சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 3, 2017

வாழ்க்கையின் துன்பங்களில் இருந்து மீள…

கீதை காட்டும் பாதை 47

கவானின் விஸ்வரூப தரிசனம் முழுவதுமாகக் கண்ட பின் உடல் நடுங்கி குரல் தழுதழுக்க அர்ஜுனன் கூறுகிறான்.

நீ ஸத் அஸத் என்பவைகளைக் காட்டிலும் உயர்ந்ததான அழிவில்லாத பரம்பொருள். அறிந்தவன். அறியத்தகுந்தவன். எண்ணிலா வடிவம் கொண்டவன். இந்த உலகெங்கும் நீ பரவியிருக்கிறாய். மறுபடியும் மறுபடியும் உன்னை நமஸ்கரிக்கிறேன்.

உன்னை முன்புறம் வணங்குகிறேன். உன்னைப் பின்புறம் வணங்குகிறேன். எல்லாம் ஆனவனே! உன்னை எல்லாப் புறமும் வணங்குகிறேன். நீ எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய். ஆகவே எல்லாமாக இருக்கிறாய்.

உன்னுடைய மகிமை அறியாமல் தவறாகவோ, அன்பினாலோ நான் உன்னைத் தோழன் என்றெண்ணி அடக்கமில்லாமல் அழைத்திருக்கிறேன். பரிகசித்து அவமதித்திருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து விட வேண்டும். அளவிடமுடியாதவனான உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

என் உடல் தரை மீது படும்படி நான் சாஷ்டாங்கமாக உன்னை வணங்கி, ஈசனும் துதிக்கத்தக்கவனுமான உன்னை அருள்புரிய வேண்டுமெனக் கோருகின்றேன். மகனுக்குத் தந்தை போலவும், நண்பனுக்கு நண்பன் போலவும், காதலனுக்குக் காதலி போலவும் இருந்து பிழையைப் பொருத்தருள வேண்டும்.

உன் உருவத்தைக் கண்டு என் மனம் பயத்தால் நடுங்குகிறது. இதற்குமுன் இருந்த அந்த பழைய உருவத்தையே எனக்குக் காட்டியருள வேண்டும்.”

சாதாரண புறக்கண்ணால் நாம் காண்பதே பல்லாயிரம். தூரதிருஷ்டிக் கண்ணாடி கிடைத்து அதன் மூலம் பார்த்தால் பல லட்சம் பொருள்கள், உயிர்கள் பார்க்கலாம். அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்குத் தலைசுற்றி விடும். திவ்ய திருஷ்டியை அர்ஜுனனுக்கு அளித்ததன் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் பலகோடி மடங்கு நுட்பமான மைக்ரோஸ்கோப் திருஷ்டியை அளித்து விட்டார். எண்ணிலடங்கா கோடி கோடி பொருள்களும், உயிர்களும் தெரியும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பார்த்த பார்த்தனுக்கு உடலும், மனமும் நடுங்கியதில் ஆச்சரியமில்லை.

ஸ்ரீகிருஷ்ணர் பிரபஞ்சத்தையே தனக்குள் அடக்கி இருக்கும் பகவான், ஆதியந்தமில்லா பரம்பொருள் என்றெல்லாம் புரிந்த போது பிரம்மாண்டத்தோடு இன்னொரு உண்மையும் அர்ஜுனனுக்கு உறைக்கிறது. தோழனாய், உறவினனாய் நினைத்து நாம் இவனை எப்படியெல்லாம் நடத்தி இருக்கிறோம் என்றும் எண்ணிப்பார்க்கிறான். மன்னிப்பு கோரி வணங்குகிறான். தந்தையைப் போல், நண்பனைப் போல், காதலியைப் போல் மன்னித்தருள வேண்டுகிறான். பாசத்தாலும், நட்பாலும், காதலாலும் அல்லவா மன்னித்தல் மனதார முழுமையாக சாத்தியமாகிறது.

மன்னிப்பு கேட்டவன் உடனே இந்த விஸ்வரூப தரிசனம் போதும், பயமாக இருக்கிறது என்கிறான். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அர்ஜுனன் ஆரம்பத்திலிருந்தே பயம் பற்றிப் பேசியவனல்ல. உறவுகளின் பாசம், குருபக்தி, தவறிழைக்கிறோமோ என்ற நியாய உணர்வு எல்லாம் உந்த யுத்தம் வேண்டாம் என்றானே ஒழிய பயத்தால் எதுவும் சொல்லவில்லை. உண்மையில் பயம் என்றால் என்ன என்பதே அறிந்திராத வீரனவன். அப்படிப்பட்டவனை நடுங்க வைத்திருக்கிறது விஸ்வரூப தரிசனம். ஏன்?

