என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, August 18, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 112

ந்த முறை போலி பாஸ்போர்ட்களை அவர்கள் உருவாக்கவில்லை. நேபாளத்திலிருந்து திபெத்துக்கு அடிக்கடி பயணிக்கும் இரு நிஜ வணிகப் பயணிகளின் பாஸ்போர்ட்களையேயே பயன்படுத்திக் கொண்டார்கள். உடல் வாகும், ஏகதேச தோற்றமும் அக்‌ஷய்க்கும், ஆசானுக்கும் பொருந்துகிற அந்த இரண்டு ஆட்களுக்கும் பாஸ்போர்ட்களைத் தந்து விட்டு அவரவர் வீட்டிலேயே இருந்து விடுவதற்கு, திபெத் சென்று அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் மும்மடங்கு பணம் தரப்பட்டது.

வீட்டில் இருந்து அக்‌ஷய் கிளம்பிய போது அதிகமாய் கலங்கியது சஹானா தான். இந்த முறை அவள் மகனுக்கும் கணவனுக்கும் பெரும் ஆபத்தை தன் அடிவயிற்றில் உணர்ந்தாள். கணவன் முன் கண்கலங்கி அவன் போகும் போது வருத்தத்தை உணர்ந்து விடக்கூடாது என்று எத்தனை தான் கட்டுப்படுத்தினாலும் துக்கம் பீறிட்டது. அக்‌ஷய் அவளை அணைத்து ஆறுதல் சொன்னான். ஆசான் குற்ற உணர்வு மேலிட சஹானாவிடம் ஆத்மார்த்தமாய் சொன்னார். “தாயே. உங்கள் கணவருக்கும், மகனுக்கும் ஒரு தீங்கும் வர வாய்ப்பில்லை. இவர்கள் இருவருடன் எங்கள் எத்தனையோ பேரின் பிரார்த்தனை இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மைத்ரேயர் இருக்கிறார்.... வெற்றியோடும், உங்கள் மகனோடும் இவர் நலமாய் திரும்பி வருவார்....”

தலாய் லாமாவும் அலைபேசியில் அக்‌ஷயிடம் பேசினார். “உங்களை மிகவும் சிரமப்படுத்தி விட்டோம். உங்கள் குடும்பத்திற்கும் துக்கத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆனால் முடிவில் நற்செயலுக்கு தீங்கான விளைவுகள் ஏற்படாது என்பது மட்டும் நிச்சயம். வெற்றிவாகை சூடி வருவீர்கள் அன்பரே.... எங்கள் நாடும், சமூகமும் உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்....”

மரகதம் முருகனை வேண்டிக் கொண்டு அக்‌ஷய் நெற்றியில் திருநீறிட்டு அனுப்பினாள். ஆசான் குழந்தைத்தனமாகத் தன் நெற்றியையும் அவளுக்குக் காட்ட, கூச்சத்துடன் அவர் நெற்றியிலும் திருநீறிட்டாள். வருண் உணர்ச்சி வசப்பட்டு தந்தையிடம் சொன்னான். ”தம்பியோடு சீக்கிரம் வந்துடுங்கப்பா...”

அக்‌ஷய் தலையசைத்தான். “சரி என்று வாய் விட்டு சொல்லுங்கள்ப்பா” என்று வருண் சொன்னான். தந்தை வாய் விட்டுச் சொன்னால் அதை நடத்திக் காட்டாமல் விட மாட்டார் என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை.

“சரி சீக்கிரமே கௌதமோடு வருகிறேன்....” என்று அக்‌ஷய் சொன்னபிறகு தான் அவன் திருப்தி அடைந்தான்.

அக்‌ஷயும், ஆசானும் கிளம்பினார்கள்.க்‌ஷய்க்கு ஆடுகள் விற்ற கிழவர் வழக்கமாக அமரும் அதே கல் மீது அமர்ந்திருந்தார். அவருடைய ஆடுகள் சுற்றிலும் மேய்ந்து கொண்டிருந்தன. ஏதோ வாகனம் வரும் சத்தம் கேட்டது. முன்பு வந்து கொண்டிருந்த ரோந்து வாகனங்கள் கூட சில நாட்களாக வருவதில்லை என்பதால் ஆச்சரியத்துடன் சாலையையே பார்த்தார். தூரத்தில் ஒரு பஸ் வருவது தெரிந்தது. அந்த சொகுசு வண்டி சுற்றுலாப்பயணிகள் பயணிப்பது. அதில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பொதுவாக திபெத்தின் இந்தப் பகுதிக்கு வருவதில்லை.....

