என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, August 12, 2013

முயன்று தோற்றவர்களின் கதி என்ன?கீதை காட்டும் பாதை 27


ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனனிற்கு ஒரு சந்தேகம் வந்தது. அதைக் கேட்கிறான்.

மதுசூதனா! சமநிலை என்று எந்த யோகத்தைப் பற்றிச் சொன்னாயோ அது நிலையாக நிற்காது என்று நான் நினைக்கிறேன்.

கிருஷ்ணா! மனம் சஞ்சலமானது; குழப்பத்தை விளைவிக்கக் கூடியது; அடங்காதது; வலிமையானது; காற்றை அடைக்க முடியாதது போல அதையும் அடக்க முடியாதென்று நான் நினைக்கிறேன்.

அர்ஜுனனின் இந்த சந்தேகம் அறிவு பூர்வமானது. சமநிலை என்ற யோகநிலை சுலபமானதல்ல. அந்த நிலையை அடைவது மிகக் கஷ்டம். அப்படியே அடைய முடிந்தாலும் அந்த மேன்மையான நிலையைத் தக்க வைத்துக் கொள்வது அதை விடப் பெரிய கஷ்டம். ஏனென்றால் ஒரு சமயத்தில் அடங்குவது போலத் தெரியும் மனம் இன்னொரு சமயம் கட்டுக்கடங்காமல் ஓடக் கூடும். ஒரு சமயத்தில் தெளிவாக இருப்பது போல் தோன்றும் மனம் இன்னொரு தருணத்தில் குழப்பமடைந்து விடும்.

இது யோக மார்க்கத்தில் சிறிது தூரம் சென்றவர்களும் அனுபவித்திருக்கக் கூடிய குறைபாடு. எதிர்த்து நிற்கும் போது மனம் பெறும் வலிமை அபாரமானது. பெரும் காற்றை எப்படி அடக்க முடியாதோ அது போல மனதையும் அடக்க முடியாது. அதனால் சமநிலை அடைந்து விட்டதாக ஒரு கணம் தோன்றினாலும் மறு கணம் அது சந்தேகப்பட வேண்டிய நிலையே.   

அதை மறுக்காத ஸ்ரீகிருஷ்ணர் அந்தக் காரணத்தினாலேயே மனமுடைந்து போகவும், முயற்சிகளைக கைவிடவும், வேண்டியதில்லை என்று தைரியம் சொல்கிறார்.

“மனதை அடக்க முடியாது என்பதில் ஐயமில்லை. மனம் சஞ்சலமானது தான். ஆனால் பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் அதை இழுத்து நிறுத்தி விடலாம்.

மனதைக் கட்டுப்படுத்தாதவனுக்கு யோகம் கிட்டாது. மனதை வசப்படுத்தி உபாயத்துடன் முயற்சி செய்பவனுக்கு யோகம் கிட்டும்.

மனதைக் கட்டுப்படுத்துவது கஷ்டம் தான் என்றாலும் முடியாததில்லை என்று ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார். அதற்கு இரண்டு முக்கியத் தேவைகளைக் கூறுகிறார். ஒன்று பயிற்சி இன்னொன்று வைராக்கியம். இரண்டில் ஒன்று இல்லா விட்டாலும் மனதைக் கட்டுப்படுத்துவது என்பது ஒருவருக்குக் கைகூடாது. மனதைக் கட்டுப்படுத்தா விட்டால் யோகம் கூடாது. மனதை வசப்படுத்தினால் மட்டும் போதாது. உபாயத்துடன் கூடிய முயற்சி இருந்தால் தான் யோகம் சித்தியாகும் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். முயர்சிகள் எந்திரத்தனமாக இருந்தால், அறிவார்ந்தவையாக இல்லாமல் இருந்தால் யோகம் கூடாது.

உடனே அர்ஜுனனிற்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. இந்த சந்தேகம் நியாயமாக எல்லாருக்கும் வருவது தான். நம் எல்லாருடைய பொருட்டும் அன்றே அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டிருக்கிறான்.

