சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 6, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 57



லீ க்யாங் தான் முக்கியமாய் அறிய வந்த விஷயத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தான். “பிக்குவே, மைத்ரேயன் உயிருக்கு ஆபத்து என்பதால் மைத்ரேயனைக் காப்பாற்ற ஏதாவது ஒரு பாதுகாப்புக் குழுவை ஆசான்-தலாய் லாமா கோஷ்டி உருவாக்கி இருக்கிறதா?

ஒற்றைக்கண் பிக்கு சொன்னார். “இல்லை.... எனக்குத் தெரிந்து இல்லை

லீ க்யாங் அந்தப் பதிலை அறிந்திருந்தான் என்றாலும் அவர் வாயில் இருந்து அந்தப் பதில் வந்த பிறகு முழுத் திருப்தி அடைந்தான். அப்படி ஒரு பாதுகாப்புக் குழு இருந்திருந்தால் இந்தியாவில் இருந்து ஒருவனை திபெத்துக்கு இறக்குமதி செய்திருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

அடுத்ததாக லீ க்யாங் கேட்டான். “சம்யே மடாலயத்திற்குச் சென்றிருக்கிறீர்களா பிக்குவே?

“பல முறை சென்றிருக்கிறேன் சார்

“அந்த மடாலயத்திற்கும் மைத்ரேயனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

யோசித்து விட்டு ஒற்றைக்கண் பிக்கு சொன்னார். “இல்லையே

“அங்கிருக்கும் கோங்காங் மண்டபம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் பிக்குவே

லீ க்யாங் என்ன உத்தேசத்தில் இதை எல்லாம் கேட்கிறான் என்பது ஒற்றைக்கண் பிக்குவுக்குப் புரியவில்லை. “ஒரு காலத்தில் துஷ்ட சக்திகளாக இருந்தவைகளைப் பத்மசாம்பவா அடக்கி ஒடுக்கி பாதுகாப்பு தேவதைகளாக மாற்றி அவற்றை கோங்காங் மண்டபத்தில் வைத்திருக்கிறார். ஆனால் சம்யே மடாலயத்தின் பிரம்மாண்டமான மண்டல அமைப்பும், அங்கிருக்கும் பத்மசாம்பவாவின் தலைமுடி, கைத்தடி, பேசும் தாரா சிலை, சாந்தரக்‌ஷிதாவின் மண்டை ஓடு ஆகியவையும் தான் அங்கு பிரபலமே தவிர கோங்காங் மண்டபம் அல்ல

“கோங்காங் மண்டபத்தில் இருக்கும் துஷ்டசக்தி சிலைகள் சிலரைத் தாக்குவதுண்டு என்று சொல்கிறார்களே அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....

ஒற்றைக்கண் பிக்கு லேசாய் சிரித்தார். “பல முறை சம்யே மடாலயம் அழிந்து திரும்பத் திரும்ப கட்டப்பட்டதால் பத்மசாம்பவாவின் மந்திரக்கட்டு தளர்ந்து வருகிறது என்றும் அந்த துஷ்ட சக்திகள் பலம் பெற்று வருகின்றன என்றும் சிலர் நம்புகிறார்கள். அதை உறுதிப்படுத்த இது போன்ற கட்டுக்கதைகள் உருவாக்குகிறார்கள் என்று நினைக்கிறேன்....

லீ க்யாங் மெல்ல கேட்டான். “மைத்ரேயனுக்கு வேறு எதிரிகள் யாராவது இருக்கிறார்களா?

ஒற்றைக்கண் பிக்குவுக்கு சம்யே மடாலயம், துஷ்ட சக்திகள், மைத்ரேயனுக்கு எதிரிகள் என்ற வரிசையில் லீ க்யாங் கேள்வி கேட்டதால் ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. ஆனால் லீ க்யாங் போன்ற புத்திசாலியிடம் அதைச் சொல்வது பரிகாசத்துக்கு உள்ளாக்கலாம் என்று தோன்றியதால் தயங்கினார். அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த லீ க்யாங் சொன்னான். “எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தயங்காமல் சொல்லுங்கள்

பல காலமாகச் சொல்லப்பட்டு வரும் தீயசக்திகளின் ரகசியக்குழு....ஒற்றைக்கண் பிக்கு சொல்லி விட்டு நிறுத்தினார்.

லீ க்யாங் சொன்னான். “விளக்கமாகவே சொல்லுங்கள்....

