அந்த மலையின்
பெயர் க்ரிஷின் லாப்டாப்பில் மின்னிய போது அவன் மனம் அந்த மலை பற்றிக்
கேள்விப்பட்ட வினோதமான, அமானுஷ்யமான செய்திகளுக்குத் தாவி விட்டு மீண்டது. இந்த
அமானுஷ்ய மனிதன் இதற்கு முன்னும் அந்த மலைக்கு வந்திருக்கலாம்.....
“அந்த மலை பற்றி கேள்விப்பட்ட செய்திகளுக்கெல்லாம் காரணம் நீங்கள்
தானா?” என்று க்ரிஷ் கேள்வி எழுப்பினான்.
“ஒன்றிரண்டை மட்டும் தான் அங்கிருந்தவர்கள்
என்னால் கண்டார்கள். மீதி எல்லாம் மற்றவர்கள் தாங்களாக உருவாக்கியவை. அதில் என்
பங்கு எதுவுமில்லை” என்ற பதில் வந்தது. அப்படியானால் இதற்கு முன் அந்த ஆள்
அங்கு வந்திருப்பது உண்மை....
“அது தான் உங்கள் இருப்பிடமா?”
“நான் சிலகாலமாய் அவ்வப்போது வரும் இடம்.”
“அப்படியானால் உங்கள் நிரந்தர இருப்பிடம் எது?”
“அது தொலைதூரத்தில் இருக்கிறது....”
அது அவர் சொன்ன 16000 கிலோமீட்டர் தூரத்திலேயே இருக்கலாம். ஆனாலும்
உறுதி செய்து கொள்ள தொலைதூரத்தில் எங்கே என்று அவன் கேட்பதற்குள் அடுத்த வாசகம்
லாப்டாப்பில் மின்னியது. “அடுத்த அமாவாசை அன்று இரவு எட்டு மணிக்கு அந்த மலைக்கு வருகிறாயா? மலை உச்சியில் சந்திப்போம்....”
க்ரிஷுக்கு அந்த மலையில் நடந்த வினோத சம்பவங்கள் எல்லாம் அமாவாசை
இரவில் தான் அரங்கேறியவை என்பது உடனே நினைவுக்கு வந்தது. இப்போதும் அமாவாசை அன்று
தான் அந்த ஆள் வரச் சொல்கிறான்...
“ஏன் அமாவாசை நாளையே நம் சந்திப்புக்குத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ஏதாவது பிரத்தியேக காரணம் இருக்கிறதா?”
“அந்த நாள் தான் நான் அங்கே வருவேன். அதனால் தான் அந்த நாள் வரச்
சொல்கிறேன்... வரும் போது
லாப்டாப்பையும் கொண்டு வா”
அவன் படித்து விட்டு நேரில் சந்திக்கையில் லாப்டாப் எதற்கு என்ற
அடுத்த கேள்வி கேட்பதற்கு முன் அந்த வாசகம் மறைந்து போனது. பின் எந்த வாசகமும் வரவில்லை.
க்ரிஷ் ’ஹலோ’ என்று அழைக்க கீ போர்டை அழுத்தினான். அவன் அழுத்தும்
எந்த எழுத்துமே இப்போது லாப்டாப் திரையில் வரவில்லை. அந்த மர்ம மனிதன் தகவல்
ஏதாவது அனுப்பும் போது மட்டுமே அதற்கு அவன் பதில் எழுத முடிகிறது. அதுவும்
ஆச்சரியமாய் இருக்கிறது.
அன்றிரவு அந்த மர்ம மனிதன் குறித்த
சிந்தனைகளால் அவனால் உறங்க முடியவில்லை. யாரவன்? எதற்கு இப்படி தொடர்பு
கொள்கிறான்? எப்படி அவனால் இப்படி தொடர்பு கொள்ள முடிகிறது?.... யாராக இருந்தாலும்
அவன் தன்னை விட அறிவாளி என்பதில் க்ரிஷுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. ஏனென்றால்
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனிடம் பதிலும் இல்லை, எப்படி நடக்கிறது என்று அவனால்
யூகிக்கவும் முடியவில்லை.
