சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 22, 2013

பரம(ன்) ரகசியம் – 58



ரமேஸ்வரன் துக்கம் பல வருடங்கள் சேர்த்து வைத்தது என்பதால் அவர் அழுகை அவ்வளவு சீக்கிரம் ஓயவில்லை. அழுகை ஓய்ந்த பின்னும் அவருக்கு ஈஸ்வர் மீது ஒரு ஆற்றாமை தங்கி இருந்தது. அதை அவனிடம் சொன்னார்.

“நீ இங்கே வந்த பிறகு நான் நிறைய தடவை உன்னையும் உங்கப்பாவையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கேன் ஈஸ்வர். அவன் இடத்தில் நீ இருந்திருந்தால் அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போயிருக்க மாட்டாய் என்று எனக்கு தோன்றியிருக்கு. நீ என் கிட்ட சண்டை போட்டிருப்பாய். நான் ஏன் எனக்குப் பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு கேட்டு என் கிட்ட மல்லுக்கு நின்னிருப்பாய். எனக்கு ஏத்துக்கறது சுலபமாயிருக்கும்.... உங்கப்பா மாதிரி நான் சொன்னதை வேத வாக்காய் நினைச்சு ஒரேயடியாய் என்னை விட்டு விலகி இருக்க மாட்டாய். அப்படி அவன் நின்னிருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு நான் அடிக்கடி நினைச்சிருக்கேன்.... ஆனால் நீயும் இப்ப என் கிட்ட பழசைப் பத்தி எதுவுமே கேட்காமலேயே அமெரிக்காவுக்குக் கிளம்பிப் போறதை என்னாலே தாங்க முடியலைடா. நீயும் உன் அப்பா மாதிரியே என்னைத் தண்டிக்க தீர்மானிச்சிட்டியாடா

சொல்லும் போது அவர் குரலில் தாங்க முடியாத வேதனை இருந்தது. தந்தை கேட்ட தொனியிலேயே அந்த வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்த மீனாட்சி இன்னொரு தடவை கண்கலங்கினாள். இதற்கு முன்பும் அவர் அவனிடம் உருக்கமாகப் பேசின போதெல்லாம் அவருக்கு இணையாகக் கண்கலங்கிய அவள் இப்போதும் கண்கலங்கி தன் புடவைத்தலைப்பு என்று எண்ணி ஆனந்தவல்லியின் புடவைத்தலைப்பை இழுத்து கண்களைத் துடைக்க ஆனந்தவல்லி பேத்தியை முறைத்தாள்.

தாத்தாவின் கேள்வி ஈஸ்வரை என்னவோ செய்தது. தாத்தாவை இறுக்கி அணைத்துக் கொண்டு ஈஸ்வர் மென்மையாகச் சொன்னான். “உங்களைத் தண்டிக்கறதுக்காக நான் அமெரிக்கா போகலை தாத்தா. உங்களுக்கு மாரடைப்பு வந்தப்ப நான் நிஜமாவே பயந்துட்டேன். எனக்கு பெரிசா குற்ற உணர்ச்சி இருந்துச்சு. அப்பா செத்துப் போனதுக்கப்புறம் அவர் போட்டோ கிட்ட மனசு விட்டு எல்லாத்தையும் பேசுவேன்... முக்கியமான எதையுமே அவர் கிட்ட சொன்னாத் தான் எனக்கு நிம்மதி. ஆனா உங்களுக்கு மாரடைப்பு வந்து நீங்க பிழைக்கற வரைக்கும் என்னால அவர் கிட்ட பேச முடியல. அவர் போட்டோவை நேரடியா பார்க்கிற தைரியம் கூட இருக்கலை. நல்ல வேளையாய் ஏதோ உங்க அண்ணா தயவுல நீங்க பிழைச்சுட்டீங்க. இன்னொரு தடவை நான் ஏதாவது பேசி உங்களை அது பாதிக்கறதை நான் விரும்பல தாத்தா. இங்கே இருந்தா சிலதைப் பேசாம இருந்துட முடியும்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கல. அதான்.....

