என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, March 21, 2016

யோகியிடம் பெற்றோர் கேட்ட நேரெதிர் வரங்கள்!


மகாசக்தி மனிதர்கள் - 53

ரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம் அருணாச்சலம் சொன்னான். “ஐயா தங்கள் குழந்தை, வீட்டுத் திண்ணையில் இருந்து கீழே விழுந்து விட்டது. அதனால் அதன் கை ஒடிந்து விட்டது. நீங்கள் உடனே கிளம்புங்கள்

அதைக் கேட்ட ஆசிரியர் பதற்றத்துடன் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றார். வழியிலேயே அவர் வீட்டு வேலையாள் வந்து கொண்டிருந்தான். அவரிடம் அவர் குழந்தையின் கை ஒடிந்த விஷயத்தைச் சொன்னான். வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் தன் குழந்தையின் சிகிச்சைக்கு ஆக வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டார். மறு நாள் பள்ளிக்கு வந்தது முதல் அவர் அருணாச்சலத்தின் எதிரில் அமரவும் தயங்கினார். மகானாகவோ அல்லது மகேசுவரனாகவோ அவர் நினைக்க ஆரம்பித்து விட்ட பிள்ளை முன் அமர அவருக்குத் தயக்கமாக இருந்தது.  

அருணாச்சலம் “ஏன் ஐயா நிற்கிறீர்கள். அமருங்கள்என்று சொன்ன பின் தான் அவர் அமர்ந்தார்.  மாணாக்கர்கள் வணங்க வேண்டிய ஆசிரியரே இப்படித் தன்னிடம் வணங்கி நிற்கிற மனநிலைக்கு வந்ததைக் கண்ட பின் அருணாச்சலம் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். ஆக அருணாச்சலத்தின் பள்ளிக் காலம் மூன்றே மாதங்களில் முடிந்து விட்டது.  பெற்றோரும், ஆசிரியருமே வணங்க ஆரம்பித்த அருணாச்சலத்தை இனி நாமும் மரியாதையுடனேயே குறிப்பிடுவோம்.

தம்பி நமசிவாயத்தின் படிப்பும் ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்தது. வீட்டிலேயே இருந்து தந்தை சிவசிதம்பரம் பிள்ளையின் சிவபூஜைக்கு வேண்டிய வில்வம், பூக்கள் முதலானவற்றைச் சேகரித்துக் கொண்டு வருவதும், பூஜைக்கு வேண்டிய மற்ற வேலைகளைச் செய்வதும் நமசிவாயத்தின் வேலையாக இருந்தது.

அவர்கள் வீட்டருகில் ஒரு பிள்ளையார் கோயில் நந்தவனம் இருந்தது. அங்கு சென்று தான் நமசிவாயம் சிவபூஜைக்கு வேண்டிய வில்வ இலைகளையும், பல வகைப் பூக்களையும்  பறித்துக் கொண்டு வருவது வழக்கம். அப்படி நமசியவாயம் செல்கையில் ஒரு நாள் அருணாச்சலம் தன் தம்பியிடம் சொன்னார். “நீ போகும் வழியில் தேங்காய், மாங்காய் கீழே விழுந்து கிடந்தால் அதை எடுக்காதே. அப்படி எடுத்தால் அது தெய்வக்குற்றம் ஆகி விடும்

சரியென்று கிளம்பிய நமசிவாயம் அண்ணன் சொன்னபடியே கட்டுப்பாட்டோடு இருந்து பூஜைப் பொருள்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தான். ஆனால் சிறுவன் அல்லவா? எத்தனை நாட்கள் அப்படி மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்? ஒரு நாள் வழியில் விழுந்து கிடந்த தேங்காயை உடைத்துத் தின்று விட்டு போய் வழக்கம் போல் வில்வம், பூக்கள் எல்லாம் பறித்துக் கொண்டு வந்தான்.

