ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒரு நாள் காலையில் அவர் எழுதிய சில தாள்களைக் காண்பித்து கர்னல் ஓல்காட்டிடம் சொன்னார். “நேற்றிரவு இதை எழுத எனக்கு உத்தரவு கிடைத்து எழுதினேன். இது எங்காவது அனுப்ப வேண்டிய கட்டுரைக்கா, புத்தகத்திற்கா, இதற்கு வேறேதும் காரணம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. உத்தரவை நிறைவேற்றி விட்டேன். அவ்வளவு தான்”. சொல்லி விட்டு அந்தத் தாள்களை மேசையின் உள்ளே வைத்து விட்டார்.
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் திடீர் திடீர் என்று இப்படி எதையாவது செய்வது வழக்கமானதால் கர்னல் ஓட்காட் அதற்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. சில மாதங்கள் அந்தத் தாள்கள் அந்த மேசையின் உள்ளேயே இருந்தன. ஒரு முறை வெளியூர் போயிருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அங்கிருந்து கர்னல் ஓல்காட்டுக்குக் கடிதம் எழுதினார். “நான் அன்று காட்டிய தாள்கள் ஒரு புத்தகத்திற்காகத் தான். கிழக்கத்திய நாடுகளின் ஆன்மிக, தத்துவ வரலாறும், இக்காலத்திற்குத் தேவையான அதன் வழிகாட்டலும் பற்றியதாக அந்தப் புத்தகம் இருக்கப் போகிறது. நான் இது வரை படித்திராத, அறிந்திராத விஷயங்களைப் பற்றி எல்லாம் எழுதப் போகிறேன்”
இப்படிக் கடிதம் மூலம் அறிவித்தாலும் வெளியூரிலிருந்து திரும்பி வந்த பின்னர் எப்போதாவது மட்டுமே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதினார். ஆனால் திடீரென்று ஏற்பட்ட ஆன்மிக உந்துதல் காரணமாக, பின் விடாமல் அந்த நூலை எழுத ஆரம்பித்தார். அவர் அந்த அளவு மும்முரமாகத் தொடர்ந்து உழைத்து கர்னல் ஓல்காட் அதுவரை பார்த்ததில்லை. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுத எழுத அதைச் சரிபார்த்து திருத்தும் பொறுப்பு கர்னல் ஓல்காட்டுக்குத் தரப்பட்டது. ஐசிஸ் தேவதையின் திரை (The
veil of Isis) என்ற பெயரிட்டு எழுத ஆரம்பிக்கப்பட்டது அந்த நூல். பின் அந்தப் பெயரில் ஏற்கெனவே ரோசிக்ரூசிய சித்தாந்த நூல் ஒன்று இருப்பது தெரிய வந்ததால் திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை (Isis
Unveiled) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஐசிஸ் தேவதை எகிப்தின் ஞான தேவதை. எல்லா ஞானத்திற்கும், மேஜிக் மற்றும் அமானுஷ்ய சக்திகளுக்கும் கடவுளாகக் கருதப்படுபவர். அந்த ஞானத்தையும் ரகசியக் கலைகளையும் பற்றி விவரிக்கும் விதமாக 1875 ஆம் ஆண்டு இறுதியில் எழுத ஆரம்பிக்கப்பட்ட அந்த நூல் 1877 ஆண்டில் தான் எழுதி முடிக்கப்பட்டது. தினமும் காலையில் அந்த நூலை எழுதத் துவங்கும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் நள்ளிரவு இரண்டு மணி வரை எழுதிக் கொண்டிருப்பார். அவர் மேசைக்கு எதிர்ப்புறம் அமர்ந்து கர்னல் ஓல்காட் பிழை திருத்தம் செய்து கொண்டிருப்பார். உறக்கத்தால் கண்கள் சொருகும் வரை நடக்கும் இந்த எழுத்துப் பணியிலும் கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் கண்ட அற்புதங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
சில நேரங்களில் எழுதுவது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அம்மையார் என்று கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றும். சில நேரங்களில் எழுதுவது அவரல்ல வேறு யாரோ என்று தோன்றும். சில பக்கங்களில் ஏராளமான எழுத்துப் பிழைகளும், இலக்கணப்பிழைகளும் இருக்கும். தொடர்ந்து பல பக்கங்களில் ஒரு சிறு பிழை கூட காணக்கிடைக்காது. சில சமயங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் யோசித்து யோசித்து எழுதுவார். சில சமயங்களில் அசாத்திய வேகத்தில் சிறிது கூட யோசிக்காமல் எழுதிக் கொண்டே போவார். சில விஷயங்களை எழுதுவதற்கு முன் அது சம்பந்தமான அறிஞர்களை அழைத்து அதைக் குறித்து விவாதிப்பார். அப்படி அவர் விவாதிக்கும் போது அந்த அறிஞர்களையே வியக்க வைக்கும் அளவு அபார ஞானத்தை அவர் வெளிப்படுத்துவதுண்டு.