பேரனிடம் பரமேஸ்வரன் மனதார சொன்னார். “நீ கோவிச்சுகிட்டு பிரிஞ்சு போகறதைத் தவிர மத்த எல்லாத்தையும் தாங்கிக்கற சக்தி எனக்கு இருக்கு ஈஸ்வர். நீ என்ன பேசறதாய் இருந்தாலும் பேசு…. கேட்க நினைக்கிறதைக் கேளு... திட்ட நினைச்சா திட்டிடு.. பரவாயில்லை....

ஒவ்வொரு நாளும் மகனிடம் கால் மணி நேரமாவது பேசா விட்டால் தூக்கம் வராத மனிதரிடம், மகனைப் பிரிந்த பின்னும் மகன் புகைப்படங்களைப் பார்த்தும், உபயோகித்த பொருட்களைத் தொட்டுப் பார்த்தும், இரண்டாம் வகுப்பில் படிக்கையில் நோட்டுப் புத்தகத்தில் இருந்து கிழித்த காகிதத்தில் எழுதிய I love you daddy வார்த்தைகளைப் படித்தும் மட்டுமே தூங்க மனிதரிடம் இனி கேட்கவோ, திட்டவோ என்ன இருக்கிறது என்று ஈஸ்வர் நினைத்தான். என்ன வேண்டுமானாலும் செய்து கொள், என்னை விட்டுப் போக மட்டும் செய்யாதே என்று சொல்லும் தாத்தாவை அவன் மனம் நெகிழ பாசத்துடன் பார்த்தான்.

உணர்ச்சிவசப்பட்டு மனதில் உள்ளதை எல்லாம் பேரனிடம் கொட்டி முடித்த பரமேஸ்வரன் கண்களை களைப்புடன் மூடினார்.

அதைக் கவனித்த ஈஸ்வர் தாத்தாவிடம் கனிவுடன் சொன்னான். “தாத்தா. இப்ப எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை... நான் சீக்கிரமா அமெரிக்கா போகப்போறதில்லை. சரியா.  நீங்க தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நாம நாளைக்குப் பேசலாம்...

பெரிய பாரத்தை இறக்கி வைத்துக் களைத்திருந்த பரமேஸ்வரன் தலை அசைத்தார். ஈஸ்வருடன் ஆனந்தவல்லியும், மீனாட்சியும் கிளம்பினார்கள். மூவர் மனமும் லேசாகி இருந்தது. பேசிக் கொள்ளும் மனநிலையில் மூவருமே இருக்காததால் எதுவும் பேசாமல் தங்கள் அறைகளுக்கு உறங்கப் போனார்கள்.

அறைக்குச் சென்றவுடன் ஈஸ்வர் அம்மாவிற்குப் போன் செய்தான். கனகதுர்கா கேட்டாள். “எங்கடா போயிட்டே! நாலு தடவை போன் பண்ணிட்டேன். நீ எடுக்கவே இல்லை

“சார்ஜ் இருந்திருக்கலை அம்மா. என்ன விஷயம்மா?

உன் தாத்தா இன்னிக்கு காலைல என் கிட்ட போன்ல பேசினார்டா...” என்று ஆரம்பித்தவள் பரமேஸ்வரன் பேசியதை எல்லாம் மகனிடம் நெகிழ்ச்சியோடு சொன்னாள். ஆரம்பத்திலிருந்தே மருமகளை வெறுத்து வந்த பரமேஸ்வரனுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்பது சுலபமாக இருந்திருக்காது என்பதை ஈஸ்வரால் புரிந்து கொள்ள முடிந்தது. அதுவும் சாதாரணமாய் மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டிருக்காமல் “நான் எத்தனை தேடி இருந்தாலும் என் மகனுக்கு உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணைக் கண்டு பிடிச்சுக் கொடுத்திருக்க முடியும்னு தோணலம்மா....என்று ஒத்துக் கொண்டது ஆத்மார்த்தமான ஒப்புதலாக அவனுக்குத் தோன்றியது.  ஈஸ்வர் மாதிரி ஒரு பேரனை எனக்குப் பெத்துக் கொடுத்திருக்கிற உனக்கு நான் கைமாறா நான் என்ன செய்ய முடியும்னு எனக்குத் தெரியலம்மாஎன்று சொன்னது அவனை அவர் எவ்வளவு தூரம் நேசித்திருக்கிறார் என்று வியக்க வைத்தது. அவர் மேல் அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்பதை அறிந்த பின் கரைந்து போனது. இன்று அவர் தன்னிடம் பேசியதை எல்லாம் அவன் அம்மாவிடம் கண்கலங்க சொன்னான்.

