சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 8, 2013

பரம(ன்) ரகசியம் – 56




ரமேஸ்வரன் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். பின் கண்களைத் திறந்து மகளிடம் கேட்டார். “உங்க அண்ணியோட போன் நம்பர் உன் கிட்ட இருக்காம்மா?

“இருக்குப்பா”.

“நம்பர் அடிச்சுக் குடு. நான் அவ கிட்ட பேசணும்

மீனாட்சிக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அவர் சொன்னபடியே செய்து போனை அவரிடம் தந்தாள். “ரிங் ஆகுதுப்பா

மகளிடம் செல் போனை வாங்கியவர் மருமகள் குரலைக் கேட்டவுடன் பேசினார். “நான் உன் மாமா பேசறேன்ம்மா

கனகதுர்காவிற்கு இது கனவா என்ற சந்தேகம் வந்தது. இதற்கு முன் ஒரே ஒரு தடவை தான் அவருடன் அவள் பேசி இருக்கிறாள். அன்று அவர் தன் மகனையே மகன் என்று ஏற்றுக் கொள்ளாமல் பேசியவர். இன்று அவராகவே அவளை மருமகள் என்று ஏற்றுக் கொண்டு ‘உன் மாமாஎன்று சொல்கிறார்....

“சொல்லுங்க மாமா. உங்க உடம்பு இப்ப எப்படி இருக்கு?தன் திகைப்பில் இருந்து மீண்டு அவள் பேசினாள்.

நல்லா இருக்கேன்ம்மா... முழுசா குணமாயிட்டேன்ம்மா

கேட்கவே சந்தோஷமாய் இருக்கு மாமா...! ஈஸ்வரும் போன் பண்ணி சொன்னான்.... மாமா, ஈஸ்வர் உங்க மனசைப் புண்படுத்தி இருந்தா தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க மாமா....

பரமேஸ்வரன் மருமகளின் பெருந்தன்மையை ஜீரணிக்க முடியாமல் தடுமாறினார்.

கனக துர்கா தொடர்ந்து சொன்னாள். “அவன் என்ன தான் கோபப்பட்டு பேசினாலும் மனசுல ஒன்னும் வச்சுக்க மாட்டான் மாமா. அவன் மனசுலயும் அவன் அப்பா மனசு மாதிரியே முழுசா அன்பு மாத்திரம் தான் இருக்கும் மாமா...சொல்லும் போது அவள் குரல் கரகரத்தது.

பரமேஸ்வரன் குரலடைக்கச் சொன்னார். “அவன் அப்பா மனசு எனக்கு நல்லாவே தெரியும்மா... அவன் அம்மா மனசும் இப்ப தெரிஞ்சுகிட்டேன். நீங்க ரெண்டு பேரும் பெத்து வளர்த்த குழந்தை அந்த மாதிரி இல்லாமல் வேறெப்படி இருக்கும் துர்கா...

அவர் வார்த்தைகளுக்கும், அவர் முதல் முறையாக அவள் பெயரை அழைத்ததற்கும் நெகிழ்ந்து போனாள் கனகதுர்கா. கணவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்ற எண்ணம் அவளுக்கு அழுகையை வரவழைத்தது. துக்கத்தை அவள் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“துர்கா உன்னால என்னை மன்னிக்க முடியுமாம்மா?பரமேஸ்வரன் மருமகளிடம் ஆத்மார்த்தமாகக் கேட்டார். ஆனந்தவல்லியும், மீனாட்சியும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். பரமேஸ்வரன் இத்தனை வருட வாழ்க்கையில் யாரிடமும் மன்னிப்பு கேட்டவர் அல்ல. மன்னிப்பு கேட்காததால் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சரி, எத்தனை நஷ்டங்கள் வந்தாலும் சரி அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பாரே ஒழிய மன்னிப்பு கேட்க முடியாதவர் அவர். மீனாட்சி கண்கலங்க தந்தையின் தோளைப் பிடித்துக் கொண்டாள்.

கனகதுர்காவும் அவர் மன்னிப்பு கேட்டதில் திகைத்துப் போனாள். “என்ன மாமா நீங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு... நான் தான் உங்க மகனை உங்க கிட்ட இருந்து பிரிச்சதுக்கு மன்னிப்பு கேட்கணும்

இல்லைம்மா. நீ எந்தத் தப்பும் செய்யலை. எல்லாத் தப்பும் என்னோடது தான். எனக்கு எங்கம்மா கிட்ட இருந்து வந்த வரட்டுப்பிடிவாதம், போலி கௌரவம், கோபம் எல்லாம் தான் நான் இந்த மாதிரி நடக்க காரணம்...

