சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 23, 2020

யாரோ ஒருவன்? 7


ரேந்திரன் மறு நாள் காலை ரா தலைவரைச் சந்தித்து சஞ்சய் ஷர்மா பற்றிக் கேட்டான். ரா தலைவர் அந்தக் கேள்வியை அவன் கண்டிப்பாகக் கேட்பான் என்று எதிர்பார்த்திருந்தார். சாதாரண அறிவு இருப்பவன் கூட அந்தக் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது.

அவர் சொன்னார். “அவன் சில மாதங்களில் ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டான். எனக்குத் தெரிந்து நம்ராவில் இருந்தவர்களிலேயே மகா மட்டரகமான ஆள் அவன். அவன் சேர்ந்ததே அவன் மாமா ஜனார்தன் த்ரிவேதியின் செல்வாக்கால் தான். அவன் இங்கே உருப்படியான காரியம் எதுவும் செய்யவில்லை…”

ஜனார்தன் த்ரிவேதி இப்போது எதிர்க்கட்சித் தலைவர்களில் முக்கியமானவர். யாருக்கும் அவரைக் குறித்து உயர்ந்த அபிப்பிராயமோ, மரியாதையோ இல்லை. ஆனாலும் அவர் எதிர்க்கட்சியில் ஒரு முக்கிய பதவியிலேயே இருந்தார். அவர் மருமகனும் அவர் ரகம் தான் போலிருக்கிறது என்று நினைத்தவனாக நரேந்திரன் கேட்டான். “பின் ஏன் இது மாதிரியான முக்கியமான வழக்கில் அப்பாவுக்கு உதவியாளாக அவனைப் போட்டார்கள்…”

அவன் நம் அமைப்பில் சேர்ந்த ஆரம்பம் அது. அந்த அளவு உதவாக்கரையாக இருப்பான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. உன் அப்பா மாதிரியான திறமைசாலிகளுக்கு நம்பகமான எடுபிடி வேலைகள் தான் உதவியாள் செய்ய வேண்டியிருக்கும், அதற்கு அவன் போதும், அவனுக்கும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும் என்று நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்கடைசியில் இந்த மாதிரியானவுடன் அப்போதிருந்த தலைவர் அவன் மேல் கடுமையான அதிருப்தி அடைந்தார். அவனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அது மட்டும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் டிஸ்மிஸ் செய்ய ஜனார்தன் த்ரிவேதி அனுமதிக்கவில்லை. அப்போது ஆட்சியில் அவர்கள் கட்சி தான் இருந்தது. அப்போதைய பிரதமருக்கு தன் கட்சி முக்கியப் பிரமுகருக்கு வேண்டப்பட்டவனுக்கு எதிராய் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் அப்போதைய தலைவர் உன் தந்தை மாதிரியான ஆட்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், அதற்குக் காரணமானவனையும் டிஸ்மிஸ் செய்ய முடியவில்லை என்றால் இந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என்று சொல்லி ராஜினாமாக் கடிதம் எழுதிக் கொடுத்ததாகக் கேள்வி. அந்த அளவு அவர் உறுதியாய் இருந்தவுடன் வேறு வழியில்லாமல் அப்போதைய பிரதமர் அவனை டிஸ்மிஸ் செய்வதற்குப் பதிலாய் அவனிடமிருந்து ராஜினாமா கடிதம் வாங்கி அவனை அனுப்பி வைக்க உத்தரவிட்டார்... அப்போதைய தலைவர் மட்டும் அவ்வளவு உறுதியாக இருந்திருக்கா விட்டால் சஞ்சய் ஷர்மா மாமாவின் செல்வாக்கால் இப்போதும் இங்கேயே படிப்படியாக பதவி உயர்வும் வாங்கிக் கொண்டு உயர்ந்த பதவியில் கண்டிப்பாக இருந்திருப்பான்….”

இந்த விவரங்கள் எல்லாம் அந்த ஃபைலில் இல்லை. சஞ்சய் ஷர்மா மேல் சந்தேகம் வந்திருக்கிறது, அவனை வேலையிலிருந்து நீக்க அப்போதைய தலைவர் அந்த அளவு உறுதியாய் முயன்றிருக்கிறார் என்பதெல்லாம் நரேந்திரனுக்குப் புதுத் தகவல்கள்அந்த வழக்கில் என்ன நடந்திருக்கும் என்பது தலைவர் சொல்லாமலேயே அவனுக்கு இப்போது மெல்லப் புரிந்தது. அவனுக்கு இரத்தம் கொதித்தது. ஆனால் நியாயத்திற்காகத் தன்னால் முடிந்த அளவு அப்போதைய தலைவர் போராடியிருப்பது சிறு ஆறுதலாக இருந்தது. அந்த நல்ல மனிதர் பத்து வருடங்களுக்கு முன் தான் இறந்து போனார்….

