”நீ வரவில்லை
என்றால் எனக்கு விதித்தது இவ்வளவு தான் என்று போய் விடுவேன். இனி எந்தக் காரணம்
கொண்டும் உன்னை வந்து தொந்தரவு செய்ய மாட்டேன்.....” என்று சேகர்
வருணுக்குக் கடிதம் அனுப்பி இருந்தானே ஒழிய அப்படி நடந்து கொள்ளும் உத்தேசம்
அவனிடம் சுத்தமாக இருக்கவில்லை. என்ன தான் அன்று திடீர் என்று அவனை சந்தித்ததில்
நிலை தடுமாறி வருண் கடுமையாகப் பேசி இருந்தாலும் பின் யோசித்து மனம் மாறி விட வாய்ப்பு
உண்டு என்று சேகர் எதிர்பார்த்தான். வசதியான வாழ்க்கைக்கு வருண் ஆசைப்பட்டால் ’என்னிடம் நிறைய
பணம், நிலம், வசதி இருக்கிறது என்று’ எழுதியதைப் படித்து விட்டு அவனுடன் வந்து
விடுவான் என்று சேகர் நினைத்தான். காதலுக்குப் பணிகிறவனாக இருந்தால் ’வந்தனாவை உனக்குத்
திருமணம் செய்து வைப்பேன்’ என்பதைப் படித்து விட்டு இசைவான் என்று
நினைத்தான். அந்த இரண்டுக்குமே ஒத்து வராவிட்டால் ’எனக்கு விதித்தது
இவ்வளவு தான் என்று போய் விடுவேன், இனி எந்தக்காரணம் கொண்டும் உன்னை வந்து
தொந்தரவு செய்ய மாட்டேன்....’ என்று கடைசியாக உருக்கமாய் எழுதியதைப்
படித்து விட்டு இரத்த பாசத்தினால் வருவான் என்று நினைத்தான். ஆனால் அவன்
எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி விட்டு வருண் வராமல் இருந்தது சேகருக்குப் பெருத்த ஏமாற்றமாகத் தான் இருந்தது.
நன்றாக யோசிக்கையில் வருண் பேசும் போது ‘என்றாவது போலீஸ் உன்னைத்
தேடி வரும்’ என்று
சொன்னதும், ’என் அப்பா
கையில் நீ சிக்கினால் சாவே பரவாயில்லை என்று நினைக்க வேண்டி வரும்’ என்று சொன்னதும்
எச்சரிக்கை உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தி விட்டது. பையன் அதிகமாய் நெருக்கினால்
போலீஸை அணுகவும் வாய்ப்பு இருக்கிறது. வருண் அப்பா என்று சொல்லும் நபர் கொஞ்சம்
விவகாரமான நபராகவே அவனுக்கும் தோன்றியது. அதனால் தான் அவன் போய் விட்டான் என்கிற
எண்ணத்தை வருணிடம் ஏற்படுத்தி விட்டு அவ்வப்போது போய் கண்காணிக்க சேகர் முடிவு
செய்தான். எனவே தான் விமான நிலையத்திற்கு
வருண் வராமல் போகவே சேகர் கோயமுத்தூரில் வேறு ஒரு பகுதியில் ஒரு லாட்ஜில் அறை
எடுத்துத் தங்கினான்.
ஜானகியிடம் சேகர் முன்பே வருணைப் பார்த்துப் பேச முற்பட்டதையும்,
மகன் மனதில் சஹானா வளர்த்து வைத்திருந்த வெறுப்பின் காரணமாக அவன் தந்தையை ஏற்றுக்
கொள்ள மறுத்ததையும் தனக்கேற்ற விதமாகத் துக்கத்துடன் தெரிவித்து அவளது பூரண
இரக்கத்தை சம்பாதித்து விட்டிருந்தான். அவன் இந்த விவகாரம் முடியும் வரை அவளுடைய
நல்லபிப்பிராயத்தைத் தக்க வைத்துக் கொள்வது என்று முடிவு செய்திருந்தான். அதனால் கிளம்புவதற்கு
முன் ஜானகியிடம் ஒரு வேலையாக சில நாட்கள் வெளியூர் போக வேண்டி இருக்கிறது என்று
மட்டும் தெரிவித்தான். அவளும் இடமாற்றம் உங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று
சொல்லி இளகிய மனதுடன் வழியனுப்பி இருந்தாள்.....
