என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, March 24, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 91


கௌதமும், மைத்ரேயனும் விளையாட சேர்ந்து போக, அவர்கள் பின்னாலேயே அக்‌ஷய் புறப்பட்டான்.

வருண் கேட்டான். “நீங்கள் ஏன் அப்பா அவர்கள் பின்னாலேயே போகிறீர்கள்?”

அக்‌ஷய் சொன்னான். “மைத்ரேயனை பாதுகாப்பில்லாமல் வெளியே அனுப்ப முடியாது வருண். அவனை ஆசானிடம் சேர்க்கும் வரை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.”

பிரயாணக்களைப்புக்கு அப்பா ஓய்வு கூட எடுக்க முடியாத நிலையை இந்த மைத்ரேயன் உருவாக்கி விட்டானே என்று வருணுக்குக் கோபம் வந்தது.

அக்‌ஷய் சொன்னான். “கூட நீயும் வாயேன். அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே நாம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம்”

வருணின் வருத்தம் உடனே குறைந்தது. தானும் கூடக்கிளம்பினான். வெளியே வந்த போது எதிர் வீட்டில் இருந்து வந்தனா ஸ்கூட்டியுடன் வெளியே வந்து கொண்டிருந்தாள். அக்‌ஷய்க்கு அவளைப் பார்த்தவுடன் வருண் முன்பு சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது. வந்தனாவைக் கூர்ந்து பார்த்தான். நல்ல லட்சணமான பெண். “வருண். இது தானே நீ சொன்ன பெண்” என்று முகம் மலரக் கேட்டான்.

வருண் பரிதாபமாகத் தலையசைத்தான். அக்‌ஷய் அவனிடம் பரபரப்போடு கேட்டான். “என்ன வருண், அறிமுகம் செய்து வைக்க மாட்டாயா?”

வருண் மெல்லக் கேட்டான். “அப்பா, எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?”

“சொல்லு வருண்”

“தயவு செய்து அந்தப் பெண் பற்றி என்னிடம் இனி எதுவும் கேட்காதீர்கள் அப்பா”

மகனின் முகத்தில் தாங்க முடியாத வலியைப் பார்த்த அக்‌ஷய் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அது பற்றிப் பேச முற்படவில்லை. “சரி வருண் வா போகலாம்” . போகும் போது வந்தனாவை அக்‌ஷய் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் ஆரம்பத்தில் இருந்தே இந்தப்பக்கம் திரும்பவில்லை. இருவருக்கும் இடையே காதல் பிணக்கோ?

நடந்து போகும் போது வருண் மனம் மிகவும் கனத்திருந்தது. அவன் இது வரை அப்பாவிடம் இது போல் பேசியதில்லை. இன்று அப்படி அவன் பேசிய பின் கூட “ஏன்?” என்ற சின்னக் கேள்வி கூட கேட்காமல், கோபப்படாமல், அவனுடன் இயல்பாக அக்‌ஷய் நடக்க முடிந்தது அவனை பிரமிக்க வைத்தது. இது போல் ஒரு தந்தையைப் பெற அவன் முற்பிறவியில் பெரும் தவம் செய்திருக்க வேண்டும்!

மைதானத்தை நெருங்குவதற்கு முன் முன்னால் மைத்ரேயனுடன் சென்று கொண்டிருந்த கௌதமை அக்‌ஷய் அழைத்துச் சொன்னான். “யார் கேட்டாலும் இது அப்பாவின் நேபாள நண்பரின் மகன், விடுமுறையைக் கழிக்க இங்கு வந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டும், புரிந்ததா?”. பலமாகத் தலையசைத்த கௌதம் மைதானம் கண்ணுக்குத் தெரிந்ததும் மைத்ரேயன் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினான். அங்கே அவன் நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

மைதானத்தில் கௌதம் மைத்ரேயனை தன் மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க அக்‌ஷயும், வருணும் ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டார்கள். கௌதமும், அவன் நண்பர்களுமாகச் சேர்ந்து மைத்ரேயனுக்கு கிரிக்கெட் விளையாடச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.....

“அப்பா நீங்கள் திபெத்தில் இருந்து எப்படித் தப்பித்து வந்தீர்கள்? அதை விவரமாகச் சொல்லுங்கள்” வருண் ஆர்வத்துடன் கேட்டான்.

