என்ன
தான் உடல் தளர்வாக இருந்தாலும் மனம் தன் சிந்தனையின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ளத்
தயாராக இல்லை என்பதால் விஸ்வத்தின் மனம் அந்த ஜிப்ஸியைக் குறித்த சிந்தனைகளில் தீவிரமாக
இறங்கியது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த ஜிப்ஸியே அவன் வாழ்க்கைக்கு அந்தந்த
காலத்திற்குத் திருப்புமுனையாக இருந்திருக்கிறான். விஸ்வம் தான்தோன்றித்தனமாக சுற்றிக்
கொண்டிருந்த சமயத்தில் சக்திகளைப் பெறுவதை நோக்கி அவன் வாழ்க்கை திசை திரும்பியது அந்த
ஜிப்ஸியைச் சந்தித்த முதல் சந்திப்பிற்குப் பிறகு தான். பல சக்திகளைப் பெற்று விஸ்வம்
வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது இரண்டாவது முறை சந்தித்து இல்லுமினாட்டி பற்றித்
தெரிவித்து, அந்த மேசன் கோயிலின் பழங்காலச் சுவடி பற்றியும் தகவல் தெரிவித்து இல்லுமினாட்டியை
நோக்கி அவன் வாழ்க்கையைத் திசை திருப்பி விட்டவனும் அந்த ஜிப்ஸி தான். அந்த இரண்டாம்
சந்திப்பில் இனி நம் சந்திப்பு இருக்காது என்று அந்த ஜிப்ஸி சொல்லியிருந்ததை மீறி இப்போது
மூன்றாவதும் சந்திப்பு நிகழ்பெறப் போகிறது. அதுவும் ஒருவிதத்தில் அவன் முன்பு சொன்னதற்கு
எதிர்மாறானது என்று சொல்லி விட முடியாது. விஸ்வம் பழைய உடலில் இல்லை. இது கிட்டத்தட்ட மறுபிறவி போலத் தான்.
இப்போதும் கூட சாக இருந்தவனை ஒரு விதத்தில் புதிய உடலுக்குச்
செல்லத் தூண்டியது அந்த ஜிப்ஸி தான். மூன்றாவது முறையாகவும் அவன் வாழ்வை அந்த ஜிப்ஸி
தான் திசை திருப்பி இருக்கிறான். எப்போதும் மன அமைதி இழக்காத விஸ்வத்தை க்ரிஷும், அந்த
இல்லுமினாட்டி சின்னமும் சேர்ந்து நிதானம் தவற வைத்து விட்டதால் முன்பே கூடுவிட்டுக்
கூடு பாயும் வித்தையும் கற்றிருந்தாலும் கூட அவன் இறக்கும் போது இன்னொரு உடலுக்குப்
போகிற எண்ணமே அவனுக்கு வந்திருக்கவில்லை. கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற மகாசக்திப்
பிரயோகங்களில் ஒரு வினாடியில் நூற்றில் ஒரு பங்கு கூட மிக முக்கியமானது தான். அந்த
நுண்ணிய காலத்தை இழந்து விட்டால் கூட சில சக்திப் பிரயோகங்கள் சாத்தியப்படாது. அப்படி
இருக்கையில் மிகச்சரியான துல்லியமான காலக்கட்டத்தில் அந்தக் கிதார் இசை அவனை எட்டியிருக்கவில்லை
என்றால் அவனால் இந்த உடல் மாற்றப் பிரயோகத்தைச் சாதித்திருக்க முடியாது. அந்த மிக முக்கியக்
கணத்திலும் அவனைக் காப்பாற்றியது அந்த ஜிப்ஸியே.
இதுநாள் வரை அவன் அந்த ஜிப்ஸியை வேறெந்த குறிப்பிட்ட நோக்கமும்
இல்லாத ஒரு சக்திவாய்ந்த மனிதனாகவே நினைத்திருந்தான். அவன் விஸ்வத்தைப் பார்க்கையில்
அவன் விதியைப் படிக்க முடிந்து உதவிய ஒரு உள்நோக்கமில்லாத செயலாகவே அவனுக்குத் தோன்றியிருந்தது.
ஆனால் இப்போது உள்நோக்கமில்லாத ஆளாக அந்த ஜிப்ஸியை அவனால் நினைக்க முடியவில்லை.
இந்தியாவில் இருந்த அந்த ஜிப்ஸி மிகச்சரியாக ஜெர்மனியில்
ம்யூனிக் நகரில் அவன் சாகும் கணத்தில் வந்து உதவியிருப்பது தற்செயலாக முடிகிற காரியம்
அல்ல. விஸ்வத்தை யார் பின் தொடர்ந்து வந்திருந்தாலும் விஸ்வம் கண்டிப்பாக அறிந்திருப்பான்.
அவனுடைய சக்தி அப்போது அந்த நுட்ப நிலையில் தான் இருந்தது. அதுமட்டுமல்ல இல்லுமினாட்டியும்
விஸ்வத்தின் பின்னால் யாராவது தொடர்ந்து வந்திருந்தால் கண்டிப்பாகக் கண்டுபிடித்திருக்கும்.
