என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, October 4, 2012

பரம(ன்) ரகசியம்-12
குருஜி ஒரு பரம ரகசியத்தை கணபதியிடம் மட்டும் பகிர்ந்து கொள்ள முன் வந்தவர் போன்ற ஒரு அபிப்பியாயத்தை அவனிடம் ஏற்படுத்தியவராக அவனுக்கு மட்டுமே கேட்கக் கூடிய தாழ்ந்த குரலில் சொன்னார்.

“அமெரிக்காவில் ஒரு சிவன் கோயிலைக் கட்ட அங்கே இருக்கிற சில பணக்கார இந்தியர்கள் ஏற்பாடு செய்திருக்காங்க கணபதி. அதற்காக இங்கே இருந்து ஒரு சக்தி வாய்ந்த சிவலிங்கத்தை அனுப்ப என் கிட்டே சொல்லி இருந்தாங்க. கிட்டத்தட்ட நூறு சிவலிங்கத்தைப் பார்த்து அதில் ஒன்னை தேர்ந்தெடுத்தேன், கணபதி. அதை இங்கிருந்து அனுப்பறதுக்கும், அங்கே பிரதிஷ்டை செய்யறதுக்கும் நல்ல நாள் குறிக்க பல வேத பண்டிதர்கள் கிட்ட கருத்து கேட்டிருக்கோம். அவங்க அதை முடிவு செய்யற வரைக்கும் அந்த சிவலிங்கத்திற்கு விசேஷ நித்ய பூஜைகள் செய்ய ஒரு ஆளையும் ஏற்பாடும் செய்து அவனும் தினம் நல்லபடியாய் பூஜை செய்துட்டு வந்தான். திடீர்னு இன்னைக்கு காலைல அவனோட அப்பா காலமாயிட்டார். அதனால அவனுக்கு பூஜை செய்ய முடியாமல் போயிடுச்சு. நித்ய பூஜை தடைப்படக் கூடாதில்லையா, அதனால வேற ஒரு ஆளை பூஜை செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னாங்க. அப்ப தான் எனக்கு உன் ஞாபகம் வந்துச்சு...

கணபதி அப்பாவியாக அவர் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். சக்தி வாய்ந்த சிவலிங்கம், விசேஷ நித்ய பூஜைகள் என்ற வார்த்தைகள் அவனைத் தயக்கம் கொள்ள வைத்தன. தினமும் ஐநூறு ரூபாய் என்பது அவனுடைய தற்போதைய நிலையில் பெரும் தொகையே என்றாலும் அவன் நேர்மையாகச் சொன்னான். “குருஜி. எனக்கு ஓரளவு மந்திரங்கள் தெரியுமே ஒழிய பெரிய அளவில் தெரியாதுங்களே. சக்தி வாய்ந்த சிவலிங்கம்னு வேற சொல்றீங்க, நான் பூஜை செய்தால் சரியாகுங்களா?

குருஜி அமைதியாகச் சொன்னார். நான் படிக்காத புராணங்கள் இல்லை கணபதி. எல்லாத்துலயுமே மந்திரத்தை விட பக்திக்கு தான் அதிகமா முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. பெரிய பெரிய ஹோமங்கள்ல எழுந்தருளாத கடவுள்கள் பக்தியை மெச்சி எழுந்தருளினதா சொல்ற கதைகள் தான் அதிகம். இப்ப அந்த சிவலிங்கம் இருக்கிறதே ஒரு பெரிய வேதபாடசாலை இருக்கிற இடத்தில் தான். வெறும் மந்திரங்கள் மட்டுமே அந்த சிவலிங்கத்துக்குப் போதுமானதா இருந்திருந்தா நான் அங்கே இருந்தே ஒருத்தரைத் தேர்ந்தெடுத்திருப்பேன். சொல்ற மந்திரங்களோட பக்தியும் சேரலைன்னா அதெல்லாம் வெறும் சத்தங்கள் தானே கணபதி? தெரிஞ்சது கொஞ்சமா இருந்தாலும் பக்தியோட சொல்லி சிரத்தையா செய்யக்கூடிய ஆள் வேணும்கிறதால தான் நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்....