ஆனந்தவல்லி மகனை முறைத்தாள்.

பரமேஸ்வரன் மருமகளிடம் மானசீகமாகச் சொன்னார். “நான் எத்தனை தேடி இருந்தாலும் என் மகனுக்கு உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணைக் கண்டு பிடிச்சுக் கொடுத்திருக்க முடியும்னு தோணலம்மா.... ஈஸ்வர் மாதிரி ஒரு பேரனை எனக்குப் பெத்துக் கொடுத்திருக்கிற உனக்கு நான் கைமாறா நான் என்ன செய்ய முடியும்னு எனக்குத் தெரியலம்மா....

“மாமா....கனகதுர்கா அழுது விட்டாள்.

பரமேஸ்வரனும் கண் கலங்கினார். நீ எப்பம்மா நம்ம வீட்டுக்கு வர்றே?

“கிறிஸ்துமஸ் லீவுல வர்றேன் மாமா

“சரிம்மா. சந்தோஷம். நான் இன்னொரு நாள் பேசறேன்...போனை மகளிடம் தந்து விட்டுக் களைப்புடன் பரமேஸ்வரன் கண்களை மூடிக் கொண்டார். அவர் மனது லேசாகி இருந்தது.

“ஏண்டா. மருமகள் கிட்ட மன்னிப்பு கேட்கறதுன்னா நேரடியா கேட்க வேண்டியது தானே. என்னை ஏண்டா இதில் இழுக்கிறே?ஆனந்தவல்லி மகனிடம் கேட்டாள்.

“அந்தக் கேரக்டர் எனக்கு உன் கிட்ட இருந்து தான் வந்திருக்கு. நீயும் அண்ணனை ஐம்பது வருஷத்துக்கு மேல பார்க்காம இருந்தவ தானே. அண்ணன் தானே கடைசில உன்னைக் கூப்பிட்டான்.

“ஓ... பெரிய அண்ணன். அவன் அந்த தோட்ட வீட்டுக்குப் போன பிறகு நாலஞ்சு தடவை போய் திரும்பவும் இங்கே வரச் சொல்லி கெஞ்சினவ நான். கடைசி தடவை ஒரு நாள் முழுசும் அவன் முன்னாடி உண்ணா விரதம் கூட இருந்தவடா நான். அவனுக்கு நான் சாக மாட்டேன்னு தெரிஞ்சோ என்னவோ என்னைக் கண்டுக்கவே இல்லை. அந்தக் கோபத்துல வந்தவ தான் திரும்ப போகலை. நீ அப்படியாடா. உன் மகன் போனவுடனே போன்லயாவது ஒரு வார்த்தை பேசி இருப்பியாடா. நீ பேசி இருந்தா அடுத்த ஃபிளைட்டுல இங்க வந்து உன் காலடியில விழுந்திருப்பானேடா உன் மகன். உன் மகன் நடந்துகிட்டதும், என் மகன் நடந்துகிட்டதும் ஒன்னாடா....

பரமேஸ்வரன் தாயின் ஆக்ரோஷமான பேச்சுத் திறமையை நினைத்து வியந்தார். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் தாயிடம் மெல்ல கேட்டார். “இத்தனை வயசானாலும் உனக்கேம்மா கோபமே குறைய மாட்டேங்குது....

ஆனந்தவல்லி வயது பார்க்காமல் மகன் காதைத் திருகினாள்.

பரமேஸ்வரன் சிரித்துக் கொண்டே சொன்னார். “கனவுல அண்ணா கூட உன் கோபம் பத்தி நான் சொல்றப்ப சிரிச்சான்ம்மா

ஆனந்தவல்லி ஆர்வத்துடன் மகனிடம் கேட்டாள். “என்னைப் பத்தி பேசினீங்களா? என்ன பேசினீங்க? அவன் எதுக்கு சிரிச்சான். விவரமா சொல்லுடா

நாகனூர் என்ற கிராமத்திற்கு இரண்டு மணி நேரத்தில் ஈஸ்வர் போய் சேர்ந்து விட்டான். பிள்ளையார் கோயில் எங்கே என்று வழியில் ஒரு கிழவரிடம் கேட்க அவர் ஆச்சரியத்துடன் பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னார். “நம்ம ஊர் பிள்ளையார் கோயிலுக்கு வெளியூர்ல இருந்து கார்ல எல்லாம் வர்றாங்க பார்த்தியா ராமசாமி”.

