சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 4, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 110


 க்‌ஷயின் அண்ணா ஆனந்த் அலைபேசியில் தம்பியைத் தொடர்பு கொண்டான். மைத்ரேயனும், கௌதமும் கடத்தப்பட்ட தகவல் வெளியே கசியாமல் ரகசியமாகவே உளவுத்துறை பார்த்துக் கொண்டாலும் சிபிஐயில் இருக்கும் ஆனந்த் தாமதமாகவாவது தன் நண்பன் ஒருவன் மூலம் அறிந்தான். தம்பியாக அந்தத் தகவலைத் தனக்குத் தெரிவிக்கவில்லை என்று கோபித்துக் கொண்டான். 

“நீயும் கவலைப்படுவாய். தெரிந்து உன்னாலும் இப்போதைக்குச் செய்ய முடிந்தது எதுவுமில்லை....” அக்‌ஷய் சொன்னான்.

ஆனந்தால் அவன் சொன்னதை மறுக்க முடியவில்லை. ஆற்றாமையுடன் சொன்னான். “மைத்ரேயன் விவகாரத்தில் நீ ஈடுபடாமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது தானே....”

“என் மகன் கடத்தப்பட வேண்டும் என்பது விதியில் இருந்தால் சீனாக்காரனுக்குப் பதில் தலிபான் கடத்தியிருப்பான் அண்ணா...” பொறுமையாக அக்‌ஷய் சொன்ன போது தம்பியின் பெருந்தன்மையை எண்ணி ஆனந்த் மனம் நெகிழ்ந்தான். சேகர் உள்ளே புகுந்து குழப்பாமல் இருந்திருந்தால் வருண் கடத்தலின் போதே இது மைத்ரேயனுக்கான தூண்டில் என்பதை அக்‌ஷய் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க மாட்டான் என்று ஆனந்த் நினைத்துக் கொண்டான்.

“இனி என்ன செய்யப் போகிறாய்?”

சற்று முன் தான் லீ க்யாங் லாஸாவில் இருந்து தனியாக தான் பீஜிங் திரும்பினான் என்று தகவல் இந்திய உளவுத்துறைக்கு வந்தது. அதனால் மைத்ரேயனும் கௌதமும் திபெத்தில் தான் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் ஊகித்தார்கள்.

“நானும் ஆசானும் திபெத் போவதாக உள்ளோம்....இரண்டு நாளில் கிளம்பி விடுவோம்....” அக்‌ஷய் அண்ணனிடம் சொன்னான்.

“லீ க்யாங் அலட்சியமாக இருக்க மாட்டான். திபெத்தின் எல்லா நுழைவுகளிலும் கெடுபிடி அதிகமாகத் தான் இருக்கும்....”

“பார்ப்போம்....”

“கவனமாய் போய் வா. கௌதமோடு இந்தியா நுழைந்தவுடன் முதல் தகவல் சஹானாவுக்கு சொன்னால் அடுத்ததாய் எனக்குத் தான் சொல்ல வேண்டும். சரியா”

ஆனந்திடம் பேசி முடித்தவுடன் வருண் வந்தான். அவன் முகத்தில் இப்போது பழைய களை திரும்பி விட்டிருந்தது. தம்பி கடத்தப்பட்டது பேரிடியாக இருந்தாலும் “அவர்களுக்கு கௌதம் எதிரியல்ல. மைத்ரேயனுடன் சேர்ந்து கொண்டு போய் என் தலையீட்டைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அவ்வளவு தான். கௌதம் பிரச்னை இல்லாமல் வந்து சேர்ந்து விடுவான்” என்று வீட்டில் கிளிப்பிள்ளை மாதிரி அக்‌ஷய் சொல்லி இருந்ததும், அதற்கேற்ற மாதிரி கராச்சி துறைமுகத்தில் இருந்து புகைப்படம் வந்து சேர்ந்ததும் மற்றவர்களைப் போலவே வருணையும் சற்று நிம்மதியடைய வைத்திருந்தது. வந்தனாவும் அவள் குடும்பமும் இப்போது சுமுகமாகி விட்டதும் வருணைப் பழைய வருணாக மாற்றி விட்டிருந்தது. மகனைப் பழைய களையில் பார்க்க ஆரம்பித்ததில் அக்‌ஷய்க்கும் சந்தோஷமாக இருந்தது....