கணபதி இரண்டு கைகளையும் பயபக்தியுடன் கூப்பி தலையைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். “தெரிஞ்சதைப் பக்தியோடு செய்வேன்கிறது மட்டும் உறுதி குருஜி. அது போதும்னு நீங்க நினைச்சா நான் செய்யறேன்

குருஜி திருப்தியுடன் சொன்னார். “அது போதும் கணபதி. இன்னொரு விஷயம்...

“என்ன குருஜி?

மறுபடியும் தாழ்ந்த குரலில் ரகசியமாகவே குருஜி சொன்னார். அந்த சிலையைத் தேர்ந்தெடுத்ததும், அமெரிக்காவுக்கு அனுப்பப் போறதும் இன்னும் ரகசியமாகவே தான் வச்சிருக்கோம். அந்த சிவலிங்கம் இருக்கிற வேதபாட சாலையில் கூட நிறைய பேருக்கு அது தெரியாத மாதிரி ஒரு தனி ஒதுக்குப்புற இடத்தில் வச்சிருக்கோம். ஜனங்களுக்குத் தெரிஞ்சா அதைக் கும்பிட தனிக்கூட்டம் சேரும். இப்ப சிலைகளைக் கடத்தற ஆள்களும் அதிகமாயிட்டாங்கங்கறதால் அதை அமெரிக்காவில் கொண்டு போய் சேர்க்கிற வரைக்குமே ரகசியமாய் வச்சிருக்கச் சொல்லி உளவுத் துறை அதிகாரிகளும் எங்க கிட்டே சொல்லி இருக்காங்க. சமீபத்துல ஒரு பெரியவரைக் கொன்னுட்டு அவர் பூஜை செய்துகிட்டிருந்த சிவலிங்கத்தைக் கடத்திட்டாங்கன்னு பத்திரிக்கைல வந்ததே படிச்சியா கணபதி?

படிச்சேன் குருஜி

“ஒரு சாதாரணமான சிவலிங்கத்தையே கடத்தறாங்கன்னு சொன்னா இதை எவ்வளவு பத்திரமாய் பாதுகாக்கணும் நீயே சொல்லு

“உண்மை தான் குருஜி

அதனால உன் மூலமாவும் இது வெளியே யாருக்கும் தெரியக் கூடாது கணபதி. உன் வீட்டில கூட ஏதோ ஒரு கோயில்ல பூஜை செய்யப் போறதா சொல்லிடு. நீ பூஜை செய்யற இடத்துலயே தங்க வேண்டி இருக்கும். அதனால தினம் வீட்டுக்கு வந்து போக முடியாது. வீட்டுல வெளியூர் போறதாகவே சொல்லிடறது நல்லது. அந்த வேதபாட சாலையிலயே கூட அதிகமா அந்த சிவலிங்கத்தைப் பத்தி யார் கிட்டயும் பேசக்கூடாது. சரியா?

சரி குருஜி

நாளைக்கு அதிகாலை நாலு மணிக்கு வீட்டுல ரெடியாய் இரு. உன்னைக் கூட்டிகிட்டுப் போக காரை அனுப்பச்  சொல்றேன்

சரி குருஜி

இதெல்லாம் நல்லபடியாய் முடிஞ்சுதுன்னா கூடுதலா உனக்கு ஒரு பெரிய தொகையும் தரச் சொல்றேன் கணபதி.

கணபதியின் கண்களில் நீர் கோர்த்தது. இதுக்கெல்லாம் இந்த ஏழை உங்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்னு தெரியலை குருஜிஎன்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

குருஜி புன்னகையுடன் சொன்னார். “சந்தர்ப்பம் கிடைக்கிறப்ப நல்ல மனுஷங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு ஆசைப்படறவன் நான் கணபதி. அதை நிறைவேற்றிக் கொடுக்கிறது தெய்வ சித்தம் அவ்வளவு தான்  

கண்களைத் துடைத்துக் கொண்ட கணபதி அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டான்.

அவன் போன பின்பு அவருடைய உதவியாளன் வந்து கேட்டான். “அடுத்தது யாரை உங்க கிட்ட அனுப்பறது?