ஒரு முறை ஒரு யூத அறிஞருடன் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பேசிக் கொண்டிருக்கையில் அவர் சொன்ன தகவல்களை எல்லாம் கேட்டு கர்னல் ஓல்காட் மட்டுமல்லாமல் அந்த யூத அறிஞரே வியந்து போனார். அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொன்னார். “என் மதத்தின் புனித நூல்களை நான் முப்பது ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். மற்றவர்களுக்குப் படிப்பித்தும் வருகிறேன். ஆனால் இன்று நானே என் மதத்தைப் பற்றி இதுவரை அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி”
அந்த யூத அறிஞருடன் பேசுகையில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தெரிவித்த விஷயங்களைப் பற்றி அவர் முன்னதாகச் சிறிது கூட பேசியிருந்ததாக கர்னல் ஓல்காட்டுக்கு நினைவில்லை. அதை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அறிந்திருந்ததற்கான அறிகுறியும் அவருக்குத் தென்பட்டிருக்கவில்லை. ஏன் அந்த அறிஞருடன் பேச ஆரம்பிப்பதற்கு முன் வரை கூட அவர் அறிந்திருக்கவில்லை என்று கூட கர்னல் ஓல்காட் சந்தேகித்தார். ஆனால் தேவைப்படுகிற போது தேவைப்படும் ஞானம் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு ஏதாவது வழியில் கிடைத்து விடுகிறது என்பதே கர்னல் ஓல்காட்டின் புரிதலாக இருந்தது.
நூல் எழுதுவதில்
குறிப்பெடுக்க அவர்களிடம் சுமார் நூறு புத்தகங்கள் மட்டுமே இருந்தன. அதில் அவர்கள் மற்றவர்களிடம் கேட்டு வாங்கி வைத்திருந்த புத்தகங்களும் அடக்கம். ஆனால் அந்த ” திரை விலக்கிய ஐசிஸ் தேவதை” என்ற நூலில் பல நூறு புத்தகங்களின் குறிப்புகள் இருந்தன. அவர்கள் இருவரும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகத்தில் அமர்ந்து குறிப்பெடுத்து எழுதிய நூல் போல் முடிவில் அது அமைந்திருந்தது.
சில நேரங்களில் தன் முன்னால் இருந்த புத்தகத்திலிருந்து குறிப்பெடுத்து எழுதும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சில நேரங்களில் வெட்ட வெளியைப் பார்த்தும் எழுதுவதுண்டு. அவர் எழுதுவதைப் பார்த்தால் எதையோ அவர் பார்த்துப் பார்த்து எழுதுகிறார் என்றே கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றினாலும் அவர் கண்களுக்கு அந்த வெட்ட வெளியில் எதுவும் தென்பட்டதில்லை. ஆனால் யாரோ விரித்துக் காட்டிக் கொண்டிருக்கும் நூலில் இருந்து ப்ளாவட்ஸ்கீ அம்மையார் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வே கர்னல் ஓல்காட்டுக்கு ஏற்படும். தன் அபூர்வ சக்திகளால் அந்தப் புத்தகங்களை வரவழைக்கிறாரா, இல்லை அவர் நம்பும் மகாத்மாக்களின் உதவியால் அந்தப் புத்தகங்களை வெட்ட வெளியில் அவரால் பார்க்க முடிகிறதா என்பது கர்னல் ஓல்காட்டுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த நூலை எழுதிய இரண்டாண்டு காலத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அம்மையார் அண்டவெளியில் இருந்து வரவழைத்த இரண்டு நூல்களைப் பார்க்கும் வாய்ப்பு கர்னல் ஓல்காட்டுக்கு வாய்த்தது.
