என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, August 1, 2013

பரம(ன்) ரகசியம் – 55


பார்த்தசாரதி அந்த போலீஸ் உயர் அதிகாரியின் கீழ் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அந்த உயர் அதிகாரி நேர்மைக்கும் திறமைக்கும் பேர் போனவர். எந்தப் பொறுப்பு தந்தாலும் தன்னால் முடிந்த அளவு நல்லதை செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் அந்தப் பொறுப்பில் வேலை பார்ப்பவர். இந்த வழக்கை திறமையான ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்த போது பார்த்தசாரதியைத் தேர்ந்தெடுத்து பொறுப்பை ஒப்படைத்தவரும் அவர் தான்.

அவரிடம் பார்த்தசாரதி தான் வந்த விஷயத்தை விளக்கிய போது அவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. கேட்ட விஷயத்தை ஜீரணிக்க அவருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. பின்பு சொன்னார். “குருஜியைக் கண்காணிக்க ஏற்பாடு செய்வது நானாக செய்ய முடிந்த விஷயம் அல்ல பார்த்தசாரதி. முதலமைச்சர் கிட்ட அனுமதி வாங்காமல் செய்ய முடியாது. ஏன்னா குருஜி பிரதமர் வரை வந்து வணங்கி விட்டுப் போகிற நபர். தகுந்த ஆதாரத்தைத் தராமல் முதலமைச்சர் அனுமதி தருவது கஷ்டம்....

பார்த்தசாரதி சொன்னார். “அந்த ஆதாரங்கள் கிடைக்கறதுக்காக தான் அவரைக் கண்காணிக்க வேண்டி இருக்கிறது...

அப்படி சொல்லி அனுமதி வாங்க முடியாது என்று உயர் அதிகாரி மறுத்து விட்டார். ஈஸ்வரின் உள்ளுணர்வு, குருஜியின் சில வித்தியாசமான நடவடிக்கைகள், குருஜி சிபாரிசில் வந்து சேர்ந்த ஆள் வேவு பார்ப்பவனாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவது போன்ற காரணங்கள் எல்லாம் போதுமானதல்ல என்று அவர் வெளிப்படையாகச் சொன்னார். எதையும் முடியும் அல்லது முடியாது என்று சுற்றி வளைக்காமல் தெரிவிக்கும் அவர் பழக்கம் பார்த்தசாரதிக்கு மிகவும் பிடித்தமானது.

அந்த உயர் அதிகாரி தொடர்ந்து சொன்னார். பார்த்தசாரதி. இந்த சிவலிங்க விவகாரத்தில் குருஜி சம்பந்தப்பட ஏதாவது ஒரு அழுத்தமான காரணம் உங்களால் சொல்ல முடியுமா? பணம், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து, புகழ், சொன்னதைக் கேட்டு உடனடியாகச் செய்ய தயாராக இருக்கிற பெரிய பக்தர் கூட்டம்- இப்படி எல்லாமே சிறப்பா இருக்கிற ஆளிற்கு இனி என்ன வேண்டும்னு அவர் சிவலிங்க விவகாரத்துல இறங்கணும்?

“இதையே தான் நானும் ஈஸ்வர் கிட்டே கேட்டேன் சார். ஈஸ்வருக்கும் சரியாய் பதில் சொல்லத் தெரியல. ஆனாலும் ஈஸ்வர் சந்தேகத்தை அலட்சியப்படுத்த முடியாதுன்னு தோணுது சார். அந்த சிவலிங்கம் சக்தி வாய்ந்ததுன்னு சொல்றாங்க. பசுபதி சாகறதுக்கு முன்னால் யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் அவரைப் பார்க்க முயற்சி செய்திருக்கார். குருஜி மாதிரி ஒரு சக்தி வாய்ந்த ஆசாமியும் கூட இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அதை நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது. நம் கற்பனைக்கெட்டாத அளவுக்குப் பெரிய சதி இந்த வழக்கில் இருக்கலாம்...

