ஜுலை 21 முதல் 31 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 159ல் எனது நூல்களை சிறப்புத்தள்ளுபடியுடன் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம்....

Thursday, July 13, 2017

இருவேறு உலகம் – 38டபடக்கும் இதயத்துடன் க்ரிஷ் கேட்டான். என்ன நிபந்தனை?

“உன் உணர்வுநிலையின் உள்ளே நுழைய என்னை அனுமதிக்க வேண்டும்...

எனக்குப் புரியவில்லை

உன் கம்ப்யூட்டரில் புதிய சாஃப்ட்வேர் போட்டுக் கொள்வது போலத் தான் இது....

“அதை எப்படிச் செய்வது....

“அதை நான் செய்து கொள்கிறேன். ஆனால் மன அளவில் உன் எதிர்ப்பு சிறிதளவு இருந்தாலும் என்னால் உன் மனதுக்குள் புக முடியாது...

மனிதனின் மனம் அவனுடைய தனிச் சொத்து. அவன் அந்தரங்கமாய் நினைக்கும் விஷயங்களை அடுத்தவர் புகுந்து காண்பதை எப்படி சகிக்க முடியும் என்று க்ரிஷ் யோசித்தான்.

அதற்கு உடனே வேற்றுக்கிரகவாசியின் மறுமொழி வந்தது. நீ நினைப்பதை என்னால் இப்போதும் அறிய முடியும். ஆனால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள உன் உணர்வுநிலை போதாது. அதற்கு உனக்குக் கூடுதல் திறன் தேவை. அதற்குத் தான் உன் அனுமதி கேட்கிறேன். அதற்கு அனுமதி தந்தாயானால் இந்தக் கம்ப்யூட்டர் இல்லாமலேயே நாம் இருவரும் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். 

க்ரிஷ் யோசித்தான். எல்லாம் மாயாஜாலக்கதை போல் இருக்கிறதே!

உடனே மறுமொழி வந்தது. “இது எதுவுமே மாயாஜாலம் அல்ல. உங்களுக்குப் புரியாத இன்னொரு இயற்கை விதியே. இதை உங்கள் சித்தர்களும், யோகிகளும் அறிந்திருந்தார்கள். இப்போதும் சில அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் உன்னிடத்தில் இணைக்கப் போவது, உங்கள் பாஷையில் சொன்னால் மிகவும் அட்வான்ஸ்டு வெர்ஷன்....

க்ரிஷ் கேட்டான். “நாம் இருவரும் ஏன் அப்படிப் பேசிக்கொள்ள வேண்டும்?

மிகவும் வெளிப்படையாக, தயக்கமில்லாமல் அவன் கேட்டவுடன் வேற்றுக்கிரகவாசி சிறிது யோசித்தது போலிருந்தது. பின் பதிலுக்கு ஒரு கேள்வி வந்தது.   

“உன் பூமி அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது தெரியுமா?

அழிவுப்பாதை என்றதும் க்ரிஷ் மனதில் உடனே நினைவுக்கு வந்தது அணு ஆயுதங்கள் தான். பயன்படுத்த மாட்டோம் என்று எல்லா முக்கிய நாடுகளும் சத்தமாகச் சொல்கின்றன. ஆனால் எல்லா நாடுகளும் அது குறித்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. பயன்படுத்தப் போகாத ஒன்றிற்கு ஆராய்ச்சிகள் எதற்கு?

அவன் எண்ணி முடிவதற்குள் வேற்றுக்கிரகவாசியின் கருத்து லாப்டாப்பில் மின்னியது. “பிரச்னை அணு ஆயுதங்களில் இல்லை. அழிவுக்கான சாத்தியக்கூறுகளில் ஒன்று தான் அணு ஆயுதங்கள். இன்னும் நீ ஆழமாய்ப் போக வேண்டும். அதற்காகத் தான் நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.....

க்ரிஷ் கேட்டான். “பூமி அழியப் போவதில் வேற்றுக்கிரகவாசிக்கு என்ன அக்கறை?

இந்த இடத்தில் மாஸ்டருக்கு க்ரிஷை மெச்சாமல் இருக்க முடியவில்லை. அவனைப் பொருத்த வரை எதையும் வெளிப்படையாகவும், தயக்கமில்லாமலும் கேட்டிருக்கிறான். நாம் இருவரும் ஏன் அப்படிப் பேசிக் கொள்ள வேண்டும்?என்று கேட்டதும் சரி இதில் உனக்கு என்ன அக்கறை?என்று கேட்டதும் சரி பளார்கேள்விகள் தான். ஆனால் எதிரி அவனைக் கச்சிதமாக அறிந்து எல்லாவற்றிற்கும் தயாராகத் தான் வந்திருக்கிறான்....

“நீங்கள் அழியப் போகிற உயிரினங்கள் என்று சில விலங்குகளை காப்பாற்ற சகல முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே. ஏன்? மனிதன் எதற்கு ஏதோ சில விலங்குகள் அழிவதற்கு வருத்தப்பட வேண்டும்? ஏன் அவற்றைக் காப்பாற்றவும் பெருக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டும்?

