என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, August 29, 2013

பரம(ன்) ரகசியம் – 59விஷாலிக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. எந்த மனிதரைத் தாத்தா என்று அழைக்கக் கூட ஈஸ்வர் மறுத்திருந்தானோ அவர் மடியில் அவன் படுத்துக் கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்கள் இருவர் கூடவே மீனாட்சியும் ஆனந்தவல்லியும் மிக ஒட்டி அமர்ந்திருந்த விதம் ஒரு அன்பான குடும்பத்தின் அழகான தருணமாகத் தோன்றியது. தாங்கள் வந்து அந்த அழகைக் குலைத்து விட்டோமோ என்று கூட விஷாலி நினைத்தாள்.

பரமேஸ்வரனுக்கு மாரடைப்பு வந்ததைத் தெரிவிக்கையில் மகேஷ் அழுதபடியே அவளிடம் சொல்லி இருந்தான். “ஈஸ்வர் வந்த வேலையை முடிச்சுட்டான் விஷாலி. எங்க தாத்தாவை அவன் கொன்னுட்டான்.... அவர் உயிருக்குப் போராடிகிட்டு இருக்கார் விஷாலி....

ஆனால் மறுநாள் அவர்களுக்குக் கிடைத்த செய்தி வேறாக இருந்தது. பரமேஸ்வரன் பிழைத்து விட்டார் என்று தெரிந்தது மட்டுமல்லாமல் பரமேஸ்வரனின் அண்ணா கனவில் வந்து அவரைக் காப்பாற்றி விட்டார் என்று சொல்லப்பட்டது. தென்னரசு பரமேஸ்வரனை உடனே பார்த்து விட்டு வரத் தீர்மானித்தார். மீனாட்சியிடம் பேசிய போது அவர் ஓய்வில் இருக்கிறார், சதா உறங்குகிறார் என்று சொன்னாள். அதனால் தென்னரசு பரமேஸ்வரனைப் பார்ப்பதை இரண்டு நாள் தள்ளிப் போட்டார்.    

பரமேஸ்வரன் தென்னரசுவிடம் நெருங்கிப் பழகுபவர் அல்ல. தென்னரசுவைப் பார்க்கும் போதெல்லாம் பரமேஸ்வரனுக்கு மகன் சங்கர் நினைவு வருவதை தவிர்க்க முடியாதது காரணமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு தென்னரசுவும் பரமேஸ்வரனிடம் இருந்து சற்றுத் தொலைவாகவே இருந்தார். ஆனாலும் இது போன்ற உயிருக்கு ஆபத்து வந்து பின் பிழைக்கும் சந்தர்ப்பங்களில் போய் சந்தித்து நலம் விசாரிப்பது தான் முறை என்று தென்னரசு மகளிடம் சொல்லி அவளையும் அழைத்து வந்தார்.

பரமேஸ்வரனைப் பார்ப்பதைக் காட்டிலும் ஈஸ்வரைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட விஷாலிக்கு மனம் இல்லை. அதனால் தான் தந்தையுடன் அவள் கிளம்பினாள். ஆனால் இங்கு வந்தவுடனேயோ, வந்திருக்கவே வேண்டாமோ என்று அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவளைப் பார்த்தவுடனேயே ஈஸ்வர் முகம் இறுகியது மட்டுமல்ல பின் அவள் ஒருத்தி அங்கு வந்திருப்பதாக உணர்ந்ததாகவே அவன் காட்டிக் கொள்ளவில்லை. தென்னரசுவை முகம் மலர வரவேற்றவன் அவரிடமே பேசிக் கொண்டிருந்தான். மகன் சம்பந்தமான பாரத்தை இறக்கி வைத்திருந்த  பரமேஸ்வரனும் தென்னரசுவிடம் அன்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.  

விஷாலி பரமேஸ்வரனிடம் ஒருசில வார்த்தைகளில் நலம் விசாரித்து விட்டுப் பின்பு மீனாட்சியுடன் பேச ஆரம்பித்தாள். என்றுமில்லாத அதிசயமாக ஆனந்தவல்லியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது விஷாலிக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.