அம்மாவிடமும் பேசிய பின் அன்று அவன் உறங்கிய உறக்கம் நிம்மதியானதாக இருந்தது.

காலையில் எழுந்தவுடன் பரமேஸ்வரன் பேரனைப் பார்க்க மகன் அறைக்கு வந்தார். சுமார் 27 வருடங்கள் கழித்து அவர் தன் மகன் அறைக்குள் நுழைகிறார்! ஈஸ்வர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, பேரனையே பாசத்துடன் பார்த்து சிறிது நேரம் நின்ற பரமேஸ்வரன் பின் மெள்ள பார்வையைத் திருப்பினார். மகனின் புகைப்படங்களைப் பார்த்தார். மெல்ல மகன் புகைப்படத்தைத் தடவினார். அப்பாவை மன்னிச்சுடுடாஎன்று மானசீகமாக மகனிடம் சொன்னார். மகன் படத்திலிருந்து அவரைப் பாசத்தோடு பார்த்தது போல் இருந்தது. அவர் கண்கள் ஈரமாயின.

அடுத்ததாக மகன் வாங்கி வைத்திருந்த பதக்கங்களையும், கோப்பைகளையும் பார்த்தார். மீனாட்சி எல்லாவற்றையும் பளபளவென்று வைத்திருந்தாள். எல்லாவற்றையும் துடைத்து வைக்கவே ஒவ்வொரு முறையும் நிறைய நேரம் அவளுக்குத் தேவைப்படும். ஆனாலும் இந்த 27 வருடங்கள் அதைச் செய்ய அவள் சலிப்படைந்தது இல்லை. மெள்ள அந்தக் கோப்பைகளைத் தடவிப் பார்த்தார். எப்படிப்பட்ட மகனைப் பெற்றிருந்தும் அவனைத் தக்க வைத்துக் கொள்ள எனக்கு கொடுப்பினை இருக்கவில்லையே’!

அப்பாமீனாட்சி அவரை மெல்ல அழைத்தாள். அவளுக்கு அண்ணன் அறையில் அப்பாவைப் பார்த்ததில் சந்தோஷம்.

மகளைப் பார்த்ததும் பரமேஸ்வரன் சொன்னார். “உன்னை உன் அண்ணன் கிட்ட இருந்து பிரிச்சுட்டேன்னு அப்பா மேல் உனக்கும் வருத்தம் இருக்காம்மா. என்னை மன்னிச்சுடும்மா

தான் நேசிப்பவர்கள் மீது எப்போதும் எந்தக் குறையும் காண முடியாத மீனாட்சி துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னாள். “நீங்க என் கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கக் கூடாதுப்பா.

‘எப்படிப்பட்ட ரத்தினங்களைக் குழந்தைகளாகப் பெற்றிருக்கிறேன்என்று நினைக்கையில் பரமேஸ்வரன் மனம் லேசாகியது. மகளைப் பெருமிதத்துடன்  பார்த்து அவர் ஏதோ சொல்ல வாயைத் திறக்கையில் ஆனந்தவல்லி வந்து தாழ்ந்த குரலில் திட்டினாள். அப்பனும் மகளும் ஏன் இங்கே வந்து அவன் தூக்கத்தைக் கெடுக்கறீங்க. வெளியே போய் பேசிக்கறது தானே

அவர்களைத் திட்டி விட்டு ஆனந்தவல்லி ஈஸ்வர் உறக்கம் கலைந்து விட்டதா என்று உற்றுப் பார்த்து விட்டு இல்லை என்று தெரிந்தவுடன் திருப்தி அடைந்தாள். பரமேஸ்வரனும், மீனாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு வெளியேற ஆனந்தவல்லியும் பின் தொடர்ந்தாள்.

