சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 27, 2017

இருவேறு உலகம் – 40

புதுடெல்லி உயரதிகாரிக்கு அவன் நடவடிக்கைகளை யாரோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை இப்போது ஏனோ அடிக்கடி வருகிறது. அதுவும் வெளியிலிருந்து அல்ல. அவனுக்கு உள்ளேயிருந்து அவனைக் கண்காணிப்பது போல் தோன்றுகிறது.  அந்தப் பிரமை அந்த சர்ச்சின் பாவமன்னிப்புக் கூண்டில் இருந்து வெளியேறியதிலிருந்தே அவனுக்குள் இருந்து வருகிறது. அவன் அந்தப் பாவமன்னிப்புக் கூண்டில் சற்று அசந்திருந்த நேரத்தில் அவனுக்குள் யாரோ ஒரு கண்காணிப்புக் கருவியை வைத்து விட்டுப் போனது போல் அவன் அடிக்கடி உணர்கிறான். அந்தப் பிரமை பைத்தியக்காரத்தனமானது என்பதும், அவனுள் எந்தக் கண்காணிப்புக் கருவியையும் யாரும் அந்தக் குறுகிய காலத்தில் வைத்து விட்டிருக்க முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனாலும் அந்த உணர்வை அவனால் உதற முடியவில்லை. என்னமோ நடக்கிறது.... குழப்பமாக இருக்கிறது....


ங்கரமணியைப் பலரும் சகுனி என்றழைத்ததில் இம்மியளவும் தவறில்லை என்று நம்பியவர்களில் செந்தில்நாதனும் ஒருவர்.  அவர் அந்த முதியவரை நீண்ட காலமாய் கவனித்து வருகிறார். லாபம் கிடைக்கும் என்றால் எந்தத் தவறையும் துணிந்து செய்யக்கூடியவர் அவர். தனக்கு லாபம் இல்லை என்றாலும் கூட அடுத்தவருக்கு நஷ்டமோ, கஷ்டமோ வரும் என்றாலும் அந்தத் தவறை சந்தோஷமாகச் செய்து மற்றவர் படும் அவஸ்தையை ரசிப்பவர் அவர். எந்தக் கெட்டதிலும் அவர் பங்கெடுக்கும் சாத்தியம் உண்டு என்றால் கண்டிப்பாகப் பங்கெடுக்கும் ரகம் அந்த ஆள். அதனால் அந்தத் தொழிற்சாலையின் தொழிலாளி இரவில் பார்த்த வெள்ளை முடி ஆள் சகுனியாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது. க்ரிஷ் இருப்பிடம் கண்டுபிடிக்க ஒரு ஆளை க்ரிஷ் வீட்டுக்கே கூட்டி வந்ததும் கிழவரின் மருமகன் மந்திரி மாணிக்கம் தான். அப்படிக்கூட்டி வந்த ஆளோ இன்னொரு இரவில் அந்த மலையடிவாரத்திற்கு வந்து போலீஸ் ஜீப்பைப் பார்த்து விட்டு வேகமாகப் போன ஆளாக இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது.  எல்லாம் பார்க்கையில் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் போலத் தெரிகிறதே என்று யோசித்த செந்தில்நாதன் மறுநாள் காலையிலேயே சகுனியை நேரில் பார்த்து விட்டு வருவது என்று முடிவு செய்தார்.


தாசிவ நம்பூதிரி இரண்டு ஜாதகங்களிலும் மூழ்கிப் போயிருந்தார். எத்தனையோ விசேஷத் தன்மைகள் இரண்டு ஜாதகங்களிலும் பொதுவாக இருந்தன. கோட்டு சூட்டுப் போட்டவன் விசேஷ ஜாதகங்கள் என்று சொன்னதில் தவறே இல்லை. ஒரு கற்றைக் காகிதங்களில் ஏதோ கணக்குகள் போட்டுக் கொண்டே போன சதாசிவ நம்பூதிரி கடிகாரத்தின் ஓட்டத்தைக் கவனிக்கவில்லை. எப்போதும் இரவு ஒன்பதரை மணிக்கு உறங்கப் போகும் அவர் இப்போது நள்ளிரவு இரண்டு மணியும் தாண்டி விட்டிருக்கிறது என்பதை அறியவில்லை.

