என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, July 29, 2013

வணங்கா விட்டாலும் இறைவன்!

அறிவார்ந்த ஆன்மிகம்-13

ப்போதோ படித்த ஒரு அரபுக் கதை சிறு மாற்றங்களுடன்...

முன்னொரு காலத்தில் ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதிய செல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக் கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ, உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். பாலைவனத்தில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும், இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலைவனத்தின் மத்தியில் அந்தப் பெரியவர் பெரிய கூடாரம் இட்டுக் கொண்டு அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.  புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் தொழுகை நடத்தி இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார்.

பாலைவன வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனிதத் தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து தொழுகை நடத்தி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். அந்தப் பெரியவரும் அந்தப் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும், உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது.

அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை. சில நாட்களில் யாத்திரீகர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். அவர் தொழுது முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து தொழுகை நடத்தி முடிக்கும் வரை காத்திருந்து அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார். நாளாவட்டத்தில் அவருடைய கூடாரமே புனிதத்தன்மை அடைந்திருப்பதாக யாத்திரீகர்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் பாலைவனத்தில் நீண்ட நேரம் யாரும் பயணிக்கவில்லை. பாலைவனத்தில் சாதாரணமாகப் பயணிப்பதே சிரமம் தான். தட்பவெப்ப நிலை மோசமாகி விட்டாலோ பாலைவனைத்தில் பயணிப்பதே கொடுமையான அனுபவம் தான். எனவே தான் பயணிகள் யாரையும் காணவில்லை. பெரியவர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பெரியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.  

அவனுக்கு வயது இருபத்தைந்து இருக்கும். பசியுடன் இருப்பது அவனைப் பார்த்தவுடனேயே அவருக்குத் தெரிந்தது. அவனை மனமார வரவேற்று உபசரித்த பெரியவர் சொன்னார். “வாருங்கள். கை கால் கழுவி விட்டு இறைவனைத் தொழுங்கள். உணவு தயாராக இருக்கிறது

“இறைவனைத் தொழுவதா? நானா?என்றான் அவன்.

அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?

“நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனைத் தொழுததும் இல்லை

பெரியவர் வருத்தத்தோடு சொன்னார். நான் இங்கு வசிப்பதையும், இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதையும் இறை பணியாகவே செய்து வருகிறேன்.  அதனால் இறைவனைத் தொழாதவருக்கு நான் உணவு தருவதில்லை.

அவன் உறுதியாகச் சொன்னான். “இறைவனைத் தொழுதால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை”.

அவர் எவ்வளவோ சொல்லியும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரும் அவன் தொழாமல் உணவு பரிமாற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவன் பசியோடே அங்கிருந்து வெளியேறினான். பசியோடவே இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அதே நேரம் பசியோடும், களைப்போடும் வந்த ஒருவன் அந்த கூடாரத்தில் இருந்து அப்படியே வெளியேறுவதும் அதுவே முதல் முறை என்பதால் அவருக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார்.

இரவில் அவரது கனவில் இறைவன் குரல் ஒலித்தது. “என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே

பெரியவருக்கு சுருக்கென்றது. விழித்துக் கொண்டு நீண்ட நேரம் உறங்காமல் விழித்திருந்தார். கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வரும் போது இறைவனை வணங்கிப் பின்பற்றும் அவர் மட்டும் ஏன் வேறு மாதிரியாக இருக்க வேண்டும்?

மறு நாளில் இருந்து அவர் இறைவனைத் தொழுதால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். இறைவனைத் தொழுவது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று எண்ணியவராக அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தார்.

இந்தக் கதையில் கிடைத்த பாடம் மிகவும் யோசிக்கத் தக்கது.

வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகக் கவனித்தால் அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருப்பது புரியும். அவன் அருளில்லை என்றால் அவனுக்குப் பிடிக்காதவர்கள் யாரும் இங்கிருக்க முடியாதல்லவா? ஆகவே அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட இன்னும் இங்கிருக்கிறார்கள் என்றால் எல்லாம் வல்ல இறைவன் அருள் அவர்களுக்கும் இருக்கின்றது என்றே அல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் இறைவனுக்கு எதிரானவர்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு அவர்களை எதிர்த்து விமரிசிக்கவும், போராடவும், அழிக்கவும் கிளம்புவது நம் அறிவீனமே அல்லாமல் இறைவழி அல்ல என்பதை உணர்வோமா?

