என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, October 25, 2012

பரம(ன்) ரகசியம் 15பார்த்தசாரதி ஆனந்தவல்லியிடம் கேட்டார். “ஆனந்தவல்லி அம்மா, உங்கள் மகனைக் கொன்னுட்டு அந்த சிவலிங்கத்தை எடுத்துட்டுப் போகிற அளவுக்கு அந்த சிவலிங்கத்துல ஏதோ இருக்கணும் இல்லையா அது என்னன்னு உங்களால சொல்ல முடியுமா?

ஆனந்தவல்லி சொன்னாள். “அதுல ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை”.
“அப்படின்னா அதைக் கடத்திகிட்டு போக காரணமே இல்லையேம்மா

ஆனந்தவல்லி எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தாள்.

பார்த்தசாரதி சொன்னார். “ஸ்படிக லிங்கம், மரகத லிங்கம் மாதிரி இருந்திருந்தா நல்ல விலை போகும்னு அதை எடுத்துகிட்டு போயிருக்கலாம்னு சொல்லலாம். அதுக்குள்ளே வேற விலை உயர்ந்த பொருள் எதாவது ஒளிச்சு வச்சிருந்தா அதுக்காக கடத்தப்பட்டிருக்கிறதா சொல்லலாம்.... இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கணும்னா அவங்களோட நோக்கம் என்னன்னு முதல்ல தெரிஞ்சுகிட்டா தான் முடியும்.. சிவலிங்கம் வந்த காலத்தில் இருந்து இருக்கிறவங்க நீங்க... உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொன்னா தான் உங்க மகனைக் கொலை செய்துட்டு சிவலிங்கத்தைக் கடத்தினவங்களைக் கண்டு பிடிக்க முடியும்....

ஆனந்தவல்லி கசப்பான மருந்தை சாப்பிடக் கொடுத்தது போல சங்கடப்பட்டாள். ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு அந்த சிவலிங்கத்தைப் பிடித்ததில்லை. அவளிடமிருந்து அவள் மகனைத் திருடிய எதிரியாகவே அதை அவள் நினைத்து வந்தாள். அவள் மகனைக் கொல்லாமல் அந்த சிவலிங்கத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு போயிருந்தால் அவள் அதைப் பெரிய உதவியாகவே கூட நினைத்திருப்பாள்... அந்த சிவலிங்கத்தைப் பற்றி பேசக் கூட அவளுக்கு கசந்தது... ஆனால் அந்தப் போலீஸ் அதிகாரி சொல்வதிலும் உண்மை இருந்தது....

பார்த்தசாரதி விடவில்லை. “அந்த சிவலிங்கம் சக்தி வாயந்ததுன்னு சிலர் நினைக்கிறாங்களே அது உண்மையா?

ஆனந்தவல்லி காட்டமாகச் சொன்னாள். “அறுபது வருஷத்துக்கு மேல அதைப் பூஜை செய்துட்டு வந்தவனையே காப்பாத்தாத அந்த சிவலிங்கத்துக்கு வேற என்ன சக்தி இருக்க முடியும்?

அவள் பேச்சில் இருந்த யதார்த்த உண்மை பார்த்தசாரதியை யோசிக்க வைத்தது. ஆனால் அடுத்த கணம் அவர் தன்னையுமறியாமல் சொன்னார். மேற்கொண்டு உயிர் வாழ விரும்பாத மனிதனை எந்த சக்தி தான் காப்பாற்ற முடியும்?சொல்லி விட்டு அவரே ஒரு கணம் திகைத்தார். யாரோ அந்த வார்த்தைகளை அவர் வாயில் போட்டு வரவழைத்தது போலத் தோன்றியது.

ஆனந்தவல்லி அவரையே ஆழமாகப் பார்த்தாள்.