சிறு வயதில் இருந்து அவர்கள் வீட்டுக்கு வந்து போகும் விஷாலியிடம் ஒரு முறை கூட ஆனந்தவல்லி பேசியதாக விஷாலிக்கு நினைவில்லை. சற்று தொலைவில் இருந்தே கண்களைச் சுருக்கி கழுகுப் பார்வை பார்க்கும் ஆனந்தவல்லி விஷாலியை ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஈஸ்வர் வந்த பிறகு நிறையவே மாறி இருந்த ஆனந்தவல்லி ஈஸ்வருக்காகவே விஷாலி விஷயத்திலும் மாறினாள்.

ஈஸ்வர் சில நாட்களுக்கு முன் திடீரென்று மிக சந்தோஷமாக மாறியதும், பாடல்கள் முணுமுணுக்க ஆரம்பத்ததும் அவன் காதல் வசப்பட்டிருந்ததை அவளுக்கு உறுதிப்படுத்தியது. அந்த சமயத்தில் அவன் தென்னரசு வீட்டுக்கு மட்டுமே போய் வந்திருந்தபடியால் அவன் மனதைக் கவர்ந்த பெண் விஷாலியாகவே இருக்க்க் கூடும் என்ற சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டு இருந்தது. ஈஸ்வர் இந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து இருந்து அவள் கருத்துக்கு மரியாதை இருந்திருக்கும் பட்சத்தில் அவள் விஷாலியை ஏற்றுக் கொண்டிருப்பது சந்தேகமே. அந்தஸ்தில் உள்ள ஏற்ற தாழ்வை அவள் காரணம் காட்டி மறுத்திருப்பாள். ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து பெரிதானவன், குடும்ப அந்தஸ்திற்கு அரைக்காசு மரியாதை கூட கொடுக்க நினைக்காதவன், தன் மனைவியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அந்தக் குடும்பத்திற்குக் கொடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவன் ஒரு வெள்ளைக் காரியையோ, சீனாக்காரியையோ, ஆப்பிரிக்காக்காரியையோ கல்யாணம் செய்து கொண்டாலும் ஆச்சரியமில்லை என்கிற இந்த நிலையில் ஆனந்தவல்லிக்கு பெண் யாரானாலும் இந்த நாட்டுப் பெண்ணாக இருந்தால் நல்லது என்று இறங்கி வருகிற எண்ணத்தைக் கொண்டு வந்து விட்டது.

காதலிக்க ஆரம்பித்து இரண்டே நாளில் ஈஸ்வர் முகம் வாடி, அவன் பாட்டும் காணாமல் போய் விட்டது அவளுக்கு ஏமாற்றத்தையே தந்தது. இந்தக் காலத்துப் பசங்களுக்குக் காதலிக்கவும் அதிக நாள் தேவைப்படுவதில்லை, அதிலிருந்து விலகி விடவும் அதிக நாள் தேவைப்படுவதில்லைஎன்று மனதில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு திருமணம் ஆகி அவன் குழந்தையைப் பார்த்து விட்டுக் கண்ணை மூடினால் தேவலை என்று ஆசைப்பட ஆரம்பித்திருந்த அவள் வேறு வழியில்லாமல் ஏமாற்றத்தை சகித்துக் கொண்டாள்.

ஆனால் இன்று விஷாலியைப் பார்த்தவுடன் ஈஸ்வர் தன்னை அறியாமல் ஒரு கணம் முகம் மலர்ந்ததைக் கவனித்த போது இன்னமும் அவன் மனதில் காதல் இருக்கிறது என்பதும், அவன் காதலிக்கும் பெண் விஷாலி தான் என்பதும் அவளுக்கு உறுதியாகி விட்டது. உடனடியாக அவன் முகம் இறுகியதை அவள் பெரிதுபடுத்தவில்லை. தன்னை அறியாமல் ஏற்படும் உணர்வு தான் நிஜம் என்பதில் அவளுக்கு சந்தேகமே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே அவன் காட்டுகிற பாசாங்கை அவள் நம்பவில்லை.

தூரத்தில் இருந்தே எப்போதும் பார்த்த அந்தப் பெண்ணைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள முடிவெடுத்த ஆனந்தவல்லி மீனாட்சி, விஷாலி இருவரும் பேசும் போது இடையிடையே கலந்து கொண்டாள். பின் ஒரேயடியாக மீனாட்சியை பேச்சில் இருந்து வெட்டிவிட முடிவெடுத்தாள். “ஏண்டி, வந்திருக்கறவங்களுக்கு சாப்பிட ஏதாவது தர்றதில்லையா?