“கிருஷ்ணா! நம்பிக்கை உள்ளவன் யோகத்தில் நிலை பெறாமல் அலையும் மனம் காரணமாக முயற்சிக் குறைவினால் யோகத்தில் பூரண நிலையை அடையாவிட்டால் அவன் கதி என்ன? இரண்டும் கெட்டானாய் பிரம்மத்தை அடையும் மார்க்கத்தில் நிலைக்காமல் நழுவி சிதறிய மேகம் போல் அழிந்து விடுவானா? இந்த சந்தேகத்தைத் தீர்க்க உன்னைக் காட்டிலும் பொருத்தமானவன் வேறில்லை என்பதால் கேட்கிறேன். என் சந்தேகத்தைத் தீர்ப்பாயாக

பார்த்தனின் கேள்வி மிக முக்கியமானது. ஸ்ரீகிருஷ்ணர் சொன்ன யோகநிலையோ மிக உயர்வானது. எந்த மனதைக் கட்டுப்படுத்தி அந்த யோக நிலையை அடைய வேண்டுமோ அந்த மனம் நல்ல விஷயங்களுக்கு என்றால் பலவீனமாக இருக்கிறது. வேண்டாத விஷயங்களுக்கு என்றால் மிக வலிமையாக நம்மை அந்தப் பக்கம் இழுக்கிறது. சரி கஷ்டப்பட்டு ஒரு முறை அடக்கி விட்டாலோ நமக்கு நிரந்தரமான வெற்றி என்று சொல்லி விட முடியாது. அடுத்த முறை மனம் அப்படியே அடங்கி இருக்குமா என்று தெரியாது. அடுத்த முறை இருந்தாலும் அதற்கடுத்த முறையும் அப்படியே இருக்குமா என்பது சந்தேகம்.

நிரந்தரமான வெற்றி, நிரந்தரமாய் தங்கும் யோக நிலை ஒரு பிறவியில் நமக்கு சித்திக்கிற சமாச்சாரம் போல் தெரியவில்லை. செய்ய ஆசைப்படும் காரியம் பெரிது, வாழ்நாளோ குறுகியது. இந்த சஞ்சல மனதை வைத்துக் கொண்டு செய்யும் இந்தப் பிறவியில் எடுக்கும் முயற்சிகளில் சறுக்கி விட்டால் (அப்படித் தானே பெரும்பாலும் நடக்கிறது) அந்த மனிதனின் கதி என்ன? எல்லாம் வீண் தானா? என்ற சந்தேகம் அர்ஜுனனிற்கு நியாயமாக வர அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகப் பதில் சொல்கிறார்.

“பார்த்தா! இந்த உலகத்திலோ, பரலோகத்திலோ அவனுக்கு அழிவே கிடையாது. நல்லதைச் செய்பவன் எவனும் துர்க்கதி அடைய மாட்டான்.

அப்படி யோகத்திலிருந்து நழுவியவன், புண்ணியம் செய்தவர்கள் அடையக் கூடிய லோகங்களை எய்தி நீண்ட காலம் வாழ்ந்து தூய்மையான செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான். அல்லது ஞானிகளான யோகிகளுடைய உயர் குலத்தில் பிறப்பான். உலகில் இத்தகைய பிறவி என்பது கிடைத்தற்கரியது.

அந்தப் பிறவியில் அதற்கு முந்திய பிறவியில் இருந்த புத்தியைப் பெறுவான். பிறகு யோக சித்திக்காக மறுபடி முயற்சி செய்வான். அவன் முற்பிறவிகளின் பயிற்சிகளின் தொடர்ச்சியாக தன்னை அறியாமலே யோகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறான். மாசுக்கள் நீங்கப்பெற்று அவன் உறுதியாக முயன்றால், பல பிறவிகளின் முயற்சிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்பிறவியில் அடைகிறான்.

ஒரு பெரிய பாறையை உளியால் உடைக்க ஒருவன் முயற்சிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஒரே அடியில் உடைப்பது என்பது இயலாத காரியம். நூற்றுக்கணக்கான அடிகள் தேவைப்படும். கல் உடைவது கடைசி அடியில் என்றாலும் அந்த வெற்றிக்கு அத்தனை அடிகளும் உறுதுணையாக இருந்திருக்கின்றன என்பதே உண்மை அல்லவா? அப்படித் தான் நம் எல்லா முயற்சிகளும்.