நடந்ததைத் தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த அருணாச்சலம் தம்பியிடம் சொன்னார். “நமசிவாயம். இன்று நீ செய்த தவறுக்குப் பரிகாரம் கங்கையில் குளித்து விசுவேஸ்வரரைத் தரிசிப்பது மட்டுமே. இனி நீ பூஜைப் பொருள்கள் கொண்டு வரச் செல்ல வேண்டாம்

இக்காலத்தில் இதைப் படிக்கையில் இந்தச் சின்னத் தவறுக்கு இப்படி ஒரு பரிகாரமா, தண்டனையா என்ற கேள்விகள் மனதில் எழுவது இயற்கை. ஆனால் அக்காலத்தில் தினசரி பூஜைகளே வேள்விகள் போல கடும் நியதிகளுடனும், பக்தியுடனும் செய்யப்பட்டன. அந்த நியதிகளை மீறுவதோ, பக்திக்குறைவோ பெரும் குற்றமாகவே பார்க்கப்பட்டன. இறைவனுக்குப் பூஜை முடியாமல் உண்பது கூட ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக இருந்தது. உண்மையாகவே அது குற்றம் என்கிற பாவனையில் தான் அருணாச்சலம் அப்படிச் சொன்னாரா, இல்லை நமசிவாயத்தின் துறவற வாழ்க்கைக்கான காலம் வந்து விட்டதை உணர்ந்து சொன்னாரா என்பது நமக்குத் தெரியாது.

நமசிவாயம் குற்ற உணர்ச்சியுடன் மிகுந்த மனவருத்தமும் அடைந்தான். சில நாட்கள் கழித்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவன் காசி யாத்திரை புறப்பட்டுச் சென்று விட்டான். பெற்றோரும் உறவினரும் அவனைத் தேடியலைந்து சலித்தனர். சிவசிதம்பரம் பிள்ளையும் மீனாம்பிகையும் கடைசியில் மூத்த மகனிடமே வந்து நின்றனர்.

அருணாச்சலம் “நமசிவாயம் காசி யாத்திரைக்குச் சென்றிருக்கிறான். அவனைக் கண்டுபிடித்துத் திரும்ப வரச் சொன்னாலும் வர மாட்டான். இல்லற வாழ்க்கையை விட்டு விட்டு துறவற வாழ்க்கைக்கு அவன் திரும்பும் காலம் வந்து விட்டதுஎன்று சொன்னார்.

இளைய மகனை நிரந்தரமாகப் பிரிந்திருக்க நேர்ந்தது பெற்றோர்க்குப் பெருந்துக்கத்தைத் தந்தது. அதைக் கண்ட அருணாச்சலம் அமைதியாகச் சொன்னார். “நீங்கள் முற்பிறவிகளில் பெற்றெடுத்த பிள்ளைகள் தற்போது எங்கே? அவர்கள் உங்களுடனா இருக்கிறார்கள்? அவர்களைப் பிரிந்திருக்கும் எண்ணம் கூட தங்களிடம் இல்லையே. அப்படி இருக்கையில் நமசிவாயத்தைப் பற்றி மட்டும் எண்ணி ஏன் வருந்துகிறீர்கள்?

உலக வாழ்வில் நம்முடன் நிரந்தரமாக நிறுத்திக் கொள்ள எந்த உறவும் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை நம்முடன் இருப்போர் அந்தக் காலம் முடிந்த பின் விலகவே செய்வார்கள். இது தான் இயற்கை. இயற்கையே இதுவாக இருக்கையில் இதற்கு வருந்தி என்ன பயன் என்கிற வகையில் அருணாச்சலம் செய்த உபதேசம் ஒரு வகையில் அவர்களுக்குப் புரிந்தாலும் இன்னொரு வகையில் மாயா பாசம் தன் வேலையைச் செய்தே வந்தது. காலம் நகர்ந்தது. ஒரு கட்டத்தில் தங்களுடைய மரண காலமும் நெருங்குவதை அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். ஒருவர் மரணத்தை இன்னொருவர் சந்திக்கிற மனோபலம் இருவரிடமுமே இருக்கவில்லை.