அந்த உயர் அதிகாரி பார்த்தசாரதியை யோசனையுடன் பார்த்தார். பார்த்தசாரதியின் அறிவுகூர்மையை அவர் பல வழக்குகளில் பார்த்திருக்கிறார். பார்த்தசாரதி நேற்று வரை குருஜியின் பக்தராக இருந்தவர். குருஜி மேல் அதிக மரியாதை வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் சந்தேகப்படுகிறார். அந்த சந்தேகத்தில் உண்மை இருந்து விட்டால்.....? உள்நாட்டு சக்தி வாய்ந்த ஆள்களும், வெளிநாட்டுக் காரர்களும் சம்பந்தப்படும் ஒரு வழக்கில் அலட்சியம் எந்த வகையிலும் நல்லதல்ல என்று அவர் அறிவு எச்சரித்தது.

சிறிது யோசித்து விட்டு அவர் சொன்னார். “பார்த்தசாரதி, வெளிப்படையாய், அதிகாரபூர்வமாய் நான் கண்டிப்பாய் குருஜியைக் கண்காணிக்க அனுமதி தரமுடியாது. காரணத்தை நான் முதல்லயே உங்க கிட்ட சொல்லி விட்டேன். ஆனால் அதிகார பூர்வமில்லாமல் எந்த ரெகார்டிலும் காட்டாமல் சில உதவிகள் நான் செய்யலாம். உங்களுக்கு நம்பிக்கையான நாலைந்து ஆட்களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு பழைய குற்றத்தை புலன்விசாரணை செய்ய நீங்கள் அவர்களைப் பயன்படுத்துவதாகக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் எந்தக் காரணம் வைத்தும் குருஜிக்கோ, அவருக்கு வேண்டியவர்களுக்கோ சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. அப்படி ஒருவேளை வெளியே தெரிய நேர்ந்தால் நான் எனக்கு எதுவும் தெரியாதென்று கையை விரித்து விடுவேன். என்ன சொல்கிறீர்கள்?

மிக மிக ரகசியமான வழக்குகளில் இது போல் செய்வதுண்டு. வெளிப்பார்வைக்கு வழக்கு வேறாக இருக்கும். ஆனால் விசாரணை நடப்பதோ வேறொரு ரகசிய வழக்குக்காக இருக்கும். மிகச் சிலர் மட்டுமே உண்மையை அறிந்திருப்பார்கள். பார்த்தசாரதிக்கு இந்த அளவு அவர் அனுமதி தந்ததே பெரிய உதவியாகத் தெரிந்தது. நாளைக்குப் பிரச்சினை என்று வந்தால் அந்த உயர் அதிகாரி மாட்டிக் கொள்ள மாட்டார் என்றாலும் கண்டிப்பாக அவர் இதை ரகசியமாய் வைத்திருப்பார், மறைமுக உதவிகள் செய்வார் என்பதில் பார்த்தசாரதிக்கு சந்தேகமில்லை.

பார்த்தசாரதி நன்றி சொல்லி விட்டு எழுந்தார்.

உயர் அதிகாரி சொன்னார். “பார்த்தசாரதி, உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை என்றாலும் சொல்றேன். ஒருவேளை உங்கள் சந்தேகம் உண்மையாய் இருந்தால் குருஜி மிக ஆபத்தானவர். சின்ன தவறு செய்தாலும் நீங்கள் அதற்கு பெரிய விலை தர வேண்டி இருக்கும்!
அவர் அக்கறைக்கு மறுபடி நன்றி தெரிவித்து விட்டு பார்த்தசாரதி கிளம்பினார்.

ஸ்வர் அமெரிக்காவிற்கு சீக்கிரமே திரும்பிப் போக முடிவெடுத்திருந்தான். பெரும் ஆபத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்டவசமாகத் தப்பியவன் உடனடியாக அந்த இடத்தை விட்டுச் சென்றால் போதும் என்று நினைப்பது போல இருந்தது அவன் மனப்போக்கு.

பரமேஸ்வரன் மாரடைப்பு அவன் எதிர்பாராதது. அவருக்கு ஏதாவது ஆகி விட்டிருந்தால் அவனால் அவனையே வாழ்நாள் முழுவதும் மன்னிக்க முடியாமல் போயிருந்திருக்கும். அது போன்ற அற்புதத்தை தன் வாழ்நாளில் கண்டதில்லை என்று பரமேஸ்வரனை டிஸ்சார்ஜ் செய்த போது பெரிய டாக்டர் சொன்னார். அவனும் அப்படியே தான் நினைத்தான். பரமேஸ்வரன் குணமானது அவனுக்குப் பெரிய நிம்மதியை ஏற்படுத்தியது. குணமான பரமேஸ்வரன் அவனை அழைத்து முத்தமிட்டது அவர் மனதில் அவன் பற்றிய வருத்தம் ஏதுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. அது அவனை மிகவும் மனம் நெகிழச் செய்தது.