அந்த ஜிப்ஸி விஸ்வத்துக்கும், இல்லுமினாட்டிக்கும் தெரியாதபடி, அவர்கள் யாரும் உணராதபடி
தூரமாகவே இருந்திருக்கிறான்.
இல்லுமினாட்டியின் கூட்டம் மிக ரகசியமாக சத்தமே வெளியில்
கேட்காத ஒரு அரங்கில் நடைபெற்றது. அங்கே நடந்தது வெளியே யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே
இல்லை. அதிலும் முக்கியமாக அவன் இறந்தது கண்டிப்பாக யாரும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
இல்லுமினாட்டி உறுப்பினர்களே அவன் இறந்ததைச் சிறிது நேரம் கழித்து தான் கண்டுபிடித்தார்கள்.
அப்படி இருக்கையில் அவன் இறந்த சரியான தருணத்தில் அந்த ஜிப்ஸி உணர்ந்து கிதார் இசைத்திருப்பது
ஒரு சாதாரண சக்தியாளனுக்குச் செய்ய முடிகிற செயல் அல்ல. ஆனால் அதை அந்த ஜிப்ஸி செய்திருக்கிறான்.
அப்படியானால் அவன் சக்தி பிரம்மாண்டமானது தான்.
இப்போது விஸ்வத்துக்குப் புதிய சந்தேகம் ஒன்றும் எழுந்தது.
அவன் விதியைப் படிக்க முடிந்ததாகச் சிலதைச் சொல்லி மற்றது மங்கலாகத் தெரிகிறது என்று
அந்த ஜிப்ஸி சொன்னது உண்மையில்லையோ? அவன் முன்பே இந்த மரண நிகழ்வைக் கூட அவனுடைய ஞானதிருஷ்டியில்
பார்த்திருப்பானோ? அதனால் தான் அவன் ம்யூனிக் வந்து சரியான நேரத்தில் அவனுக்கு உதவியிருக்கிறானோ?
விஸ்வத்திற்குத் தலை வலித்தது. இந்தச் சிந்தனை ஓட்டம் அவனுக்கும்
அவனையும் மீறிய சக்தியாளனாக அந்த ஜிப்ஸியை அடையாளம் காட்டியது. வேறு உடம்பில் புகுந்து
தன் மனதையும், தன் சக்திகளையும் பத்திரப்படுத்திக் கொண்டிருந்த இந்த வெற்றியின் உச்சத்திலும்
தனக்கும் மேற்பட்ட ஒரு சக்தியாளனாக அந்த ஜிப்ஸி இருப்பதில், தான் மங்கிப் போவது போல்
விஸ்வத்தால் உணராமல் இருக்க முடியவில்லை.
முக்கியமாக அந்த ஜிப்ஸி உண்மையில் யார்? அவனுடைய உண்மையான
நோக்கம் என்ன? அவனோடு மாத்திரம் அல்லாமல் இல்லுமினாட்டியோடும் விஸ்வம் சம்பந்தப்பட்டவன்
போலத் தோன்றுகிறதே, அது என்ன சம்பந்தம்? என்ற கேள்விகளில் அவன் மனம் அலைபாய்ந்தது.
ஆனால் இப்போதைய நிலைமையில் அந்த அலை பாயும் எண்ணங்கள் அவன்
சக்தியை வடிய வைப்பது போலத் தோன்றியதால் விஸ்வம் உடனே அந்த எண்ண ஓட்டத்தை நிறுத்தினான்.
அந்த ஜிப்ஸி யாராக இருந்தாலும், அவன் நோக்கம் என்னவாக இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம்.
அவன் எதிரி மட்டும் அல்ல. இது வரை அவன் உதவியாக மட்டுமே இருந்திருக்கிறான். இப்போதைக்கு
அவனை விட்டால் அவனுக்கு உதவி செய்ய வேறெந்த ஜீவனும் இல்லை…
அசைய மறுக்கும் இந்த உடலைக் கிளப்பி அவன் அந்த ஜிப்ஸி வரும்
போது யார் கவனத்தையும் கவர்ந்து விடாமல் மருத்துவமனைக்கு வெளியே செல்ல வேண்டும் என்ற
எண்ணத்தில் விஸ்வம் தங்கினான். அதற்கு இப்போதைக்கு நிறைய சக்தி தேவைப்படும் என்பதால்
அமைதியாகிச் சில மூச்சுப் பயிற்சிகள் செய்து உடலின் சக்தியைப் பெருக்கிக் கொண்டான்.
சுமார் அரை மணி நேரத்தில் ஜிப்ஸி வந்து விட்ட செய்தி அவன் உணர்வில் வந்து சேர்ந்தது.
