என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, August 5, 2013

வள்ளலார் வலியுறுத்தும் ஆன்மிகம்


அறிவார்ந்த ஆன்மிகம்-14

ன்மிகத்தில் மார்க்கங்கள் பலவாக இருந்தாலும் இலக்கு இறைவனாகத் தான் இருக்கின்றது. இறைவனை நோக்கிச் செல்லச் செல்ல அன்பு, அமைதி, கருணை போன்ற இறை குணங்களில் மனித குலம் மேம்பட்டு உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே ஆன்மிகத்தின் குறிக்கோளும் எதிர்பார்ப்பும். ஆனால் இலக்கான இறைவன் மறக்கப்பட்டு நோக்கங்களும் மறக்கப்பட்டு மார்க்கங்களே பிரதானமாகி சண்டை சச்சரவுகள் அதிகமாகி வருவது துர்ப்பாக்கியமே.

இந்த நிலை இக்காலக் கட்டத்தில் தான் அதிகம் இருக்கின்றதாய் நமக்கெல்லாம் ஒரு பிரமை உண்டு. ஆனால் இந்த துர்ப்பாக்கிய நிலை இக்காலத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கூட இதே நிலை தான் இருந்தது என்றால் பலருக்கும் வியப்பாக இருக்கும். 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த வள்ளலாரின் பாடலைப் படித்தால் உண்மை விளங்கும்.   

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே

சாதிகள், மதங்கள், சமயநெறிகள், சாத்திரங்கள், கோத்திரங்கள் என ஏராளமான பிரிவினைகளை வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தாங்கள் சார்ந்ததே  உயர்ந்தது என்று சண்டையிட்டுக் கொண்டு அழிவது அழகல்ல என்று அப்போதே வள்ளலார் மனிதர்களுக்கு அறிவுரை கூறுகின்றார். 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்என்று வருந்திப் பாடியவர்  அவர். பயிர் வாடியதைக் காணவே சகிக்காத அவர் மனிதகுலமே பிரிவினைச் சண்டைகளில் அழிவதை சகிப்பாரா? ஆன்மிக ஞானியான அவர் அக்காலத்திலேயே உண்மையான ஆன்மிகம் குறித்து மதங்களைக் கடந்து ஆழமாக சிந்தித்தவர். இறைவனை ஆத்மார்த்தமாக உணர்ந்தவர். தான் அறிந்ததையும் உணர்ந்ததையும் உலக மக்கள் மீது கொண்டிருந்த பேரன்பினால் எடுத்துரைத்து விட்டுச் சென்றார்.
(ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே)
உலகில் உள்ள எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும், உண்மைப் பொது நெறியாக அவர் சொல்லி விட்டுப் போன ஆன்மிக மார்க்கம் சுத்த சன்மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. அவர் பாடி விட்டுப் போன ஆயிரக்கணக்கான பாடல்கள் திருவருட்பா என்றழைக்கப் படுகிறது.

இரண்டு நூற்றாண்டுகளிற்கு முன்பிருந்த ஆன்மிகக் குழப்பங்கள் இன்னமும் இருக்கின்ற நிலையில் வள்ளலார் அன்று சொன்ன தீர்வும் இன்றைய ஆன்மிக மக்கள் சிந்திக்கத் தக்கது என்பதால் அந்த மகான் சொல்லி விட்டுப் போன சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய அம்சங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து விடலாம்.

