சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 7, 2019

சத்ரபதி 93


ராஜ்கட் கோட்டையை நலமாக எட்டி விட்ட பிறகு சாய்பாயிடம் சிவாஜி கவலையோடு கேட்டான். “இப்போது எப்படி உணர்கிறாய் சாய். சிறிதாவது தேவலையா?”

சாய்பாய் களைப்பாகக் காணப்பட்டாலும் முகமலர்ச்சியுடன் பதில் அளித்தாள். “நீண்ட நேரம் உங்கள் மார்பில் சாய்ந்தபடி பயணித்ததால் நல்லதொரு புத்துணர்ச்சியை நான் உணர்கிறேன் பிரபு”

மனைவியைக் காதலுடன் பார்த்துப் புன்னகைத்த சிவாஜி அவள் களைப்பைக் கவனிக்கத் தவறவில்லை. உள்ளுணர்வில் ஏதோ ஒரு ஆபத்தை சிவாஜி உணர்ந்தான்.


செயிஷ்டகான் பெரும்படையுடன் ஔரங்காபாத்திலிருந்து புறப்பட்டு வரும் வழியில் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளை எல்லாம் வென்று கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தே நகர்ந்திருந்தான். சிவாஜி கட்டுப்பாட்டில் இருந்த கல்யாண் பகுதி உட்பட பல பகுதிகள் முகலாயர்கள் வசமாயின. அவன் பூனாவை அடைந்த போது அவர்கள் படைக்கு அங்கு சிறிய எதிர்ப்பு கூட இருக்கவில்லை. பூனாவை ஆக்கிரமித்த அவன் முதல் வேலையாக சிவாஜியின் லால்மஹால் மாளிகையைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டான். முகலாயர்களின் மாளிகைகளைப் போல ஆடம்பரத் தோற்றமும் படாடோப வசதிகளும் அந்த மாளிகையில் இல்லா விட்டாலும் அவசியத் தேவைகளைச் சந்திக்கும்படியான அனைத்து வசதிகளும் இருந்தன. முகலாயச் சக்கரவர்த்தியின் மாமனும், தக்காணப் பீடபூமியின் கவர்னருமான அவனுக்கு அது போதுமானதல்ல என்றாலும் இருக்கும் இருப்பிடங்களில் அதை விட அதிகமான வசதிகள் மற்றவற்றில் இல்லை என்னும் காரணத்தால் லால்மஹால் மாளிகையையே அவன் தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது.

அந்த மாளிகையைத் தேர்ந்தெடுத்தவுடன் அங்கிருந்த பணியாளர்களையும், பூனாவின் நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகளையும் விலக்கித் தன் பணியாளர்களையும் ஆட்களையும் செயிஷ்டகான் பணியில் இருத்திக் கொண்டான். அவன் சிவாஜியின் பணியாளர்களை வெகுதூரத்திற்கு ஒதுக்கி வைத்தான். அந்த மராட்டியப் பணியாளர்களை அவன் நம்பவில்லை. என்னேரமும் அவர்கள் சதித்திட்டத்தில் ஈடுபடலாம் என்ற எச்சரிக்கை உணர்வு அவனிடம் மிகுந்திருந்தது.  

இருப்பிடத்தில் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்திக் கொண்ட பிறகு அவன்  தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான படைத்தலைவர்களையும், அதிகாரிகளையும் அழைத்துப் பேசினான்.

“சிவாஜி தற்போது எங்கிருக்கிறான்?” என்று செயிஷ்டகான் கேட்டான்.

“ராஜ்கட்டில் இருக்கிறான் பிரபு” என்ற பதில் வந்தது.

”ராஜ்கட் கோட்டையைத் தாக்கினால் என்ன?”

”அவன் ராஜ்கட் கோட்டையை மிகவும் பலப்படுத்தி இருக்கிறான் பிரபு. மாதக்கணக்கில் அவன் அங்கு தாக்குப்பிடிப்பான். ஆனால் நம் படைகள் சகாயாத்ரி மலைத்தொடரில் மிக நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது கஷ்டம். அங்கு மழைக்காலத்தில் தங்க நேர்வது கொடுமையிலும் கொடுமை. சிவாஜியுடன் போர் புரிவதில் நமக்குப் பிரச்னையில்லை. ஆனால் இயற்கையின் சீற்றத்தைத் தாக்குப் பிடிப்பது தான் பிரச்னை!”

செயிஷ்டகான் யோசனையுடன் சில வினாடிகள் பார்த்து விட்டுக் கேட்டான். “அங்குள்ள மனிதர்கள் தாக்குப் பிடித்துத் தானே வாழ்கிறார்கள்?”

