சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 21, 2019

சத்ரபதி 95


ரணடைந்து, கைது செய்யப்பட்டு, சங்கிலியால் கட்டப்பட்டு, தன் முன் கொண்டு வரப்பட்ட ஃபிரங்கோஜி நர்சாலாவை செயிஷ்டகான் கூர்ந்து பார்த்தான். சற்றும் தலைகுனியாமல், நிமிர்ந்த நெஞ்சுடன் நேர் பார்வை பார்த்த ஃபிரங்கோஜி நர்சாலாவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. செயிஷ்டகான் மாவீரன். வீரம் எங்கிருந்தாலும் அதை மதிக்கும் மனோபாவம் அவனுக்கிருந்தது. தோற்று சரணடைந்த பின்பும் தலைகுனிய மறுக்கும் உறுதியும் தைரியமும் வீரர்களிலேயே சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது….

செயிஷ்டகான் மனதில் அவனை மதித்ததை வெளியே காட்டாமல் கடுமையை முகத்தில் கூட்டிக் கொண்டு சொன்னான். “பிரங்கோஜி உன்னால் என் படைவீரர்கள் பலர் மாண்டிருக்கிறார்கள். பலத்த சேதத்தை நீ என் சேனைக்கு ஏற்படுத்தி இருக்கிறாய். உனக்கு மரண தண்டனை வரை விதிக்கத் தகுந்த குற்றம் இது. என்ன சொல்கிறாய்?”

ஃபிரங்கோஜி நர்சாலா அமைதியாகச் சொன்னான். “உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் பிரபு. இதில் நான் எதுவும் சொல்வதற்கில்லை”

செயிஷ்டகான் ஒன்றும் சொல்லாமல் அவனைக் கடுமை குறையாமல் பார்த்தான். அவன் கூரிய பார்வையை ஃபிரங்கோஜி நர்சாலா நேரடியாகச் சந்தித்தான். செயிஷ்டகான் சொன்னான். “தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரே வழி இருக்கிறது. நீ எங்கள் படையில் இணைந்தால் மரணத்திலிருந்து காப்பாற்றப்படுவாய்.”

“உங்கள் படையில் இணைவதை விட மரணம் மேல் என்று நினைக்கிறேன் பிரபு. தாராளமாக தாங்கள் தண்டனையை நிறைவேற்றலாம்”

செயிஷ்டகான் அந்தப் பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் குரலில் ஏளனம் காட்டிச் சொன்னான். “வீரம் என்பது வேறு. முட்டாள்தனம் என்பது வேறு. முட்டாள்தனமாக நடந்து கொள்வதை வீரம் என்று ஒருவன் எண்ணிக் கொள்ளக்கூடாது. தோற்றவனுடன் இருந்து என்ன சாதிக்கப் போகிறாய்?”

”நம் இருவர் அகராதியும் ஒன்றாய் இருக்க வேண்டிய அவசியமில்லை பிரபு. என் மதிப்பீடுகளும் தங்கள் மதிப்பீடுகளும் வித்தியாசமானவை. உயிரைத் தக்க வைத்துக் கொள்வதை விட உயர்வான விஷயங்கள் இருக்கின்றன என்று நம்புபவன் நான்.”

“உயிர் போனபின் மதிப்பீடு உட்பட மிஞ்சுவது எதுவுமில்லை ஃபிரங்கோஜி. நன்றாக யோசித்துப் பார். சாகன் கோட்டையை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம். உள்ளே இருந்து நீ முடிந்தவரை நன்றாகவே போராடி இருக்கிறாய். ஆனால் உன் தலைவன் சிவாஜி உனக்கு உதவ ராஜ்கட்டில் இருந்து ஓடி வரவில்லை. இதுவே எங்கள் கோட்டையாக இருந்து அன்னியர்கள் கைப்பற்ற வந்திருந்தால் பல பகுதிகளில் இருந்து உதவிகள் வந்து குவிந்திருக்கும். படைபலம் இருப்பவனால் மட்டுமே தர முடிந்த சிறப்பு அது….”

“நீங்கள் என்ன கூறினாலும் உங்கள் சிறப்பில் பங்கு கொள்ள நான் விரும்பவில்லை பிரபு” ஃபிரங்கோஜி நர்சாலா உறுதியாகச் சொன்னான்.

செயிஷ்டகான் பெருமூச்சு ஒன்றை விட்டான். சிவாஜியின் பலம் அவன் அறிவும், வீரமும், தந்திரமும் மட்டுமல்ல இவனைப் போன்ற மனிதர்களைச் சம்பாதித்திருப்பதும் தான் என்று தோன்றியது. வெற்றி தோல்விகள், லாப நஷ்டங்கள் கணக்கு வைத்துக் கொள்ளாமல் தங்களுக்கென்ற மதிப்பீடுகளிபடி நடந்து கொள்ளும் இது போன்ற மனிதர்கள் அரிதிலும் அரிது. அவன் அப்படி ஒருத்தியை மட்டுமே இது வரைக்கும் பார்த்திருக்கிறான். அது அவன் சகோதரியின் மகளும், ஔரங்கசீப்பின் மூத்த சகோதரியுமான ஜஹானாரா.

