சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 30, 2020

யாரோ ஒருவன்? 8


ஞ்சய் ஷர்மாவுக்கு அந்தப் பெயர் ஞாபகம் இல்லைஅவன் அந்த உத்தியோகத்தில் இருந்த போது யாரும் அந்தப் பெயரில் அவனுடன் வேலை பார்த்ததில்லை. உத்தியோகத்தில் இருந்த போது என்ன இருந்தாலும் ஒரு கவுரவம் அவனுக்கு இருந்தது. அந்தப் பாழாய் போன ரா தலைவன் ராவிலிருந்து மட்டுமல்ல ஐபிஸ் பதவியிலிருந்தே ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரே பிடிவாதமாக இருந்து ராஜினாமா செய்ய வைக்காமல் இருந்திருந்தால் அவனும் இப்படி எங்கேயும் கவுரமாய் போய் வந்திருக்கலாம். அந்தச் சமயத்தில் இப்படி எல்லாம் ஆகும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மாமனை மீறி எதுவும் நடக்காது என்று தைரியமாக இருந்தான்.  ஆனால் மாமன் என்ன முயற்சித்தும் ரா தலைவரை எதிர்த்துக் கொள்ள அப்போதைய பிரதமர் விரும்பவில்லை.  ”விசாரணை, தண்டனை எல்லாம் இல்லாமல் உங்கள் மருமகனைக் கவுரமாக வெளியே அனுப்புவதே பெரிய விஷயம்என்று சொல்லி விட்டார். அப்போது அதோடு திருப்தி அடைய வேண்டியதாகி விட்டது.

மாமன் அவருடைய பினாமி கம்பெனி நிர்வாகத்தை அவனுக்குக் கொடுத்து அவனை சமாதானப்படுத்தினார். அவர் கட்சி ஆளுங்கட்சியாக இருந்து கம்பெனி இலாபத்தில் போய்க் கொண்டிருந்த வரை அவனுக்கு அந்தக் கம்பெனி நிர்வாகம் ஓரளவு திருப்தியாகத் தான் இருந்தது. மற்றவழிகளிலும் வருமானம் வந்து கொண்டிருந்ததால் புகார் சொல்ல ஒன்றுமிருக்கவில்லை. ஆனால் அவர் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்த பின் எல்லாமே இறங்குமுகமாகத் தானிருக்கிறது.  

மாமனிடம் ராஜ்யசபாவில் ஒரு எம்.பி பதவியாவது வாங்கிக் கொடுங்கள் என்று பல முறை சஞ்சய் கேட்டிருக்கிறான். பழுத்த அரசியல்வாதியான அவர் எல்லோரிடமும் சொல்லும்பார்க்கலாம்என்ற ஒரு சொல்லையே அவனிடமும் ஒவ்வொரு தடவையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்இதை எல்லாம் எண்ணிப் பெருமூச்சு விட்டபடி சஞ்சய் பியூனிடம் சொன்னான். “வரச் சொல்



அடுத்த நிமிடம் நரேந்திரன் என்ற இளைஞன் கம்பீரமாய் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்தவுடன் முன்பே எங்கேயோ பார்த்திருப்பது போல் சஞ்சய்க்குத் தோன்றியது. ஆனால் எங்கே என்று தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை.

நரேந்திரன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கைகுலுக்கினான். அவன்ராவில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னவுடன் சஞ்சய் பெருமிதத்துடன் சொன்னான். “நானும் ஒரு காலத்தில் அங்கே இருந்தேன். வேலை கொஞ்ச காலத்தில் அலுத்து விட்டதுராஜினாமா செய்து விட்டேன்….”

நரேந்திரன் சொன்னான். “தெரியும். நீங்கள் விசாரித்த அஜீம் அகமது வழக்கு பற்றிப் பேசத்தான் வந்திருக்கிறேன்…”

சஞ்சயின் முகம் கருத்தது. அவன் இறுகிய முகத்துடன் சொன்னான். “அந்த வழக்கை அப்போதே முடித்து விட்டார்களே. அது மட்டுமல்ல நான் அங்கே இருந்த போது விசாரித்த எதைப்பற்றியும் வெளியே சொல்ல முடியாதே. நீங்கள் புதியதாகச் சேர்ந்திருப்பதால் விதிமுறைகள் உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.”