மீனாட்சி உடனடியாக எழுந்து விட்டாள். “ஒன்னும் வேண்டாம் ஆண்ட்டிஎன்று சொல்லித் தானும் எழுந்த விஷாலியைக் கையமர்த்தி பக்கத்தில் உட்கார வைத்து விட்டு பேத்தியை அங்கிருந்து அனுப்பி விட்ட ஆனந்தவல்லி விஷாலியிடம் தாழ்ந்த குரலில் கேட்க ஆரம்பித்த கேள்விகள் கொஞ்ச நஞ்சமல்ல. விஷாலியைப் பற்றி ஒரு புத்தகமே எழுதுகிற அளவு அவள் தகவல்கள் சேகரித்து விட்டாள். விஷாலி பதில் சொல்லியே சலித்துப் போனாள். இந்தப் பாட்டிக்கு என்ன திடீர் என்று என் மேல் இவ்வளவு ஆர்வம்?

சற்று தள்ளி அமர்ந்து பரமேஸ்வரன், தென்னரசுவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் ஈஸ்வர் கவனம் அடிக்கடி விஷாலி பக்கம் திரும்பிக் கொண்டு இருந்தது. வெளிப்பார்வைக்கு விஷாலியைக் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் உண்மையாகவே அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அதை யோசிக்கும் போது அவனுக்குத் தன் மீதே வெறுப்பாக இருந்தது. ‘என்னை இவள் இந்த அளவு பாதிக்க நான் அனுமதி கொடுத்திருக்கிறேனே’.

ஆனந்தவல்லி அவளிடம் சும்மா ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. காரணம் என் கொள்ளுப் பாட்டி அவளிடம் ஏன் இந்த அளவு நெருங்கிப் பேச வேண்டும் என்பதா, இல்லை விஷாலியை ஏன் இந்தப் பாட்டி இந்த அளவு பேசிக் கழுத்தறுக்கிறாள் என்பதா என்று அவனால் கணிக்க முடியவில்லை.

ஈஸ்வர் பார்வை விஷாலிக்குத் தெரியாதபடி அடிக்கடி அங்கே வருவதையும் அவன் தன்னை அறியாமல் முகம் சுளிப்பதையும் ஆனந்தவல்லி பேச்சின் நடுவே கவனிக்கத் தவறவில்லை. அதே போல் விஷாலியும் இடையிடையே ஈஸ்வரைப் பார்த்த விதம் சந்தேகத்திற்கிடமில்லாமல் அவள் காதலையும் வெளிப்படுத்தியது.

ஆனந்தவல்லி பரம திருப்தி அடைந்தாள். விஷாலியிடம் பேசியதில் அவள் பத்தரை மாற்றுத் தங்கம் என்பதை ஆனந்தவல்லியால் எடை போட முடிந்தது. நல்ல இளகிய மனம், உபகார சிந்தனை, புத்திசாலித்தனம் என்று பல மார்க்குகள் போட்ட அவள் தன் கொள்ளுப் பேரனுக்கு இவளை விட நல்ல பெண் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தாள். பிறகு தான் கேள்வி கேட்பதை நிறுத்தினாள்.

அவள் கேள்வி கேட்பதில் ஒரு சின்ன இடைவெளி விட்டதும் விஷாலி எழுந்து “ஆண்ட்டி வர ஏன் இவ்வளவு நேரம்? என்ன தான் செய்யறாங்க என்று கேட்டுக் கொண்டே மீனாட்சியைப் பார்க்க அங்கிருந்து வேகமாகத் தப்பித்தாள்.

விஷாலி போன பின் ஈஸ்வர் எழுந்து ஆனந்தவல்லி அருகே வந்தான். “அவ கிட்ட என்ன அப்படி விடாமல் பேச்சு?

ஆனந்தவல்லி அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கேட்டாள். “ஏண்டா உனக்கு அவ கிட்ட ஏதாவது பேச இருந்துச்சா?

“சேச்சே... அப்படி எல்லாம் இல்லை. தொண தொணன்னு பேசிகிட்டே இருந்தீங்களேன்னு கேட்டேன்என்று ஈஸ்வர் அலட்சிய தொனியில் சொன்னான்.

ஆனந்தவல்லி புன்னகைத்தாள். அவள் மனதில் நினைத்துக் கொண்டாள். நீ பெரிய சைக்காலஜிஸ்டா இருக்கலாம். ஆனா நான் உனக்கு மூணு தலைமுறை மூத்தவள்டா. அந்தக் காலத்துலயே நான் உன் கொள்ளுத் தாத்தாவைக் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டவள். என் கிட்டயே இந்த நடிப்பா’.