பஸ் தொலைவிலேயே நின்றது. அதிலிருந்து சில வெளிநாட்டுப்பயணிகள் இறங்கினார்கள். கிழவர் கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தார். அவர்கள் சைத்தான் மலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். கிழவர் திகைப்புடன் அவர்களை உற்றுப் பார்த்தார். இவர்கள் சுற்றுலாப்பயணிகள் அல்ல. இவர்கள் அவர்கள்..... அந்த மர்ம மனிதர்கள்.... ஒரு காலத்தில் துறவிகள், சாதுக்கள் கோலத்தில் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர்கொண்ட பார்வையோடு அந்த மலைக்கு வருபவர்கள்.... இப்போது நவநாகரிக உடைகளில் இருந்தாலும் அந்த நேர்கொண்ட பார்வை மாறவில்லை. இருட்டிக் கொண்டு வரும் இந்த நேரத்தில் சைத்தான் மலையில் நீலக்கரடிகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏறுவது அவர்களால் தான் முடியும்.... பஸ் டிரைவர் பஸ்ஸில் இருந்து இறங்கி சோம்பல் முறித்தான்....

திடீரென்று கருப்பாடை அணிந்த ஒரு அழகான இளைஞன் எங்கிருந்தோ ஓடி வந்தான். ஓடி வந்தான் என்பதை விட காற்றின் வேகத்தில் வந்தான் என்பதே பொருத்தமாக இருக்கும். அவன் கால்கள் நிலத்தை நீண்ட இடைவெளிகளில் தொட்டனவே ஒழிய நிலத்தில் பதியவில்லை. ஒரு கணம் வெகு தொலைவில் தெரிந்தான். மறுகணம் இங்கிருந்தான். அடுத்த கணம் மலையில் இருந்தான். சில கணங்களில் கண் பார்வையில் இருந்தே மறைந்தான். இவன் மனிதனே இல்லை என்று பிரமிப்புடன் கிழவர் நினைத்தார். மலையில் ஏறிக்கொண்டிருந்த அந்த பதினாறு பயணிகளும் ஒரு கணம் அந்தக்காட்சியைக் கண்டு சிலையாய் சமைந்து பின் புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தார்கள். பஸ் டிரைவர் அதிர்ச்சி தாளாமல் மயங்கி விழுந்தான்.

கிழவர் பிரமிப்பிலிருந்து நீங்குவதற்கு முன் மலையடிவாரத்தில் இருந்து வேறு ஒரு உருவமும் மேலே பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். லேசாய் காற்றில் மிதந்து தெரிந்த அந்த உருவம் இறந்து போன அவர் மகன் உருவமாய் இருந்தது. அவர் மகன் ஆவியோ? அவன் இறந்து இத்தனை காலமாய் அவர் கனவில் கூட வந்ததில்லை. இப்போது ஏன்....? சில வினாடிகளில் அந்த உருவம் மறைந்து போனது... கிழவரின் மனதில் ஒரு இனம் புரியாத வலி, ரணம், பெருந்துக்கம்....

அந்தப் பதினாறு பேரும் பார்வையில் இருந்து மறைந்த பின்னும் கூட நீண்ட நேரம் அவர் அந்தக் கல்லிலேயே அமர்ந்திருந்தார்... பஸ் டிரைவர் மயக்கத்திலிருந்து மீண்டு தட்டுத்தடுமாறி எழுந்து அவர் அருகில் வந்து கேட்டான். “ஐயா சற்று முன் இங்கு நீங்கள் ஏதாவது வித்தியாசமாய் பார்த்தீர்களா?”

