கீதை காட்டும்
பாதை 20
எது ஞானம்?
எந்தக் குறையும் இல்லாத ஆத்மா
இந்தக் குறைபாடுகளும் பிரச்சினைகளும் நிறைந்த வாழ்க்கை ஓட்டத்தில் வந்து சிக்கிக்
கொள்வது ஏன் என்ற கேள்வி சிந்திக்க முடிந்த மனிதன் மனதில் எழுவது இயற்கை. இதற்கு
விடையாக சுவாமி விவேகானந்தர் கிளிக்கதை ஒன்றை அடிக்கடிக் கூறுவதுண்டு...
ஒரு
ஜீவ விருட்சத்தின் உச்சியில் இரண்டு கிளிகள் ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தன. இரண்டுமே தெய்வீக ஒளியால் சூழப்பட்டு ஜொலித்துக்
கொண்டிருந்தன. அவற்றிற்கு எந்தக் குறையுமில்லை. எந்தத் தேவையும் இருக்கவில்லை.
பேரமைதியுடன் அவை இருந்தன. அந்த
விருட்சத்தின் கீழ்பகுதியில் நிறைய பழங்கள் அழகாகப் பழுத்திருந்தன. ஒரு கிளிக்கு
அதை சுவைத்துப் பார்க்கும் ஆசை உண்டாயிற்று. மெல்ல கீழே பறந்து வந்து ஒரு கனியை
சுவைத்தது. அந்தக் கனியின் இனிய சுவை அதற்கு மிகவும் பிடித்துப் போகவே அது மேலும்
இறங்கி வந்து அந்தக் கனிகளை சுவைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இனிய சுவையுடன்
கூடிய கனிகளே சுவைக்கக் கிடைத்தாலும் மேலும் கீழே இறங்க இறங்க இனிப்புடன்,
புளிப்பு, கசப்பு போன்ற விருப்பமில்லாத சுவைகளும் கனிகளில் கிடைக்க ஆரம்பித்தது.
மாறி
மாறி கிடைத்த சுவைகள் அந்தக் கிளிக்கு மகிழ்ச்சியையும், ஏமாற்றத்த்டையும்,
வருத்தத்தையும் சேர்த்தே தர ஆரம்பித்தன. விருட்சத்தில் கீழ்ப்பகுதியிலேயே வசிக்க
ஆரம்பித்திருந்த அந்தக் கிளி தன் தெய்வீக ஒளியையும் இழந்து விட ஆரம்பித்திருந்தது.
ஒரு கட்டத்தில் அந்தக் கிளி உச்சியில் இப்போதும் வசித்து வரும் அதனுடைய ஜோடிக்
கிளியை அண்ணாந்து பார்த்தது. அந்த ஜோடிக் கிளி இப்போதும் அதே தெய்வீக ஒளியுடன்
ஜொலித்துக் கொண்டு ஆனந்தமாகவும் நிறைவாகவும் இருந்ததைக் கண்ட கிளிக்கு உண்மை
உறைக்க அது மீண்டும் உச்சிக்குச் சென்று அந்த ஜோடிக் கிளியுடன் சேர்ந்திருக்கப்
பறந்து சென்றது. ஆனால் அங்கே அதனால் திருப்தியாக இருக்க முடியவில்லை. கனிகளை
சுவைக்கும் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. புளிப்பும் கசப்பும் மிகுந்த
கனிகள் அதிகம் கிடைத்தாலும் இடையிடையே இனிப்பான கனிகளும் கிடைக்கின்றன அல்லவா?
அந்த நினைவினை அதனால் அலட்சியப்படுத்த முடியவில்லை.
மேலே
இருக்க முடியாத அந்தக் கிளி மறுபடி மறுபடி கீழே வந்து பல வித சுவையுடைய கனிகளைச்
சுவைத்து அதற்கேற்ற மனநிலைகளில் இருந்து தவித்தது. அதன் தெய்வீக ஒளி முழுவதுமாக
மங்கி இருந்தது. ஆனால் அந்த ஜோடிக் கிளியோ குறையாத ஆனந்தத்துடன் மேலிடத்திலேயே
நிறைவுடன் இருந்தது.
