பரம(ன்) ரகசியம்-13
குருஜிக்கு பதில் சொல்ல முடியாத
கேள்விகளை ரசிக்க முடிந்ததில்லை. யோசித்ததில்
இடையே புகுந்து யாரோ விளையாடுகிறார்கள் என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. இதெல்லாம்
கடவுளின் லீலை என்றெல்லாம் நம்பும் நிலையை அவர் என்றோ கடந்து விட்டிருந்தார். அவர்
கடுமையான குரலில் அவனிடம் சொன்னார். “முதல்ல பயந்து சாகறத
நிறுத்து. இது சாமியோட வேலை இல்லை. ஆசாமியோட வேலை. அது எந்த ஆசாமின்னு தான்
தெரிஞ்சுக்கணும்.....”
அவர்
வார்த்தைகளால் அவன் சிறிது தைரியமடைந்த அவன் கேட்டான். “அதை எப்படித்
தெரிஞ்சுக்கிறது?”
சிறிது
யோசித்து விட்டு குருஜி சொன்னார். ”அந்த சிவலிங்கம் இருக்கிற ரூம்ல என்ன நடக்கறதுன்னு
கண்காணிக்க ரகசிய கேமிரா வைக்கறது நல்லது. காலைல கணபதி வர்றதுக்குள்ளே உன்னால
செய்ய முடியுமா?”
காமிரா
வைக்கும் ஏற்பாட்டைக் கேட்டவுடன் “இது நல்ல ஐடியாவா தோணுது.. நாம இல்லாத நேரத்துல
அங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வசதியாயிருக்கும்...” என்று பரபரப்போடு ஆரம்பித்தவன் பிறகு
தயக்கத்தோடு சொன்னான். ”ஆனா ராத்திரி பதினோரு மணிக்கு மேல ஆயிடுச்சே?”
“அப்படின்னா
நாளைக்கு காலைல கணபதி பூஜைய முடிச்சவுடனே அந்த வேதபாடசாலைய சுத்திப் பார்க்க அழைச்சுகிட்டு
போக ஏற்பாடு செய். அப்படி அவன் போனவுடனே ரகசிய வீடியோ காமிராவை வைக்க ஏற்பாடு
செய். அந்த வேலை முடிஞ்சதுக்கப்புறம் அந்தக் கணபதி திரும்ப அங்கே வந்தா போதும்... ”
அந்த
ஆள் கணபதி போயிட்டு வந்த பிறகு வீடியோ காமிரா புதுசா வச்சிருக்கறதைக்
கண்டுபிடிச்சுட மாட்டானா?”
”அந்த அளவுக்கு எல்லாம் கவனிக்கற ரகம் அல்ல அவன். அதுவும் நாம அந்தக்
காமிராவை மறைவாய் தானே வைக்கப் போகிறோம். அதனால அவன் கவனத்துக்கு அது வரவே வராது”
“சரி....”
”நாளைக்கு காலைல கணபதியைக் கூட்டிகிட்டு வர ஆளனுப்பு. காலைல கணபதியை பூஜை
செய்ய வை. எதுக்கும் சிவலிங்கம் மேல இருக்கிற, நீ இது வரைக்கும் இந்த ஏரியாவுல பார்த்தே இருக்காத அந்தப் பூக்களை, எடுத்து தனியாக
வச்சு எனக்கு அனுப்பு. நான் என்னன்னு பார்க்கறேன்”.
”சரி குருஜி... அந்த ஆள் கணபதி கிட்ட நீங்க இந்த சிவலிங்கத்தைப் பத்தி
என்னன்னு சொல்லி இருக்கீங்க.”
“அமெரிக்காவில்
ஒரு கோயிலுக்குப் போக இருக்கிற சிவலிங்கம். வெளியே தெரிஞ்சா கூட்டம் கூடும், சிலை
கடத்தவும் படலாம்கிறதால ரகசியமா வச்சிருக்கோம். இது வரைக்கும் பூஜை
செய்துகிட்டிருந்தவனோட அப்பா காலமாயிட்டதால இவன் கிட்ட சொல்லியிருக்கேன். நம்ம
ஆள்கள் எல்லார் கிட்டயும் அப்படியே சொல்லச் சொல்லு. புரிஞ்சுதா?”
“ம்....”