ஈஸ்வருக்கு அவள் புன்னகை உள்ளர்த்தம் உள்ளதாகத் தெரிந்தது. அந்த நேரமாகப் பார்த்து பரமேஸ்வரன் அவனை அருகே அழைக்கவே, இந்த விவகாரமான பாட்டியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று அவன் நகர்ந்தான்.

“என்ன தாத்தா?

“அப்புறம் என்னோட பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எல்லாம் ஆஸ்பத்திரிக் காரங்களுக்குக் கிடைச்சுதா?

அந்தக் கேள்விக்குப் பதிலை பரமேஸ்வரனை விட அதிகமான ஆர்வத்துடன் தென்னரசு எதிர்பார்ப்பதாக ஈஸ்வருக்குத் தோன்றியது.

“கிடைக்கலை தாத்தா. அந்த டாக்டர் நானே அதை வேணும்னே எடுத்து மறைச்சிட்டேன்னு நினைச்ச மாதிரி கூட இருந்தது. ஆனால் அது எப்படி மாயமாச்சுன்னு எனக்கு இப்பவும் விளங்கலை

தென்னரசு மெல்ல கேட்டார். “ஒரு ஆராய்ச்சியாளனாய் உன்னோட யூகத்தை சொல்லேன். என்ன நடந்திருக்கும்...?

ஈஸ்வர் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “பெரிய தாத்தாவும் ஒரு சித்தர் மாதிரி தான்னு இப்ப எனக்கு அதிகம் தோண ஆரம்பிக்குது. சித்தர்கள் எப்பவுமே விளம்பரத்தை விரும்பாதவங்க. அவர் இருந்தப்ப எந்த சக்தியையும் வெளிப்படுத்தாதவர். அந்தப் பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டும், புது ஸ்கேன் ரிப்போர்ட்டும் இருந்திருந்தா அது ரெகார்டாய் இருந்திருக்கும். செய்தியாய் இருந்திருக்கும். அவர் வாழ்ந்த தோட்ட வீட்டைக் கும்பிட ஒரு கூட்டம் கிளம்பி இருக்கும்.... வாழும் போது இருக்கிற இடம் தெரியாமல் இருந்த அவர் இறந்த பிறகும் அதிகமாய் பேசப்படறதை விரும்பலை போல இருக்கு... பழைய ஸ்கேன் ரிப்போர்ட் கிடைக்காத வரை நாமளும் டாக்டரும் சொல்றதை யாரும் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. அதனால தான் அது கிடைக்கலைன்னு நினைக்கிறேன். சித்தர்களால முடியாதது என்ன இருக்க முடியும் அங்கிள்...

தென்னரசு மெள்ளத் தலையாட்டினார். அவரையும் மீறி அவர் முகத்தில் கிலி தோன்றி மறைந்தது.

ந்த ஆராய்ச்சி நடக்க இருக்கும் கட்டிடம் 23 ஏக்கர் நிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்தது. அந்த நிலத்தை மூன்று வருடங்களுக்கு முன் இந்தியப் பெரும் பணக்காரரான பாபுஜி வாங்கி இருந்தார்.  அந்த நிலத்தைச் சுற்றி மிக உயர்ந்த காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. வெளியே கேட்டில் இருந்து பார்த்தால் அது வெறும் தோட்டமாகவே தெரியுமே ஒழிய உள்ளே ஒரு பெரிய கட்டிடம் இருப்பது தெரிய வாய்ப்பே இல்லை. அதற்கேற்றபடி பெரிய மரங்கள் அந்தக் கட்டிடத்தை மறைத்துக் கொண்டு இருந்தன.

கேட்டில் இரண்டு திடகாத்திரமான கூர்க்காக்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஜான்சனைப் பார்த்தவுடன் கேட்டைத் திறந்து விட்டார்கள். அவர்கள் கார் உள்ளே நுழைந்தது. பின்னாலேயே இன்னொரு கார் உள்நுழைய ஜான்சன் திகைப்புடன் வருவது யார் என்று பார்த்தார். பாபுஜி!