வருண் அக்‌ஷய் அருகில் உட்கார்ந்தான். அவனை ஏதோ சிந்தனை அழுத்துவது போல் தெரிய அக்‌ஷய் கேட்டான். “என்ன வருண்?”

“அவன்.... அவன்.... திரும்பவும் வருவானாப்பா?”

எவன் என்று அக்‌ஷய் கேட்கவில்லை. அவன் கேட்பது கௌதமை அல்ல என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். சேகரின் பெயரைக் கூடச் சொல்ல வருணுக்கு அருவருப்பாக இருக்கிறது..... மகன் தோளை இறுக்கியபடி அக்‌ஷய் சொன்னான். “வர மாட்டான்.... என்றைக்குமே வர மாட்டான்....”

வருணின் மனதில் இருந்த பாரம் இறங்கியது அவன் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. வார்த்தைகள் இல்லாமல் தந்தையைக் கட்டிக் கொண்டான். “நன்றிப்பா.....”

சேகரை என்ன செய்தீர்கள் என்று வருணும் கேட்கவில்லை. என்ன செய்தேன் என்று அக்‌ஷயும் சொல்லவில்லை.



“இங்கேயும் ஒரு மைத்ரேயன் இருக்கிறானா? உங்கள் ஊரில் இந்தப் பெயர் அதிகமோ?” என்று கௌதம் படிகளேறிக் கொண்டே நண்பனைக் கேட்டான்.

”அப்படிக் கிடையாது. என் சொந்தப் பெயரே கூட அது இல்லை. சில பேர் என்னை மைத்ரேயன் என்று கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதே போல் அந்தப் பையனும் வேறு பெயர் உடையவனாக இருப்பான். அவனை அந்த அதிகாரி போல் சிலர் மைத்ரேயன் என்று கூப்பிடுகிறார்கள்....” மைத்ரேயன் சொன்னான்.

கௌதமுக்கு குழம்பியது. ’ஏன் அப்படி வேறு பெயர் வைத்துக் கூப்பிட வேண்டும்?’

அவன் அந்த சந்தேகத்தைக் கேட்கும் முன் வாசற்கதவை அடைந்து விட்டார்கள். ஒற்றைக்கண் பிக்குவுக்கு மைத்ரேயன் நெருங்க நெருங்க இதயம் சம்மட்டியால் அடிப்பது போல் உணர்வது அதிகமாகிக் கொண்டு வந்தது. மைத்ரேயனின் பார்வை ஒரு கணம் அவரை ஊடுருவியது. அவருடைய அந்தராத்மாவையே அவன் பார்த்த மாதிரி இருந்தது. அவர் அவனை ஒழித்துக் கட்டும்படி நாசுக்காக லீ க்யாங்கிடம் சொன்னதைக் கூட அறிந்திருப்பானோ? அவன் உள்ளே நுழைந்தவுடன் அவரையும் அறியாமல் மண்டியிட்டு வணங்கினார். ஆனால் பேச வார்த்தைகள் எழவில்லை.

மைத்ரேயன் பதிலுக்கு தலை தாழ்த்தி வணங்கினான். டோர்ஜேக்கு தன் ஆசிரியர் அந்த மைத்ரேயன அப்படி வணங்கியது பிடிக்கவில்லை. அப்படியானால் அவரே அந்தச் சிறுவனை மைத்ரேயன் என்று ஒத்துக் கொண்டது போலத்தானே.... அவன் முகம் சிறுத்தது. சமையல்காரனும் ஒற்றைக்கண் பிக்குவின் வணக்கத்தை ரசிக்கவில்லை. அவன் வந்த இரண்டு சிறுவர்களையும் முறைத்தான். அங்கே ஒரு இறுக்கம் சூழ ஆரம்பித்தது.

ஆனால் உள்ளே நுழைந்தவுடன் மனம் மகிழ்ந்தவன் கௌதம் தான். தங்கள் வயதை ஒத்த பையன் உள்ளே இருப்பதைப் பார்த்தவுடன் அவன் ஆனந்தம் அடைந்தான். மைத்ரேயனிடம் சந்தோஷமாகச் சொன்னான். “ஓ இந்தப் பையனும் நம் வயது தான். மூன்று பேரும் நன்றாக விளையாடலாம்.....”