ஈஸ்வர் சொன்னான். “நான் அங்கே பூஜை செய்யற கணபதியைப் பார்க்க வந்திருக்கேன்

அவன் சொன்னது அந்தக் கிழவரை இன்னும் அதிகமாய் ஆச்சரியப்படுத்தியது போல இருந்தது. “நேரா போனீங்கன்னா ஒரு பெரிய ஆலமரம் வரும். அதுக்கு எதிர்ல இருக்கற தெருவுல வலது பக்கம் முதல் வீடு...

கணபதியைத் தேடி ஒரு பெரிய காரில் வந்திறங்கிய ஈஸ்வரை கணபதியின் தாய் காமாட்சி ஆச்சரியத்துடன் பார்த்தாள். கணபதி இல்லைங்களே

ஓ.... அந்த இன்னொரு இடத்துப் பூஜை முடிஞ்சு இன்னும் கணபதி ஊர் திரும்பலையா?என்று ஈஸ்வர் கேட்டான்.

“இல்லைங்க. நீங்க யாருன்னு தெரியலையே

“நான்... நான்.... கணபதியோட அண்ணன்னு சொல்லிக்கலாம். சில நாளுக்கு முன்னால் சந்திச்சேன்....என்று ஈஸ்வர் புன்னகையுடன் சொல்ல காமாட்சிக்கு மகன் போனில் பேசுகையில் தனக்கும், பிள்ளையாருக்கும் பட்டாடை வாங்கித் தந்த ஒரு அண்ணனைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது.

ஈஸ்வரைப் பார்க்க பெரிய இடத்துப் பிள்ளை என்பது காமாட்சிக்குத் தெளிவாகத் தெரிந்தது. இந்தக் கிராமத்துக்கு இது போன்ற பெரிய படகுக் கார் வருவது மிக அபூர்வம். கணபதி அண்ணன் என்று அழைத்த நபரை, கணபதிக்குப் பட்டுத்துணி வாங்கித் தந்த நபரை வாசலோடு திருப்பி அனுப்புவது சரியென்று அவளுக்குத் தோன்றவில்லை. உள்ளே அழைத்தாலோ அவனை உட்கார வைக்க ஒரு நல்ல நாற்காலி கூட இல்லை. வறுமை இது போன்ற நேரங்களில் தான் பெரும் தர்மசங்கடத்தைத் தந்தது.

உள்ளே வாங்க சார்என்று காமாட்சி மரியாதைக்கு அழைத்தாள்.

ஈஸ்வர் ஒரு கணம் யோசித்து விட்டு உள்ளே நுழைய காமாட்சி அவசர அவசரமாக ஒரு மர ஸ்டூலைத் துடைத்து அவனை உட்காரச் சொன்னாள். “... உட்கார வேற நல்ல சேர் இல்லை....என்று வருத்தத்துடன் அவள் சொன்னாள்.

இதுக்கென்ன குறைச்சல். இது நல்லா தானே இருக்குஎன்று சொல்லி அவன் எந்த பந்தாவும் இல்லாமல் அமர காமாட்சி அவனை நன்றி கலந்த மரியாதையுடன் பார்த்தாள். நல்ல பையன்!

ஈஸ்வர் கேட்டான். “கணபதி எப்ப வருவான்ம்மா?

காமாட்சி கவலையுடன் சொன்னாள். “அது தெரியலையே சார். அந்த குருஜி எப்ப அனுப்பறாரோ அப்ப தான் வருவான்

ஈஸ்வர் குருஜி பெயர் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். வேறு ஏதாவது குருஜி இருக்குமோ? “எந்த குருஜி

“டிவி, பத்திரிக்கைகள்ல எல்லாம் அடிக்கடி வருவாரே அந்த குருஜி தான் சார்

கணபதி எந்தக் கோயில்ல பூஜை செய்யப் போயிருக்கான்மா?

தெரியல சார். அவன் சொல்லலை....

ஈஸ்வர் இயல்பாகக் கேட்பது போல காமாட்சியைக் கேட்டான். “குருஜி இந்த மாதிரி அடிக்கடி அவனை ஏதாவது பூஜை செய்யக் கூப்பிடுவாராம்மா?