ஜான்சன் குருஜியைப் பார்த்தார். குருஜிக்கு பாபுஜியின் வரவு ஆச்சரியமாக இருந்தது போல் தெரியவிலை. முதலிலேயே பாபுஜி வரப் போவதை அவர் அறிந்திருந்தார் போல இருந்தது.  ஜான்சனுக்கு பாபுஜியின் வரவு ஒருவித அசௌகரியத்தை உண்டு பண்ணியது. மும்பையில் பாபுஜியையும், முகம் தெரியாத அவரது கூட்டாளிகளையும் சந்தித்ததில் இருந்தே சொல்லத் தெரியாத அபாயத்தை அவர் உணர்ந்து வந்தார்....!

ஆனால் காரில் இருந்து இறங்கிய பாபுஜி நீண்ட நாள் நண்பரைப் போல வந்து ஜான்சனை அணைத்துக் கொண்டார். “ஜான்சன் எப்படி இருக்கீங்க?

ஜான்சனுக்கு அதே நட்பைக் காட்ட முடியவில்லை. பலவந்தமாக முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு நலமாக இருப்பதாகச் சொன்னார்.

குருஜியின் காலைத் தொட்டு வணங்கிய பாபுஜி அவரிடமும் நலம் விசாரித்தார். பின் ஆர்வத்துடன் குருஜியை பாபுஜி கேட்டார். “எல்லாம் சரியாய் தானே குருஜி போய்கிட்டிருக்கு?

குருஜி தலையசைத்தார். பாபுஜி பொங்கும் ஆர்வத்துடன் சொன்னார். “எனக்கு இங்கே செய்திருக்கிற முன்னேற்பாடுகளை எல்லாம் பார்க்கிற வரை இருப்பு கொள்ள மாட்டேன் என்கிறது. அதனால் தான் வந்தேன்....

தொடர்ந்து இன்னும் என்னென்னவோ கேட்கப் போன பாபுஜி ‘நிறுத்துஎன்பது போல குருஜி கை காட்டினார். பாபுஜி பேச வந்ததைப் பேசாமல் நிறுத்தி கேள்விக்குறியுடன் குருஜியைப் பார்த்தார்.

குருஜி அமைதியாகச் சொன்னார். பாபுஜி நீ என்ன கேட்கணுமோ உள்ளே போய் விட்டு திரும்பி வந்த பிறகு அப்புறமா கேள். இப்ப நாம் முக்கியமான ஒரு இடத்துக்குப் போகிறோம்கிறதை ஞாபகம் வச்சுக்கோ. இது விசேஷ மானஸ லிங்கத்திற்காக தயாராய் இருக்கிற இடம். இங்கே அமைதியான சூழ்நிலையை எந்த விதத்திலும் நாம் கலைச்சுடக் கூடாது.....

ஆசிரியரால் கண்டிக்கப்பட்ட மாணவனைப் போல பாபுஜி தலையாட்டினார்.

“உள்ளே முடிஞ்ச வரைக்கும் குறைவாய் பேசு. உள்ளே எந்த விதத்திலும் சத்தம் அதிகம் செய்யக் கூடாது. உள்ளே ஆராய்ச்சிக்கு நாம் அழைத்து வந்திருக்கிறவர்கள் தொடர்ந்து தியானம் செய்து ஆராய்ச்சிக்குத் தேவையான ரொம்ப சென்சிடிவான நிலையில் இருப்பார்கள். அதிகமாய் வர்ற சத்தங்கள் நாராசமாய் அவர்கள் காதில் விழும். அவர்கள் மன அமைதி பாதிக்கப்பட்டால் நம் ஆராய்ச்சிகளும் பாதிக்கப்படும்... சில சமயங்களில் அவர்கள் மறுபடி பழைய நிலைக்கு வருகிற வரைக்கும் ஆராய்ச்சிகளை ஒத்திப் போட வேண்டி இருக்கும்

பாபுஜி ஆராய்ச்சிகள் ஒத்திப் போடப்படுவதை சிறிதும் விரும்பவில்லை. வாய் மேல் விரலை வைத்துக் காட்டி இனி பேசுவதில்லை என்று குருஜியிடம் சைகை மூலம் தெரிவித்தார். ஜான்சனுக்கு குருஜியின் ஆளுமைத் திறனை வியக்காமல் இருக்க முடியவில்லை. எத்தனை பெரிய ஆளானாலும் சரி குருஜி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் வல்லவர் தான் என்று நினைத்துக் கொண்டார்.

