சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 24, 2019

இல்லுமினாட்டி 19



ந்தப் போதை மனிதனின் உடலில் தங்கிய பின் அவன்  மோசமான சிறையில் இருப்பது போல் எல்லா விதங்களிலும் உணர்ந்தான். அவன் சக்திகள் எல்லாம் புதிய உடலில் வெற்றிகரமாகப் புகுந்து தங்குவதிலேயே வடிந்து விட்டதை உணர்ந்தான். ஆனால் அவன் உணர்வுநிலை அவனுடைய பழைய உடல் இருந்த இடத்திலும், புதிய உடல் இருக்கும் மருத்துவமனையிலும் முன்பு போலவே வேலை செய்தது. இரண்டு இடங்களிலும் சுற்றி நடப்பதை எல்லாம் முன்பு போலவே அவனால் உணர முடிந்தது. ஆனால் மற்ற இடங்களுக்குப் போய் எதையும் அவனால் அறிவது முன்பு போல் முடியவில்லை. அதற்கு அவன் சக்திகள் போதவில்லை…

ம்யூனிக் மின்மயானத்தில் அவன் பழைய உடலை எரிக்க வந்தவர்கள் ஏழே பேர். இல்லுமினாட்டி தலைவர் எர்னெஸ்டோ, உபதலைவர், நவீன்சந்திர ஷா, க்ரிஷ், வேறு மூன்று இல்லுமினாட்டி உறுப்பினர்கள். அதில் அவனுக்காக மனம் இரங்கியது க்ரிஷ் மட்டுமே. எதிரியே ஆனாலும் அவனுக்காக க்ரிஷ் பிரார்த்தித்து நின்றதை அவனால் உணர முடிந்தது. 

எதிரியின் இரக்கத்தை விட ஒரு கொடுமையான விஷயம் ஒரு தன்மானமுள்ள மனிதனுக்கு இருக்க முடியுமா என்று அவன் நினைத்தான். அவன் பழைய உடல் மின்சாரத்தால் வெந்தது. அவன் தன்மான உணர்வு க்ரிஷின் இரக்கத்தால் வெந்தது. எத்தனையோ சக்திகள் வசமாகியும் ஒரு நீண்ட வாழ்க்கையில் அவன் மரணத்திற்குப் பின் வருத்தப்படவும், நண்பனே என்று அழைக்கவும் அவன் எதிரியாக நினைத்தவனே மிஞ்சி இருந்த நிலைமையின் விசித்திரம் உணர்விலும் தகித்தது. விதி அவன் வாழ்க்கையை எல்லா விதங்களிலும் புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் அதிலும் அவன் மரணத்தை வென்று பிழைத்திருக்கிறான். அந்த மகத்தான சாதனை ஒன்று மட்டும் அவனுக்கு இதமாய் இருந்தது. அவனுக்கு எத்தனை பின்னடைவுகள் இருந்தாலும் இந்த ஒரு பெருஞ்சாதனையை யாரும் மறுக்க முடியாது.

பழைய உடல் அழிந்த பிறகு தன்னையே அவனால் விஸ்வம் என்று நினைக்க முடியவில்லை. ஒரு பெயர் உடலோடு எப்படி இணைந்து விடுகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான். உண்மையில் அவனுக்கு விஸ்வம் என்ற அவனுடைய பெயர் மிகவும் பிடித்தமானது. பிரபஞ்சம் என்ற பொருள் தரும் அந்தப் பெயர் அவனுக்குப் பொருத்தமாகவும் அவனைச் சரியாக அடையாளம் காட்டுவதாகவும் அவனுக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது. பழைய வாழ்க்கையில் அவன் பல இடங்களில் பல பெயர்களோடு வாழ்ந்திருந்தாலும் கூட அவன் அவனாக உணர்ந்தது அந்தப் பெயரில் தான். டேனியல் என்ற பெயரும் சிங்கங்கள் அடைந்த கூட்டில் அடைபட்டும் இறைவன் அருளால் உயிர் தப்பிய ஒரு மகானின் பெயராகவும், நீதிக்குப் பெயர் போன பெயராகவும் இருந்ததையும் அவன் அறிவான். ஆனால் இறைவன் அருளும், நீதியும் அவனுக்கு கசப்பானவையே என்பதால் அந்தப் பெயர் அவனுக்குக் கசந்தது... 