அவள் ஆதரித்த மூத்த சகோதரன் இறந்து போன பின்னும், அவள் மேல் உயிரையே வைத்திருந்த சக்கரவர்த்தி ஷாஜஹான் சிறைவைக்கப்பட்ட பின்னும், ஔரங்கசீப் சக்கரவர்த்தியாகி டெல்லி தர்பாரில் எல்லோரும் ஔரங்கசீப் பக்கம் போய் விட்ட பின்னும் ஔரங்கசீப்பை வெளிப்படையாகவே எதிர்த்து நிற்கும் நிலைப்பாட்டை எடுத்த ஒரே ஜீவன் ஜஹானாரா தான். பாதுஷா பேகம் பதவியை அவளிடமிருந்து எடுத்து இளைய சகோதரி ரோஷனாராவுக்கு ஔரங்கசீப் தந்த பின்னும் அதை ஒரு பொருட்டாக நினைக்காதவள் அவள். தந்தையுடனே இருப்பேன் என்று உறுதியாகச் சொல்லி அனுமதி வாங்கி ஷாஜஹானுடன் சிறை வாழ்க்கை வாழ்பவள் அவள்.

ஒரு காலத்தில் சகோதரியின் கணவரும், சக்கரவர்த்தியுமான ஷாஜஹானுடன் மிக நெருக்கமாக இருந்த செயிஷ்டகான் ஔரங்கசீப் அரியணை ஏறிய பிறகு ஒரு முறை கூட சிறையிலிருக்கும் ஷாஜஹானைச் சென்று சந்தித்ததில்லை. சந்தித்திருந்தால் டெல்லி அரசவையில் அவனுக்கு ஒரு இடம் இருந்திருக்காது. தக்காணத்தின் கவர்னராகும் வாய்ப்பும் இருந்திருக்காது. தாய் மாமன் என்ற போதும் இந்த விஷயத்தில் ஔரங்கசீப்பிடம் அவன் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. தந்தையையும், சகோதரர்களையுமே எதிரிகளாக நினைக்கும் ஔரங்கசீப் தாய்மாமனை ஒரு பொருட்டாகவே நினைத்திருக்க மாட்டான். ஜஹானாராவே ஒரு பெண்ணாகவும், அவனை வளர்த்தவளாகவும் இல்லாதிருந்தால் இன்னேரம் உயிரைத் தக்க வைத்திருக்க முடியாது என்று செயிஷ்டகான் எண்ணினான். ஆனால் அவன் கொல்ல முயன்றிருந்தாலும் ஜஹானரா ஔரங்கசீப் செய்தது சரியென்று ஒப்புக் கொண்டிருக்க மாட்டாள். இருந்த போதிலும் இன்றைக்கும் எதிரிகளுடன் இணைந்திருந்தும் ஔரங்கசீப் மதிக்கும் ஒரே ஜீவன் ஜஹானாரா மட்டுமே.

செயிஷ்டகானுக்கு ஜஹானாராவை ஃபிரங்கோஜி நர்சாலா நினைவுபடுத்தினான். என்ன மனிதர்களிவர்கள் என்று வியந்த செயிஷ்டகான் ஃபிரங்கோஜி நர்சாலாவை கட்டவிழ்த்து விடுதலை செய்ய உத்தரவிட்டான்.

திகைத்தது வீரர்கள் மட்டுமல்ல ஃபிரங்கோஜி நர்சாலாவும் தான். திகைப்பில் இருந்து மீண்ட வீரர்கள் அவனைக் கட்டவிழ்த்து விடுவித்தார்கள். ஃபிரங்கோஜி நர்சாலா கேள்விக்குறியுடன் செயிஷ்டகானைப் பார்த்தான்.

செயிஷ்டகான் முகத்தில் கடுமை நீங்கி மென்மை பரவியது. “நீ உன் வழியில் செல்ல அனுமதிக்கிறேன் ஃபிரங்கோஜி. என்றாவது ஒரு நாள் நீ மனம் மாறி முகலாயப்படையில் இணைய நினைத்தால் கண்டிப்பாக வரலாம். உனக்காக எங்கள் கதவுகள் என்றும் திறந்திருக்கும்…”

ஃபிரங்கோஜி நர்சாலா இந்த வார்த்தைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. சற்றே தலை தாழ்த்தி வணங்கி விட்டு வேறொன்றும் சொல்லாமல் கம்பீரமாக அங்கிருந்து சென்றான்.

ஆனால் ராஜ்கட் கோட்டையில் சிவாஜி முன் சென்று நின்ற போது அவனால் கம்பீரமாக நிற்க முடியவில்லை. சிவாஜி தோற்றத்தில் சற்று தளர்ந்திருந்தான். மனைவியின் மரணம் அவனை மிகவும் பாதித்திருந்தது. ஆனாலும் ஆரம்பத்திலிருந்தே ஃபிரங்கோஜி நர்சாலாவிடம் நட்பின் மொழியிலேயே பேசி வந்திருந்த சிவாஜி அதே நட்புடன் “வா நண்பா” என்று அன்பு மாறாமல் வரவேற்று அணைத்துக் கொண்ட போது ஃபிரங்கோஜி நர்சாலா கூனிக்குறுகினான்.

