சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 28, 2019

சத்ரபதி 96


சாகன் கோட்டையைக் கைப்பற்றிய செயிஷ்டகான் அடுத்ததாக சிவாஜியின் ராஜ்கட் கோட்டை மற்றும் சிங்கக் கோட்டைகளை அதே வழியில் கைப்பற்ற முடியுமா என்று ஆலோசித்தான். சிவாஜி இந்த இரண்டு கோட்டைகளில் தான் மாறி மாறி வசித்து வருவதாக அவனுக்குத் தகவல் கிடைத்திருந்தது. ஆனால் அந்தக் கோட்டைகளில் அவன் இருக்கும் வரை அவனைப் பிடிப்பதோ, அந்தக் கோட்டைகளைப் பிடிப்பதோ முடியாத காரியம் என்று அப்பகுதிகளை அறிந்த படைத்தலைவர்கள் சொன்னார்கள். சகாயாத்ரி மலைத்தொடரில் அமைந்திருக்கும் அந்த இரண்டு கோட்டைகளின் அமைப்பையும் காரணம் காட்டினார்கள்.

“அவன் எல்லாம் யோசித்த பின்னரே அங்கு பதுங்கியிருக்கிறான் பிரபு. எத்தனை பெரிய படையானாலும் ஒருசேர அங்கு செல்ல முடியாது. மலை அடிவாரத்திலிருந்து மேலே செல்லும் பாதையும் எளிதானதல்ல. கஷ்டப்பட்டுத் தான் மேலே சென்று சேர வேண்டும். மேல் நோக்கி நகர்வதே கடினமானது என்கிற நிலை நம் படைகளுக்கு இருக்கையில் மேலிருந்து நம்மைத் தாக்குவது அவர்களுக்கு எளிது. சிறு சிறு படைகளாக மேல்நோக்கி வரும் படைகளை அனாயாசமாக அவர்கள் மேலே மறைந்திருந்தபடியே தாக்கி வீழ்த்த முடியும்….”

செயிஷ்டகான் மாபெரும் இயலாமையை உணர்ந்தான். வடக்கைப் போல சமவெளியாக இருந்தால் இன்னேரம் சிவாஜியின் கதையை முடித்தே இருக்கலாம். இந்த முரட்டு சகாயாத்ரி மலை அவனைப் போன்ற தந்திரமான குரங்குக்கு பாதுகாப்பான அடைக்கலமாக அல்லவா போய் விட்டது என்று எண்ணியவன் மூளையில் ஒரு பொறி தட்டியது. ஃபிரங்கோஜி நர்சாலாவைப் போன்ற எத்தனையோ மாவீரர்களின் தலைவனாக இருக்கின்ற அவனை ஏளனப்படுத்தி, வீரமூட்டி மலையிலிருந்து கீழே இறங்கி வரச் செய்தால் என்ன என்று தோன்றியது.

உடனே சிவாஜிக்கு ஒரு மடல் எழுதி அனுப்பினான். “எத்தனை பெரிய படை எதிர்த்து வந்தாலும் புறமுதுகு காட்டாமல் எதிர்த்து நின்று வெல்ல நினைப்பவன் தான் வீரன். அப்படிச் செய்யாமல் பெரிய படையைப் பார்த்தவுடன் தப்பித்து ஓடி மலையில் பாதுகாப்பாய் பதுங்கிக் கொள்ளும் உன்னை வீரன் என்று சொல்வதை விட குரங்கு என்று சொல்வது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். உன்னையும் வீரன் என்றும் அரசன் என்றும் இங்குள்ளவர்கள் கொண்டாடுவது விந்தையாக இருக்கிறது. நான் வீரர்களுடன் போராடும் போராளி மட்டுமல்ல, உன்னைப் போன்ற விலங்குகளை வேட்டையாடிக் கொல்லும் வேட்டைக்காரனும் தான். உன்னை வேட்டையாடிக் கொன்று முடிக்க உன் இருப்பிடத்திற்கு வந்திருக்கிறேன். தந்திரத்தாலும், கோழைத்தனத்தாலும் மலையில் பதுங்கி என்னிடமிருந்து எத்தனை நாட்கள் தான் நீ தப்பிப் பிழைப்பாய் என்று பார்ப்போம்”

ராஜ்கட் கோட்டையில் அந்த மடலைப் பெற்ற சிவாஜி செயிஷ்டகானுக்கு உடனடியாகப் பதில் மடலை அனுப்பினான். “போராளியும், வேட்டைக்காரனும் மட்டுமல்ல தாங்கள் அறிவாளியும் கூட. அதனால் தான் நீங்கள் என்னைக் குரங்கென்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் அறிவுக்கு எட்டாத கூடுதல் தகவல் ஒன்றிருக்கிறது. நான் வெறும் குரங்கல்ல. குரங்குகளின் தலைவனான அனுமன். எங்கள் இராமாயணத்தைப் படித்திருப்பவர்களுக்குத் தெரியும். அனுமன் அரக்கர்களின் அரசனான பத்து தலை இராவணனையே கதிகலங்க வைத்தவன். இந்தக் குரங்கால் தங்களுக்கும் அதே நிலைமை ஏற்படத்தான் போகிறது. ஜாக்கிரதை”