யோசிக்கையில் இந்தக் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையை அவன் பயன்படுத்தத் தூண்டியது அந்த உடலை விட்டு உயிர் பிரிந்த தருணத்தில் கேட்ட கிதார் இசையே. கேட்ட கிதார் இசை வூடு சடங்கில் ஆவியை வரவழைக்கும் இசையாக இருந்தது மின்னலாக அவன் உயிர்த்துடிப்பை ஆக்கிரமித்தது. அந்தக் கிதார் வாசித்த ஜிப்ஸி அவன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவன். சொல்லப் போனால் அப்படி அவன் மனதுக்கு நெருக்கமானவனாகச் சொல்ல இன்னொரு மனிதன் அவன் வாழ்க்கையில் இருக்கவில்லை. அவன் கிதார் வாசித்து விஸ்வத்துக்கு அவன் செய்ய வேண்டியதை நினைவூட்டியதன் மூலம் இரண்டாம் முறையும் அவன் வாழ்க்கையை திசை திருப்பியிருக்கிறான். இரண்டுமே அவன் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனைகள்…

முதல் முறையிலும் இலக்கில்லாமல் ஊர் சுற்றித் திரிந்த விஸ்வத்தின் வாழ்க்கை திசை திரும்பியது அந்த ஜிப்ஸியைச் சந்தித்த பிறகு தான். மழையில் நனைவதிலிருந்து தப்பிக்க இருவரும் ஒரே கட்டிட வாசலில் தான் ஒதுங்கினார்கள். பெருமழை நிற்பதாகத் தெரியவில்லை. நேரம் போக்க அந்த ஜிப்ஸி தன் கையிலிருந்த கிதாரை வாசிக்க ஆரம்பித்தான். வாசிக்கையில் அந்த ஜிப்ஸி விஸ்வத்தைப் பார்த்தான். முதலில் சாதாரணமாகப் பார்த்தவன் கிதாரை வாசித்துக் கொண்டே மிக உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்துப் பின் ஆச்சரியமாகப் பார்த்தான்.

பின் அவன் விஸ்வத்தின் பெயர், அம்மா, அப்பா பெயர் எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். சொல்ல ஆரம்பித்தான் என்பதை விட அவன் மேல் எழுதி இருந்ததைப் படிக்க ஆரம்பித்தான் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். பார்த்துப் படிப்பது போலத் தான் படித்தான். ஆனால் அவன் சொல்வது எல்லாம் சரியாக இருந்தது. பின் கடந்த கால நிகழ்வுகள் இரண்டைச் சொன்னான். அந்த இரண்டு நிகழ்வுகளும் அவன் மட்டுமே அறிந்திருந்த நிகழ்வுகள். அதுவும் சரியாக இருந்தது. பின் எதிர்காலம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். “நீ எதிர்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவனாய் ஆகப் போகிறாய். பல அமானுஷ்ய சக்திகள் உன் வசமாகப் போகின்றன….. சக்திகளைப் பொறுத்த வரை நீ நிறுத்திக் கொள்வது தான் எல்லை…… நீ முறைப்படி அமானுஷ்ய சக்திகளைக் கற்றுக் கொண்டால் தான் ஒவ்வொன்றாய் உனக்குக் கிடைக்கும். ஆனால் நீ அதைச் சாதிப்பாய். உன் விதியில் அது தெரிகிறது..”