“இல்லையே”சைத்தான் மலையின் அந்த ரகசிய குகைக் கோயிலில் மாராவின் முன்னால் இருபது பேர் இருந்தனர். வெளிநாடுகளிலிருந்து வந்த பதினாறு பேர் அல்லாத மற்ற நால்வரும் திபெத்திய மலைகளில் சாதகம் செய்பவர்கள். அத்தனை பேர் அமர்ந்து கொண்டிருந்த போதும் அவர்களிடமிருந்து சின்ன முணுமுணுப்போ, வேறு சத்தமோ கேட்கவில்லை. வெளியே வீசும் காற்றின் சத்தம் மட்டும் மெல்லக் கேட்டுக்கொண்டிருந்தது. குகைக்குள் இருந்த இருட்டைச் சில தீபங்கள் அரைகுறையாய் விரட்டிக் கொண்டிருந்தன. மாராவுக்குப் பின்னால் இருந்த அவர்கள் தெய்வச்சிலை அந்த அரைகுறை இருட்டில் பயங்கரமாய் அமானுஷ்யமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.

மாரா மெல்ல பேச ஆரம்பித்தான். “மிகக்குறைவான கால இடைவெளியில் நான் அழைத்திருந்த போதும் உங்கள் குடும்பங்களையும், வேலைகளையும் விட்டு விட்டு நீங்கள் உடனே கிளம்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி.....”

அனைவரும் அவனையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எப்போதும் போலவே அவர்களை அவன் பிரமிக்க வைத்தான். திபெத்திய யோகிகள் போல மிக நீண்ட இடைவெளிகளில் கால்களை வைத்து நடப்பதும் மிதப்பதுமாய் கலந்து கடந்து வந்து அந்த ரகசியக் கோயிலில் அவன் நுழைந்த விதம் அவன் அடைந்து விட்டிருந்த சக்தியின் உயரத்தை அவர்களுக்குக் காட்டியது. அவர்கள் தெய்வமான மாராவின் அவதாரமான அவன் தன் பூரண சக்தியைப் பெற்று விட்டான்....

“இன்று உலக நாடுகளின் விதியையே நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். உலக நாடுகளின் தொழில்துறைகள் நம் வசம் இருக்கின்றன. அதனால் முக்கியமான அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் நம் முடிவுகளின்படி மாறிக் கொண்டிருக்கிறது. சக்தி வாய்ந்த பத்திரிக்கைகளையும், தொலைக்காட்சிகளையும் நம் வசமாக்கி விட்டோம். நாம் சொல்வதை அவை வெளியிடுகின்றன. அவையே உண்மை என்று உலக மக்கள் நம்புகிற நிலைமை வந்து விட்டது. அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும் நம் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மை அனுசரித்தே அவர்கள் நடந்து கொள்கிறார்கள். விளம்பரத்திற்கு ஆசைப்படாமல் சாதனைகள் மட்டுமே குறியாக நாம் இருந்ததால் நம்மை உலகிற்கு அடையாளம் காட்டிக் கொள்ளாமல் உலகையே நாம் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதில் எதையுமே நான் சாதனை என்று நினைக்கவில்லை....”

அவன் நிறுத்திய போது குகைக்கோயிலின் தீபங்கள் கூட அசையாமல் நின்றன. வெளியே காற்றின் வீச்சு பலமாய் இருந்த சத்தம் கேட்டது. அவன் தொடர்ந்தான். ”தனிமனிதர்களாகவும் நாம் சராசரி மனிதர்களை விட அறிவுகூர்மையிலும், மனோசக்தியிலும் எத்தனையோ மேலானவர்கள். சொல்லப் போனால் நாம் இது வரை பெற்ற வெற்றிகள் இந்த உயர்விலிருந்து அடைந்தவையே. ஆனால் நான் இதையும் சாதனையாக நினைக்கவில்லை.”