அவர் வீடு வந்து சேர்ந்த பின்னும் ஒரு நாள் முழுவதும் நன்றாக உறங்கினார். அந்த அளவு அவர் உடல் களைத்து இருந்தது. சாப்பிடுவது, உறங்குவது என்றிருந்த அவர் இடையிடையே தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் சிறிது பேசினார் என்றாலும் அது ஓரிரு நிமிடங்களை மிஞ்சவில்லை. டாக்டர் ஒரு வாரமாவது வீட்டில் முழு ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகு மறுபடி ஒரு முறை செக்கப்புக்கு வந்து விட்டு பிறகு ஆபிஸ் போக ஆரம்பித்தால் போதும் என்று சொல்லி இருந்தார்.
மறுநாள் தான் ஓரளவு நன்றாகப் பேசும் தெம்பை அவர் பெற்றார். எல்லோரும் அவர் உடலை அவருடைய அண்ணன் குணப்படுத்தியது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள்.

கனவு மாதிரி இருந்தது. திருநீறு மணம் வந்தது. கண்ணைத் திறந்து பார்த்தா அண்ணன் நின்றிருந்தான். அவன் கிட்ட கொஞ்சம் பேசினேன். பிறகு அண்ணா என்னைத் தொட்டான். அவ்வளவு தான் உடம்புல கரண்ட் பாஸான மாதிரி இருந்துச்சு. என்னால தாங்க முடியலை. மயக்கமாயிட்டேன். திரும்பவும் நினைவு வந்தப்ப அண்ணன் இல்லை.... உடம்புல இருந்த சக்தி எல்லாம் போயிட்ட மாதிரி களைப்பு......  

ஆனந்தவல்லி கேட்டாள். அண்ணன் கிட்ட என்னடா பேசினே?

பரமேஸ்வரன் ஈஸ்வரைப் பாசத்துடன் பார்த்தபடி சொன்னார். ஈஸ்வர் நம்ம அப்பா மாதிரியே இருக்கிறான்னு சொன்னேன்...அதற்கு மேல் அண்ணனிடம் சொன்னதை ஈஸ்வரை வைத்துக் கொண்டு சொல்ல ஒருமாதிரியாக இருந்தது.

“அதுக்கு அவன் என்னடா சொன்னான்....

“எதுவுமே சொல்லலை. உயிரோடு இருந்தப்பவே நான் தான் அவன் கிட்டே ஏதாவது சொல்லிகிட்டிருப்பேன். எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்குவானே ஒழிய அதிகமாய் அண்ணன் பேச மாட்டான். இப்பவும் நான் பேசினப்ப புன்னகை செஞ்சான்...

இப்போதும் பரமேஸ்வரனுக்கு நினைவிருக்கிறது. கோபம் வந்து விட்டால் ஈஸ்வர் பேச்சும் ஆனந்தவல்லி பேச்சு போல தயவு தாட்சணியம் இல்லாமல் கூர்மையாக இருக்கும் என்று அவர் சொன்னதற்குத் தான் அண்ணன் புன்னகை செய்தார். அதை சொல்லாமல் தாயைப் பார்த்து அவரும் சின்னதாய் புன்னகை செய்தார்.

ஏண்டா சிரிக்கிறே?

ஒன்னுமில்லை

“உன் ரூம்ல அவன் ஃபோட்டோ இருக்கா இல்லையா?என்று கேட்டு விட்டு ஆனந்தவல்லி மகன் அறையை நோட்டமிட்டவள் தனதறையில் இருந்த அதே புகைப்படப் பிரதி இங்கும் இருப்பது பார்த்து திருப்தி அடைந்தவளாகச் சொன்னாள். தினம் அவன் ஃபோட்டோவுக்கு ஒரு பூ வச்சு அவனைக் கும்பிடுடா. உனக்கு உயிர் குடுத்தவன்டா அவன் மறந்துடாதே

பரமேஸ்வரன் தலையசைத்தார். மீனாட்சி தந்தையிடம் சொன்னாள். “பாட்டி ரூம்ல பெரியப்பாவுக்கு பூமாலையே போட்டிருக்காங்க. தினமும் ஒரு பூமாலை கொண்டு வர ஆர்டரும் போட்டாச்சு

பரமேஸ்வரன் சிரித்துக் கொண்டே தாயிடம் கேட்டார். “பூமாலை அண்ணன் ஃபோட்டோக்கு மட்டும் தானா? அப்பா ஃபோட்டோக்கு இல்லையா?