என்றைக்குமே க்ரிஷ் தன்னை விடச் சில
விஷயங்களில் அறிவாளிகளாக இருப்பவர்கள் மீது பொறாமை கொண்டதில்லை. அவர்களது மேலான
நிலையை ஒப்புக் கொள்ளவும் தயங்கியதில்லை. ஏனென்றால் புதியதாக அவர்களிடமிருந்து
கற்றுக் கொள்ளலாம் என்கிற உற்சாகமே எல்லாவற்றையும் விட பிரதானமாக அவனிடம் மேலோங்கி நிற்கும். இப்போதும் அந்த ஆள் அந்த உற்சாகத்தையே ஏற்படுத்தினான். அந்த ஆளைச்
சந்திக்க அமாவாசை வரை காத்திருப்பது தான் கஷ்டமாய் இருந்தது.
அடுத்த அமாவாசை வரை இணையத்தில் இது போன்ற
அபூர்வ சக்திகள் பற்றிய தகவல்களைத் தேடினான்.
அதில் நிறைய தகவல்கள் இருந்தன. ஆனால் கற்பனைகள், பொய் விளம்பரங்கள், அரைகுறை
அனுமானங்கள் ஆகியவற்றின் மத்தியில் உண்மையைத் தேடுவது சுலபமாய் இருக்கவில்லை. ஆனாலும்
சலிப்பில்லாமல் அதில் ஒவ்வொன்றையும் ஆழமாய் அலசினான். அந்த மலையில் அமாவாசை
நாட்களில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டிப்
படித்தான். நெருப்பு ஜூவாலை, பேய்க்காற்று, மர்ம சக்தி நடமாட்டம் போன்ற அந்தத் தகவல்களிலும் கூட சம்பந்தப்பட்ட
மனிதர்களின் கற்பனை பாதி என்றால் பத்திரிக்கைகள் முதலான ஊடகங்கள் பரபரப்புக்கு
வேண்டி சிருஷ்டி செய்து கொண்ட விஷயங்கள் பாதியாக இருந்தன. ’உண்மை என்றுமே தன்னைப் பிரகடனப்படுத்திக்
கொள்ளும் சிரமத்தை எடுத்துக் கொள்வதில்லை’ என்று தோன்றியது.
அடுத்த அமாவாசை நாள் வரை அவனுடன் எந்த விதத்
தொடர்பும் அந்த மர்ம நபர் வைத்துக் கொள்ளவில்லை. க்ரிஷ் அந்த நாட்களில் லாப்டாப்பை அடிக்கடி பார்த்தான். எந்த வாசகமும் மின்னவில்லை. அமாவாசை
மாலை கிளம்பும் முன் சின்னதாய் ஒரு தயக்கமும் அவனுக்கு வந்தது. அவன் போய், அந்த
மர்ம நபர் வராமல் போனால்....? ’அப்படி
ஒருவேளை அந்த ஆள் வராமல் போனால் அந்த இடத்தில் உலாவும் சக்திகள், அமானுஷ்யங்கள்
பற்றி ஆராய்ந்து விட்டு வரலாம்’ என்று எண்ணியவனாய் அமாவாசை அன்று இருட்டுவதற்கு முன்பே
கிளம்பிப் போனான்.
அந்த மலையை அவன் அடைந்த போது ஆட்கள் யாருமேயில்லை. மலை மேல் இருந்த
சிறிய அம்மன் கோயில் கதவு சாத்தப்பட்டிருந்தது. கைகூப்பி வணங்கி விட்டு சுற்றும்
முற்றும் பார்த்தான். சில மரம், செடி, கொடி, பாறைகளைத் தவிர வேறு எதுவும்
அங்கில்லை. சூரியன் தூரத்தில் அழகாய் அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்தது. அந்த அழகை
நின்று முழுவதுமாய் க்ரிஷ் ரசித்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தான்.
இருள் சூழ ஆரம்பித்தது. வீசிய காற்று ஒரு புதிய ஒலியைப் பெற
ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன்
ஒலியும் கூடுதல் அமானுஷ்ய தொனி பெற ஆரம்பித்தது. பேய்க் காற்று என்று சொல்வது
இதைத் தானோ?....