அந்தப்பதில் மடல் செயிஷ்டகானைக் கோபமூட்டியது மட்டுமல்லாமல் எச்சரிக்கையடையவும் வைத்தது. தந்திரங்களில் வல்லவனான சிவாஜி எதையும் செய்யக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வால் தான் வசிக்கும் லால்மஹாலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரட்டிப்பாக்கினான். முகலாயப் படைகளில் உள்ள மராட்டியக் குதிரை வீரர்கள் பூனாவுக்கு வெளியே உள்ள படைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். மராட்டிய சிப்பாய்கள் மட்டும் அரண்மனைக்கு வெளியே வரை அனுமதிக்கப்பட்டார்கள். மராட்டியர்கள் நகருக்குள் ஆயுதங்கள் தரித்து நடமாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மராட்டியர்கள் எந்த வகையிலும் ஆயுதங்கள் இல்லாமலும் கூட்டமாகக் கூட முன்கூட்டி அனுமதி பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. சிவாஜி மராட்டியர்களின் மனதில் மாபெரும் தலைவனாக உருவாகி விட்டதால் அவர்கள் தனக்கு எதிராக எந்தக் கிளர்ச்சியிலும் ஈடுபட்டு விடக்கூடாது என்று செயிஷ்டகான் ஜாக்கிரதையாக இருந்தான்.

அவ்வப்போது பூனாவுக்கு வெளியே சில இடங்களில் எதிர்பாராத நேரங்களில் சிவாஜியின் படைத்தலைவன் நேதாஜி பால்கர் திடீர்த் தாக்குதல் நிகழ்த்தி விட்டுப் போவது மட்டும் நிகழ்ந்தது. அந்தச் சில்லறைத் தொந்திரவுகள் தவிர வேறெந்தப் பெரிய பாதிப்பும் இல்லாமல் நாளாவட்டத்தில் செயிஷ்டகான் பாதுகாப்பாக இருப்பதாக உணர ஆரம்பித்தான்.


சிவாஜி அன்னை பவானி முன் நீண்ட பிரார்த்தனையில் இருந்தான். அவனுடைய பிரார்த்தனை சில சமயங்களில் ஆன்மிகப் பயணமாக இருக்கும். சில சமயங்களில் சுயராஜ்ஜியக் கனவுக்காக அவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளை பெறுவதற்காக இருக்கும். இந்த இரு வகைப் பிரார்த்தனைகளிலும் ஏதோ ஒரு வழிகாட்டலைப் பெறாமல் அவன் பிரார்த்தனையை முடிப்பது கிடையாது. அவனுடைய இன்றைய பிரார்த்தனை இரண்டாம் வகைப் பிரார்த்தனையாக இருந்தது. இந்தப் பிரார்த்தனையின் முடிவில் அன்னை பவானி அப்சல்கானைப் போல் செயிஷ்டகானையும் தாக்க உத்தரவிட்டதாய் உணர்ந்தான். அவன் பிரார்த்தனை முடிந்து எழுந்த போது தெய்வத்தின் ஆசிர்வாதத்தைப் பெற்ற வலிமை அவனுக்குள் புகுந்திருந்தது.

உடனடியாக சிவாஜி நண்பர்களையும், படைத்தலைவர்களையும், ஆலோசகர்களையும் கூட்டிச் சொன்னான். ”நாம் செயிஷ்டகானைத் தாக்கப் போகிறோம்”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இப்போது பூனாவில் இருக்கும் சூழ்நிலை தாக்குதலுக்குச் சாதகமான சூழ்நிலை அல்ல. முகலாயப் பெரும்படையை ஒரேயிடத்தில் நிறுத்தி வைக்கும் இட வசதி இல்லாததால் அங்கங்கே பல இடங்களில் நிறுத்தி வைத்திருக்கும் செயிஷ்டகான் கூப்பிடு தூரத்தில் தேவைக்கும் அதிகமாகவே படைகளை வைத்திருந்தான். செயிஷ்டகானின் அரண்மனைப் பாதுகாப்பும் கடுமையாகவே இருப்பதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. செயிஷ்டகானின் படை இங்கே வந்தால் இவர்களால் சமாளிக்க முடியுமே தவிர அங்கு சென்று சமாளிக்குமளவு இவர்களிடம் படைவலிமை இல்லை. இதெல்லாம் சிவாஜி அறியாததல்ல என்றாலும் ஆழ்ந்து ஆலோசித்து சிவாஜி ஒரு முடிவெடுத்த பிறகு பின்வாங்க மாட்டான். அப்சல்கான் விஷயத்தில் அவன் முடிவுப்படி வென்ற பிறகு எல்லோரும் சிவாஜியின் முடிவுகளில் அவநம்பிக்கை கொள்வதை நிறுத்தியிருந்தார்கள்.