“அரை மணி நேரத்துக்கு யாரையும் அனுப்பாதேஎன்ற குருஜி போனில் யாரிடமோ பேசினார். “நித்ய பூஜைக்கு ஆள் ஏற்பாடு செய்துட்டேன். அட்ரஸ் குறிச்சுக்கோ

அவர் சொன்னதை எழுதிக் கொண்ட அந்த ஆள் தயக்கத்துடன் கேட்டான். “இந்த ஆள் சமாளிப்பானா?

நல்லாவே சமாளிப்பான். கவலைப்படாதே. நாளைக்கு காலைல நாலு மணிக்கு ஆள் ரெடியாய் இருப்பான். கூட்டிகிட்டு போக ஆள் அனுப்பு. அவன் கிட்ட யாரும் அதிகம் பேசாமல் இருக்கிறது நல்லது.

“சரி குருஜி. அந்த போலீஸ் ஆபிசர் பார்த்தசாரதி உங்களைப் பார்க்க வந்தாரா?

“போன் செய்து பார்க்க வரட்டுமான்னு என் அஸிஸ்டெண்ட் கிட்ட
 கேட்டிருக்கார். நான் ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்க சொல்லி இருக்கேன். உடனடியா பார்க்கறது தேவையில்லைன்னு நினைக்கிறேன்...

“இன்னொரு விஷயம்....

“என்ன?

“பரமேஸ்வரனோட பேரன் ஒருத்தன் அமெரிக்கால பாராசைக்காலஜில ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கான். அவன் இந்தியாவுக்கு வர்றானாம்

அதனால என்ன?

இறந்து போன பசுபதி அந்த சிவலிங்கத்தை அவன் கிட்ட ஒப்படைக்க பரமேஸ்வரன் கிட்ட முதல்லயே சொல்லி இருக்கார். அதுக்கு ஏதாவது ஆனாலும் அவன் கிட்ட சொல்லச் சொல்லி இருக்கார். பரமேஸ்வரன் தன்னோட மகன் அவரோட விருப்பத்திற்கு எதிரா கல்யாணம் செய்துகிட்டதால் இத்தனை நாள் தொடர்பே அவன் குடும்பத்தோட வச்சிருக்கலை. அண்ணா சொன்னதால இப்ப அவன் கிட்ட சொல்லி இருக்கார் போல இருக்கு. அவனும் வர்றான்

மரணத்திற்கு முன்பே பசுபதி அவர் மரணம் பற்றியும், சிவலிங்கத்திற்கு ஏதாவது ஆனால் என்பது பற்றியும் சொல்லி இருந்தது குருஜியை யோசிக்க வைத்தது. மரணத்திலும் விலகாத பத்மாசனத்துடனும், இந்தத் தகவலும் சேர்ந்து யோசிக்கும் போது ஏதோ ஒரு நெருடல் ஆரம்பித்தது. ஆனாலும் அதை அவர் தெரிவிக்கவில்லை. அமைதியாகச் சொன்னார். “அவன் வர்றதால என்ன பிரச்சினை?

உங்களுக்கு அவனைப் பத்தி தெரியுமா?

“அதான் சொன்னாயே பாராசைக்காலஜி ஆராய்ச்சியாளன்னு...

“அவன் ஒரு சாதாரண ஆராய்ச்சியாளனில்லை. உலக அளவில் அவனுக்கு நல்ல பெயர் இருக்கு. அவன் சப்ஜெக்டுல அவன் அறிவு அசாதாரணமானதுன்னு எல்லாரும் சொல்றாங்க. அப்படி இருக்கறப்ப அந்தப் பெரியவரும் சாகறதுக்கு முன்னால் அவன் கிட்ட சொல்லச் சொல்லி இருக்கறது எனக்கென்னவோ சரியா தோணலை. எதுக்கும் அவனைப் பத்தி இண்டர்நெட்டுல கொஞ்சம் பாருங்க குருஜி. உங்களுக்குப் புரியும்...

அவன் பேர் என்ன?

“ஈஸ்வர். விர்ஜினியா யூனிவர்சிட்டியில் இருக்கிறான்

“சரி, நான் பார்க்கிறேன்.....