ன்று நாள் முழுவதும் பரமேஸ்வரனுக்கும், ஈஸ்வருக்கும் பேசிக் கொள்ள  நிறைய இருந்தது. தந்தையின் இளமைக் காலத்தை தாத்தாவிடமிருந்து அறிந்து கொள்ள ஈஸ்வர் ஆசைப்பட்டான். மகனின் பிந்தைய வாழ்க்கையைப் பேரன் மூலமாக விவரமாக அறிந்து கொள்ள பரமேஸ்வரன் ஆசைப்பட்டார். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சி இடையிடையே பேச்சில் தானும் கலந்து கொண்டாள்.

அவர்களுடனேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லிக்கு கடந்த காலம் திரும்பி வந்தது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. பரமேஸ்வரன், சங்கர், மீனாட்சி என்ற மூவரின் உலகம் தனிப்பட்டது. அதில் மற்றவர்களை எல்லாம் மறந்து மூவரும் அந்தக் காலத்தில் லயித்திருப்பார்கள். சில அடிகள் தள்ளியே நின்று ஆனந்தவல்லி அக்காலத்தில் வெறித்துப் பார்ப்பாள். பல சமயங்கள் அவள் இருப்பதைக் கூட அவர்கள் மூவரும் கவனித்திருக்க மாட்டார்கள். இன்று சங்கருக்குப் பதில் அவன் மகன் ஈஸ்வர் சேர்ந்திருக்கிறான். அதே பழைய அன்னியோன்னியம், அதே பாசம் நிலவியது. ஒரே வித்தியாசம் ஆனந்தவல்லி தள்ளி நின்று வெறித்துப் பார்க்காமல் கூடவே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

பரமேஸ்வரன் பேரனைக் கேட்டார். “நீ உங்கப்பா கிட்ட சண்டை போட்டிருக்கியா?

ஈஸ்வர் சிரித்துக் கொண்டே சொன்னான். “எங்கப்பா கூட யாருமே சண்டை போட முடியாது. அதற்கு வழியே விட மாட்டார். ஓரளவாவது அவரைப் பொறுமை இழக்க வைக்கணும்னா நான் உங்களைப் பத்திப் பேசுவேன். உங்களைப் பத்தித் தப்பாய் பேசினா ஆள் மூட் அவுட் ஆயிடுவார்...

பரமேஸ்வரன் கண்களில் நீர் திரை போட்டது. பேரனிடம் பெருந்துக்கத்தோடு கேட்டார். அவ்வளவு தூரம் என்னை நேசிச்சவன் ஏன் ஈஸ்வர் என்னைத் திரும்பவும் சந்திக்க ஒரு தடவை கூட முயற்சி செய்யலை. நீ அவனைக் கேட்டிருக்கியா, இதைப் பத்தி

ஈஸ்வர் சொன்னான். “கேட்டிருக்கேன்.  உங்களைத் திரும்ப ஒரு தடவை சந்திச்சா கடைசியா  நீங்க கேட்டீங்களாமே ‘நான் வேணுமா அந்தப் பொண்ணு வேணுமான்னு முடிவு பண்ணிக்கோன்னு. அதுக்கு எந்த மாதிரி பதில் சொல்லி சமாளிக்கறதுன்னு அவருக்குப் புரியலை. அதை நேரடியா சொல்லாட்டியும் அதை என்னால் யூகிக்க முடிஞ்சுது...

தான் அப்படிச் சொல்லி மகனை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளி இருக்க வேண்டாம் என்று இப்போது பரமேஸ்வரனிற்குத் தோன்றியது. மனம் கனமாகியது.   

ஆனால் அப்போது ஈஸ்வர் ஏதோ நினைத்து குறும்பாய் புன்னகைக்க பரமேஸ்வரன் கேட்டார். “எதுக்கு சிரிக்கறே?