க்ரிஷ் ஒரு கணம் யோசித்து விட்டுக் கேட்டான். “சரி, இதில் என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? நான் என்ன செய்ய முடியும்?

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும் அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது...

க்ரிஷுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பல சமயங்களில் உண்மைக்கு மறுமொழி மௌனமாகவே அல்லவா இருக்கிறது.

வேற்றுக்கிரகவாசி கேட்டான். “உன் உள்ளுணர்வில் புக இப்போதாவது என்னை அனுமதிக்கிறாயா?

உடனே ஆமாம், இல்லை என்று சொல்வதில் எப்போதுமே சிக்கல் உண்டு என்பதால் க்ரிஷ் எச்சரிக்கையோடு சொன்னான். “எனக்கு யோசிக்க சிறிது காலம் வேண்டும்

“யோசி. அடுத்த அமாவாசைக்கு முன் ஒரு முடிவுக்கு வா. நீ சரி என்றால் நான் சில மாதங்கள் இந்தப் பூமியில் இருப்பேன். மாட்டேன் என்றால் அடுத்த அமாவாசை அன்றே போய் விடுவேன்.... இனி திரும்ப மாட்டேன்

“ஏன்?

“அழியப்போகும் பூமியில் அதிக காலம் தங்குவதில் அர்த்தமில்லை..... உனக்கு சம்மதம் என்றால் அடுத்த அமாவாசை அன்று இந்த மலைக்கே திரும்பி வா? இல்லை என்றால் வீட்டில் இருந்தே உன் லாப்டாப்பில் தெரிவித்தால் போதும்....  நான் கிளம்பட்டுமா?

அடுத்த கணம் தீப்பந்தமாய் ஒரு வினாடி தோன்றிய ஒளி மறுகணம் மறைந்து கரிய பெரிய பறவை பறக்க ஆரம்பித்தது தெரிந்தது. அந்தக் கரிய பறவை போவதையே பிரமிப்போடு பார்த்து நின்று கொண்டிருந்த க்ரிஷ் சில வினாடிகளில் அது இருட்டில் கரைந்து காணாமல் போன பிறகு களைப்புடன் கீழே சாய்ந்தான். எல்லாமே கனவு போலவும், கற்பனை போலவும் இருந்தது.

தொடர்ந்த நாட்களிலும் க்ரிஷால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. முதலில் அவனுக்கு இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதையே கூட ஜீரணிப்பதில் சிறிது சிரமம் இருந்தது. அவன் ஏலியன்ஸ் பற்றி இது வரை கிடைத்திருக்கும் ஆதாரங்களைத் தேடித் தேடிப் படித்தான். எதுவுமே அவன் அனுபவம் போல் இல்லை. வேற்றுக்கிரகவாசி சொன்னதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அவன் நினைவில் பதிந்திருந்தது. திரும்பத் திரும்ப யோசித்தான். முன்பின் தெரிந்தராத அந்த சக்தி ஏதோ ஒரு சாஃப்ட்வேரைஅவனுக்குள் புகுத்த அவன் அனுமதிக்க வேண்டுமா? அது அதோடு நிற்குமா? அதன் பின் அவனுக்கு முழு சுதந்திரம் இருக்குமா? முக்கியமாய் அவன் அவனாக இருக்க முடியுமா? எதற்கும் உத்திரவாதமில்லை.

அம்மாவும், அப்பாவும் அடிக்கடி சொல்லும் அவனுக்கு ‘கண்டம்இருக்கும் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கண்டத்தைக் கொண்டு வருவதே அந்த வேற்றுக்கிரகவாசியாக இருக்கலாமோ?  

இந்த எண்ணத்தில் விடாப்பிடியாக நின்று யோசித்து முடிவெடுத்திருந்தால் கண்டிப்பாக க்ரிஷ் ஆபத்திலிருந்து தப்பித்திருப்பான் என்று மாஸ்டர் நினைத்தார். ஆனால் விதி வலியதாக இருந்ததால் க்ரிஷ் வேறு பலவும் யோசித்தான்.

புதிய அனுபவங்கள், புதிய சாதனைகள் காணாத வாழ்க்கையில் அர்த்தம் என்ன இருக்கிறது? எல்லைகளை நீட்டிக் கொண்டு போகாமல் ஒவ்வொரு கணமும் உண்மையாக வாழாமல் பயந்து பயந்து சாவதிலும், நேற்றைய சாதனைகளிலேயே திருப்தி அடைந்து தேக்கநிலை வாழ்க்கை வாழ்வதிலும் என்ன பெருமை இருக்கிறது.  ஒரு ஏலியனின் தொடர்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அதன் மூலம் புதிய பரிமாணங்களைக் காணும் வாய்ப்பு யாருக்கு வாய்க்கும். இதை எல்லாம் விட்டு விட்டு பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடிவெடுத்தால் வாழ்க்கையில் பாதுகாப்பு இருக்கலாம், நிறைவு இருக்குமா? ஒரு பொன்னான வாய்ப்பை இழந்து விட்டோமே என்ற ஒரு ஏக்கம் இருந்து கொண்டே அல்லவா இருக்கும்? பரமேசுவரப் பணிக்கர் கணித்தது போல அவனுக்கு மரணமே வந்தால் தான் என்ன?  சாகச முயற்சியில் செத்தால் தான் என்ன? என்றேனும் ஒரு நாள் எல்லோரும் சாக வேண்டியவர்களே அல்லவா? கடைசியில் பிறந்ததற்கு புதிய பரிமாணங்களையும், புதிய அனுபவங்களையும் பெற்றுவிட்டு மடிவதே உத்தமம் என்று தோன்றியது.