அதன் பிறகு மூன்று பேரை மட்டும் வரச்சொல்லி அரை மணி நேரத்தில் அனுப்பி விட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டதாக மற்றவர்களிடம் தெரிவிக்க உதவியாளனிடம் சொல்லி விட்டு இணையத்தில் ஈஸ்வர் பற்றி ஆராய ஆரம்பித்தார். அவன் மிகப் பிரபலம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்தது. தொடர்ந்து சேகரித்த விபரங்களையும் அவன் எழுதிய சில கட்டுரைகளையும் படித்த போது,  போனில் பேசியவன் சொன்னது போல ஈஸ்வர் அசாதாரண அறிவுடையவன் போலத் தான் தெரிந்தது. அவன் புகைப்படங்களை ஆராய்ந்தார். அவன் அழகாகவும், கம்பீரமாகவும் தெரிந்தான். எதையும் சந்திப்பேன், எப்படியும் சாதிப்பேன் என்பது போல அவன் பார்வை இருந்தது.....

இரவு நீண்ட நேரமாகியும் அவன் பற்றிய ஆராய்ச்சிகளையே அவர். தொடர்ந்தார். பதினொரு மணிக்கு இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டு செல்போன் அலறியது. இந்த அசாதாரண நேரத்தில் யார் என்று பார்த்தவர் உடனே பேசினார். “என்ன ஆச்சு?

பேசியவன் ஓடி வந்து பேசியது போல மூச்சு வாங்கியது போல் தெரிந்தது. “சிவலிங்கம்.... சிவலிங்கம்.....

“சிவலிங்கத்துக்கு என்ன ஆச்சு?

“பூஜை.. பூஜை....

“அதுக்குத் தானே ஆளை ஏற்பாடு செய்திருக்கேன். நாளைக்கு காலைல இருந்து பூஜையை ஆரம்பிச்சுடலாம். இடையில இந்த இரண்டு நாள் தடைப்பட்டது பெரிசா கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை...

”....இல்லை.... பூஜை யாரோ செய்திருக்காங்க...

“என்ன உளறுகிறாய்? யார் பூஜை செய்தாங்க?

“....தெரியலை....குருஜி

குருஜி திகைத்தார். ஆனால் ஒரே நிமிஷத்தில் சுதாரித்துக் கொண்டவர் அமைதியாகச் சொன்னார். “முதல்ல அமைதியாய் இரு....மூணு தடவை நல்லா மூச்சை இழுத்து விடு...செய்தாச்சா.... உம்... இப்ப அமைதியா நடந்ததைச் சொல்லு....

அவன் சிறிது அமைதியடைந்தது போலத் தெரிந்தாலும் ஒரு இனம் புரியாத பயம் அவன் குரலில் தெரிந்தது. “...சிவலிங்கம் இருந்த கட்டிடம் பக்கம் போனப்ப அதோட பூட்டு திறந்திருந்துச்சு.. என்னடா நாம தானே பூட்டினோம் எப்படி திறந்திருக்குன்னு நினைச்ச நான் உள்ளே போய் பார்த்தேன்.... போனா சிவலிங்கத்துக்கு மேல் ஃப்ரஷ்ஷான வில்வ இலைகளும், நிறைய பூக்களும் இருக்கு.. யாரோ பூஜை செய்துட்டு போனது மாதிரி இருக்கு....

அப்படின்னா நம்ம பசங்கள்ல யாராவது செய்திருக்காங்களோ என்னவோ?

நம்ம பசங்க தொடை நடுங்கிகளா நடந்துகிட்டதால தானே வேற ஆளை வெளியே தேடினோம். அவங்க எப்படி போய் செய்வாங்க.... ஆனாலும் விசாரிச்சு பார்த்துட்டேன்.... அவங்க யாரும் செய்யலையாம்....

அப்படின்னா வேதபாடசாலைல இருக்கிற யாராவது செய்திருக்கலாம்...

நம்ம பசங்களைத் தவிர மத்தவங்க கிட்ட இதைப் பத்தி நான் மூச்சு கூட விடலை.  அப்படி ஒரு சிவலிங்கம் அங்கே இருக்கிறது வேற யாருக்குமே
தெரியாது.... நான் அந்தக் கட்டிடத்தை பூட்டி வேற வச்சிருந்தேன்.... அதைத் திறந்தது யார், பூஜை செஞ்சது யாருன்னு தெரியலை....