“அதுக்கு நான் அவர் கிட்ட ஒரு வழி சொல்லி இருந்தேன். அதை நினைக்கிறப்ப சிரிப்பு வந்தது

“என்ன வழி?

“வேண்டாம் தாத்தா. சொன்னா கோவிச்சுக்குவீங்க

“கோவிச்சுக்க மாட்டேன். சொல்லு

ஈஸ்வர் குறும்பாய் புன்னகைத்துக் கொண்டே சொன்னான். “அப்பா கிட்ட சொன்னேன். ‘நீங்க உங்கப்பா கிட்ட கேளுங்க... அட மரமண்டை அப்பா, காதலையும் பாசத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுறீங்களே. உங்க  கிட்ட வலது கண் வேணுமா, இடது கண் வேணுமான்னு கேட்டா ஏதாவது ஒண்ணை தேர்ந்தெடுத்து மற்றதை உங்களால பிடுங்கி எறிய முடியுமான்னுகேளுங்கன்னு சொன்னேன்...

பேரன் கேட்கச் சொன்னதில் இருந்த அழகான அர்த்தத்தை பரமேஸ்வரன் ரசித்தாலும் மரமண்டை அப்பா என்ற வார்த்தைக்காக போலிக் கோபத்துடன் பேரனைப் பார்த்தார். மீனாட்சி மெல்லப் புன்னகைக்க ஆனந்தவல்லி கொள்ளுப் பேரனின் புத்திசாலித்தனத்தையும், குறும்பையும் ஒருசேர ரசித்தாள்.

ஈஸ்வர் தொடர்ந்து சொன்னான். இப்போது அவன் குரலில் குறும்பு போய் உணர்ச்சி நிரம்பி இருந்தது. “அவருக்கு உங்கள் கோபம் பத்தி பெரிசா பயம் இருக்கலை தாத்தா. ஆனால் உங்க மனசில் வலியைப் பார்க்கிற தைரியம் தான் அவருக்குக் கடைசி வரை வரலை...

பரமேஸ்வரன் பேரனைக் கட்டியணைத்துக் கொண்டு கண்கலங்கினார். வறட்டு கௌரவம் பார்த்து வாழ்க்கையை ரணமாக்கிக் கொண்டு வாழ்ந்திருக்கிறோமே என்ற சுய பச்சாதாபம் அவரை அரித்தெடுத்தது.

தாத்தாவின் மனநிலையைப் புரிந்து கொண்ட ஈஸ்வர் பேச்சை மாற்றினான். “தாத்தா, எனக்கு பாட்டியைப் பத்தி சொல்லுங்களேன்

ஆனந்தவல்லி கேட்டாள். “ஏண்டா என்னைப் பத்தி அவன் கிட்ட கேட்கறே?

“நான் உங்களைப் பத்திக் கேட்கலை. எங்க பாட்டியைப் பத்திக் கேட்டேன்.

“அப்ப நான் யார்டா பக்கத்து வீட்டுப் பாட்டியாடா?

“ஐயோ நான் எங்கப்பாவோட அம்மாவைப் பத்திக் கேட்டேன். நீங்க என்னோட கொள்ளுப்பாட்டி தானேஎன்ற ஈஸ்வர் குறும்பாகச் சேர்த்துச் சொன்னான். “கொஞ்சம் லொள்ளுப் பாட்டியும் கூட

பரமேஸ்வரனின் துக்க மனநிலை மாறி மனம் சற்று லேசாகியது. அவரும் மீனாட்சியும் சிரிக்க ஆனந்தவல்லி சற்று எட்டி பேரனின் காதைப் பிடித்துத் திருகினாள். ஏண்டா உனக்கு என்னைப் பார்த்தா லொள்ளுப் பாட்டி மாதிரியா தெரியுது

சிரிப்பலை அங்கு பலமாய் எழுந்தது.

பிறகு பரமேஸ்வரன் பேரன் கேள்விக்குப் பதிலாய் மனைவியை நினைவு கூர்ந்தார்.  பாட்டி உன் அத்தை மாதிரியே இருப்பா. வெகுளித்தனம், நல்ல மனசு எல்லாம் கூட இவ மாதிரியே தான். நல்லா பாடுவா....