ஒரு நாள் சிவசிதம்பரம் பிள்ளை அருணாச்சலத்திடம் வந்து வேண்டிக் கொண்டார். எனக்கு மீனாம்பிகையின் பிணத்தைப் பார்க்கும் சக்தி இல்லை. அதனால் அவளுக்கு முன்பே நான் இறந்து விட வேண்டும். என் ஈமக்கடன்களை தங்கள் கையாலேயே செய்து முடிக்க வேண்டும். இந்த வரத்தை மட்டும் எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும்.

அதே போல மீனாம்பிகையும் மகனிடம் தனியாக வந்து வேண்டினாள். “நான் சுமங்கலியாக இறக்க வேண்டும். என் ஈமக்கடன்களை தங்கள் கையாலேயே செய்து முடிக்க வேண்டும்

இளைய மகனும் தற்போது அருகில் இல்லாததால் தங்கள் ஈமக்கடன்களை மூத்த மகனே செய்து முடிக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டது இயற்கையே. ஆனால் தங்கள் மரணம் பற்றி மட்டும் பெற்றோர் இருவரும் கேட்ட வரங்கள் ஒன்றுக்கு ஒன்று எதிர் மாறாக இருந்தன.

ஒரு நாள் பெற்றோரை அழைத்து அருணாச்சலம் சொன்னார். “இன்னும் எட்டு நாட்களில் எனது கர்மம் முடிந்து விடும். நீங்கள் இருவரும் இனி சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டும், சிவ தியானம் செய்து கொண்டும் இருங்கள்

பெற்றோர் தங்கள் தலைகளில் இடி விழுந்தது போல் உணர்ந்தார்கள். தங்கள் ஈமக்கடனை முடிக்க மகனை வேண்டி நின்றால் மகன் தன் கர்மம் எட்டு நாளில் முடிவடையும் என்று சொல்கிறாரே, அப்படியானால் எட்டு நாட்களில் சமாதி அடையப் போகிறார் போல இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்கள். இறைவன் தங்களைச் சோதிப்பதாக எண்ணிய அந்தப் பெற்றோர் அருணாச்சலம் சொன்னதைத் தங்கள் உற்றார் உறவினருக்கும் தெரிவித்து விட்டு சிவன் வழிபாட்டில் அந்த எட்டு நாட்களையும் கழித்தார்கள்.

எட்டாவது நாள் சுவாமிகளின் கடைசி தரிசனத்திற்காக உறவினர்கள் வந்து விட்டார்கள்.  பெற்றோர் இருவரும் அருணாச்சலத்தின் முன்னால் அமர்ந்து மனமுருக சிவ நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று எழுந்த அருணாச்சலம் தன் கையால் தாய், தந்தை நெற்றியில் திருநீறிட்டார்.  சிறிது நேரத்தில் பெற்றோர் இருவரும் மூர்ச்சையாகி இறைவனடி சேர்ந்தார்கள்.

வந்திருந்த உற்றார், உறவினர்கள் திகைப்படைந்தார்கள். அருணாச்சலம் தன் கர்மம் முடியும் என்று குறிப்பிட்டது பெற்றோருக்குத் தான் செய்ய வேண்டிய கர்மத்தைத் தான் என்பது அப்போது தான் அவர்களுக்குப் புரிந்தது. எதிர்மாறான வரங்களைப் பெற்றோர் கேட்டிருந்தாலும் அவர்களது ஒரே கால மரணத்தில் அதை நிறைவேற்றி விட்டு அவர்களுக்குக் கொள்ளி வைத்து ஈமக்கடன்களை முடித்து விட்டு உடுத்திய ஆடையோடு அங்கிருந்து கிளம்பிய அருணாச்சலம் பின் தேசாந்திரியாய் பல ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 21.08.2015

  

2 comments:

  1. DIVINE!!! BLESSED TO READ THIS STORY!!! THANK U GANESHAN SIR FOR THE REGULAR SPIRITUAL POSTS!!!

    ReplyDelete