மனிதனின் எந்த நல்ல முயற்சியும் வீண் போவதில்லை. முயற்சிகளுக்கு இடையே உள்ள கால இடைவெளிகள் அதிகமாக இருந்தாலும் கூட இது உண்மை. கால இடைவெளிகள் பிறவிகளாக இருந்தாலும் கூட இந்த உண்மை பொருந்தும் என்று ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு உத்திரவாதம் தருகிறார். விட்ட இடத்தில் இருந்து தொடர முடியும் என்கிறார் அவர். அதனால் நாம் நம் பலவீனங்களால் மனம் உடைந்து விட வேண்டியதில்லை. கை விட்ட முயற்சிகளுக்காக, நழுவ விட்ட சந்தர்ப்பங்களுக்காக வருத்தப்பட வேண்டியதில்லை.

இந்தப் பிறவியில் ஆன்மிக நாட்டம் ஏற்படுவதே, யோகசித்திக்காக சிறிய அளவிலானாலும் சரி முயற்சிகள் மேற்கொள்வதே நாம் முந்தைய பிறவிகளில் செய்த நல்ல முயற்சிகளின் பலனே. இப்போதைய நாட்டமும் முயற்சியும் அவற்றின் தொடர்ச்சியே. சறுக்கியது எத்தனை முறை என்ற கணக்கில் கவனம் வைத்து தன்னம்பிக்கை நாம் இழக்க வேண்டாம். இன்னும் அந்தத் தேடலை தக்க வைத்திருக்கிறோம் என்று தேற்றிக் கொள்வோம்.

இந்த அறிவுரை மதங்களைக் கடந்த அறிவுரை. சொல்கிற பெயர்கள்  எதுவானாலும் இறை நாட்டம், மேன்மையான வழிகளில் நாட்டம் எல்லாம் நம்மை உய்ய வைக்கும் வழிகள். குரானில் கூட கீதையின் இந்த சிந்தனை போன்றே உறுதியாக இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. யார் நல்ல தொண்டுகள் செய்பவனாகவும் நம்பிக்கை உள்ளவனாகவும் இருக்கிறானோ அவனது முயற்சி நிராகரிக்கப் படுவதில்லை பார்!  அவனுக்காக நாம் அதைப் பதிவு செய்கிறோம்

எல்லா நற்செயல்களும் இறைவனால் பதிவு செய்யப்படுகிறது என்பதே நமக்கு மிகப் பெரிய தூண்டுகோல் அல்லவா?

தியான யோகத்தைக் கடைசியாக இந்த வரிகளில் ஸ்ரீகிருஷ்ணர் முடிக்கிறார்.

என்னையே நம்பி என்னையே நெருங்கி என்னையே சார்ந்து என்னையே தொழுகின்றவனே யோகிகளுக்குள் சிறந்த யோகி

இறைவனையே நம்பி, இறைவனிடமே நெருக்கமாக இருந்து, இறைவனையே சார்ந்து வாழ்ந்து, இறைவனையே தொழுது அடையும் யோக நிலை எல்லாவற்றிலும் சிறந்த யோக நிலை. அதுவே ஆன்மிகத்தின் சிகர நிலை. அந்த நம்பிக்கையும், நெருக்கமும், சார்ந்திருத்தலும், பக்தியும் நமக்குள் சாதாரணமாக நிகழ்ந்து விடாது. இப்பிறவியிலும், முந்தைய பிறவிகளிலும் முயன்றிருந்தால் மட்டுமே நிகழ முடியும்!

கீதையின் ஆறாவது அத்தியாயம் இத்துடன் முடிகிறது!

பாதை நீளும்....

