சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 25, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 113


மைத்ரேயனிடம் உண்மையாகவே பிரத்தியேக சக்திகள் இருக்கிறதா சந்தேகப்பட்ட தங்கள் இயக்க உள்வட்ட ஆட்களைப் புன்னகையோடு பார்த்த மாரா சொன்னான். “மனிதனின் உள்ளே இருப்பது வெளியே வராமல் போகாது. மைத்ரேயன் என்ன தான் ரகசியமான, தன் உள்ளிருப்பை வெளிப்படுத்தாதவனாக இருந்தால் கூட சில விஷயங்கள் நமக்குத் தெரிந்திருக்கின்றன. அவனால்  மற்றவர் மனதில் இருப்பதைப் படிக்க முடிகிறது. வலிமையான மயக்க மருந்து கூட அவனை மயக்கமடையச் செய்யவில்லை. அவனாக இது வரை எதையும் எதிர்த்ததில்லை. தன்னைக் கடத்துவதைக்கூட அவன் தடுக்கவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டானா, இல்லை அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று அவனே விரும்பி ஒத்துழைத்தானா என்பது நமக்குத் தெரியவில்லை....."

"பெரும் சக்தி வாய்ந்தவர்களாக நாம் நம்மைச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அவன் நம்மை ஒரு பொருட்டாக என்றுமே நினைத்ததேயில்லை. நம் ஆட்கள் அருகே வரும் போது அவன் நம் ஆட்களை உணர்ந்திருக்கிறான். ஆனால் பொருட்படுத்தியதேயில்லை. சம்யே மடாலயத்தில் இருந்து அவன் அலைகளைப் பிடித்து நான் அவன் இருப்பிடத்தையே காணமுடிந்த போதும் அதிரவில்லை. நான் என் சக்திகளை வெளிப்படுத்திய போது சலிப்புடன் தான் முகத்தைத் திருப்பிக் கொண்டான். என் இத்தனை வருட வாழ்க்கையில் நான் நிஜமாகவே அவமானத்தை உணர்ந்த கணம் அது.... என் சக்திகள் அவனுக்கு சலிப்பைத் தர வேண்டுமென்றால், அது ஒரு பொருட்டே இல்லையென்றால், அவனிடம் அதை விடப் பெரியதாக, பிரம்மாண்டமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்றல்லவா அர்த்தம். உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா, இல்லை அது நடிப்பா, இல்லை அடுத்தவரின் உயரத்தையே காண மறுக்கும் மனநிலையா என்று தான் கண்டுபிடிக்க அவன் மனதைப் படிக்க முயன்றேன். அங்கே எண்ணங்களே இல்லை. சூனியம் தான் தெரிந்தது....”

விஷயத்தோடு விஷயமாகச் சொல்லிக் கொண்டு போனானேயொழிய மாராவின் முகத்திலோ, குரலிலோ உணர்ச்சிகளின் தாக்கம் இருக்கவில்லை. அதை சிலாகித்து சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மாரா தொடர்ந்தான். “கற்க வேண்டும் என்று நினைப்பவைகளை அவன் கற்க முடிந்த வேகம் அபாரம். சில நாட்களிலேயே தமிழ் மொழியில் பேச நல்ல தேர்ச்சி பெற்று விட்டான். அவனுக்கு அந்த மொழி முதலிலேயே தெரியும் என்று அந்த மொழிக்காரனான தேவ் நினைக்கும் அளவு முன்னேறி இருக்கிறான். தியானத்தில் அவன் அடைந்திருக்கும் தேர்ச்சி அற்புதமானது. அவன் தியானத்தில் இருக்கும் போது அவன் அருகே இருப்பவர்களும் அதை உணர்கிறார்கள். ஒரு கடத்தல்காரன் அப்படி ஒரு அனுபவம் மறுபடி வாய்க்க பத்து லட்சம் தருகிறேன் என்கிறான், அருகில் இருந்த ஒரு குடிகார ஒற்றன் விசித்து விசித்து அழுகிறான் என்பதெல்லாம் சில உதாரணங்கள்.... அவனிடம் சிறிது நேரம் பழகிய பின் எதிரிகள் கூட அவனை நேசிக்க அல்லது மதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். கப்பலில் அத்தனை பேரும் அவனை வழியனுப்பி வைத்த காட்சி ஒரு உதாரணம். தன் பிரதான எதிரியாக அவனை நினைக்கும் லீ க்யாங்கே கூட நேரில் அவனைச் சந்தித்த போது அவ்வளவு கடுமையைக் காட்டவில்லை என்று நமக்குத் தகவல்கள் வந்திருக்கின்றன.... இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று சொல்லி விட முடியாது....”