குருஜி பாபுஜியிடம் சொன்ன வார்த்தைகள் வெறுமனே சொல்லப்பட்டதல்ல. இந்த இடத்தில் ஆராய்ச்சிக்கான சரியான சூழ்நிலையில் சின்னக் குறை வந்தாலும் அதைச் சரிப்படுத்தும் வரை ஆராய்ச்சியைத் தொடர்வது முடியாத காரியம். காரணம் இது சாதாரண ஆராய்ச்சி அல்ல. இது வரை உலகத்தில் எங்குமே யாருமே செய்திராத மிகப் பெரிய ஆராய்ச்சி. இதற்கு முன்னேற்பாடுகள் செய்யவே ஜான்சன் நிறைய உழைத்திருக்கிறார். ஒவ்வொரு ஏற்பாட்டையும் அவர் குருஜியிடம் தெரிவித்து அவரது ஒப்புதலை வாங்கி இருக்கிறார். அவரது பெரும்பாலான ஏற்பாடுகளில் குருஜி குறை காணவில்லை என்றாலும் சில ஏற்பாடுகளில் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லி மாற்றி இருக்கிறார். அதற்கான காரணங்களை எல்லாம் குருஜி விளக்கிய போதெல்லாம் ஜான்சனுக்கு குருஜியைப் பார்த்து பிரமிக்கத் தோன்றி இருக்கிறது. இவர் அறிவுக்கு எட்டாத விஷயமே இல்லையா என்று அவர் வியந்திருக்கிறார்.

அது ஒரு தியான மண்டபம். உள்ளே நுழைந்த போதே மிக மெல்லிய ஸ்ருதியில் “ஓம்என்ற  ஓங்காரம் ஒலித்துக் கொண்டிருப்பது கேட்டது. அந்தத் தியான மண்டபமே அதைச் சொல்வது போல... அந்தத் தியான மண்டபமே அந்த ஒலியில் மூழ்கித் திளைப்பது போல.... பாபுஜி மிகப் பெரியதொரு அமைதி தன்னையும் ஆட்கொள்வதை உணர்ந்தார்....

சில மாதங்களுக்கு முன் தான் அந்தத் தியான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.  அப்போது பாபுஜி இங்கு வந்து இருக்கிறார். இன்று அதன் கட்டிட அமைப்பிலும் தோற்றத்திலும் எந்த மாறுதலும் இல்லை.... என்றாலும் அது அன்று அவர் பார்த்த கட்டிடமாக இல்லை.... வேறு ஏதோ ஒரு உலகத்திற்கு வந்திருப்பது வந்திருப்பது போன்ற உணர்வு பாபுஜிக்கு ஏற்பட்டது.

(தொடரும்)

-          என்.கணேசன்

11 comments:

 1. நிறைய விஷயங்களுக்கு விடை கிடைத்த உணர்வு...தங்கள் வாசகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்ஃ

  ReplyDelete
 2. True line abt our youth's love :) its fact :)

  ReplyDelete
 3. Anandavalli is so sweet! I like it. experience munadi mathathallam jujubi than.

  As usual excellent.

  Mini

  ReplyDelete
 4. தென்னரசு எடுத்துச்சென்ற புத்தகம் .-
  ரிப்போர்ட் மறைந்ததில் காட்டும் ஆர்வம் ...
  அவரும் ஒரு கைப்பாவையோ...!

  ReplyDelete
 5. சுவாமிநாதன்August 29, 2013 at 6:45 PM

  சூப்பர் நாவல் சார். பொதுவாக நான் நாவல்கள் படிப்பதில்லை. ஆனால் இந்த பரமன் ரகசியம் வியாழக்கிழமை ஆனால் என்னை படிக்க பிடித்து இழுக்கிறது. வியாழக்கிழமை ஐந்தரைக்கு மேல் அப்டேட் ஆகி விட்டதா என்று பார்த்துக் கொண்டே இருக்க வைக்கிறது. புத்தகமாக போடப் பாருங்களேன் சார்.

  ReplyDelete
 6. வியாழக்கிழமை எப்போது வரும் என்று ஏங்க வைத்து விட்டதில் உங்கள் எழுத்தின் வலிமை புரிகிறது. தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 7. Excellent !!! waiting for next update.. also waiting for Guruji and Siddhar's exciting episodes ...

  ReplyDelete
 8. Is Thennarasu plays Babu ji's role?

  ReplyDelete
 9. Thennarasu is the one who has revealed about the power of this Shivalingam to the outside world and to Guruji in exchange for a huge money.

  He wants to be as rich as Parameswaran.

  ReplyDelete