ஒற்றைக்கண் பிக்கு விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது அவர்கள் ஷோ என்ற திபெத்திய பகடை விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். டோர்ஜேக்குப் பொழுது போகவில்லை என்றால் வீட்டுக்குள் விளையாட அந்தப் பகடை விளையாட்டையும், பாம்பு ஏணி விளையாட்டையும் லீ க்யாங் அனுமதித்திருந்தான். மைத்ரேயனுடன் வந்த சிறுவன் கௌதம் வெளியே சென்று விளையாட ஆசைப்பட்டாலும் வாசற்படியைத் தாண்ட காவல் வீரர்கள் அனுமதிக்காததால் வேறு வழி இல்லாமல் வீட்டுக்குள்ளேயே விளையாடும் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். ஷோ விளையாட்டை மைத்ரேயன் கௌதமுக்கு விளக்கி அவன் புரிந்து கொண்ட பிறகு மூவரும் விளையாட ஆரம்பித்தார்கள். டோர்ஜே முகத்தில் தெரிந்த சந்தோஷம் ஒற்றைக்கண் பிக்கு இது வரை பார்த்திராதது. அவனை தன் மகனைப் போலவே நேசிக்க ஆரம்பித்திருந்த பிக்குவுக்கு மனம் நிறைந்து போனது.
விளையாட்டின் போது அவரவர் குணாதிசயங்கள் வெளிப்படுவதை பிக்கு கவனித்தார். மைத்ரேயன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தாலும் கூட அவன் எந்த உணர்வும் கட்டுப்பாட்டோடேயே வெளிப்பட்டது. கௌதம் அவனுக்கு நேர் எதிராக இருந்தான். அவ்வப்போது பலமாகக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான். கலகலவென சிரித்தான். சில சமயங்களில் எழுந்து குதிக்கவும் செய்தான். டோர்ஜே கௌதமின் உற்சாகத்திலும், மைத்ரேயனின் அமைதியிலும் மாறி மாறி வியந்த மாதிரி இருந்தது. சில நேரங்களில் கௌதமின் உற்சாகத்தில் தானும் கலந்து கொண்டு டோர்ஜேயும் மெல்லக் கத்தினான். சமையல்காரன் வந்து எட்டிப் பார்த்தால் அவன் குரல் அப்படியே அமுங்கி விடும்.
ஆனால் கௌதம் எந்தக் கட்டுப்பாட்டையும் வைத்திருக்கவில்லை. திபெத்திய மொழி அறியா விட்டாலும் கூட மைத்ரேயனின் உதவி இல்லாமலேயே டோர்ஜேயுடன் சைகை மொழியில் சில ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்து புரிய வைத்தான். டோர்ஜேயும் சைகை கலந்து பேசிய போது அதை கவனமாகக் கேட்டு புரிந்து கொண்டான். டோர்ஜே மைத்ரேயனை விட கௌதமுக்கு மிக நெருக்கமாகி விட்டான்.....
சமையல்காரனின் அலைபேசி அடித்த சத்தம் ஒற்றைக்கண் பிக்குவுக்குக் கேட்டது. மெல்ல சென்று சமையலறைக்கு வெளியே நின்று அவன் என்ன பேசுகிறான் என்று கவனித்தார். சமையல்காரன் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தாலும் கூட அப்போது ஒற்றைக்கண் பிக்குவுக்குப் பகீரென்றது...