ஒருவழியாக அவருடைய ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தை எட்டிய பின்னர் தான் கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரவு இரண்டரை. ‘இவ்வளவு நேரமாகி விட்டதா?என்று ஆச்சரியப்பட்டவர் மறுபடி இரண்டு ஜாதகங்களில் இருந்த விசேஷ அம்சங்களில் இருந்த ஒற்றுமைகளைப் பார்க்க ஆரம்பித்தார். பேரறிவு, மிக நல்ல மனம்.... நடுத்தர வயதான ஜாதகர் இப்போது அபூர்வ சக்திகள் பல அடைந்திருப்பார்....  இளைஞனின் ஜாதகமோ எதையும் ஆழம் வரை ஊடுருவும் சக்தி படைத்தவன் என்று சொல்கிறது.... அவனுக்கு இப்போது கண்டம்..... பிழைக்கலாம்..... இறக்கவும் செய்யலாம்...... அந்த நடுத்தர வயதான ஜாதகருக்கும் இப்போது கண்டம்.... அவருக்கும் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது..... இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிந்தது. இந்த இரண்டு ஜாதகங்களையும் கொண்டு வந்தவனின் முதலாளியும் ஜோதிடத்தில் விற்பன்னனாம். அவனுக்கும் இந்த இரண்டு ஜாதகர்களுக்கும் என்ன சம்பந்தம்.... இரண்டு ஜாதகங்களில் ஒன்று அந்த முதலாளியுடையதாகக் கூட இருக்குமோ....? இல்லை அந்த முதலாளிக்கு வேண்டப்பட்டவர்களுடையதாய் இருக்குமோ? எதற்காக இந்த இரண்டு ஜாதகங்களை என்னிடமே கொண்டு வந்தான்?என்று தனக்குள் கேட்டுக் கொண்டபடி கண்களை மூடியவர் உட்கார்ந்தபடியே உறங்கிப் போனார்.


புதுடெல்லி விமானநிலையத்தில் திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காக அந்த மர்ம மனிதன் காத்திருந்தான். நாளைய விமானத்தில் போனாலும் கூட போதும் என்றாலும் ஒரு நாள் முன்பாகவே அவன் திருவனந்தபுரம் செல்கிறான். சதாசிவ நம்பூதிரியைச் சந்தித்துப் பேசும் முன் சில தயார் வேலைகள் அவன் செய்ய வேண்டியிருக்கிறது.  அந்த மனிதரின் அலைகளை அவன் படிக்க வேண்டியிருக்கிறது....

அவன் உண்மையான தோற்றத்தைக் கடந்த சில ஆண்டுகளில் பார்த்தவர்கள் யாருமில்லை. மனோகர் கூட அவருடைய ஓரிரண்டு அவதாரம் மட்டுமே அறிந்திருக்கிறான். மனோகர் நம்பத்தகுந்தவன் தான் என்றாலும் கூட அவனுக்கே அதிகம் தெரிய வேண்டியதில்லை என்று மர்ம மனிதன் எச்சரிக்கையாக இருந்தான். தினம் ஒரு வேஷம், தினம் ஒரு அவதாரம் என்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனிடம் இருந்த ஒரு தனித்தன்மை என்ன என்றால் எந்த ஒரு வேஷம் போடும் போதும் அவன் உண்மைச்சாயலோ, வேறு வேஷங்களின் சாயலோ சிறிதும் எட்டிப் பார்க்காது. அந்த வேஷமாகவே தேவையான காலம் வரை வாழ்ந்து அடுத்த கணம் பச்சோந்தியாக வேறு ஒரு வேஷத்திற்குப் போய் விடுவான். பெரும் சக்தி படைத்தவர்கள் கூட அவன் உண்மையில் யார் என்று கண்டுபிடித்ததில்லை. கண்டுபிடித்தவர்கள் உயிரோடிருந்ததில்லை. சில நாட்களுக்கு முன் இறந்து போன ஆன்மீக சக்தி ரகசிய இயக்கத்தின் தலைமைக்குரு அதற்கு சமீபத்திய உதாரணம்....