இல்லைஎன்ற ஆனந்தவல்லி அதை விளக்கப் போகவில்லை. ஈஸ்வர் இங்கு வந்த பிறகு கணவர் புகைப்படத்திற்கு மாலை போடுவதை அவள் நிறுத்தி இருந்தாள். அவரே மறுபிறவி எடுத்து கொள்ளுப் பேரனாய் வந்திருக்கிறார் என்று நம்ப ஆரம்பித்த அவளுக்கு இப்போது அவன் உருவில் வாழும் அவருக்கு மாலை போடுவது அவளுக்கு சரியாகப் படவில்லை.  

மகேஷ் பசுபதியை மனதிற்குள் திட்டித் தீர்த்தான். ‘செத்த பிறகு இந்த ஆளிற்கு ஏன் வேண்டாத வேலை எல்லாம்!.  ஆனால் வாயைத் திறந்து வேறு மாதிரியாகச் சொன்னான். எனக்கு இனிமே பெரிய தாத்தா தான் கடவுள்!

பரமேஸ்வரன் அவனைப் பாசத்துடன் பார்த்தார். மீனாட்சியும் மகனைப் பெருமையாகப் பார்த்தாள். குடும்பம் என்பது இப்போது தான் முழுமையாக சந்தோஷமானதாக இருக்கிறது என்று பரமேஸ்வரன் நினைத்தார். சிறிது நேரத்தில் களைப்பில் அவர் கண்களை மூடிக் கொள்ளவே அவரை ஓய்வு எடுக்க விட்டு விட்டு அவர்கள் எல்லோரும் வெளியேறினார்கள்.

பரமேஸ்வரன் ஈஸ்வர் இருவருக்கும் இடையில் உள்ள இறுக்கம் தளர்ந்து, சினேகம் வளர்ந்திருந்தது என்றாலும் எல்லாமே சரியாகி விட்டது என்று நினைக்க ஈஸ்வரால் முடியவில்லை. மாரடைப்பில் இருந்து மீண்டு வந்த தாத்தா மீது அவனுக்குப் பழைய கோபம் இருக்கவில்லை தான். அவன் அப்பாவுக்கும் அவருக்கும் இடையே இருந்த பந்தத்தை விமரிசிப்பதும் தீர்ப்பு சொல்வதும் தனக்குத் தேவை இல்லை என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டதும் உண்மை தான். அவன் அப்பாவே குற்றம் சொல்லாத போது அவன் சொல்ல என்ன இருக்கிறது என்று நினைக்க ஆரம்பித்ததும் உண்மை தான்.  

ஆனால் அதனாலேயே எல்லாம் சரியே என்று தவறு ஒன்றும் நடக்காதது போல நடித்துக் கொண்டோ நம்பிக் கொண்டோ இருக்க அவனால் முடியவில்லை.  அவன் தந்தை இறந்த செய்தியை அவன் அம்மா அவரிடம் தெரிவித்த போது அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைக்கையில் சவுக்கடிகளாகத் தான் இருக்கின்றன. இன்னும் இந்த வீட்டில் அவன் தாயிற்கு அங்கீகாரம் கிடைத்து விடவில்லை. இந்த வீட்டின் பொது இடத்தில் இருக்கும் புகைப்படங்களில் அவன் தந்தைக்கு இடம் இருக்கவில்லை. அவன் வந்து பலவந்தமாகத் தான் அதை மாட்ட வேண்டி இருந்தது. அவனை முத்தமிட்டு சினேகம் பாராட்டிய தாத்தா அவன் தந்தையைப் பற்றி இன்னமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சொல்லப் போனால் மகனைப் பற்றிய பேச்சைக் கேட்டுத் தான் அவருக்கு மாரடைப்பே வந்தது.