“இல்லைங்க. இது தான் முதல் தடவை. இவனுக்கு மந்திரங்கள் எல்லாம் அதிகமாய் தெரியாது. நான் என் அண்ணன் கிட்ட அனுப்பி எல்லாம் படிச்சுட்டு வரச் சொன்னேன். இவன் தலையிலே எதுவும் சீக்கிரம் ஏறலை. மந்திரம் சொல்றதை விட சாமிக்கு அலங்காரம் செய்யறதுலயும், பேசறதுலயும் ஆர்வம் அதிகம். ஏதோ இந்தக் கிராமத்துல சின்ன பிள்ளையார் கோயில்ல இவனால பூஜை செய்ய முடியுதே ஒழிய நல்லா வைதீகம் தெரிஞ்சவங்க இவன் பூஜையை ஏத்துக்கறது கஷ்டம் தான். அதனால எனக்கே குருஜி மாதிரி பெரிய ஆள் கூப்பிட்டப்ப ஆச்சரியம் தான்....

“கணபதி எப்ப போனான்ம்மா?

காமாட்சி கணபதி போன தேதியைச் சொன்னாள். பசுபதி கொலையாகி, சிவலிங்கம் காணாமல் போன மூன்றாம் நாள். கணபதியிடம் அன்று பேசிக் கொண்டிருந்த போது பிள்ளையாரின் அப்பாவுக்குப் பூஜை செய்யப் போனதாய் சொன்னான். அவன் சொன்னது அதே சிவலிங்கமாக இருக்குமோ? அந்த விசேஷ மானஸ லிங்கத்தைத் தொட்டுப் பூஜை செய்ய மந்திரங்களை விட மன சுத்தம் முக்கியம். கணபதியை விடப் பொருத்தமான ஆளை அந்த குருஜி தேடிக் கண்டுபிடித்திருக்க முடியாது.

“குருஜிக்கும் கணபதிக்கும் எப்படிம்மா பழக்கம்?

“இவன் அவர் பிரசங்கம் அக்கம் பக்கத்துல எங்கே இருந்தாலும் போவான். ரேடியோ, டிவில அவர் பேசினாலும் கேட்பான். அவர் பேசறதுல இவனுக்கு எத்தனை புரியுதுன்னு தெரியல. ஆனாலும் கேட்கறதுல என்னவோ இவனுக்கு ஆர்வம். பிரசங்கம் கேட்கறப்ப சில சமயம் இவன் கண்ல தண்ணி வரும். ஏண்டா அழறேன்னு கேட்டா, ‘தெரியிலம்மா. கேட்கக் கேட்க கண்ல தானா தண்ணீர் வருதுன்னு சொல்வான்.... அப்படி ஒரு தடவை இவன் அவர் பிரசங்கம் கேட்கப் போயிருந்தப்ப அவரே இவனைக் கூப்பிட்டு பேசி இருக்கார். அப்படி தான் பழக்கம்

அடிக்கடி கணபதி அவரை சந்திச்சு பேசுவானாம்மா

“இவன் அவரைப் பார்க்கப் பல தடவை போயிருக்கான் சார். ஆனால் ஒரு சில தடவை தான் அவரைப் பார்த்துப் பேச முடிஞ்சிருக்கு. கடைசி தடவை தான் அவரே இவனைக் கூப்பிட்டனுப்பிச்சார்...

ஈஸ்வர் பொறுமையாகவும் அமைதியாகவும் கேட்கும் விதம் காமாட்சியை மிகவும் கவர்ந்தது. மனதில் இருக்கும் கவலையையும் அவனிடம் சொல்லத் தோன்றியது. சொன்னாள். “ஒன்னு ரெண்டு நாளுக்கு அதிகமா நான் இவனை விட்டுப் பிரிஞ்சதே இல்லை சார். அதனால இந்த தடவை இவனைப் பிரிஞ்சு இருக்கறப்ப மனசுல தேவையில்லாமல் நிறைய பயம் இருக்கு. இவன் சூதுவாது தெரியாதவன். யார் என்ன சொன்னாலும் நம்பறவன். ஏமாத்தினாலும் தெரியாது. அதனால குருஜி பேரை சொல்லி எவனாவது எங்கேயாவது கூட்டிகிட்டுப் போய் கிட்னியை ஏதாவது எடுத்துடுவாங்களோன்னு கூட பயம் வந்துடுச்சு. பேப்பர்ல தினமும் எதெதோ படிக்கிறோமே சார். மனசுல இந்த மாதிரி பயம் தான் அதிகம் வருது. சொன்னா இவன் சிரிக்கிறான். பிள்ளையார் இருக்கிறார், பார்த்துக்குவார், பயப்படாதேம்மான்னு சொல்றான். பிள்ளையாருக்கு பக்தன் இவன் மட்டுமா இருக்கான். எத்தனை பேர் இருப்பாங்க? அவர் எத்தனையை பார்ப்பார்னும் தோணுது...