ஒற்றைக்கண் பிக்கு முழு நம்பிக்கை தனக்கில்லை என்பதை தொனியிலேயே தெளிவுபடுத்தியபடி சொன்னார். “கௌதம புத்தர் மகாநிர்வாணம் அடைவதற்கு சிறிது முன்பு கூட தீய சக்திகளின் கடவுளான மாரா அதைத் தடுக்க அவரிடம் தன் எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்தினான். ஆனால் போதி மரத்தடியில் அதற்கெல்லாம் அசராத மன உறுதியுடன் அமர்ந்த புத்தர் மகாநிர்வாணம் அடைந்ததும் அல்லாமல் தான் உணர்ந்த தர்ம வழியை உபதேசித்து மனிதகுலத்திற்கு துக்கத்திலிருந்து கடைத்தேறும் மார்க்கத்தைக் காட்டினார். அன்று அவரிடம் தோற்றுப் போன மாரா அவரின் மறு அவதாரம் வரை காத்திருக்கிறான் எனவும் அவரின் மறு அவதாரம் நிகழும் போது அவரை வீழ்த்தாமல் விட மாட்டான் என்றும் சொல்கிறார்கள். புத்தரின் மறு அவதாரத்திற்குப் பல காலம் முன்பே மாராவின் ஆசியால் ஒரு ரகசியக்குழு உருவாக ஆரம்பித்திருக்கிறது என்றும் குழுவினர் அனைவரும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் மைத்ரேயன் உலகில் தோன்றும் போது அவனை எதிர்க்கத் தயாராயிருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்.....

மிகவும் கவனமாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த லீ க்யாங் சிந்தனையில் ஆழ்ந்தான். இது போன்ற ரகசியக்குழு ஒன்று பற்றிய வதந்தி அவன் காதையும் முன்பே எட்டி இருந்தது. அதை வதந்தி என்ற அளவிலேயே அவன் இது வரை விட்டிருந்தான்.  காரணம் உலக அளவில் இது போன்ற ரகசியக்குழுக்கள் பற்றிய வதந்திகளுக்குக் குறைவில்லை. ஹிட்லரின் நாசிகளின் ரகசியக்குழு இப்போதும் ரகசியமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நம்புபவர்களும், இல்லுமினாட்டி என்ற இன்னொரு ரகசியக்குழு உலகையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர மறைவாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும நம்புபவர்களும் இன்றும் ஏராளமாக உள்ளார்கள். அவர்களில் பலர் அறிவாளிகள் என்பது தான் ஆச்சரியம்.

இப்படி பல ரகசியக்குழுக்கள் பற்றிய வதந்திகள் உலா வந்து கொண்டிருந்ததால்  சைத்தானின் இந்த ரகசியக்குழுவுக்கு அவன் அதிக முக்கியத்துவம் தந்திருக்கவில்லை....

லீ க்யாங் கேட்டான். “அந்த ரகசியக்குழு திபெத்தில் இயங்குகிறது என்றா சொல்கிறார்கள்.

“பல நாட்டு உறுப்பினர்கள் அதில் இருக்கிறார்களாம். உலகம் முழுவதும் விரிந்திருக்கிறார்களாம். அவர்கள் அபூர்வ சக்திகள் படைத்தவர்களாம்.... இப்படி எத்தனையோ கற்பனைக் கதைகள்....

“அதன் உறுப்பினர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யாரையாவது இது வரை சந்தித்திருக்கிறீர்களா பிக்குவே....

“இல்லை. அதிலும் ஒரு அமானுஷ்யத்தை உருவாக்கிச் சொல்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டமாம்....சொல்லி விட்டு ஒற்றைக்கண் பிக்கு சிரித்தார். ஆனால் லீ க்யாங் சிரிக்கவில்லை.



ன்று இரவு போயே தான் ஆக வேண்டுமா அன்பரே”  சம்யே மடாலயத் தலைமை  பிக்கு அக்‌ஷயிடம் கடைசியாக ஒரு முறை ஆதங்கத்துடன் கேட்டார்.

ஆம் புனிதரே. இந்த இரண்டு மூன்று நாட்கள் இங்கு தங்கியதே பெரிய விஷயம். அப்படித் தங்கியதில் உங்களுக்கும் பெரிய ஆபத்தை வரவழைக்கக்கூடிய சூழ்நிலையும் உருவாகி விட்டது. இனியும் நாங்கள் இங்கே இருப்பது எங்களுக்கும் பாதுகாப்பல்ல, உங்களுக்கும் நல்லதல்ல

புத்தபிக்கு கலக்கத்துடன் தலை அசைத்தார். கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரவு பத்து. இனி சிறிது நேரத்தில் வண்டி வந்து விடும்.....  எந்தக் கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்த மைத்ரேயனை பிக்கு கவலையுடன் பார்த்தார். இனி போகும் பயணத்தில் படுக்கையில் உறக்கம் என்பது இருக்கப் போவதில்லை என்பதால் “படுத்து உறங்கிக் கொள்என்று அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொல்லி இருந்தான். சரியென்று ஒன்பது மணிக்கே மைத்ரேயன் படுத்து உறங்க ஆரம்பித்து விட்டிருந்தான்.

புத்தபிக்கு மறுபடியும் அக்‌ஷயைப் பார்த்தார். அக்‌ஷய் ஒரு பெரிய திபெத்திய வரைபடத்தை விரித்து வைத்து அதை முழுக்கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். திபெத்தின் எல்லா எல்லைப் பகுதிகளையும் அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான்.....

மைத்ரேயன் புரண்டு படுத்தான். அவன் போர்வை சிறிது விலகியது. அவன் கால் போர்வையில் இருந்து வெளிப்பட்டு அவனுடைய அடிப்பாதத்தில் ஏதோ மின்னியது. புத்த பிக்கு கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார். தர்மசக்கரம். ஒரு கணம்  அந்த தர்மசக்கரம் பொன்னிறத்தில் மின்னியதில் அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. மேலான பரவச நிலை அவரை ஆட்கொண்டது. ஆனால் வார்த்தைகள் வாயில் இருந்து எழ மறுத்தன.