இது
தான் மனிதனின் நிலை. எதனாலும் பாதிக்கப்படாமல் முழுமையான நிறைவுடன் அவன் ஆன்மா
இருக்க அவன் மனமோ அறியாமையில் பொய்யான சுகங்களைத் தேடி தன் நிலையில் இருந்து
இறங்கி வந்து சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு விருப்பு வெறுப்பு என்ற இரட்டை
நிலைகளில் சிக்கித் தவிக்கிறது. மேலான உண்மைகள் அவனுக்கு அவ்வப்போது புரியாமல்
இல்லை. ஆனால் அறியாமையும், பலவீனமும் திரும்பத் திரும்ப அவனைக் கீழே இழுக்கின்றன. இதில்
ஆத்மாவின் பங்கு இல்லை.
இதை
கர்ம சன்னியாச யோகத்தில் தொடர்ந்து வரும் சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.
”ஆத்மாவானது கர்மங்களைச் செய்யத் தூண்டுவதோ, கர்மங்களை உண்டாக்குவதோ இல்லை. கர்ம பலன்களுடன் சேர்த்து
வைத்தலையும் செய்வதில்லை. இயற்கையே எங்கும் இயங்குகிறது.
ஆத்மாவானது
எவனுடைய பாபத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. புண்ணியத்தையும் எடுத்துக்
கொள்வதில்லை. ஞானம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது. அதனால் பிராணிகள்
மயக்கமடைந்திருக்கின்றன.
எவர்களுடைய
ஞானத்தால் அந்த அஞ்ஞானமானது அழிக்கப்பட்டதோ அவர்களுடைய ஞானம் சூரியனைப் போல்
அந்தப் பரம்பொருளைப் பிரகாசிக்கச் செய்கிறது.”
கனிகளில்
பல சுவைக் கனிகள் இருப்பது இயற்கை. பார்த்தவுடனேயே சுவை அறிந்து கொள்ள
முடிவதில்லை. காட்சிக்கு அழகாக இருப்பவை சுவையிலும் இனிமையாக இருக்கும் என்பதற்கு
எந்தவித உத்திரவாதமும் இல்லை. இதெல்லாம் இயற்கையின் தன்மை. ஆத்மா இந்த இயற்கை
தர்மங்களுடன் யுத்தம் செய்வதில்லை. தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுமில்லை. அதனால் அதன்
பாவ புண்ணியக் கணக்கையும் அது எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால்
ஆசை, அறியாமையால் உந்தப்பட்டு சுவைக்க வந்த மனிதனோ அந்த இயற்கையின் தன்மையுடன்
பிணைக்கப்பட்ட விளைவுகளையும் சேர்ந்தே அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்த தொடர்
விளைவுகளில் சிக்கி கஷ்டப்பட நேர்கிறது.
இதில்
ஞானம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது என்கிற வாசகம் அறிவுபூர்வமானதா என்று
சிலருக்கு சந்தேகத்தை எழுப்பலாம். ஒளி இருக்கும் இடத்தை இருள் நெருங்கவே முடியாத
போது ஒளியை இருட்டு எப்படி மூட முடியும்? ஞானமும் அப்படிப் பட்ட ஒளியே அல்லவா? அதை
அஞ்ஞான இருட்டு எப்படி மூட முடியும்?
சூரியன்
பேரொளியுடன் மின்னிக் கொண்டிருந்தாலும் கூட நாம் கண்களை மூடிக் கொண்டால் பின்பு
நாம் இருப்பது இருட்டிலேயே அல்லவா? மலையே எதிரில் இருந்தாலும் கண்ணருகில் இரு
விரல்களை வைத்து மறைத்துக் கொண்டால் மலையும் நம் பார்வையில் இருந்து மறைந்து
விடும் அல்லவா? கண்களை
ஏன் மூட வேண்டும், விரல்களைக் கண்ணருகில் வைத்துக் கொள்வது எதற்காக? இதெல்லாம்
அறியாமையால் நாமே செய்து கொள்ளும் முட்டாள்தனங்கள். இந்த அஞ்ஞானச் செய்கையால்
மெய்ஞான சூரியனையும், மலையையும் நாமே மறைத்துக் கொள்கிறோம். பகுத்தறியக் கூடிய
அறிவை விட்டு விலகும் போது மனிதன் விலங்காகிறான். மயக்கமடைகிறான். இந்த அஞ்ஞானச்
செய்கையை விலக்கிக் கொள்ளும் போது ஞான ஒளியுடன் எல்லாமே பிரகாசித்து உள்ளது உள்ளது
போலவே தெரிகிறது.