அவரை நினைக்கையில் ஒரு பக்கம் கோபமாகவும் இருந்தது. ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருந்தது. அந்த முட்டாள் குரு அவனைத் தன் வாழ்வின் கடைசி மணி நேரங்களில் தான் கண்டு பிடித்தார். அந்த மனிதரின் ஒரு குறிப்பிட்ட தவம் அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது. அவர் கண்டுபிடித்து விட்டார் என்பது தெரிந்ததுமே அவன் மின்னல் வேகத்தில் இயங்கி அவர் கதையை முடித்து விட்டான். வாழ்வின் கடைசி நிமிடங்களில் அவர் முயற்சியெல்லாம் தன் பிரிய சிஷ்யனுக்கு எச்சரிக்கை விடுப்பதிலேயே இருந்திருக்கிறது.... ஆனால் அவர் பயன்படுத்திய உபாயம் மட்டும் சிறிய வாண்டுப்பயல்களின் புத்தியாக இருந்தது. அவரை முடிப்பதற்கு அவர் குடிசைக்குள் அவன் நுழையும் முன் அவர் ஒரு காகிதத்தைப் பேனாவில் சுற்றி வெளியே வீசியிருக்கிறார். தன்னை இவ்வளவு குறைவாக அவர் மதிப்பிட்டதில் அவனுக்குச் சிறிது கோபம் தான். அவரை முடித்து விட்டு வெளியே வந்து அவன் அந்தப் பேனாவைக் கண்டுபிடித்து சுருட்டியிருந்த காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்து விட்டு தான் அதே நிலையில் கீழே வைத்து விட்டு வந்தான்.

இப்போது நினைத்தாலும் அவனுக்குச் சிரிப்பாய் வந்தது.  ‘பிரிய சிஷ்யனே, எதிரி உள்ளே ஊடுருவி விட்டான்...என்கிற வாக்கியத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..... அதனால் தான் பிரிய சிஷ்யன் எப்படி எடுத்துக் கொள்கிறான் என்று பார்ப்போம் என்று கிழவரின் வாண்டுப்பயல் விளையாட்டை கலைக்காமல் அப்படியே விட்டு விட்டு வந்தான்....

திருவனந்தபுரம் விமானம் வந்து சேர்ந்த தகவலை விமான நிலையத்தில் அறிவித்தார்கள். நினைவுகள் கலைந்து மர்ம மனிதன் மெல்ல எழுந்தான்.


றியாத எண்ணிலிருந்து வந்த அழைப்பை சந்தேகக் கண்ணோடு சங்கரமணி பார்த்தார். அந்த வாடகைக் கொலையாளியின் செல்போனில் இருந்து அழைப்புகள் வர ஆரம்பித்ததில் இருந்து எல்லா அழைப்புகளும் மனதில் லேசாகக் கிலியைக் கிளப்புகின்றன. சில நாட்களாய் அந்த பாழாய் போனவன் செல்போனில் இருந்து அழைப்பு இல்லை..... ஒருவேளை அதே ஆள் வேறு போனில் இருந்து அழைக்கிறானோ? தன் பயத்திற்காகத் தன்னையே கடிந்து கொண்டவர்  செல்போனை எடுத்துப் பேசினார். “ஹலோ

“ஹலோ சார் நான் போலீஸ் டிபார்ட்மெண்டில் இருந்து செந்தில்நாதன் பேசறேன். ஒரு முக்கிய விஷயமா உங்களைப் பார்த்துப் பேசணுமே

சங்கரமணிக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இந்தச் சனியன் என்வரைக்கும் எப்படி வந்தான்?