சொல்வதில் ஒரு சுகம். கேட்பதில் ஒரு சுகம். அந்த இரண்டு சுகங்களையும் அங்கே காண முடிந்தது.  பரமேஸ்வரன் சொல்லச் சொல்ல இடையிடையே மீனாட்சியும், ஈஸ்வரும் கேள்விகள் கேட்க கடந்த கால நிகழ்ச்சிகள் தத்ரூப நிகழ்வுகளாக அவரவர் மனதில் காணப்பட்டன. பேச்சு பரமேஸ்வரனின் தந்தை பக்கம் நகர்ந்தது. ஈஸ்வரைப் போலவே தோற்றத்தில் இருக்கும் அவரின் குணாதிசயங்களைப் பற்றிப் பேச்சு வந்த போது ஆனந்தவல்லி மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டாள். கணவனைப் பற்றிப் பேசும் போதெல்லாம அவளை அறியாமல் ஒரு மென்மை அவளைத் தொற்றிக் கொண்டது.

அதைப் பார்க்கும் போது சில பந்தங்களின் தாக்கம் எத்தனை காலமானாலும் குறைவதில்லை என்று ஈஸ்வருக்குத் தோன்றியது. கணவனை இழந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டிருந்தாலும் அவர் மேல் இருந்த நேசத்தை அவள் பேச்சில் இப்போதும் அவனால் கவனிக்க முடிந்தது.

ஈஸ்வர் ஆனந்தவல்லிக்கு எட்டாத தூரத்தில் நகர்ந்து கொண்டு தாத்தாவிடம் சொன்னான். “தாத்தா, நான் கேள்விப்பட்ட வரையில் உங்கப்பா இருந்தவரை உங்கம்மா அவரைக் கரிச்சுக் கொட்டிகிட்டு இருந்தாங்கன்னு அல்லவா சொன்னாங்க

பரமேஸ்வரன் தாயைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஆமா. அண்ணா அந்த சிவலிங்கம் பின்னாடி போக அப்பா தான் காரணம்னு எப்பவுமே அவருக்குத் திட்டு தான்

“அப்ப இவங்க சித்திரவதை தாங்காம தான் அவர் சீக்கிரமே போய் சேர்ந்துட்டார்னு சொல்லுங்கஎன்று ஈஸ்வர் சொல்ல ஆனந்தவல்லி சுற்றிலும் பார்த்து விட்டு அங்கிருந்த ஒரு வாரப்பத்திரிக்கையை எடுத்து அவன் மேல் வீசினாள்.

மீண்டும் சிரிப்பலை எழுந்தது. இத்தனை நாட்கள் வரை அந்த வீட்டில் இந்த மாதிரி ஒரு உயிர்ப்புள்ள சந்தோஷம் இருந்ததில்லை. சங்கர், மீனாட்சி, பரமேஸ்வரன் வட்டத்திலும் அளவு கடந்த பாசம் இருந்ததே ஒழிய இந்தக் கிண்டல், சீண்டல் எல்லாம் இருந்ததில்லை. 

நான்கு தலைமுறைகள் மனிதர்கள் சேர்ந்து இப்படி அன்பாகவும், பாசமாகவும், கிண்டலாகவும், விவாதம் செய்து கொண்டும் இருக்கும் ஒரு அற்புத பந்தம் உருவாக ஈஸ்வர் தான் காரணம் என்பதை பரமேஸ்வரன் உணர்ந்தார். பேசிக் கொண்டே இருந்த அவர்கள் சிறிது சிறிதாக நெருங்கி உட்கார ஆரம்பித்து கடைசியில் ஈஸ்வர் தாத்தாவின் மடியில் படுத்துக் கொண்டான். பரமேஸ்வரன் பாசத்துடன் பேரன் தலையைக் கோதி விட ஆனந்தவல்லி நிறைந்த மனதுடன் மகனையும் கொள்ளுப் பேரனையும் பார்த்தாள். மீனாட்சி தந்தையை ஒட்டினாற்போல் உட்கர்ந்து கொண்டாள்.   