பார்த்தசாரதி சமாளித்துக் கொண்டு சொன்னார். “பத்மாசனத்துல இருந்தபடியே சாகறது சாதாரண விஷயமில்லை. அதுவும் கொலை செய்யப்பட்ட போது கூட அப்படியே இருக்க முடியறது அசாதாரணமான விஷயம். உங்க மகனுக்கு எழுபது வயசு ஆகியிருந்தாலும் நாற்பது வயசு மனிதனோட ஆரோக்கியம் இருந்ததாய் டாக்டர்ங்க சொல்றாங்க. அவர் ஹத யோகின்னும் கேள்விப்பட்டேன். அதனால அவர் நினைச்சிருந்தா அந்தக் கொலைகாரனை சுலபமா தடுத்து இருக்கலாம்....

ஆனந்தவல்லியின் முகத்தில் சோகம் படர்ந்தது. அவள் தலையை மட்டும் அசைத்தாள்.

பார்த்தசாரதி தொடர்ந்தார். “அந்த சிவலிங்கத்துக்கு சக்தி இருக்கோ இல்லையோ அது சக்தி வாய்ந்ததுன்னு சில பேரு நினைச்சிருக்கற மாதிரி தான் தெரியுது. அதைக் கொண்டு வந்து உங்க குடும்பத்துல சேர்த்தது ஒரு சித்தர்னு கேள்விப்பட்டேன். அந்த சித்தரைப் பத்தி ஏதாவது சொல்ல முடியுமா?

நான் அந்த ஆளைப் பார்த்ததே இல்லை

“அந்த சிவலிங்கத்தை அவர் எங்கே இருந்து கொண்டு வந்தார்னு தெரியுமா? அது பத்தி உங்க கணவர் ஏதாவது சொல்லி இருக்காரா?
ஆனந்தவல்லி ஒரு பெருமூச்சு விட்டாள். “அவர் அதைப் பத்தி என்னென்னவோ சொல்ல ஆரம்பிச்சப்ப எல்லாம் நான் கேட்கற மனநிலையில் இருக்கல. நல்லா திட்டி அவர் வாயை அடைச்சிருக்கேன்..
இந்தம்மாளிடம் அந்த மனிதர் படாத பாடு பட்டிருக்க வேண்டும் என்று நினைத்த பார்த்தசாரதி அந்த மனிதருக்காகப் பச்சாதாபப்பட்டார். சிறிது நேரம் இவளைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும் போது அவர் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தவராகக் கேட்டார். “அவர் என்ன சொல்ல வந்தார்?

ஆனந்தவல்லி தனக்குப் பிடிக்கா விட்டாலும் தெரிந்த்தைச் சொல்லி முடித்து விடுவது என்று முடிவுக்கு வந்தவளாக, பேசப் போகிற விஷயம் பிடிக்காதவளாக, லேசாக முகம் சுளித்தபடிச் சொன்னாள். “அந்த சிவலிங்கம் பல நூறு வருஷத்துக்கு முந்தினதாம். சித்தர்கள் பூஜை செய்துட்டு வந்ததாம். ஏதோ சோழ ராஜா கோயில் கட்டக் கேட்டுக் கூட சித்தர்கள் குடுக்கலையாம்.. அந்த சிவலிங்கம் யார் கிட்ட போய் சேரணும்னு முடிவு பண்ண ஒரு ரகசிய குழு இருக்காம்.... அது பசுபதி கிட்ட வந்ததும் அப்படித் தானாம்.... பசுபதி ரொம்ப புண்ணியம் செஞ்சவன், அதனால தான் அவனுக்கு அது கிடைச்சிருக்கு, அதனால நான் சந்தோஷப்படணுமே ஒழிய வருத்தப்படக் கூடாது அப்படி இப்படின்னு சொன்னார்....

பார்த்தசாரதிக்கு இந்தத் தகவலை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அவர் சொன்னது உண்மையாய் இருக்குமோ?
ஆனந்தவல்லி போலீஸ் அதிகாரி என்றும் பார்க்காமல் அவரைக் கடிந்து கொண்டாள். “அவர் தான் எவனோ மூளைச்சலவை செய்து சொன்னதை நம்பினார்னா உனக்கும் மூளை இல்லையா என்ன? இப்ப அந்த சிவலிங்கம் யார் கைல போய் சேரணும்னு முடிவு செஞ்சது யாரு அந்த ரகசியக் குழுவா? அந்தக் கொலைகாரக் கூட்டம் தானே முடிவு பண்ணி எடுத்துகிட்டு போனாங்க... அப்பவே நான் அவரை சத்தம் போட்டேன்.. அம்புலி மாமா கதைல வர்ற மாதிரி எவனாவது ஏதாவது சொன்னா நம்பிடறதா, அறிவு இல்லையான்னு....