சுவீடனில் இருந்து வந்திருந்த மனோதத்துவ நிபுணர் சொன்னார். “உண்மை. ஆனால் நீ அடைந்திருக்கும் அற்புத சக்திகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இதெல்லாம் அற்ப சக்திகளே அல்லவா?”

மாரா சிரித்துக் கொண்டே சொன்னான். “அப்படித் தோன்றலாம். ஆனால் “எதிரியைக் குறைத்து மதிப்பிடுவது அவனிடம் தோற்றுப் போக நிச்சயமான வழி” என்கிற பழமொழி என்னைப் பயமுறுத்துகிறது.... அவன் இன்னும் வெளிக்காட்டாதவையும் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.... சரி முக்கியமான விஷயத்திற்கு வருவோம். இந்த ரகசியச்சடங்குக்கும், கூட்டத்திற்கும் நான் ஏற்பாடு செய்யக் காரணம் இருக்கிறது....”

இரண்டு நாள் முன்னால் மாராவின் சிறிய சிலை சிறிது நேரம் ஒளிர்ந்ததையும், அது ஒரு அவசரத்தகவல் தெரிவிப்பதற்காக என்று தனக்குத் தோன்றியதையும் மாரா தெரிவித்தான். “அந்த மகாசக்தி சொல்லும் தகவலைக் கேட்கும் நாம் மைத்ரேயனை எப்படி கையாள்வது என்பதையும் அவரிடமே கேட்டு நடப்பது புத்திசாலித்தனம் என்று நினைத்தேன். மைத்ரேயன் அழிவு நம் இயக்கத்தின் தலையாய வெற்றியாக இருக்கும் என்பதால் இதில் உங்களையும் ஈடுபடுத்த நினைத்தேன்....”

சொல்லி விட்டு மாரா குகைக்கோயில் சிலை முன் வைத்திருந்த பழைய மரப்பட்டியை தங்கச்சாவி மூலம் திறந்து கருப்புத்துணி, தெய்வத்தின் சிறிய சிலை, பழங்கால ஓலைச்சுவடி, மிகத்தடிமனான நீளமான கயிறு ஆகியவற்றை வெளியே எடுத்தான்.

சீனாவில் இருந்து வந்த பத்திரிக்கையாளர் கேட்டார். “இந்த ரகசியச்சடங்கில் அதிகபட்சமாய் ஐந்து உறுப்பினர்கள் வரை கலந்து கொள்ளலாம் என்பது தானே நியதி. மீதி ஆட்கள் என்ன செய்வது?”

மாரா புன்னகைத்தபடி சொன்னான். “பழங்காலத்தில் நம் இயக்கம் சிறியதாக இருந்த போது ஆரம்பித்த நியதி அது. பல மடங்கு வளர்ந்த பின்னும் அந்தப் பழங்கணக்கையே பின்பற்றுவது முட்டாள்தனம். இருபது பேர் இருந்தால் வர மாட்டேன் என்று நம் தெய்வம் முரண்டு பிடிக்காது....”

சின்ன சிரிப்பொலிகள் எழுந்தன. மாரா தன் முன்னால் இருந்த இருவரைப் பார்த்துத் தலையசைத்தான். அவன் கருப்புத் துணியை இடையில் கட்டிக் கொண்டு மாராவின் சிறிய சிலையுடன் ஒரு கல் இருக்கையில் அமர்ந்து கொள்ள அவர்கள் எழுந்து அவனைக் கல் இருக்கையோடு இறுக்கிக் கட்ட ஆரம்பித்தார்கள். இரண்டு சுற்றுகளோடு நிறுத்தியவர்களை மேலும் ஒரு சுற்று சேர்த்து கட்டச் சொன்னான். அப்படியே இறுக்கமாய் கட்டினார்கள்.