அமாவாசை இருட்டில் வானத்தில் மின்னிய வைர நட்சத்திரங்களை ரசித்துக்
கொண்டிருக்கும் போது தான் க்ரிஷ் அந்தப் பெரிய கரிய பறவையைக் கவனித்தான். அமாவாசை
இருட்டிலும் அந்தக் கரிய பறவை வித்தியாசமாய் இருந்தது. பறந்து கொண்டிருக்கும்
அசைவினால் அதைப் பார்க்க முடிகிறதே ஒழிய அது அசைவற்று ஆகாயத்தில் இருந்தால் அந்த
அமாவாசை இருட்டில் தெரிய வாய்ப்பில்லை.
கண்டிப்பாக அது காகமல்ல.... காகத்தை விடப் பெரிய பறவை. சுமார் ஐந்து
மடங்காவது பெரிதாக இருக்கலாம்.... இது போன்ற அண்டக்காக்கைகள் வட அமெரிக்கப்
பகுதியில் தான் இருக்கின்றன... அவை கூட இவ்வளவு பெரியவை அல்ல...
அந்தப் பறவை சில முறை அந்த மலையைச் சுற்றி வந்து திடீரென்று மறைந்தது. அவன் தன்
கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டு. ஆகாயத்தில் திடீரென்று ஒரு ஒளி
தெரிந்தது. நெருப்புப் பந்தமாய் மின்னிய ஒளி அந்த மலை உச்சியில் இறங்க
ஆரம்பித்தது. அதைப் பார்க்கவே அவனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. இதயத்துடிப்பின்
வேகம் கூடியது. பரபரப்பாக இருந்தது. இதைத்தான் உண்மையாகப் பார்த்தவர்கள் சொல்லி
இருக்கிறார்களோ?
அந்த ஒளி மலையுச்சியைத் தொட்டவுடன் மறைந்தது. ஒளி மறைந்து உருவான கூடுதல்
இருட்டில் ஒரு கணம் க்ரிஷால் எதையும் பார்க்க முடியவில்லை. திடீரென்று
மூடப்பட்டிருந்த அவன் லேப்டாப்பின் இடுக்கிலிருந்து ஒளி தெரிந்தது. க்ரிஷ்
பரபரப்பாக லாப்டாப்பைத் திறந்தான்.
“நீ வந்ததற்கு நன்றி” என்ற வாசகம் லாப்டாப் திரையில் மின்னிக் கொண்டிருந்தது.
“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று நடுங்கும்
கைகளில் கேள்வியை அழுத்தினான்.
“உன் அருகில் தான்” என்ற வாசகம் உடனே
பதிலாய் மின்னியது.
“என்னால் பார்க்க முடியவில்லையே!”
“மனிதக் கண்களால் பார்க்க முடியாதவை ஏராளம்”
“யார் நீங்கள்?”
“நான் வேற்றுக்கிரகவாசி”
க்ரிஷ் ஒரு நிமிடம் பேச்சிழந்தான். ஏலியன்! அந்தப் பெருங்காற்றிலும்
அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. கஷ்டப்பட்டு தன்னைச் சமாளித்துக் கொண்டு தன்
அடுத்த கேள்வியை அழுத்தினான்.
“எந்தக் கிரகம்?”
“இன்னும் மனிதர்கள் கண்டுபிடிக்காத ஒரு தூரத்து கிரகம்”
“ஏன் இங்கு வந்தீர்கள்?”
“எங்கள் ஆராய்ச்சியில், கண்காணிப்பில் இருக்கும் கிரகம் இது. அதனால்
வந்திருக்கிறேன்....”
க்ரிஷுக்குத் தலைசுற்றியது. எல்லாமே மாயா ஜாலம் போலவும், கனவு போலவும்
தோன்றியது. அவன் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “ஏன் என்னைத் தொடர்பு
கொண்டீர்கள்?”
“பேரறிவும், மிக நல்ல மனமும் சேர்ந்து உன்னிடத்தில் இருப்பதால் தான்
உன்னைத் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டேன்....”
“அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?”