”எந்த காரணத்தை வச்சும் அந்த சிவலிங்கம் பயப்பட வேண்டிய ஒன்றுங்கற மாதிரி ஒரு
அபிப்பிராயத்தை நீங்க யாரும் கணபதி கிட்ட ஏற்படுத்திடாதீங்க”
“நாங்களா
ஏற்படுத்த மாட்டோம்.....” என்று அவன் ஒரு மாதிரி இழுத்த போது குருஜி எரிச்சலோடு சொன்னார். “அவனாவும்
பயப்பட மாட்டான். கவலைப்படாதே.....”
”சரி குருஜி.”
“கூடுமான
வரை நீங்க ரெண்டு பேரும் கணபதி கண்ணுல படாமல் இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்.
அதனால அவனைக் கூட்டிகிட்டு வரவும், வந்த பிறகும் அவன் கிட்ட பேசவும்,
கண்காணிக்கவும் வேற ஆள்களையே ஏற்பாடு செய். முடிஞ்ச வரைக்கும் யாரும் அவன் கிட்ட
அதிகம் பேசாமல் இருங்கள். அது நல்லது”
மறுநாள் காலை நான்கு மணிக்கு
கணபதி வீட்டு முன் கார் நின்ற போது அவன் தயாராய் காத்திருந்தான். தாயிடமும்
சகோதரிகளிடமும் விடை பெற்று விட்டு காரில் கணபதி ஏறிய போது காரில் இரண்டு
இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும்
மேலதிகாரியின் கண்காணிப்பில் உள்ள இராணுவ வீரர்கள் போல நேராக பார்த்துக்
கொண்டிருந்தார்களே ஒழிய அவனை ஏறெடுத்துப் பார்க்கவும் இல்லை. பின் சீட்டில் அவன்
ஏறி அமர்ந்தவுடன் கார் புறப்பட்டது.
அவர்களாக
ஏதாவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்த கணபதி ஏமாந்து போனான். கார் சிறிது நேரம்
சென்றவுடன் அவன் காரை நிறுத்தச் சொன்னான். “ஒரே நிமிஷம் நான் போய் அவர் கிட்ட
சொல்லிட்டு வந்துடறேன்”
காரை
ஓட்டி வந்தவன் காரை நிறுத்தி வேறு வழியில்லாமல் அவனைப் பார்த்தான். ”யார் கிட்ட?”.
எதிரில்
இருந்த சிறிய பிள்ளையார் கோயிலைக் காண்பித்து கணபதி புன்னகையுடன் சொன்னான். “இவர்
கிட்ட தான்”
சுத்த
கிறுக்கனாக இவன் இருக்க வேண்டும் என்று நினைத்தவனாக அவன் “சீக்கிரம் வாங்க” என்றான். கணபதி தலையசைத்து விட்டு இறங்கினான்.
கணபதி
நேற்றே பிள்ளையாரிடம் எல்லாம் சொல்லி விடை பெற்றிருந்தான் என்றாலும் இன்றும் அதே
வழியில் போகும் போது இறங்கி மறுபடி சொல்லாமல் போவதற்கு அவன் மனம் கேட்கவில்லை.
அவனுக்கு பிள்ளையாரிடம் திரும்பத் திரும்ப சொல்ல நிறைய இருந்தது. மனதிற்குள் சொன்னான்.
“மறுபடியும்
சொல்லறேன், என்னைத் தப்பா நினைச்சுக்காதே. எவனோ ஐநூறு ரூபாய் தினம் தர்றான்னு
சொன்னவுடனேயே உன்னை விட்டுட்டு அங்கே போறேன்னு நினைக்காதே. என் நிலைமை உனக்குத்
தெரியும்....தலைக்கு மேல கடன் இருக்கு... ஆக வேண்டிய வேலையோ எத்தனையோ இருக்கு. ஏதோ
நீ காட்டின வழின்னு தான் போறேன். சுப்புணி
கிட்ட உனக்கு ஒழுங்கா பூஜை செய்யச் சொல்லி இருக்கேன். எழுபது ரூபாயையும்
வாங்கிட்டு ஏனோ தானோன்னு பூஜை செய்தா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம் தான் வாய்க்கும்னு
சொல்லி பயமுறுத்தி இருக்கேன். ஆனா அவன் பயப்பட்ட மாதிரி தெரியலை... கேலியா
சிரிக்கிறான்... என்ன தான் சிரிச்சாலும் ஓரளவு ஒழுங்கா செய்வான். வேற வழியில்லை...
கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ... அங்கே போனாலும் உன்னோட நினைப்பு இருக்கும்...