வந்திருந்தவர்களில் மூத்த திபெத்தியக் கிழவர் எழுந்து வந்து அந்த ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி அமர்ந்தார். அவர் தான் மைத்ரேயனை முதல் முதலில் அடையாளம் கண்டு மாராவிடம் சொன்னவர். அவர் மாராவிடம் கேட்டார் ”திரும்ப வரவழைக்க என்ன குறிச்சொல்?”

மாராவுக்கு சென்ற முறை அமானுஷ்யன் என்ற குறிச்சொல் வைத்து பாதியில் முடிந்த சடங்கு நினைவுக்கு வந்தது. புன்னகையுடன் சொன்னான். “அமேசான் காடுகள்”

எல்லா தீபங்களும் அணைக்கப்பட்டன. குகைக் கோயிலில் கும்மிருட்டு சூழ்ந்தது.

மாரா ஆழ்நிலை தியானத்திற்குச் செல்ல மற்றவர்கள் பிரார்த்தனைகளிலும் தியானத்திலும் ஈடுபட்டார்கள். பதிமூன்று நிமிடங்களில் மாரா கையிலிருந்த சிலை நீல நிறத்தில் ஒளிர ஆரம்பித்தது. மாராவும் ஒளிர ஆரம்பித்தான். சுற்றிலும் இருந்த இருட்டில் சிலையோடு மாரா ஒளிர ஆரம்பித்தது அமானுஷ்ய அழகோடு தெரிந்தது. மாரா மின்சாரத்தால் தாக்கப்பட்டது போல துடிக்க ஆரம்பித்தான். கல் இருக்கையே சிறிது ஆட்டம் கண்டது. அவன் தோற்றம் அடியோடு மாறி குகைக்கோயில் சிலையின் நகல் தோற்றமாகவே மாறிய பிறகு சிறிது சிறிதாக ஆட்டம் அடங்கியது.

மனித மாராவின் உடலில் குடியேறியிருந்த அவர்களின் கடவுள் மாரா அந்தச் சடங்குகளில் எப்போதும் கேட்கும் “என்னை எதற்காக வரவழைத்தீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்கவில்லை. மாறாக முதலில் அமானுஷ்ய கிரீச் குரலில் கத்தியது. “நாம் நினைத்த அளவு காலம் நம்மிடம் இல்லை. வேகம்... வேண்டும்... மூன்றே நாளில் அவனை அழிக்க வேண்டும்....”

இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. திபெத்தியக் கிழவர் திகைப்போடு கேட்டார். “தெய்வமே, இன்னும் பத்து மாத காலத்திற்கும் மேல் மைத்ரேயனுக்கு மோசமான காலம் என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது...”

“பத்மசாம்பவா.....” அந்தப் பெயரை வெறுப்புடன் உமிழ்ந்து விட்டு தொடர்ந்தது. “வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றி விட்டான்...... இனி மூன்றே நாள் தான் இருக்கிறது. மூன்றாவது நாளில் மைத்ரேயன் அதிபலவீனன்.... அன்று அவனை அழிக்கா விட்டால் பின் எப்போதும் அழிக்க முடியாது......”

செனட்டர் பெண்மணி கேட்டாள். “மைத்ரேயனை சாதாரணமாக அழித்து விட முடியுமா? அவனிடம் ஏதாவது விசேஷ சக்திகள் இருக்கின்றனவா?”

அவர்களுடைய கடவுளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. கேள்வி காதில் விழவில்லையோ என்று சந்தேகித்த செனட்டர் பெண்மணி மறுபடி கேட்க வாயைத் திறந்த போது “பாருங்கள்” என்று கிரீச் குரலில் கத்தியது. “பார்த்துக் கொள்ளுங்கள்”

திடீரென்று குகைக்கோயிலின் மாரா சிலைக்கு முன் வெட்டவெளியில் ஒரு காட்சி தெரிந்தது.