மைத்ரேயன் உறங்குவதைப் பார்த்து நானும் உறங்கி விட்டுக் கனவு காண்கிறேனா என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. கண்களை நன்றாகவே விரித்துப் பார்த்தார். இது கனவு அல்ல என்பது புரிந்தது. பரவசம் பல மடங்காகி அக்‌ஷயை அழைக்க நாக்கு எழாமல், அக்‌ஷய் அருகில் சென்று தோளில் தட்டினார்.

அக்‌ஷய் அவர் பக்கம் திரும்பினான். அவர் மைத்ரேயனின் பாதத்தைக் காட்டினார். அக்‌ஷய் பார்க்கையிலும் அந்தப் பாதத்தில் தர்மசக்கரம் பொன்னிறத்தில் மின்னி ஒரு சுழல் சுழன்று நின்றது. மின்னுவது நின்ற போதும் தர்மசக்கரம் தெளிவாகவே தொடர்ந்து தெரிந்தது. அக்‌ஷயும் பிரமித்தான்.

சம்யே மடாலயத்தின் வெளியே ஒரு லாரி வந்து நிற்கும் சத்தம் இரவின் அமைதியைத் துளைத்துக் கொண்டு கேட்டது.

புத்தபிக்கு கரகரத்த குரலில் மெல்ல சொன்னார். “வண்டி வந்து விட்டது அன்பரே  



டிசல் இளைஞன் ஒரு லாரி வந்து சம்யே மடாலயம் முன் நின்றதைப் பார்த்து சுறுசுறுப்படைந்தான். கிட்டதட்ட ஒன்றரை நாளாக ஒரு பாறையின் பின்னால் ஒளிந்து சம்யே மடாலயத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த அவன் இரவு நேரத்தில் நன்றாகப் பார்க்கக் கூடிய உயர் தர பைனாகுலரை எடுத்து அதன் மூலம் பார்க்க ஆரம்பித்தான்.

லாரியிலிருந்து டிரைவரும் மற்றொருவனும் இறங்கினார்கள். பின் பிறத்தில் இருந்து ஏதோ பொருள்களை இறக்கிக் கீழே வைக்க ஆரம்பிப்பது தெரிந்தது.

ஒடிசல் இளைஞன் அலைபேசியை எடுத்து எண்களை அழுத்தினான். இரண்டு முறை எதிர்ப்பக்கம் மணி அடித்த பின் நிறுத்தி விட்டுக் காத்திருந்தான்.  மேலும் இரண்டு நிமிடங்கள் பொறுத்து அவன் அலைபேசி மெல்லிய ஓசை எழுப்பியது. மடாலயத்தில் இருக்கும் தங்கள் ஆளிடம் பேசினான். “மடாலயத்திற்கு முன் இந்த நேரத்தில் லாரி வந்து நிற்கிறது. ஏதோ பொருள்களை எடுத்து வைக்கிறார்கள். என்ன விஷயம்

“மடாலயத்திற்கு வரும் மளிகைச்சாமான்கள், மற்ற பூஜைப் பொருள்கள் எல்லாம் தான்....

“வழக்கமாய் வரும் லாரி தானா இது?

“ஆமாம். ஆனால் வழக்கமாய் வரும் நேரம் இது அல்ல. எப்போதும் இருட்டுவதற்குள் வந்து விடும். இந்த முறை தான் இந்த நேரத்தில் வந்திருக்கிறது  

ஒடிசல் இளைஞனுக்குப் புரிந்தது. இதில் தான் மைத்ரேயனும் பாதுகாவலனும் தப்பிக்கப் போகிறார்கள். இன்றிரவே அவர்கள் தப்பிக்க முயலலாம் என்று மாரா எத்தனை சரியாக கணித்து முன்பே சொல்லி இருக்கிறான் என்ற வியப்பு எழுந்தது.  

அவனும் தயாரானான்.

(தொடரும்)
என்.கணேசன்



6 comments:

  1. அருமை !வழக்கம் போல !!! .
    நீங்கள் இல்லுமினட்டி பற்றி நம்பவில்லையா ?

    ReplyDelete
  2. சுந்தர்August 6, 2015 at 6:37 PM

    அருமையாய், எளிமையாய் எழுதறீங்க. மர்மம் விறுவிறுப்பு மட்டும் இல்லாம ஆழமாகவும், உணர்வு பூர்வமாகவும் எழுதறீங்க. உங்கள் எழுத்து பலரை ரீச் ஆக வேண்டும். பல மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்பது என் ஆசை. முயற்சி செய்யுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. I tell this from paraman ragasiyam novel days. Had his novels been in English, they would surely be bestsellers.

      Delete
  3. Very interesting and thrilling.

    ReplyDelete
  4. Aksai... eppadi thappippan? Next enna plan..? Enpathai ariya... Avalaka ullen...!

    ReplyDelete