அக்ஷயைப் பார்த்தவுடன் முதலில் ஓடிப்போய் அணைத்துக் கொண்டவன் வருண் தான். அணைத்துக் கொண்டவுடன் அவனையும் மீறிக் கண்ணீர் பொங்கியது. மகனின் கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல, அதில் வேறு ஏதோ ஆழமான துக்கமும் இருக்கிறது என்பதை உடனேயே அக்ஷயால் உணர முடிந்தது. அப்போதே என்ன என்று ஆராயும் சூழல் இல்லாததால் அது பற்றி எதுவும் கேட்காமல் மகனைப் பாசத்தோடு இறுக்கி அணைத்து தட்டிக் கொடுத்த அக்ஷய் “அழாதே.... அப்பா தான் வந்து விட்டேனே...” என்று மட்டும் சொன்னான்.
சஹானாவும், மரகதமும் நிறைந்த மனதுடன் முன் வந்து நிற்க கௌதம் “அப்பா” என்று ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டான். இளைய மகனைத் தூக்கி முத்தமிட்ட அக்ஷய் அவனை மைத்ரேயனிடம் அறிமுகப்படுத்த பின்னால் திரும்பினான். மைத்ரேயன் இங்கு வந்து சேரும் வரை அதிகம் கேட்டது கௌதமைப் பற்றித்தான்....
அது வரை அக்ஷய் பின்னால் மறைவில் இருந்த மைத்ரேயன் முன்னால் வந்து நின்றான். அக்ஷயின் வரவில் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த அந்தக் குடும்பத்தினருக்கு அப்போது தான் மைத்ரேயனும் வந்திருக்கிறான் என்பது உறைத்தது. அனைவரும் அவனையே ஆர்வத்துடன் பார்த்தனர். புத்தரின் அவதாரம் என்று சொல்லப்படும் அவனை மரகதம் கைகூப்பிக் கொண்டே பார்த்தாள். சஹானாவுக்கு அவன் தோற்றத்தில் புத்தரின் அவதாரமாகத் தெரியவில்லை. சாதாரணமாகவே தெரிந்தான். வருண் அவனை ஒரு பிரச்னையாகவே பார்த்தான். ’அப்பா இவனை ஏன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வர வேண்டும்?’ என்ற கேள்வியே அவனிடம் பிரதானமாகத் தங்கியது. கௌதம் தான் மைத்ரேயனைப் பார்த்து முதலில் புன்னகைத்தவன்.
மைத்ரேயன் எல்லோரையும் ஒரு முறை அமைதியாகப் பார்த்தான் என்றாலும் அவன் பார்வை கௌதம் மீது தான் கடைசியாகத் தங்கியது. ”நீ தான் கௌதமா?” என்று புன்னகையுடன் கேட்டான். கௌதம் ”ஆமாம்” என்றான். எல்லோரையும் மைத்ரேயனுக்குப் புன்னகையுடன் அக்ஷய் அறிமுகப்படுத்திய போது மைத்ரேயன் மரியாதையுடன் தலையைத் தாழ்த்தி வணக்கம் சொன்னான். பிறகு அக்ஷய் அவனை உள்ளே அழைத்துப் போக கௌதமிடம் சொன்னான்.
மைத்ரேயனைத் தன் அறைக்கு அழைத்துப் போன கௌதம் “நீ கடவுளா?” என்று வெகுளித்தனமாகக் கேட்டான்.
மைத்ரேயன் அதே கேள்வியைப் புன்னகையுடன் கேட்டான். “நீ கடவுளா?”
கௌதமுக்கு சிரிப்பு வந்தது. “நானா.... நான் கடவுள் இல்லை”
மைத்ரேயனும் சிரித்துக் கொண்டே சொன்னான். “நானும் கடவுள் இல்லை....”
கௌதம் நிம்மதி அடைந்தான். ’கடவுள் இல்லை என்றால் இவனையும் விளையாடச் சேர்த்துக் கொள்ளலாம்..... ‘ என்கிற எண்ணம் அவன் மனதில் ஓடியது.