அவன் மைத்ரேயனிடம் தமிழில் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. சமையல்காரன் மைத்ரேயனிடம் கேட்டான். “அவன் என்ன சொல்கிறான்”

மைத்ரேயன் திபெத்திய மொழியில் மொழிபெயர்த்தான். கௌதம் அவன் சொல்லச் சொல்ல டோர்ஜேயை நெருங்கி கையை நீட்டி அவன் கையை குலுக்கி சந்தோஷமாக அறிமுகப்படுத்திக் கொண்டான். “நான் கௌதம்....”

மைத்ரேயன் மொழி பெயர்த்துச் சொன்ன விஷயமும், கௌதமின் நட்பான கை குலுக்கலும் டோர்ஜேயை திகைக்க வைத்து பின் நட்புடன் புன்னகை பூக்க வைத்தது. அவன் தன் வயதையொத்த பையன்களுடன் விளையாடிப் பல காலம் ஆகி விட்டது...

ஒற்றைக்கண் பிக்கு பெரும் திகைப்புடன் மைத்ரேயனைப் பார்த்துக் கொண்டே நின்றார். மூன்று பேரும் நன்றாக விளையாடலாம் என்று அந்தச் சிறுவன் சொன்னதை மைத்ரேயன் மொழிபெயர்த்த தொனியில் அதை வரவேற்கும் தோரணை அல்லவா இருக்கிறது. இவன் நிஜமாகவே மைத்ரேயன் தானா? டோர்ஜேயும் அந்த இன்னொரு சிறுவனும் இப்போதே நண்பர்களாகி விட்டது போல் இருந்தது. பக்கத்தில் சமையல்காரன் வேறு நிற்கிறான். அவன் என்ன நடக்கிறது என்பதை லீ க்யாங் காதில் உடனடியாகப் போட்டு வைப்பான். டோர்ஜேக்கு வேறு வினையே வேண்டாம்.....

அவர் மெல்ல மைத்ரேயனிடம் சொன்னார். “லீ க்யாங் அவர்கள் உங்களை எங்கள் மைத்ரேயருக்கு தியானம் சொல்லித் தரத்தான் இங்கே இருத்தி இருக்கிறார். நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டு காலத்தை வீணாக்குவதை அவர் அனுமதிக்க மாட்டார்.....”

டோர்ஜேக்கு அப்போது தான் சமையல்காரன் அங்கேயே நிற்பது நினைவுக்கு வந்தது. ஆசிரியரின் பேச்சுக்குப் பின்னால் உள்ள காரணத்தை விளங்கிக் கொண்ட அவன் மெல்லப் பின் வாங்கி ஒற்றைக்கண் பிக்கு அருகில் நின்று கொண்டான்.

மைத்ரேயன் அமைதியாகவும் உறுதியாகவும் சொன்னான். “நன்றாக விளையாட முடிந்தால் தான் தியானமும் கைகூடும். அதனால் இது தியானத்தின் முதல்படியே....”

ஒற்றைக்கண் பிக்கு அதிர்ந்து போனார். இது வரை யாரும் இது போல் சொல்லிக் கேள்விப்பட்டதில்லை. சமையல்காரன் கண்களைக் குறுக்கிக் கொண்டு மைத்ரேயனைப் பார்த்தான்.

மைத்ரேயன் அமைதியாகத் தொடர்ந்தான். “எதிலும் முழுமையாக ஈடுபட முடிந்தால் மட்டுமே ஒருவனால் தியானத்திலும் வெற்றியடைய முடியும். இந்த வயதில் உங்கள் மைத்ரேயனால் விளையாட்டு அல்லாத வேறொன்றில் முழுமையாக ஈடுபட முடியுமா?"

ஒற்றைக் கண் பிக்குவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருக்கு ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. சமையல்காரன் சந்தேகக்கண்ணோடு அங்கு நடப்பதைக் கவனித்தான்.

மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “உங்களுக்கு விருப்பமில்லா விட்டால் விளையாட்டும் வேண்டாம், தியானமும் வேண்டாம். விட்டு விடலாம். லீ க்யாங் அவர்கள் வந்தால் நீங்களே தெரிவித்து விடுங்கள்.... நாளைக்கு நான் சொல்லித்தர முன்வரவில்லை என்று என்னைச் சொல்லக்கூடாது....”