இந்தக் காரணங்கள் இருக்கையில் இதை அவன் வீடாக அவனுக்கு நினைக்க முடியவில்லை. சிவலிங்கமும் அவ்வப்போது அவன் எதிர்பாராத சமயங்களில் எல்லாம் காட்சி தருகிறதே ஒழிய அது இப்போது எங்கே இருக்கிறது என்றோ, அதை நேரில் பார்க்க முடியுமா என்றோ அவனுக்குத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக விஷாலியின் நினைவும் அவனைப் பாடாய்படுத்துகிறது. நேற்று டிவியில் “யாரோ இவன்பாடல் கேட்கும் போது மனம் பழைய இனிய நினைவில் லயித்துப் பின் ரணமானது. என்ன தான் அவளிடம் அலட்சியமாக அவன் நடந்து கொண்டாலும் மனம் அவளை அலட்சியப்படுத்த மறுத்தது. இதை எல்லாம் நினைக்கையில் பேசாமல் இந்தியாவை விட்டுப் போய் அமெரிக்காவில் தன் வேலையில் மூழ்கி எல்லாவற்றையும் மறக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.  

அவன் தன் முடிவை முதலில் மீனாட்சியிடம் தான் மெல்லச் சொன்னான்.

மீனாட்சிக்கு மிக வருத்தமாகி விட்டது. “என்னடா ஈஸ்வர் ஒரு மாசம் இருப்பேன்னு சொன்னியே. ரெண்டு வாரம் கூட ஆகலையேடா

ஈஸ்வர் பொய் சொன்னான். “அவசரமான வேலை ஒன்னு வந்துடுச்சு அத்தை. அதான்.... இப்ப போனா என்ன அத்தை, சமயம் கிடைக்கறப்ப வந்தா போச்சு

மிக வெகுளியான மீனாட்சிக்குக் கூட அவன் இப்போது போனால் வர மாட்டான் என்று புரிந்தது. அவள் எத்தனையோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவனோ போவதில் உறுதியாக இருந்தான்.

மறுநாள், தான் மாட்டிய அப்பா அம்மா படத்தை அவன் கழற்றினான். “அதை ஏண்டா கழட்டறே?ஆனந்தவல்லி திகைப்புடன் கேட்டாள்.

சும்மா தாத்தாவுக்கு பழைய நினைப்புகள் வரவழைக்க வேண்டாம்னு நினைக்கிறேன் பாட்டிஎன்று நல்ல விதத்தில் ஈஸ்வர் பதில் சொன்னான்.

“இதைப் பார்த்துத் தானாடா அவனுக்குப் பழைய நினைவுகள் வரணும்?ஆனந்தவல்லி கேட்டாள்.

“இதைப் பார்த்தா இன்னும் அதிகமா வரும் பாட்டி. இப்ப ஏதோ அவர் நிம்மதியா இருக்கார். அப்படியே இருந்துட்டுப் போகட்டும்.

ஆனந்தவல்லி பெரும் அபாயத்தை உணர்ந்தாள். கோபப்படும் ஈஸ்வரே பரவாயில்லை என்று அவளுக்குத் தோன்றியது.

அங்கே இருந்தால் அத்தையும், பாட்டியும் ஏதாவது தர்மசங்கடமாகக் கேட்டுக் கொண்டோ, சொல்லிக் கொண்டோ இருப்பார்கள் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது. எங்கேயாவது வெளியே போய் நிறைய நேரம் இருந்து வர நினைத்தான். அப்போது தான் கணபதி நினைவு வந்தது. பக்கத்தில் தான் அவன் கிராமம், கண்டிப்பாக வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நினைவுக்கு வந்தது. எங்கோ பூஜை செய்து கொண்டிருப்பவன் எப்போது ஊர் திரும்புவதாகச் சொன்னான் என்பது நினைவிருக்கவில்லை. அவன் இல்லா விட்டாலும் அவன் குடும்பத்தையும், அவன் பிள்ளையாரையும் பார்த்து வரலாம் என்று தோன்ற உடனடியாகக் கிளம்பினான்.

அவன் போன பிறகு மீனாட்சி பாட்டியிடம் ஈஸ்வர் அமெரிக்காவுக்குப் போகத் தீர்மானித்திருப்பதைத் தெரிவித்தாள்.