ஆனாலும் தானாஜி மலுசரே எச்சரிக்கையுடன் சொன்னான். “செயிஷ்டகான் பூனாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடுமைப்படுத்தியிருக்கிறான். அவன் பூனாவிலும் பூனாவைச் சுற்றிலும் வைத்திருக்கிற படைகள் நாம் இது வரை சந்தித்திராதவை”

சிவாஜி அமைதியாகக் கேட்டான். “அந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?”

உடனடியாக ஒற்றர் தலைவன் வரவழைக்கப்பட்டான். அவன் சிவாஜியிடம் எல்லா விவரங்களையும் சொன்னான். அவன் “மராட்டியர்கள் பதினைந்து இருபது பேர் சேர்ந்து தெருவில் செல்லக்கூட அனுமதியில்லை….” என்று சொன்ன போது சிவாஜி கேட்டான். “இப்போது திருமண காலம் ஆயிற்றே. மராட்டியர்கள் திருமணங்கள் எப்படி நடக்கின்றன?”

“அதற்கும் முன் அனுமதி வாங்க வேண்டும் மன்னா”

“அதற்கு யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்?”

“செயிஷ்டகான் நியமித்திருக்கும் பூனா நகர பாதுகாவல் அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும்….”

“அடுத்த முகூர்த்த நாள் எப்போது?” என்று சிவாஜி கேட்க யேசாஜி கங்க் பஞ்சாங்கம் பார்த்து விட்டுச் சொன்னான். “வியாழக்கிழமை”

சிவாஜி சொன்னான். “இன்றைக்கு ஞாயிறு. பூனாவில் வியாழக்கிழமை நடக்கவிருப்பதாக ஒரு திருமணத்திற்கு உடனடியாக அனுமதியை வாங்க ஏற்பாடு செய் யேசாஜி”

திகைப்புடன் யேசாஜி கங்க் தலையசைத்தான். சிவாஜி ஒற்றர் தலைவனிடம் லால் மஹாலில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாகச் சொல்லச் சொல்லிக் கேட்டான். செயிஷ்டகான் எங்கே தங்கியுள்ளான். அவனது பாதுகாவலர்கள் லால்மஹால் அரண்மனையில் எங்கு எவ்வளவு பேர் தங்கியுள்ளார்கள் என்றெல்லாம் கேட்டு அறிந்த சிவாஜி யோசனையில் ஆழ்ந்தான்.

சிவாஜியின் ஆலோசகர்கள் இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்துகளை அவனிடம் தெரிவித்தார்கள். அதைச் சிறு அலட்சியமும் காட்டாமல் சிவாஜி கேட்டுக் கொண்டான். ஆபத்துகள் இல்லாத சாகசங்கள் இல்லை. அந்த ஆபத்துகளை அறிவது மிக முக்கியம். அவற்றிலிருந்து தப்பிக்க வழிகள் கண்டுபிடிப்பதும் மிக முக்கியம். அதன்பிறகு தைரியமாகத் துணிச்சலுடன் இறங்கினால் ஒழிய பெரும் சாதனைகள் சம்பவிப்பதில்லை. எல்லாவற்றையும் யோசித்து விட்டு சிவாஜி புன்னகையுடன் சொன்னான்.


“இரண்டு விஷயங்கள் நமக்குச் சாதகமாக இருக்கின்றன. ஒன்று லால்மஹாலில் செயிஷ்டகான் இருப்பது. நமக்கு மூலை முடுக்கெல்லாம் தெரிந்த, நாம் வசித்த மாளிகை அது. இரண்டாவது நாம் தாக்கப் போவதையோ, தாக்கும் காலத்தையோ செயிஷ்டகான் அறிய மாட்டான்.”
(தொடரும்)

என்.கணேசன்

5 comments:

  1. I am fascinated by Sivaji's boldness and self confidence. Thanks for bringing him alive in your novel sir.

    ReplyDelete
  2. இது உண்மையிலேயே ஆபத்தான திட்டம் தான்.... இந்த முயற்சியில் சிவாஜி வெற்றி பெற போகிறான்? என்று தெரியவில்லையே?

    ReplyDelete
  3. அதுதானே பார்த்தேன். செயிஸ்டகானை அக்கடான்னு உட்காரவிடமாட்டானே

    ReplyDelete