பார்வையை அதிகமாக மைதானத்தை விட்டு எடுக்காமல் அக்‌ஷய் சொல்ல ஆரம்பித்தான். வருண் பிரமிப்புடன் கேட்டான். கடைசியில் “தயவு செய்து வாரத்திற்கு ஒரு தடவையாவது குளியுங்கள்” என்று நேபாள ராணுவ வாகன ஓட்டி சொன்னதைச் சொன்ன போது வருண் வயிறு குலுங்கச் சிரித்தான். சற்று முன் துக்கமாக இருந்த மகன் இப்போது இப்படிச் சிரிப்பது அக்‌ஷய்க்கு சந்தோஷமாக இருந்தது. வருணின் தோளில் கை போட்டு தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மைத்ரேயன் அவர்களுக்கு இணையாகவே ஆடினான். கௌதமுக்குத் தன் புதிய நண்பன் இவ்வளவு வேகமாக கற்றுக் கொண்டு நன்றாக விளையாடுவதில் பரம சந்தோஷம். மைத்ரேயன் நன்றாக ஆடும் போதெல்லாம் அவனும் அவன் நண்பர்களும் ஆரவாரம் செய்து பாராட்டினார்கள். மைத்ரேயன் அப்போதெல்லாம் சின்னதாய் புன்னகை மட்டும் செய்தான்.

வருண் திடீரென்று கேட்டான். “இனி இவன் இங்கே இருக்கும் வரை இப்படிக் காவலுக்கு நீங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டுமா?”

“ரகசியமாய் காவல் காக்க ஆட்களை அனுப்பச் சொல்லி இருக்கிறேன்” என்றான் அக்‌ஷய்.

“இங்கே கூட இவன் உயிருக்கு ஆபத்து வரும் என்று சந்தேகப்படுகிறீர்களா?”

“இல்லை. ஆனால் அலட்சியமாக இருக்க விரும்பவில்லை”சேகர் இருட்டிய பிறகு தான் அக்‌ஷய் வீட்டுப்பக்கம் வந்தான். வரும் போதே அந்த வீட்டுக்கு ரகசியக்காவல் இருப்பதை மோப்பம் பிடித்து விட்டான். அவனையே ஒருவன் சந்தேகக்கண்ணோடு பார்ப்பதையும் கவனித்தான். மிக இயல்பாக நடந்து தன் வாடகை வீட்டை அடைந்தவன் இந்த நேரமாகப் பார்த்து கீழ் வீட்டு அம்மாள் கண்களில் பட்டுவிடுவோமோ என்று பயந்து கொண்டே வெளிக்கதவைத் திறந்து உள்ளே போனான். நல்ல வேளையாக உள்ளே ஜானகி தனக்குப் பிடித்த சீரியலில் ஆழ்ந்து போயிருந்தாள். சத்தம் இல்லாமல் மெல்ல மாடி ஏறி உள்ளே போனான். அவன் உள்ளே போன பிறகு தான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவன் சந்தேகம் தெளிந்தான்.

உள்ளே போனவன் விளக்கைக் கூடப் போடாமல், சத்தமில்லாமல் நடந்து ஜன்னல் அருகே வந்து எதிர் வீட்டை பைனாகுலர் வழியாகப் பார்த்தான்.

ஹாலில் சஹானாவின் இரண்டாம் கணவன் நீண்ட சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தான். அவன் வலது புறம் ஒரு அன்னியச் சிறுவன் அமர்ந்திருக்க, இடது புறம் கௌதம் அமர்ந்திருந்தான். அவன் காலருகே தரையில் வருண் அமர்ந்திருந்தான். வலது புற இடது புற தனி சோபாக்களில் சஹானாவும், மரகதமும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். எல்லார் முகங்களிலும் மகிழ்ச்சி..... சிறுவர்கள் அவனை ஒட்டி அமர்ந்திருந்தபடியே காலருகே வருணும் ஒட்டி அமர்ந்திருந்தது அவனுக்கு ஆத்திரத்தைத் தந்தது. “நாய்” என்று முணுமுணுத்தான்.

வருணும், சஹானாவும் அளவு கடந்து கீழ் வீட்டில் புகழ்ந்து கொண்டிருந்த அந்த ஆளை எல்லையில்லாத வெறுப்போடு சேகர் பார்த்தான். அவர்கள் எல்லாரும் சந்தோஷமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள்.... இடை இடையே சஹானாவும், அவள் இரண்டாம் கணவனும் பார்த்துக் கொண்ட பார்வைகள் காதலர்களின் பார்வையாக இருந்தது. அவள் ஒரு முறை கூட அவனை அப்படிப் பார்த்ததாக சேகருக்கு நினைவில்லை. அப்படிப்பட்டவள் திருமணமாகி பன்னிரண்டு வருடம் முடிந்து கூட இப்போதைய கணவனை அப்படிப் பார்ப்பதும் அவனும் அவளை அப்படிப் பார்ப்பதும் சேகருக்குள் வெறுப்பு கலந்த பொறாமைத் தீயை மூட்டியது. மரகதம் பெருமிதத்துடன் எல்லோரையும் பார்ப்பது எரிச்சலைக் கிளப்பியது. ’இவளெல்லாம் ஒரு தாய்’