நாக்கு நகர மறுத்தாலும் பிரம்மப்பிரயத்தனம் செய்து நகர்த்தினார். “ரொம்ப பிசியாய் இருக்கேனே.... என்ன விஷயம்?

“வந்து நேரடியா சொல்றேனே சார். உங்க வீட்டுக்கு வெளியே தான் இருக்கிறேன்....

அடப்பாவி வீடு வரைக்கும் வந்துட்டானே!என்று மனதில் படபடத்த சங்கரமணி “என் மருமகன், மந்திரி மாணிக்கம், என்னை உடனடியா வரச்சொல்லியிருக்கான். நான் கிளம்பிகிட்டிருக்கேன்.....தான் மந்திரி மாணிக்கத்தின் மாமன், அவன் அவசரமாய்க் கூப்பிட்டு போய்க்கொண்டிருக்கிறேன் என்று செந்தில்நாதனுக்குப் புரிய வைப்பது வீண் முயற்சி என்று தெரிந்தும் முயற்சி செய்யாமல் இருக்க அவரால் முடியவில்லை.

ஆனால் செந்தில்நாதன் அசராமல் சொன்னார். “ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மேல எடுத்துக்க மாட்டேன் சார்....

இந்த ஆள் கிட்ட இருந்து இப்ப தப்பிச்சாலும் சாயங்காலமோ, ராத்திரியோ, நாளைக்கு காலைலயோ வந்து நிப்பான். பேசி அனுப்பிச்சுடறது உத்தமம்என்ற முடிவுக்கு வந்த சங்கரமணி “சரி வாங்களேன்என்றார்.

செந்தில்நாதன் உள்ளே வந்தார். வழக்கமாய் அவரைச் சந்திக்கும் அதிகாரிகள் கூழைக்கும்பிடு போடுவது வழக்கம். அதற்கு காவல்துறை அதிகாரிகளும் விலக்கல்ல. ஆனால் செந்தில்நாதன் வழக்கமாய் ஒருவர் காணும் நபர் அல்ல. அவர் சங்கரமணியைப் பார்த்து வணக்கம் செலுத்தாததுடன், அனுமதிக்காகக் காத்திருக்காமல் தானே எதிர் நாற்காலியில் அமர்ந்தார்.

சங்கரமணியைக் கூர்மையாய் பார்த்தபடியே சொன்னார். “சார். மந்திரி கமலக்கண்ணன் மகன் க்ரிஷ் காணாமல் போன விவரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நான் தான் அது சம்பந்தமான விசாரணை செஞ்சிட்டிருக்கேன். அவர் காணாமல் போன நாள் நடுராத்திரில அந்த மலைக்குப் போற பாதைக்கு முன்னால் உங்களைப் பார்த்ததா ஒருத்தர் சொன்னார்..... 

(தொடரும்)

                                                                                                                    
 என்.கணேசன்   
                                                                                                                

5 comments:

  1. Day by day, novel by novel, your writing style is becoming refined, matured and dynamic sir. Simply amazing style of writing.

    ReplyDelete
  2. சுஜாதாJuly 27, 2017 at 6:22 PM

    எல்லார் மனசுலயும் புகுந்து பார்க்கிற மாதிரி ரொம்ப நேச்சுரலா எழுதுகிறீர்கள் சார். எல்லாரையும் நிஜமனுஷங்களாக பார்க்கிற ஃபீல் வருது. வியாழக்கிழமைன்னாலே எனக்கு சாயங்காலம் அஞ்சரை மணிக்கு மேல இதைபடிக்காமல் எந்த வேலையுமே ஓடறது இல்லை. ப்ராமிஸ்.

    ReplyDelete
  3. Ethiri....Marma manithan thana?
    Illa,Alian-ah?
    Antha,..Jathakam...marma manithan tha?
    Illa...Master tha...?
    ore...twist-ah povuthu.!

    ReplyDelete
  4. மாஸ்டர் மற்றும் க்ரிஷ் ஜாதகம் தான் சதாசிவ நம்பூதரி பார்க்கிறார். மர்ம மனிதன் (எதிரி) யார்?

    ReplyDelete