ஆச்சரியப்பட்ட விஸ்வம் “என் விதியில் வேறென்ன தெரிகிறது?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

“நீ இது வரை கற்பனை செய்து வைத்திருந்த சக்திகள் எல்லாம் உனக்குக் கிடைக்கப் போக்கின்றன. பல பேரைப் பிரமிக்க வைக்கப் போகிறாய். பல பேர் உன்னைப் பார்த்துப் பயப்படப் போகிறார்கள். கணக்கில்லாத செல்வம் உன்னிடம் சேரப்போகிறது. உன் கனவுகளை நோக்கி வேகமாக முன்னேறப் போகிறாய்….. உனக்கு எதிராக சில சக்திகளும் உருவாகி வருவதும் தெரிகிறது. ஆனால் கவலைப்படாதே. எல்லாமே ஒரு மாறாத விதியின்படியே நடக்கிறது. அந்த விதி என்ன தெரியுமா? இரண்டு சக்திகளுக்குள் மோதல் வருமானால், இரண்டில் எது கூடுதல் சக்தியோ, எது அதிக சக்தியோ அது தான் எப்போதும் ஜெயிக்கும்” என்று அந்த ஜிப்ஸி சொல்லி விட்டுப் போனான்.

அதன் பின் சக்தி என்ற வார்த்தையே விஸ்வத்தின் வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருந்தது. அதையே தேடினான். அதற்காகவே வாழ்ந்தான். அதைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தான். மனம், வாக்கு, செயல் எல்லாமே அந்த சக்திக்காகவே செயல்பட்டன. ஒரு சக்தியை  அடைந்த பின் அடுத்த சக்தியைத் தேடினான், அதற்காகவே வாழ்ந்தான்….. இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு சக்தியாக அவன் சேர்த்து வைத்துக் கொண்டே முன்னேறினான்…..

அவன் முன்னேறிய பிறகு மீண்டும் ஒரு முறை அவனை ஜிப்ஸி சந்தித்தான். அப்போது தான் ஜிப்ஸி இல்லுமினாட்டி பற்றியும், அவர்களுக்குக் கிடைத்திருந்த ரகசியச் சுவடிகள் பற்றியும் சொல்லி இல்லுமினாட்டியை நோக்கிப் பயணிக்க வழிகாட்டினான்.

அப்போது பிரியும் முன் அவனிடம் விஸ்வம் கேட்டான். “மீண்டும் எப்போது சந்திப்போம்?”

“இனி நம் சந்திப்பு இருக்காது. அது உனக்குத் தேவையும் படாது. உன் விதியை நீயே எழுதிக் கொள்வாய்… ஆனால் கவனமாய் எழுது. ஏன்னா இதில் அழித்தல், திருத்தல் கிடையாது…..” என்று சொல்லி விட்டு அந்த ஜிப்ஸி வேகமாக மறைந்தான். ஒவ்வொரு முறையும் வந்து அடுத்த கட்ட வழியைச் சொல்லித் தந்து விட்டுப் போகும் அவனை அறிய விஸ்வம் தன் சக்திகளை எல்லாம் திரட்டி முயன்றான். மங்கலான பனிமூட்டமும் அதனூடே தூரத்தில் ஒரு பிரகாசமான நட்சத்திரமும் தெரிந்தது….. அதற்கு என்ன அர்த்தம் என்று சரியாக விளங்கவில்லை என்றாலும் விதி அனுப்பிய ஆளே அவன் என்று விஸ்வம் உணர்ந்தான்.