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி: ஆன்மிகம்: 04-06-2013


14 comments:

 1. //“என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே”//


  அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட இன்னும் இங்கிருக்கிறார்கள் என்றால் எல்லாம் வல்ல இறைவன் அருள் அவர்களுக்கும் இருக்கின்றது என்றே அல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் இறைவனுக்கு எதிரானவர்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு அவர்களை எதிர்த்து விமரிசிக்கவும், போராடவும், அழிக்கவும் கிளம்புவது நம் அறிவீனமே அல்லாமல் இறைவழி அல்ல என்பதை உணர்வோமா?//

  உணர்வோம்..

  நல்லதொரு நியாயமான கருத்து.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. இறைவன் திருடனையும் படைத்துள்ளான்.கொலைகாரனையும் படைத்துள்ளான்.இறைவன் அவர்களைப் படைத்து இருக்கும் போது நாம் ஏன் அவனுக்கு தண்டனை அளிக்கவேண்டும்.இறைவழி என்பது நாத்தீகர்களை ஒழிப்பதல்ல.ஒழுக்கத்தை வளர்ப்பது. சுவர்க்கம் -நரகம் என்ற அச்சத்தால் நேர்மையாக வாழ வழிவகுப்பது.நாத்திகப் பகுத்தறிவு வளர்ந்த நாட்டில் திரைப்பட நடிகர்கள் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம். இதை எந்த தி.க, தலைவர்கள் கண்டித்து அறிக்கை விட்டுள்ளனரா?அனால் குடிமியை வெட்டி உள்ளனர்.சாமி சிலையை செருப்பால் அடித்துள்ளனர்.
  இப்பொழுது கோயிலில் கூடம். ஆஸ்தீகர்கள் அடாவடியில் இறங்கியதில்லை. அவ்வாறு செய்பவர்கள் ஆஸ்தீகர்கள் இல்லை.

  ReplyDelete
 3. யோசிக்க வைக்கும் உணர வேண்டிய கதை... பாடம்...

  நன்றி...

  ReplyDelete
 4. வணங்கா விட்டாலும் இறைவன்!

  அறிவார்ந்த சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 5. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை...
  கடவுள் இருந்தால் பரவாயில்லை. கடவுள் நம்பிக்கை தேவை.
  அந்த நம்பிக்கை மனித கட்டுப்படுத்தும்..

  ReplyDelete
 6. நல்ல கதை....
  அருமையான பக்ரிவு...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. Super...... i like it this story

  ReplyDelete
 8. அருமையான கதை

  ReplyDelete
 9. இறைவனின் கருனையை பூரண நிலவின் ஒளிக்கு ஒப்பிட்டு ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் ஒரு பாடல் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது.

  நிலவின் ஒளி, காடு, மேடு, புல் , புதர், பூண்டு, நீர் நிலை தடாகங்கள் மட்டுமன்றி, பாலையிலும் பரிணமிக்கிறது.

  அதே போல் அம்பாளின் திருவருளும் எப்பொழுதும் யாவர் மேலும் பொழிகிறது என்பார் ஆதி சங்கரர்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 10. உங்கள் மேன்மையான பணி தொடர என் வாழ்த்துக்கள்.

  கோவர்தன்
  http://www.camarilla.ws

  ReplyDelete
 11. வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகக் கவனித்தால் அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருப்பது புரியும். அவன் அருளில்லை என்றால் அவனுக்குப் பிடிக்காதவர்கள் யாரும் இங்கிருக்க முடியாதல்லவா? ஆகவே அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட இன்னும் இங்கிருக்கிறார்கள் என்றால் எல்லாம் வல்ல இறைவன் அருள் அவர்களுக்கும் இருக்கின்றது என்றே அல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் இறைவனுக்கு எதிரானவர்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு அவர்களை எதிர்த்து விமரிசிக்கவும், போராடவும், அழிக்கவும் கிளம்புவது நம் அறிவீனமே அல்லாமல் இறைவழி அல்ல என்பதை உணர்வோமா?//

  ஆம், நீங்கள் சொல்வது உண்மை.
  நல்ல கதை.

  ReplyDelete
 12. GOD is matter of alignment to the Laws of Life. The Laws don't care whether you are praising it or not, Laws just work for who are aligned to it and work against who are not aligned to it.

  A great story!

  ReplyDelete
 13. Excellent!. People should realize the truth what's happening in the world from the kindness of God. real truth is love/kind every one regardless of their nature

  ReplyDelete
 14. great lines....every one should be read this.

  ReplyDelete