சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 24, 2017

வூடூ மோசடியா? உண்மையா?

அமானுஷ்ய ஆன்மிகம் - 12

வூடூவின் மீதான விமர்னங்களைப் பார்த்தோம். அவை அனைத்தும் வூடூ சக்திகளால் எதுவும் நடப்பதில்லை, அது குறித்த பயங்களாலேயே எல்லாம் நடக்கின்றன என்ற அடிப்படையிலேயே இருக்கின்றன. வூடூ சாவுகள் மனிதனின் பயத்தினாலேயே நிகழ்கின்றன என்ற வாதம் உண்மை என்பது போல் அலபாமாவின் வான்ஸ் வேண்டர்ஸ் உதாரணமும் நடந்திருக்கிறது. எதாவது நல்லது நடந்திருந்தாலும் அது வூடூ பொருள்களாலோ, சடங்குகளாலோ இல்லாமல், நல்லது கண்டிப்பாக நடக்கும் என்கிற நம்பிக்கையாலேயே கூட நடந்திருக்கலாம் என்ற வாதமும் விமர்சகர்களிடம் இருக்கிறது. அப்படி இருக்கவும் கூடும் என்றே நடுநிலைமையாளர்கள் கருத வேண்டி இருக்கிறது. ஆனால் ஒன்றுமே இல்லாத ஒரு கற்பனை அஸ்திவாரத்தில் இத்தனை காலம் வூடூ தாக்குப் பிடித்திருக்க முடியுமா என்ற கேள்வியையும் கேட்டால் சற்று யோசிக்கத்தான் வேண்டி இருக்கிறது.

இன்று மூன்று வகையான வூடூ வழிமுறைகள் உலகில் பின்பற்றப்படுகின்றன. முதலாவது, மேற்கு ஆப்பிரிக்க வூடூ. கானா, பெனின் முதலான நாடுகளில் சுமார் மூன்று கோடி மக்களால் பின்பற்றப்படும் இந்த வூடூ இருப்பதிலேயே அதிக கலப்படமில்லாத வூடூ என்று சொல்லப்படுகிறது. இந்த வூடூவில் சடங்குகள் மிக முக்கியமானவை. ஆனால் இந்த வூடூவின் மந்திரங்கள் எல்லாம் பழங்காலத் தூய மொழியில் இருந்திருக்கின்றன. காலப் போக்கில் மொழியில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத மாற்றங்களால், புதிய மக்களுக்கு அதன் மூல அர்த்தங்களை முழுமையாகப் புரியாமல் போனது. சடங்குகளும் காலப்போக்கில் மாற்றங்கள் கண்டன. அரைகுறையாகப் பின்பற்றப்பட்டன.

இரண்டாவது வகை வூடூ, லூசியானா வூடூ. இது அமெரிக்காவில் குடியேறிய ஆப்பிரிக்க மக்களால் பின்பற்றப்படுவது. இது வியாபாரமாகி விட்ட வூடூவாகவே சொல்லப்படுகிறது. வூடூ பொருள்கள் அதிகமாய் விற்பனையாவது இங்கே தான். சடங்குகளை விட அதிக முக்கியத்துவத்தை இங்கு இந்த வூடூ விற்பனைப் பொருள்கள் பெற்று விட்டிருக்கின்றன. 

மூன்றாவது வகை வூடூ ஹைத்தி வூடூ. இது மேற்கு ஆப்பிரிக்க வூடூவாகவே ஹைத்தி சென்றிருந்தாலும், காலப்போக்கில் ஸ்பெயின், பிரெஞ்சு மக்களின் தாக்கம் காரணமாக கிறிஸ்துவ மத அம்சங்களை நிறையவே தன்னுடன் இணைத்துக் கொண்ட வூடூவாக பிற்காலத்தில் மாறி விட்டது. 

இப்படி மூன்று வூடூகளிலுமே உருவான காலத்திய வூடூவைக் காண்பதே அபூர்வம் என்ற நிலை இருக்கிறது. உருமாறிய வூடூவையாவது தெரிந்த வழியில் சரியாகப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அதனால் போலிகள் பெருகி அவர்களே அதிகம் தென்படுகிறார்கள். இந்தக் காரணங்களால் தான் வூடூவை வைத்து ஏமாற்று வேலைகள் அதிகம் நடக்கின்றன. இக்காலத்தில் ஆன்மீகம் உட்பட எல்லா துறைகளிலும் போலித்தனமும், ஏமாற்று வேலைகளும் அதிகம் என்பதைக் காணும் போது  அதை மட்டும் வைத்து வூடூவை மோசடி என்று சொல்வது சரியல்ல அல்லவா?