விதிமுறைகள் தெரியும். அந்த வழக்கைத் திரும்பவும் விசாரணைக்கு எடுத்திருக்கிறோம்…. அதற்கான ஆணையும் விசாரிக்க அனுமதியும் எனக்குத் தந்திருக்கிறார்கள்என்று சொல்லி அதிகாரபூர்வக் கடிதத்தை சஞ்சயிடம் நரேந்திரன் நீட்டினான்.

அதை அதிர்ச்சியுடன் வாங்கிப் படித்த பின் சஞ்சய் முகம் சுளித்தான். “சுத்த முட்டாள்தனம். அஜீம் அகமது இங்கிருந்தால் பிடிக்கச் சொல்லி ஆரம்பித்த வேலை அது. அவன் எப்போதோ இங்கிருந்து தப்பித்துப் போய் விட்டான். இந்தியாவிலேயே அவன் இல்லை என்கிற போது இருபத்தி இரண்டு வருஷம் கழித்து அந்த வழக்கை மறுபடி திறந்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்?”

அஜீம் அகமது இந்தியாவில் தான் இல்லை. ஆனால் உயிரோடு எங்கேயோ இருக்கிறான் அல்லவா? அது மட்டுமல்ல என் அப்பா மகேந்திரன் சம்பந்தமான கேள்விகள் எதற்கும் ரா இதுவரைக்கும் பதில்களைக் கண்டுபிடிக்கவில்லை…”

சஞ்சய்க்கு இப்போது மெள்ள விளங்கியது. மகேந்திரனின் மகன் இவன். அந்த ஆளின் சாயல் இவனிடம் நிறையவே இருப்பதால் தான் எங்கேயோ பார்த்த மாதிரி அவனுக்குத் தோன்றியிருக்கிறதுபலவந்தமாக சஞ்சய் தன் முகத்தில் சந்தோஷப் புன்னகையை வரவழைத்தான்.  “மகேந்திரன் சார் மகனா நீ?”

ஆனால் முகத்தின் புன்னகை அவன் இதயத்தை எட்டவில்லை. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு ஃபைலைத் திரும்பவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென்றால் அது பிரதமரின் அனுமதியுடன் தான் நடந்திருக்க வேண்டும். அது நல்லதல்ல. குறிப்பாக இந்த வழக்கு விசாரிக்கப்படுவது யாருக்கும் நல்லதல்ல. இந்த நரேந்திரனுக்கே கூட அது ஆபத்து தான். அது இந்த முட்டாளுக்குத் தெரியவில்லை.


வீட்டு உரிமையாளரிடம் நாகராஜ் அட்வான்ஸ் தந்தவுடன் அவரிடமிருந்து கமிஷன் தொகை 12500 ரூபாயும், நாகராஜிடமிருந்து 12500 ரூபாயும் வாங்கிக் கொண்ட பின் அரை நாளில் 25000 சம்பாதித்ததில் அந்த வீட்டு புரோக்கர் பெரும் திருப்தி அடைந்தான். இரண்டு மாதம் குடும்ப செலவை இதை வைத்துச் சமாளித்து விடலாம். இது போல் மாதம் ஒரு கிராக்கி கிடைத்தால் கூடப் போதும். அவன் ராஜாவைப் போல் வாழ்க்கையை ஓட்டலாம்...

திரும்பி வருகையில் நாகராஜிடம் அவன் கேட்டான். “சார் உங்களுக்கு வீடு கூட்டித் துடைக்க, துணி துவைக்க, ஆள் வேண்டியிருந்தா சொல்லுங்க. நம்ம கிட்ட கை சுத்தமான நல்ல ஆளுக இருக்காங்க