”அவர்கள் அதற்குப் பழக்கப்பட்டவர்கள் பிரபு”

”நாமும் அதற்குப் பழக்கப்பட்டுக் கொண்டால் போயிற்று. அதில் என்ன பிரச்னை?” செயிஷ்டகான் கேட்டான்.

அது தான் பிரச்னையே என்று நினைத்த அவர்களிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

செயிஷ்டகான் சொன்னான். “சிவாஜியின் பலமே இயற்கையின் அசௌகரியங்களையோ, சூழ்நிலைகளையோ பொருட்படுத்தாமல் அதோடு ஒத்துப் போவது தான். சிவாஜி, சகாயாத்ரி மலை என்று சேர்ந்து வரும் போது சமாளிக்க முடியாத வலிமையாக சிவாஜியின் எதிரிகள் நினைத்து விட்டிருக்கிறார்கள். அந்த எண்ணம் அவனிடம் இது வரை போராடாத நம்மிடமும் ஒட்டவைக்கப்பட்டு விட்டது போலிருக்கிறது. நாம் இந்துஸ்தானத்தின் மிகப்பெரிய படை. நம் வலிமைக்கு இணையாக இன்று ஒரு படையும் இல்லை. இருந்தும் நம்மால் முடியாதென்று ஆரம்பத்திலேயே தீர்மானித்துப் பின்வாங்குகிறோம். அப்படியொரு பலவீனத்தை சிவாஜி நம்மிடமும் உருவாக்கி விட்டிருக்கிறான்.”

சிறிய தயக்கத்துக்குப் பின் ஒரு படைத்தலைவன் சொன்னான். “அப்படி அல்ல பிரபு. சகாயாத்ரியின் அமைப்பிலும், அங்கு நிலவும் சீதோஷ்ணச் சிக்கல்களையும் சொன்னோமே ஒழிய பின் வாங்கும் உத்தேசத்தில் சொல்லவில்லை. சகாயாத்ரி மலைத்தொடரில் இருக்கும் எல்லாக் கோட்டைகளையும் சிவாஜி வலிமையாக்கி வைத்திருக்கிறான் என்ற போதும் மனம் வைத்தால் நம் பெரும்படைக்கு எந்தக் கோட்டையும் வெல்ல முடியாததல்ல. ராஜ்கட் கோட்டையும் அப்படித்தான். ஆனால் கோட்டையைப் பிடிப்பது போல் அவனையும் பிடிப்பது சுலபமல்ல. ராஜ்கட் கோட்டை நம் கையில் வீழும் முன் அவன் தப்பித்துச் சென்று விடுவான். இது தான் இது வரை நடந்திருக்கும் விஷயம்….”

செயிஷ்டகான் சிறிது நேரம் ஆழ்ந்து ஆலோசித்து விட்டுச் சொன்னான். “சிவாஜி இருக்கும் இடம், சுற்றுப் புறம் குறித்த வரைபடம் ஒன்றைக் காண விரும்புகிறேன்”

அரை மணி நேரத்தில் வரைபட நிபுணன் ஒருவன் அங்கு வந்து சேர்ந்தான். ஒரு நீளமும் தடிமனும் கொண்ட சிவப்புப் பட்டுத் துணியை தரையில் விரித்தவன் வெள்ளைக் கட்டியால் அதில் வரைய ஆரம்பித்தான். சில நிமிடங்களில் சகாயாத்ரி மலைத்தொடரும் சுற்றி உள்ள பகுதிகளும் அதில் வரையப்பட்டன. அவன் பையிலிருந்து மிகச்சிறிய கோட்டை வடிவிலான குறியூட்டுப் பொம்மைகளை வெளியே எடுத்தான். எல்லாப் பொம்மைகளிலும் சிறிய ஊசி முனைகள் இருந்தன. அவற்றை எடுத்து சகாயாத்ரி மலையிலும், மற்ற இடங்களிலும் பொருத்த ஆரம்பித்தான். மற்ற இடங்களைக் குறிக்க ஊசியுடன் கூடிய வேறு வடிவிலான சிறு பொம்மைகளைப் பொருத்தினான்.

முடிவில் அவன் செயிஷ்டகானிடம் விவரிக்க ஆரம்பித்தான். “பிரபு இது நாம் இருக்கும் பூனா. இது சிவாஜி பதுங்கி இருக்கும் ராஜ்கட் கோட்டை, அதற்கு அருகில் இருக்கும் கோட்டை சிங்கக் கோட்டை…..”