ஆனந்தவல்லியின் பயம் உறுதியாகியது. பேத்தியிடம் வருத்தத்துடன் சொன்னாள். என்னடி இது எல்லாம் சரியாயிட்டு வருதுன்னு நாம சந்தோஷப்படறப்ப இவன் இப்படி விலகப்பார்க்கிறான்

மீனாட்சி ஈர விழிகளுடன் பாட்டியைப் பார்த்தாள்.

“ஏண்டி, உங்கப்பன் கிட்ட இதைச் சொன்னியா?

“இல்லைஎன்று மீனாட்சி தலையசைத்த போது பரமேஸ்வரனின் குரல் கேட்டது. “எதைச் சொன்னியான்னு கேட்கறேம்மா?

பரமேஸ்வரன் மெல்ல நடந்து வந்து தாயருகே உட்கார்ந்தார்.

ஆனந்தவல்லிக்கு மகன் உடல்நிலை எந்த அளவு தேறியிருக்கிறது என்று உறுதியாகத் தெரியவில்லை. சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியவள் மெல்லச் சொன்னாள். ஈஸ்வர் சீக்கிரமே அமெரிக்கா போறானாம். அவனுக்கேதோ அவசர வேலை இருக்காம்

அவள் குரலில் தொனித்த பெரும் வருத்தம் பரமேஸ்வரனுக்கு அர்த்தம் இல்லாததாய் தோன்றியது. “இதுக்கேம்மா வருத்தப்படறே. போய் வேலையை முடிச்சுட்டு வரட்டும்என்றார்.

ஆனந்தவல்லி ஒன்றும் சொல்லவில்லை. பரமேஸ்வரன் தாயையும், மகளையும் பார்த்தார். இருவரும் அவனை சிறிது காலம் கூடப் பிரிய வருத்தப் படுகிறார்கள் என்று நினைத்தார். அவர் பார்வை சுவரில் இருந்த படங்களுக்கு வந்து அங்கேயே நிலைத்தது. அங்கே சங்கரின் படத்தைக் காணவில்லை....

அவர் மறுபடி தாயைக் கூர்ந்து பார்த்தார். சிறிது தயங்கி விட்டு ஆனந்தவல்லி மகன் கையைப் பிடித்துக் கொண்டு உணர்ச்சிபூர்வமாகச் சொன்னாள். “பரமேஸ்வரா, ஒரு காலத்தில் நீ உன் மகன் உன்னைப் பிரிஞ்சு அமெரிக்காவுக்குப் போக விட்டே. அவனைத் திரும்பவும் நீ பார்க்க முடியாமயே போயிடுச்சு. இப்ப உன் பேரன் போனால் இவனையும் நீ திரும்பப் பார்க்க முடியாதுடா. இவன் கண்டிப்பா திரும்ப வர மாட்டாண்டா. இவனையும் நீ கை நழுவ விட்டுடாதேடா

பரமேஸ்வரனுக்குப் புரிந்தது.

(தொடரும்)
-         என்.கணேசன்

பரம(ன்) இரகசியம் நாவல் அச்சில் வெளி வந்தும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 2016 ஜூன் மாதம் இரண்டாம் பதிப்பும் வெளியாகி விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. இந்த நாவலை புத்தக வடிவில் கையில் வைத்து படித்து மகிழ விரும்புவோர் 9600123146 எண்ணில் அல்லது blakholemedia@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். 

என்.கணேசன்
22 comments:

 1. கணபதி இல்லா விட்டாலும் அவன் குடும்பத்தையும், அவன் பிள்ளையாரையும் பார்த்து வரலாம் என்று தோன்ற உடனடியாகக் கிளம்பினான்.

  சரியான திருப்புமுனை..!

  ReplyDelete
 2. ராகவேந்திரன்August 1, 2013 at 6:21 PM

  மூன்று நாளுக்கு முன்பு தான் இந்த நாவல் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்து படிக்க ஆரம்பித்தேன். பிரமாதமான தொடர் இது. படித்து முடிக்கிற வரை பரபரப்பு இருந்து கொண்டே இருந்தது. இனி ஒவ்வொரு வியாழ கிழமை வரும் வரை வெயிட் பண்ணுவது கஷ்டம் தான். சஸ்பென்ஸ், குடும்ப பாசம், ஆன்மிகம், சயின்ஸ் என்று எல்லாவற்றிலும் முத்திரை பதித்து எழுதி இருக்கிறீர்கள். ஈஸ்வர், கணபதி, ஆனந்தவல்லி கேரக்டர்கள் மிக தத்ரூபமாய் மனதில் நிற்கிறார்கள். காட்சிகள் நேரில் பார்க்கிற மாதிரி இருக்கின்றன. பாராட்டுகள் கணேசன்.