அது தேவையில்லை... நாங்களே பார்த்துக்குவோம்” என்று நாகராஜ் சொன்னது புரோக்கரைத் திகைக்க வைத்தது. இத்தனை பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார். அதுவே ஆச்சரியம் தான். அதைச் சுத்தம் செய்ய வேலையாள் வேண்டாம் என்று சொல்கிறாரே? ஆள் கஞ்சனா என்றால் இல்லை. கமிஷன் தொகையை ஒரு பேச்சு பேசாமல், நோட்டுகளை எண்ணிச் சரியாக உடனே கொடுத்து விட்டார். வீட்டுச் சொந்தக்காரர் கூடத் தன் பங்கைத் தரும் போது  ”பத்தாயிரம் தந்தால் போதாதா?” என்று அல்பத்தனமாய் கேட்டார். அநியாய வாடகை கேட்டு அதற்கும் ஆள் பிடித்துக் கொடுத்த பிறகு அப்படிக் கேட்ட ஆள் மாதிரியெல்லாம் இந்த சார் கேட்கவில்லை. அதனால் பணம் செலவு செய்ய யோசிக்கிற ஆள் இல்லை இவர். வேறெதோ காரணம் இருக்கும்

காரிலிருந்து இறங்கிக் கொண்ட போது புரோக்கர் நாகராஜிடம் சொன்னான். “சார் எதாவது உதவி வேணும்னா தயங்காமல் எனக்குப் போன் பண்ணுங்க. நம்ம கிட்ட எல்லாத்துக்கும் ஆளுங்க இருக்காங்க

சரியென்று தலையசைத்து விட்டு நாகராஜ் காரைக் கிளப்பினான். எதிர்பார்த்த இடத்திலேயே வாடகைக்கு வீடு கிடைத்து விட்டது. நாளைக்கே அங்கு குடிபோய் விடுவது என்று தீர்மானித்தான். ஐந்து நட்சத்திர ஓட்டல் என்றாலும் அவனுக்கு இப்போதைய சூழ்நிலையில் அசவுகரியமாகத்தான் இருந்தது. அவனுக்கு வேண்டிய வசதிகள் அங்கே இருக்கவில்லை. இன்னும் சில நாட்கள் அவனுக்கு மிக முக்கியமான நாட்கள். இந்த நாட்களில் அவன் நிச்சயமாக ஓட்டல் அறைகளில் வசிக்க முடியாது. அவனுக்கு குறிப்பிட்ட வசதிகளுடன் விசாலமான தனி வீடு ஒன்று கண்டிப்பாக வேண்டும். அந்தத் தனி வீடும் அவன் எதிர்பார்த்தபடி ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு அடுத்த வீடாகக் கிடைத்திருப்பது அவன் அதிர்ஷ்டமே.

நாளைக்கு அங்கு போபிறகு ஒரு முக்கியமான நிகழ்வுக்காக அவன் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அது நடந்து முடிந்து விட்டால் பிறகு தான் அடுத்த வேலையை அவன் ஆரம்பிக்க வேண்டும். அது தான் மிக முக்கிய வேலை. அந்த வேலை சத்தியமங்கலத்து வேலை போல சுலபமானதோ இனிமையானதோ அல்ல. அதில் சம்பந்தப்படவிருக்கும் முக்கிய ஆட்கள் பரந்தாமன், அலமேலு போல் நல்லவர்களும் அல்ல...


   
(தொடரும்)
என்.கணேசன்    

9 comments:

  1. Very thrilling both the sides.

    ReplyDelete
  2. சஞ்சய் ஷர்மா வில்லங்கமான ஆள் போல் தெரிகிறான். அவனை எப்படி நரேந்திரன் பேச வைக்கப் போகிறான் என்று அறிய ஆவல். நாகராஜின் உத்தேசம் இன்னும் பிடிபடவில்லை. சுவாரசியமாகப் போகிறது.

    ReplyDelete
  3. ஆக சஞ்சய்க்கு மகேந்திரன் இறப்பு பற்றியோ அல்லது அஜிம் பற்றியோ நிச்சயம் விஷயங்கள் தெரிந்திருக்கும் அதில் ஏதோ தில்லுமுல்லு செய்ததால்தான் வேலையை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்த பட்டிருக்கிறார் ஒருவேளை அந்தக் கட்சி கூட தொடர்பு உண்டு ஒருவேளை அந்த அஜிம் தான் நாகராஜா

    ReplyDelete
  4. Sir book next month vanthuduma

    ReplyDelete
  5. நாகராஜ்க்கு பணம் கோடுப்பது தான் வேலையா?
    சர்மா எங்கேயோ பணத்துக்கு விலை போயிருக்கிறான்...போல

    ReplyDelete
  6. Sir, is it on only hardcopy or like some other books kindle too.

    ReplyDelete