‘ரொம்பக் கஷ்டம் தான்என்று தனக்குள் சொல்லிக் கொண்ட பார்த்தசாரதி பொறுமையுடன் சொன்னார். “நீங்க சொல்றது சரி தான்... அந்த ரகசியக் குழு எத்தனை பேரு, யார் யார்னு ஏதாவது சொன்னாரா?

அது அவருக்கும் தெரியலை... ஆனா அவர் கடைசி வரைக்கும் அப்படி இருக்கும்னு நம்பினார்..

நமக்கு நம்பக் கஷ்டமா இருக்கு... ஆனா  உங்க கிட்ட அந்த சிவலிங்கத்தைக் கொண்டு வந்த சித்தர் இப்பவும் இருக்கார்னும், உங்க மகன் பசுபதி செத்த பிறகு அந்த சித்தர் தோட்ட வீட்டுக்கு வந்ததைப் பார்த்த மாதிரி இருந்ததுன்னு பரமேஸ்வரன் சொன்னாரே.... ஒருவேளை அது பிரமையாய் இருக்குமோ

“பிரமையும் இல்லை, பொம்மையும் இல்லை... பரமேஸ்வரன் அப்படி எல்லாம் ஏமாந்துட மாட்டான். அவன் பார்த்தேன்னு சொன்னா பார்த்திருக்கணும்... எனக்கு மட்டும் அந்த ஆள் பார்க்கக் கிடைச்சிருந்தால் கேட்டிருப்பேன், ‘இப்ப திருப்தியா உனக்குன்னு...

‘அந்த சித்தர் தப்பிச்சுட்டார்என்று மனதில் சொல்லிக் கொண்ட பார்த்தசாரதி “உங்க கணவர் வேறெதாவது சொன்னாரா...?என்று கேட்டார்.
திரும்பத் திரும்ப அவர் சொன்னதெல்லாம் இது தான். அந்த சிவலிங்கம் சாதாரண லிங்கம் இல்லை... சக்தி வாய்ந்தது.... அதோட முழு சக்தியை புரிஞ்சுக்க நமக்கு ஞானம் போதாது அப்படி இப்படின்னு அந்த சித்தர் சொன்னதை எல்லாம் நம்பி எனக்கும் போதனை செய்ய முயற்சி செஞ்சார்...

அந்த சக்தி என்னன்னு சொன்னாரா?

நான் கேட்கலை.... கேட்டிருந்தா சொல்லி இருக்கலாம்....

””உங்க கொள்ளுப் பேரன் ஈஸ்வர் கிட்ட சிவலிங்கம் போய் சேரணும்கிறது தான் விதி.. சேர்த்துடுன்னு பசுபதி பரமேஸ்வரன் கிட்ட சொன்னது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ன காரணம் இருக்கும்

இந்தக் கேள்வியைப் பல முறை அவளும் தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறாள். விடை பிடிபடவில்லை... சொன்னாள். தெரியலை...

“ஒரு வேளை உங்க பேரனும் பசுபதி மாதிரி ஆன்மிகத்துல அதிக நாட்டம் இருக்கிறவரோ?

ஆனந்தவல்லி இந்த இரண்டு மூன்று நாட்களில் தன் கொள்ளுப்பேரன் பற்றி ஒரு புத்தகமே எழுத முடிந்த அளவு தகவல்கள் சேர்த்திருந்தாள். மீனாட்சியை விடாமல் நச்சரித்து அவள் உதவியுடன் அவனது ஃபேஸ்புக் உட்பட இண்டர்நெட்டில் சகலமும் அறிந்திருந்தாள். அதனால் ஆணித்தரமாகச் சொன்னாள். “அவன் அந்த மாதிரி ரகம் இல்லை... ரோஷக்காரன்... நல்லா படிச்சவன்.. பெரிய ஆராய்ச்சியாளன்... இந்த சின்ன வயசுலயே பெரிய பெரிய விருது எல்லாம் வாங்கி இருக்கான்.... பார்க்க என் வீட்டுக்காரர் மாதிரியே அச்சாய் அழகாய் இருக்கான்...