சேகர் ஆணாதிக்கமே சரி என்று நினைக்கும் தந்தையாலும், அதைச்
சிறிதும் எதிர்க்காமல் அடங்கி ஒடுங்கியே வாழ்ந்த தாயாலும் வளர்க்கப்பட்டவன். அவன்
தன் தாயைப் போலவே அடங்கி ஒடுங்கிப் போகும் ஒரு மனைவியையே தனக்கும்
எதிர்பார்த்தான். கல்வியறிவு இல்லாத ஒரு பெண்ணை மனைவியாக அவன் ஏற்றிருந்தால்
ஒருவேளை எதிர்பார்த்தபடியே எல்லாம் நடந்திருக்கலாம். ஆனால் நன்றாகப் படித்த,
தைரியமான, தொலைக்காட்சி ஒன்றில் வேலைக்குப் போகிற ஒரு பெண்ணை மண்ந்து கொண்டது அவன்
செய்த பெரிய தவறு என்பதை திருமணத்திற்குப் பின் அவன் புரிந்து கொண்டான். அவளுடன்
அவன் சந்தோஷமாக வாழ்ந்ததே சுமார் ஆறுமாத காலம் தான். அவனுடைய ஆதிக்கத்திற்கு அடங்க
மறுத்த அவளுடைய சுதந்திரப் போக்கு அவனுக்கு சகிக்க முடியாததாக இருந்தது. அவன் குளவியாய் வார்த்தைகளில் கொட்டினாலும்
அதில் அதிகம் பாதிக்கப்படாமல், சண்டையும் போடாமல்., புழுவைப் போல் அவள் அலட்சியப்படுத்தி
விட்டு கண்டு கொள்ளாமல் போகும் விதம் அவனுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. படுக்கையில்
கூட அவனை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்படும் ஜடம் போல் அவள் நடந்து
கொள்ள ஆரம்பித்தது வாழ்க்கையை நரகமாகவே ஆக்கியது.
மகன் வருண் மீதும் அவனுக்கு அதீத பாசம் ஒன்றும் இருந்து விடவில்லை.
அவன் தாயைப் போலவே ஒரு அடங்காப்பிடாரியாகத் தான் வருவான் என்பது சேகரின் கணிப்பாக
இருந்தது. அதனாலேயே மகனிடமும் சேகர் மிகவும் கண்டிப்பாக இருந்தான். அந்தச்
சிறுவனும் தன் நன்மைக்குத் தான் தந்தை இப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் புரிந்து
கொண்டது போல் தெரியவில்லை. அதனால் மகன் மேலும் வெறுப்பாய் தான் இருந்தது. தாய்
மரகதத்தை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
இந்தக்
காரணங்களால் ஒரு கட்டத்தில் குடும்பத்தையே கை கழுவி விட அவன் முடிவு செய்தான்.
விவாகரத்து வாங்கினால் மனைவிக்கு ஒரு பெரிய தொகை தர வேண்டி இருக்கும். மகன்
செலவுக்கும் பணம் தர வேண்டி இருக்கும். மனைவி மகனை அப்படி விலக்கி விட்டாலும் கூட
மரகதம் அவனை ஒட்டிக் கொண்டு தான் இருப்பாள். எப்போதும் பரிதாபமாக வெறித்த பார்வை
பார்த்தபடி இருக்கும் அவளை வாழ்நாள் எல்லாம் தன்னுடன் வைத்துக் கொள்வது நித்திய
நரகம் என்று தோன்றியது.
அந்த
சமயத்தில் தான் ஒரு பிரபல துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பன் ஒருவன்
சுலபமாகத் தப்பிக்கும் வழியைச் சொன்னான். செத்தது போல் நடித்து கழன்று கொள்ளும்படி
சொன்ன அவன் வழியையும் சொல்லிக் கொடுத்தான். ஒரு தனியார் மருத்துவமனை டாக்டரும்,
அங்கு பணி புரியும் ஒரு நர்ஸும் ஒரு பெரிய தொகைக்காக அவனுக்கு உதவ முன்
வந்தார்கள். ஒரு விபத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காக அந்த மருத்துவமனையில்
சேர்ந்தான். ஐந்தாவது நாளில் ஒரு சின்ன தீ விபத்து அங்கு கச்சிதமாக அரங்கேறியது.
ஒரு அனாதைப் பிணத்தை எரிக்க வைத்து அதை சேகர் தான் என்று சேகரின் வாட்ச் மற்றும்
மோதிரத்தை வைத்து சஹானாவை நம்ப வைப்பது கஷ்டமாக இருக்கவில்லை. வேறொரு வேடம்
போட்டுக் கொண்டு வந்து தூரத்தில் இருந்தே தனக்கு நடந்த ஈமக்கடன்களை கவனித்து
ரசித்தான். அவன் மரணத்திற்கு மரகதம் அழுதாள். புரிந்தோ புரியாமலோ வருண் கூட சிறிது
அழுதான். ஆனால் சஹானாவின் கண்களில் ஈரத்தைக் கூட அவனால் பார்க்க முடியவில்லை.