நரேந்திரன் கேட்டான். “சஞ்சய் ஷர்மாவை நான் இப்போது போய் விசாரித்தால் என்ன?”

பிரயோஜனம் இருக்காது. அவன் வாய் திறந்து எந்த உபயோகமான தகவலையும் சொல்ல மாட்டான்….”

அப்போது அவன் என்ன செய்தான் என்பதற்கு நம் டிபார்ட்மெண்டிடம் ஆதாரம் இல்லை. ஆனால் இப்போது என்ன செய்யப் போகிறான் என்பதற்கு நாம் ஆதாரம் உருவாக்கலாமே

ரா தலைவர் புன்னகைத்தார். இந்த இளைஞன் தந்தையை விடவும் உஷார்ப் பேர்வழியாகத் தான் இருக்கிறான். “செய்யலாம். ஆனால் பிரதமர் காதில் விஷயத்தைப் போட்டு விட்டுச் செய்வது நல்லது. ஜனார்தன் த்ரிவேதி எதிர்க்கட்சியில் தான் என்றாலும் இப்போதும் இருக்கிறார். அவர் என்ன சொன்னாலும், செய்தாலும் விளம்பரப்படுத்த மீடியா இருக்கிறது…. நீ மிகவும் ஜாக்கிரதையாய் இதைக் கையாள வேண்டும்...”


த்தியமங்கலத்தில் வேலையை முடித்திருந்த நாகராஜ் பரந்தாமனிடம் தெரிவித்தது போலவே கோயமுத்தூருக்கு மதியமே வந்து சேர்ந்திருந்தான். அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான லீ மெரிடியனில் தங்கியவன் தன் அடுத்த வேலைக்கு உடனடியாகத் தயாரானான். இங்குள்ள வேலை சத்தி வேலையைப் போல் சில மணிநேரங்களில்  முடியக்கூடியதல்ல.  சில மாதங்களாவது இங்கே இருக்க வேண்டிவரும். அந்த வேலைக்கு அவன் இப்படி நட்சத்திர ஓட்டலில் தங்குவது உதவாது. அதனால் தனி வீடு எடுத்து தங்க அவன் தீர்மானித்தான். அன்று மாலையே ஒரு வீட்டு புரோக்கரைத் தொடர்பு கொண்ட அவன் ரேஸ் கோர்ஸ் பகுதியில்  ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.   

மறுநாள் காலையிலேயே வாடகைக்கு வீடு தேடும் வேலை ஆரம்பித்தது. அவன் வீட்டு புரோக்கரிடம் பெரிய வீடு வேண்டும், தனி வீடாக இருக்க வேண்டும் என்று சொன்ன போது புரோக்கர் சொன்னான்.  ”சார் அது பணக்காரர்கள் ஏரியா. பெரிய வீடு வேணும்னா குறைந்த பட்சமா மாசம் இருபதாயிரம் ரூபாயாவது தர வேண்டி வரும்

பரவாயில்லைஎன்று நாகராஜ் சொல்லவே  புரோக்கர் சந்தோஷப்பட்டான். வாடகை அதிகமானால் கமிஷனும் அதிகமாகும்!

வீடுகள் காட்டக் காரில் போகும் போதுஉங்க குடும்பத்தில் எத்தனை பேர் சார்?” என்று புரோக்கர் கேட்டான். பெரிய வீடு வாடகைக்குக் கேட்பதால் ஓரளவு பெரிய குடும்பமாக இருக்கும் என்று புரோக்கர் சந்தேகப்பட்டான்.

நான் ஒருத்தன் தான். என் அசிஸ்டெண்ட் ஒருத்தனும் வருவான்.” என்று சொன்னான் நாகராஜ்

பின் எதற்கு சார் பெரிய வீடு?” என்று கேட்க வாயைத் திறந்த வீட்டுப் புரோக்கர் அதைக் கேட்பது அதிகப்பிரசங்கித்தனம் என்பதை உணர்ந்து மௌனமானான். அவன் மாதிரி குருவி சேர்ப்பது போல் காசு சேர்த்து வாழ்க்கையை நடத்தப் பாடுபடுபவர்கள் கையில் எத்தனை கஷ்டப்பட்டாலும் பணம் வந்து சேர்வதில்லை. ஆனால் ஆடம்பரம் செய்வோருக்கும் வீணாக்குவோருக்கும் கையில் பணம் குறைவதில்லை. இது அவன் அடிக்கடிக் கண்டு வருத்தப்படும் வினோதம்.