முதலாவது, ஜீவ காருண்யம். வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படை அம்சம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல். எல்லாமே இறைவன் படைப்பு என்பதால் இறைவனின் குறிப்பிட்ட சில படைப்புகளை அலட்சியப்படுத்தி விட்டோ, வெறுத்து விட்டோ இறைவனை யாரும் அடைய முடியாது அல்லவா? எனவே எல்லா உயிரையும் தன்னுயிராக எண்ணுவதே உண்மையான ஆன்மிகம், அதுவே அருட்பெரும்ஜோதியான இறைவனை அடையும் வழி என்பதை ஆன்மிகவாதிகளாகத் தங்களை எண்ணிக் கொள்பவர்கள் மறந்து விடக்கூடாது.
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
என்று மிக அழகாகப் பாடுகிறார் வள்ளலார். எங்காவது மலை கைப்பிடியில் அகப்படுமா? அன்பு என்னும் கைப்பிடியில் இறைவன் என்ற மலையும் அகப்படும் என்கிறார். குடிசையே ஆனாலும் அன்பிருக்குமானால் இறைவன் என்ற அரசன் விரும்பி நுழைவான் என்கிறார்.

அன்பு குறித்து மேலும் வள்ளலார் கூறிய முக்கிய கருத்துக்கள் இவை:

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்!
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு.! ஜீவ காருண்யமே இறை வழிபாடு !
பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

இரண்டாவது, கடவுள் ஒருவரே! கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவர். அவரை சாதி, சமயம், மதம் என்ற குறுகிய வட்டங்களுக்குள் அடைத்து விட முயற்சி அறியாமையே ஒழிய ஆன்மிகம் அல்ல. வள்ளலார் கடவுள் குறித்து கூறிய கருத்துக்கள் இவை:

கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்பவராகும் .

சிறு தெய்வ வழிபாடு செய்ய வேண்டாம்.!

கடவுள் பெயரால் உயிர்பலி செய்ய வேண்டாம்.!

மூன்றாவது, பிரிவினைகள் கூடாது. எல்லாப் பிரிவினைகளையும் வள்ளலார் ஆன்மிகமல்ல அறிவுமல்ல என்று மறுத்தார். பிரிவினைகள் அழிக்குமே அல்லாமல் நன்மை எதையும் விளைவிக்காது என்று அவர் கருதினார். பிரிவினைகள் இல்லாமல் எல்லா உயிரும் தன்னுயிர் போல எண்ணி இருப்பாரின் உள்ளமே இறைவன் நடம்புரியும் இடம் எனக் கண்டறிந்ததாகச் சொல்கிறார் இந்தப்பாடலில்-
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெரு மான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன்
பிரிவினை மறுத்து மேலும் வள்ளலார் கூறிய கருத்துக்கள் இவை.

சாதி,சமய,மதம்,இனம்,,மொழி,நாடு என்ற வேற்றுமைகள் கூடாது !

அனைத்து உயிர்களும் ஒன்று என்ற ''ஆன்மநேய ஒருமைப்பாடு வேண்டும் !
எதிலும் பொது நோக்கம் வேண்டும் .


நான்காவது ஒழுக்கம். ஒழுக்கம் இருந்தால் தான் உண்மையான ஆன்மிகம் அமையும் என்று கருதினார் வள்ளலார். அவர் கருதிய ஒழுக்கம் இன்று நாம் அறியப்படும் ஒழுக்கம் அல்ல. நான்கு வகை ஒழுக்கம் பற்றி அவர் சொல்கிறார்.  

இந்திரிய ஒழுக்கம் – இது புலன்களின் ஒழுக்கம். எல்லாப் புலன்களையும் கட்டுப்பாட்டில் உயர்வான விதத்தில் மட்டும் பயன்படுத்துவது முக்கியம் என்று கருதினார்.


கரண ஒழுக்கம் – இது மனம் ரீதியான ஒழுக்கம். எண்ணங்களால் கூட ஒழுக்கம் தவறாதிருத்தல் பற்றி குறிப்பிடுகிறார்.

ஜீவ ஒழுக்கம் – இது மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதம் இல்லாது சமத்துவம் பேணும் ஒழுக்கம்.