அந்த நேரத்தில் தென்னரசுவும், விஷாலியும் பரமேஸ்வரனின் உடல் நலம் விசாரிக்க அங்கு வந்தார்கள். விஷாலியைப் பார்த்தவுடன் ஓரிரு வினாடிகள் தானாக ஈஸ்வரின் முகம் மலர்ந்து பின் இறுகியது. மெள்ள தாத்தாவின் மடியில் இருந்து எழுந்தான். ஈஸ்வரின் முகத்தில் வந்து போன மாற்றங்களைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லி இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடிந்த பெண் யார் என்று திரும்பிப் பார்த்தாள்.

ஜான்சன் குருஜியை அழைத்துப் போக வந்திருந்தார். சிவலிங்கத்தை மாற்றும் இடத்தில் ஆராய்ச்சிக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தன் மேற்பார்வையிலேயே ஜான்சன் சிறப்பாக முடித்திருந்தார். குருஜி அதைப் பார்வையிட கிளம்பிக் கொண்டிருந்தார். குருஜிக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த உலக வரலாற்றை அவர் கண்டிப்பாக மாற்றி எழுதப் போகிறார். இது அதற்கான அழகான ஆரம்பம்  என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை.

“உன் ஆள்கள் எல்லாம் ஆராய்ச்சிக்குத் தயார் நிலையில் தானே இருக்கிறார்கள்?குருஜி ஜான்சனைக் கேட்டார்.

அவர்கள் அதிகமாய் ஆல்ஃபா அலைகளிலேயே இருக்கிறார்கள் குருஜி.ஜான்சன் சொன்னார்.

“நீ வரவழைத்திருக்கிற உபகரணங்கள் எல்லாம் வேலை செய்கிற தயார்நிலையில் தானே இருக்கின்றன

“ஆமாம் குருஜி

அதற்கு மேல் குருஜி கேள்வி எதுவும் கேட்கவில்லை. திருப்தி அடைந்தவராக ஜான்சனுடன் கிளம்பினார்.

ஆனால் ஜான்சன் மனதில் கணபதி தயார்நிலையில் இருப்பானா என்ற கேள்வி ஒன்று எழுந்தது. கேட்டார்.


குருஜி புன்னகையுடன் சொன்னார். “நீ தேர்ந்தெடுத்திருக்கிற ஆட்கள் எல்லாம் தங்களைத் தயார்படுத்திக்கணும் ஜான்சன். ஆனால் கணபதி எப்பவுமே தயார்நிலையில் தான் இருப்பான்

(தொடரும்)

-          என்.கணேசன்

-           

23 comments:

  1. Family sentiment !!! very nice to read and enjoy. I remember my childhood days( Thamirabarani river, my Grandmother).


    By Kannan

    ReplyDelete
  2. // சொல்வதில் ஒரு சுகம். கேட்பதில் ஒரு சுகம். அந்த இரண்டு சுகங்களையும் அங்கே காண முடிந்தது //

    உங்களுடைய எழுத்துக்களை படிப்பதும் ஒரு சுகம். அந்த மூன்றாவது சுகத்தை நங்கள் உணர்ந்தோம்.
    https://www.facebook.com/groups/nganeshanfans

    ReplyDelete
  3. You know how to attract people by words :)Excellent :)

    ReplyDelete
  4. "நான்கு தலைமுறை மனிதர்கள் சேர்ந்து இப்படி அன்பாகவும் , பாசமாகவும் , கிண்டலாகவும் , விவாதம் செய்து கொண்டிக்ருக்கும் ஒரு அறபுத பந்தம் "

    அருமை அருமை நண்பரே .., தங்களின் எழுத்துகளால் நாங்களும் இந்த நான்கு தலைமுறை அற்புத பந்தத்தில் திளைத்தோம் . நன்றி நன்றி வணங்குகிறோம் .....

    ReplyDelete
  5. sir ,
    recently i know about this blog .this story is excellent.parameshvaran,eswar,vishali characters are nice.