மைத்ரேயன் அவனிடம் கேட்டான். “நீ என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்வாயா?....”
கௌதம் அதை விட இனிமையான வாக்கியத்தை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. “உனக்கும் விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்குமா?” என்று மகிழ்ச்சி பொங்க கேட்டான்.
மைத்ரேயன் புன்னகையுடன் ஆமென்று தலையசைத்தான். கௌதமுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன் விளையாட்டுப் பொருள்களை எல்லாம் ஆர்வத்துடன் மைத்ரேயனுக்குக் காட்ட ஆரம்பித்தான்....
சஹானா தாழ்ந்த குரலில் அக்ஷயிடம் கேட்டாள். “இந்தப் பையன் புத்தரின் அவதாரம் தானா?”
”அப்படித்தான் தோன்றுகிறது.....”
“இங்கே ஏன் அவனைக் கூட்டிக் கொண்டு வந்தீர்கள் அப்பா?” வருண் கேட்டான்.
மைத்ரேயனை ஆசானிடம் ஒப்படைக்க அங்கே நிலைமை சரியில்லை என்றும் அவனைப் பாதுகாப்பாக வைக்க ஒரு இடத்தை அவர்கள் தயார்ப்படுத்தும் வரை அவனை இங்கேயே தங்க வைக்க வேண்டியிருக்கிறது என்றும் அக்ஷய் தாழ்ந்த குரலிலேயே தெரிவித்தான்.
“இவரை எங்கே தங்க வைப்பது?...” மரகதம் கேட்டாள். தெய்வாம்சம் பொருந்திய ஒரு அவதார புருஷர் தங்க ஏதாவது சிறப்பு ஏற்பாட்டை வீட்டில் செய்ய வேண்டுமா என்கிற கேள்வி அவள் மனதில்...
“கௌதமுடனேயே தங்குவதைத் தான் மைத்ரேயன் விரும்புகிறான். அவனுடன் நன்றாக விளையாட வேண்டுமாம்.....”
மூவரும் அவனைத் திகைப்புடன் பார்த்தார்கள். வருண் வாய் விட்டே கேட்டான். “புத்தரின் உண்மையான அவதாரம் இப்படி ஆசைப்படுமா?”
“அவதார புருஷர்கள் நம் சராசரி அறிவுக்குள்ளும், எதிர்பார்ப்புகளுக்குள்ளும் அடங்குவதில்லை வருண்.....” என்ற அக்ஷய் சம்யே மடாலயத்தில் மைத்ரேயன் காலில் தர்மசக்கரம் ஒளிர்ந்ததையும், சைத்தான் மலையில் ஆபத்தான நீலக்கரடி அவனுக்கு அடங்கி அவனுடன் தங்கியதையும் சுருக்கமாகச் சொன்னான். ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் அவன் கடைசியில் சொன்னான். “அவன் இருக்கையில் நீங்கள் என்ன நினைத்தாலும் சரி, அதைச் சொல்லாமலேயே தெரிந்து கொண்டு விடுவான்.... அவன் தோற்றத்தை வைத்து குறைவாக எடை போட்டு விடாதீர்கள்...!”
அவர்கள் திகைத்தார்கள். வருண் முகத்தில் ஈயாடவில்லை....
”தாங்கள் கேட்டிருந்த பூஜைப்பொருள் சம்பந்தமாக உங்களிடம் பேச ஒருவர் வந்திருக்கிறார்.....” என்று புத்தபிக்கு ஒருவர் ஆசானிடம் வந்து சொன்னார்.
