குவுக்கு மனதினுள் அவனை
மெச்சாமல் இருக்க முடியவில்லை. எல்லாம் முன் கூட்டியே யோசித்து வைத்திருக்கும்
இவன் போல ஒரு பாதுகாவலன் மைத்ரேயருக்கு கிடைக்க முடியாது. ஆனால் ஆபத்தின் உயரமும்
அளவும் இவனை விஞ்சி இருப்பது தான் அவருக்கு அச்சமாக இருந்தது.
தலைமை பிக்கு தன் பிரதான சீடனைப் பார்த்து
சமிக்ஞை செய்தார். அவன் போய் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். “வாசலில் வேறு யாரும் இல்லை குருவே”
அக்ஷயும் மைத்ரேயனும் கிளம்பினார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
திக் திக் திக் அடுத்த வாரம் வரை.
ReplyDeleteவெளியே எப்படி தெரிகிறோம் என்பதை விட உள்ளே எப்படி இருக்கிறோம் என்பது தானே முக்கியமானது. அதுவல்லவா நம்மை காப்பாற்றுவதும் வீழ்த்துவதும்.... அருமையான வரிகள். உங்களுக்கென்று வார்த்தைகள் எப்படி கணேசன் இப்படி விழுகிறது. எளிய வார்த்தைகளை மட்டுமே உபயோகித்து பெரிய தாக்கத்தை உண்டு செய்கிறீர்கள். பாராட்டுகள். கதை பிரமாதமாய் செல்கிறது. தொடர்கிறேன்.
ReplyDelete99 சதவீத மனிதர்கள் (என்னையும் சேர்த்துதான்)
ReplyDelete"வெளியே கடவுள் உள்ளே மிருகம்தானே"
மீதி உள்ள ஒரு சதவீத நல்ல மனிதர்களால்தான்
இந்த உலகம் இன்னும் இயங்குகிறது.
நல்ல தத்துவங்கள் ஆங்காங்கே சாரல்களாக தூவப்படட்டும்.
வளர்க....வளர்க...
Thathuvangal arumai.... Aduthu enga? Enna nadakkum? ariya avalaka ullom
ReplyDeletesuper naration ....
ReplyDeleteஅடுத்து என்ன ஆவல்
ReplyDelete