பனிமலை தூரத்தில் இருந்தோ, அருகில் இருந்தோ பார்ப்பதற்கு மிக ரம்யமாக இருக்கும். அதே போல் சமுத்திரமும் கரையிலிருந்து பார்க்க மிக அழகாய் இருக்கும். ஆனால் ஒரு கணம் பனிக்குவியலில் சிக்கிக் கொள்வது போலவும், நடுக்கடலில் மாட்டிக் கொள்வது போலவும் நினைத்துப் பாருங்கள். அது மரண அவஸ்தையே அல்லவா? பாதுகாப்பாய் சௌகரியமான இடத்தில் இருந்து கொண்டு பார்த்து ரசிக்க மிகவும் அழகாய் இருக்கிற இவற்றிற்குள் மிக நெருங்கிப் போய் சிக்கிக் கொண்ட அவஸ்தையாகவே விஸ்வரூப தரிசனம் கண்ட அர்ஜுனன் உணர்கிறான்

விஸ்வரூப தரிசனத்தில் அர்ஜுனன் அடைந்த இன்னொரு பிரச்னை ஏக காலத்தில் உயிர்களின் ஆரம்பத்திலிருந்து அழிவு வரை காண நேர்ந்தது. ஒரு சுட்டிக்குழந்தையின் அழகை ரசிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த அழகை ரசிக்கும் போதே அது முதுமை அடைந்து மரணப்படுக்கையில் போராடுவதையும் பார்க்க நேர்ந்தால் முந்தைய அழகை முழுமையாக ரசிக்க முடியுமா? இப்படி ஒவ்வொன்றையுமே ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஏக காலத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்ஆரம்பம், வளர்ச்சி, முடிவு என்பது உயிர்களைப் பொருத்த வரை தவிர்க்க முடியாத நிஜம். ஆனால் ஒவ்வொரு கட்டத்தின் போதும் மீதமுள்ளதை மறைத்து மாயை வாழ்க்கையை ஆவலோடும் எதிர்பார்ப்போடும் வாழத்தகுந்ததாய் மாற்றிக் கொடுக்கிறது. மாயையின் திரை விலகி உண்மை விஸ்வரூபம் எடுத்தாலோ எல்லாமே பயங்கரமாய் தான் இருக்கிறது. அர்ஜுனன் போன்ற பயமறியாத மாவீரனே பயப்படும் அளவு யதார்த்தம் இருக்கும் போது நம்மைப் பற்றி என்ன சொல்ல!

அர்ஜுனனின் வேண்டுகோளை ஏற்று பேரழகானதும், சாந்தமானதும் ஆன தன் பழைய வடிவத்துக்கே மீண்டும் வந்த ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

மானுட உலகில் உன்னைத் தவிர மற்றவர் என்னை இந்த உருவில் என்னைக் கண்டதில்லை. நீ என்னைக் கண்டது போல் வேதம் ஓதியோ, தவத்தாலோ, தானம் செய்தோ யாரும் என்னைக் காண முடியாது.

எல்லாம் சரி, இந்த கோரமானதும், கசப்பானதுமான நிஜங்கள் கொண்ட வாழ்க்கையை மாயை என்ற அழகான திரையைப் போட்டு என்ன தான் மறைத்து வாழ்ந்தால் கூட அவ்வப்போது நிஜங்கள் எட்டிப்பார்த்து நம்மை வதைக்கின்றனவே என்ன செய்வது? இதிலிருந்து தப்பிக்கத் தான் வழி என்ன?

அதற்கான பதிலை பதினோராவது அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

பாண்டவனே! எவனொருவன் எனக்காகக் கர்மங்களைச் செய்து, என்னையே உயர்நிலையாகக் கொண்டு, எனக்கே பக்தனாகி, பற்றுதலை நீங்கி எல்லா உயிர்களிடமும் விரோதமின்றி வழிபடுகிறானோ அந்த பக்தன் என்னை அடைகிறான்.”

ஆதிசங்கரர் தன் பாஷ்யத்தில் இந்த சுலோகத்தை கீதையின் சர்வார்த்த சாரம் (முழுமையான சாரம்) என்று கூறுகிறார்.

ஒவ்வொரு கர்மத்தையும் இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த கர்மம் என்ற பாவனையோடு செய்து, இறைவனே நாம் அடையத்தக்க உயர்நிலை என்று பக்தனாக வாழ்ந்து, பற்றுதலை நீக்கி, யாரிடமும் எந்த விரோதமும் பாராட்டாமல் அன்புமயமாக வாழ்கின்றவன் இறைவனையே அடைகிறான். இந்த போதனையில் எங்குமே தனிமனிதஈகோவுக்கு வேலை இல்லை. தனிமனித விருப்பு வெறுப்புகள் இல்லை. ஒரு துளி சமுத்திரத்தில் கலக்கும் போது அந்தத் துளியின் தனித்துவ பலவீனங்கள் இல்லை. வெறும் துளி என்ற நிலை போய் அது சமுத்திரமாகவே மாறி விடுகிறது. எப்படி ஒரு துளி சமுத்திரமாகும் போது அதன் பழைய தனித்துவ பிரச்சினைகளில் இருந்தும், குறைபாடுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்கிறதோ மனிதனும் இறைவனையே அடையும் போது அவனது துன்பங்களும் ஒரேயடியாய் முடிந்து போகிறது.

கீதையின் பதினோறாம் அத்தியாயம் முடிவுற்றது. ஆனால் அதன் பாதை நீளும்….

-   என்.கணேசன்

1 comment:

  1. Explaination..... Fantastic....sir....!
    Intha...kalathuku,,,, thakuntha mathiri... Puriyum-padi...sonnathu...super

    ReplyDelete