பெருமிதம் கொப்புளிக்க மலர்ச்சியுடன் சொன்ன ஆனந்தவல்லியை பார்த்தசாரதி ஆச்சரியத்துடன் பார்த்தார். சற்று நேரத்திற்கு முன் கணவரை நன்றாகத் திட்டிய ஆனந்தவல்லி, அவரைப் போலவே தன் கொள்ளுப்பேரன் அழகாய் இருப்பதைப் பெருமையாகச் சொல்வதைப் பார்த்தால் அவள் கணவன் மீது காதலாகவும் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்தது... முக மலர்ச்சியோடு இருக்கும் போது இந்தக் கிழவியும் அழகாய் தான் தெரிகிறாள்.. ஆனால் முகம் மலர்வது மட்டும் அத்தி பூத்தது போலத் தான்... அவர் நினைத்து முடிப்பதற்குள் பழைய முகபாவத்துக்குள் வந்து விட்டிருந்தாள் ஆனந்தவல்லி.

“உங்க கணவரைத் தவிர வேற யாராவது அந்த சிவலிங்கத்தோட சக்தி பத்தி உங்க கிட்ட பேசியிருக்காங்களா?

இல்லை...

“உங்க மகன் பசுபதி?...

அவன் பேசறதே கம்மி தான்... நாம ஏதாவது பேசினால் கூட ஒருசில வார்த்தைல பதிலை முடிச்சுடுவான்... அவனாய் தொடர்ந்து அரை மணி நேரமாவது பேசினது நான் அவனைக் கடைசியா பார்த்தப்ப தான்.. அது தான் முதல் தடவை... அதுவே கடைசி தடவையும் கூட..சொல்லும் போது அவள் குரல் கரகரத்த்து. சொன்னதில் வலி தென்பட்டது.

கிட்டத்தட்ட அறுபது வருஷமா அந்தத் தோட்ட வீட்டுல இருந்த சிவலிங்கம் மேல இத்தனை வருஷம் கழிச்சு திடீர்னு யாரோ சிலருக்கு அக்கறை வரக் காரணம் என்னவாக இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?

சற்று எரிச்சலோடு ஆனந்தவல்லி சொன்னாள். “எல்லாத்தையும் என் கிட்டயே கேட்டா எப்படி? நீங்க தான் அதை எல்லாம் கண்டுபிடிக்கணும்

பெருமூச்சு விட்ட பார்த்தசாரதி விசாரணையை அத்துடன் முடித்துக் கொண்டார். அவர் கிளம்பும் முன் ஆனந்தவல்லி கேட்டாள். “எத்தனை 
நாள்ல கண்டுபிடிப்பீங்க?

“சீக்கிரமா கண்டுபிடிச்சுடுவோம்....

சற்று நின்றால் அந்த உத்திரவாதத்தை கிழவி எழுதிக் கொடுக்கும்படி கேட்டாலும் கேட்பாள் என்று பயந்தவராக அவர் உடனடியாக இடத்தைக் காலி செய்தார். சில கேள்விகளுக்கு பதிலை ஈஸ்வரிடத்திலும், சில சந்தேகங்களுக்குத் தெளிவை குருஜியிடத்திலும் அவர் எதிர்பார்த்தார். ஈஸ்வர் நாளை தான் வருகிறான் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து அவனை சந்திக்க எண்ணினார். குருஜி இன்று மாலை அவரை சந்திக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்....

குருஜி பார்த்தசாரதியைப் பார்த்ததும் தன் நீண்ட கால நண்பனைப் பார்ப்பது போல சந்தோஷம் காட்டினார். என்ன பார்த்தசாரதி எப்படி இருக்கீங்க?