மைக்கேல் எட்வர்ட் பெல் (Michael Edward Bell) என்பவர் எழுதிய Pattern, Structure, and Logic in Afro-American Hoodoo Performance என்ற ஆராய்ச்சி நூலை 1980 ஆம் ஆண்டு இண்டியானா யூனிவர்சிட்டி வெளியிட்டுள்ளது. நோய்களைக் கண்டறிதல், குணமாக்குதல், பழிவாங்குதல், தீமைகளில் இருந்து தற்காத்துக் கொள்தல், சுபிட்சம் வேண்டுதல் ஆகிய முக்கிய ஐந்து காரணங்களுக்காக வூடூ பின்பற்றப்படுகிறது என்று கூறும் அவர் அதற்கு அடிப்படையாக இருந்த சடங்குகளும், வழிமுறைகளும் ஆழமான அர்த்தங்களையே கொண்டிருந்தன என்று கூறுகிறார்.

ஒருவருக்கு எதிராக, அவருக்குத் தெரியும் படியாகவே வூடூவைப் பயன்படுத்தும் போது அவர் பயத்தினாலோ, நம்பிக்கையாலோ பாதிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள். சரி. அவர்களுக்குத் தெரியாமலேயே பயன்படுத்தி அதன் வெற்றிகளையும் ஏராளமான மக்கள் கண்டிருக்கிறார்கள். அதை என்னவென்று சொல்வது?

உதாரணத்திற்கு ஜப்பானிய டாக்டர் டாகாசாகி (Dr. Tagasaki) தலைமையில் ஒரு குழு செய்த ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியைப் பார்ப்போம். நூறு பேர் சேர்ந்து விளையாடிய ஒரு பகடை விளையாட்டு அது. அதில் பிரத்தியேகத் திறமைக்கு எந்த வேலையும் இல்லை. ஒருவர் இரண்டு பகடைகளையும் சேர்த்து உருட்டி வரும் எண்ணை மீண்டும் எத்தனை முறை கொண்டு வருகிறார்கள் என்பதே போட்டி. இரண்டு பகடைகளும் சேர்ந்து எண் ஏழு வரும் வரை அவர்கள் பகடைகள் உருட்டலாம். இரண்டு மணி நேர விளையாடிய பின் இந்தப் போட்டியில் மிகவும் பின் தங்கி இருந்த இருபது பேரை அழைத்து வூடூ முறைப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி விடலாம் என்று சொல்லி இரண்டு பிரிவாகப் பிரித்து ஜீன் எம்மானுவல் (Jean Emmanuel) என்ற பெயருடைய ஹைத்தி வூடூ பயிற்சியாளரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர்களில் பத்து பேருக்கு உண்மையாக வூடூ அதிர்ஷ்ட ஏவல் வேலையை ஜீன் எம்மானுவல் செய்தார். மற்ற பத்து பேருக்கு சாதாரண நன்மை ஏவல் செய்தார். பார்ப்பவர்களுக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதபடி இருந்தது அவர் செயல்முறைகள்.

அது வரை தோல்வியின் அடிமட்டத்தில் இருந்த இரண்டு கோஷ்டிகளும் தங்களுக்கு அதிர்ஷ்ட ஏவல் செய்யப்பட்டிருப்பதாகவே நினைத்து விளையாட மறுபடியும் சென்றார்கள். தொடர்ந்து விளையாடிய விளையாட்டுக்களில்  சாதாரண நன்மை ஏவல் செய்யப்பட்டவர்கள் 44 சதவீதம் வெற்றி பெற்றார்கள். அதிர்ஷ்ட ஏவல் செய்யப்பட்டவர்கள் 84 சதவீதம் வெற்றி பெற்றார்கள். ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே இரண்டு பிரிவினர் யார் யார் என்று குறித்து வைத்துக் கொண்டவர்கள். அந்த இருபது பேரைப் பொருத்த வரை அத்தனை பேருமே ஒரே உற்சாக மனநிலையில் விளையாடப் போனவர்கள் தான். இரு பிரிவினருமே முந்தைய ஆட்டத்தை விட நன்றாக ஆடி வெற்றிப் பாதையில் பயணித்தார்கள் என்றாலும் அதிர்ஷ்ட ஏவல் செய்யப்பட்டவர்கள் சாதாரண நன்மை ஏவல் செய்யப்பட்டவர்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வெற்றி பெற்றார்கள் என்பது தான் வியப்பு. இந்த ஆராய்ச்சி வூடூவின் சக்தியை உறுதியாக்கி இருப்பதாக டாக்டர் டாகாசாகி குழு முடிவுக்கு வந்தது.  