லீ க்யாங்குக்கு மைத்ரேயன் சொல்வது அறிவு சார்ந்ததா இல்லை அடாவடித்தனமா என்பது புரியவில்லை. ” நன்றாக விளையாட முடிந்தால் தான் தியானமும் கைகூடும். அதனால் இது தியானத்தின் முதல்படியே... எதிலும் முழுமையாக ஈடுபட முடிந்தால் மட்டுமே ஒருவனால் தியானத்திலும் வெற்றியடைய முடியும். இந்த வயதில் உங்கள் மைத்ரேயனால் விளையாட்டு அல்லாத வேறொன்றில் முழுமையாக ஈடுபட முடியுமா?…”
இது வரை யாரும் விளையாட்டையும் தியானத்தையும் சேர்த்துச் சொல்லிப் படித்ததாய் அவனுக்கு நினைவில்லை. ’மைத்ரேயன் சொன்னபடி முழுமையாக ஈடுபட விளையாட்டு கற்றுத்தரும் என்றாலும் கூட விளையாட்டும், தியானமும் ஒன்றாகி விட முடியுமா?... விளையாட்டில் முழுமையாக ஈடுபட்ட எத்தனை பேர் தியானத்தில் முழுமையைக் கண்டிருக்கிறார்கள்?.... இந்த மைத்ரேயனை விரைவில் அப்புறப்படுத்தி விடுவது நல்லது, இல்லா விட்டால் தியானத்திற்குப் பதிலாக வேண்டாததை எல்லாம் டோர்ஜேக்குச் சொல்லிக் கொடுத்து கெடுத்து விடுவான்...’
லீ க்யாங் சமையல்காரனிடம் சொன்னான். “இன்னும் சில நாட்கள் தான். அது வரை வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். வெளியே ஒரு அடி எடுத்து வைக்க மட்டும் விட்டு விட வேண்டாம். அந்த மைத்ரேயன் மேல் ஒரு கண்ணை எப்போதும் வைத்திரு.... என்னவெல்லாம் செய்கிறான் என்பதை ஒன்று விடாமல் எனக்குச் சொல்....”
லீ க்யாங்குக்கு அடுத்ததாய் வாங் சாவொவிடம் இருந்து அழைப்பு வந்தது. “அந்த 16 பேரும் பல நாட்டுக்காரர்கள் என்றாலும் திபெத்திய பௌத்தம் என்ற முகநூல் குழுவின் உறுப்பினர்கள். அவர்கள் லாஸாவில் இருந்து ஒரு சுற்றுலா நிறுவனத்திலிருந்து ஒரு சிறிய பஸ்ஸில் திபெத்தைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பி இருக்கிறார்கள். நான் அந்த சுற்றுலா நிறுவனத்துக்குப் போய் பேசினேன். அவர்களோடு போன பஸ் டிரைவரின் அலைபேசி எண்ணை வாங்கி இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிய தொடர்பு கொள்ளப் பார்த்தேன். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகச் செய்தி மட்டும் வந்து கொண்டிருக்கிறது....”
அது அசாதாரண விஷயம் அல்ல. திபெத்திய பல மலைப்பகுதிகளில் பயணிக்கையில் அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவே முடியாது.
ஆனால் வாங் சாவொ தொடர்ந்து சொன்னான். “இதில் எனக்கு சந்தேகம் ஏற்படுத்துகிற விஷயம் என்ன என்றால் சுற்றுலா நிறுவனம் தந்த தகவல்படி அவர்கள் இன்னேரம் போயிருக்க வேண்டிய இரண்டு மூன்று இடங்களுக்கு நம் ஆட்களை அனுப்பிப் பார்த்தேன். அங்கெல்லாம் அப்படியொரு பஸ் வரவேயில்லை என்கிறார்கள்”
லீ க்யாங் இதில் ஏதோ ஒரு தில்லுமுல்லை உணர்ந்தான். ”தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இரு. அவர்கள் இருப்பிடம் தெரிந்தால் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்” என்று உத்தரவிட்டான்.
அந்த ஆட்கள் யாராக இருந்தாலும் மைத்ரேயனை நெருங்க மட்டும் கண்டிப்பாக முடியாது. அந்த அளவு பலத்த பாதுகாப்பு உள்ளது. எனவே அதில் அதிகமாய் கவனம் செலுத்த விரும்பாமல் லீ க்யாங் டோர்ஜேயை மைத்ரேயனாக அரங்கேற்ற என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு வெள்ளைத்தாளில் எழுத ஆரம்பித்தான். எழுதும் போது நோக்கமும் திட்டமும் தெளிவாக உருவெடுக்கின்றன.....
அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து அலைபேசி அலறிய போது தான் அவன் கவனம் அதிலிருந்து மீண்டது. யார் என்று பார்த்தான். கோமாளி.
“சார் அந்த ப்ரோகிராமை செய்து விட்டேன். வரட்டுமா?” என்று கேட்டான். லீ க்யாங் வரச்சொன்னான். கோமாளி அரை மணி நேரத்தில் வந்தான். இரண்டு மணி இருபத்தி நான்கு நிமிடங்களில் அவனுடைய ப்ரோகிராம் ரகசியமாக உளவுத்துறை தளத்தில் பதிவேற்றப்பட்டது.
பின் மைத்ரேயன் என்ற அதிரகசியக் கோப்பு ஒன்றை லீ க்யாங் அந்த தளத்தில் உருவாக்கினான்.
கோமாளி சொன்னான். “இதை உங்கள் அதிகாரி யார் படித்தாலும் அந்தத் தகவல் பழையது போல் அந்தக் கோப்போடு சேர்ந்து விடும். ஒருவேளை முன்பு போல் பார்த்த தகவலை அழிக்க முயன்றால் அது அழிந்து போவது போலத்தான் அந்தக் கோப்பில் காட்டும். ஆனால் அடுத்த வினாடியே உளவுத்துறை தலைவருக்கும், உபதலைவரான உங்களுக்கும் அழித்த ஆள் பற்றிய தகவல் வந்து சேர்ந்து விடும்....”
தூண்டில் போடப்பட்டு விட்டது. அமானுஷ்யன் குறித்த ரகசியக்கோப்பைப் படித்து விட்டு தன் அடையாளத்தை அழித்து விட்டுப் போன அந்த ஆள் திரும்ப மைத்ரேயன் கோப்பிற்கு வரத்தான் போகிறான். அவன் முகமூடி கிழியத்தான் போகிறது..... எதிரிகள் அனைவரையும் தெரிந்து கொண்டு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்த திருப்தி அப்போதே அவன் மனதில் துளிர் விட ஆரம்பித்தது.
கௌதம் இரவு சாப்பிட்டு முடித்ததும் படுத்துறங்கி விட்டான். மைத்ரேயனும் டோர்ஜேயும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். கௌதம் இல்லாமல் மைத்ரேயனுடன் இருப்பதில் ஒரு அசௌகரியத்தை டோர்ஜே உணர்ந்தான். மௌனம் கனமாக இருந்ததால் அதைக் கலைக்க எண்ணி மைத்ரேயனிடம் கேட்டான். “நீ தாமரை சூத்திரம் படித்திருக்கிறாயா?”
மைத்ரேயன் தயங்காமல் சொன்னான். “இல்லை”
ஒற்றைக்கண் பிக்கு டோர்ஜேயிடம் தாமரை சூத்திரம் மிக முக்கியமான புத்தமத சூத்திரம் என்று சொல்லி இருந்தார். அதைப் படிக்காமல் புத்த மதத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் சொல்லி இருந்தார். அதனால் அவனுக்கு மைத்ரேயன் அந்த சூத்திரத்தைப் படித்திருக்காதது ஆச்சரியமாக இருந்தது.
டோர்ஜே கேட்டான். “தம்மபதம்?”
மைத்ரேயன் சொன்னான். “இல்லை”
டோர்ஜே திகைத்தான். புத்தரின் போதனைகளையே இவன் இது வரை படித்ததில்லையா? பெருமையுடன் அவன் மைத்ரேயனிடம் சொன்னான். “நான் படித்திருக்கிறேன்.... இந்த இரண்டும் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ படித்திருக்கிறேன்.....”
சற்று தூர அமர்ந்திருந்த ஒற்றைக்கண் பிக்கு அதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தார். தன் சீடனின் இந்தப் பெருமையை அதுவும் மைத்ரேயனிடமே சொன்னதை அவர் ரசிக்கவில்லை. தர்மசங்கடத்துடன் அவர் மைத்ரேயனின் முகத்தைப் பார்த்தார். மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “அப்படியா? நல்லது.” சொன்ன விதத்தில் கேலியும் இல்லை. ஆச்சரியமும் இல்லை.