காமாட்சி பேச்சைக் கேட்டு புன்னகைத்த ஈஸ்வர் சொன்னான். “எத்தனை பக்தர்கள் இருந்தாலும் கணபதி மாதிரி வேறொரு பக்தன் கண்டிப்பா பிள்ளையாருக்கு இருக்க முடியாதும்மா

காமாட்சியின் முகம் மலர்ந்தது. “நீங்க சொல்றதும் சரி தான். பெத்தவள்ங்கிறதால சொல்லல. நான் வேற ரெண்டையும் கூட பெத்திருக்கேன். ஆனா அதுகளே இவன் மாதிரி கிடையாது. இவனை மாதிரி கள்ளங்கபடமில்லாத மனசை எங்கயும் பார்க்க முடியாது.... உங்களைப் பத்திக் கூட அவன் சொன்னான். நீங்க கூட அவனுக்குப் பட்டுத்துணி வாங்கித் தந்ததா சொன்னான். அவனோட பிள்ளையாருக்கும் கூட வாங்கித் தந்தீங்களாம். சொல்றப்ப சந்தோஷம் தாங்கலை அவனுக்கு

ஈஸ்வர் கேட்டான். “கணபதி கூட எப்ப பேசினீங்கம்மா?

ரெண்டு நாள் முன்னாடிஎன்றவள் சுப்பிரமணியன் என்கிற வயதானவர் தங்கள் வீடு தேடி வந்து ஒரு காகித உறை தந்தது முதல் கணபதியிடம் பேசினது, ஒரு ஆள் வந்து அந்த உறை வாங்கிக் கொண்டது வரை விரிவாகச் சொன்னாள்.

அந்த உறையை கணபதி படித்திருக்க வாய்ப்பே இல்லை என்று ஈஸ்வருக்கு உள்ளுணர்வு சொன்னது. அந்த சுப்பிரமணியன் யார்? அந்த உறையில் கணபதி மட்டுமே படிக்க எழுதப்பட்டிருந்த விஷயம் என்ன? என்ற கேள்விகள் அவன் மனதில் எழுந்தன.

திடீரென்று இன்னொரு நினைவும் வந்தது. ஜவுளிக்கடையில் அவனையும், கணபதியையும் ஒரே நேரத்தில் அந்த சித்தர் தொட்டதும், அவனைப் போலவே கணபதி அந்த மின் அதிர்வுகளை உணர்ந்ததும் நினைவுக்கு வர அவன் மனம் பரபரப்பாகியது. கணபதியும் அந்த சிவலிங்கம் சம்பந்தப்பட்டவன் என்பதாலேயே இருவரையும் ஒரே சமயத்தில் அந்த சித்தர் தொட்டாரோ? அதன் நோக்கம் என்ன? ஒன்றும் புரியவில்லை.

குருஜி கட்டுப்பாட்டில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதே கணபதிக்கு அபாயம் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது. பெற்ற தாய் மனதில் ஏற்பட்டிருந்த பயமும் கவலையும் காரணம் இல்லாததல்ல.

காமாட்சிக்கு தைரியமளிக்கும் வார்த்தைகளைச் சொல்லி விட்டு, அவள் தந்த காபியைக் குடித்து விட்டு, கணபதியின் வரசித்தி வினாயகரையும் தரிசித்து விட்டு நாகனூரை விட்டு ஈஸ்வர் கிளம்பினான்.

வரும் போது அவன் மனதில் கணபதியின் கள்ளங்கபடமில்லாத சிரிப்பே அடிக்கடி நினைவுக்கு வந்தது. குருஜி பூஜை செய்வதற்கு மட்டும் அவனை உபயோகப்படுத்திக் கொள்வாரா இல்லை வேறெதாவது ஆபத்தான வேலைக்கும் அவனைப் பயன்படுத்துவாரா? என்று தன்னையே கேட்டுக் கொண்டான். அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை.