அவன் சொல்ல ஆரம்பித்ததைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டே வந்த  செயிஷ்டகான் முடிவில் அந்த வரைபடத்தை உற்றுப் பார்த்தான். அத்தனை கோட்டைகளில் ஒரு கோட்டை அவன் கண்ணை உறுத்தியது. பல கோட்டைகளுக்குச் சென்று வர முடிந்த பாதைகள் கூடிய மையப்புள்ளியில் அந்தக் கோட்டை இருந்தது. அது மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் வினியோகம் செய்ய முடிந்த ஜுன்னார் பகுதிக்கும் பூனாவுக்கும் இடைப்பட்ட வழியை மறித்துக் கொண்டு நிற்கும் கோட்டையாகவும் அது இருந்தது.

செயிஷ்டகான் கேட்டான். “இது என்ன கோட்டை?”

வரைபட நிபுணன் சொன்னான். “சாகன் கோட்டை பிரபு”

ஒரு படைத்தலைவன் கூடுதல் விவரங்களை சொன்னான். ”இந்தக் கோட்டை ஃபிரங்கோஜி நர்சாலா என்பவன் தலைமைப்பொறுப்பில் இருக்கிறது பிரபு. அவன் சிவாஜியுடன் நல்லுறவு வைத்திருக்கிறான். மிகச் சிறந்த வீரனும் கூட….”

செயிஷ்டகான் சொன்னான். ”முதலில் இந்த சாகன் கோட்டையை நம் வசப்படுத்துவோம். பிறகு சிவாஜியைப் பார்த்துக் கொள்ளலாம்.”


செயிஷ்டகான் ஒரு பெரும்படையை சாகன் கோட்டைக்கு அனுப்பி இருக்கும் செய்தி சிவாஜிக்கு வந்து சேர்ந்தது. சாகன் கோட்டை அமைந்திருக்கும் இடம் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து முதலில் அதைக் கைப்பற்ற செயிஷ்டகான் நினைத்தது சிவாஜிக்கு அவனது அறிவுக் கூர்மையை உணர்த்தியது. சாகன் கோட்டையிலிருக்கும் ஃபிரங்கோஜி நர்சாலா சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் சமாளிக்க முடியும் என்றாலும் அதற்கு மேல் அவனால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் சிவாஜி இருக்கவில்லை. சாய்பாயின் உடல்நலக்குறைவு தான் இப்போது சிவாஜியின் மனதைப் பெரிதும் வாட்டியது.

ஒன்றுமில்லாமல் ஆரம்பித்த அவன் வாழ்க்கையில் பிறகு அவன் சாதனைகள் எத்தனையோ செய்ய முடிந்திருந்தாலும், வரலாற்று நாயகனாக அவன் அவதாரம் எடுக்க முடிந்திருந்தாலும், சுயராஜ்ஜியக் கனவில் அவன் கணிசமான வெற்றிகள் பெற்றிருந்தாலும் அவன் அதற்கெல்லாம் பெரியதொரு விலையைக் கொடுத்தே அத்தனையும் சாதிக்க முடிந்திருந்தது.  அந்த விலை அவன் குடும்ப வாழ்க்கையாக இருந்தது.

அவன் போர்களிலும், படைத்தலைவர்களுடன் திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளிலும் நேரம் கழித்த அளவுக்குக் குடும்பத்துடன் காலம் கழித்ததில்லை. குடும்பம் அவன் வாழ்க்கையில் இதுவரை இரண்டாம் பட்சமாகவே இருந்திருக்கிறது. எல்லாப் பணிகளும் முடிந்து அவன், அவன் பூமி, அவன் மக்கள் அனைவரும் சுபிட்சமாக இருக்கச் செய்து விட்டு அவனும் குடும்பத்துடன் சேர்ந்து அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாகக் கழிக்க நினைத்த கனவுக்காலம் ஒன்று இருந்தது.

அப்படியொரு கனவுக்காலம் என்றாவது ஒருநாள் வருமா என்பது நிச்சயமில்லை. அப்படி வந்தாலும் அந்தக் காலத்தை அவனுடன் மகிழ்ச்சியாகக் கழிக்க அவன் மனைவி சாய்பாய் இருக்க மாட்டாள் என்பதை சற்று முன் தான் ராஜ வைத்தியர் அவனிடம் வருத்தத்துடன் தெரிவித்து விட்டுப் போனார். சாய்பாய் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாளாம்…..!



(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Sad to see Sivaji affected both sides. All great people have suffered like this.

    ReplyDelete
  2. சாய்பாயின் உடல்நலக்குறைவு வருத்தமளிக்கிறது....
    அதே நேரத்தில் எதிரிகளில் தாக்குதலும் மற்றொரு புறத்தில் அரங்கேறி கொண்டிருக்கிறது....

    இதை எப்படி சிவாஜி சமாளிப்பானோ....

    ReplyDelete