  ReplyDelete
 3. Family attachments are beautifully woven in your story. Thursdays became special because of this novel. It will surely beat Amanushyan I think. Thanks

  ReplyDelete
 4. Going Good as expected ....Again am requesting you ; try to post this story twice in a week ... Its not easy to wait for every thursday :(

  ReplyDelete
 5. சூப்பர்..! தொடர்கிறேன்...

  ReplyDelete
 6. "நேற்று டிவியில் “யாரோ இவன்” பாடல் கேட்கும் போது"

  அஹஹா ..!!! .ஒரு நான்கு நாட்களுக்கு முன் வீட்டில் உணவருந்தி கொண்டிருக்கும் போது “யாரோ இவன்” பாடல் ஒரு டீ .வில் பார்க்க சட்டென்று ஈஸ்வர் விஷாலி க்கைகள்;கைகள் ஸ்பரித்து கொண்டது அந்த "கார்" கால நினைவுகள் வந்துவிட்டன .., பாட்டு முழுவதும் ஜீவா அந்த நடிகை யார் என்று தெரியவில்லை .. அவர்களுக்கு பதில் நம்ம ஈஸ்வர் விஷாலி நினைவு தான் ஒரே சிரிப்பு தான் போங்கள் ..,

  அதே போல் நம்ம ஆர் ,எஸ் புரம் செல்லும் போதெல்லாம் அந்த விவேகானந்த டிரஸ்ட் பிள்ளையார் கோவிலையும் அரசமரத்தையும் பார்த்தால் நம்ம ஈஸ்வர் &கணபதி சந்திப்பு நினைவு படுத்துகிறது ..
  வாரத்தில் ஒரு நாள் தான் உங்கள் பதிவு .
  ஆனால் ஏழு நாளும் எதோ ஒரு வகையில் பர(ம)ன் ரகசியத்தின் நினைவு ...,

  ReplyDelete
  Replies
  1. விஷ்ணுAugust 1, 2013 at 9:31 PM

   உண்மை. சினிமாவோ சீரியலோ பார்க்கும் போதும் சரி, பொது இடங்களில் போகும் போதும் சரி, இந்த நாவலின் கதாபாத்திரங்களின் சாயல் சிறிதாவது இருந்தால் போதும் பரமன் ரகசியம் நினைவுக்கு வந்து விடுகிறது. தொடர்ந்து இந்த வேஷத்திற்கு எந்த நடிகர், நடிகை பொருந்தும் என்றெல்லாம் யோசிக்க தோன்றுகிறது. சினிமா வரை கற்பனை ஓடுகிறது. (எல்லா கதாபாத்திரங்களுக்கும் கூட ஏதாவது ஒரு நடிகர் அல்லது நடிகை பொருத்தமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் கணபதி கதாபாத்திரத்திற்கு மட்டும் யாரும் கிடைக்கவில்லை)

   Delete
  2. முடிந்தால் பயணம் படம் பாருங்கள். அதில் ரங்கநாதனாகவும் யூசுப் கான் என்ற வேடத்திலும் ஸ்ரீசரண் என்பவர் நடித்துள்ளார். எனக்கு கணபதி பற்றி படிக்கும் போதெல்லாம் அவர் நினைவுதான் வரும்.

   https://www.facebook.com/groups/nganeshanfans/

   Delete
  3. or watch this link
   http://www.youtube.com/watch?v=vDPYQpmMPkA

   Delete
  4. for ganapathy character satyan(nanban) is good choice.I think

   Delete
  5. சுந்தர்August 2, 2013 at 6:48 PM

   ஈஸ்வர் வேடத்திற்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனந்தவல்லி கேரக்டருக்கு வடிவுக்கரசி பொருந்துவார். பரமேஸ்வரன் வேடத்திற்கு நாசர் அல்லது பிரகாஷ்ராஜ் சரியாக இருக்கும். விஷாலி பற்றி இன்னும் முழுசாக மனதில் ஒரு வடிவம் வரவில்லை. வந்த பின் தேர்ந்தெடுக்க முடியும். மற்ற வாசகர்கள் அபிப்பிராயம் என்ன?