வணக்கம் குருஜி. நல்லா இருக்கேன்

குருஜி சில நிமிடங்கள் குடும்பத்தினரையும், வேலையையும் பற்றி விசாரித்து விட்டு பின் சொன்னார். “நீங்கள் ஏதோ முக்கியமான விஷயம் பத்தி பேசணும்னு சொன்னீங்களாம். ரெண்டு நாளா ஓய்வே இல்லை. அதனால உங்களை சந்திக்க முடியலை... என்ன விஷயம் சொல்லுங்க
பார்த்தசாரதி சொன்னார். “சில நாளுக்கு முன்னால் ஒரு பெரியவரைக் கொன்னுட்டு அவர் பூஜை செய்துட்டு இருந்த சிவலிங்கத்தை தூக்கிகிட்டு போயிட்டாங்க குருஜி....

“....ம்ம்ம்... பேப்பர்ல படிச்சேன். பரமேஸ்வரனோட அண்ணாவோ தம்பியோ தானே அந்தப் பெரியவர்

“அண்ணா குருஜி

“சொல்லுங்க. இப்ப அந்தக் கேஸ் உங்க கிட்ட வந்திருக்கோ?

“ஆமா குருஜி... ஆன்மிகம், சக்தி இந்த ரெண்டு விஷயத்துலயும் உங்களுக்குத் தெரியாதது இருக்க முடியாதுங்கறதால சில சந்தேகங்களைத் தீர்த்துக்க உங்க கிட்ட வர முடிவு செஞ்சேன்... அந்த சிவலிங்கத்துல ஏதோ விசேஷ சக்தி இருக்கறதா பேசிக்கறாங்க... என்னடா ஒரு நாத்திகன் கேட்கற மாதிரி கேட்கறானேன்னு நினைச்சுடாதீங்க. உண்மையாவே அப்படி ஒரு சிலைல விசேஷ சக்தி இருக்குமா?

குருஜி அமைதியாகச் சொன்னார். “எல்லா சிலைலயும் சக்தி இருக்கும்னு சொல்ல முடியாது. சில சிலைகள்ல சக்தி இருக்கலாம்.

“இதுலயும் இருக்குன்னு தான் தோணுது. ஆனா இறந்து போனவரோட அம்மா ஒரு ஆணித்தரமான கேள்வி கேட்டாங்க. “அறுபது வருஷத்துக்கு மேல அதைப் பூஜை செய்துட்டு வந்தவனையே காப்பாத்தாத அந்த சிவலிங்கத்துக்கு வேற என்ன சக்தி இருக்க முடியும்?னு கேட்டாங்க

“நியாயமான கேள்வி தான்குருஜி சொன்னார்.

“அவங்க அப்படிக் கேட்டவுடனே என்னையறியாமல் நான் சொன்னேன். 
மேற்கொண்டு உயிர் வாழ விரும்பாத மனிதனை எந்த சக்தி தான் காப்பாற்ற முடியும்?அது சொல்லி முடிக்கிற வரைக்கும் நான் கொஞ்சம் கூட நினைக்காதது...

குருஜி கண்களை மூடிக் கொண்டு அந்த வார்த்தைகளை உள்வாங்கினார். பின் கண்களைத் திறந்தவர் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் அவரை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தார்.

பார்த்தசாரதியே தொடர்ந்தார். “ஆனால் நான் சொன்னதும் சரி தான். அந்தப் பெரியவர் நினைச்சிருந்தா அந்த கொலைகாரனை சுலபமா ஆக்கிரமிச்சிருக்கலாம். அவர் ஹத யோகி. கொலைகாரன் வந்தப்ப அவர் தூங்கிட்டும் இருக்கலை. சாகறப்ப கூட பத்மாசனத்தை விட்டு விலகாத அளவு சக்தி இருக்கிற அவர் அந்தக் கொலைகாரனுக்கு ஒத்துழைப்பு தந்த மாதிரி தான் தோணுது. என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்ல நான் இந்த மாதிரியான ஒரு தன்மைய பார்த்ததில்லை. அடுத்ததா இன்னொரு ஆச்சரியம் அந்தக் கொலைகாரன் செத்த விதம்.... அவன் பயம்னா என்னன்னே தெரியாதவன். அப்படிப் பட்டவன் பயந்தே செத்துப் போனதா போஸ்ட் மார்ட்டம் சொல்லுது. இந்த ரெண்டுமே யதார்த்தமா எனக்குத் தோணலை. என்ன தான் நடந்ததுன்னு தெரியலை... யோகா, அபூர்வ சக்திகள், பத்தியெல்லாம் நீங்க நிறையவே தெரிஞ்சு வச்சிருக்கிறவர். அதனால உங்க கிட்ட கேட்கறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க..   