வரட்டுமா?”
அவன்
மௌனமாக அந்தக் கோயில் முன் கைகளைத் தலைக்கு மேல் கூப்பிக் கொண்டு நின்றதைக் கண்ட காரில்
இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். காரை
ஓட்டி வந்தவன் பக்கத்தில் இருந்தவனிடம் கேட்டான். “இவன் தேறுவான்கிறே...?”
”பார்த்தா அப்படித் தெரியலை... ஆனா குருஜி இவன் நல்லாவே சமாளிப்பான்னு
உறுதியா சொல்றாராம்....ரெண்டு நாள்ல தெரிஞ்சுடும்”
கணபதி
திரும்பவும் காரில் ஏறிய போது அவர்கள் இரண்டு பேரும் பழையது போலவே இறுக்கமான
முகத்துடன் நேராகத் தெருவையே பார்த்தபடி இருந்தார்கள். கணபதி மூன்று மணிக்கே
எழுந்திருந்ததாலும், அவர்கள் அமைதி காத்ததாலும் சீக்கிரமே கண்ணயர்ந்தான். அவன்
தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்காமல் காரிலேயே தூங்கிப் போனது அவர்களுக்கு
நிம்மதியாக இருந்தது. கார் விரைந்தது....
பார்த்தசாரதி தன் கையிலிருந்த
நைந்து போன விசிட்டிங் கார்டை ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்த வீட்டைச் சுற்றி
இருந்த தோட்டத்தில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று சல்லடையிட்டுத் தேடிய போது
கிடைத்த விசிட்டிங் கார்டு அது. துரதிர்ஷ்டவசமாக விசிட்டிங் கார்டின் முன் பக்கம் ஈரமண்ணில்
இருந்ததன் விளைவு எழுத்துக்கள் எல்லாம் அழிந்து போய் அது யாருடைய கார்டு என்பது
தெரியவில்லை. அதன் பின் புறம் கையால் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களும் கூட ஈரத்தால்
பெருமளவு மங்கி அழிந்திருந்தாலும் தொழில் நுட்பக் கருவிகளால் போலீஸ் இலாகா அதில் எழுதப்பட்டிருந்த
எழுத்துக்களைக் கச்சிதமாகக் கண்டுபிடித்திருந்தனர்.
“ஐயா,
தங்களிடம் முக்கியமான விஷயம் ஒன்றைப் பேச விரும்புகிறேன். தயவு செய்து சந்திக்க
அனுமதி தரவும்”
யார்
எழுதியது, எப்போது எழுதியது, எதற்காக எழுதியது, அந்த சந்திப்பு எப்போது என்று
எதுவும் தெரியவில்லை. மறுபடியும் முனுசாமியை விசாரணைக்கு அழைத்து விட்டு அவன்
வருவதற்காகக் காத்திருந்த பார்த்தசாரதிக்கு இந்தப் புதிய தடயம் பற்றி முனுசாமி
என்ன சொல்கிறான் என்றறிய ஆர்வம் இருந்தது. அவர் இன்னும் பரமேஸ்வரனையும்,
ஆனந்தவல்லியையும் விசாரிக்கவில்லை. அவர்களிடம் கேட்க நிறைய இருந்தது. நாளை
செல்லலாம் என்றிருக்கிறார்...
முனுசாமி
பெரும் சலிப்புடன் அவர் முன் வந்து நின்றான். அவனைத் தன் கூர்மையான பார்வையால்
சிறிது நேரம் பயமுறுத்திய பார்த்தசாரதி அவன் சங்கடத்துடன் நெளியவே எதிரில்
உட்காரச் சொன்னார். உட்காரவில்லை என்றால் மூலமா என்று கேட்பார் என்று அவன்
அறிந்திருந்ததால் அவன் உடனடியாக உட்கார்ந்தான்.
”முனுசாமி. ஒரு விஷயத்தை உன் கிட்டே நான் வெளிப்படையாய் சொல்றேன். எங்க
போலீஸ் இலாகாவே இந்தக் கொலையில உனக்கும் பங்கிருக்கும் என்று சந்தேகப்பட்டப்ப, இருக்காது
என்று உன் பக்கம் நின்றவன் நான். என்னையே நீ ஏமாத்தினது புத்திசாலித்தனம் அல்ல”
முனுசாமிக்குத்
தூக்கி வாரிப்போட்டது. ஒரு அநியாயமான சந்தேகத்தையும், அதற்கும் மேலான அவதூறையும் அவர்
சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. கொலையில் எனக்கு பங்கா? நான் இவரை
ஏமாற்றினேனா?