இப்படி
அஞ்ஞானத்தை விலக்கி அதன் மாசுகளைக் களைந்து கொண்டவன் எப்படி இருப்பான்? இதற்கு
ஸ்ரீகிருஷ்ணர் பதில் கூறுகிறார்.
”அந்தப் பரமாத்ம தத்துவத்தில் புத்தி, மனம், பற்றுதல், நோக்கு
இவைகளை வைத்து ஞானத்தால் மாசுகளை தீர்த்துக் கொண்டவர்கள் மிக மேலான ஒரு நிலையை
அடைகிறார்கள்.
கல்வியும்
அடக்கமும் நிறைந்த பிராமணனிடமும், பசுவிடமும், யானையிடமும், நாயிடமும், நாயைத்
தின்னும் நீசனிடமும் அறிஞர்கள் சமமான நோக்கு கொண்டிருப்பார்கள்.
யாருடைய
உள்ளம் அனைத்து உயிர்களிடமும் சமான நோக்குடன் இருக்குமோ, அவர்கள் இந்தப்
பிறவியிலேயே பிறப்பு, இறப்பு கொண்ட சம்சாரத்தை வென்றவர்கள். ஏனென்றால் அவர்கள்
எந்த குறையும் இல்லாத, எங்கும் சமமான பிரம்மத்திலேயே இருக்கிறார்கள்.”
எல்லா
உயிர்களிடத்திலும் அந்தர்யாமியாய் இறைவன் இருப்பதை ஞானியால் மட்டுமே உணர முடியும்.
அதனாலேயே அவர்கள் வெளிப்பார்வைக்குத் தெரியும் வேறுபாடுகளைப்
பொருட்படுத்துவதில்லை. வெளித்தோற்றங்களை வைத்து எதையும் அவர்கள் மதிப்பிடுவதில்லை.
உள்ளே உண்மைப் பொருளாய் என்ன இருக்கிறதோ அதுவே அவர்களுக்கு முக்கியம். அப்படிப்
பார்க்கையில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனைத்
தவிர வேறு எதுவும் தென்படாததால் அனைத்தையும் ஒன்று போலவே, உயர்வாகவே, அவர்கள் சம
நோக்குடன் பார்க்கிறார்கள். அப்படிப் பார்க்க முடிந்தவரையே ஞானியாகக் கருத முடியும்.
ஆதிசங்கரர்
ஒரு சமயம் கங்கையில் குளித்து விட்டு சீடர்களுடன் காசி விஸ்வநாதனைத் தரிசிக்கச் சென்று
கொண்டிருந்தார். அப்போது நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக் கொண்டு ஒரு புலையன்
எதிரில் வழிமறித்தபடி வந்து கொண்டிருந்தான். சடைத்தலையுடனும், அழுக்கு
உடைகளுடனும், துர்நாற்றத்துடனும், கோரத் தோற்றத்துடனும் இருந்த அந்தப் புலையன்,
நாய்களுடன் நெருங்கிய போது ஆதிசங்கரர் அருவருப்புடன் “விலகி நில். எங்களுக்குப் போக
வழிவிடு”
என்று சொன்னார்.