ஒரு தனியறையில் பிரார்த்தனையில் இருந்த ஆசானுக்கு அக்ஷயே வந்து விட்டானோ என்கிற சந்தேகம் ஒரு கணம் வந்தது. “அழைத்து வாருங்கள்” என்று சொல்லி விட்டு இருப்பு கொள்ளாமல் காத்திருந்தார். ஆனால் வந்த மனிதனை அவர் இதற்கு முன் பார்த்ததில்லை. உயரமாக, வாட்டசாட்டமாக இருந்த அந்த மனிதன் அவரைக் கூர்ந்து பார்த்து அவர் ஆசான் தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டது போல இருந்தது. பின் ஆசானிடம் வணக்கம் தெரிவித்த அவன் தன் அலைபேசியை எடுத்து ஒரு எண்ணை அழுத்தி விட்டுப் பேசினான். “ஆசானுடன் இருக்கிறேன்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டு மறுபக்கம் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டான். பின் அவன் ஆசானிடம் மிகத் தாழ்ந்த குரலில் சொன்னான்.
“இந்திய உளவுத்துறையில் இருந்து வருகிறேன். தங்களை சில ஒற்றர்கள் வெளியே இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் அலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இந்த நிலையில் மைத்ரேயரைத் தங்களிடம் ஆபத்தில்லாமல் சேர்க்க முடியாது என்றே எங்களுக்குப் படுகிறது. எங்கள் ஆள் ஒருவர் இரண்டு நிமிடத்தில் தலாய் லாமாவைச் சந்திப்பார். அவர் அலைபேசியில் இருந்து தலாய் லாமா என் அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு உங்களிடம் பேசுவார். இருவரும் சேர்ந்து மைத்ரேயர் விஷயத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்துச் சொல்லுங்கள்.... நான் வெளியே காத்திருக்கிறேன்....”
சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் அவரிடம் தன் அலைபேசியை அவரிடம் தந்து விட்டு அவன் வெளியேறினான். ஆசானுக்கு அந்த ஏற்பாடு மலைப்பைத் தந்தது. என்னமாய் யோசிக்கிறார்கள்! வெளியே இந்த புத்த மடாலயத்தை ஒற்றர்கள் கண்காணிப்பதை அவர் அறிவார். அவருடைய அலைபேசி எண் கண்டுபிடிக்கப்பட்டு ஒட்டுக் கேட்கப்படும் என்று தான் அவர் எண்ணி இருக்கவில்லை. ஆனால் அக்ஷய் அன்று அவரிடம் கவனமாகப் பேசிய விதம் பிறகு ஒரு சந்தேகத்தை எழுப்பித் தான் விட்டிருந்தது. மைசூரின் அருகில் குஷால்நகர் என்ற ஊரை அடுத்திருந்த பைல்குப்பா என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய திபெத்திய மடாலயத்தில் தங்கி இருந்த அவருக்கு அங்கிருந்த பொதுத் தொலைபேசியிலோ, மற்றவர்களின் அலைபேசியிலோ தலாய்லாமாவிடம் அடுத்த கட்ட ஆலோசனை பற்றி பேசவும் தைரியம் வரவில்லை. அதனால் அமைதியாகக் காத்திருந்த அவருக்கு இந்திய உளவுத்துறை தலாய் லாமாவுடன் பேச ஏற்படுத்தித் தந்திருந்த இந்த வாய்ப்பு பெரிய ஆசுவாசத்தை ஏற்படுத்தியது....
அந்த அலைபேசி இசைத்தது. ஆசான் பேசினார். “ஹலோ...”
“வணங்குகிறேன் ஆசானே!” தலாய் லாமாவின் குரல் மெல்ல கேட்டது.
“சொல் டென்சின். புத்தரின் அருளால் மைத்ரேயர் பத்திரமாய் இந்தியா வந்து விட்டார். அடுத்தது என்ன என்பதை நீ தான் முடிவு செய்ய வேண்டும்.”
”ஆசானே நேற்று அவர் பத்திரமாய் வந்து சேர்ந்த செய்தியைக் கேட்டு நிம்மதி அடைந்தேன். ஆனால் நேற்றிரவு நான் கண்ட துர்சொப்பனம் அந்த நிம்மதியைப் போக்கடித்து விட்டது. மைத்ரேயர் பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டேன். மிகவும் தத்ரூபமான கனவு... அது போன்ற கனவுகள் மெய்யாகாமல் போனதில்லை என்பது என் கடந்த கால அனுபவம்..... நம் குருநாதர் ஓலைச்சுவடிகளின்படி மைத்ரேயருக்கு இன்னும் பதினோரு மாத காலம் ஆபத்துக்காலம் என்பதும் நினைவில் வந்து என்னை பயமுறுத்துகிறது. சம்யே மடாலயத்தில் அவர் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து போல் இந்தியாவில் கூட எப்போது வேண்டுமானாலும் நேரலாம்...” தலாய் லாமாவின் குரல் கவலையுடன் ஒலித்தது.