”ஐயா இந்த ஏழைக்கு எப்பவாவது குடிக்கிற பழக்கம் இருக்குங்கறதைத் தவிர
வேறெந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கொஞ்சமானாலும் தவறாமல், நிரந்தரமாய்
கிடைச்சுகிட்டிருக்கிற வருமானத்துல என் வாழ்க்கையை ஓட்டிகிட்டிருக்கிறேன். நீங்க
சொல்றது என் தலையில இடி விழற மாதிரி இருக்கு. பசுபதி ஐயாவை நான் கொல்லவும்
இல்லை... உங்களை ஏமாத்தவும் இல்லை... தயவு செய்து இந்த மாதிரி எல்லாம்
சொல்லாதீங்க....”
படபடவென்று
சொன்ன போது அவனுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது.
“வெளியாள்
யாராவது பசுபதியைப் பார்க்க வந்ததுண்டா, உனக்குத் தெரியுமான்னு நாங்க உன்னைப் பல
தடவை கேட்டோம். இல்லவே இல்லைன்னு நீ
சத்தியம் செய்யாத குறையாக சொன்னாய். உண்டா இல்லையா?”
“ஆமா
சார்”
”அப்படின்னா இது என்ன?”
என்று
அந்த நைந்து போன விசிட்டிங் கார்டை அவனிடம் அவர் நீட்டினார்.
அவன்
வாங்கிப் பார்த்தான். முன்பக்கம் எதுவுமே தெரியவில்லை. பின்பக்கம் ஏதோ எழுதி
அரைகுறையாய் அழித்த மாதிரி இருந்தது. கூர்மையாகப் பார்த்தான். எதுவும் அவனுக்குப்
புரியவில்லை.
அவர்
கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொன்னான். “ஏதோ விசிட்டிங் கார்டு மாதிரி தெரியுது.
ஆனா மண்ணுல அமுங்கி இருந்ததால எழுத்துகள் எல்லாம் முக்கால் வாசி அழிஞ்சு
போயிருக்குங்களே”
”முன்பக்கம் முழுசா செல்லரிச்சுப் போயிருந்தாலும் பின்பக்கத்துல எழுதுனது என்னன்னு
எங்க டிபார்ட்மெண்ட் கண்டுபிடிச்சிருக்கு. இதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா? “ஐயா, தங்களிடம் முக்கியமான விஷயம் ஒன்றைப் பேச
விரும்புகிறேன். தயவு செய்து சந்திக்க அனுமதி தரவும்”. விசிட்டிங் கார்டுல எழுதி
அனுப்பணும்னா உன் கிட்ட தான் அந்த ஆள் எழுதி அனுப்பி இருக்கணும்... வேற யார்
மூலமாவும் பசுபதி கிட்ட இதை அனுப்பி இருக்க முடியாது. ஆனா நீயோ அவர் வெளியாள்
யாரையும் சந்திச்சதில்லைன்னு சொல்லி இருக்கிறாய்....”
அவர்
சொல்லி விட்டு அவனையே கூர்ந்து பார்த்தார்.
முனுசாமிக்கு
ஏதோ பொறி தட்டியது போல பார்த்தசாரதிக்குத் தோன்றியது. அவன் சற்று நிம்மதி
அடைந்தவனாகச் சொன்னான். “ஏழெட்டு மாசத்துக்கு முன்னால ஒரு தடவை இந்த விசிட்டிங்
கார்டைக் குடுத்து பசுபதி ஐயாவைப் பார்க்கணும்னு சொல்லி ரெண்டு பேர் வந்தது
உண்மை... ஆனால் அவங்க பசுபதி ஐயாவை சந்திக்கலைங்களே ஐயா”
“ஏன்?”
“தெரியலை..
பசுபதி ஐயா கிட்ட நான் இந்த விசிட்டிங் கார்டைக் கொடுத்து உங்களைப் பார்க்கணும்னு
யாரோ வந்திருக்காங்கன்னு சொன்னேன். அவர் இந்தக் கார்டை வாங்கிக் கூட பார்க்கலை.
கண்ணை மூடி கொஞ்சம் யோசிச்சவர் நான் பார்க்க விரும்பலைன்னு சொல்லிடுன்னார்.