1932 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்ப்போம். லூசிலி வில்லியம்ஸ் (Lucille Williams) என்ற பெண்மணியை அவளுடைய காதலன் எலிஜா வீட்லீ (Elijah Wheatley) என்பவன் ஒரு கால்வாயில் தள்ளி மூழ்க வைத்துக் கொன்று விட்டான். அவன் கால்வாயிலிருந்து ஓடுவதை இரவு நேரக் காவலாளி பார்த்துவிட்டான். அவன் போலீஸில் சொல்லி விட்டதால் எலிஜா வீட்லீ தலைமறைவாகி விட்டான். லூசி வில்லியம்ஸின் குடும்பத்தினர் அவனைப் பழிவாங்க வூடூ முறையை நாடினர்.

அதன்படி சவத்தின் இரு கைகளிலும் ஒவ்வொரு முட்டையை வைத்து இரண்டு கைகளையும் கயிறால் கட்டி சவப்பெட்டியில் குப்புறப்படுக்க வைத்து சவப்பெட்டியின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் மந்திரிக்கப்பட்ட இரண்டு சிவப்பு மெழுகுவர்த்திகளை எரிய விட்டு பிரார்த்தித்தார்கள். கடைசியில் சவப்பெட்டியைக் கல்லறையில் புதைத்து முட்டைகளை உடைத்து கல்லறையில் மேல் பாகத்தில் தூவி விட்டார்கள்.

மறுநாள் காலை லூசி வில்லியம்ஸ் இறந்து கிடந்த அதே இடத்தில் எலிஜா வீட்லீயின் பிணமும் மிதந்து கொண்டிருந்தது. போலீஸார் அவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாய் நினைக்க, லூசி வில்லியம்ஸின் குடும்பத்தார் வூடூ தன் வேலையைச் செய்து விட்டதாகத் திருப்தி அடைந்தார்கள்.   


லின்னே மெக்கார்ட் (Lynne McTaggart) என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் எழுதி 2007 ஆம் ஆண்டு வெளியான The Intention Experiment என்ற நூலில் அவர் மனித எண்ணங்களின் சக்தி எப்படி அவர்களது வாழ்க்கையையும், உலகத்தின் போக்கையும் தீர்மானிக்கிறது, மாற்றி அமைக்கிறது என்பதை விவரித்துள்ளார். அந்த விளக்கங்களின் ஊடே அந்த நூலில் பத்தாவது அத்தியாயத்தில் வூடூ விளைவுகள் பற்றியும் அவர் விளக்கி உள்ளார்.

இதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்களும், ஏமாற்றும் நோக்கத்தோடிருப்பவர்களும் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகவே வூடூவை ஒருவர் புறக்கணித்து விட முடியாது என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியிருக்கிறது. வூடூவின் அடிப்படை அம்சங்கள் வலுவானவை என்பதும், முறையாக நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தினால் வூடூ பலனளிப்பதாகவே இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அடுத்த வாரம் முதல் அகோரிகள் பற்றிய சுவாரசியமான விவரங்களைப் பார்ப்போம்.

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி 23.5.2017


3 comments:

  1. Voodoo patriya...poliyana matrum unmaiya...amsangalai...kooriyathu arumai... Waiting for next week..

    ReplyDelete
  2. தங்கள் புத்தகங்கள் E-BOOKS ஆக கிடைக்குமா நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ஆரம்ப நூல்கள் சில்வற்றை நிலாச்சாரல் மற்றும் டெய்லி ஹண்ட் ஆகியவற்றில் தந்திருந்தோம். இப்போதைய நூல்கள் மின்னூல்களாக தரவில்லை நண்பரே.

      Delete