அந்தக் காட்சியில் கனவில் இருப்பது போல் அமானுஷ்யன் மகாபோதி மரம் முன்னால் நின்றிருந்தான். அவன் கையை விட்டு மைத்ரேயன் நகர்ந்து மகாபோதி மரத்தை நோக்கிப் போனான். மரம் பொன்னிறமாக மாறி பிரகாசித்தது. மைத்ரேயன் மரத்தை நெருங்கினான்.... எதையோ எடுப்பது போல் குனிந்தான்.... திடீரென்று எல்லாமே மங்கலாகித் தெளிவில்லாமல் போனது. மங்கலானது தெளிவான போது மைத்ரேயன் அமானுஷ்யனின் கையைப் பிடித்து நின்றிருந்தான். அமானுஷ்யன் அவனைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தக் காட்சி மாறி அடுத்த காட்சி வந்தது. மைத்ரேயன் தியானத்தில் இருக்கிறான். பின் மெல்ல எழுந்து செல்கிறான்.... அமானுஷ்யன் படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் முதுகை ஒட்டியபடி ஒரு பெரிய பாம்பு இருக்கிறது. மைத்ரேயன் அந்தப் பாம்பின் தலையை வருடிக் கொடுக்கிறான். பாம்பு மெல்ல எழ ஆரம்பித்தது. சோம்பல் முறித்து பிரம்மாண்டமாய் படமெடுத்து மைத்ரேயனைப் பார்த்து தலை தாழ்த்தி வணங்கியது. பாம்பின் கண்கள் நெருப்பாய் மின்னின. அமானுஷ்யன் கண்கள் லேசாகத் திறக்கின்றன. மைத்ரேயனிடமிருந்து ஒரு ஒளி அமானுஷ்யனை ஊடுருவி அந்த நாகத்தை அடைந்தது. நாகம் தங்கமென ஜொலித்தது. மைத்ரேயன் திரும்பிப் போன பிறகு அமானுஷ்யன் முழுவதுமாகக் கண் விழித்து மெல்ல தன் முதுகில் இருந்த அந்தப் பாம்பைத் தொட்டுப் பார்க்கிறான்.... அவன் முகத்தில் குழப்பம்....

இரண்டு காட்சிகளையும் பார்த்து முடிக்கையில் இருபது பேர் முகத்திலும் திகைப்பு!

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

7 comments:

  1. மாலை வரை காத்திருந்து படித்து வந்த எங்களுக்கு காலையிலேயே படிக்கமுடிந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.இது போன்றே மீதமுள்ள வாரங்களிலும் காலையில் வெளியிடுங்களேன்.

    ReplyDelete
  2. I felt as if I am inside the cave hearing Mara's speech. Loved it like the speech of Guruji to the God in Paraman Ragasiyam. You make your characters real sir. May God bless you with long life to bring more great novels from you.

    ReplyDelete
    Replies
    1. சந்திரசேகரன்August 28, 2016 at 9:51 AM

      பரமன் ரகசியத்தில் எனக்கு மிகவும் பிடித்த நீண்ட பேச்சு ஆனந்தவல்லி தன் இறந்த மகன் பசுபதியிடம் பேசும் உணர்ச்சிகரமான பேச்சு. பரமன் ரகசியம் நாவலை எத்தனை முறை படித்திருப்பேன் என்றே நினைவில்லை.

      Delete
  3. நாவலை இரண்டாவது தடவையும் படித்து முடித்து விட்டேன். இன்னும் மனதில் அமானுஷ்யனும், மைத்ரேயனும் நிற்கிறார்கள். வியாழன் ஆனால் அந்த அத்தியாயங்களுக்கு என்ன படம் போட்டிருக்கிறீர்கள் என்ற ஆவல் பிடித்து ஆட்ட இங்கு வந்து பார்க்கிறேன். இந்த வார படம் செம பொருத்தம்.

    ReplyDelete