ஆசான் திகைத்தார். தலாய் லாமா போன்றவர்களுக்கு வரும் கனவுகள் விண் உலகத்திலிருந்து வரும் செய்திகள் அல்லது எச்சரிக்கைகள் என்பதில் அவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.....
”சரி என்ன செய்யலாம்.....?” ஆசான் கேட்டார்.
“அப்பா, நான் இவனையும் விளையாடக் கூட்டிக் கொண்டு போகட்டுமா?”...” கௌதம் மைத்ரேயனுடன் வந்து கேட்டான். அவன் முகத்தில் உற்சாகம் பொங்கி இருந்தது. அவனைப் பொருத்த வரை விளையாட ஒரு நண்பன் கூடுதலாய் கிடைத்து விட்டான். இருவரும் கை கோத்து தான் நின்றிருந்தார்கள்.
“எங்கே என்ன விளையாடப் போகிறீர்கள்?” அக்ஷய் மகனைக் கேட்டான்.
“மைதானத்தில் கிரிக்கெட் விளையாடப் போகிறோம். இவனுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாதாம்... சொல்லிக் கொடுக்கச் சொல்கிறான்.....”
அக்ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை தவழ்ந்தது. இவன் நம் மனதைப் படிப்பது போல் இவன் மனதையும் படிக்க முடிந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அக்ஷய்க்குத் தோன்றியது.....
திபெத்திலிருந்து நீண்ட தூரம் வந்து விட்ட போதும் மைத்ரேயனுக்கு ஆபத்து முழுமையாக விலகி விடவில்லை என்பதை அவன் அறிவான். அதனால் அவன் தன் எச்சரிக்கை உணர்வை இந்தியா வந்து சேர்ந்த பிறகும் சிறிதும் தளர்த்தவில்லை. புதுடெல்லி விமான நிலையத்தில் கூட மைத்ரேயன் ஒரு ஆளை ஒரே ஒரு கணம் பார்த்த விதம் அவனுக்கு அபாயச்சங்கை ஊதியது. ஆனால் நல்ல வேளையாக அந்த ஆள் ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவர் அவர்கள் பக்கம் திரும்பக்கூட இல்லை. விமானத்திலும் கூட அப்படித்தான் இருந்தார். கோயமுத்தூரில் கால்டாக்சியில் வரும் போது கூட தங்களை ஏதாவது வாகனம் பின் தொடர்கிறதா என்று அவன் பார்த்துக் கொண்டே இருந்தான். இல்லை. உணர்ந்த ஆபத்து பிரமை என்று வீடு வந்து சேர்ந்த பின் தான் நிச்சயமாகியது.
“அப்பா நாங்கள் போகட்டுமா?” கௌதம் பொறுமை இழந்தான்.
அக்ஷய் “சரி போங்கள்” என்றான்.
(தொடரும்)
என்.கணேசன்
எங்கள் அமானுஷ்யனே ஏமாறுவதாக காட்டுவதை அமானுஷ்யனின் தீவிர ரசிகர்கள் கண்டிக்கிறோம்.
ReplyDeleteMe too...
Deleteதிக் திக் மூமெண்ட்.
ReplyDeletePlease rectify the below mistake sir,
ReplyDeleteகௌதமுடனேயே தங்குவதைத் தான் மைத்ரேயனை விரும்புகிறான்
I think its not maithreyanai, its maithreyan.
Also now I am able to copy the sentences from your blog
Rectified. Thank you.
Deleteரொம்ப நல்லாப் போகுது சார்... அருமை.
ReplyDelete