இது வரை பார்த்தசாரதிக்கு என்னவெல்லாம் தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்பதை அறிய இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த குருஜி “இதெல்லாம் எளிமையாய் சொல்லக் கூடிய விஷயம் இல்லை... முதல்ல அது சம்பந்தமான தகவல்கள் எல்லாம் தெரியணும்... தெரிஞ்சால் சொல்ல முயற்சி செய்யலாம்...

பார்த்தசாரதி குருஜி மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர் என்றாலும் இது வரை சேகரித்த அனைத்து தகவல்களையும்  அவரிடம் சொல்லப் போகவில்லை. அமானுஷ்யமான விஷயங்கள் என்று நினைத்ததை மட்டும் குருஜியிடம் சொல்லி கருத்துகள் கேட்க முனைந்தார்.

“அந்த சிவலிங்கம் 60 வருஷத்துக்கு முன்னால் ஒரு சித்தரால் கொண்டு வந்து தரப்பட்டது. அந்த சித்தர் இன்னும் இருக்கிறாராம்... அவரை பரமேஸ்வரன், செத்த வீட்டில் பார்த்திருக்கிறார். இது உண்மை மாதிரி தான் தெரியுது. அந்த சிவலிங்கம் பற்றிக் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் கற்பனையோட உச்சக்கட்டமா இருக்கு... அந்த சிவலிங்கம் பல நூறு வருஷத்துக்கு முந்தினதாம். சித்தர்கள் பூஜை செய்துட்டு வந்ததாம். ஏதோ சோழ ராஜா கோயில் கட்டக் கேட்டுக் கூட சித்தர்கள் குடுக்கலையாம்.. அந்த சிவலிங்கம் யார் கிட்ட போய் சேரணும்னு முடிவு பண்ண ஒரு ரகசிய குழு இருக்காம்....

சிவலிங்கம் தந்த சித்தர் இன்னும் இருக்கிறார் என்ற தகவலும் சிவலிங்கம் யாரிடம் போய் சேர வேண்டும் என்று முடிவு செய்ய ஒரு ரகசியக் குழு இருக்கிறது என்ற தகவலும் குருஜியைத் தூக்கிவாரிப் போட்டன. சிந்தனை செய்பவர் போல முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தசாரதியின் பார்வையில் இருந்து தப்பி மறுபக்கம் திரும்பியவர் மனதில் இது வரை குழப்பிக் கொண்டிருந்த சில கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது போல் இருந்தது. ஆனால் அவர் அந்தப் பதிலை ரசிக்கவில்லை.....

(தொடரும்)
-         என்.கணேசன்


20 comments:

 1. சிவலிங்கம் தந்த சித்தர் இன்னும் இருக்கிறார் என்ற தகவலும் சிவலிங்கம் யாரிடம் போய் சேர வேண்டும் என்று முடிவு செய்ய ஒரு ரகசியக் குழு இருக்கிறது என்ற தகவலும் குருஜியைத் தூக்கிவாரிப் போட்டன./

  சில கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது போல் இருந்தது. ஆனால் அவர் அந்தப் பதிலை ரசிக்கவில்லை.....//

  ரசிக்கவைத்த விறுவிறுப்பான பகுதி !