புலையன்
சொன்னான். “யார் விலக வேண்டும்? இந்த உடலைச் சொல்கிறீர்களா? உடலுக்குள் இருக்கும்
என்னைச் சொல்கிறீர்களா? உள்ளே உள்ள உயிர்ப் பொருள் இல்லா விட்டால் இந்த உடல்
ஜடத்தன்மை வாயந்ததே. அது தானாக நகர முடியாதது. உள்ளே உள்ள உயிர்ப்பொருளைச்
சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலினுள் உள்ள உயிர்ப் பொருளும், என் உடலின் உள்ளே
இருக்கும் உயிர்ப்பொருளும் ஒன்று தான். ஒன்றாக இருக்கும் உயிர்ப் பொருள் தன்னையே
விட்டு எப்படி விலக முடியும்? எல்லாம் ஒன்றே என்று அத்வைதம் பேசுகிற நீங்கள்
உண்மையில் அப்படியே காண்பதில்லை போல் இருக்கிறதே”
அந்த
வாசகங்களில் இருந்த உண்மை ஆதிசங்கரரை உடனே இருகரம் கூப்பி மண்டியிட்டு அந்தப்
புலையனை வணங்க வைத்தது. ”எல்லாவற்றிலும் மூலமாக இருக்கும் பரம்பொருளை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல்
அப்படியே நடந்து கொள்ளவும் முடிந்த தாங்களே என் குரு. உங்கள் திருவடிகளை
வணங்குகிறேன்”
உடனடியாகப்
புலையனின் உருவம் சிவபெருமானாகவும், நாய்கள் நான்கும் அவர் கையில் வேதங்களாகவும்
மாறிக் காட்சியளிக்க ஆதிசங்கரர் பரவசத்துடன் ”மணீஷ பஞ்சகம்” என்ற அற்புதமான ஐந்து
சுலோகங்களில் புலையனாக வந்து இறைவன் சொன்ன அத்வைத தத்துவத்தைப் பாடினார். முதல்
நான்கு சுலோகங்கள் நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட அத்வைத சாரமாகவும், ஐந்தாவது
சுலோகம் நான்கு வேதங்களையும் உள்ளடக்கிய ஓம் என்ற பிரணவ மந்திரச் சிறப்பாகவும்
இருக்கின்றன.
முற்றும் அறிந்தவர்கள் கூட இந்த இயல்பு வாழ்க்கை ஓட்டத்தில் சில சமயங்களில் மிக முக்கிய உண்மைகளை மறக்க நேர்வதும், இறைவன் அவர்களுக்கும் உண்மையை நினைவுபடுத்த வேண்டி இருப்பதும் நம் புராணங்களில் நாம் அடிக்கடி காணலாம். அதற்கு மிக நல்ல உதாரணமாக இந்த சம்பவத்தைச் சொல்லலாம்.
முற்றும் அறிந்தவர்கள் கூட இந்த இயல்பு வாழ்க்கை ஓட்டத்தில் சில சமயங்களில் மிக முக்கிய உண்மைகளை மறக்க நேர்வதும், இறைவன் அவர்களுக்கும் உண்மையை நினைவுபடுத்த வேண்டி இருப்பதும் நம் புராணங்களில் நாம் அடிக்கடி காணலாம். அதற்கு மிக நல்ல உதாரணமாக இந்த சம்பவத்தைச் சொல்லலாம்.
உடலாகவும்,
வெளிப்புறத் தோற்றமாகவும் தன்னை இணைத்துக் காண்பவன் அந்த அஞ்ஞானத்தில் தன்னை
சிறைப்படுத்திக் கொள்கிறான். மாறாக உண்மை அறிந்து பேதம் நீங்கித் தன்னை ஆத்மாவாகக்
காண்பவன் இப்பிறவியிலேயே சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெற்றவனாகிறான். எல்லோரையும்
சமமாக நோக்கும் தன்மை இருப்பதுடன் மாசற்ற சமநிலை கொண்ட பிரம்மமாகவே அவன் மாறியும்
விடுகிறான்.
இது
மிக உயர்ந்த ஆன்மிக நிலை மட்டுமல்ல சமுதாய கோணத்தில் பார்க்கையில் சாதி, மத, மொழி,
இன, நிற, தோற்ற வேறுபாடுகளைத் தாண்டிய மிக உயர்ந்த மனிதமும் மலர்ந்த மகோன்னத நிலை
அல்லவா?
பாதை
நீளும்....
-
என்.கணேசன்
அன்பின் கணேசன், தங்கள் கீதைத் தொடர் மிக அருமையாகச் செல்கிறது. தெரிந்த அல்லது மற்ற இடங்களில் படித்த விஷயம் வரும் இடங்களில் கூட உங்கள் சொற்களில் படிக்கையில் மேலும் தெளிவு பிறக்கிறது. நன்றி
ReplyDeleteExcellent collection Mr.Ganesan sir.
ReplyDeleteREALY SUPERB
ReplyDeleteகணேசன் ரொம்ப நல்லா எழுதிருக்கிறிர்கள்! அதாவது ஏதாவது புதிதா வந்திருக்கிறதான்னு பார்த்து படிப்பதிலுருந்து உங்களின் எழுத்தின் வலிமை உங்களுக்கு தெரியனும்.