ஆன்ம ஒழுக்கம் – எறும்பு முதற்கொண்டு எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை உணர்ந்து காண்பது

இப்படி ஒழுக்கம் என்ற சொல்லில் வள்ளலார் மேலான இறைத் தன்மையையே கொண்டு வந்து விட்டார் என்றே சொல்ல வந்து விட்டார் என்றே கூற வேண்டும்.

இவ்வாறு ஒரு இறைவன், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு, பிரிவினைகள் காணாத தன்மை, சீரிய ஒழுக்கம் என்று நான்கு பரிமாணங்களை வள்ளலார் ஆன்மிகத்தில் கண்டு போற்றினார். உண்மையில் அப்படியொரு ஆன்மிகத்தை நம்மாலும் உணர முடிந்தால் பூவுலகம் சொர்க்கமாக மாறி விடும் என்பதில் சந்தேகமென்ன?

-          என்.கணேசன்  
-          நன்றி: தினத்தந்தி-ஆன்மிகம்-11-06-20135 comments:

 1. Thanks for writing about Vallalaar's philosophy.

  ReplyDelete
 2. ஒரு இறைவன், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு, பிரிவினைகள் காணாத தன்மை, சீரிய ஒழுக்கம் என்று நான்கு பரிமாணங்களை வள்ளலார் ஆன்மிகத்தில் கண்டு போற்றினார். உண்மையில் அப்படியொரு ஆன்மிகத்தை நம்மாலும் உணர முடிந்தால் பூவுலகம் சொர்க்கமாக மாறி விடும் என்பதில் சந்தேகமென்ன?

  -------------

  உண்மைதான்...


  நல்ல கட்டுரை...
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அருமை அன்பரே ., நல்ல கருத்துகள் "ஒழுக்கங்களை பிரித்து தொகுத்து அளித்த விதம்" அருமை ..

  ஏகன்(பரம் பொருள்) ஏக ருபத்தில் வந்தால் பிரச்னை இல்லையே . அனேக ரூபங்களில் (அவதாரங்களில்) வருவதால் தானே பிரச்னை . கர்ம பூமிகளில் இது சாத்தியம் இல்லையே .., பரம் பொருளை பல்வேறு அவதாரங்களில் உய்த்து உணர்வதில் தாம் எத்துனை இன்பம் .. ஆனால் "இதனால் குழப்பங்கள் , சண்டைகள் , ஏற்ற தாழ்வுகள் தானே மிச்சம் என்றால் " மீண்டும் "கர்ம பந்த வினை சுழற்ச்சிக்கு " தான் செல்ல வேண்டும் .

  மகான்களை பூமிக்கு அனுப்புகையிலும் பல பல கட்டளைகளையும் வரைமுறைகளையும், (" இந்த வகையில் , வரைமுறையில் தான் மக்களை அணுக வேண்டும்) " என்ற நியதிகளையும் இட்டுதானே அனுப்புகிறார் .., ஒரு மகானின் செயல்பாடுகளை போல் மற்ற மகானின் அணுகுமுறை இருக்காது ... "யாரறிவார் சிவ பராபரமே உம் திரு லீலையை "

  ***ஆனால் குறிக்கோள்/லட்சியம்/ஆன்மாவின் நோக்கம் ஒன்று தான் " எண்ணங்கள் அற்ற நிலையில் லயித்து " பரம் பொருளின் பாதத்தில் கரைவது ***

  ReplyDelete
 4. நல்ல தகவல். எனக்கு தெரிந்து கலியுகத்தின் கடைசியாக அவதரித்த ஒரு அற்புதமான மகான் வாள்ளலார்.
  ‘அ’ வில் ஆரம்பித்து ‘ஒள’ வில் முடியும் வள்ளலாரின் அகவல் வரிகள்
  http://www.tamilkadal.com/?p=1756

  ReplyDelete
 5. வள்ளலாரின் வார்த்தைகளை இதைவிட தெளிவாக யாரும் சொல்லிவிட முடியாது, நன்றி உங்களுக்கும் தந்திக்கும்....

  ReplyDelete