  ReplyDelete
 2. சுந்தர்October 25, 2012 at 6:42 PM

  கணேசன் சார் இத்தனை சுவாரசியமும், விறுவிறுப்பும் கொண்ட நாவலைத் தமிழில் படித்து பல ஆண்டுகள் ஆகின்றன. பாராட்ட வார்த்தைகள் இல்லை. முக்கியமாக உங்கள் கேரக்டரைசேஷன் பிரமாதம். கண்முன் பாத்திரங்கள் யதார்த்தமாகப் பதிகிறார்கள். ப்ரமேஸ்வரனாகட்டும், கணபதியாகட்டும், ஆனந்தவல்லியாகட்டும்.
  “எல்லாத்தையும் என் கிட்டயே கேட்டா எப்படி? நீங்க தான் அதை எல்லாம் கண்டுபிடிக்கணும்”

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வழிமொழிகிறேன். வாசகர்களுக்கு இப்படி ஒரு அருமையான விருந்தைப் பரிமாறும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிக்க நன்றி.

   Delete
  2. அந்த சிவலிங்கம் யாரிடம் வேண்டுமானாலும் போய் சேரட்டும் ,இரண்டு உயிர்களை பலி வாங்கிட்டு போயிருக்க வேண்டாம் .அன்பே சிவம் வேறு அர்த்தமும் உண்டோ

   Delete
 3. sema thrilling. Really superb. awaiting next thursday

  ReplyDelete
 4. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்கிற ஆவலைத் தருகிறது... நன்றி...

  ReplyDelete
 5. விறுவிறுப்பான நடை ஆவலுடன் அடுத்த வாரத்தை எதிர்பார்க்க வைக்கிறது. தொடருங்கள். காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 6. Davinci Code aka Parama(n) Ragasiyam!!!

  ReplyDelete
 7. your writing style is nice...thrilling, suspicious, comedy, sentiment, love....a perfect mixture...hats off!

  ReplyDelete
  Replies
  1. வரதராஜன்October 26, 2012 at 2:59 AM

   ஆம். சஸ்பென்ஸ், பாசம், யதார்த்த மனிதர்களின் குணாதிசய வெளிப்பாடு, நகைச்சுவை, ஆன்மிக ரகசிய முடிச்சுக்கள் எல்லாம் கலந்து எழுதுவதில் ஒரு தனி முத்திரையை உருவாக்கி உள்ளீர்கள் என்.கணேசன் அவர்களே. நாவல்கள் காணாமல் போக ஆரம்பித்திருக்கும் காலக் கட்டத்தில் ஒரு புதிய அலையை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள் என்றே கூற வேண்டும். ஒரு வாசகர் சொன்னது போல விறுவிறுப்பில் டாவின்சி கோட் ஆங்கில நாவலுக்கு இணையான ஒரு தமிழ் நாவல் இது என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுக்கள். நிறைய எழுத வேண்டும் என்று வாழ்த்துகிறேன். - வரதராஜன்.

   Delete
 8. வாழ்த்துக்கள்! என்கணேசன் அவர்களே!! நிச்சயமாக என்னுடைய கணேசன்தான் நீங்கள்!! அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  ReplyDelete
 9. “அறுபது வருஷத்துக்கு மேல அதைப் பூஜை செய்துட்டு வந்தவனையே காப்பாத்தாத அந்த சிவலிங்கத்துக்கு வேற என்ன சக்தி இருக்க முடியும்?”

  நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர். கலக்குங்க சார்.

  ReplyDelete
 10. திகிலாக இருக்கிறது..தொடருங்கள்..!

  ReplyDelete
 11. Its tough to keep fingers crossed always till every episode gets published....awesome. Keep it up.

  ReplyDelete
 12. Simply super, very interesting to read, pls continue.

  ReplyDelete
 13. Awesome, Can't wait till next week

  /PK Pillai

  ReplyDelete
 14. Ganesan, I am huge fan of your blog and I couldn't wait for week by week cos' my BP was increasing every week after reading your chapters. So I stopped reading and after few months now read all the chapters in one shot. Fantastic characters and there is a question mark on all these characters. Awesome Man. Your story just proves that there are million things which we have no idea.

  ReplyDelete