“என்னை மன்னித்து விடு சிவாஜி. நான் வென்று வந்திருக்க வேண்டும். தோற்று வந்திருக்கிறேன். முடிந்த வரை போராடிப் பார்த்தேன். ஆனால் முடிவில் சரணடைய வேண்டியதாகி விட்டது.”

சிவாஜி அவன் தோளைத் தட்டிக் கொடுத்துச் சொன்னான் .“வெற்றிகள் எல்லாமே பெருமைப்பட வேண்டியவை, தோல்விகள் எல்லாமே சிறுமைப்பட வேண்டியவை என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை நண்பா.  வெற்றி தோல்விகளை நாம் எப்படி அடைந்திருக்கிறோம் என்பதில் தான் உயர்வும் தாழ்வும் இருப்பதாக நான் நம்புகிறேன். அந்த வகையில் நீ சிறுமையடைந்து விடவில்லை.” 

ஃபிரங்கோஜி நர்சாலாவின் கண்களில் நீர் திரையிட்டது. தோற்று வந்தவனை இந்த அளவு சிவாஜி உயர்த்தியே வைப்பான் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

உணர்ச்சிப் பெருக்கில் குரல் கரகரக்க அவன் சொன்னான். “சாகன் கோட்டை நம் பகுதியில் எத்தனை முக்கியமானது என்பதை நான் அறிவேன். அதை இழந்திருப்பதின் மூலம் நாம் நிறைய அனுகூலங்களை இழந்து சிரமத்திற்காளாக வேண்டியிருக்கும்….”

சிவாஜி புன்னகையுடன் சொன்னான். “எந்த இழப்பும் நிரந்தரமானதல்ல. மானசீகமாக நாம் விட்டுக் கொடுக்காத வரை எல்லாம் நாம் திரும்ப அடைய முடிந்தவையே. கவலைப்படாதே”

வென்று வருபவனை வாழ்த்தி வரவேற்று உச்சத்தில் வைப்பதும், தோற்று வருபவனை இகழ்ச்சியாகப் பேசி ஒதுக்கி வைப்பதும் பொதுவாக அரசர்களின் வழக்கம். அது போன்ற நிகழ்வுகளை வாழ்நாளெல்லாம் பார்த்திருந்த ஃபிரங்கோஜி நர்சாலா நன்றியுணர்வுடன் சிவாஜியைத் தலை தாழ்த்தி வணங்கினான்.

“எனக்கு இனி என்ன வேலை?” என்று கேட்க நினைத்தான். ஆனால் வாயில் வார்த்தைகள் வரவில்லை. தோற்றவர்களுக்கு ஒரு தலைவன் என்ன வேலை தர முடியும் என்ற எண்ணம் அவன் வாயை அடைத்தது.

சிவாஜி சொன்னான். “உன்னை பூபால்கட் கோட்டைத் தலைவனாக நான் நியமிக்கிறேன். அங்கே ஒரு நல்ல தலைமை தேவைப்படுகிறது. அதற்கு உன்னை விடச் சிறந்த ஆளை நான் கண்டுபிடிக்க முடியாது. இளைப்பாறி விட்டு உடனடியாக அங்கு செல் நண்பா”


ஃபிரங்கோஜி நர்சாலாவின் கண்களிலிருந்து அருவியாய் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. சிவாஜியின் கைகளை இறுக்கப்பிடித்து கண்களில் ஒத்திக் கொண்டான்.

(தொடரும்)    
என்.கணேசன் 

5 comments:

  1. Both Sivaji and Shaistakhan showed their greatness in this chapter. The thing that always amazes me is that you never hesitate to show the villains' greatness also. Nice going.

    ReplyDelete
  2. உண்மையில் இப்பாகத்தை படிக்கும் போது உள்ளம் சிலிர்க்கிறது.... மாண்பு என்ற சொல்லுக்கு எவ்வளவு மரியாதை என்பது தெரிகிறது.... எப்பொழுதும் இந்த சமுதாயத்தில் அவர்களுக்கு ஒரு தனி இடம் உள்ளதை நிரூபிக்கிறது....

    ReplyDelete
  3. Even villains are portrayed as heroes. This can be possible only in your stories. Great Sir!

    ReplyDelete
  4. செயிஷ்டகான் மற்றும் ஃபிரங்கோஜி இருவரின் குணமும் செயலும் அற்புதம்... உண்மையிலே ஃபிரங்கோஜியை காணும் போது
    ... "என்ன மனிதர்கள் இவர்கள்?" என்றுதான் தோன்றுகிறது....

    தோற்று வந்தவனை சிவாஜி நடத்தும் விதமும்...எப்போதும் போல் அருமை...

    ReplyDelete