’தனியாக வாழ்ந்து கஷ்டப்படும் போது தான் நீ
அழுவாய்’ என்று சேகர்
மனதில் கறுவிக் கொண்டான். அவன் தன் மரணத்தை அரங்கேற்றுவதற்கு முன்பே இன்சூரன்ஸ்
பாலிசி முதற்கொண்டு முடித்து பணத்தை எடுத்துக் கொண்டு விட்டான். அவன் ஆபிசில்
பி.எஃப் பணத்தில் கூட கடன் வாங்கி மிகக்குறைந்த பணமே அவளுக்குக் கிடைக்கும்படி
பார்த்துக் கொண்டான். அவள் கஷ்டப்பட்டு உடைந்து போவதைப் பார்த்து ஆறுதல் அடைய அவன்
ஆசைப்பட்டான். ஆனால் உத்தியோகத்தில் இருந்த அவள் கணவனின் பணம் எதுவும் கையில்
கிடைக்காததை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. காலம் போகப் போக அவள் கஷ்டப்ப்டாமல்
தப்ப முடியாது என்று கணித்து அவன் காத்திருந்தான்.
தன் நண்பன் வேலை செய்யும் அந்தத் துப்பறியும் நிறுவனத்திலேயே
வேலைக்குச் சேர்ந்து புதிதான ஒரு வாழ்க்கையை அவன் ஆரம்பித்தான். விபத்தில் மரணத்தை
அரங்கேற்றிய அந்த நர்ஸை அடுத்த மாதமே திருமணம் செய்து கொண்டான். அவள் சஹானா
அளவுக்குப் படிக்காதவள், எனவே அடங்கி நடப்பாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால்
ஆறே மாதங்களில் அவன் ஆதிக்க மனப்பான்மையைப் பொறுக்க முடியாமல் அவள் பணம், நகை
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடிப் போனாள். அவளைத் தேடிக் கண்டுபிடித்து அவன் மிரட்டிய
போது அவனுடைய தில்லுமுல்லுகளைப் போலீஸில் தெரிவிப்பதாகச் சொல்லி அவளும் பதிலுக்கு
மிரட்டினாள். அவன் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவன் என்பதால் அவன் பற்றிய
அனைத்து உண்மைகளையும் விவரமாக எழுதி ஒரு தோழியிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும்,
தனக்கு சந்தேகப்படும்படியாக மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் அது போலீஸ் கைக்குப்
போய்ச் சேரும் என்றும் கூடத் தெரிவித்தாள். அவள் உண்மையாகவே சொல்கிறாள் என்பது
விளங்கிய பிறகு வேறு வழியில்லாமல் அவனுக்கு அவளிடமிருந்து அமைதியாக விலக வேண்டி
வந்தது.
ஆனால் தன் புதிய வேலை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தவர்களை
வேவு பார்க்கிற, அவர்களது ரகசியங்களை அறிகிற அந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்தான். பணமும்
நன்றாகக் கிடைத்தது. வேலை இல்லாத நேரங்களில் அவ்வப்போது போய் சஹானாவை வேவு
பார்த்தான். அவள் அவன் எதிர்பார்த்தபடி உடைந்து போகாமல் நிம்மதியாகவே இருந்தது அவனுக்கு
வயிற்றெரிச்சலாக இருந்தது.
ஒரு முறை ஒரு வேலையாக இரண்டு மாதங்கள் அவன் கான்பூரில் தங்க
வேண்டி வந்தது. அவன் திரும்பி வந்த போது சஹானா வீடு காலி செய்து போயிருந்தாள். தன்
ஆட்களை அனுப்பி அவள் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஜெய்பால்சிங் என்ற
பஞ்சாபிக்காரரை விசாரிக்க வைத்தான். சஹானா ஒரு மிகநல்ல மனிதனைத் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டதாக அவர் சொன்னார். அவனை சஹானாவும், வருணும்,
மரகதமும் மிகவும் நேசிக்கிறார்கள் என்றும் அவன் சக்தி வாய்ந்த வித்தியாசமான மனிதன்
என்றும் அவர் சந்தோஷமாகச் சொன்னார். அவருமே அந்த மனிதனை மிகவும் நேசித்துப்
பெருமையாகப் பேசியதாக சேகரின் ஆட்கள் அவனிடம் தெரிவித்த போது அவனுக்கு வயிறெரிந்தது.