   Delete
  6. நமது திரு.கணேசன் அவர்களது கதாபாத்திரங்கள் பரிசுத்தமான படைப்புகள் .., அவரது எழுத்து வரிகள் தாம் , வடிவங்களை தீர்மானிக்கின்றன ., வேறு எந்த புற நடிப்பும் தத்ருபமாக கொனற முடியும் என்று தோணவில்லை . இருந்தாலும் "புது முகங்கள்" ஓரளவு கச்சிதமாக பொருந்தலாம் ..,

   Delete
  7. அர்ஜுன்August 4, 2013 at 12:08 PM

   புலிப்பாணி சித்தர் அடிமை அவர்கள் சொல்வது சரி. இந்த பரிசுத்தமான படைப்புகளை அப்படியே தத்ரூபமாகக் கொண்டு வருவது கஷ்டம். ஆனாலும் பலரும் சின்னத்திரையில் அல்லது வெள்ளித்திரையில் இந்த நாவலைப் பார்க்க ஆவலாக உள்ளோம். என் நண்பன் ஒருவன் பரமேஸ்வரன் வேடத்தை அமிதாப் பச்சன் அருமையாக செய்வான் என்று சொன்னான். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் கூட போகும் அளவுக்கு இந்த நாவல் பிடித்திருக்கிறது எங்களை போன்ற வாசகர்களுக்கு.

   Delete
 7. oh sorry .. i think actor .., siddharth.., sorry t.v ,cinema parkkum palakkam illai .. athanal theriyavillai..

  ReplyDelete
 8. ஏனோ ஒவ்வோரு வாரமும் கண்ணீருடன் தான் படிக்கிறேன் !!!
  சிவம் , சித்தர் இதையெல்லாம் தாண்டி உறவுகளின் அன்பும் , பரிதவிப்பும்
  நம்மை நெகிழவைக்கிறது...

  திரு கணேசன் அவர்களுக்கு நீங்கள் போதுமான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் ...
  வாரம் ஒரு முறை ஆனாலும் அதன் தரம் குறையாமல் எழுதுங்கள் ....

  ReplyDelete
 9. Interesting !!!

  இப்ப உன் பேரன் போனால் இவனையும் நீ திரும்பப் பார்க்க முடியாதுடா. இவன் கண்டிப்பா திரும்ப வர மாட்டாண்டா. இவனையும் நீ கை நழுவ விட்டுடாதேடா”


  Waiting for next update !!!

  ReplyDelete
 10. Please delete "Eswar Poi Sonnaan". These words affect his excellent and supreme character. Without these three words, everything looks good.

  ReplyDelete
 11. இத்தொடரின் கதாபாத்திரங்கள் இடையே நடக்கும் உரையாடலும், பாசபோராட்டமும் எங்களின் கண்களில் நீர்வடிய செய்கின்றன. ... .

  ReplyDelete
 12. டாக்டர் ஒரு வாரமாவது வீட்டில் முழு ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகு மறுபடி ஒரு முறை செக்கப்புக்கு வந்து விட்டு பிறகு ஆபிஸ் போக ஆரம்பித்தால் போதும் என்று சொல்லி இருந்தார்.
  Is Parameswaran still working?

  ReplyDelete
  Replies
  1. Parameshwaran is a business man and he is running a company. That is mentioned here as office.

   Delete
 13. Vazhga valamudan...

  இந்த கதை நல்ல திரைப்படமாக கூட எடுக்கலாம் ... விரைவில் இந்த கதையை இன்னும் நிறைய சித்தர்கள் & அவர்களின் சக்தியை (இலை மறை காயாக) அல்லது (சீனாவில் குங்க்பு கலையை கால்ப்பந்தாட்டத்தொடு இணைத்து படம் எடுத்து கலை மற்றும் சக்தியை உணர்த்தியது போல நம்முடைய சித்தர் சித்துக்களின் சக்தியை தற்கால மக்கள் உணரும் வகையில்) உணர்த்தும் விதமாக அமைத்து புத்தகமாக வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

  ReplyDelete