    ReplyDelete
  6. // சொல்வதில் ஒரு சுகம். கேட்பதில் ஒரு சுகம். அந்த இரண்டு சுகங்களையும் அங்கே காண முடிந்தது //
    உங்களுடைய எழுத்துக்களை படிப்பதும் ஒரு சுகம். அந்த மூன்றாவது சுகத்தை எங்களால் உணர முடிந்தது.
    https://www.facebook.com/groups/nganeshanfans

    ReplyDelete
  7. sir,
    recently i know about this story.i read all chapters in a day.ur story is excellent.characters are lively.eswar,vishali, ganapathy characters -masterpiece.

    ReplyDelete
  8. காட்சிகள் கண் முன் விரியும்படி... உணர்வுகளை அப்பட்டமாக உணரும்படி... என்னமாய் எழுதுகிறீர்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  9. எப்போதும் தங்கள் எழுத்துக்களுக்கு அபார சக்தி உண்டு :-) ...கோவையில் தங்களின் இருப்பிட முகவரி கிடைக்குமா கணேசன்! தெரிந்து கொள்ள ஆவல்:-)

    ReplyDelete
    Replies
    1. W 80 கோவைபுதூர், கோயமுத்தூர்-641042

      Delete
    2. வாய்ப்பு கிடைத்தால் தங்களை சந்தித்து உரையாட விரும்புகிறேன்
      எழுத்தை ஆழ்பவரே

      Delete
  10. வரதராஜன்August 22, 2013 at 8:44 PM

    உங்கள் எழுத்துக்களை படிப்பவர்களை தங்கள் வாழ்க்கையில் எதையாவது உணரவோ, நினைக்கவோ வைக்கிறீர்கள். இந்த அத்தியாயம் மிக நேர்த்தி. அந்த நால்வரோடு நாங்களும் ஐவராக பங்கு கொண்டது போல் உணர்வு.

    ReplyDelete
  11. குருஜியின் பேச்செல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால் செயல்கள் தான் ஏறுமாறாக இருக்கின்றன. மனிதர் திருந்துவாரா?

    ReplyDelete
  12. The picture you choose for each episode is very unique & so relevant. Your story telling is superb! It highly influences the reader on love, affection, being truthful and motivates to become a good human.

    ReplyDelete
  13. Nice story, I like the way of moving vey ince

    ReplyDelete
  14. லக்‌ஷ்மிAugust 23, 2013 at 4:37 AM

    மிக அருமையான நாவல். கதையோடு ஒன்றி விட்டேன். இப்போதெல்லாம் புரியாதது போல் என்னென்னவோ எழுதி அறிவுஜீவியாக காட்டிக் கொள்ளும் எழுத்தாளர்கள் தான் அதிகம் எழுதுகிறார்கள். கவிதையில் மாடர்ன் ஆர்ட் மாதிரி கதையில் இவர்கள் எழுத்து. க்ரைம் நாவல் என்று எடுத்து கொண்டால் குப்பைகளை எழுதுபவர்கள் அதிகம். ஒன்றும் மனதில் நிற்பதில்லை. ஆனால் உங்கள் அமானுஷ்யன், பரமன் ரகசியம் நாவல்கள் காலம் கடந்து நிற்கும். இந்த கதாபாத்திரங்களும் வாசகர்கள் மனதில் வாழ்வார்கள். ஆசிர்வாதம்.

    ReplyDelete
  15. தொடர்கதை அழகாகச் செல்கிறது... தொடர்கதை எழுதும் அசாத்திய திறன் உங்களிடம் அழகாய்ப் பொருந்தியிருக்கிறது. எங்களையும் கட்டிப் போட்டு வைத்துவிட்டீர்கள்...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  16. ரொம்ப சந்தோசம் கணேசன் சார் எங்க ஊருக்கு பக்கம் நீங்க இருக்கறது.நான் எட்டிமடையில் உள்ளேன். நான் வரப்போறேன் உங்க வீட்டுக்கு :-)

    ReplyDelete
  17. Very nice !!!

    waiting for next update !!!

    ReplyDelete
  18. we expecting more spritual stuffs compare to family and love..please consider this request sir..looking forward the same upcoming episodes...

    ReplyDelete