ஜிப்ஸி சொன்னது போலவே விஸ்வம் பழைய உடலோடு இருக்கையில் அவர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவில்லை.  இல்லுமினாட்டி கூட்டத்தில் விஸ்வம் உயிர் விட்ட தருணத்திலும் இசை சுட்டிக்காட்டிய விஷயத்தை விஸ்வம் உணர்ந்தானேயொழிய ஜிப்ஸியை உணரவில்லை. ஜிப்ஸியை அவன் உணர்வுநிலையில் உணர்ந்தது அந்த மருத்துவமனையில்  நள்ளிரவு மூன்று மணிக்கு. மெல்ல ஜிப்ஸி அவன் எண்ண அலைகளில் ஊடுருவ ஆரம்பித்தான்.   விஸ்வம் ஜிப்ஸியை உணர்ந்தான். அவன் ஏதோ சொல்வது போல இருந்தது. உணர்வு நிலையைக் கஷ்டப்பட்டுக் கூர்மையாக்கினான். இந்த பாழாய்ப் போன போதை உடலில் அது சுலபமாக இருக்கவில்லை. ஆனால் கஷ்டமான பல சாதனைகள் செய்து பழகிய விஸ்வத்துக்கு அது முடியாததாக இருக்கவில்லை.

மெல்ல விஸ்வம் ஜிப்ஸி அனுப்பிய தகவலை உணர்ந்தான். “அங்கே இருப்பது ஆபத்து. கிளம்பி விடு. நான் அழைத்துப் போக வருகிறேன். தயாராக இரு”

ஆரம்பத்தில் அந்த உடலை அசைப்பது கூட விஸ்வத்துக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் எல்லா சக்திகளையும் குவித்து விஸ்வம் அந்த உடலோடு எழுந்து போகப் பிரம்மப் பிரயத்தனம் செய்து தயாராக ஆரம்பித்தான். அப்படிச் செய்யும் போது ஒரு கேள்வி மனதில் பெரிதாய் அலைபாய்ந்தது. “யாரிந்த ஜிப்ஸி? அவன் நோக்கம் தான் என்ன?”

(தொடரும்)
என்.கணேசன்

(தீபாவளி போனஸாக தீபாவளிக்கு முன்தினம்  26.10.2019 சனிக்கிழமை மாலை அடுத்த அத்தியாயம் வெளியிடப்படும்)

14 comments:

  1. Same question for us too!
    Thanks for the Diwali Bonus ji!

    ReplyDelete
  2. Wish you and your family a happy and prosperous Diwali ji.

    ReplyDelete
  3. கதையின் போக்கு அருமை -
    முன்னோக்கிய தீப திருநாள் வாழ்த்துக்கள் - நன்றி

    ReplyDelete
  4. Super. Thanks for the Deepavali Bonus.

    ReplyDelete
  5. கேட்காமலேயே போனஸ் கொடுத்ததற்கு நன்றி. இந்த தடவை இரண்டே நாளில் அப்டேட் கிடைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    ReplyDelete
  6. Wishing you and your sweet family a very happy Deepawali.

    ReplyDelete
  7. சார் புத்தகமாக இந்த கதையை விரைவில் வெளியிட வேண்டும் அது தான் உண்மையான தீபாவளி போனஸ்

    ReplyDelete
  8. யாரிந்த ஜிப்ஸி?........ விஸ்வத்தை விட சக்தி வாய்ந்த ஒருவன். க்ரிஷ்க்கு எதிரிகள் அதிகம்

    ReplyDelete
  9. எனக்கென்னமோ...
    "கணேசன் சார் உண்மையிலே கூடுவிட்டு கூடு பாய்ந்து.. பார்த்திருப்பாரோ?"னு தோணுது...

    ஏனெனில் விஸ்வம் அந்த போதை மனிதன் உடலில் படும் அவஸ்தைகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்..

    ReplyDelete
  10. The story started slowly and Ganeshan changed it to top gear and it is irresistible.. Highly anticipating the next chapter soon. Now the Gypsy getting role in the novel.. I am waiting!!

    ReplyDelete
  11. thanks for the bonus sir!!!!!!!!!!!!

    ReplyDelete
  12. ஜிப்சியால் இயங்கும் வில்லன்

    போனஸ் முன்கூட்டியே கிடைக்காதா

    தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete