மகாசக்தி மனிதர்கள்-34
பரமஹம்ச யோகானந்தர் தன் குருவான
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் பூரி ஆசிரமத்திற்குச் சென்றிருந்த ஒரு சமயத்தில் தன்
கையால் நட்டு வளர்த்த செடியில் காய்த்த ஆறு காலிபிளவர்களை ஒரு கூடையில் எடுத்துச்
சென்றிருந்தார். குருவிடம் கொடுத்து ”இது என் அன்பான கண்காணிப்பில் விளைந்த காய்கறி” என்று சொன்னார். ”சரி உன் அறையில் வைத்திரு. நாளை சமையலுக்கு
இதைப் பயன்படுத்தலாம்” என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொல்ல யோகானந்தரும் அதை
எடுத்துக் கொண்டு போய் தன் அறையில் வைத்துக் கொண்டார்.
பூரி கடற்கரை
நகரமானதால் அங்கு இருக்கும் போது தன் சீடர்களுடன் காலையில் நடைபயிற்சி செல்வது
வழக்கம். மறுநாள் காலை குரு அழைத்தவுடன் நடைபயிற்சிக்குக் கிளம்பிய யோகானந்தர்
தான் ஆசையாகக் கொண்டு வந்திருந்த காலிபிளவர்களை பத்திரமாக கட்டிலுக்குக் கீழே
தள்ளி விட்டுப் போனார்.
போகின்ற வழியில்
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி யோகானந்தரிடம் கேட்டார். “நீ நம் ஆசிரமத்தின் பின்வாசலைப்
பூட்டினாயா?”
“ஆம். பூட்டியதாகத் தான் ஞாபகம்” என்றார் யோகானந்தர். சிறிது நேரம் மௌனமாக இருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
“இல்லை நீ ஆசிரமத்தின் பின் வாசலைப் பூட்டவில்லை” என்றார்.
தன் குரு
ஞானதிருஷ்டியால் அதைக் கண்டு தெரிவிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார்
யோகானந்தர். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி புன்னகையுடன் சொன்னார். “உன் அஜாக்கிரதைக்குத்
தண்டனையுண்டு. நீ கொண்டு வந்திருந்த ஆறு காலிபிளவர்கள் ஐந்தாகக் குறையப் போகிறது”
யோகானந்தருக்குப் புரியவில்லை. நடைபயிற்சி
முடிந்து குருவும் சீடர்களும் ஆசிரமத்திற்குத் திரும்பினார்கள். ஆசிரமத்திற்கு அருகே வந்தவுடன் ஸ்ரீயுக்தேஷ்வர்
கிரி தன் சீடர்கள் அனைவரையும் அப்படியே நிற்கச் சொன்னார். பின் யோகானந்தரிடம்
சொன்னார். “தெருவின் இடது புறத்திலிருந்து ஒருவன் வருவான். அவன் தான் உனக்கு
தண்டனையைத் தருபவன்”
யோகானந்தருக்கு என்ன நடக்கப் போகிறது
என்கிற ஆவல் அதிகரித்தது. அவர் தன் குரு சொன்னபடியே தெருவின் இடக்கோடியையே
பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு ஏழை குடியானவன் அங்கிருந்து வந்து
கொண்டிருந்தான். அவன் வினோதமாக கைகளை அசைத்து ஆடிக் கொண்டே வந்தான். அப்படியே
அவர்களைக் கடந்து போகவும் செய்தான். தெருவின் மறு கோடி வரை போயும் விட்டான்.
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
சொன்னார். “இப்போது அந்த ஆள் திரும்பி வருவான் பார்”. அவர் சொல்லி
முடித்தவுடன் அந்தக் குடியானவன் சடாரென்று திரும்பினான். திரும்பியவன் அதே பழைய
ஆட்டத்தோடு நடந்து சென்று ஆசிரமத்தின் பின்வழியாகச் சென்று சிறிது நேரத்தில்
கையில் ஒரு காலிபிளவருடன் வெளியே வந்தான். இப்போது அவனிடம் ஆட்டமில்லை. அமைதியாக
நடந்து சென்று கடைசியில் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து போனான்.
யோகானந்தர்
திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்ற விதத்தைக் கண்டு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரிக்குச்
சிரிப்பு தாள முடியவில்லை. அவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். திகைப்பு
குறையாமல் யோகானந்தர் தன் அறைக்கு விரைந்தார். அவர் அறையில் மேசையின் மேலேயே அவரது
தங்க மோதிரம், கடிகாரம், பணம் எல்லாம் இருந்தது. அந்த காலிபிளவர் திருடன் அதை
எல்லாம் தொடக்கூட இல்லை. ஆனால் கட்டிலுக்கு அடியில் அவர் ஆசையாக மறைத்து
வைத்திருந்த காலிபிளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறான்.
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
சொன்னார். “பாவம் அந்தக் குடியானவன். காலிபிளவர் சாப்பிட வேண்டுமென்று நிறைய நாளாக
ஆசைப்பட்டுக் கொண்டிருந்தான். நீ கொண்டு வந்திருந்த காலிபிளவர்களில் ஒன்று
அவனுக்குக் கிடைத்தால் அவன் சந்தோஷப்படுவான் என்று நினைத்தேன்”
காலிபிளவர் மீது ஆசை கொண்ட ஒருவன் வந்து
கொண்டிருப்பதை அறிந்து, அவன் அறியாமலேயே காலிபிளவர் இருக்குமிடத்தை அவனுக்கு
உணர்த்தி, அங்கு செல்ல வைத்து, அதை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேற வைத்த இந்த
சம்பவத்தில் தன் குரு ஸ்ரீயுக்தேஷ்வர்
கிரியின் சக்திப் பிரயோகம் யோகானந்தரைப்
பிரமிக்க வைத்தது.
ஆனால் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி இது போன்ற சக்திகளை சில்லரை
விஷயங்களுக்குப் பயன்படுத்துவதை என்றுமே விரும்பியதில்லை. இந்த காலிபிளவர்
நிகழ்ச்சி நடந்து சில தினங்களில் ஆசிரமத்தின் மண்ணெண்ணெய் விளக்கு ஒன்று காணாமல்
போயிற்று. அதைத் தேட யோகானந்தர் பெரிய முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. குருவைக்
கேட்டால் அவர் தன் ஞான திருஷ்டியால் பார்த்துச் சொல்வார் என்று நினைத்தார். அதைப்
புரிந்து கொண்ட ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சீடர்களிடம் அந்த விளக்கு பற்றி
விசாரித்தார். ஒரு சீடர் முந்தைய நாள் இரவு கிணற்றருகே அந்த விளக்கைக் கடைசியாகக்
கொண்டு சென்றதாகச் சொன்னார். “அங்கேயே தேடுங்கள்” என்று
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். யோகானந்தர் ஓடிச் சென்று அங்கே விளக்கைத்
தேடினார். அங்கு அந்த விளக்கு கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் யோகானந்தர் திரும்பி
வந்த போது வாய்விட்டுச் சிரித்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அதை ஞான திருஷ்டியால் கண்டுபிடிக்கும் சிரமத்தை
மேற்கொள்ளவில்லை. இதுவும் யோகானந்தருக்கு ஒருவிதத்தில் பாடமாக அமைந்தது.
ஒரு முறை பூரி
ஆசிரமத்தின் சார்பாக ஒரு ஆன்மிக பாதயாத்திரைக்கு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஏற்பாடு
செய்தார். அது கடுமையாக வெயில் இருந்த கோடைகாலம். ஆன்மிக பாதயாத்திரை என்பதால்
சீடர்கள் காலில் செருப்பில்லாமல் செல்ல வேண்டும். யோகானந்தர் “குருவே இந்த
சுட்டெரிக்கும் வெயிலில் எப்படி செருப்பில்லாமல் சீடர்களை அழைத்துச் செல்வது?
என்று கேட்டார்.
“கவலைப்படாதே கடவுள்
மேகங்களைக் குடையாக அனுப்பி வைப்பார். நீங்கள் நிழலிலேயே நடந்து செல்லலாம்” என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். யோகானந்தர் ஆகாயத்தைப் பார்த்தார்.
மழையின் அறிகுறியே இல்லை. ஆனாலும் குரு சொன்ன பின் சந்தேகப்பட ஏதுமில்லை என்று
யோகானந்தர் ஒத்துக் கொண்டார்.
அவர்கள்
பாதயாத்திரைக்குத் தயாரானார்கள். அவர்கள் ஆசிரமத்தை விட்டுக் கிளம்பிய போது
திடீரென்று கருமேகக் கூட்டம் வானில் திரண்டது. சீடர்கள் அனைவரும் குதூகலமாயினர்.
சிறிது மழை தூற்றலும் விழுந்தது. வானிலை மிகவும் ரம்யமாயிருக்க அனைவரும் பாத
யாத்திரை கிளம்பினார்கள். பாதயாத்திரை சென்று அவர்கள் ஆசிரமத்திற்குத் திரும்பி
வர இரண்டு மணி நேரங்கள் ஆனது. அது வரை
அப்படியே வானிலை நீடித்தது. அவர்கள் ஆசிரமம் வந்து சேர்ந்ததும் பழையபடி வெயில்
கொளுத்த ஆரம்பித்தது.
யோகானந்தர் தன்
குருவுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி எல்லாப் புகழும் இறைவனுக்கே
என்று வாயால் மட்டும் தெரிவிப்பவராக இல்லாமல் மனதார எண்ணுபவராகவும் இருந்தார்.
அவர் யோகானந்தரிடம் சொன்னார். “எல்லாம் வல்ல இறைவன் எப்போதுமே ஆத்மார்த்தமான
பிரார்த்தனைகளுக்கு அருள்பவராக இருக்கிறார். எந்த அளவு அவர் நம்
பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறார் என்பதை நாம் பல நேரங்களில் அறிவது கூட
இல்லை. சிலருக்கு மட்டுமே
சாதகமாகவும், மற்றவர்களை கண்டு
கொள்ளாமலும் கடவுள் இருப்பதில்லை. நம்பிக்கையோடு அணுகுபவர்கள் அனைவருக்கும் அவர்
அருள்கிறார்.”
கடவுளைப் பெயருக்கு முன்னால் நிறுத்தி
விட்டு அந்தக் கடவுளுக்கு இணையானவராகத் தன்னை காட்டிக்கொண்டோ அல்லது கடவுளே நான்
தான் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பறைசாற்றிக் கொண்டோ பல குருமார்கள் மலிந்து வரும் இக்காலத்தில் எத்தனையோ
அற்புதங்கள் செய்து காட்டிய பின்பும் கூட அதற்கு தனக்கென்று எந்தப் பெருமையையும்
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஏற்றுக் கொள்ளாதது உண்மையான உயர்வே அல்லவா?
அவர் செய்து காட்டிய
மேலும் பல அதிசயங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி-
10.04.2015
சிறந்த கண்ணோட்டம்
ReplyDeleteபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/