ஏதோ ஒரு முட்டாள் சஹானாவைத் திருமணம் செய்து கொண்டு அவள் மகனையும், மாமியாரையும்
கூட ஏற்றுக் கொள்வான் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பல
விதங்களில் அந்த ஆள் பற்றிய தகவல்களையும், அவர்கள் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ள
அவன் முயற்சி செய்தான். அவனுடைய துப்பறியும் நிறுவன ஆட்கள் கூட அவன் முயற்சியில்
சேர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
வருடங்கள்
பல கழிந்தபின் தற்செயலாக அவன் தன் தாயைப் பார்க்க நேர்ந்து, அவள் மூலமாக அவர்கள் இருப்பிடத்தையும்
பார்க்க முடிந்த போது அது தன் அதிர்ஷ்டமே என்று சேகர் நினைத்தான். நடுத்தர வயதை
அடைந்து விட்டிருந்த அவனுக்கு இனி எதிர்காலத்தில் ஒரு நிலையான குடும்பம் வேண்டும் என்று
தோன்ற ஆரம்பித்தது. அடக்கி ஆள ஒரு ஜீவனாவது வேண்டும் என்று ஆசை அரும்பு விட
ஆரம்பித்தது. சந்தோஷமாகத் தெரிந்த சஹானாவிடம் இருந்து மகன் வருணைப் பிரித்து
தன்னுடன் அழைத்துப் போக அவன் எண்ணினான். சஹானா சந்தோஷத்தைக் கெடுத்தது போலவும்
ஆகும், வருணைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது போலவும் ஆகுமென்று எண்ணி
முயற்சித்தான்.
மகன்
அவனை அப்பா என்று ஒருமுறை கூட அழைக்காதது மட்டுமல்லாமல் ஏன் சாகவில்லை என்று
ஆத்மார்த்தமாகவே கேட்டது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருந்தது. ஆரம்பத்தில்
வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பணம், பாசம், காதல் என்று பல விதமாய் ஆசை
காட்டியும் வருண் அதில் மசியாமல் போன போது அவனும் சஹானாவுடன் சேகரின் எதிரியின்
பட்டியலில் இணைந்து கொண்டான்.
அடிக்கடி இரவு நேரங்களில் மாறுவேடத்திலேயே சஹானாவின் வீட்டருகே
உலாவி அங்கிருந்த நிலவரத்தைக் கூர்ந்து கண்காணித்து வந்த சேகருக்கு கௌதம் மூலமாக ஒரு
நாள் ஒரு புதிய தகவல் கிடைத்தது. கௌதம் தன் நண்பனைத் தொலைவில் பார்த்து தன் தந்தை
நாளை காலை வந்து விடுவார் என்று சந்தோஷமாக கத்தித் தெரிவித்தது சேகர் காதில்
விழுந்தது.
அந்த சக்தி வாய்ந்த வித்தியாசமான மனிதனைப் பார்த்து எடைபோடவும்,
அவனைத் தக்க முறையில் கையாளவும் சேகர் தயாரானான்.
மைத்ரேயன் புன்னகைத்தான்.
புத்தகயாவில் இருந்து புதுடெல்லிக்கு
விமானத்தில் சென்று கொண்டிருந்த போதும் போதி மரத்தருகில் கண நேரமே கண்ட அந்தக்
காட்சியே அக்ஷய் மனதில் திரும்பத் திரும்ப ஓடியது. ஏதோ
அதிநுட்பமான நிகழ்வு நடந்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக விளங்கியது.
மைத்ரேயனோ ஒன்றும் நடக்காதது போல் இப்போதும் அமர்ந்திருந்தான்.
அக்ஷய் நேரடியாகவே அவனிடம் கேட்டான். “மகாபோதி மரத்தருகில்
என்ன நடந்தது?”
மைத்ரேயன் புரியாதது போல் விழித்து விட்டு “நாம் தான் நடந்தோம்” என்றான்.
அக்ஷய் அவனை முறைத்தான். ‘நேபாள எல்லையில் இவனை அறைந்ததில் தப்பே
இல்லை’ என்று
தோன்றியது.
(தொடரும்)
என்.கணேசன்
Fantastic Ganesan sir.
ReplyDeleteஅமானுஷ்யனின் ரசிகர்களாக இருந்த எங்கள் மனதில் மைத்ரேயனும் இடம் பிடித்து விட்டான். சேகரின் மன ஓட்டத்தை பின்னி எடுத்திருக்கிறீர்கள். கேரக்டர்கள் உங்கள் பேனாவில் நிஜமாகி விடுகிறார்கள். ஹேட்ஸ் ஆஃப் கணேசன் சார்
ReplyDeleteSuperb AnNa...
ReplyDelete