திடீரென்று அவன் குரலில் அமைதி போய் தீவிரம் தெரிய ஆரம்பித்தது. “நம் உண்மையான எதிரி மைத்ரேயனை தோற்கடித்து அழிப்பதைத் தவிர வேறெதையும் சாதனையாக என்னால் நினைக்க முடியாது.... இன்று நான் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி என்றாலும் இது வரை தொழிலை விட அதிகமாக நான் அவனுக்காகவே என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறேன். அவனை எதிர்க்கவே ஒவ்வொரு சக்தியாக என் வசப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன். அவனுக்காகவே காத்திருந்தேன். சில நாட்கள் முன் வரை இருப்பதே தெரியாமல் மறைந்து வாழ்ந்த மைத்ரேயன் ஒரு பாதுகாவலன் வந்தவுடன் வெளிப்பட்டான். அதன் பின் நடந்ததை நாம் எல்லோரும் அறிவோம். இந்தக் கூட்டத்தை நான் கூட்ட உங்களை நான் தொடர்பு கொண்ட போது என்னிடம் பலர் கேட்டிருக்கிறீர்கள். “நம் சக்திக்கு முன் அவன் எம்மாத்திரம்? அவனைத் தீர்த்துக்கட்டுவது நமக்குக் கஷ்டமான காரியமா?... அதற்கு ஏன் இந்த சிறப்புக்கூட்டம்? ஏன் இந்த ரகசியச்சடங்கு?”

இப்போதும் அவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்பது மெல்லிய் ஒளியில் தெரிந்த அவர்களின் முகபாவனையிலேயே தெரிந்தது.

மாரா அமைதியாகச் சொன்னான். “சம்யே மடாலயத்தில் நம் ஆள் அவனைக் குறைத்து மதிப்பிட்டு என்னவாய் முடிந்தான் என்பது உங்களுக்குத் தெரியும். மைத்ரேயன் மிக எளிமையாகத் தெரிந்தாலும் உண்மையில் எளிமையானவன் அல்ல என்பதை நம் தெய்வமும் எனக்கு உணர்த்தி இருக்கிறது. இதே மலையில் சில தினங்களுக்கு முன் அவன் இருக்கிறான் என்று தெரிய வந்து அப்போதே அவனைத் தீர்த்துக்கட்ட நான் எண்ணிய போது தடுத்து ‘சம்யே மடாலயத்தில் நம் சக்தி நிலையை பலப்படுத்தும் வரை அவனை நெருங்காதே, உனக்கு இனியும் சந்தர்ப்பம் வரும்’ என்று சொன்னது. அப்படியே நடந்திருக்கிறது. இப்போது மைத்ரேயன் நம் கை எட்டும் தூரத்தில் தான் இருக்கிறான்..... சம்யே மடாலயத்தில் நம் சக்தியை மறுபடியும் நிலைநிறுத்திய பிறகு நானும் இந்த சில நாட்களில் கூடுதலான சில அபூர்வ சக்திகளை அடைந்து விட்டிருக்கிறேன். இந்த அளவு தயாராக இருந்தாலும் நமக்கு இன்னமும் பிடிபடாமல் இருப்பது அவனிடம் உள்ள பிரத்தியேக சக்திகள்....”

ஒரு குரல் அவனை இடைமறித்தது. “உண்மையிலேயே அப்படி அவனுக்கு பிரத்தியேக சக்திகள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் அவனுக்கு எதற்குப் பாதுகாவலன்? அதுவுமல்லாமல் இது வரை அவன் பெரிதாக எந்த விசேஷ சக்தியையும் வெளிப்படுத்தியதாய்த் தெரியவில்லையே”

சொன்னது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்மணி. குடியரசுக்கட்சியில் மிகவும் சக்தி வாய்ந்த செனெட்டராக இருப்பவள்.

அந்த சந்தேகம் அவளுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் இருந்ததை மாரா கவனித்தான்.

(தொடரும்)

என்.கணேசன்(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

5 comments:

 1. Going great. No words to express

  ReplyDelete
 2. சுந்தரவல்லிAugust 19, 2016 at 7:43 AM

  பிரமிப்பூட்டுகிறது தங்கள் நாவல். நன்றி கணேசன் சார்.

  ReplyDelete
 3. சீக்கிரம் வருணோடு வந்துவிடுகிறேன் என்று இருக்கிறது.
  சீக்கிரம் கௌதமுடன் வந்து விடுகிறேன் என்றுதானே இருக்கவேண்டும்

  ReplyDelete
 4. சீக்கிரம் கவுதம் உடன் வருகிறேன் ....வருண் உடன் அல்ல அண்ணா ...

  ReplyDelete
 5. மாற்றி விட்டேன். நன்றி விபுலானந்தன் மற்றும் ஜெயசுந்தரம்.

  ReplyDelete