சில வீடுகளைக் காட்டப் போன போது வெளியே இருந்தே இந்த வீடு வேண்டாம் என்று நாகராஜ் சொன்னான். குறிப்பிட்ட சில வீடுகள் மட்டும் தான் அவன் உள்ளே போய்ப் பார்த்தான். அவற்றிலும் அவன் திருப்தி அடையவில்லை. காரணம் அந்தப் புரோக்கருக்குப் பிடிபடவில்லை. “இந்த ஆள் என்ன தான் எதிர்பார்க்கிறார்?”

கடைசியில் ஒரு புதிய பங்களாவைக் காட்டும் போது புரோக்கர் தயக்கத்தோடு சொன்னான். “இதுக்கு வாடகை 25000 ரூபாய் எதிர்பார்க்கிறார்.” அவனுக்கே அது அதிகமாகத் தான் பட்டது.

ஆனால் நாகராஜ் வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டுச் சொன்னான். “பரவாயில்லை. இந்த வீட்டையே பேசி முடிச்சுடலாம்

இதை விட நன்றாகவும், வாடகை குறைவாகவும் இருந்த வீடுகளை எல்லாம் மறுத்து விட்டு இந்த வீட்டை அவன் தேர்ந்தெடுத்தது புரோக்கருக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஆனால் 15 நாள் வாடகை 12500 ரூபாய் கமிஷனாகக் கிடைப்பதில் சந்தோஷப்பட்ட அவன் மறுபேச்சு பேசவில்லை.


ஞ்சய் ஷர்மா இப்போது அவன் மாமனின் பினாமி கம்பெனிகளில் ஒன்றில் மானேஜிங் டைரக்டராக இருந்தான். அவன் மாமனின் கட்சி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கம்பெனியில் வியாபாரம் அமோகமாக இருக்கும். ஆட்சியில் அந்தக் கட்சி இல்லாத போது இருப்பதை வைத்து சுமாராகத் தான் ஓட்ட வேண்டியிருக்கும்.  வியாபாரம் குறைவதில் அவனுக்கு என்றுமே வருத்தம் இருந்ததில்லை. காரணம் இலாப நஷ்டங்கள் அவனுக்கு அல்ல, அவன் மாமனுக்குத் தான். ஆனால் மாமன் கட்சி ஆட்சியில் இல்லாத போது வேறு வகைகளில் அவன் சம்பாதிக்கும் அவனுடைய தனிப்பட்ட வருமானம் ஒரேயடியாக நின்று விடும். மாமன் கட்சி ஆட்சியில் இருக்கும் போது மாமனிடம் காரியமாக வேண்டியிருக்கும் ஆட்களிடம் இடைத்தரகனாக அவன் சம்பாதிக்க முடிந்தது லட்சங்களாக இருக்கும். அவன் மாமன் கட்சி எதிர்கட்சியாக இருக்கும் போது அதற்கு வாய்ப்பில்லை

இந்த வருத்தத்தில் அவன் ஆழ்ந்து இருந்த போது தான் நரேந்திரன் ஐபிஎஸ் அவனைச் சந்திக்க விரும்புவதாக அவனுடைய பியூன் நரேந்திரனின் விசிட்டிங் கார்டோடு வந்து சொன்னான்.


(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. மிக சுவாரசியமாய் போகுது. நரேந்திரன் துணிச்சலானவனாய் தெரிகிறான். நாகராஜ் உத்தேசம் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  2. Very thrilling. I am sure that the investigation process will be awesome.

    ReplyDelete
  3. ரொம்ப இன்ட்ரஸ்டிங் ஆக போகுது சார் நரேந்திரன் ஒரு வழியிலும் நாகராஜ் ஒரு வழியிலும் பயணிக்கிறார்கள் என்றாலும் நோக்கம் ஒன்றேதான் ஒருவன் அடைய ஒருவன் அழிக்க பார்க்கலாம் யார் ஜெயிக்கிறார்கள் என்று

    ReplyDelete
  4. Day by day increasing interest ... Can't wait thala....

    ReplyDelete
  5. புரியாமல் பகுதி 2-ஐ மீண்டும் படித்தேன்... அப்போதும் பிடிபடவில்லை😂😂😂
    நகராஜனின் உதவியாளர் பாம்பா... இருக்குமோ?

    ReplyDelete