“எல்லாம் அலைகள் மூலமாகத் தான். ஒரு மனிதன் உண்மையில் என்னவாக
இருக்கிறான் என்பதை அடுத்த மனிதர்கள் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். ஏன் அவனே
அவனை அறிவது கூட அவ்வளவு சுலபமல்ல. ஆனால் அவன் வெளிப்படுத்தும் அலைகள் அனைத்துத்
தகவல்களையும் சொல்லும். அதன் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இந்த
வித்தையை உங்கள் சித்தர்கள், யோகிகள் அறிந்திருந்தார்கள். இப்போது ஆராய்ச்சிகள்
மூலமாக ஓரளவு உங்கள் விஞ்ஞானிகளும் அறிய ஆரம்பித்திருக்கிறார்கள்....
உதாரணத்திற்கு உனக்குப் பிடித்த நிகோலா டெஸ்லா…
”
“என்னைப் பற்றி என் அலைகள் மூலமாகத் தெரிந்து கொண்டது சரி.
கி.பி.1856ல் பிறந்து 1943ல் இறந்த நிகோலா டெஸ்லா பற்றி உங்களுக்கு எப்படித்
தெரியும். நான் படித்துக் கொண்டிருந்ததை வைத்தா?”
“மனிதர்கள் இறந்தாலும் அவர்கள் எண்ண அலைகள் அவர்களுடன் சேர்ந்து
இறந்து விடுவதில்லை.... அவை சாசுவதமானவை உங்கள் ரிஷிகள் சொல்லும் ஆத்மாவைப் போல...”
இது விஷயமாக விவாதிக்கவும் தெரிந்து கொள்ளவும் க்ரிஷுக்கு நிறைய
இருந்தது. ஆனால் அதற்கு முன் இந்த வேற்றுக்கிரகவாசியிடம் கேட்க வேண்டிய முக்கியக்
கேள்வி முந்தியது.
“இங்கு வந்த பிறகும் நம்மால் லாப்டாப்பில் தான் பேசிக் கொள்ள முடியும்
என்றால் சொல்ல வேண்டியதை நான் வீட்டில் இருக்கும் போதே சொல்லி இருக்கலாமே. என்னை இங்கே ஏன் வரவழைத்தீர்கள்?”
”உண்மையில் நீ என்னை சந்திக்க முடியும். இந்த லாப்டாப் உதவியில்லாமலேயே
என்னிடம் பேச முடியும். அதுவும் இப்போதே முடியும். ஆனால் அதற்கு ஒரே ஒரு நிபந்தனை”
க்ரிஷ் இதயம் வேகமெடுத்தது....
இந்தக் காட்சியை மனத்திரையில் மறு ஒளிபரப்பாகப் பார்த்துக்
கொண்டிருந்த மாஸ்டர் இங்கு தான் எதிரி க்ரிஷை அவன் அறியாமலேயே மடக்க
ஆரம்பித்திருக்கிறான் என்று எண்ணினார். விதி வலியது!
(தொடரும்)
என்.கணேசன்
Nice..
ReplyDeleteDifferent story. Beautifully unfolding. Learning so much while enjoying the story.
ReplyDeleteநிஜமாகவே ஏலியனா, வில்லனா? சுவாரசியமாக சொல்லிட்டே போய் திடீர்னு தொடரும் போட்டு விடுகிறீர்கள். வரும் வியாழன் வரை மண்டைய பிச்சுக்காமல் என்ன சார் செய்யறது?
ReplyDeleteஎதிரி.......வேற்றுக்கிரகவாசி..ya.,,,,,!
ReplyDeleteஎதிரி......sonna...thathuvam arumai...
வேற்றுக்கிரகவாசி patriya...niraiya thagavalgalai,,intha thodar..moolam....therinthu-kollalaam.....
Kanna katting ji..
ReplyDeleteWow super amazing
ReplyDeleteகலக்கலாக செல்கிறது.
ReplyDeleteதொடரை வாரம் இரு முறை கொடுங்களேன்
ஏலியனால அலைவரிசையை படிக்க முடியும்னா என்னால ஏன் முடியலை?
ReplyDeleteஉங்கள் கதையை பொய்யினு (கற்பனைன்னு) நம்பமுடியலை.
super ji nice script
ReplyDelete