இந்த எண்ணம் வலுப்பட்ட போது அவன் குடும்பமும், ஹரிணியும் தான்  அதற்கு எதிரணியில் அவன் மனதில் இருந்தார்கள். அவர்களுடைய துக்கம் தான் அவனை நிறைய யோசிக்க வைத்தது. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் உதய் இருக்கிறான். துக்கப்படும் நாட்கள் அதிகமானாலும் ஒருநாள் அவர்கள் அவன் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறுவார்கள். உதய்க்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்தால் பேரக்குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பிக்கும் போது அவர்கள் மனக்காயம் கண்டிப்பாக ஆறும். உதயும் தன் குடும்பம், குழந்தைகள் என்று ஆனவுடன் கண்டிப்பாய் தம்பியை நினைப்பது குறைந்து போகும். ஆனால் ஹரிணி? அவன் அவளை அறிவான். அவள் கண்டிப்பாக இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டாள். அவன் மனதில் அவளைத் தவிர வேறொருத்திக்கு எப்படி இடம் தர முடியாதோ அதே போல் அவளாலும் அவனைத் தவிர வேறொருவனுக்கு இடம் தர முடியாது.  அவன் அறிவான். அவள் வாழ்க்கையில் நிரந்தர வெறுமை தங்குவதை மட்டும் தான் அவனால் சகிக்க முடியவில்லை.

பல ஆழமான சிந்தனைகளுக்குப் பின் தான் அவள் மனதில் தன் இடத்தை வலுவாக்காமல், அழிக்கும் முடிவை எடுத்தான். அவள் அவன் வீட்டுக்கு வந்த நாளில் அலட்சியப்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது போல் காட்டிக் கொண்டான். அவள் அவமானத்தை உணர்ந்தவளாய் அவன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது அவன் இதயத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எதிலேயோ மூழ்கி இருப்பதாய் காட்டிக் கொள்வதற்கு அவன் படாதபாடு பட்டான். பதினைந்து நிமிட அலட்சியத்திலேயே அவள் போக வேண்டும் என்று எதிர்பார்த்தான். பாவம் அவள் மிக நல்லவள். அவன் மேல் இருந்த காதல் காரணமாக மேலும் தங்கினாள். ஒவ்வொரு வினாடியும் அவள் உணர்ந்த வேதனைக்குப் பத்து மடங்கு அதிக வேதனையை அவன் அனுபவித்தான்.  

ப்ளீஸ் ஹரிணி போயிடு....என்று ஒரு மணி நேரம் கழிந்த பின் க்ரிஷ் மனதினுள் கதற ஆரம்பித்தான். ஆனால் அவள் அதற்கு மேலும் ஒரு மணி நேரம்- அறுபது நிமிடம்- 3600 வினாடிகள் தங்கி அவன் இதயத்தைப் பிழிந்து விட்டுத் தான் போனாள். அவள் போனவுடன் கதவைச் சாத்திக் கொண்டு அவன் நாள் முழுவதும் அழுதான்.

காதல், லௌகீக வாழ்க்கை என்று எதிலும் சிக்காமல் வாழ்ந்த மாஸ்டருக்கே அவன் அழுத காட்சியை மறு ஒளிபரப்பில் பார்த்த போது மனம் உருகியது. காதலைக்கூடத் தியாகம் செய்து எதிரியிடம் ஏமாந்து விட்டாயே க்ரிஷ்!

(தொடரும்)

என்.கணேசன் 

6 comments:

 1. Interesting, Intelligent and Impressive.

  ReplyDelete
 2. சுஜாதாJuly 13, 2017 at 6:13 PM

  சூப்பரா பரபரப்பா போகுது இந்த வித்தியாசமான நாவல். க்ரிஷ் மனசுக்குள்ள புகுந்து பார்த்த மாதிரி இருக்கு. அவனை எதிரி கிட்ட ஏமாற விட்டுடாதீங்க சார்.

  ReplyDelete
 3. Super sir ....! Enakku intha part romba pidithirukirathu..... Romba, arumaiya ezhuthiyirukinga.....!

  ReplyDelete
 4. நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது.அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும்அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது.
  FINE WORDS

  ReplyDelete