-          என்.கணேசன்


10 comments:

 1. //அப்படி யோகத்திலிருந்து நழுவியவன், புண்ணியம் செய்தவர்கள் அடையக் கூடிய லோகங்களை எய்தி நீண்ட காலம் வாழ்ந்து தூய்மையான செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான். அல்லது ஞானிகளான யோகிகளுடைய உயர் குலத்தில் பிறப்பான். உலகில் இத்தகைய பிறவி என்பது கிடைத்தற்கரியது.//

  அந்தப் பிறவியில் அதற்கு முந்திய பிறவியில் இருந்த புத்தியைப் பெறுவான். பிறகு யோக சித்திக்காக மறுபடி முயற்சி செய்வான். அவன் முற்பிறவிகளின் பயிற்சிகளின் தொடர்ச்சியாக தன்னை அறியாமலே யோகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறான். மாசுக்கள் நீங்கப்பெற்று அவன் உறுதியாக முயன்றால், பல பிறவிகளின் முயற்சிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்பிறவியில் அடைகிறான்.”//

  மனதுக்கு ஆறுதல் அளிக்கும் அருமையான கீதா உபதேசம். பகிர்வுக்கு நன்றிகள், Sir.

  ReplyDelete
 2. விஷ்ணுAugust 12, 2013 at 9:03 PM

  அலங்காரம் இல்லாத ஆத்மார்த்தமான சொற்கள் உங்களுடையது. மனதில் அழகாக பதிகிறது. நான் ஆன்மிக நூல்கள் அதிகம் வாசிக்காதவன். உங்கள் ஆன்மிகத்தில் தனி மனித முன்னேற்றமும், உளவியலும் கலந்து இருப்பதால் என்னைப் போன்ற இளைஞர்களையும் அதிகம் கவர்கிறது. நன்றி சார்.

  ReplyDelete
 3. //...அப்படி யோகத்திலிருந்து நழுவியவன், புண்ணியம் செய்தவர்கள் அடையக் கூடிய லோகங்களை எய்தி நீண்ட காலம் வாழ்ந்து தூய்மையான செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான். அல்லது ஞானிகளான யோகிகளுடைய உயர் குலத்தில் பிறப்பான். உலகில் இத்தகைய பிறவி என்பது கிடைத்தற்கரியது.

  அந்தப் பிறவியில் அதற்கு முந்திய பிறவியில் இருந்த புத்தியைப் பெறுவான். பிறகு யோக சித்திக்காக மறுபடி முயற்சி செய்வான். அவன் முற்பிறவிகளின் பயிற்சிகளின் தொடர்ச்சியாக தன்னை அறியாமலே யோகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறான். மாசுக்கள் நீங்கப்பெற்று அவன் உறுதியாக முயன்றால், பல பிறவிகளின் முயற்சிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்பிறவியில் அடைகிறான்.”..//

  எனது இப்பிறவியின் நிதர்சன உண்மை.

  www.siddharkal.blogspot.in

  ReplyDelete
 4. " இந்தப் பிறவியில் ஆன்மிக நாட்டம் ஏற்படுவதே, யோகசித்திக்காக சிறிய அளவிலானாலும் சரி முயற்சிகள் மேற்கொள்வதே நாம் முந்தைய பிறவிகளில் செய்த நல்ல முயற்சிகளின் பலனே"


  அருமை அருமை ., பரிபுரன கட்டுரை வாழ்த்துக்கள் !!!!

  ReplyDelete
 5. நண்பரே,

  மிகவும் தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள், நன்றி

  ReplyDelete
 6. மிக அருமையாக இருக்கிறது !
  தெளிவாக இருக்கிறது !!
  நன்றி ! நல்ல வாசிப்பு !!!

  ReplyDelete
 7. முயன்று தோற்றவரகள் மீண்டும் பிறவி எடுக்கும் போது தோல்வியடையமாட்டர்களா ?

  ReplyDelete
 8. தாங்கள் அடிக்கடி கூறும் வாசகத்தை... இங்கு விளக்கமாக கூறியுள்ளீர்கள்...
  "முயற்சிகள் வீண் போகாது" என்பது ஆறுதலளிக்கும் கிருஷ்ணனின் வாக்குறுதி நன்று...

  ReplyDelete