திடீரென்று சேகருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இந்த வீட்டுக்கு எதற்கு ரகசியக் காவல்? காவல் காப்பவர்கள் யார்? யாரைக் காக்கிறார்கள்? காவலுக்குக் காரணம் அக்‌ஷய்க்கு வலது புறம் அமர்ந்திருக்கும் அந்த அன்னியச் சிறுவனாக இருக்குமோ? அந்தச் சிறுவனைக் கூர்ந்து கவனித்தான். நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவனா, இல்லை நேபாள், திபெத் போன்ற வெளிநாட்டைச் சேர்ந்தவனா? கீழ் வீட்டில் வருண் பேசிய போது அந்த ஆள் நேபாள் போயிருந்ததாய் சொன்னதாக நினைவு. நேபாளுக்குப் போனவன் அங்கிருந்து அந்தச் சிறுவனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டானோ? அந்தச் சிறுவனையே பார்த்துக் கொண்டு இருந்த போது அந்தச் சிறுவனும் அவனைப் பார்த்தான்.

அந்தச் சிறுவனின் கூரிய ஊடுருவிய பார்வையில் சேகர் ஒரு கணம் வெலவெலத்துப் போனான். எதிர் வீட்டில் இருட்டில் நின்று கொண்டு இருக்கும் சேகரை அந்தச் சிறுவன் பார்க்க வழியே இல்லை. சேகரே பைனாகுலர் வைத்துக் கொண்டு தான் இரண்டு ஜன்னல்கள் தாண்டி வெளிச்சத்தில் இருக்கும் அவர்களையே தெளிவாகப் பார்க்க முடிகிறது. அப்படி இருக்கையில் அந்தச் சிறுவன் எப்படி அவனைப் பார்க்க முடியும். ஆனாலும் அந்தச் சிறுவன் நேராகப் பார்த்ததை சேகர் மிகத் தெளிவாகவே உணர்ந்தான். குப்பென்று வியர்க்க சேகர் சுவரோரம் மறைந்து கொண்டான்.மாரா டோக்கியோவில் இருக்கும் போது அவனுக்கு அந்த அலைபேசி அழைப்பு வந்தது. “மைத்ரேயன் தங்கி இருக்கும் வீட்டுக்கு ரக்சியப் போலீஸ் காவல் இருக்கிறது”

அந்தத் தகவல் மாராவை ஆச்சரியப்படுத்தவில்லை. அமானுஷ்யன் அப்படி அலட்சியமாய் இருக்கக் கூடியவன் அல்ல. ”எத்தனை பேர் காவலுக்கு இருக்கிறார்கள்?”

“வீட்டருகே, தெருமுனை எல்லாம் சேர்ந்து ஐந்து பேர்....”

ஐந்து பேர் என்பதை மாரா குறைத்து மதிப்பிடவில்லை. ஐந்து பேரில் ஒருவனிடமிருந்து ஒரு அழைப்பு போனால் போதும், அங்கு ஐம்பது பேர் உடனடியாகக் கூடிவிடும் ஏற்பாடு கண்டிப்பாக இருக்கும். மாரா கேட்டான். “அவர்கள் இருப்பதை நீங்கள் கண்டுபிடித்ததை அவர்கள் தெரிந்து கொண்டு விடவில்லையே....”

“இல்லை.... நாங்கள் மூன்று பேர் மூன்று நேரங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே அங்கு போய் வந்து கலந்து பேசிக் கண்டு பிடித்த தகவல் இது.....”

“நல்லது.... இனி யாரும் அந்தப் பக்கம் எக்காரணம் வைத்தும் போய் உளவு பார்க்க வேண்டியதில்லை. அப்படிப் போனால் அவர்களுக்கு சந்தேகம் பிறந்து விடும். அதற்கு சிறிதும் இடம் தர வேண்டாம். ஆனால் அந்தப் பகுதியில் இருந்து மைத்ரேயன் வெளியேறினால் அது கண்டிப்பாக நமக்குத் தெரிய வேண்டும். அதனால் அப்பகுதி எல்லைகளில் எப்போதும் நம் ஆட்கள் இருக்கட்டும்....”

அலைபேசியைக் கீழே வைத்த மாரா தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.


(தொடரும்)

என்.கணேசன்5 comments:

 1. செத்தாண்டா சேகரு.

  ReplyDelete
 2. Gripping situation. going great.

  ReplyDelete
 3. லக்‌ஷ்மிMarch 25, 2016 at 11:09 AM

  வருண் அக்‌ஷய் உறவின் ஆழம் அழகு.

  ReplyDelete
 4. அழகாய்ப் பயணிக்கிறது...

  ReplyDelete
 5. Excellent narrative. I am looking forward to the next episode.

  ReplyDelete