“நீ பூட்டினது நிஜம் தானா? நல்லா யோசிச்சு சொல்லு

“நிஜம். அதை மூணு தடவை இழுத்து வேற பார்த்தேன்....

சாவியை எங்கே வச்சிருந்தாய்?

“என் கிட்ட தான் வச்சிருந்தேன்....

பூட்டை யாராவது உடைச்ச மாதிரி இருக்கா?

“இல்லை. தாளை எடுத்து விட்டுப் பூட்டியது மாதிரி தொங்கிகிட்டு இருக்கு குருஜி

“அப்படின்னா நீ தாள் போடாமலேயே பூட்டியிருப்பாய்குருஜி உறுதியாய் சொன்னார்.

பூட்டியதாய் முன்பு உறுதியாகச் சொன்னவன் இப்போது யோசிக்க ஆரம்பித்தான். இருக்கலாமோ. தாளைப் போடாமலேயே பூட்டி விட்டு இழுத்துப் பார்த்திருப்போமோ?

குருஜி சொன்னார். “...வேதபாடசாலைல படிக்கிற பையன் யாராவது அங்கே உள்ளே போயிருப்பான். வாடின பூக்கள் எல்லாம் இருக்கிறதை பார்த்துட்டு எடுத்துட்டு புதுசாய் பூக்கள், வில்வ இலை எல்லாம் வச்சுட்டு போயிருப்பான்..

அந்த அளவு நெருங்கி பூஜை செய்துட்டு ஒன்னும் ஆகாம ஒருத்தன் இருந்திருக்க வாய்ப்பு இருக்குன்னா நினைக்கிறீங்க

குருஜி சொன்னார். “செய்யற ஆள் கள்ளங்கபடமில்லாமல் இருந்தா அவனுக்கு எந்தப் பாதிப்பும் வராது. அதனால தான் நான் கணபதியைத் தேர்ந்து எடுத்தேன்...

என்னவோ எனக்கு தலை சுத்துது.... ஒரு நிமிஷம் இருங்க. நீங்க சொன்ன மாதிரியே இருந்திருக்கும்னே வச்சுக்குவோம். அந்த சிவலிங்கம் மேல இருந்த பூக்கள்ல சில பூக்களை நான் இது வரைக்கும் என் வாழ்க்கைலயே பார்த்தது இல்லை. அதெல்லாம் கண்டிப்பா இந்த ஏரியால கிடைக்கிற பூக்களே இல்லைங்கறது மட்டும் உறுதியா சொல்வேன்.. இங்கே யாராவது செய்திருந்தா அந்தப் பூக்களை எங்கே இருந்து கொண்டாந்திருப்பாங்கன்னு சொல்றீங்க?

குருஜி யோசிக்க ஆரம்பித்தார். அந்தக் கேள்விக்கு அவரிடத்திலும் விடையில்லை.....


(தொடரும்)

- என்.கணேசன்


19 comments:

 1. சந்திரகுமார்October 4, 2012 at 6:43 PM

  நல்லா விருவிருப்பா போகுது. நான் பல வருஷங்கள் கழிச்சு படிக்கிற ஒரு தொடர் நாவல் இது தான். வியாழக்கிழமைன்னா பல தடவை இந்த நாவலுக்காக உங்க ப்ளாக் வந்து பார்த்துடறேன். பாராட்டுக்கள் சார்.

  ReplyDelete
 2. Adutha vaaram varai wait panna mudiyadhunkale sir......


  Sakthi
  Tiruppur

  ReplyDelete
 3. அருமையாகப் போகிறது. மேலும் படிக்க மிகுந்த ஆவலுடன்...

  ReplyDelete
 4. நல்ல விறுவிறுப்பு... தொடர்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 5. மேற் சொன்ன பாராட்டுக்கள் அனைத்தும் உண்மையென்று சான்றளித்து தொடர்ந்து நானும் படிக்கிறேன் பாராட்டுக்கள்
  licsundaramurthy@gmail.com
  www.salemscooby.blogspot.com

  ReplyDelete
 6. விறு விறுப்பு கூடுகின்றது . நன்றி

  ReplyDelete
 7. ***********************************************

  ReplyDelete
 8. //சொல்ற மந்திரங்களோட பக்தியும் சேரலைன்னா அதெல்லாம் வெறும் சத்தங்கள் தானே//

  Good one.....