ReplyDeleteகொஞ்சம் நிதானமாகப் படிக்கவேண்டும். படிப்பேன்.
ReplyDeleteHats off to your articles Mr. Ganeshan. You mesmerize us with your words. Thanks and all the best for your continuous efforts...
ReplyDeleteYour works are quite mesmerizing. All the best for your continuous efforts..
ReplyDeleteதெளிவான விளக்கம்... நன்றி...
ReplyDeleteஉதாரணங்களால் மட்டும் தத்துவ ஞானங்கள் வசப்படாது. தீர்க்க சிந்தனையும் அதன் விளைவான தெளிவும்தான் ஞானத்தை அளிக்கும்.
ReplyDeleteGood one Mr.Ganeshan
ReplyDeleteToday's Param Ragasiyam not yet Posted
ReplyDelete\\\கனிகளில் பல சுவைக் கனிகள் இருப்பது இயற்கை. பார்த்தவுடனேயே சுவை அறிந்து கொள்ள முடிவதில்லை. காட்சிக்கு அழகாக இருப்பவை சுவையிலும் இனிமையாக இருக்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. இதெல்லாம் இயற்கையின் தன்மை.///
ReplyDeleteபுரிந்து கொண்டவர்களுக்கு வாழ்க்கை இனிமையானதே..
அருமையான, உண்மையான வரிகள்..
\\\கனிகளில் பல சுவைக் கனிகள் இருப்பது இயற்கை. பார்த்தவுடனேயே சுவை அறிந்து கொள்ள முடிவதில்லை. காட்சிக்கு அழகாக இருப்பவை சுவையிலும் இனிமையாக இருக்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. இதெல்லாம் இயற்கையின் தன்மை.///
ReplyDeleteபுரிந்து கொண்டவர்களுக்கு வாழ்க்கை இனிமையானதே...
அருமையான, உண்மையான வரிகள்....
அன்புடன் ஆளவந்தான்
Hi Ganesan sir,
ReplyDeleteVery nIce Article & Explanation.
Thanks for sharing.
Best Regards
S.P.SIVAN
Singapore
Ganeshan Sir,
ReplyDeleteExcellent. I read again and again. Your words are awesome, takes me out of this world. Examples are great, adds more value, meaning and explains very well. Life changing words.
You are gifted, please continue your awesome effort to help the society. I learned a lot from your words. Thanks a lot.
Wish you all the best. Great Job.
C. R. Ramesh
Wyoming, USA
http://sagakalvi.blogspot.in/2014/07/pdf_25.html
ReplyDeleteஞான நூல்கள் - PDF வடிவில்
மெய் ஞானம் என்றால் என்ன?
இறைவன் திருவடி எங்கு உள்ளது?
ஞானம் பெற வழி என்ன?
வினை திரை எங்கு உள்ளது?
வினை நம் உடலில் எங்கு உள்ளது?
வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
சும்மா இரு - இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
மனம் எங்கு உள்ளது?
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய ஞான நூற்களை படித்து தெளிவு பெறவும்
திருஅருட்பாமாலை 3 -- PDF
திருஅருட்பாமாலை 2 -- PDF
திருவாசக மாலை -- PDF
திருஅருட்பாமாலை 1 -- PDF
ஞானக்கடல் பீர் முகமது -- PDF
மூவர் உணர்ந்த முக்கண் -- PDF
ஞானம் பெற விழி -- PDF
மந்திர மணிமாலை(திருமந்திரம்) -- PDF
கண்மணிமாலை -- PDF
அருள் மணிமாலை -- PDF
சாகாக்கல்வி - PDF
வள்ளல் யார் - PDF
உலக குரு – வள்ளலார் - PDF
திருஅருட்பா நாலாஞ்சாறு
சனாதன தர்மம்
பரம பதம் - எட்டு எழுத்து மந்திரம் அ
ஜோதி ஐக்கு அந்தாதி
அகர உகர மாலை
ஞான மணிமாலை
ஆன்மநேய ஒருமைப்பாடு
ஜீவகாருண்யம்
ஸ்ரீ பகவதி அந்தாதி
அஷ்டமணிமாலை
திருஅருட்பா தேன்