ஒற்றைக்கண் பிக்கு சமையல்காரனிடம் ”நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார். சமையல்காரன் சரி, வேண்டாம் என்ற இரண்டிலுமே ஆபத்தை உணர்ந்தான். லீ க்யாங் என்ன சொல்வான் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. “நீங்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள். எனக்கு வேலை இருக்கிறது” என்று சொல்லி விட்டு அவன் வேகமாக உள்ளே போய் விட்டான்.

சற்று முன் மைத்ரேயன் மேல் ஏற்பட்டிருந்த அசூயை டோர்ஜேக்கு குறைந்து போனது. எவ்வளவு சாமர்த்தியமாய் பேசி இந்த சமையல்காரனை உள்ளே துரத்தி விட்டான். வேவு பார்க்கும் நேரத்தில் ஆணியடித்தது போல் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நிற்கும் சமையல்காரனைத் துரத்துவது சாதாரண காரியம் அல்ல.

மெல்ல அவனும் சாமர்த்தியமாக சத்தமாகச் சொன்னான். “தியானம் பழக என்ன செய்வதானாலும் நான் செய்யத் தயார்.”

மைத்ரேயன் அவனைப் பார்த்துப் புன்னகைக்க டோர்ஜேயும் புன்னகைத்தான். ஒற்றைக்கண் பிக்குவுக்கு நடப்பது எதுவும் நல்லதாகத் தெரியவில்லை.



லீ க்யாங் திபெத்தின் எல்லா எல்லைகளிலும் சோதனைகளைப் பலப்படுத்தினான். முக்கியமாக விமானங்கள் மூலமாக வருபவர்களைத் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தக் கட்டளையிட்டிருந்தான். அமானுஷ்யன் எல்லா வேடங்களையும் எளிதாகப் போட்டு அந்த வேடங்களாகவே மாறிவிட முடிபவன் என்பதால் அவன் மகன் திபெத்தில் இருக்கக்கூடும் என்று தெரிய வந்தால் உடனடியாக ஒரு வேடம் போட்டு விமானம் வழியாகவே திபெத் போய் சேர வாய்ப்பு இருப்பதாக எண்ணினான். அதனால் அமானுஷ்யனாக இருக்கலாம் என்று சின்னதாய் சந்தேகம் வந்தாலும் அவனைப் படமும், வீடியோவும் எடுத்து அனுப்பி லீ க்யாங் அவனல்ல என்று திருப்தி அடைந்த பின்னரே விமானநிலையத்தைத் தாண்ட விடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான். தினமும் வெளிநாடுகளில் இருந்து திபெத் நுழைபவர்கள் பற்றிய விவரம் புகைப்படங்களுடன் தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தான். அன்று வந்தவர்கள் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட 16 வெளிநாட்டினர். வியாபாரிகள், பேராசிரியர்கள், புத்தமதத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்.... மூன்று விமானங்களில் ஏழு, ஐந்து, நான்கு என்ற எண்ணிக்கையில் வந்து சேர்ந்தவர்கள்.

மைத்ரேயன் விஷயத்தில் முடிவெடுக்க மாரா திபெத்தில் சைத்தான் மலையில் கூட்டிய கூட்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள் என்பதை அவன் அறிந்திராவிட்டாலும் மைத்ரேயன் திபெத்தில் இருக்கையில் எல்லாமே சந்தேகத்தை ஏற்படுத்கின்றன என்று எண்ணியவனாய் அந்த 16 பேர் திபெத்தில் எங்கு எப்படி போகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வாங் சாவொவிடம் உத்தரவிட்டான்.


(தொடரும்)

என்.கணேசன்


(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)


6 comments:

  1. அர்ஜுன்August 4, 2016 at 6:36 PM

    மைத்ரேயன் செம கலக்கல்.

    ReplyDelete
  2. தியானம் விளையாட்டு சம்பந்தம் நானும் முதல் முரையாக கேள்விபடுகிறேன். ஆனால் லாஜிக் சரி தான். மைத்ரேயன் பளான் தான் என்ன?

    ReplyDelete
  3. அடடா இந்தனை நாளாக என்னை அமானுஷ்யனின் ரசிகன் என்றேன்... நான் மைத்ரேயனின் ரசிகன்...☺☺☺☺👍

    ReplyDelete
  4. I love Gowtham's innocence. You make every character special sir.

    ReplyDelete
  5. I purchased and read the novel anna. It is a great experience. The encounter between mara and mythreyan is the excellent part of the book.

    ReplyDelete