விஸ்வம் மெல்ல எழுந்தான். முதல் சில அடிகள் எடுத்து வைத்ததில் தடுமாறினாலும் பின் அந்த உடல் அவனுக்குக்
கட்டுப்பட்டது. மெல்ல அறையை விட்டு வெளியே வந்தான்…
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது சற்று தள்ளி ஒரு கருப்புக்காரில்
ஜிப்ஸி காத்திருந்தான். விஸ்வம் காரின் பின்புறத்தில் ஏறினான். அவனுக்கு ஓய்வெடுக்க
பின்புற முழு இருக்கையே வசதி. அவன் ஏறியவுடன் ஜிப்ஸி உற்சாகத்துடன் சொன்னான். “நீ செய்திருப்பது
பெரிய சாதனை தான். வாழ்த்துக்கள்”
விஸ்வம் மெலிதாய் புன்னகைத்தான். அவன் அந்தக் கார் வரை வருவதற்கே
முழுமையாய் சக்தியைச் செலவு செய்திருந்தான். அதனால் அவனுக்குப் பேசவும் முடியவில்லை.
அந்தப் பின் இருக்கையில் அவன் படுத்துக் கொள்ள கார் நகர்ந்தது. விஸ்வம் கண்களை மூடிக்
கொண்டான். ஒரு பாதுகாப்பை அவன் மனம் உணர்ந்தது. உறக்கம் வந்தது.
கடைசியாகக் கார் நின்று “நாம் தங்குமிடம் வந்து விட்டது.
இறங்கலாமா?” என்று ஜிப்ஸி சொன்ன போது தான் விஸ்வம் கண்விழித்தான். காரை விட்டு இறங்கவும் அவனுக்குச்
சற்றுக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இறங்கியவன் அந்த அழகான வீட்டையும், கண்ணுக்கு
எட்டிய தூரம் வரை வேறெந்த வீடோ, கட்டிடமோ இல்லாமல் இருப்பதையும் கவனித்தான்.
அவன் கேட்காமலேயே ஜிப்ஸி சொன்னான். “இந்த வீட்டுக்காரன் நியூயார்க்
நகரில் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவன் வருடத்துக்கு ஒரு முறை
கிறிஸ்துமஸ் சமயத்தில் மட்டுமே வந்து இங்கு ஒரு மாதம் இருப்பான். மற்ற சமயங்களில் இந்த
வீடு காலியாகவே இருக்கும்.”
விஸ்வம் தலையசைத்தான். கஷ்டப்பட்டு உள்ளே போய் ஜிப்ஸி காட்டிய
ஒரு அறையில் படுக்கையில் விழுந்தவன் நீண்ட நேரம் உறங்கினான். அவன் கண்விழித்த போது
தொண்டை வரண்டிருந்தது. அந்த ஜிப்ஸி அவனுக்குக் குடிக்க சத்துமிக்க ஒரு பானத்தைத் தயாராய்
வைத்திருந்தான். அந்தப் பானம் தொண்டையில் அமிலம் போல் இறங்கியது. புண்ணாகியும் சிதிலமாகியும்
பாழ்பட்டிருந்த அந்த உடல் அவனுக்கு அருவருப்பையே தந்தது. இத்தனைக்கும் இது அவன் பழைய
உடலை விட இளமையான உடல். அவன் சொன்னான். . “எனக்கு இந்த உடல் பிடிக்கவில்லை”. அவனுக்கே
அந்தக் குரல் அன்னியமாகத் தோன்றியது. இனி ஒவ்வொன்றும் அவனுடையது என்று உணர சிறிது காலம்
தேவைப்படும்….
ஜிப்ஸி புரிதலுடன் சொன்னான். “கவலைப்படாதே. உனக்குப் பிடித்தது
போல் அதை நீ சீக்கிரமே மாற்றிக் கொள்ள முடியும்”
அந்த வார்த்தைகள் அவனைச் சமாதானப்படுத்தவில்லை. ஆனால் மறுத்து எதுவும் பேசாமல் கண் மூடி உறங்கினான்.
மூன்று நாட்களில் அவன் உடல் ஓரளவு தேறியது. நான்காவது நாள் டேனியலின் புகைப்படத்தை
டிவியில் காண்பித்தார்கள். ”போதைக்கு அடிமையான நோயாளியாக இருக்கும் இவர் திடீரென்று
ம்யூனிக் மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகி விட்டார். இவரைக் காண்பவர்கள் உடனே காவல்துறைக்குத்
தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவரைக் கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு
நல்ல சன்மானம் வழங்கப்படும்…”
விஸ்வம் யோசனையுடன் ஜிப்ஸியைப் பார்த்தான். ஜிப்ஸி ஒரே ஒரு
வார்த்தையைப் பதிலாகச் சொன்னான். “இல்லுமினாட்டி”
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
(தொடரும்)
என்.கணேசன்
தீபாவளி போனஸ் சூப்பர். சுவாரசியம் கூடிக்கொண்டே வருகிறது.
ReplyDeleteSuper. Happy Deepavali.
ReplyDeleteNice Happy deepavali
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteThank you
ReplyDeleteHappy Deepavali
Happy Diwali sir
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteவிஸ்வத்துடன் ஜிப்சி இணைந்து விட்டானா...? இனி கிரிஷ் அணிக்கு தலைவலி ஆரம்பமாகப் போகிறது...
ReplyDelete