  ReplyDelete
 9. very nice, romba nalla pokuthu intha thodar

  ReplyDelete
 10. பிரமிக்கவைக்கும் தொடர்....

  ReplyDelete
 11. Sir. Your blog posts are very interesting. This one is again a பிரமிக்கவைக்கும் தொடர்.... I had a general question. Why this type stories are revolve around "Sivan", that is particularly Saivam and not in Vaishnavam. If you have the answer, pl. clarify this. Thanks Karthika.

  ReplyDelete
  Replies
  1. As Lord Shiva is considered as a great mystic this type of stories revolve around him.

   Delete
  2. NG,

   Good one, Also lord Shiva's cosmic dance (Nataraja thandavam) is associated/referenced in connection with higgs-boson particle (aka God Particle:-) )

   All the best !!

   /PK Pillai

   Delete
 12. அடடா நான் தான் தவறாக புரிந்துக்கொண்டேன். முதலில் அவர்கள் சிவலிங்கத்தை தூக்க ஏற்பாடு செய்த இளைஞன் இடையிலேயே ஜுரம் கண்டு ஓடிப்போனதால் சிவலிங்கத்திற்கு நித்ய பூஜை செய்ய அடுத்து ஏற்பாடு செய்த பையன் தான் கணபதி.. பிள்ளையார் உபாசகன். வறுமையில் உழன்றாலும் பக்தி அதிகம்.. மந்திரங்கள் அதிகம் தெரியாதவன் என்றாலும் இறை நம்பிக்கை அதிகம்.. பக்தியில் மூழ்கியவனுக்கு மந்திரம் அவசியப்படுவதில்லை. சதா சர்வகாலமும் இறைநாமத்தையே ஜெபித்துக்கொண்டிருப்பவனுக்கு மந்திரங்கள் அவசியமில்லை...

  இதை எல்லாம் நினைவில் கொண்டு தான் குருஜீ கணபதியை ஏற்பாடு செய்திருக்கார் போலும்..

  ஆனால் இதில் ஒரு வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் எப்படிப்பட்ட நேர்மையானவன் பக்திமானாக இருந்தாலும் வறுமையில் இருப்பவனை தன் நலத்துக்காக பாவம் செய்ய வைத்து விடுகிறார்கள் இவர்கள் போன்றோரை பாவம்...

  கணபதியை கண்டிப்பாக பிள்ளையார் காப்பாற்றுவார்....

  பணத்துக்கு ஆசைப்பட்டு நித்ய பூஜை செய்யும் மற்றோர் போல் தெரியவில்லை எனக்கு கணபதியை பார்த்தால்..

  ஈஸ்வர் வரும் விஷயம் வரை அப்டேட்டடா இருக்கே குருஜீக்கு...

  கணபதியிடம் பொய் கதையை சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டார் குருஜி...

  கணபதியோ தன் பாரங்களை எல்லாம் வழியில் வண்டியை நிறுத்தி தான் வணங்கும் பிள்ளையாரிடம் வைத்துவிட்டான்..

  நானும் பிள்ளையார் பக்தை என்பதால் எனக்கு கணபதியை மிகவும் பிடித்துவிட்டது.. இந்தப்பிள்ளை எந்த பிரச்சனையும் இல்லாமல் உயிர்சேதமில்லாமல் பத்திரமாக திரும்பிவிட பிள்ளையார் காப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது...

  அட.... சிவலிங்கத்துக்கு நித்ய பூஜை செய்ய பசுபதியின் ஆன்மா வந்துவிட்டது போலிருக்கே...

  இதைப்பார்த்தாவது திருந்துவாரா குருஜீ.. பணம் கண்ணை மறைக்கும்போது நல்லவை எதுவும் யார் சொன்னாலும் மனம் ஏற்காது.... நல்லவை எதுவும் கண்ணுக்கு தெரியவும் தெரியாது....


  பார்ப்போம் என்ன தான் நடக்கிறது என்று....

  ReplyDelete