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வெட்ட வெளியில் பார்த்து எழுதிய குறிப்புகளில் இரண்டு இடங்களில் கர்னல் ஓல்காட் பிழையைக் கண்டுபிடித்தார். அதை அவரிடம் சொல்ல அவரோ “அது சரியாகத் தான் இருக்கும். ஏனென்றால் அது என் சொந்தக் கருத்தல்ல அந்த நூல்களை எழுதிய அறிஞர்களின் கருத்து. அதை விட்டு விட்டு அடுத்ததைப் பாருங்கள்” என்று சொல்லி விட்டார். ஆனால் ஓரளவு அது குறித்துப் படித்திருந்த கர்னல் ஓல்காட்டுக்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதியிருப்பது தவறென்றே பட்டதால் “நான் சம்பந்தப்பட்ட நூல்களைப் பார்த்துத் திருப்தி அடைந்தால் தான் இதை அனுமதிப்பேன். இல்லா விட்டால் அனுமதிக்க முடியாது” என்று உறுதியாகக் கூறி விட்டார். அவர் பார்க்கக் கேட்ட இரண்டு நூல்களில் ஒன்று உயிரியல் மற்றும் உளவியல் சம்பந்தப்பட்டது. இரண்டாவது நரம்பியல் சம்பந்தப்பட்டது.
கர்னல் ஓல்காட் பிடிவாதமாக இருக்கவே வேறு வழியில்லாமல் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “இருங்கள் வரவழைக்க முயற்சிக்கிறேன்” என்றார். சொல்லி விட்டு தொலைதூரத்தில் தன் பார்வையை நிலைத்து நிற்க வைத்தார். அவர் அப்படிச் செய்யும் போது தான் அதிசய சக்திகளை வெளிப்படுத்துவார் என்பதைப் பலமுறை கவனித்திருந்த கர்னல் ஓல்காட் ஆச்சரியத்துடன் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “அங்கே” என்று அடித்தள அமானுஷ்ய குரலில் யாரிடமோ பேசுவது போல் சொல்லி விட்டு அறையின் ஒரு மூலையைக் காட்டினார். பின் இயல்பு நிலைக்குத் திரும்பி கர்னல் ஓல்காட்டிடம் அதே மூலையைக் காட்டிச் சொன்னார். “அங்கே இருக்கிறது பாருங்கள். போய் எடுத்துக் கொள்ளுங்கள்”
அவர் சொன்னபடியே கர்னல் ஓல்காட் சென்று பார்த்த போது அறை மூலையில் இரண்டு நூல்கள் இருந்தன. அந்த நூல்களை எடுத்து வந்து பிரித்துப் பார்த்த போது கர்னல் ஓல்காட் சொன்னபடியே அந்த நூல்களில் எழுதியிருந்ததும், அதைப் பார்த்து ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதி இருந்ததும் மாறுபட்டிருந்தன. அதை கர்னல் ஓல்காட் அவருக்குக் காட்டினார். பின் அவர் சொன்னதை எந்தச் சங்கடமும் இல்லாமல் ஏற்றுத் திருத்திக் கொண்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்த நூல்களை எடுத்த இடத்திலேயே வைத்து விடச் சொன்னார். அப்படியே கர்னல் ஓல்காட் அந்த நூல்களை அறை மூலையில் வைத்து விட்டு வந்தார். அடுத்த நிமிடத்தில் அந்த நூல்கள் அங்கிருந்து மாயமாய் மறைந்து போயின.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 14.05.2019
வியப்பாக உள்ளது.
ReplyDeleteஆச்சரியமான பல தகவல்கள் உள்ளது... அருமை...
ReplyDeleteஅமானுஷ்ய ஆன்மீகம் வியக்க வைக்கிறது.
ReplyDeleteஅருமை.
Hello Sri,
ReplyDeleteA kind request.
I regularly visit your site to read Illuminati series.
After reading this article somehow found all the previous episodes of "Anmega payanathil Athmasakthigal".
Could you please add a specific tag or heading so that we could easily find and read all episodes.!?
Sir you're God sent. I guess you might be a reflection of Blavatsky Ammaiyar. Without Gods blessing all these publications are highly impossible.
ReplyDeleteI'll pray to God for your well being and longevity. Please continue your job without any break. Because all your publications are not only for our current generation, but it will speak about you even after 1000 years.