அப்படியே போய் சொன்னேன். அவங்க போயிட்டாங்க”
”அவங்க ரெண்டு பேரும் பார்க்க எப்படி இருந்தாங்க?”
”நான் பார்க்கலைங்களே ஐயா”
பார்த்தசாரதி
அவனை முறைத்தார்.
முனுசாமி
அவரிடம் விவரமாகச் சொன்னான். “ஐயா அவங்க வந்தது ஒரு கால் டாக்சில. அவங்க கார்ல
இருந்து இறங்கவே இல்லை. டிரைவர் தான் அந்த விசிட்டிங் கார்டைக் கொடுத்து பசுபதி
ஐயாவைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்கன்னு சொன்னான். நான் அதைக் கொண்டு
போயிட்டு திரும்பி வந்து அவர் சொன்னதை அவன் கிட்ட தான் சொன்னேன். அவன் போய் அவங்க
கிட்ட சொன்னான். பிறகு அவங்க போயிட்டாங்க. நான் அந்த ரெண்டு பேரையும் பார்க்கல....ஏ.சி
கார்ல ஜன்னல் கண்ணாடிய முழுசுமா ஏத்தி மறைச்சிருந்ததால பார்க்க முடியல. ஆனா அவன்
டாக்சிய ரிவர்ஸ்ல எடுக்கறப்ப முன்னாடி கண்ணாடி வழியா பின்னாடி இருந்தவங்கள ஏதோ
கொஞ்சம் பார்க்க முடிஞ்சதுல ரெண்டு பேர்ல ஒருத்தன் வெள்ளைக்காரன்னு தெரிஞ்சுது.
மத்தபடி ரெண்டு பேர் பத்தியும் வேற எதுவும் எனக்குத் தெரியாதுங்கய்யா.. நான்
அதுக்கு முன்னாடி அவங்களை பார்த்தது கூட இல்லை...”
”அவங்க பார்க்க வந்ததை ஏன் எங்க கிட்ட நீ முதல்லயே சொல்லலை?”
”அவங்க அவரைப் பார்த்து பேசலையே ஐயா. அவர் கிட்ட யாராவது வந்து
பேசினாங்களான்னு கேட்டீங்க. பேசலைங்கறதால தான் அதைச் சொல்லணும்னு தோணல”
அவனை
சந்தேகம் நீங்காதவராய் பார்த்த பார்த்தசாரதி கேட்டார். “அந்த விசிட்டிங் கார்டுல
இருந்த பெயர், விலாசம் ஏதாவது நினைவிருக்கா?”
”அது இங்கிலீஷ்ல இருந்ததால எனக்கு எதுவும் புரியலைங்கய்யா”
“அவங்க
திரும்பி எப்பவாவது அவரைப் பார்க்க வந்தாங்களா”
“இல்லைங்களே
ஐயா”
”பசுபதி ஏன் அவங்களைப் பார்க்கலைன்னு சொன்னாரா?”
“இல்லை.
நானும் கேட்கல”
“அவங்க
ஏன் அவரைப் பார்க்க வந்தாங்கன்னு நினைக்கிறாய்?”
“தெரியல
ஐயா” அவன் பரிதாபமாகச் சொன்னான்.
அவன் உண்மை சொல்கிறான் என்று அவர் நம்பினாலும் சந்தேகப்
பார்வையையே முகத்தில் காட்டிய அவர் அவனிடம் கேட்டார். ”அந்த வெள்ளைக்காரன் எப்படி
இருந்தான். என்ன வயசிருக்கும்னு ஏதாவது சொல்ல முடியுமா?”
“உயரமா
இருந்தான்ய்யா. சின்ன வயசில்ல ..கொஞ்சம் வயசானவனா தான் தெரிஞ்சுது. அதுக்கு அதிகமா
பார்க்க முடியல”
”கூட இருந்தவன்?”
“அந்த
ஆளை சுத்தமாவே பார்க்க முடியல ஐயா. அந்த ஆள் தலைய குனிஞ்சுகிட்டு இருந்தான்....”