அவனிடமிருந்து பிரமிப்பையோ அல்லது ஆச்சரியத்தையோ எதிர்பார்த்திருந்த டோர்ஜேக்கு ஏமாற்றமாய் இருந்தது. தியானத்தையும், பார்த்தே கற்றுக் கொள்ள வேண்டிய மற்றதையும் கற்றுத் தர இவனிடம் என்ன சரக்கு இருக்கிறது? தம்மபதம், தாமரை சூத்திரம் கூட இவன் படிக்கவில்லையே! லீ க்யாங்கும் ஆசிரியர் போல இவனிடம் ஏமாந்து விட்டானா?
மைத்ரேயன் பத்மாசனத்தில் அமர்ந்தான். தியானத்துக்குத் தயாராகிறது போல் தெரிந்தது. எனக்குச் சொல்லிக் கொடு என்று கேட்கிற மனநிலையில் டோர்ஜே இல்லை.... அவனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
மைத்ரேயன் சில வினாடிகளில் தியானநிலைக்குப் போய் விட்டான். அவன் முகத்தில் சாந்தமும் பேரமைதியும் தெரிய ஆரம்பித்தது. சில நிமிடங்களில் அந்த அமைதியை டோர்ஜேயும், ஒற்றைக்கண் பிக்குவும் உணர ஆரம்பித்தார்கள். சமையல்காரன் வேகமாக வாசற்கதவைச் சாத்தினான். டோர்ஜேயும், ஒற்றைக்கண் பிக்குவும் தூக்கிவாரிப்போட்டது போல் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் மைத்ரேயன் திரும்பியும் பார்க்கவில்லை. அவன் தியானம் தடைப்படவில்லை. சமையல்காரன் தானும் அங்கேயே உட்கார்ந்து கொண்டு பார்த்தான். அவனுக்கு மைத்ரேயன் உறங்கி விட்டானோ என்ற சந்தேகம் வந்தது. நேரம் போகப் போக அவனும் அந்த அமைதியை உணர்ந்தான்.
ஒற்றைக்கண் பிக்கு கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அந்தப் பேரமைதியில் தன்னையே அவர் சுயபரிசோதனை செய்து கொண்டது போலத் தெரிந்தது. சமையல்காரனோ விசித்து விசித்து அழுதான். ஏன் அழுகிறோம் என்று அவனுக்குத் தெரியவில்லை.
டோர்ஜே அவர்களைத் திகைப்புடன் பார்த்து விட்டு மைத்ரேயனைப் பார்த்தான். இது தியானமா இல்லை மாயாஜாலமா? இவர்கள் ஏன் அழுகிறார்கள்?....... சிறிது நேரத்தில் அந்த மாயாஜாலம் அவனையும் ஆக்கிரமித்தது போல் அவன் உணர்ந்தான். மனம் வார்த்தைகள் இல்லாத ஒரு அசாதாரண நிலையை எட்ட ஆரம்பித்தது.....
அந்த நேரத்தில் திடீரென்று தானாக தாமரை சூத்திரத்தின் ஒரு வாக்கியம் அவன் நினைவில் வந்து நின்றது.
”சந்தேகம் கொள்ளாதே! புனிதரும், தூயவருமான போதிசத்துவரை உன் மனதில் இருத்து. பெரும் துக்கத்திலும், துன்பத்திலும், மரணத்திலும், பிரளயத்திலும் அவரிடம் நீ தஞ்சமடையலாம்”
மைத்ரேயனையே அந்த சூத்திரம் அடையாளம் காட்டுவதாகத் தோன்ற, டோர்ஜே பெரும் சிலிர்ப்பையும், பிரமிப்பையும் அந்தக் கணம் உணர்ந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)
Maithreyan's creating peace in the place is powerfully written in the episode and I also felt the peace. Beautiful writing sir. May God bless you.
ReplyDeleteஅருமை. அருமை.
ReplyDeleteஅருமை.
ReplyDelete