(தொடரும்)

-          என்.கணேசன்






17 comments:

  1. Great going :) Rocking as usual :)

    ReplyDelete
  2. குருஜி பூஜை செய்வதற்கு மட்டும் அவனை உபயோகப்படுத்திக் கொள்வாரா இல்லை வேறெதாவது ஆபத்தான வேலைக்கும் அவனைப் பயன்படுத்துவாரா?’

    நியாயமான சந்தேகம் தான் ..

    ReplyDelete
  3. உங்கள் தொடர் மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. Now all the relations are coming together. Hope the differences between heroin and hero will soon disappear and Eswar will be blessed with all happiness.

    ReplyDelete
  5. very interesting episode with nice turning points and clever linking of all the previous scenes!

    Thumbs up!

    ReplyDelete
  6. வரதராஜன்August 8, 2013 at 7:01 PM

    பரமேஸ்வரன் மருமகளிடம் பேசிய பேச்சு என்னை அழ வைத்து விட்டது. ஈஸ்வருக்கு குருஜி மேல் இருந்த சந்தேகம் உண்மை ஆகி விட்டது. ஆனந்தவல்லி கேரக்டர் மிக யதார்த்தம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் தனி முத்திரை தெரிகிறது. நான் அடுத்த வியாழனுக்குள் நான்கு முறையாவது படித்து விடுவேன். இனி என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பேன். அந்த அளவு இந்த பரமன் ரகசியம் என்னை வசியம் செய்து விட்டது கணேசன் அவர்களே. பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. I also cried when I read the first part. So nice Ganesan Sir.

    ReplyDelete
  8. In last chapter Mr.Prakash has wished in comments section that this book should come as a movie and in book form also. I also wish the same. It is not only a novel. Ganesan sir includes many subtle truths in the story. It is powerful. So the messages will reach more people if it is printing. In this chapter Parameswaran did a great thing. His talk with daughter in law is really touching. Good going. -Sundar

    ReplyDelete
    Replies
    1. சில வாரங்களாக இந்த அருமையான நாவலை சினிமா எடுப்பது பற்றியும் புத்தகமாக பப்ளிஷ் செய்வது பற்றியும் நண்பர்கள் கருத்து தெரிவித்ததை படித்தேன். சினிமாவாக வெளி வந்தால் இந்த கதாசிரியரின் நுணுக்கமான சங்கதிகள் அதே க்வாலிட்டியில் வெளி வருமா என்பது எனக்கு டவுட்டாகவே இருக்கிறது. சில நல்ல நாவல்கள் மோசமாக படம் எடுத்ததை பார்த்தவள் நான். அதனால் இது புத்தகமாக இப்படியே வந்தால் தான் பலர் படிக்கவும் உதவும், இதன் தரமும் அப்படியே இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

      Delete
    2. Sir, if you translate this novel in English this will become a great thriller and reach world audience showing the powers of siddhars and sivalingam

      Delete
  9. குடும்பம் .., பக்தி , சிலிர்ப்பு , பாசம் , கண்ணீர் ., சுவாரஸ்யம் .., எதிர்பார்ப்பு .., ஆச்சரியம் , அதிசயம் .., இவை அனைத்திலும் சரி சமமான கலவையுடன் .., ஒரு ஜீவ நாவல் என்றால் நம் பர(ம)ன் ரகசியம் தான் அதை நம் எழுத்தாளர் என். கணேசன் அவர்களால் தான் உருவகித்து உயிரிப்புட்ட முடியும் ...,

    அனைத்து விதத்திலும் பரம திருப்த்தியுடன் பர(ம)ன் ரகசியம் ...,

    ReplyDelete
  10. அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. மூன்று லட்சம் வார்த்தைகள் கொண்ட இனிய தமிழில், இந்த நாவலை பாராட்ட நல்லதொரு வார்த்தைகளையும், சொட்டோரறையும் தேடிக்கொண்டு இருக்கிறேன். ... .

    மிக அருமையான தொடர் மற்றும் எதிர்பாராத மேலும் எதிர்பார்க்க வைக்கும் திருப்புமுனைகள். ... .

    வாழ்த்துக்கள் ஐயா. ... .
    -சிவபாலன்

    ReplyDelete
  13. Interesting ... keep rocking !!!

    Waiting for next update !!

    ReplyDelete
  14. ithuvarai naan padiththa naavalkalil ithuve thalaiyanathu. this is the best novel which read until nuv.

    ReplyDelete