இந்தக்
கொலை மற்றும் கடத்தலுக்கு சம்பந்தப்பட்டவர்களாக அவர்கள் இருவரும் இருக்கக்கூடுமோ
என்ற சந்தேகம் பார்த்தசாரதிக்கு வந்தது. அவர்கள் யார், எதற்காக பசுபதியை சந்திக்க
வந்தார்கள், விசிட்டிங் கார்டை வாங்கிக் கூடப் பார்க்காமல் பசுபதி அவர்களை ஏன்
சந்திக்க மறுத்தார் என்ற கேள்விகள் எழ அதற்கான பதில்கள் என்னவாக இருக்கக் கூடும்
என்று பார்த்தசாரதி யோசிக்க ஆரம்பித்தார். வெள்ளைக்காரன் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அது சிலையை வெளிநாட்டுக்குக் கடத்துவதற்காக இருக்கலாம். அப்படி வெளிநாட்டுக்குக் கடத்திச் செல்ல அது சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த சிலை ஒன்றுமல்ல என்பதால் வேறு எதாவது காரணம் அதற்கு இருக்க வேண்டும்... அந்த சிவலிங்கத்தைப் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டால் ஒழிய இந்த விசாரணையில் மற்றவைகளையும் கண்டு பிடிப்பது கஷ்டம் தான் என்று அவருக்குத் தோன்றியது....
(தொடரும்)
- என்.கணேசன்
Great!!!!!!!! Keep Going............
ReplyDeleteஅருமையான நடை, அசத்தல் கரு. தினமும் எதிர்பார்க்கிறேன், இயலவில்லை எனில் வாரம் இருமுறையாவது முயற்சியுங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteSuper....
ReplyDeleteSuper...
ReplyDeleteசெம விறு...விறுன்னு போகுது........ஆரம்பித்தது தெரியாமல் முடிந்து போனதே....இனி அடுத்த வியாழன் வரை காத்துக்கொண்டு இருக்க வேண்டுமா என்று ஒரே கவலையாக இருக்கிறது.......
ReplyDeleteஈஸ்வர்-பரமேஸ்வரனுக்கு இடையே நடக்கப்போகும் முதல் சந்திப்பை எதிர்பார்த்து இந்த வாரமும் ஏமாந்தேன். அடுத்த வாரமாவது அவர்கள் இருவரும் சந்திக்க ஆவன செய்யுங்கள்.... :-)
ReplyDeleteஅவர்கள் யார், எதற்காக பசுபதியை சந்திக்க வந்தார்கள், விசிட்டிங் கார்டை வாங்கிக் கூடப் பார்க்காமல் பசுபதி அவர்களை ஏன் சந்திக்க மறுத்தார் என்ற கேள்விகள் எழ அதற்கான பதில்கள் என்னவாக இருக்கக் கூடும் என்று பார்த்தசாரதி யோசிக்க ஆரம்பித்தார்.
ReplyDeleteவிரைவில் பதிலை எதிர்பார்க்கிறோம்..
Cool
ReplyDeleteதொடர்கிறேன்.
ReplyDeleteசுவாரசியமா போகுது கணேசன் சார். சின்ன கேரக்டர்கள் கூட மனதில் இயல்பாய் பதிகிறார்கள். கணபதி யதார்த்தம். கணபதி-சிவலிங்கம் சந்திப்பும், பரமேஸ்வரன் ஈஸ்வர் சந்திப்பும் படிக்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். வாரம் இருமுறை தொடர எங்களுக்காக முயற்சி செய்யுங்களேன்.
ReplyDeleteதொடர்கிறேன்...
ReplyDeleteதொடர்கிறேன்...
ReplyDeleteநல்ல எழுத்துநடை, ஆழமான கருத்துகள், சின்ன சின்ன விஷயங்களை கூட கூர்மையாக சொல்லும் விதம், வாரத்திற்கு வாரம் சஸ்பென்ஸ் வைக்கும் விதம் இப்படி ஏகப்பட்ட நுணுக்கங்களை கொண்டதாக உள்ளது பரம(ன்) ரகசியம். வியாழன் வந்தால் காலையில் இருந்தே தொடர் போட்டாச்சான்னு பாக்கிறது தான் முதல் வேலையே. சூப்பர் தொடருங்கள்.
ReplyDeleteedharkaga car picture potteenga ???????????
ReplyDeleteகணபதியின் ஆத்மார்த்தமான அன்பு...
ReplyDeleteகுருஜீயின் பேராசை...
சிவலிங்கத்தின் மீது பசுபதியின் பற்று...
விடாக்கொண்டன் பார்த்தசாரதியின் விசாரணை...
ஒன்றுமறியாத அப்பாவி முனுசாமியின் ரோஷமான பதில்....
இப்படி அழகாக கதையை நகர்த்திக்கொண்டு செல்கிறீர்கள்பா..
அடுத்து என்ன....
அன்பு வாழ்த்துகள்.