கௌதம புத்தர்
மாபெரும் விஷயங்களைச் சொல்லும் விதம் மிகவும் எளிமையாகவும் அறிவுபூர்வமாகவும்
இருக்கும். ஒரு சமயம் சீடர்களிடம் உரையாற்ற வரும் போது கையில் ஒரு துணியுடன்
வந்தார். அவர்கள் முன் பேச அமர்ந்தவர் பேச்சைத் துவங்காமல் கையில் கொண்டு வந்திருந்த
அந்த்த் துணியில் முடிச்சுகளைப் போட ஆரம்பித்தார். மற்ற சீடர்கள் அவர் பேசக்
காத்திருக்கையில் சாரிபுத்தன் என்கிற சீடன் மட்டும் அவர் செய்கையும் அவர் உரையின்
ஒரு அங்கமே என்பதை உணர்ந்திருந்தான். அவன் உன்னிப்பாக அவர் செயலைக் கவனித்துக்
கொண்டிருந்தான்.
விதவிதமாக சில
முடிச்சுகளைப் போட்டு விட்டு தலை நிமிர்ந்த புத்தர் கேட்டார். “இந்த முடிச்சுகளை
விரைவில் அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்?”
மற்றவர்கள்
யோசித்துக் கொண்டிருக்க உடனடியாக சாரிபுத்தன் சொன்னான். “குருவே! முடிச்சுகள்
எப்படி போடப்பட்டுள்ளன என்பதை அறியாத வரை அவற்றை விரைவில் அவிழ்க்க வழியில்லை.
முடிச்சு போடப்பட்ட முறையை அறிந்திருந்தால் மட்டுமே அதை விரைவில் அவிழ்க்க
முடியும்” .
புத்தர் சொன்னார்.
“சரியாகச் சொன்னாய் சாரிபுத்தா. நினைவோடு போடப்படும் முடிச்சுகளை அவிழ்ப்பது
எளிது. நினைவின்றி போடும் முடிச்சுகள் சிக்கலானவை. அவை சில சமயங்களில் அவிழ்க்க
முடியாமலும் போகலாம். நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். விழிப்புணர்வு இல்லாமல்
நம் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கல்களில் இருந்து தான் மீள வழி தெரியாமல்
திண்டாடுகிறோம்”
துணியில் போட்ட
முடிச்சுகள் போட்ட விதத்திலேயே பிரிக்க சுலபமானவை. கவனத்துடன் போட்டிருந்தால்
பொறுமையுடன் பிரிக்கலாம். இல்லாவிட்டால் பிரிக்க நாம் செய்யும் உத்திகளும் கூடுதல்
முடிச்சுகளாகி விடும். கடைசியில் துணியையே கிழிக்காமல் முடிச்சுகளை அவிழ்க்க
முடியாமல் போகும் நிலை கூட ஏற்படலாம்.
வாழ்க்கையிலும்
அப்படித்தான். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்கிற
விழிப்புணர்வோடு செய்தால் தவறுகள் அதிகம் நிகழ வாய்ப்பே இல்லை. அப்படித் தவறுகள்
நிகழ்ந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை விரைவிலேயே சரிப்படுத்திக் கொள்ள முடிபவையாகவே
இருக்கும்.
ஆனால்
விழிப்புணர்வில்லாமால் நம் வாழ்வில் செய்து கொள்ளும் சிக்கல்கள் ஆபத்தானவை. அந்தந்த நேர
உந்துதல்களில் நாமாகவே ஏற்படுத்திக் கொள்பவை. உணர்ச்சிகளின் பிரவாகத்தில் தன்னிலை
இழந்து என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் செய்து கொள்பவை. இந்த சிக்கல்களில்
இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல சமயங்களில் சிக்கல்களை அதிகப்படுத்தி மேலும்
குழப்பத்தை ஏற்படுத்தி விடும். பல சமயங்களில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தாமல்
சிக்கல்களில் இருந்து விடுபட முடியாது.
துணியின் முடிச்சுகள்
அவிழ்க்க முடிந்த பின் துணி பழைய நிலைமைக்கே வரலாம். வாழ்க்கையின் சிக்கல்கள்
அப்படி அல்ல. பல சமயங்களில் சிக்கல்கள் தீரும் போது வாழ்க்கை முன்பு போல திரும்பி
மாற வாய்ப்பு இல்லை. எல்லாமே தலைகீழாக மாறிப் போகும் அபாயம் கூட உண்டு. மேலும்
சிக்கல்கள் அனைத்தும் நாமே தான் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான
சிக்கல்களில் நம் பங்கு கண்டிப்பாக ஓரளவாவது இருக்கக் கூடும் என்றாலும், சில
சமயங்களில் மற்றவர்களாலும் சிக்கல்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட்டு விடலாம்.
நம் செயல்களால்
ஆனாலும் சரி, மற்றவர்கள் செயல்களால் ஆனாலும் சரி, விழிப்புணர்வோடு வாழ்க்கையை
நடத்துபவன் வரும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதனால்
கவனமாகவும், வேகமாகவும், ஆரம்ப நிலையிலேயே, அவ்வப்போதே அவற்றைத் தவிர்க்கவோ, சரி
செய்து கொள்ளவோ முடியும். விழிப்புணர்வு இல்லாத போதோ அவை பூதாகரமாகும் வரை
கவனிக்கப்படுவதில்லை. பின் அதன் விளைவுகளில் சிக்கித் திண்டாட வேண்டி வரும். சில
சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போகலாம், தீர்க்க முடிந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை வாழ்க்கை
நாம் ரசிக்க முடியாததாக மாறியும் போகலாம்.
எனவே விழிப்புணர்வோடு
இருங்கள். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். என்ன நடக்கிறது என்பதிலும்
கவனமாக இருங்கள். கண்டிப்பாக நீங்கள் 90 சதவீத சிக்கல்களை விழுப்புணர்வோடு
இருப்பதால் மட்டும் தவிர்த்து விட முடியும்.
-
என்.கணேசன்
Excellent Ganeshan, thanks.
ReplyDeleteWow............Nice Words......Good Message.
ReplyDeleteதங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மனதை அறிவை செம்மைப்படுத்துவதாய்...!
ReplyDeleteநல்ல கருத்து . நன்றி
ReplyDeletegood info... we need to apply .
ReplyDeleteஉங்கள் பதிவு மனதை அப்படியே செம்மைபடுத்துகிறது.....பகிர்வுக்கு மிக்க நன்றி....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமையான கட்டுரை.........நல்ல செய்திகள்
ReplyDeleteபல நல்ல கருத்துக்கள்... நன்றி...
ReplyDeleteஅற்புதமான அறிவுரை. அருமையான பதிவு. மிக்க நன்றி.
ReplyDelete
ReplyDeleteஎன் புதிய நாவல் "பரம(ன்) ரகசியம்" ஜுலை 19 முதல் ஆரம்பமாகி உள்ளது. ஒவ்வொரு வியாழனும் தொடரும்...
SIR TODAY THURSDAY !!!!
WE ARE ALL WAITING FOR "பரம(ன்) ரகசியம்".
JEIMANI
TRICHY
ஆங்கிலத்தில் படித்துள்ளேன் இக்கட்டுரையை. மிக அழகாக தமிழாக்கம் செய்துள்ளீர்.
ReplyDeleteKannan.